மதுரம், ஓநாயின் மூக்கு -கடிதங்கள்

மதுரம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

மதுரம் கதையின் மையம் வாழ்க்கையை இனிமையாக்கிக் கொள்வது. ஒரு பிளைண்ட் ஸ்பாட் எல்லாருக்குமே இருக்கும். அதை எப்படி இனிமையாக்கிக் கொள்வது என்பதுதான் முக்கியமான கேள்வி

அந்தக்கதையில் எருமை இனிமையை அடைவது மகன் வழியாக. ஆனால் மதுரம் கதை முழுக்க பரவியிருக்கிறது. ஆசான் மதுரம் தேடி பழைய காதலியை சென்று பார்க்கிறார். எருமைக்கு இருக்கும் மதுரத்தை விட கரடி நாயருக்கு இன்னும் மதுரம்

இத்தனை இனிப்பு இருக்கு உலகில், குருட்டுத்தனம் நம்மை மறைக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்

ஜெயக்குமார்

***

அன்புள்ள ஜெ,

மதுரம் கதை வாசித்தேன். மனிதனும் வீட்டுவிலங்கும் ஒரே category தான். பெயரிடுதல், பயன்படுத்தும் சொற்கள், மொழி அனைத்தும் இரண்டுக்கும் ஒன்றுதான். மனைவியோ மகளோ பிரசவ வலியில் இருக்கும் போது அடையும் பதற்றம்தான் எருமை பிரசவத்தில் இருக்கும்போதும். அது கரடி நாயரில் உச்சமாக வெளிப்படுகிறது. அது extended family தான். ஆதார் அட்டை மட்டும்தான் இல்லை. பின்னர் யானைக்கு ஜாதகம் பார்ப்பதை எப்படி எடுத்துக்கொள்வது?

என் வீட்டில் நான் வயல்களிருந்தும் மாடுகளிலிருந்தும் பிரிந்துச்சென்ற முதல் தலைமுறை. ஆனாலும் சிறியவயதில் நான் பார்த்த மாட்டின் சிலிர்ப்பு, அதன் கண் அப்படியே என் கண்முன் வருகின்றன. மாடு ஈன்றால் எனக்கு கொண்டாட்டம்தான். சீம்பு கிடைக்கும். காலை பரப்பி நின்ற கன்றுகுட்டி பின் மெதுவாக துள்ள ஆரம்பிக்கும். ‘செத்தைகளை’க் கட்டி நாய் தொடாத இடத்தில் எறிவோம். இந்த அனுபவங்களின் வழியேச் சென்றிருக்கிறேன். அந்த அனுபவக்கலவையில் இருந்து உதித்த சொல்தான் என்னுடைய ’குட்டி’ என்ற சொல். என் மனைவியையும் பிள்ளையையும் ’குட்டி’ என்றுதான் எப்போதிருந்தே கூப்பிடுகிறேன். மூன்று பேருமே ஒருவரையொருவர் ’குட்டி’ என்று அழைப்பதை நினைத்தால் சமயத்தில் சிரிப்பு வரும்.

கருப்பனும் பங்கெடுக்கும் பிரசவம் அது. வெள்ளை அங்கியும் தொப்பியும் மட்டும்தான் இல்லை. ஒரு பிரசவ நர்ஸ் போல அங்குமிங்கும் உலவுகிறது. புதுக்கன்றை முகர்ந்து ஊளையிட்டு வரவேற்கிறது. நடனமாடுகிறது.  ஒரு நாய்க்கு எத்தனை concept கள் தெரியும்? ‘ஜெயின் நாயின் எண்ணங்கள்’ என்று உங்களின் பிற கதைகளையும் ஒப்பிட்டு ஒரு குறிப்பு எழுதவேண்டும். ஏனெனில் ’துளி’ கதையில் ஒரு பிரம்மாண்டமான யானைப் போரை தன் துளி சிறுநீரால் தடுத்து நிறுத்தும் தூதன் அவன்.

இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். கோரோனா கதைகளில் உள்ள pattern களில் ஒன்று இது. இது நரேஷன் டெக்னிக்தான் என்று நினைக்கிறேன். ஒரு கதையில் ஒரு பாத்திரத்தை தொலைவில் வைக்கிறீர்கள். இன்னொரு கதையில் அதுதான் மையப் பாத்திரம். ஒரு காட்டை தொலைவில் பார்க்கும் போது மரத்தில் உள்ள விதை காட்டின் ஒரு சின்னஞ்சிறு பகுதிதான். அருகில் சென்று கையில் எடுத்து விதையை உற்று நோக்கினால் அந்தக் காடே அதுதான். இந்தச் சித்திரத்தை கதைகளில் முன்னும் பின்னும் சென்று காண்பது ஒரு நல்ல வாசிப்பனுபவம். உதாரணமாக, ‘வருக்கை’ கதையில் அச்சு ஆசான் சைட் கேரக்டர். ‘மதுரம்’ கதையில் அவர்தான் மையப்பாத்திரம்.

தினமும் வரும் சிறுகதைகளில் மூன்றுவகை உள்ளன என்று நான் நினைக்கிறேன். ஒன்று அனந்தனின் கதைகள். இரண்டு BSNL கதைகள். மூன்றாவதை உங்களின் ’தேடலின்’ கதைகள் என்று எளிமையாகச் சொல்லலாம். இதில் பல கருக்கள் உள்ளன. [இந்த வரிசை கதைகள் முடியும் போது இன்னும் தெளிவான சித்திரம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.]. இப்போதைக்கு அனந்தனின் கதைகள்…

அனந்தனின் கதைகளில் வரும் கதைமாந்தர்கள் எத்தனை வகை. கரடிநாயர்-பெருவட்டர்-டீக்கனார் மும்மூர்த்திகள். நாய் யானை எருமை குரங்குகள். பாப்பா முதல் 80 வயது கிழடுகள் வரை வருகிறார்கள். ஆனால் அனைவரின் கோணமும் அருமையாக வெளிப்பட்டு அவர்கள் யார் என்று நமக்கு தெரிகிறது. அப்புறம் கதைசொல்லியான அனந்தன். அவனுக்கு கூட ’ஒரே’ வயது இல்லை. அவன் வளர்ந்து வரும் சித்திரமும் கதையில் உள்ளது. ‘மொழி’ கதையில் வருபவன் சின்னஞ்சிறு அனந்தன். ‘ஆனையில்லா’ கதையில் வரும் அனந்தன் சிறுபயல். ‘துளி’ கதையில் இன்னும் கொஞ்சம் அதிக வயது. ‘மதுரம்’ கதையில் இன்னும் பெரியவன். அனந்தன் எந்தக் கதையில் ஓடுகிறான் எந்தக் கதையில் நடக்கிறான் என்று கவனிக்கும்போது அவன் வயதை ஊகிக்கிலாம். ‘தங்கத்தின் மணம்’ கதையில் வரும் அனந்தனுக்கு டீன் ஏஜ். கூரான கத்தி மீது நடப்பவன்.

மதுரம் கதையிலே சொல்வது போல உங்கள் கதைகளில் ‘தெய்வம் இறங்கும் இடம்’ என்ற ஒன்று உண்டு. இதுக்கூட சும்மா சொல்லிப்பார்க்கத்தான். அது எனக்கு தெளிவான அனுபவம் ஆனது உங்கள் ’பிரதமன்’ கதையில்தான். ’மதுரம்’ கதையில் அப்படி ஒரு இடம் உள்ளது. கன்றுகுட்டி பிறக்கும் அந்த இடம் என்று சொல்லலாம். ஒருவர் உணர்ச்சிவசப்படுகிறார். நண்பர்கள் முகம் மலர்கிறார்கள். நாய் நடனமிடுகிறது. பதற்றம் சாந்தமாகும் இரத்தம் பாலாகும் இனிமையான இடம் அது. ஒருவகை archetypal experience.

கன்றுகுட்டி பிறக்கும் கதை மதுரம். இன்று உங்கள் பிறந்த நாள். இனிமையான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
ராஜா.

***

ஓநாயின் மூக்கு [சிறுகதை]

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

கடந்த இரு வாரங்களாக உங்கள் கதைகளை படிக்கும்போதெல்லாம் ,”மகத் மகத் என்ற சொல்லே காதில் திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

கதைகளை மூன்று வகையாக பிரித்தால், ஔசேப்பச்சன் கதைகளில் வருபவர்கள் மகத்தான ஆளுமைகள். பிஎஸ்என்எல் கதைகளில் வருபவர்கள் சாதாரண ஆளுமைகள் ஆனால் மகத்துவ தருணத்தில் வெளிப் படுகிறார்கள். அந்த ஒரு தருணத்திலேயே அவர்களின் வாழ்வு பிடி கொள்கிறது. அனந்தன் கதைகளில், சாதாரண கிராமத்தின் நிகழ்வுகளே அச் சிறுவனின் கண்களில் மஹத் தாக விரிகிறது.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நெல்லை கன்னியாகுமரி மாவட்டங்களில் இருக்கும் கிராமங்களில் நிகழ்வுதான . அதை  உங்கள் கைவண்ணத்தில் ஒரு மகத்தான சிறுகதை ஆக்குகிறீர்கள். ஒவ்வொரு கதையும் படிக்கும்பொழுது உருண்டு புரண்டு சிரித்துக் கொண்டிருக்கிறேன். சில சம்பவங்கள் எங்கள் ஊரிலும் இதே மாதிரி நடந்தது. பூதத்தான் என்கிற ஒரு கேம்ப் வாட்ச்மேன் தண்ணியடித்துவிட்டு (நிஜ) கரடியை  அவரது சகா என்று நினைத்து கரடி தோளில் கை போட்டு ஊருக்குள் கூட்டி வந்துவிட்டார். அவ்விரவில் ஊரே அல்லோல  பட்டது.  டின்னால் சத்தம் எழுப்பியும் போகவில்லை கடைசியில் ஒரு பாட்டில் எடுத்துக்கொண்டுதான் போனது.

மொழி கதையில் வந்த பாப்பா மாதிரி நானும் எனது சிறுவயதில் பாவுளில் முந்திரி பருப்பு எடுக்கச் சென்று மாட்டிக் கொண்டேன்.நல்லவேளையாக சீனியை திருடி எடுத்து சாப்பிடுவதற்கு என் அப்பா உள்ளே வந்ததால் ஐந்து நிமிடத்திலேயே வெளி வந்துவிட்டேன். அதன்பிறகு இருவரும் கூட்டு வைத்து திருடி உண்ண ஆரம்பித்தோம்

ஓநாயின் மூக்கு ஒரு அதி அற்புதமான படைப்பு. கேரளாவின் வரலாற்றைச் சொல்லும் வகை அதை சைக்காலஜிக்கல் திரில்லர் உடன் இணைப்பது – எவ்வளவு முறை படித்தாலும் புதுசு புதுசாக நிறைய உள்வாங்க வேண்டியுள்ளது. கொற்றவையும் , நீல கிருஷ்ணனையும் மாறிமாறி நினைவுபடுத்துகிறது. Neiroscoentist வி எஸ் ராமச்சந்திரன் வார்த்தைகளில் சொல்வதென்றால்((Folie a deux)

இதன் inverse என்றால் வேரில் திகழ்வது கதையில் வரும் சிறு பெண். அன்பே உருவானவள். Empaths என்று அழைக்கப்படலாம்.

இக்கதைகளில் வரும் சில வாக்கியங்கள் மெய்சிலிர்க்க வைப்பவை.”ஒருபொருளை பார்ப்பதற்கு அதை மூடியிருக்கும் மூடியைத்தான் முதலில் திறக்கவேண்டும்”

சுல்தான்களுக்குரிய உடைவாள். இதை வழிப்பறிக்கு பயன்படுத்தக்கூடாது.”

ஒவ்வொரு நாளும் விதவிதமான கதைகள், உங்களின் மகத்தான சாதனைகள்,

அன்புள்ள,

மீனாட்சி

***

கடந்த ஒரு மாதமாக சிறுகதைகளை வாசித்து திளைக்கிறேன். பி.எச்.டி தொடங்கிய பின் வெண்முரசை தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. ஆனால் சிறுகதைகளை அன்றன்றே சூட்டோடு சூடாக வாசித்து விடுகிறேன்.

நேற்று  ‘ஓநாயின் மூக்கு’  வாசித்து ஒருவழி ஆகிவிட்டேன். பலநாட்கள் பின்னிரவில் ஆய்வகத்தில் இருந்து கிளம்பி வீடு சென்றுள்ளேன். போகும் வழியில் ஒரு அழகான பூங்கா. அதை அடுத்து ஒரு மயானம். நேற்று இரவு பதினொரு மணிக்கு தனியாக சைக்கிளில் வருகையில் யட்சியின்  நினைவு வந்து, யாருமில்லா பூங்காவில் பீதியில் இதயம் பலமாக துடிக்க அலறாத குறையாக சைக்கிளை வேகமாக மிதித்து வீடு வந்து சேர்ந்தேன்.

இதேபோல் செக்குடியரசின், செஸ்கி க்ரொம்லாவின் காட்டு பங்களாவில் இரவில் நீங்கள் வரிசையாக பேய்க்கதைகளை  சொல்லிவிட்டு தூங்க சென்றுவிட்டீர்கள். நான் இரவெல்லாம் தூங்காமல் பயத்தில் விழித்திருந்தேன்.

இந்த பேய்க்கதைகள் யட்சிக் கதைகள் என்று வந்தால் நீங்கள் தனி உற்சாகத்துடன் சன்னதம் கொண்டு விடுகிறீர்கள் எனத் தோன்றுகிறது. இந்த ஓநாய் மூக்கு கதையை எந்த ஜானரில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. மாய யதார்த்த, வரலாற்று சைக்கோதிரில்லர் மிகை புனைவு என்று எனக்கு நானே வகைப்படுத்தி வைத்துக் கொண்டேன். பிரம்மாதமான க்ளாசிக்.

செந்தில்குமார் தேவன்

***

முந்தைய கட்டுரைபத்துலட்சம் காலடிகள், வான் நெசவு – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅறத்தொடு நிற்றல் – கடிதம்