பகுதி நான்கு : அலைமீள்கை – 22
ருக்மியை சந்திக்கக் கிளம்புவதற்கு முன்பு நான் கணிகரை சந்திக்க விரும்பினேன். அவரை சந்திக்க விழைகிறேன் என்று செய்தி அனுப்பினேன். கணிகர் உடல்நலமின்றி படுத்திருப்பதாகவும் உடனடியாக அவரை சந்திப்பது இயலாதென்றும் தூதன் வந்து சொன்னான். என்ன செய்கிறது அவருக்கு என்று கேட்டேன். நேற்றைய விருந்தில் அவர் உண்டது ஒவ்வாமையை உருவாக்கியிருக்கிறது. ஆகவே தன் குடிலில் உணவொழிந்து உப்பிட்ட நீர் மட்டும் அருந்தி படுத்திருக்கிறார் என்றான். மருத்துவர்கள்? என்றேன். மருத்துவர்களை அவர் சந்திப்பதில்லை. மருந்துகள் எதையும் உண்பதுமில்லை என்றபின் அவர் உண்பது வலி போக்குவதற்கான அகிபீனா மட்டுமே என்றான் ஏவலன்.
எனக்கு அது விந்தையாக இருந்தது. ஆனால் அகிபீனா களியுருளைகளை உண்பவர்களுக்கு தொடர்ந்து வயிற்றுக்கடுப்பு நோய்கள் வருமென்பதை நான் முன்னரே அறிந்திருந்தேன். “நன்று, நான் சென்றுவந்தபின் அவரை சந்திக்கிறேன் என்று கூறுக!” என்றேன். ஒருவகையில் அதுவும் நன்றே என்று எண்ணிக்கொண்டேன். நான் அவரை சந்திக்காமலேயே சென்று ருக்மியை வென்று மீண்டேன் என்றால் அது என் தனிப்பட்ட சொல்வன்மைக்கான இன்னொரு சான்றாகவே அமையும். இதுவரை வென்றவர்கள் இருவரும் அணுக்கமானவர்கள், இவர் முற்றெதிரி.
ருக்மியை சந்திப்பதற்கான பயணம் தொடங்குவதற்கு முன் துவாரகையிலிருந்து முறையான அழைப்பு ஒன்றை நான் ருக்மிக்காக எழுதி வாங்கிக்கொண்டேன். உண்மையில் துவாரகையில் அப்போது மூத்தவர் ஃபானுவின் முடிசூட்டு விழா விருந்தறைப் பேச்சாகவே எஞ்சியிருந்தது. அரசாணை வெளியிடப்படவில்லை. அரசவை அறிவிப்பும் நிகழவில்லை. ஒற்றர்களினூடாக அப்பேச்சின் ஒரு பகுதி ருக்மியை சென்றடைந்திருக்க வாய்ப்பிருந்தது. அது அவரில் பலவகையான உளக்குழப்பங்களை உருவாக்கியிருக்கும். அச்செய்தியை எந்த அளவுக்கு ஏற்பது என்ற ஐயம் இருக்கும். அவருக்குத் தேவை ஓர் உறுதிப்பாடு, அதை என் செய்தி அளிக்கவேண்டும்.
துவாரகையின் முடியுரிமை குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்ற செய்தியை அறிவிக்கும் ஓர் ஓலையே நான் விழைந்தது. ஆனால் மூத்தவர் ஃபானு அதில் கைச்சாத்திட இயலாது. துவாரகையின் மைந்தர் அனைவரும் பங்கெடுக்கும் ஒரு அவையாணை வேண்டும். அல்லது அந்த அவையில் பொறுப்பளிக்கப்பட்ட ஓர் அமைச்சரின் முத்திரை அதற்கு வேண்டும். என்னிடம் உண்டாட்டு அறையில் பொறுப்பு அளிக்கப்பட்டுவிட்டது, நானும் ஏற்றுக்கொண்டுவிட்டேன். உண்டாட்டு அறைக்கு வெளியே யாதவ மைந்தர் என்ன எண்ணுகிறார்கள்? பிரத்யும்னனும் சாம்பனும் அங்கிருந்து சென்றபின்னர் உளம் மாறிவிட்டிருக்கிறார்களா?
ஆனால் நான் மீண்டும் ஃபானுவை சந்தித்து எனக்கு முறையான ஓலை வேண்டும் என்று கோரமுடியாது. அவ்வண்ணம் ஓர் ஓலையை இன்று அவரோ பிறரோ அளிக்கமுடியாது. அதற்கு மைந்தர் அனைவரின் ஒப்புதலை தனித்தனியாக பெறவேண்டும். அல்லது முறையான அரசவை கூடவேண்டும். அதற்கு இனி பொழுதில்லை. காலம் பிந்தும்தோறும் ருக்மி அறுதி முடிவுகளை எடுக்கக்கூடும். நான் செல்வதற்குள் அவர் பாறைபோல் இறுகிவிட்டிருக்கக்கூடும். அவர் குழம்பி நிலையழிந்திருக்கையிலேயே என் தூது வெல்லமுடியும். அப்போதே கிளம்பியாகவேண்டும்.
என்ன செய்வது என்று அறியாமல் நான் குழம்பினேன். ஆனால் அனைத்தையும் நானே செய்தாகவேண்டும் என்றும் எண்ணினேன். அவையாள்கை அமைச்சர் சுஃப்ரரிடம் “யாதவ மைந்தர் கருத்தொருமித்து முடிவெடுத்துவிட்டார்கள் என ருக்மியை அறிவிக்கச் செல்லவிருக்கிறேன். அவ்வண்ணம் ஓர் ஓலை எனக்கு உடனடியாக தேவையாகிறது” என்றேன். “ஆனால் அம்முடிவு இன்னும் எட்டப்படவில்லை” என்று அவர் தயங்கினார். நான் சீற்றத்துடன் “முடிவு எட்டப்பட்டுவிட்டது. எனக்குத் தேவை ஓலை. இல்லையேல் எதன்பொருட்டு நான் சென்று அவரை சந்திக்க முடியும்? எப்படி அவை நின்று முறைமைச்சொல் பேசி தொடங்கலாகும்?” என்றேன்.
என் சினம் அமைச்சரை மேலும் பின்வாங்கச் செய்தது. “நான் இதில் செய்வதற்கு ஒன்றுமில்லை. நீங்கள் மூத்தவரிடமிருந்து அல்லது இளையவர் சுஃபானுவிடமிருந்து ஓர் ஓலை பெற்றுக்கொண்டு செல்வதே நன்று. அல்லது அவர்களே என்னை அழைத்து ஆணையிடவேண்டும்” என்றார். நான் “இத்தருணத்தில்…” என்று தொடங்க அவர் “அல்லது பிரத்யும்னனின் ஓலையே போதுமானது” என்றார். அப்போது என்னில் எழுந்த சினத்தை முழுமையாகவே அடக்கி “நோக்குகிறேன்” என்றேன். ஓலை பெறுவது இயல்வதல்ல. வேறேதேனும் வேண்டும்.
எண்ணியபடி என் அறைக்கு திரும்பினேன். எனது பழைய பேழையில் இருந்த ஒரு கணையாழியை நினைவுகூர்ந்தேன். அது மிக இயல்பாக அத்தருணத்தில் நினைவில் எழுந்தது. அது நெடுங்காலம் முன்னர் நாங்கள் களத்தில் பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது சுதேஷ்ணனின் கையிலிருந்து உதிர்ந்தது. அனைவரும் சென்றபின் நாங்கள் விளையாடிய இடத்தில் அந்தக் கணையாழி கிடந்ததை கண்டேன். அதை எடுத்து வந்து என் தனியறைப் பேழைக்குள் போட்டுவைத்தேன். ஏன் அப்படி செய்தேன் என்று அப்போது எனக்கு தெரியவில்லை. அவ்வண்ணம் பொருட்களை காத்து வைப்பவன் அல்ல. பிறர் பொருட்கள் மேல் விருப்பம் கொண்டவனும் அல்ல. ஆயினும் அதை செய்தேன். உரிய தருணத்தில் அது நினைவுக்கும் வந்தது.
இவ்வாறு எண்ணுகையில்தான் இவ்வனைத்தும் முற்றிலும் முன்னொருங்கிவிட்டவையோ என்ற எண்ணம் எழுகிறது. வாழ்வின் ஏதோ ஒரு தருணத்தில் ஏதோ ஒரு எண்ணத்தை அடையாத எவரும் இருக்கமாட்டார்கள். ஆனால், அவ்வெண்ணம் மனிதர்களை செயலின்மை நோக்கி செலுத்துகிறது. தானே இயற்றினேன் என்னும், தன் வலிமையால் வென்றேன் என்னும் ஆணவங்களை இல்லாமலாக்குகிறது. ஆகவே அதை உணர்ந்தாலும் தனக்குத்தானே என ஏற்றுக்கொள்ளாமலிருப்பதே மானுட இயல்பு. சுதேஷ்ணனின் கணையாழியை எடுத்ததுமே அதைக்கொண்டு நான் இயற்றக்கூடும் அனைத்தும் என் நினைவில் எழுந்தன. ஏற்கெனவே எங்கோ முறையாக வகுக்கப்பட்டு முழுமையாக எழுதிப் பதிவு செய்யப்பட்டு, என்னால் அப்போது ஓர் ஏட்டிலிருந்து படிக்கப்படுவதைப்போல.
சுதேஷ்ணனின் கணையாழியுடன் என் புரவியில் நான் துவாரகையிலிருந்து எல்லை நோக்கி கிளம்பினேன். என்னுடன் எட்டு காவலர்கள் வந்தனர். ஒருவன் கொம்பூதி முன்னால் செல்ல இன்னொருவன் துவாரகையின் கொடியுடன் தொடர்ந்தான். பிறர் வில்லேந்தி காத்து வந்தனர். துவாரகையிலிருந்து அவந்தி செல்லும் வழி ஒரு காலத்தில் வணிக வண்டிநிரைகளால் நிறைந்திருக்கும். அன்று வருவதற்கும் போவதற்கும் வெவ்வேறு வழிகள் ஒருக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வழியிலும் அப்பால் வருபவர்களை காணமுடியும். மேலிருந்து பார்க்கையில் இரு எறும்புநிரைகள்போல் தெரியும். அந்தப் பாதையில் நாங்கள் ஒரு சிறு வண்டுக்கூட்டம்போல சென்றோம்.
பாலைநிலம் எடைவண்டிகள் வருவதற்குரியதல்ல. அகலமான சகடங்கள் கொண்ட தாழ்வான வண்டிகளில்தான் பாலையில் பொருட்களை கொண்டுவர முடியும். அவற்றையும் பரைக்கால் ஒட்டகைகளே இழுக்க முடியும். தொடக்கத்தில் ஒட்டகைகள் இழுக்கும் மென்மரச் சகடங்கள் கொண்ட வண்டிகளே வந்துகொண்டிருந்தன. அவை சகடங்களே அல்ல, உருளும் மரத்தடிகள் சகடங்களாக பொருத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு வண்டிக்கும் பன்னிரண்டு உருளைகள். ஆயிரங்காலட்டை செல்வதைப்போல் அவை மணல்மேல் உருளும். அவை சென்ற வழியே ஒரு பாதையென தெரியும்.
பின்னர் வண்டிநிரை பெருகியபோது அவந்தியிலிருந்து துவாரகை வரைக்கும் பலகைகள் பதிக்கப்பட்ட உறுதியான சாலை தங்களால் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு எடைமிகுந்த வண்டிகள்கூட வரலாம் என்று ஆயிற்று. புரவிப்பாதை ஒன்று குறுக்காக இருந்தாலும் பெரும்பாலும் அனைவரும் அந்த மரம் பதிக்கப்பட்ட வண்டிப்பாதையையே விரும்பினர். முன்பு அந்தப் பாதையில் வண்டிகள் மணிகோத்த மாலை என அவந்திமுதல் துவாரகை வரை நிரைகொண்டிருக்கும். அப்போது அப்பாதை கைவிடப்பட்டு மணலில் புதைந்து முற்றிலும் தடமில்லாததாக மாறிவிட்டிருந்தது. நான் புரவியில் சென்றபோது பல இடங்களில் அந்தப் பாதையை புரவிக்குளம்படிகள் உணர்ந்தன. மீண்டும் விலகி பாலையின் புதையும் மணலுக்குள் சென்று மீண்டும் வழி கண்டு அப்பால் ஏறின. தந்தையே, என் உள்ளமும் அவ்வாறே தடம் விலகி தடம் கண்டு அலைக்கழிந்துகொண்டிருந்தது.
அன்று மாலை பாலைநிலச் சோலை ஒன்றில் தங்கினேன். தந்தையே, உங்கள் காலகட்டத்தில் ஒரு அழகிய விடுதியாக பேணப்பட்ட சோலை அது. ஐநூறு வணிகர்களும் அவர்களின் வண்டிகளும் தங்குவதற்கு உகந்தது. முன்பு அங்கிருந்த ஊற்று ஆழப்படுத்தப்பட்டு கரைகட்டப்பட்டு காவலுடன் முறையாக பேணப்பட்டிருந்தது. நான் அங்கு சென்றபோது அச்சோலையையே மணல் மூடியிருந்தது. ஊற்றின் ஒரு பகுதி மணலால் மூடப்பட்டிருந்தது. மானுடர் வருவது குறைந்ததுமே பாலை விலங்குகள் அச்சோலையை கையில் எடுத்துக்கொண்டுவிட்டிருந்தன. மணலெங்கும் ஓநாயின் காலடித்தடங்களை பார்த்தேன். என்னுடன் வந்த காவலர்கள் ஓநாய்கள் அணுகாமல் இருப்பதற்காக பந்தங்கள் கொளுத்திவைத்து எனக்கு காவலிருந்தனர்.
விண்மீன்களைப் பார்த்தபடி பாலையில் அமர்ந்திருந்தபோது ஒரு சிறு தொடுகையென அந்த எண்ணம் வந்து எனக்கு அதிர்வளித்தது. என்னை பார்ப்பதை கணிகர் வேண்டுமென்றே ஒழிந்தார். அவருக்குத் தெரியும், நான் ருக்மியை பார்க்கச் செல்வது. அங்கு என்ன பேசவேண்டுமென்பதை அவர் நன்கு உணர்ந்திருக்கிறார். அதை எனக்கு அவர் கூறியாகவேண்டும் என்று மூத்தவர் ஆணையும் இட்டிருக்கிறார். ஆனால் அவர் என்னை சந்திக்கவில்லை. ஏன்? என்னை அவர் கையொழிகிறாரா? அன்றி நான் செல்லுமிடத்தில் ஏதேனும் பிழையாக நிகழும் என்று எண்ணுகிறாரா? அதற்கு தானும் பொறுப்பேற்றுக்கொள்ள முடியாதென்று கருதுகிறாரா?
என் உள்ளம் பதறிக்கொண்டிருந்தது. எண்ணங்கள் கிளம்பி வெவ்வேறு திசைகளில் வெடித்துச் சென்று வெட்டவெளியில் முட்டி திரும்பி வந்தன. அன்றுபோல் அத்தனை குழம்பி பதறி நிலையழிந்து ஒருபோதும் இருந்ததில்லை. இத்தனைக்கும் அத்தனை பதற்றம் கொள்வதற்கு அன்று எதுவும் நிகழவும் இல்லை. கணிகர் என்னை காண மறுத்தமைக்கு அவர் உடல்நலமில்லை என்பதேகூட உண்மையான ஏதுவாக இருக்க அனைத்து வாய்ப்புகளும் இருந்தன. நான் மிகைப்படுத்திக் கொண்டிருக்கலாம். எனது அச்சங்களால் தடம் மாறி அவ்வெண்ணத்தை சென்றடைந்திருக்கலாம். ஆனாலும் எனக்கு தோன்றிக்கொண்டிருந்தது, அது இயல்பானது அல்ல என்று.
அவர் என்னை வரவழைத்து ஓரிரு சொல் பேசி வாழ்த்தி அனுப்பியிருக்கலாம். அதையும் செய்யவில்லை. என்னுள் எழுந்த அமைதியின்மை என்னை அங்கே அமரவிடவில்லை. எழுந்து பாலைநிலத்தில் கால் புதைய நடந்தேன். எவரோ என்னை பார்க்கும் உணர்வு இருந்துகொண்டே இருந்தது. விந்தையானதோர் அச்சம் உடனே அங்கிருந்து செல் என்று சொன்னது. நான் கண்களை மூடிக்கொண்டு எனது எண்ணங்களை தொகுக்க முயன்றேன். பின்னர் ஒன்று உணர்ந்தேன். ஒருவேளை எனது நன்மைக்காகவே கணிகர் அதை செய்திருக்கலாம். நானே வெற்றியை முழுமையாக அடையவேண்டும் என்றும் அதற்கான தகுதி உடையவன் என்றும் அவையில் என்னை நிறுத்த அவர் எண்ணியிருக்கலாம்.
நான் அடையும் சொல்வெற்றிகள் அனைத்துமே கணிகரால் எனக்கு அளிக்கப்படுபவை என்று பல்வேறு சொற்களில் சுஃபானு அவைதோறும் நிறுவ முயன்றுகொண்டிருந்தார். அவரை நான் சந்திக்காமலேயே சென்றேன் வென்றேன் என்று வரும்போது என்னை மேலும் அழுந்தச்செய்யும் என்று அவர் எண்ணியிருக்கலாம். ஆம், என் நலன் நாடும்பொருட்டே அதை செய்கிறார். அவரை நான் வீணாக ஐயுறுகிறேன். என் நலன் நாடும் பொருட்டேதான். ஐயமே இல்லை என் நலன் நாடும் பொருட்டேதான்.
அவ்வெண்ணம் என்னை விடுதலை செய்தது. என்னை இயல்பு நிலைக்கு மீட்டது. எழுந்து சென்று மீண்டும் மணலில் விரித்த தோல் படுக்கையில் படுத்துக்கொண்டேன். என் உடலை மென்மையாக உள்வாங்கிக்கொண்டது மணல்படுக்கை. ஆழ்ந்து துயின்று எப்பொழுதோ விழித்துக்கொண்டபோது என் மேல் ஒரு நோக்கு பதிந்திருப்பதை உணர்ந்தேன். விழி திறக்காமலே அது எவருடைய நோக்கு என்று அறிந்தேன். கணிகர் என் அருகே அமர்ந்து என்னை பார்த்துக்கொண்டிருந்தார்.
“கணிகரே, தாங்களா?” என்றேன். அவர் புன்னகைத்தார். மிக மிக அழகிய புன்னகை. “கணிகரே, தாங்கள் என்னை தொடர்ந்து வந்தீர்களா? இங்குதான் இருக்கிறீர்களா?” திடுக்கிட்டு கண்விழித்தேன். மிக அருகே ஒரு ஓநாய் அமர்ந்திருந்தது. நான் எழுந்து அதை பார்த்தேன். அதை விரட்டும்பொருட்டு கையை வீசினேன். அது அசைவிலாது என்னை பார்த்துக்கொண்டிருந்தது. பின்னர் எழுந்து விலகிச்சென்றது. சிறுத்தையாலோ வேறு விலங்குகளாலோ தாக்கப்பட்டமையால் அதன் பின்னங்கால்கள் இரண்டு பழுதடைந்திருந்தன. முன்கால்களால் தன் உடலை உந்தி அதை முன்னெடுத்துச் சென்றது.
அது இச்சோலைக்குள்ளேயே வந்து இங்கேயே ஒளிந்திருந்து வாழ்கிறது என்று தெரிந்தது. அதனால் ஓடவோ வேட்டையாடவோ இயலாது. சிற்றுயிர்களைப் பிடித்து உண்டு இங்கு மறைந்திருக்கிறது. என் காவலர்கள் இச்சோலைக்கு காவலிடும்போது முன்னரே வந்து இந்த ஓநாய் சோலைக்குள் ஒளிந்திருக்கக்கூடும் என்று எண்ணியிருக்கவில்லை. அதன் நோக்கைத்தான் அங்கு வந்த கணம் முதல் நான் உணர்ந்துகொண்டிருந்தேன். அதுதான் என்னை அத்தனை அமைதியிழக்கச் செய்தது. நான் மணலில் கையால் தட்டினேன். நின்று பசி வெறித்த விழிகளால் என்னை பார்த்தது. பின்னர் வாய் திறந்து மெல்ல சீறி உடலை உந்தி இழுத்துக்கொண்டு மணல் சரிவில் இறங்கி ஊற்றை நோக்கி சென்றது.
பெருமூச்சுடன் இயல்பு நிலையை அடைந்து மீண்டும் மணல்பரப்பில் அமர்ந்தபோது நான் ஒன்றை உணர்ந்தேன். மிகத் தெளிவாக. கண்முன் எழுந்த பாலைவெளியென பருவடிவாக. என்னை கணிகர் மாபெரும் சூழ்ச்சி ஒன்றுக்குள் இறக்கிவிட்டிருக்கிறார். என்னை கைவிட்டுவிட்டார். அல்லது என் கதையை முடிக்க முடிவு செய்துவிட்டார். இந்தச் சந்திப்பிலிருந்து நான் மீளப்போவதில்லை. ஏற்கெனவே அடைந்த இரு வெற்றிகளால் என்னை நானே மிகையாக எண்ணிக்கொண்டேன். இதையும் மிக எளிதாக வென்றுவிடுவேன் என்று கருதினேன். அந்த நம்பிக்கையே என் புதைகுழி. அதை மிகத் தெளிவாக உணர்ந்து கணிகர் என்னை இந்தப் புதைமணலுக்குள் அனுப்புகிறார். இதில் தனக்குப் பங்கில்லை என்று முன்னரே கைகழுவிக்கொள்கிறார்.
என்ன நிகழும்? எங்கு சிக்கிக்கொள்வேன்? சிக்கிக்கொள்வேன் என்று அத்தனை உறுதியாகத் தெரிந்தது. தந்தையே, ஒரு மாற்றெண்ணம்கூட இல்லை. கண் முன் நின்றிருந்தது. ஆயினும் நான் அதை தவிர்க்கவில்லை. அச்சந்திப்பை ஒழிந்து நான் திரும்பி துவாரகைக்கு சென்றிருக்கலாம். ஏதேனும் ஒரு ஒழிவுச் சொல் உரைத்திருக்கலாம். ஆனால் அவ்வாறு தோன்றவில்லை. மேலே செல்க என்றே தோன்றியது. அதிலிருந்து எழுந்த ஆணவம். அதைவிட அறியும் விழைவு. என்னை விட பெரிதாக அங்கு என்ன இருக்கப்போகிறது? அவ்வாறு ஒன்று அங்கு என்னை காத்திருக்கையில் அதை ஒழிந்து என்னால் திரும்ப முடியாது. ஆகவே நான் செல்லவே முடிவெடுத்தேன்.
மறுநாள் முதற்காலையில் கிளம்பினோம். செல்லும் வழியெங்கும் என்ன நிகழும் என்று என்னால் எண்ணக்கூடும் அனைத்து தடங்களிலும் எண்ணங்களை ஓடவிட்டுக்கொண்டிருந்தேன். எதுவும் பிடி கிடைக்கவில்லை. அத்தனை வாயில்களும் மூடியிருப்பது மேலும் மேலும் வெறி கிளப்பியது. சென்று முட்டித்திறந்தே ஆகவேண்டும் என்று என் உள்ளம் எழுந்தது. செல்க செல்க என்று என் புரவியை துரத்தினேன். தந்தையே, தன் புதைகுழியை தானே தேடிச்செல்பவனின் விரைவைப்போல விந்தை வேறில்லை இப்புவியில்.
நான் துவாரகையின் எல்லைக்கு அப்பால், அவந்தி நாட்டின் முகப்பில் அமைந்திருந்த பாலைநிலப் பகுதிக்கு சென்றேன். நெடுந்தொலைவிலேயே அங்கே ஒரு படை இருப்பது வானில் பறந்த பல்லாயிரம் பறவைகளில் இருந்து தெரிந்தது. பாலைநிலப் பறவைகள் அனைத்தும் அங்கு உணவு கிடைக்கும் என்பதை அறிந்து அங்கு சென்றுவிட்டிருந்தன. கூடாரங்களிலிருந்து மிஞ்சியவற்றை உண்டு பழகிய காகங்களும் மைனாக்களும். மிக உயரத்தில் வட்டமிட்ட பருந்துகள். அவந்தியின் அரைப்பாலை நிலமும் புல்வெளியும் அங்கிருந்துதான் தொடங்குகின்றன. ஆகவே அது ஒரு படை தங்குவதற்கு மிகவும் உகந்த நிலம். பாலை நிலம் என்பதனால் மரங்களை வெட்டத் தேவையில்லை. கூடாரங்களை எளிதில் அமைத்துக்கொள்ளலாம். ஆனால் அருகில் புல்வெளி இருப்பதனால் விலங்குகளுக்குரிய புல்லும் நீரும் அங்கு கிடைக்கும்.
நான் வருவதை தொலைவிலேயே அவர்களின் காவல்மாடத்திலிருந்து பார்த்துவிட்டார்கள். அங்கே ஒரு கொம்பொலி எழுவது மிகச் சிறிய ஒலித்தீற்றலென என் காதில் கேட்டது. என்னை வரவேற்க வருபவர்களுக்காக நான் மெதுவாக புரவியில் சென்றுகொண்டிருந்தேன். விதர்ப்ப நாட்டுக் கொடியுடன் தொலைவில் மூன்று வீரர்கள் என்னை நோக்கி வந்தனர். முதலில் வந்தவன் விரைவழிந்து கொம்பொலி எழுப்பினான். எனது காவல்வீரனும் கொம்பொலி எழுப்பி துவாரகையின் கொடியை ஆட்டினான். இருவரும் கொடி தாழ்த்தி வணங்கிய பிறகு காவலன் என்னை அணுகி “துவாரகையின் இளவரசர் அவந்தி நாட்டு எல்லைக்குள் வருக! மாமன்னர் ருக்மி தங்களை வரவேற்கிறார்” என்றான்.
“எனது வரவு அறிவிக்கப்பட்டுள்ளதா?” என்று நான் கேட்டேன். “இல்லை, முறையான அறிவிப்புகள் இல்லை. ஆனால் ஒற்றுச்செய்திகளின் மூலம் தாங்கள் வந்துகொண்டிருப்பது தெரிந்தது. தாங்கள் வந்ததும் நேராக அழைத்து வரும்படி ஆணை” என்றான் காவலன். அவனுடன் செல்கையில் அங்கு சென்று சற்றே ஓய்வெடுத்து சொல்கோத்து அதன் பிறகு ருக்மியை சந்திக்கலாம் என்று எண்ணியிருந்தேன். இப்பொழுது இந்த அகப்பதற்றத்துடனேயே அவரை சந்திக்கவேண்டியிருந்தது இடரே என்று எனக்கு தெரிந்தது. என்ன நிகழ்கிறது என்று எனக்கு தெரியவில்லை. நிகழ்வுகளின் சுழல் என்னை இழுத்துச் செல்லத் தொடங்கிவிட்டது. முற்றாக ஒன்றுமே தெரியாமல் சுழன்று அடித்து மோதி மூழ்கவேண்டியதுதான், வேறுவழியில்லை.
உண்மையில் அந்தத் தருணத்தில் மெல்லிய உவகை ஒன்று எனக்கு ஏற்பட்டது. என்னைவிடப் பெரிதான ஒன்றை சந்திப்பது அது. ஒருவேளை அதை நான் கடந்துவந்தேன் எனில் வாழ்வின் மிகப் பெரிய அறிதல் ஒன்றை பெற்றவன் ஆவேன். தெய்வத்தை நேரில் கண்டவன் போலாவேன். என்ன நிகழவிருக்கிறது என்று ஒரு கதை கேட்கும் குழந்தையின் ஆர்வத்துடன் என் அகம் விழித்து பதற்றம் அடைந்திருந்தது. ஆனால் என் இடத்தொடை நடுங்கிக்கொண்டே இருந்தது. என்னுள்ளிருந்த பதற்றம் விரல்களை முறுக்கி கைகளை அழுத்தி வைத்திருக்கச் செய்தது.
நேராகவே ருக்மியின் குடில் நோக்கி கொண்டுசெல்லப்பட்டேன். அங்கே என்னை எதிர்கொண்ட சிற்றமைச்சர் “தாங்கள் இச்சிற்றறையில் ஆடை திருத்தி முகம் கழுவலாம். அரசர் கூடாரத்தில் தங்களுக்காக காத்திருக்கிறார்” என்றார். நான் அந்தச் சிறு குடிலுக்குள் சென்று அங்கிருந்த அகன்ற மண்கலத்தில் முகம் கழுவினேன். என் தலைப்பாகையை அவிழ்த்து திருப்பிக்கட்டி மேலாடையை உதறி அணிந்துகொண்டேன். எனக்காக வாயிலில் ஏவலன் காத்திருந்தான். என்னை அவன் தனியாக விடவே இல்லை.
எதன்பொருட்டு என்னை வந்த பொழுதிலேயே சந்திக்கவேண்டும் என்று ருக்மி விரும்புகிறார் என்று என்னால் எண்ண முடியவில்லை. துவாரகையின் கொடியுடன் வருவதனால் இது ஒரு முறையான அரசத்தூதென்றே கொள்ளப்படவேண்டும். ஆகவே என்னை தன் அவையில் வரவழைத்து சொல்எடுக்கச் சொல்வதே முறையானது. அன்றி ஏதேனும் ஐயம் இருந்தால் தனியறைக்கு வரச்சொல்லலாம். பாலையிலிருந்து நேராக வரவழைத்திருக்க வேண்டியதில்லை. நான் நிலைகுலைந்திருப்பேன் என்றும், அறியாச் சொல்லெடுத்து என்னை காட்டிக்கொடுப்பேன் என்றும் அவர் எண்ணியிருந்திருக்கலாம்.
ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. என்னை அவருக்கு தெரியாது. மெய்யாக அவர் பதறிக்கொண்டிருக்கலாம். நான் நீராடி உடைமாற்றி வரும்வரை பொறுத்திருக்க அவரால் இயலாமல் இருக்கலாம். ஆம், விதர்ப்பத்தின் அரசர் ருக்மியைப்பற்றி அறிந்தவர்கள் அவ்வாறே முடிவெடுப்பார்கள். ருக்மி அஞ்சுபவர், விரைவாக நிலையழிபவர், உறுதியாக முடிவெடுக்க இயலாது ஊசலாடுபவர். குருக்ஷேத்ரத்தில் இருபுறமும் அலைபாய்ந்து தன்னை பாரதவர்ஷத்திற்கே காட்டிக்கொண்டவர். ஆகவே அவர் ஒரு போரினூடாக தன்னை நிறுவிக்கொள்ள விழைகிறார்.
நான் அவர் கூடார வாயிலில் நின்றேன். என்னை உள்ளே அழைத்தனர். கூடாரத்திற்குள் மண்ணில் விரிக்கப்பட்ட தோல் இருக்கையின் மீது ருக்மி அமர்ந்திருந்தார். செந்தழல்போல் தாடி மார்பில் விழுந்திருந்தது. குழலைச் சுருட்டி தலைக்கு மேல் கட்டி அதில் ஒரு எலும்பு குத்தியிருந்தார். கழுத்தில் விழிமணி மாலை. எரியும் செந்நிற ஆடை. தழலெழுந்த மகாருத்ரன் போன்ற வடிவம். அவர் ருத்ரஉபாசனை கொண்டவர் என்று முன்னரே அறிந்திருந்தேன். உபாசனை கொண்டவர்கள் தங்கள் தெய்வம்போல தாங்களும் ஆகும் விந்தையை பலமுறை கண்டிருந்தேன்.
தலைவணங்கி “அனல் வடிவமான அரசருக்கு வணக்கம். நான் துவாரகையின் இளைய யாதவர் கிருஷ்ணனின் மைந்தன். துணைவி சத்யபாமையின் எட்டாவது சிறுவன். மூத்தவர் ஃபானுவின் இளையோன். அரச முறைப்படி ஒரு தூதுச்செய்தியுடன் தங்களை பார்க்க வந்திருக்கிறேன்” என்றேன். அவர் சிவந்த விழிகளால் என்னை நோக்கி “கூறுக!” என்றார்.
“அரசே, துவாரகையில் எண்பதின்மரும் இணைந்து ஒன்றாக ஆகியிருக்கிறார்கள் என்பதை அறிந்திருப்பீர்கள்” என்றேன். “ஆம்” என்று அவர் சொன்னார். “தந்தை கிருதவர்மன் வந்ததுமே எங்கள் பூசல் முடிவுக்கு வந்துவிட்டது. அந்தகக் குலத்து மூத்தவரும் எந்தை இளைய யாதவருக்கு நிகரானவருமான அவருடைய சொல்லை எண்பதின்மரும் தலைக்கொண்டிருக்கிறோம். இன்று மூத்தவர் ஃபானு முடிசூடுவதற்கு பிரத்யும்னனுக்கோ சாம்பனுக்கோ பிற அன்னையர் மைந்தருக்கோ மாற்றுச்சொல் எதுவும் இல்லை. எண்பதின்மரிடையே கருத்துப்பிரிவென்று எதுவும் இல்லை” என்றேன்.
அவர் அதை அறிந்திருக்கிறார் என விழிகள் காட்டின. “இன்னும் ஓரிரு நாட்களில் மைந்தர் அனைவரும் கூடி மூத்தவர் ஃபானுவை முடிசூட வைப்பதென்றும், அதை அனைத்து அரசர்களும் பங்குபெறும் பெருவிழவென நிகழ்த்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அம்முடிவு அரசவையில் அறிவிக்கப்பட்டு ஆணையாக வெளியிடுவதற்கு முன்னரே தங்களிடம் தெரிவிக்கப்படவேண்டும் என்று மூத்தவர் ஃபானு விரும்பினார். ஆகவேதான் என்னை தங்களிடம் அனுப்பினார்” என்றேன்.
கண்கள் உறுத்து என்னை பார்க்க கைகள் தாடியை அளைந்துகொண்டிருக்க ருக்மி தலையாட்டினார். “தாங்கள் இதில் என்ன நிலைப்பாடு எடுப்பீர்கள் என்பதைப்பற்றி மூத்தவருக்கு ஐயம் எதுவும் இல்லை. தாங்கள் என்றும் துவாரகையின் நலம் நாடுபவராகவே இருந்திருக்கிறீர்கள். குருதி வழியாக தாங்கள் பிரத்யும்னனுக்கு அணுக்கமானவர். ஆகவே பிரத்யும்னன் முடிசூடவேண்டும் என்று விழைந்தது இயல்பானது. அது தங்கள் மகள் பட்டத்தரசியாகக்கூடும் என்பதனாலாக இருக்கலாம். அதுவும் இயல்பானதே. ஷத்ரியர் நிலம் விழைவதும் குடிபெருக எண்ணுவதும் அவர்களுக்கு தெய்வங்கள் இட்ட ஆணை. ஆனால் இன்று பிரத்யும்னன் ஃபானு முடிசூட வேண்டும் என்று ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில் தாங்கள் பிரத்யும்னனை ஆதரித்து ஃபானுவின் அவைக்கு வந்து முடிசூட்டுவிழாவை சிறப்பிக்க வேண்டுமென்பது அனைவரின் கோரிக்கை” என்றேன்.
என் சொற்களை நானே எண்ணி மகிழ்ந்தேன். “மூத்தவரே, இச்செய்தியை நான் அரசமுறைப்படி அறிவிக்க வரவில்லை. அதற்கு இன்னும் சில நாட்களாகும். ஆனால் குடிமூத்தவர்களுக்கு முடிவெடுப்பதற்கு முன்னரே சொல்லவேண்டும் என்பதனால் உங்களிடம் கூறவந்தேன். உங்கள் வாழ்த்தே மூத்தவர் ஃபானுவை அரசமையச் செய்யும். எண்பதின்மரையும் வாழவைக்கும். கிருதவர்மனும் சாத்யகியும் நீங்களும் பிதாமகர்களாக நின்று எடுத்துக்கொடுக்கும் மணிமுடியைச் சூட மூத்தவர் ஃபானு விழைகிறார்” என்றேன்.