நாளிரவு
அன்புள்ள ஜெ,
நலம்தானே? நானும் நலம்
இன்று உங்கள் பிறந்த நாள் . இணையத்தில் சென்று பார்த்தேன். எத்தனை வசைகள் எவ்வளவு காழ்ப்புகள். மலைமலையாக. இந்த தமிழ்நாட்டில் இலக்கியம் படைக்கும் ஒருவர் மேல் இவை கொட்டப்படுகின்றன. எந்த ஊழல் அரசியல்வாதியும், எந்த பகல்கொள்ளைக்காரனும் , எந்த சாதியவெறுப்பாளனும் இந்த அளவுக்கு வசைபாடப்படவில்லை.
வசைபாடுபவர்கள் யார் என்ற கேள்வியில் அதற்கான பதில் இருக்கிறது. பெரும்பாலானவர்கள் நாலாந்தர அரசியல் இயக்கங்களின் ஆதரவாளர்கள். ஊழல் அரசியல்வாதிகளை தூக்கி கொண்டாடுபவர்கள். சாதி மதக்காழ்ப்புகளை பரப்பும் வெறுபபளர்கள். ஒரு நல்ல வரி எழுதிய எவரும் அந்த வரிசையில் இல்லை. அவர்கள் அனைவருக்கும் ஏதோ ஒருவகையில் நீங்கள் சவலாக இருந்துகொண்டிருக்கிறீர்கள். அவர்களுக்கு அவர்களின் இடம் என்ன என்று காட்டுகிறீர்கள்
அதைவிட விடாமல் உங்களை தொடர்ந்துவரும் ஒரு சிறுகுழு இருந்துகொண்டே இருக்கிறது. அவர்கள் இலட்சியவாதிகளாக இருக்கிறார்கள். படைப்பாளிகளாக இருக்கிறார்கள். எதிர்காலத்தை உருவாக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் தொடர்ந்து ஓர் உச்சமனநிலையில் இருக்கிறீர்கள். அவர்கள் எவரும் கற்பனைசெய்துபார்க்கமுடியாத நிலையில் இருந்து எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்.
சிறிய மனிதர்கள். மிக மிக எளிமையான மனிதர்கள். அவர்களால் இவ்வளவுதான் முடியும். அவர்களை நீங்கள் முழுமையாக புறக்கணிப்பதே அவர்களுக்கு செய்யும் வாழ்த்து
செந்தில்குமார்
நவீன இலக்கியத்தில் கொஞ்சம் அறிமுகம் உண்டாகி, அதுசார்ந்த வாசிப்பைத் துவங்கியிருந்த காலகட்டத்தில் சுந்தர ராமசாமியைக் கண்டடைந்து அவரின் படைப்புகைளை வாசிக்கத் துவங்கியிருந்தேன். ஒருநிலையில் அவ்வாசிப்பின் விளைவாக சுரா மீது ஒரு அளவுகடந்த ஈர்ப்பு உண்டாகியது. அதன்விளைவாக அவருக்கு சில கடிதங்களை எழுதியிருந்தேன். அவரும் அதற்கு பதில்கடிதம் அனுப்பியிருந்தார். தந்தையின் குடியால் வீட்டில் மாலை நேரங்களில் உருவாகிற நெருக்கடியும், உறவுகளை அணுகுவதில் உண்டாகிற அச்சமும் இணைந்து, ஒருநாள் மனதின் சமநிலையைக் குலைத்து ஒரு பெரும் துயருணர்வை எனக்குள் உருவாக்கியது.
என்ன செய்வது? யாரிடம் அழுவது? எனத் தெரியாமல் அவசரஅவசரமாக சுந்தர ராமசாமி அவர்களின் வீட்டு எண்ணிற்கு அந்த இரவில் தொலைபேசியில் அழைத்தேன். எனக்கு வந்திருந்த கடிதத்தில் அவருடைய வீட்டின் தொலைபேசி எண்ணையும் எழுதியிருந்தார். அந்த அழைப்பை அவரது மகன் கண்ணன் எடுத்தார். “அப்பா மாத்தர சாப்ட்டு தூங்கிட்டாரு. எதாச்சும் அவசரம்ன்னா சொல்லுங்க” என்றார். “இல்லைங்க… அவரு குரல கேக்கணும்ன்னு தோனுச்சு… அதான்…” என்று ஏதேதோ உளறி அந்த அழைப்பை முடித்துவைத்தேன்.
அந்த துயரிரவுக்கு இருநாள் கழித்து காலை பதினோரு மணியளவில் என் வீட்டு முகவரிக்கு ஒரு பார்சல் வந்தது. பிரித்துப் பார்த்தால், சுரா அனுப்பியிருந்த இரண்டு புத்தகங்கள் அதில் இருந்தன. புத்தகத்தின் முதற்பக்கத்தில் சில நம்பிக்கை வரிகளை எழுதி கையொப்பமிட்டு அனுப்பியிருந்தார். அவருடைய கையெழுத்து… அந்தப் புத்தகங்கள்… என அந்தநாளின் ஒவ்வொரு கணமும் இன்னும் துல்லியமாக ஞாபகத்தில் உறைந்திருக்கிறது. அந்தச் சூழ்நிலையில் அதுதந்த மீட்சியென்பது சொல்லில் உள்ளடக்க இயலாதது. இப்பொழுது நினைத்தாலும் கண்ணீரை வரவழைக்கும் காலநாட்கள் அவை. அதன்பின், ஐந்தாறு முறைகள் சுராவுடன் சில சந்திப்புகள் எனக்கு அமைந்தது.
சுந்தர ராமசாமியின் மரணத்திற்குப் பிறகு, இலக்கியங்கள் மீதோ எழுத்தாளர்கள் மீதோ எனக்கிருந்த நம்பிக்கைகள் மெல்லமெல்ல சரிவதை அகமுணர்ந்தேன். ஒவ்வொரு படைப்பிலக்கியவாதியையும் நெருங்கி அருகில் செல்ல, புறவுலகு அறியாத அவர்களின் இன்னொரு இருண்டபக்கம் எனக்கு அச்சமூட்டியது. அவர்களில் சிலர், ஒரு எதிர்மறையான தூண்டுதலை மனதுக்கு தந்துகொண்டே இருந்தார்கள். வெறுமையும் அவநம்பிக்கையும் அடைவதிலிருந்து என்னை நான் தவிர்க்க முடியவில்லை. தன்னியல்பாக காலங்கள் நகர, நான் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சில சிறுகதைகளை வாசித்தேன். ஒருவிதத்தில் அதுவொரு கண்டடைதலின் கணம் என்றே சொல்லத் தோன்றுகிறது. ஏதோவொருவகையில் சுந்தர ராமசாமியின் ஒட்டுமொத்த வாழ்விருப்பையும்… வெகு இயல்பாக ஒற்றைவரியில் நிரப்பிக்காட்டி தரிசனப்படுத்தி, எங்கோவிருந்து தொட்டுணர்த்தும் ஒருவராகவே ஜெயமோகன் அவர்களை நாங்கள் வாசித்தறிந்தோம்.
நாம் எடுத்துக்கொள்கிற செயலில் தீர்க்கம்கொண்டு பயணிக்கும் நமது வாழ்வுச்சூழலில்… அந்தச்செயல் நிகழ்கையில் எழும் எதிர்ப்பு விமர்சனங்களையும், அச்செயல் நன்முறையில் நிறைவடைகையில் உருவாகிற அற்ப அவதூறுகளையும் மனச்சமநிலையை இழக்காது கடக்கவைக்கும் அகத்துணிவை வழங்குவதாக அவருடைய படைப்புகளை நாங்கள் உள்வாங்கத் துவங்கினோம்.
நாங்கள் தீர்க்கமாகச் சொல்கிறோம், எடுத்த செயலை எவ்வித இடைநிற்றலும் இல்லாமல், கடந்த கணத்தைவிட தீவிரமான இக்கணத்தில் இயங்குவதற்கான அகச்சக்தியை நாங்கள் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சொற்களிலிருந்து பெறுகிறோம். அந்தச் சொற்சுனை தீராத அர்த்தவூற்றாக நிரம்பிப் பொழிகிறது.
எவ்வளவு நிகழும்போதும், தன்னுடைய உரையாடும் மாண்பை அவர் நிறுத்திக்கொண்டதே இல்லை. தன்னைநோக்கி வருகிற அத்தனை இளைஞர்களிடமும் உத்வேகந்தரும் உள்ளத்தோடு உரையாடுகிறார். அவரவர் தன்னறத்தைக் கண்டடைய வழிசொல்கிறார். வெற்றி தோல்விகளின் நிச்சயமின்மையைத் தாண்டி, செயலில் நிலைக்கிற அனுபவத்தின் ஞானக்கல்வி பற்றி எடுத்துரைக்கிறார். வன்மநஞ்சு தடவிய எதிர்மறை விமர்சனத்தின் அம்புநுனி, எவ்வகையிலும் தனது படைப்பிருதயத்தை தொட்டுவிடாமல் தற்காத்துக்கொள்கிறார். ஒரு தத்துவமரபு என்பது, ஒன்றையொன்று மறுத்தும் நிரப்பியும் முன்செல்லுகிற கருத்துக்களின் விளைவால் உருவாகிற பண்பாட்டு இயக்கம் என வடிவப்படுத்துகிறார். “எதிரெதிரான கருத்துக்கள் இடையே இறுக்கமான பகைமை இருக்கத் தேவையில்லை” என்ற ஹெகலின் அறவரிகளை மீளமீள நாங்கள் ஜெயமோகன் படைப்புலகத்திலும் நெஞ்சுணர்கிறோம்.
இவ்வாறு எங்களை தன்னுடைய இருப்பாலும் படைப்பாலும் வழிநடத்துகிற ஆசான் ஜெயமோகன் அவர்களின் பிறந்த தினமான இன்று… பூமிதானத்தாய் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்கள் தனது அதிகாலைப் பிரார்த்தனையில் அவருடைய பெயர் உச்சரிக்ககப்பட்டு பூரண நலத்திற்கான மனமன்றாடுதல் பேரிறைமுன் கைதொழுது வைத்தார். எல்லா நிலையிலும் எங்களுடைய செயலுக்கும் நம்பிக்கைக்கும் தன்னிருப்பால் துணைநிற்கும் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு… இன்றெங்கள் மனங்குவிக்கும் அத்தனை நல்லதிர்வுகளும் வாழ்த்தென இருதயம் சேர்க.
சிவராஜ்
குக்கூ காட்டு பள்ளி