பத்துலட்சம் காலடிகள்-விவாதம்

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

பத்துலட்சம் காலடிகள் கதை பற்றி இணையத்தில் ஒரு விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது, வழக்கமான சாதியக் காழ்ப்புகள் கொப்பளிக்கின்றன. வசைகள், வன்மங்கள். [நல்ல பிறந்தநாள் வாழ்த்துக்கள். நூறாண்டு வாழ்வீர்கள்]

இவர்களின் வசைகளைக் கண்டபிறகே நான் அந்தக்கதையை வாசித்தேன். அவர்கள் புரிந்துகொண்டிருப்பதற்கு நேர் எதிரான கோணம் கதையில் இருக்கிறது. இத்தனைபேர் பேசிக்கொண்டிருக்கிறார்களே ஒருவருக்குக் கூடவா அடிப்படை வாசிப்பும், குறைந்தபட்ச ரசனையும் இருக்காது? ஒரு மினிமம் காமன்சென்ஸ் கூடவா இருக்காது? ஆச்சரியமாக இருக்கிறது.

அதற்கு கோபித்துக்கொள்ள வேண்டியவர்கள் உயர்சாதியினர். இவர்கள் அதை ஏதோ தாழ்ந்த சாதியினருக்கு எதிரானதாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

சங்கர்

***

அன்புள்ள சங்கர்

ஒன்று இவர்களில் பெரும்பாலானவர்கள் எதையும் படிப்பதில்லை. அந்த ஒற்றைவரியை முகநூலில் வாட்ஸப்பில் படித்திருப்பார்கள். அதன்மீது ஏதாவது அரைவேக்காடு அளித்த விளக்கத்தையும் படித்திருப்பார்கள். எஞ்சியபலர் எதையும் படித்துப் புரிந்துகொள்பவர்கள் அல்ல.

இணையம் என்னும் ஊடகத்தின் சிக்கல் இது- சம்பந்தமில்லாதவர் கண்களுக்கெல்லாம் ஒரு விஷயம் போய்ச்சேரும். தங்களுக்கு தெரியாத , புரியாத விஷயத்தில் இருந்து ஒதுங்கி நிற்கவேண்டும் என்றுகூட அவர்களுக்குத் தெரியாது.

அந்தக்கதையை, அக்கதைவரிசையை படிப்பவர்களுக்கு ஒன்று தெரியும். அது ஆசிரியர் கூற்று அல்ல, ஔசேப்பச்சன் என்னும் கதாபாத்திரத்தின் கூற்று. அவனுடைய கதாபாத்திரம் கொஞ்சம் எதிர்மறை மனநிலையுடன் அரசு, சாதி, மதம், தெய்வம் எல்லாவற்றையும் அணுகக்கூடியது. ஒருவகை நிகிலிஸ்ட். அதோடு குடி, விபச்சாரம் ஆகியவற்றை கொண்டாடுவது. ஒழுக்கத்தை நிராகரித்துக்கொண்டே இருப்பது. ஔசேப்பச்சன் சொல்வது என் கருத்து அல்ல.

ஔசேப்பச்சன் தொடர்ச்சியாக தன்னைத்தானே கிண்டல் செய்துகொள்கிறான்- தன் சாதி, தன் மதம், தன் தெய்வம் ஆகியவற்றை. கூடவே தொடர்ச்சியாக உயர்சாதியை, இந்துமதத்தை, பாரதிய ஜனதாவை நையாண்டி செய்கிறான் அதேபோல கம்யூனிசத்தையும்

அந்த நையாண்டிப் பார்வையில் ஒன்றுதான் அந்த வரி. இந்த சற்றே அறிவார்ந்த, தெனாவெட்டான, கொஞ்சம் போக்கிரித்தனமான நையாண்டி என்பது கேரள கிறிஸ்தவர்கள் எப்போதுமே இந்துமதம் மற்றும் நாயர் நம்பூதிரி சாதிகள் மேல் வைப்பது. இதை அங்குள்ள சூழல் ஒருவகையில் ஏற்றுக்கொள்கிறது. அது கேரளப்பண்பாட்டின் ஒரு அம்சம்.

இக்கதைகளில் ஔசேப்பச்சன் நாயர் சாதி பற்றி என்னென்ன சொல்கிறான் என்பதை பார்ப்பவர்களால் அச்சூழலை புரிந்துகொள்ள முடியும். அவன் சொல்லும் பெரும்பாலான விமர்சனங்கள்  ‘டீஸன்ஸி’யின் நிலையிலிருந்தும் கீழே செல்பவை. ஆனால் அது ஒரு பண்பாட்டுச்சூழல்.

அதேபோலத்தான் மாப்பிள்ளை ராமாயணத்தில் முஸ்லீம்கள் ராமனையும் ராவணனையும் கிண்டல் செய்வதையும்  அச்சூழல் ஏற்றுக்கொள்கிறது.அக்கிண்டல்களை எழுதக்கூட முடியாது. ஆனால் அதுவும் ஒரு பெரிய கலாச்சாரச் சூழலின் அம்சம்தான்.

தமிழ்ச்சூழலில், இதெல்லாம் சாத்தியமே அல்ல. இங்கே கிண்டல் எவருக்கும் புரிவதில்லை. இந்த விஷயத்தில் நேர் எதிராக புரிந்துகொண்டு கொந்தளிப்பவர்கள், அரசியல்சரி பார்த்து வெட்டிக்கூச்சலிடுபவர்களை கண்டால் இது புரியும்.

நேரடியாக ஆசிரியனே விளக்கவேண்டியிருப்பது ஒரு தலையெழுத்துதான். வேறுவழியே இல்லை. ஔசேப்பச்சனின் அந்த கிண்டல் உத்தேசிப்பது ‘நீங்கள் கொண்டாடும் அழகு என்பது நீங்கள் உரிமைகொண்டாடுவது போல இனத்தூய்மை அல்லது இன மேன்மையில் இருந்து வந்தது அல்ல, இனக்கலப்பில் இருந்து வந்தது’ என்பதுதான்.

இன்னும் சொல்லப்போனால். ’நீங்கள் மிலேச்சன் என்று சொல்பவர்களின் ரத்தம்தான் நீங்கள்’ என்பதுதான் அந்த வரியின் நேரடிப் பொருள். அந்தக்கதையின் ஒட்டுமொத்தத்தில் அந்த வரி எப்படி முக்கியமானது என்பதை வாசகர்கள் உணரலாம். அதை நான் ஏற்றுக்கொள்கிறேனா , நான் அதைச் சொல்கிறேனா என்பது அல்ல இங்கே கேள்வி. உயர்சாதியினர் மீது கேரள கிறிஸ்தவர்களின் நையாண்டி [அல்லது உண்மையான] விமர்சனம் அது என்பதுதான்.

இங்கே தலைகீழாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் அந்த வரி உயர்சாதி நோக்கிய நேரடியான சீண்டல். அதுவும் இனத்தூய்மை ஓர் அரசியல் அடையாளமாக ஆகியிருக்கும் சூழலில் அது மிகக் கூரிய விமர்சனம். கதைகள் முழுக்க ஔசேப்பச்சன் அதைச் செய்துகொண்டே இருக்கிறான். அவன் சொல்வது ‘புரட்சி’ அல்ல ‘முற்போக்கு’ அல்ல. அவன் அதற்கும் எதிரானவன். எல்லாவற்றையும் கிண்டல்செய்பவன்

இந்த கிண்டலை புரிந்துகொள்ள கொஞ்சமேனும் இலக்கியமோ வேறேதுவுமோ வாசிக்கவேண்டும். இந்த குறைந்தபட்ச அறிவுத்திறனோ நுண்ணுணர்வோ இல்லாதவர்களிடம் கதைகள் சென்று சேரக்கூடாது. ஆனால் இன்றைய சூழலில் இதை தவிர்க்கவும் முடியாது.தாங்கிக்கொண்டு கடந்துசெல்லவேண்டியதுதான்.

ஆனால் இது எனக்கு பிரச்சினை அல்ல. இன்று எழுதும் இளம் எழுத்தாளர்கள் எழுத ஆரம்பிக்கும்போதே இந்தவகையான அசட்டு உணர்ச்சிகர மிரட்டல்கள், அவதூறுகளுக்கு ஆளாவார்கள் என்றால் மெல்லமெல்ல ஓர் அறியாத ஜாக்ரதை உணர்ச்சி வரும். அது படைப்பூக்கத்திற்கு எதிரானது.

ஓர் எழுத்தாளன் யாராக இருந்தாலும் தன் படைப்பில் தடையின்றி வெளிப்படுவதே முறையானது. ஒரு சிறு  மூடக்கும்பல் முற்போக்கு என்றும் அரசியல் சரி என்றும் சொல்வதை ஏற்று அவன் எழுதவேண்டியதில்லை. அவ்வாறு எழுதுபவன் எழுத்தாளன் அல்ல. அவ்வாறு எழுதச்சொல்லி கூச்சலிடுபவர்கள், எழுதுபவனை அவதூறுசெய்பவர்கள் மாபெரும் கலாச்சார அழிவுச்சக்திகள்

ஜெ

***

முந்தைய கட்டுரைநாளிரவு – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஆழி [சிறுகதை]