நாளிரவு -கடிதங்கள்

நாளிரவு

அன்புள்ள ஜெ,

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சொற்கள் அல்ல, செயலே வழிகாட்டி. இந்த கொரோனா நாட்களில் நீங்கள் சொன்னதை விட செய்துகாட்டியது முக்கியமானது. இந்த கதைகள் எனக்கெல்லாம் பெரிய ஊக்கத்தை அளித்தது. நான் சோர்ந்திருந்தேன். இந்த நாட்களை செல்வமாக எண்ணவேண்டும் என்ற ஊக்கத்தை அளித்தது. இந்த ஒரு மாதத்தில் ஆன்லைனில் படிக்கவேண்டிய சிலவற்றை படித்தேன். என் வாழ்க்கையில் மிக செயலூக்கத்துடன் இருந்த நாட்கள் இவை

செல்வக்குமார்

***

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

கிருஷ்ணம்மாள் ஜெகந்தான் அவர்களின் அதிகாலைப் பிரார்த்தனை முன்விடியல் 4 மணிக்குத் துவங்கும். அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை! என்னும் சத்திய வார்த்தைகள் ஒலிக்க ஆரம்பமாகும் அந்த அதிகாலைப் பிரார்த்தனையில் இன்று, உங்களுடைய பெயரும் பிரார்த்தனையாக உச்சரிக்கப்பட்டு இறைமலர்ந்தது. உங்களுடைய பிறந்த நாளான இன்று இங்கு நாங்கள் எல்லோரும் ஒருவித உளமகிழ்வுக்குள் எங்களை நிறைத்துக்கொண்டிருக்கிறோம்.

எங்களிடம் எவ்வார்தைகளும் இன்றி நாங்களிருக்கிறோம். ஒரு நன்றியாகவோ, வாழ்த்தாகவோ உங்களிடம் சொல்வதற்கான இருப்பு எங்களிடம் என்னவிருக்கிறது என்றெண்ணினால் ஒரு சிறுதயக்கம் மட்டுமே மனதுக்குள் எஞ்சுகிறது. நாங்கள் மீண்டும் மீண்டும் சரணடைவது குழந்தைகளின் இருதயங்களைத்தான். ஆத்ம அன்பின் அந்த மெளனஆழத்தில் உங்களுக்கான ஒரு வேண்டுதலையும் நேசிப்பையும் எங்களுக்குள் நாங்களே வளர்த்துக்கொள்கிறோம்.

மதுரைவிழியிழந்தோர் குழந்தைகள் காப்பகம், காஞ்சிபுரம் குழந்தைகள் காப்பகம், திருப்பத்தூர் சிறுவர்கள் காப்பகம், ஈரோடு குழந்தைகள் காப்பகம்இந்த நான்கு காப்பகங்களிலும், காலை உணவுக்கு முன்னான கூட்டுப்பிரார்த்தனையில், குழந்தைகள் அனைவரும் ஒருசேர்ந்த குரலில் உங்களுக்கான பிரார்த்தனையை வைக்கிறார்கள். எங்களை உங்களிடம் கொண்டுவந்து சேர்ப்பித்த, இறைத்தூய்மையின் அளவிலாப் பெருங்கருணையை நெஞ்சுள் வணங்கி கைகூப்பித் தொழுகிறோம்.

நன்றியுடன்,

குக்கூ காட்டுப்பள்ளி

புளியானூர் கிராமம்

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

நாளிரவு வாசிக்க அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. நாளும் கிழமையும் மறந்துபோய் தினம் கதைகளை வாசிப்பதும் அதைக்குறித்து பேசியும் எழுதியும் மகிழ்ந்து நாட்கள் கழிகின்றன. இன்னிக்கு என்ன கிழமைன்னு அடிக்கடி ஒருத்தரை ஒருத்தர் கேட்டுக்கொள்கிறோம். பிரதி எடுத்ததுபோல நாட்கள் ஒன்றே போல் இருப்பினும் தினம் ஒரு கதை வழியே எங்கெங்கோ சென்று பல அனுபவங்களுடன் திரும்புகின்றோம் தினமும்

இந்த பதிவில்அருண்மொழி இப்போதெல்லாம் இரவு ஒருமணி வரை வாசித்துக்கொண்டிருக்கிறாள், ஆகவே காலையை தவறவிடுகிறாள்என்றெழுதியிருந்தீர்கள் ஆகவே தாமதமாக எழுகிறாள் என்றோ, அருண்மொழி எழுந்து வருவதற்குள் விடிந்துவிடுகிறது என்றோ சொல்லவில்லை அப்போதும் அவர்கள் அக்காலைக்காட்சிகளை தவறவிடுவதைப்பற்றியே சொல்லியிருக்கிறீர்கள். அதை நான் மிக ரசித்து வாசித்தேன். அன்பு தோய்ந்த வரிகள்.

இந்த இக்கட்டான காலத்தில் குடும்ப வன்முறை முன்னைக்காட்டிலும் பல வீடுகளில் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. கணவன் வேலைக்கு போனபின்போ அல்லது வேலைக்குபோகும் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே போய் வேலைசெய்யும் இடத்திலோ கழுத்தை நெரிக்கும் மானசீக விரல்களிலிருந்து தப்பித்து கொஞ்சம் மூச்சுவிட்டுக்கொள்ள வசதியாக இருந்தது. இந்த சமூக விலகலில் அதற்கும் வழியின்றி இப்போது நடக்கும் குடும்ப வன்முறைக்கென்றே தனியே காவல் பிரிவு செயல்பட்டுக்கொண்டிருக்கும் அளவிற்கு வன்முறை நடைபெறுகின்றது.

நாங்கள் வசிப்பது வால்பாறை மலையின் அடிவாரத்தில். கோடையில் அனலடிக்கும் வெயிலிலும் வால்பாறை மலையில் மழை பெய்து கொண்டிருப்பதையும் வெள்ளிக்கோடுகளாக அருவிகள் இறங்குவதையும் வீட்டிலிருந்தே பார்க்கமுடியும். எங்களுக்கு வெயிலென்றாலும் அங்கு மழை பெய்வதை தொலைவிலிருந்து கண்ணால் பார்ப்பதே பெரும் நிறைவையும் குளிர்வையும் அளிக்கும்

அப்படி எங்கும் வன்முறையும் அச்சமும் நிரம்பி வழியும் இந்நாட்களில் உங்களின் தினசரிகள் எப்படி இருக்கின்றன என்னும் பதிவுகளையும், கதைகளையும், இப்படி அன்பில் நனைந்த வரிகளையும் வாசிப்பதே பெரும் நிறைவளிக்கின்றது. நீங்கள் இன்றைய மலர் பதிவில் சொல்லியிருந்தீர்கள் மலர்கள் கொடுக்கும் நம்பிக்கை அபாரமானதென்று அப்படியே உங்களின் எழுத்துக்கள் இக்கட்டான இந்நேரத்தில் அளிக்கும் நம்பிக்கையும் அபாரமானது.

நன்றி

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்புடன்

லோகமாதேவி

***

அன்பு ஜெ,

நலமுடன் உள்ளேன், ஆம் வாசிப்பு, அவ்வப்போது ஏதேனும் கலைப்படங்கள், பரதநாட்டியம், கர்னாடக இசை என எனக்கும் உற்சாகமாக சென்று கொண்டிருக்கிறது. இக்காலத்தில் காண்டீபம் வாசித்து முடித்தேன். சத்தியஜித் ரேயின் Apu Triology, Nayak, Charulatha, Sikkim போன்ற படங்களை பார்த்தேன், இதில் சிக்கிம் குறும்படம் இந்திய அரசாங்கத்தால் 30 ஆண்டுகளுக்கு மேலாக தடை செய்யப்பட்டு இருந்தது. மிக சிறப்பாக சிக்கிம் மக்களின் வாழ்க்கை முறை பண்பாடு ஆகியவற்றை காட்சிபடுத்தியிருப்பார். ஜாதி கொடூரத்தை காண்பிக்கும் தெலுங்கு படமான பலாசா எனும் படத்தை கண்டேன் மிக கூரிய கதை சித்தரிப்பு அருமையான படம், இது தவிர்த்து வாசிக்காமல் வைத்திருந்த நான்கு புத்தகங்களை வாசித்து முடித்தேன். தற்பொழுது Apprenticed to Himalayan Masters மற்றும் Sapiens வாசித்துக்கொண்டிருக்கிறேன். அடுத்து வெய்யோன். தினமும் தங்கள் தளத்தில் வரும் சிறுகதை, கட்டுரைகள், தினமும் அந்திசாயும் வேளையில் எழும் வெள்ளியை காண்கிறேன். அற்புதமான வானாட்டம். இன்று தங்களின் முகநூல் நேரலைக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு நிறைவாக என் வீடுறைவு காலம் செல்கிறது.

தங்கள் நலம் விழையும்

அன்பு

ரா. பாலசுந்தர்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–41
அடுத்த கட்டுரைபத்துலட்சம் காலடிகள், வான் நெசவு – கடிதங்கள்