ஆட்டக்கதை, மதுரம் – கடிதங்கள்

மதுரம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

மதுரம் கதையைப்போல ஓர் அனுபவம் எனக்கு உண்டு. நான் சின்னப்பையனாக ஊரில் இருந்தபோது எங்கள் நாய் குட்டிபோட்டது. மூன்று குட்டிகள். அவற்றில் ஒன்றைத்தவிர மற்றவற்றை கொடுத்துவிட்டோம். ஆனால் மிஞ்சிய அந்தக்குட்டி காலையில் செத்துக்கிடந்தது. நாய் அவ்வளவு துக்கமடையும் என்றெல்லாம் நான் எதிர்பார்க்கவே இல்லை. நாயின் இயல்பை நான் தெரிந்திருக்கவில்லை. அழுதுகொண்டே இருந்தது.

அப்போது என் அக்கா ஒரு விஷயம் செய்தாள். அப்போது எங்கள் வீட்டில் ஒரு பூனை குட்டிபோட்டிருந்தது. அந்த நாயின் குட்டியை ஒரு சாக்கில் போட்டுத்தான் தூங்க வைப்போம். பூனைக்குட்டியை நன்றாக துடைத்து அந்த சாக்குப்பைக்குள் போட்டு வைத்தோம். அதில் நாய்க்குட்டியின் மணம் இருந்தது. நாய் வந்து பூனைக்குட்டியை முகர்ந்து பார்த்தது. அதை கொஞ்சியது. பூனைக்குட்டியை தன் குட்டியாக ஏற்றுக்கொண்டது. மிக மகிழ்ச்சியாக ஆகிவிட்டது. வாலை ஆட்டிக்கொண்டே இருந்தது.

கொஞ்சநாள் பூனைக்குட்டியும் நாயுடனேயே சுற்றியது .அதன்பிறகு பூனை வளர்ந்து விலகிப்போய்விட்டது. நாயும் மறந்துவிட்டது. மதுரம் வாசிக்கும்போது நினைத்துக்கொண்டேன். அம்மாவால் தாய்ப்பாசத்தை அப்படியே உலகம் முழுக்க எக்ஸ்டெண்ட் செய்துகொள்ளமுடியும் என்று தோன்றியது

 

கே.அரவிந்தன்

 

அன்புள்ள ஜெ,

 

மதுரம் என்ற சொல் அழகானது. இனிமை என்று சொல்லலாம். ஆனால் அதைவிட மதுரம் அழகான சொல். ஏனென்றால் சாதாரணமாக அன்றாடவிஷயங்களுக்கு நாம் அதை பயன்படுத்துவதில்லை. ஏற்கனவே அந்த எருமைமாட்டுக்கு ஒருபக்கம் தெரியவில்லை. அங்கே அறியமுடியாதது இருந்தது. ஆகவே அஞ்சுகிறது. இப்போது அங்கே அறியக்கூடிய ஒன்று வந்துவிட்டது. அதன் குட்டி. அதைவைத்து உலகையே அறிந்துகொள்ளமுடியும். குட்டியே உலகமாகிவிடும். அது மதுரமானதுதான்

 

லட்சுமி

***

ஆட்டக்கதை [சிறுகதை]

அன்பின் ஜெ,

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.இன்று போல் என்றென்றும் நிறைவுடன் எங்களை வழிநடத்துங்கள்.

இந்த நாட்களை எனக்கு முழுமையடையச் செய்கின்றன உங்கள் சிறுகதைகள்.ஒவ்வொரு கதையும் என்னை இழுத்துக் கொள்கிறது.

இந்த கதைகளில் மூழ்கி அவ்வுலகிலேயே இருக்க மனம் விழைகிறது.நீங்கள் எழுத்திலிருந்து வெளியில் வர விரும்பவில்லை என்று எழுதியிருக்கிறீர்கள்.எனக்கு இந்த வாசிப்புலகிலிருந்து வர முடியவில்லை.அத்தனை அற்புதமானது இலக்கியம் மட்டுமே என்று எண்ணுகிறேன்.

ஆட்டக்கதை சிறுகதை எனக்கு மிகவும் பிடித்தமானது.கதகளி ஆட்டம் அதன் காலகட்டம் எல்லாம் எனக்கு மிகவும் புதிய நிகழ்வுகள்.உண்மையில் நான் கதகளி ஆட்டத்தை நேரில் பார்த்ததில்லை.அதனாலேயே அதன் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு பிடிக்கிறது.அறியாததை அறிந்து கொள்வது.

எனக்கு எப்பொழுதுமே நாஸ்டால்ஜிக் வகை நினைவுகள்  ஆர்வமூட்டும் வை.அக்காலகட்டம் அந்நிலம் அந்த மனிதர்கள் என்று நானும் நுழைந்து விடுவேன்.அப்படி என்னை இழுத்துக் கொண்டது ஆட்டக்கதை.

லஷ்மி சரஸ்வதி ஆகியோரின் உருவ ஒற்றுமை பற்றி வாசித்த போது, சமீபத்தில் இணையத்தில் பார்த்த லலிதா பத்மினி ராகினி சகோதரிகள் மூன்று பேரும் ஒரே மாதிரி நிற்கும் கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றினை  எண்ணிக்கொண்டேன்.14,15 வயதில் மூவரும் ஒரே மாதிரி ஆடைகள், அணிகள்,தலை அலங்காரம் ,ஒரு சிரிப்பு என்று பார்த்த போது எனக்கு வேறுபாடே தெரியவில்லை.

இந்தக்கதை அவர்களின் திருமண வாழ்க்கையின் ஆரம்ப கால நிகழ்வுகள் அதன் தொடர்ச்சியாக வரும் பூசல்கள் என்று மிக இயல்பாக செல்கிறது.திருமண வாழ்வின் முதல் சண்டை அப்படித்தான் வரும்.அதையெல்லாம் அன்று மூத்தவர்கள் சொன்னால் ஏற்றுக் கொள்ளவும் மனம் வராது.

“இரண்டுநாட்களுக்கு முன்புவரை தெய்வீகமானது என்றும், தூயது என்றும், இனியது என்றும் தெரிந்தவை எல்லாம் சீரழிந்து கிடந்தன. மலச்சாக்கடையில் முல்லைப்பூ மாலை விழுந்துவிட்டதுபோல. எல்லாமே முடிந்துவிட்டது.

ஆனால் அப்படி இல்லை. இரண்டே நாட்களுக்குள் சரியாகிவிட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டோம். தொட்டுக்கொண்டோம். அணைத்தோம். உறவுகொண்டோம். இருவரின் அந்தரங்கமும் எல்லைகளும் இருவருக்கும் புரிந்தன.

இது புரிந்து விட்டால் அதுதான் வாழ்க்கை.என் கல்லூரி நண்பன் ஒருவன் சொல்லுவான்.”மேட் ஃபார் ஈச் அதர்” அப்படின்னா இந்தப் பரதேசிய   அந்த பிசாசு மட்டும் தான் சமாளிக்க முடியும் அதுதானே”. நாங்கள் எல்லாம் அவன் சொல்லும்போது அப்படி சிரிப்போம்.ஆனால் அது தான் அன்பு யதார்த்தம்.

கதையின் முடிவும் அதன் சூழலும் எனக்கு புரிகிறது.அப்படித்தான் அது நிறைவுறும்.மிகச்சிறந்த கதை .

ஏகம் சிறுகதை ஜெயகாந்தன் பற்றி எழுதிய போது என்னை நினைத்து கொண்டதாக எழுதியிருந்தீர்கள்.உண்மையில் அது எனக்கு ஆனந்த அதிர்ச்சி.உங்கள் நினைவில் ஜெகே வந்தபோது என் பெயர் வந்தது என் பேறு.

ஜேகே,மணி இருவரும் அந்த குழலிசையில் ஆழ்ந்து யார் வாசிப்பது யார் கேட்பது என்று வேறுபாடின்றி கரைந்து போவது அக்கதையின் உச்சம்.இப்படி ஜேகே அமர்ந்திருந்த  நிகழ்வுகளை என் சிறுவயதில் பார்த்திருக்கிறேன்.அது என்னவென்று பின்னாட்களில் புரிந்தது.அந்த மோனம், ஏகாந்தம் ,கடந்து நிற்கும் நிலை எத்தனை நிறைவானது.

நீலம் மலர்ந்த நாட்கள் என்று நீங்கள் ஒரு பித்து நிலையை  எழுதியிருந்தீர்கள்.நீலம் வாசித்த நாட்களில் நானும் அப்படி இருந்திருக்கிறேன்.அது அற்புத உலகு.மனம் பறக்கும் நிலை.அப்படிப்பட்டது தான் ஏகம் சிறுகதை நிகழ்வு.மனதில் என்றும் நிற்கும் நிறைவு.

நன்றி ஜெ.

அன்புடன்

மோனிகா மாறன்.

 

அன்பின் ஜெ,

 

பட்டிழை ஒன்றின் முனைப்பிடித்தபடி மேலே சென்று முழு ஜரிகை சித்திரத்தையும் பார்க்கும்போது அடையும் சிலிர்ப்பிறகு இணையான அனுபவத்தை கொடுத்துக்கொண்டிருக்கும் கொரோனா கதைகள். கன்று ஈனும் அனுபவத்தை கண் முன் நிறுத்தும் “மதுரம்”. கோனாரை கூட்டிவருவது முதல், கன்றுகுட்டிக்கு குளம்பு திருத்தும் வரை உடனிருந்த நினைவுகளும், நாட்டு மாடு வாங்க மாடு தரகர்களோடு சைக்கிளிலில் அலைந்ததும் பசுமையாய் நினைக்க வைத்த கதை.

“வனசாசம்”, எங்கள் வீட்டு வாசலுக்கு வலப்பக்கம், வைகாசி விசாகத்தை முன்னிட்டுதற்காலிகமாக உருவாகும் “கந்தன் கலையரங்கில் நடக்கும் இரண்டு நாள் நாடகத்திற்க்கு வரும் நாடக கலைஞர்களோடு நாள் முழுவதும் திரிந்தவதுண்டு.சுப்பையாகவே மாறி நின்று கதையை படித்து முடித்தேன்.

“மாயப்பொன்”, நேசையன் பின்பற்றும் அறம். பௌர்ணமிக்கு ஒருவாரம் முன்பாக கடைதெருவுக்கு வந்து சாமிபடையலுக்கான நேர்த்தியோடு, பயபக்தியோடு பொருட்களை வாங்கிசெல்லும் சாரயம் காய்ச்சும் நாகப்பன்.மற்ற நேரங்களில் கெட்டவார்த்தைகளில் வசைபாடும் ஊர் பெரியவர்கள் முதல் அப்போது நாகப்பனை எதிர்கொண்டு பேசவும் தயங்குவார்கள். கூனன் அடுப்பை பற்றவைக்கையில் சற்றே ஏமாற்றமடைந்தேன். அதன் பிறகான செயல்பாடுகளில், கூனன் ஏற்றியது புகையாட்டுக்கு போடும் தழல் என்று கர்த்தரை வேண்டயபடி நேசய்யன் அடுப்பு பற்றவைப்பதை படித்ததும் நிறைவடைந்தேன். சாராயம் காய்ச்சுவதை நெய்வேதனம் செய்வதற்க்கு நிகராக அறத்தோடு செயல்படும் நேசய்யனுக்கு நிகராக துலாத்தட்டில் யாரை வைக்க இயலும்?

“கைமுக்கு”, ஒரு தேர்ந்த திரைப்படமாக, காட்சி வாரியாக கண்முன் விரியும் கதை. ரெட் கலர் டீ ஷர்ட்டும், காக்கி கலர் பர்முடாவும்,பூமா ஸ்லிப்பரும் போட்டபடி ஷோபாவில் வந்து அமரும் சிவராஜ பிள்ளை பற்றிய அந்த ஒரு பிரேம் போதும். அதையும் தாண்டியது, அவர் சொல்லும் தர்க்க காரணங்கள்.

“சொல்லை எடுப்பதில் அல்ல, நிறுத்துவதில்தான் நுண்ணறிவு உள்ளது” கல்பொருசிறுநுரை – துவாரகை உண்டாட்டில் சொல்லப்படும் வார்த்தை… தளத்தில் வெளியாகும் கொரோனா கதைகள் ஒவ்வொன்றும் அதை நிறுவியவண்ணம் உள்ளன.

நட்புடன்,

யோகேஸ்வரன் ராமநாதன்.

 

 

***

முந்தைய கட்டுரைமாயப்பொன் ,வனவாசம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைபிடி [சிறுகதை]