கரவு [சிறுகதை]

“தேன்சிட்டு போலே தேடிவந்து களவெடுப்பான்! பூவிட்டு பூ தொடுவான்! வான்விட்டு வந்த மகன் வயணமெல்லாம் சொல்வேனோ!” என்று கணீர்க்குரல் ஒலித்தது. “ஆ! வான்விட்டு வந்த மகன் வயணமெல்லாம் சொல்வேனோ!” என்றார் பின்பாட்டுக்காரர்.

தங்கன் ஒரு பீடியைப் பற்றவைத்துக்கொண்டான்.

“அண்ணே இப்டி ஒளிச்சிருக்கிறப்ப பீடி பிடிக்கலாமா?” என்று செல்லன் கேட்டான்.

“நீ பிடிக்கப்பிடாது” என்று தங்கன் சொன்னான்.

“செரீண்ணே” என்றான் செல்லன்.

தங்கன் பீடியை இழுத்துக் கொண்டிருந்தான். தொலைவில் மாயாண்டிசாமி கோயிலின் வெளிச்சம் சிவப்பாக கரிய வானில் கசிந்து பரவி மேலேறியிருந்தது. அமாவாசை இரவு. கன்னங்கரிய வானத்தில் கண்கூசவைக்கும் அளவுக்கு நட்சத்திரங்கள்.

நட்சத்திரங்களை நிறைய பார்க்கக்கூடாது என்று தங்கன் சொன்னதை செல்லன் நினைத்துக்கொண்டான். பார்க்கப் பார்க்க அவை பெருகும்.

“அண்ணே ஏன்ணே நச்சத்திரம் நாம பாக்கப் பாக்க கூடீட்டு இருக்கு?” என்று அவன் ஒருமுறை கேட்டான்.

“நச்சத்திரம் இருக்கப்பட்டது கண்ணுக்குள்ளேயாக்கும்லே. மேலே தெரியுதது என்ன? அது சதாகாசம். நம்ம கண்ணுக்கு உள்ள இருக்கப்பட்டது சிதாகாசம். சிதாகாசத்திலயும் கோடானுகோடி நச்சத்திரங்க உண்டு. நாம வானத்தை பாத்தா இங்க உள்ளதும் அங்க போயி சேந்துகிடும்.”

“உள்ளாலே ஆகாசம் எப்டீண்ணே?” என்று செல்லன் கேட்டான்.

“சுண்ணி மாதிரி பேசப்பிடாது. சொன்னத கேட்டுக்கிடணும்” என்றான் தங்கன் “ஏலே, நீ உறங்கும்ப சொப்பனத்திலே வானம் வந்திருக்கா?”

“ஆமா.”

“அது எப்டி வருது? எங்கே இருக்கு அது?”

அவனுக்கு திகைப்பாக இருந்தது. அப்படி யோசித்ததே இல்லை.

“இதெல்லாம் எப்டிண்ணே உங்களுக்கு தெரியும்?”

“லே, நம்ம சாமி சுடலையாக்கும். சுடலை ஆறு சாத்திரம் எட்டு தொளில் ஒன்பது ரெசம் அறிஞ்சவனாக்கும்…”

“ஆமா” என்றான்.

“நாம சுடலைக்க ஆளுல்லா?” என்றான் தங்கன் “நாம சுடலை ஏறி நிக்குத தேராக்கும் கேட்டுக்க.”

அது அவர்கள் ஒத்தநாடார் குடியிருப்புக்கு திருடப் போய், குட்டிச்சுவருக்குப் பின்னால் பதுங்கி அமர்ந்து சிவதாணுப் பிள்ளையின் வீட்டை நோட்டம்விட்டுக் கொண்டிருந்தபோது. அங்கிருந்து காளைமாடுகளை திருடினார்கள். இரண்டு காங்கேயம் காளைகள். அவற்றை திருடிக் கொண்டுவந்து ஊருக்கு வெளியே ஓர் இடத்தில் கட்டினார்கள். காளைகளின் கயிற்றை அறுத்து செல்லன் பிடித்துக்கொள்ள தங்கன் பச்சைப்புல்லை அவற்றின் வாயருகே காட்டி மிகமெல்ல கூட்டிக்கொண்டு சென்றான்.

“புல்லில்லாம கூப்பிட்டா வராதாண்ணே?”

“வரும். ஆனா அப்ப நான் கெளம்புதேன்னு வீட்டுலே உள்ளவங்களுக்கு ஒரு சத்தம் குடுத்திட்டு வரும்… புல்லக்கண்டா தன்னைய மறந்து வரும்… ஏல, அது நடக்குதது அதுக்கே தெரியாது. புல்லுக்கு நாக்க நீட்டுது. நாம புல்ல இளுக்குதோம். அது களுத்தை எக்கி அறியாம காலை வைக்குது.”

மாடுகளை ஏரிக்கரை அருகே கட்டிவிட்டு அவர்கள் திரும்ப வந்து வண்டியை மெல்ல உருட்டிக்கொண்டு சென்றனர். அதற்கு முன் வண்டியின் பின் கட்டையை கழற்றி உள்ளே போட்டுக்கொண்டான் தங்கன். அது கடகடவென சத்தம்போடும்.

“நாம வண்டிய விக்கிறோமாண்ணே?”

“வண்டிய வாங்கமாட்டானுக”

“பின்ன?”

“ஏல, அர்த்த ராத்திரியிலே வெறுங்காளையோட போனா என்னலே நினைப்பானுக?”

“ஆமால்ல?”

அவர்கள் காளைகளை மாட்டு வண்டியில் கட்டி ஓட்டிக்கொண்டு சென்றபோது வானத்தில் நட்சத்திரங்கள் நிறைந்திருப்பதை செல்லன் மீண்டும் கண்டான். அரைத்தூக்கத்தில் வண்டியில் படுத்தபடி அண்ணே “சிதாகாசத்திலே நச்சத்திரங்கள்ணே… அண்ணே எனக்க சிதாகாசத்திலே நெறைய நச்சத்திரம்ணே” என்றான்.

“பேசாம கெட. சவிட்டி உள்ளே இருந்து ஒவ்வொண்ணா பிதுக்கி எடுத்து வெளியே போட்டிருவேன்” என்றான் தங்கன்.

மாயாண்டி கோயிலில் அழகியபாண்டிபுரம் கோலப்ப புலவரின் வில்லுப்பாட்டு நடந்துகொண்டிருந்தது. டோலக்கும் குடமும் சேர்ந்து ஓசையெழுப்பின. வில்லின் சலங்கையோசை இணைந்து கொண்டது. கோலப்ப புலவருக்கு பதினாறு கட்டை கோலப்பன் என்று பெயர் உண்டு. கூடவே மைக்கும் இருந்தது.

“அண்ணே” என்றான் செல்லன்.

“சொல்லு.”

“நான் ஏன்ணே பீடி பிடிக்கப்பிடாது?”

“தீ காட்டிக்குடுத்திரும்ல? புகை காட்டிக்குடுத்திரும்ல?”

“அப்ப நீங்க?” என்று கேட்க ஆரம்பித்து செல்லன் நிறுத்திக்கொண்டான். தங்கன் பீடி பிடிப்பதை கூர்ந்து பார்த்தான். தீப்புள்ளி முழுக்க முழுக்க அவன் கைக்குள்ளேயே இருந்தது. பீடியை ஆழ இழுத்து புகையை வாய்க்குள்ளேயே வைத்திருந்தான். காற்று விரைவாக வீசியபோது அதில் புகையை ஊதி பறக்கவிட்டான்.

புலவரின் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. மாயாண்டி சாமியின் லீலைகளை பாட்டும் வேடிக்கையுமாக சொல்லிக்கொண்டிருந்தார். அவ்வப்போது கேட்டிருப்பவர்களின் சிரிப்பொலி கேட்டது.

புலவர்கள் பெரும்பாலும் காலையிலேயே வந்துவிடுவார்கள். ஒன்றிரண்டு மணிநேரம் ஊர்ச்சாவடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் பிறர் வாயைக் கிண்டி பேசவைப்பார்கள். அதில் தெரிந்து கொண்ட வம்புகளை பலவகையாக வளர்த்து நையாண்டியாகச் சொல்வார்கள். அந்த ஊருக்கு மட்டுமே புரியும் பகடிகள், நிறைய ஆபாசக்குறிப்புகள். அதற்குத்தான் ஊரே திரண்டு வந்திருக்கும்.

காற்று திசைமாறி அடித்தது. அதில் அருகிலிருந்த ஏரியின் நீரின் பாசிமணம் இருந்தது. தங்கன் மேலே நட்சத்திரங்களைப் பார்த்தான். செல்லன் தானும் மேலே பார்த்தான். அருகே இறங்கிச் சுடர்விட்டுக்கொண்டிருந்த அந்த நட்சத்திரம் தன் சிதாகாசத்தில் எங்கோ இருக்கிறதா? அவனுக்கு மண்டைக்குள் கிங் கிங் கிங் என்று சிங்கியை அடித்ததுபோல் இருந்தது. தலையை கையால் தட்டிக்கொள்ளவேண்டும் என்று தோன்றியது.

“வாலே” என்று தங்கன் எழுந்துகொண்டான். லுங்கியை திரைத்து கட்டிக்கொண்டான். உள்ளே நீல நிறமான இறுக்கமான டிரௌசர் போட்டிருப்பான். எவராவது துரத்தினால் ஓடும்போதே லுங்கியை கழற்றி பின்னால் வருபவனின் காலை நோக்கி எறிவான். அவன் பெரும்பாலும் கால்தடுக்கி விழுந்துவிடுவான். அல்லது தடுமாறி நிற்பான். அதற்குள் தங்கன் நெடுந்தொலைவு சென்றுவிடுவான். ஒருமுறை நவல்காட்டில் முதலில் வந்தவன் கால்தடுக்கி விழ ஏழெட்டுப்பேர் தொடர்ந்து அவன்மேல் முட்டிமுட்டி விழுந்தார்கள்.

செல்லன் சுற்றிலும் பார்த்துக்கொண்டே அவனை தொடர்ந்து போனான்.

இரவு பன்னிரண்டு ஊர் ஓய்ந்து கிடந்தது. தெருக்களில் வெளிச்சமே இல்லை. ஓரிரு வீடுகளில் விளக்குகள் எரிந்தன. சில திண்ணைகளில் கிழடுகள் படுத்திருந்தன.

“அண்ணே இப்டி நாம தெருவோட போனதே இல்ல.”

“இது கொடைநேரமில்லா…” என்றான் தங்கன்.

எதிரே வந்த கிழவர் “ஏலே, நாராயணனாலே?” என்றார்.

“ஆமா மாமா” என்றான் தங்கன்.

“உனக்க கெட்டினவ அங்க கதைகேட்டு உறங்குதா… பிள்ளைக பனியிலே கெடக்கே. வீட்டிலே கொண்டாந்து படுக்கவைக்கப்பிடாதா?” என்று சொன்னபடியே அவர் சென்றார்.

“செரி மாமா” என்றான் தங்கன்.

அவர்கள் ஒரு பெரிய ஓட்டுவீட்டின் அருகே வந்து நின்றார்கள். தங்கன் சுற்றுமுற்றும் பார்த்தபின் “லே, நீ இந்த திண்ணையிலே படுத்துக்க” என்றான்.

“அண்ணே.”

“பேசாம படு… வேற எவனாம் வந்து அந்தால படுத்தாலும் கண்ண திறக்காதே.”

“நீங்க எங்கண்ணே போறிய?”

“நோட்டம் பாக்க வந்தப்ப பளக்கமான குட்டி ஒண்ணு இங்க உண்டு… போயி என்னான்னு கேட்டுட்டு வாறேண்டே.”

“செரிண்ணே” ஆனால் செல்லனுக்கு படபடப்பாக இருந்தது. “ஏண்ணே?” என்றான் “எப்டீண்ணே தெரியும்? வீட்டிலே ஆளிருந்தா?”

“கொடியிலே வெள்ளத்துணிய விரிச்சு போட்டிருக்காலே. அவளுக்க கெட்டினவன் கதைகேக்க போயாச்சுண்ணு அர்த்தம்.”

“கெட்டினவன் இருக்க குட்டியா?”

“ஆமா, அவளுகளுக்குத்தானே இதுக்க ருசி தெரியும்? மத்த பெண்ணுகளுக்கு சிலோன் ரேடியோவிலே கே.எஸ்.ராஜாவுக்க சத்தம் கேட்டா போரும்லா?”

“வெள்ளத்துணி சிக்னலாண்ணே?”

“ஆமா, எனக்கு. உனக்கில்லை.”

தங்கன் சென்றபின் செல்லன் பெருமூச்சுடன் திண்ணையில் படுத்தான். திண்ணை நல்ல குளுமையான கல்லால் ஆனது. அந்த வீட்டின் கதவு சிறிய பூட்டால் பூட்டப்பட்டிருந்தது. கொஞ்சம் ஏழைப்பட்ட வீடு என்று தெரிந்தது.

அவன் அங்கே படுத்துக்கொண்டு புலவரின் கதையை கேட்டுக்கொண்டிருந்தான். மாயாண்டிச் சாமி மகாராஜாவின் அரண்மனைக்குள் வௌவாலாக மாறி பறந்து சென்றது. பாம்பாக மாறி அரண்மனையின் அறைகள் தோறும் சென்றது. இளவரசியின் அறைக்குள் புகுந்ததும் ஆணழகனாக ஆகியது. அவளை முலைகள் நடுவே முத்தமிட்டு எழுப்பியது.

“ஏன் நடுவிலேன்னு கேட்டீகன்னா, அவன் தெய்வம்லா? நடுநிலைமை வேணும்லா? கூடக்குறைஞ்சு போனா தர்மக்கேடுல்லா”

கேட்டுக்கொண்டிருப்பவர்களின் சிரிப்போசை.

“முட்டெருமை முரடனல்லோ, எஞ்சாமி சிட்டுக்குருவி வேகமல்லோ! மதயானை திமிரல்லோ, எஞ்சாமி மாநாக நஞ்சல்லோ”. பின்பாட்டும் டோலக்கும் இணைந்துகொண்டன. சம்பந்தமே இல்லாத எவரோ எக்களித்துக்கொண்டே இருப்பதுபோல குடம் ஓசையிட்டது.

“லே” என்றான் தங்கன் ரகசியமாக.

“அண்ணே வந்திட்டியளா?”

“ஆமா” என்றான். “வா போவம்…”

“அண்ணே திருட வாறப்ப இதெல்லாம் தேவையாண்ணே?”

“உள்ளூர்லே ஒரு ஆளிருக்கது நல்லதாக்கும்.”

“இதையெல்லாம் சொல்லுவாளுகளா?”

“அவளுகளுக்கு இதொரு திரில்லாக்கும்.”

“அண்ணே காட்டிக்குடுப்பாளுகளா?”

“குடுப்பாளுக, அவளுக மாட்டிக்கிட்டா தப்புறதுக்காக ஆரை வெணுமானாலும் காட்டிக்குடுப்பாளுக. பெத்த அப்பனையும் ஒத்த புருசனையும் முக்கோடி தேவர்களையும் மூணு தெய்வங்களையும் மாட்டிவிட்டிருவாளுக. ஆனா தான் மாட்டாத நேரத்திலே அடிச்சாலும் உதைச்சாலும் சுண்ணாம்புக் காளவாயிலே போட்டு எரிச்சாலும் வாயே தெறக்கமாட்டாளுக”

“அண்ணே இதெல்லாம் கெட்ட பொம்புளைக இல்ல?”

“லே, கெட்டிக்கிடந்தா கொளம், ஓடினா ஆறு. எல்லாம் ஒண்ணுதான். கங்கைக்கு பங்கமில்லேண்ணாக்கும் சொல்லு.”

அவர்கள் ஊர் நடுவே இருந்த மாபெரும் வீட்டை அடைந்தனர். நூறாண்டு பழக்கமுள்ள சுதையாலான வீடு. மூன்று நிலை. மூன்றாம் நிலைக்குமேல் சரிந்த ஓட்டுக்கூரை.

“அண்ணே புறத்தாலே போவமா?”

“லே மக்கா, இப்ப ஊரெல்லாம் ஆளு நிறைஞ்சிருக்கு. ஒண்ணுரெண்டுபேரு பொண்ணுகளை விளிச்சுகிட்டு கொல்லைக்கும் காட்டுக்கும் போயிருக்கவும் சான்ஸ் இருக்கு. நாம வீட்டுக்கு பொறத்தால போனா அவனுக பாத்திருவானுக. இந்நேரத்திலே கொல்லைப்பக்கம் நின்னாலே பிடிச்சிருவானுக… ” என்றான் தங்கன்.

ஒருவர் தூங்கும் குழந்தையுடன் தள்ளாடியபடி சென்றார்.

“மச்சான், அக்கா கதை கேக்குதாளோ?”என்றான் தங்கன்.

“ஆமலே, என்ன எளவு கேக்காளோ… ஒரு மயிரப்பிடுங்கின கதை” என்றபடி அவர் சென்றார்.

“பாத்தியா, இங்க நம்மள ஆரும் ஒண்ணும் சந்தேகப்பட மாட்டாங்க… பேசாம வா” என்றான் தங்கன் “சும்மா வராதே. என்னமாம் பேசிட்டே வா.”

“என்ன பேச?”

“என்னமாம் பேசு… சாதாரணமா”

“ஏண்ணே சாமிய தேன் சிட்டுண்ணு ஏன் சொல்லுதாரு?”

“ஆரு?”

“புலவரு?”

“என்ன சொன்னாரு?”

“தேன் சிட்டு போலே தேடிவந்து களவெடுப்பான்னு.”

“ஏலே, அது சாமி களவெடுக்குததப் பத்தி சொல்லுதாரு… தேன் சிட்டு தேனெடுக்குதத பாத்திருக்கியா?”

“ஆமா.”

“ஊதினா உதுந்திரக்கூடிய பூவுலே தேன்சிட்டு தேனைக்குடிச்சுட்டு போயிரும்… ஒரு வண்டோ தேனீயோ உக்காந்தா காம்பு களண்டு விளக்கூடிய பூவிலே இருந்து….” என்றான் தங்கன் “எப்டி? அது செறக திரும்பி சுழட்டி வீசும். அப்ப அதுக்கு வெயிட்டே இல்லாம ஆயிரும். வெறுங்காத்திலே நின்னுட்டு கொம்ப மட்டும் பூவுக்குள்ள விட்டு தேனை எடுத்து குடிக்கும்.”

“ஆமால்லா!” என்றான்.

“அதே மாதிரியாக்கும் சாமி களவெடுக்குதது… ” என்றான் தங்கன். “நம்ம தொடுகதில்லை, நம்ம ஆத்மாவை எடுத்துக்கிடும்.”

செல்லன் அதையே நினைத்துக்கொண்டிருந்தான்.

“பாத்தியா?”என்றான் தங்கன்.

“ஆமாண்ணே.”

“என்ன?”

“எடம் வலம் ஆளில்லை… எதுக்க திண்ணையிலும் ஆளில்லை.”

“முதல் ரவுண்டு செரி… ரெண்டாம் ரவுண்டு? மச்சிலே ஆளிருக்கா?”

“இருக்குண்ண்ணே…”

“அப்ப சன்னலையோ ஓட்டையோ உடைக்கமுடியாது கேட்டியா?”

“சன்னலும் நல்ல பெலமாட்டு இருக்கு.”

“செரி, நீ இந்நா இங்கிண நில்லு… இந்த தூணு நெளலிலே… நான் சொல்லுகதை மாதிரி கேளு” என்றான் தங்கன். “இங்க நிண்ணு விளி… அவுக கதவை திறந்ததும் உன்னைப் பாப்பாக. உன்னைய விளிப்பாக… நீ இந்த இடத்திலேயே நின்னுக்க… என்னான்னு கேட்டா ஐயாவ பெட்ரோமாக்ஸ் வெளக்க எடுத்து தரச்சொன்னாகன்னு மட்டும் சொல்லு.”

“எதுக்கு?”

“அத மட்டும் சொல்லுலே.”

“செரி.”

”முண்டாசு போட்டுக்க”

”ஏண்ணே

”ஏலே தலைக்கட்டு இருக்கது முகத்தை மறைச்சிரும். வெளக்கு வெளிச்சம் நேரே மேலயில்லா இருக்கு”

”ஆமாண்ணே”

“சாமானிய சனங்களாலே ஒருத்தனை முண்டாசோட பாத்தா அப்டித்தான் ஞாபகம் வச்சுகிட முடியும். முண்டாச அவுத்தாலே குழம்பிப்போயிருவானுக”

தங்கன் திண்ணைமேல் படுத்து தன் உடலை இழுத்துக்கொண்டு கதவருகே போய் சுவரோடு ஒட்டி கிடந்தான்.

செல்லன் “அய்யா! அய்யா!” என்று கூப்பிட்டான். “அய்யா! அய்யா!”

“ஆரு? என்னவேணும்?” என்று உள்ளிருந்து குரல் கேட்டது. கிழவர், உள்ளிருந்தே மீண்டும் “ஆராக்கும்?” என்றார்.

“அய்யா… அய்யா நானாக்கும்.”

“ஆருடே?

“அய்யா நான்தான்யா. அய்யா நானாக்கும் அய்யா.”

“என்னடே? ஆரு?” என்று கேட்டபடி கிழவர் கதவை திறந்தார். நிலைவாயிலில் நின்றபடி “ஆரு? ஆரு?” என்றார்.

“நான்தான்.”

“நான்தான்னா?”

“ஐயா வரச்சொன்னாரு.”

“இங்கயா?”

“ஆமா.”

”ஆரு?”

செல்லன் முதலில் உரக்கச் சொல்லி பின்னர் குரலை தாழ்த்தியபடியே வந்தான். அதற்கேற்ப அவர் தன்னை அறியாமலேயே முன்னால் வந்தார்.

”ஏலே ஆருலே?”

“அய்யா நாந்தான்யா”

“ஆரு?” என்று கிழவர் கண்மேல் கைவைத்து கூர்ந்து பார்த்தார். செல்லனின் முகம் அவருக்கு இருட்டில் தெரியவில்லை. அறியாமல் மேலும் இரண்டு அடி முன்னால் வந்து படியருகே நின்று “ஆருலே?” என்றார்.

“அய்யா நான்தான்… பெட்ரோமாக்ஸ் லைட்டு குடுக்கச் சொன்னாக.”

“பெட்ரோமாக்ஸா? இங்கியா? ஏலே, நீ எங்க போகணும்?”

“இல்லீங்க அய்யா… பெட்ரோமாக்ஸ் கொண்டாரச் சொன்னாங்க. கரெண்டு போயிரும்னு சொல்லி…”

“லே, நீ பஞ்சாயத்து பிரசிரெண்டு வீட்டுக்கு போவணும்… அது இந்தா இந்த வளியிலே அங்க முக்கிலயாக்கும்… இது வேறவீடு.”

“இங்கதான்னு சொன்னாங்க.”

“இல்லேன்னு சொல்லுதேன்லா? கிறுக்குப்பயக்க, உறங்கவிடுதானுகளா?”

அவர் திரும்பிச் சென்று கதவை மூடிக்கொண்டார். செல்லன் பார்த்தபோது தங்கனைக் காணவில்லை. அவன் மெல்ல பின் வாங்கிச் சென்று எதிர்வீட்டு திண்ணையில் இருட்டான இடத்தில் படுத்துக்கொண்டான்.

நேரம் ஓடிக்கொண்டிருந்தது. மாயாண்டி சாமியின் கதை முடியபோகிறது என தெரிந்தது. சிவன் சிவகாமி அம்மையுடன் நேரில் தோன்றி மாயாண்டிசாமியை அழைத்துச் செல்கிறார். “என் மகனே மாயாண்டி, நீ ஏளுலகும் ஆள்பவனாம். தன்புகழால் இவ்வுலகில் தாழாமல் நின்றவனாம். மண்ணுலக வாழ்வினிலே மாளாத புகழ்பெற்றாய். விண்ணுலகில் வாழ்வாயே வானேறி வருவாயே.”

குடத்தின் குமுறலோசை. முழவும் மேளமும் கலந்த ஓசைகள்.

“அரஹர மகாதேவா! நமோ நமச்சிவாயா!” என்று சொல்லி புலவர் பாட்டை முடித்தார். “மங்களம் மங்களம் ஜயஜய மங்களம். வானம் பொளியணும். பூமி செளிக்கணும். கன்றோடு பயிரெல்லாம் பொலிஞ்சே நிறையணும். மாலோகக் குடிபெருகணும். மன்னவன் கோல் நிக்கணும். மங்களம் எல்லாம் நிறையணும்…. மங்களம் மங்களம் ஜயஜய மங்களம்!”

அதன் பின் சற்று கலைந்த ஓசை. மக்கள் திரும்பி வரத் தொடங்கிவிடுவார்களோ?. ஆனால் அங்கே உரக்க நையாண்டிமேளம் ஆரம்பித்தது. சாமிக்கு படைப்பு கொடுக்க தொடங்குகிறார்கள். இநேரம் சாமிகொண்டாடி வந்து நின்றிருப்பார். அவர் உடல் நடுங்கிக்கொண்டிருக்கும். கால்விரல்களிலிருந்து விறையல் மேலேறிக்கொண்டிருக்கும்

செல்லன் எழுந்து அப்பால் தெரிந்த மாயாண்டிச் சாமியின் கோயிலைப் பார்த்தான். சாமி கொண்டாடியின் நிழலுருவம் தெரிந்தது. நையாண்டிமேளம் வலுத்தபடியே சென்றது. குரவையோசைகள் எழுந்தன. கூடவே கூச்சல்கள். இன்னும் சாமி எழவில்லை என்று தெரிந்தது.

அவன் தன்னை மறந்து திண்ணையின் எல்லைக்குச் சென்றான். அவன் கால்பட்டு அங்கிருந்த ஒரு தகரப்பாத்திரம் உருண்டு கீழே விழுந்தது. உள்ளே திறக்கும் சன்னல்கதவு ஒன்று திறந்து “ஆரு?” என்றது.

எதிர்பாராத கேள்வியால் செல்லன் அப்படியே உறைந்தான். அவன் கால் நடுங்கியது.

“ஆருண்ணு கேக்குதேன்ல?” என்றபடி அவர் எழுந்து கதவைத் திறந்தார். “ஏலே.”

செல்லன் பாய்ந்து தெருவிலிறங்கி ஓட ஆரம்பித்தான். அக்கணம் எதிரே கதவு திறந்து தங்கன் வெளியே வந்தான்.

“திருடன்! திருடன்! பிடியுங்க!” என்று கூவியபடி கதவைத் திறந்தவன் தெருவில் பாய்ந்தான்.

தங்கன் மீண்டும் அந்த வீட்டுக்குள் நுழையும்பொருட்டு திரும்புவதற்குள் அதற்குள் இருந்து ஒரு பெண் “திருடன்! திருடன்!” என்று கூவியபடி ஓடிவந்தாள்.

தங்கன் தெருவில் இறங்கி ஓடினான். கதவைத்திறந்து வெளியே வந்தவன் தங்கனை துரத்திக்கொண்டு ஓடினான். செல்லனை அவன் விட்டுவிட்டான். செல்லன் பாய்ந்து ஒரு திண்ணையில் ஏறி கண்மூடி சுவரோடு ஒண்டி படுத்துக்கொண்டான்.

கோயிலில் இருந்து இளைஞர்கூட்டம் ஒன்று தங்கனை நோக்கி வந்தது. அவன் திரும்பி வருவதற்குள் துரத்திச் சென்றவர்கள் அணுகினார்கள். திண்ணைகளில் தூங்கியவர்கள் கூச்சலிட்டபடி எழுந்தார்கள்.

அத்தனைபேராலும் சூழப்பட்டு தங்கன் திகைத்தான். அதற்குள் ஒருவர் தன் கையில் இருந்த கழியால் அவன் முழங்காலை அடித்தார். அவன் விழுந்ததும் இளைஞர்கள் அவன்மேல் பாய்ந்து அவனைப் பிடித்துக் கொண்டனர்.

“ஏலே, கட்டாரி வச்சிருப்பான்லே. பாத்துலே!”

அவனை அழுத்தி பிடித்துப் புரட்டி தூக்கினார்கள். அவன் லுங்கியை கழற்றி அவன் கைகளை கட்டினார்கள்.

ஒருவர் “ஏலே, எந்தூரு கள்ளன்லே?” என்றான்.

“தெக்க… மலையாளக்கரைப் பக்கமுன்னு தோணுது.”

“செவுளிலே நாலு போடுலே நாயிக்கு.”

“என்ன திருடியிருக்கான் பாரு…. ஏல, அவன் டவுசரு பாக்கெட்ட பாருலே.”

தங்கனின் கால்சட்டையை ஒருவன் துழாவினான். கைவிட்டு வெளியே எடுத்தான். “யம்மா, லே ரெட்டவடச்சங்கிலி, மாங்காமாலை, வளையலு, மூக்குத்தி… பத்திருபது பவுனு தேறும்லே.”

“மச்சுவீட்டிலே ஏறியிருக்கான்… இது அவருக்க மருமகளுக்க நகையாக்கும்.”

“எப்டி உள்ளபோனான்?”

“அவனுகளுக்கு ஆயிரம் மந்திரமும் தந்திரமும் உண்டு.”

“அந்தால செவுள் அடக்கி நாலு அடி போட்டா மணி மணியாட்டு சொல்லுவான்.”

“விடு… நாம இப்ப ஒண்ணும் செய்யவேண்டாம்…” என்றார் கிழவர் “இப்ப சாமி ஏறி வார நேரமாக்கும். அருளு சொல்லுகது நிக்கப்பிடாது. அது நடக்கட்டு… இவன பிறவு பாக்கலாம்.”

“இவனுக்கு எப்டி பெரியவீட்டிலே நகை உண்டுண்ணு தெரிஞ்சுது… உள்ளூர்லே ஆரோ இருக்காவ… லே உள்ளதைச் சொல்லீரு. இங்க யாரு இருக்கா உனக்கு?”

தங்கன் ஒன்றும் சொல்லவில்லை.

“வாய திறக்கானா பாரு… எளவு ராசகுமாரன் மாதிரில்லாடே போஸு குடுக்கான்.”

“முதல்ல இவன் செவிளை அடிச்சு பேத்துடணும்… காது கேக்கல்லேண்ணா களவாடபோக முடியாதுல்லா.”

”முட்டுக்கரண்டையிலே அடிச்சு கோணாலாக்கி கெட்டி விட்டிரணும்.. நொண்டியா அலையட்டும் நாயி”

‘கெண்டைக்கால் நரம்ப வெட்டுத ஒரு வளக்கம் உண்டுல்லா?”

“இருலே, முதல்ல சாமி மலையேறட்டு… அதுக்குப்பிறகு கச்சேரிய வச்சுக்கிடுவோம்.”

“பெரெசரண்டு அங்க கோயிலிலே நிக்காரு.”

“இப்ப அவருகிட்ட சொல்லவேண்டாம்… பூசை நடக்கட்டும். சாமி வந்து படப்பு கொள்ளட்டு… அதுக்குமேலே பாப்பம்.”

“இவனை இப்ப என்ன செய்ய?”

“ஆமா, நாம எல்லாரும் படப்பு கும்பிடப் போகணும்லா?”

“இவனை அங்கிண கொண்டுவாருங்கலே… கோயிலுக்கு பொறத்தால இவன கெட்டி வையுங்க. சாமி மலையேறினதும் இவனை அங்க வச்சே விசாரிப்போம். இதுக்குன்னு பின்ன தனியா ஊரைக் கூட்டவேண்டாம்லா?”

அவனை அவர்கள் தள்ளிக் கொண்டு செல்வதை செல்லன் பார்த்தான். அவன் வலக்கால் ஆடிக்கொண்டிருந்தது. சிறுநீர் முட்டியது. மெல்ல இறங்கி சாக்கடையில் சிறுநீர் கழித்தான். அழுகை வந்தது.

அப்படியே ஓடிவிடவேண்டும் என்றுதான் முதலில் தோன்றியது. ஆனால் அப்படி போகக்கூடாது. தங்கனுடன் இருக்கவேண்டும். முடிந்தால் அவனுடன் சிறைக்கே செல்லவேண்டும். நானும் கூடவே வந்தேன் என்று கூச்சலிட்டால் என்ன? ஆனால் அடிப்பார்கள். அடித்தே கொன்றாலும் கொல்வார்கள்.

ஒன்று செய்யலாம், அவனை தப்பவைக்க முயலலாம். கூட்டத்தோடு கூட்டமாக போய் நிற்கவேண்டும். அவனை அவர்கள் கட்டிப் போட்டுவிட்டு சாமி கும்பிடும்போது ஒரு கட்டாரியை அவனிடம் கொடுத்தால் போதும். கட்டை அறுக்கமுடியும் என்றால் இன்னும் நல்லது.

முயற்சி செய்யலாம். அதற்கு அழக்கூடாது. இயல்பாக கூட்டத்தில் ஒருவனாக செல்லவேண்டும். ஆனால் வெளிச்சத்தில் முகத்தை காட்டிவிடக்கூடாது. இன்னொருவனும் வந்தான் என இன்னும் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

அவன் அந்த கூட்டத்தை கொஞ்சம் இடைவெளிவிட்டு தொடர்ந்து சென்றான். தங்கன் அஞ்சியதுபோலவோ கூசிக் குறுகியது போலவோ தோன்றவில்லை. அவன் கெஞ்சவோ மன்றாடவோ இல்லை. சாதாரணமாகவே சென்றான். திருவிழா பார்க்க வந்தவன் போல. ஏதோ தவறாக தன்னை அழைத்துச் செல்கிறார்கள் என்பதுபோல.

மெய்யாகவே தங்கனுக்குப் பயம் இருக்காதா? பயம் இல்லாததுபோல் நடிக்கிறாரா? இவர்கள் அடித்தே கொன்றால் என்ன செய்வார்? ஊர்கூடி அடித்தால் கேஸில்லை என்பதே வழக்கம். அதுவும் தங்கன் மேல் பல கேஸ்கள் உள்ளன. அவனை அத்தனை போலீஸ்காரர்களுக்கும் தெரியும்.

அடிக்காமலிருக்க மாட்டார்கள். கோபத்தினால் அல்ல, அடிக்க ஒரு வாய்ப்பு என்பதனால். கேட்க சாதியோ சனமோ வரமாட்டார்கள். போலீசும் கண்டுகொள்ள மாட்டார்கள். அத்தனைபேரும் அடிப்பார்கள். பிள்ளைப்பூச்சிகளுக்கெல்லாம் வெறி ஏறி கொடுக்கு முளைக்கும். அடிக்க அடிக்க அவர்கள்மேல் சாமி வரும். நிறுத்தவே முடியாது. பலசமயம் செத்த பிறகும் பிணத்தை போட்டு அடித்து கொண்டிருப்பார்கள்.

மேலூர் சங்கரனை அடித்து அடித்து நான்கு துண்டுகளாக போட்டிருந்தார்கள். அப்போது செல்லன் தங்கனிடம் கேட்டான் “ஏம்ணே அடிச்சா சரி. எதுக்கு கொல்லுதானுக?”

“ஏன்னா அவனுக கள்ளன் இல்லல்ல?அவனுக பகலிலே சீவிச்சுதவனுக. நாம ராத்திரியிலே சீவிச்சுதோம். ராத்திரியிலேயாக்கும் பாம்பு சீவிச்சுதது. பேயும் பூதமும் சீவிச்சுதது. கெந்தர்வனும் மாடனும் மாயாண்டியும் சீவிச்சுதது… இவனுகள பாரு… அந்தியானா வீட்டுக்குள்ள வெளக்க வச்சிட்டு இருக்குதவனுக. இவனுகளுக்கு ராத்திரியக் கண்டா பயம்”

“ஆமா” என்று செல்லன் சொன்னான் “எனக்கும் இருட்டுண்ணா பயமாக்கும்… நான் ராத்திரியிலே ஒண்ணுக்குக் கூட அடிக்கமாட்டேன்… கும்பி காயாம இருந்தா நான் பகலிலே மட்டும்தான் சீவிச்சிருப்பேன்.”

“பகலு கண்ணு முன்னால தெளிஞ்சு கெடக்கு. ராத்திரின்னா சொப்பனமுல்லா? சொப்பனத்திலே என்ன உண்டுண்ணு எப்பிடித் தெரியும்? சாதாரணக்காரனுக்கு சொப்பனத்தைப்போல பயம் வேற இல்ல. வாற சொப்பனத்திலே முக்காலும் கெட்ட சொப்பனமாக்கும்” என்று தங்கன் சொன்னான். “கள்ளன் வாறது அந்த சொப்பனத்திலே. சொப்பனத்திலே அவனுகளுக்க பெண்டாட்டிகளுக்க கொணமும் வேறேயாக்கும்னு அவனுக்கு தெரியும். பகலிலே அவளுகளை அடைச்சு போடலாம். சொப்பனத்துக்கு தாப்பாள் இல்ல பாத்துக்க”

அவனை அவர்கள் மாயாண்டிக்கோயிலின் பின்பக்கம் நின்ற ஆலமரத்தின் அடியில் கொண்டுசென்று நிறுத்தினர். அவன் கையையும் காலையும் உறுதியான கயிற்றால் கட்டி அதை ஆலமரத்தின் வேருடன் சேர்த்து கட்டினர்.

“லே மாடசாமி, முருகன், கருப்பசாமி மூணாளும் இங்கிண நின்னுகிடுங்க. கையிலே கம்பும் அரிவாளும் இருக்கணும். கண்ணு இவனுக்க மேலெயே இருக்கணும். மாயம்படிச்ச கள்ளனாக்கும்… பாத்துக்கிடுங்க… பூசை முடியட்டு” என்றார் கிழவர்.

அவர்கள் சென்றபின் மாடசாமி, முருகன், கருப்பசாமி மூவரும் தங்கனைச் சுற்றி நின்றனர். மாடசாமி அரிவாள் வைத்திருந்தான். மற்ற இருவரும் கழிகள். தங்கன் கைகளும் கால்களும் கட்டப்பட்டு ஆலமரத்தின் வேரின்மேல் ஒருக்களித்துக் கிடந்தான்.

செல்லன் ஆலமரத்திற்கு பின்னால் சென்று நின்று தங்கனை பார்த்துக்கொண்டிருந்தான். தான் அங்கே நிற்பதை தங்கன் உணர்ந்தால் நல்லது என்று நினைத்தான். ஆனால் தங்கன் அவனை பார்க்கவில்லை.

தங்கனின் முகத்தில் மாயாண்டிக் கோயில் விளக்கின் ஒளி விழுந்தது. அவன் மிகமிக அழகாக இருந்தான். படத்தில் வரைந்ததுபோல தோன்றினான். மிகமெல்லிய மீசை, மலர்ந்த கண்கள், சிவந்த உதடுகள். செல்லன் பார்த்துக்கொண்டே நின்றான். என்ன செய்வது? பாய்ந்து இவர்களை தாக்கினால் என்ன? அந்த அரிவாளைப்பிடுங்கி…

கோயிலுக்கு முன்னால் நையாண்டிமேளம் உரத்து ஒலித்தது. அதன் அடிகள் ஒன்றோடொன்று இணைந்து ஒற்றைமுழக்கமாக மாறின. அதன் நடுவே இருந்து “ஏஏஏஏ!” என்ற மாபெரும் வீரிடல் எழுந்தது. “ஏஏஏஏ!”

சாமிகொண்டாடியின் மேல் மாயாண்டி தோன்றிவிட்டான். “ஏஏஏஏ” என்ற குரல் ஏதோ காட்டுவிலங்கின் குரல் போலிருந்தது. மக்கள் அந்த உக்கிரத்தை கண்டு சிதறி விலகும் அசைவுகள். மாயாண்டி சாமி சட்டென்று பாய்ந்து அங்கே நின்ற ஒருவனின் கையில் இருந்து எரியும் தீப்பந்தத்தை வாங்கி வாய்க்குள் விட்டு தீயை குடித்தது.

“தீ கொண்டா! எனக்க தாகத்துக்கு தீ கொண்டா!”

“இங்க இருக்கு… நயினாரே தீ இங்க இருக்கு!”

“தீ கொண்டா! ம்ம்ம்! தீகொண்டா!” ஆடிச்சுழன்றபோது சடைமுடிக்கற்றைகள் சுழன்றன. நரம்பெழுந்த உடல் முறுகி இறுகி நின்றது. ஏழு பந்தங்களை வாங்கி தீயை குடித்தது மாயாண்டிச் சாமி.

“ரெத்தம் கொண்டா! எனக்க தாகத்துக்கு ரெத்தம் கொண்டா!”

“சாமி, நயினாரே, முட்டன் ஆடிருக்கு…. ரத்தம் கொள்ளவேணும்”

மாயாண்டி சாமி உறுமலோசை எழுப்பியபடி பாய்ந்து அங்கே நின்ற ஆட்டை அடைந்து, கைகால் ஊன்றி வேங்கையென்றாகி, வெறும் வாயால் அதன் சங்கைக் கடித்து குதறி குருதியை உறிஞ்சியது. குளம்புகள் உதைத்துக்கொள்ள ஆடு துள்ளித் துள்ளி விழுந்தது.

குருதியை உறிஞ்சிக் குடித்துக்கொண்டு திரும்பிய மாயாண்டி சாமி “டேய்!” என்று கூவியபடி பாய்ந்து நின்றிருந்த ஒருவனை தாவி தலைமேல் எழுந்து கடந்து நின்று வாயில் கடித்த ஆட்டுடன் ஆலமரத்தடி நோக்கி ஓடிவந்தது. பூசாரியும் பிறரும் பின்னால் ஓடிவந்தனர்.

தங்கனை கண்டதும் நின்று துள்ளி குதித்து சுழன்று எழுந்த மாயாண்டி சாமி “டேய், எவண்டா என் தோழனை கட்டியது? அறுத்துவிடுடா அவனை!” என்றது “டேய்! இப்பவே அறுத்துவிடுடா.”

பிரசிடெண்ட் கைகாட்ட மாடசாமி குனிந்து கட்டுகளை அறுத்தான். மாயாண்டி சாமி சீற்றம் கொண்ட குரங்குபோல எம்பி எம்பி குதித்து நெஞ்சிலும் விலாவிலும் அறைந்துகொண்டு “ஏஏஏஏ!” என்று கூச்சலிட்டது “ஏலே, மாடா! எனக்க சுடலை மாடா! நாடேறி என்னை பாக்கவந்த மாடா! ஏழூர் சுடலைமாடா! வாடா! வாடா! வாடா!”

தங்கன் கைகளால் தரையை ஓங்கி அறைந்தான். அவன் உடல் நரம்புகள் புடைக்க வளைந்தது. பின்னாலிருந்து ஒரு கை அவனை தூக்கி வீசியதுபோல “ஏஏஏஏஏ!” என்று கூவியபடி துள்ளி எழுந்தான். அவன் கைகள் இரண்டும் முறுகிச் சுழன்றன. எம்பி குதித்து மார்பில் அறைந்துகொண்டு “மாயாண்டீ! ஏ மாயாண்டீ! ஏஏ!” என்று கூச்சலிட்டான். பாய்ந்து குனிந்து கீழே கிடந்த ஆட்டை கவ்வி தூக்கி சுழற்றி ஆடியபடி குருதி உண்டான்.

மேளக்காரர்களும் உடுக்கை பம்பை ஏந்திய பூசாரிகளும் வந்து சூழ்ந்துகொண்டனர். ஆயிரம் காட்டுவிலங்குகளின் குரல் போல வெறிகொண்டு அவை ஓசையிட்டன. யானை புலி கரடி ஓநாய் மான் மிளாவின் குரல்கள். காடுறையும் அத்தனை விலங்குகளும் எழுந்து வந்து ஒன்றாகக் கலந்து ஓசையிட்டன. இலைகளில் கொடுங்காற்று புகுந்த தாளம். கற்பாறைகள் உருண்டுவிழும் தாளம். அருவியோசையின் தாளம்.

செல்லன் திகைப்புடன் பார்ட்துக்கொண்டிருந்தான். சூழ்ந்திருந்தவர்கள் கைகூப்பி நின்றனர். நடுவே மாயாண்டியும் சுடலை மாடனும் நின்று வெறியாட்டமிட்டனர்.

***

முந்தைய கட்டுரைபிடி, கைமுக்கு -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–50