ஓநாயின் மூக்கு [சிறுகதை]
அன்புள்ள ஜெ,
பத்துலட்சம் காலடிகள் கதை உருவாக்கிய அலை சமீப காலத்தில் தமிழ் தீவிர இலக்கிய உலகில் நிகழாத ஒன்று. ஒரு கலைஞனை எதைக்கொண்டு மூடிவிடமுடியாது என்பதை வெறுப்பாளர்களுக்கு உணர்த்திய கதை அது. அடையாளங்களை போடுவது வெறுப்பைக் கக்குவது என்று செய்து செய்து ஒழித்துவிடலாம் என நினைப்பார்கள். கலை அதன்போக்கில் பீரிட்டு எழுந்து விடும். அதற்குமுன் வாசகன் திகைத்து பிறகு தலைவணங்கிவிடுவான்.
ஏனென்றால் அவன் என்னவாக இருந்தாலும் அடிப்படையில் கலையை ரசிப்பவன், இலக்கியத்தை அறிந்தவன். எல்லாவற்றையும் தாண்டிச்சென்று கலையை அறிபவர்கள் சிலர் இருப்பார்கள். உண்மையில் அவர்கள்தான் ஒரு சூழலில் எது இலக்கியம் என முடிவுசெய்பவர்களே ஒழிய முகநூலில் சதா சலம்பிக்கொண்டிருப்பவர்கள் அல்ல. அப்படிப்பட்ட ஒரு பெரிய அலை வந்து இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் ஒவ்வொன்றையும் அடித்து காணாமலாக்கும்போது உருவாகும் பதற்றமே இவர்களை கதையையே திரிப்பது தப்பாக விளக்குவது என்று சில்லறைத்தனங்களில் இறங்கச் செய்கிறது.
என்னை போன்ற வாசகனுக்கு உடனடியாக தோன்றுவது ஓர் எரிச்சல்தான். எதையுமே வாசிக்காத, வாசித்தாலும் மண்டையில் ஏறாத இந்தக்கும்பலா இலக்கியம், அறிவியக்கம் எல்லாவற்றையும் தீர்மானிப்பது? இவர்கள் எப்படி இந்த தன்னம்பிக்கையை அடைகிறார்கள்? தீப்பொறி ஆறுமுகம் என்றைக்குமே சுந்தர ராமசாமிக்கு இலக்கியம் சொல்லிக்கொடுக்க முயன்றதில்லை. அவருக்கு அட்லீஸ்ட் அதுவாவது தெரிந்திருந்தது.ஆனால் இன்றைக்கு இருக்கும் தீப்பொறி ஆறுமுகங்களுக்கு அதுவும் தெரியவில்லை. காரணம் சமூக ஊடகங்கள்.
இவர்கள் எழுதும் முட்டாள்தனங்களைக் கண்டு உருவாகும் சீற்றமும் சலிப்பும்தான் உங்கள் படைப்புலகைப்பார்த்து வரச்செய்கிறது. அந்தவகையில் இவர்கள் நன்மையையே செய்கிறார்கள்
நான் கட்டுமானத்துறையில் இருக்கிறேன். ஒரு கட்டிடத்தின் ப்ளூப்ரிண்ட் ஒரு அமைப்பு. அதன்மேல் அப்படியே படியும் அதன் எஞ்சீனியரிங் இன்னொரு அமைப்பு. அதன்மேல் படியும் இண்டீரியர் டெகரேஷன் இன்னொரு அமைப்பு. அப்படி மூன்று அமைப்புக்கள் சேர்ந்து ஒரு வீடு உருவாகிறது. வீட்டை ஹேண்டோவர் செய்துவிட்டு ஆறுமாசம் கழித்து போய்ப்பார்த்தால் வீடே வேறுமாதிரி இருக்கும். லைஃப் இன்னொரு அமைப்பு.
இந்த ஸ்டக்சுரல் யூனிஃபிகேஷனை அற்புதமாகச் சொன்ன கதை பத்துலக்ஷம் காலடிகள். இது மெக்கானிக்கலாக தோன்றும். ஆனால் இது ஒரு ஆர்கானிக் மெக்கானிசம். அதாவது கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி வளர்ந்துகொண்டே இருப்பது.
எந்த எஞ்சீனியருக்கும் தெரியும், ஆர்கானிக் மெக்கானிசத்துடன் வேறு ஸ்ட்ரசரை ஒப்பிட்டுப்பார்க்கவே முடியாது. அவ்வளவு பிரம்மாண்டமானதாக இருக்கும். மாப்பிளா அமைப்பு. போலீஸ் அமைப்பு. மனித உறவுகளின் அமைப்பு. கப்பல்கட்டும் அமைப்பு என்று ஒன்றுக்குமேல் ஒன்றாக படியும் அந்தக்கதையை இன்றைக்கு உள்ள எந்த தொழில்துறையிலும் கொஞ்சம் விழிப்புடன் வேலைபார்ப்பவர்கள் கொஞ்சம் உணர்ந்திருப்பார்கள். ஆகவேதான் அதையே கதையில் படிக்கும் போது இது எனக்கும் தெரியும் என்று பதற்றம் வருகிறது, இதுவும் கதையாகுமா என்ற பரவசமும் வருகிறது.வாழ்த்துக்கள் ஜெ
எம்.ஆர். சந்திரசேகர்.
***
அன்புள்ள ஜெ,
பத்துலட்சம் காலடிகள் ஒரு பல அடுக்குள்ள கதை. அதுபோன்ற கதை மூன்று இந்த வரிசையில் வந்திருக்கிறது. வேட்டு அதில் ஒன்று. வேரில் திகழ்வது இரண்டாவது. மூன்றாவது கதை எழுகதிர்.
பத்துலட்சம் காலடிகள் கதையின் சாராம்சமான இடம் அந்தப்பெண் அந்தப்பையனைப் பற்றிச் சொல்வதுதான். பெண்கள் பல திரைகளை போட்டுக்கொண்டிருப்பார்கள். அவர்கள் ஒவ்வொன்றாக அதையெல்லாம் விலக்கி கொஞ்சம் காட்டி அப்படியே மூடிக்கொண்டுவிடுவார்கள். அந்த ஒரு கணம் எவரையும் கொஞ்சம் உலுக்கிவிடும். அந்த இடம்தான் கதையின் உச்சம்.
வாழ்த்துக்கள் சார்
ஜி.சங்கர நாராயணன்
***
பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
ஓநாயின் மூக்கு நடுங்கவைத்த கதை. அது ஏன் நடுங்கவைத்தது என்று யோசித்துப்பார்த்தேன். அதில் வரும் மோகினியால் அல்ல. அதிலுள்ள inevitability யால்தான். நீங்கள் சரித்திரத்தை பிரம்மாண்டமாக ஆக்கி அதன்மேல் மனிதர்கள் எறும்புகள் போல ஊர்வதாக காட்டிவிட்டீர்கள். துப்பறியும் கதையின் வடிவம் கொஞ்சம் பேய்க்கதை. கொஞ்சம் வரலாறு. ஒட்டுமொத்தமாக சரித்திரம் என்னும் சாபம்.
இந்தக் கதையின் மைய வரியே பிரிவினைக்கால வரலாற்றின் சாபம்தான் நமது சமகாலத்தை ஆட்டுவிக்கிறதா என்பதுதான்
பிரசாத்
***
பெருமதிப்பிற்குரிய திரு .ஜெயமோகன் அவர்களுக்கு .
என்றும் தங்கள் நலம் வேண்டுகிறேன் , பிறந்தநாள் வாழ்த்துக்களும் ,,
தங்கள் யக்ஷி கதைகள் என்றுமே ஆர்வமும் ,பதற்றமும் ஒருங்கே அரங்கேறும் ஜாலங்கள் , ஆனால் நேற்று நடுநிசியில் “ஓநாயின் மூக்கு” ஐ, வாசித்து முடிக்கும் பொழுது ,உள்ளம் ஒருவித உச்ச அதிர்வலைகளால் ஆட்கொண்டிருந்தது . நிகழ்காலத்தில் நடக்கும் தொடர்மரணங்கள் ,அதையொட்டிய துப்பறியும் செயல்பாடுகள் மூலமாக தெரியவரும் வரலாற்று நிகழ்வுகளும் , அக்கால சம்பவங்களும், அதன் பின்னணிகளும், அவ்வரலாற்றினூடாக நாம் அறியும் தொன்மமும் , மரபுகளும் , என விரியும் இக்கதையில் , நவீன உளவியல் சார்ந்த விவாதங்களும் கதை முழுவதும் அமையப்பெற்றுள்ளது .
இக்கதை , துப்பறிவு -வரலாறு-தொன்மம் -அமானுஷ்யம் -உளவியல் , என இவ்-ஐந்து தளங்களிலும் அனாயசியமாக விரிகிறது , எழுத்தின் அடர்த்தியும் , கதையின் கணமும் ,விவரிப்பின் லாவகமும் ஒரு வாசகனுக்கு வாசிப்பின் உச்ச தருணங்களை அருள்கிறது .
இக்கதை மையம் கொள்வது -மனித உளவியல் சார்ந்து , ஆனால் உச்சம் பெறுவது அமானுஷ்யம் சார்ந்த யக்ஷி-இன் அம்சத்தில் .
இக்கதையில் , தொடர் மரணங்களுக்கு காரணம் யக்ஷி-யா அல்லது மனித உளவியல் சார்ந்ததா என்ற விவாதம் ,வாசகர் சிந்தனை விரிவிற்குட்பட்டது . ஆனால் கதையில் கேட்கப்படாத கேள்வி ஒன்று உண்டு , கேள்வி : ஒவ்வொருமுறையும் யக்ஷி பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு தொடங்குவதில் இருந்து வழிபாடு நிற்கும் வரையில் , உண்மையில் தொடர் துர்மரணங்கள் நிகழவில்லையா ?..அதுவே அனைத்திற்கும் பதிலாகவும் இருக்கமுடியும் ..ஊமைச்செந்நாய் , லங்காதகனம் , முடிவின்மையின் விளிம்பில் , போன்ற அழுத்தமான சிறுகதை வரிசையில் இணையும் தகுதி -ஓநாயின் மூக்கு-கிற்கும் உண்டு .
மேலும் , தங்கள் விசைப்பலகையில் உறைந்துள்ள யக்ஷி-கள் , உங்கள் கதைகளில் உயிர்பெற்று பேராற்றல் கொள்வது கிளர்ச்சியூட்டுகிறது .
யட்சிகள் அறம் வென்று ,சாந்தியடைக.
நன்றி
வே.அழகுமணிகண்டன்
மதுரை
***