பத்துலட்சம் காலடிகள்,பெயர்நூறான் -கடிதங்கள்

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

பத்துலட்சம் காலடிகள் கதையை படித்துக்கொண்டிருக்கையில் ஒரு விசித்திரமான நிலைக்கு ஆளானேன். அது கதையாகவே இல்லை. ஒரு அறிக்கை போல முதலில் இருந்தது. எல்லா கோணத்திலிருந்தும் செய்திகளை கொட்டிக்கொட்டி நம்பகமாக ஆக்கிக்கொண்டே சென்று உச்சியில் அந்த அபாரமான மனிதரை நிறுத்திக்காட்டியது. ஒரு புனைவு விளையாட்டு. சமீபகாலமாக பல கதைகளில் முக்கால்வாசி மெய்யான வரலாறு கால்வாசி புனைவு என ஒரு கலவையை திறமையாக செய்கிறீர்கள். இந்தக் கலவையால் மொத்தமும் புனைவாகி விடுகிறது. மொத்தமும் வரலாறாகவும் தெரிகிறது

ஒரு கடலுக்குள் கிடப்பதை எடுப்பதுகடலுக்குள் ஆழ்த்திவிடுவது என்ற இரண்டு செயல்பாடுகள். இரண்டுக்குமே ஒரே அமைப்பு. அதுதான் அந்தக்கதை. அந்த அமைப்பை நேரடியாகச் சொல்லவில்லை. அதைச்சொல்ல கப்பல்கட்டும் கலை, கலாசிகளின் எடைதூக்கும் உத்தி என்று வெவ்வேறுவகையில் அதைச் சொல்கிறீர்கள்

உண்மையில் எந்த ஒரு அமைப்புக்கும் இது பொருந்தும். ஓர் அமைப்பு விதிகளால் ஆனது. அந்த அடிப்படை விதிகளை ரத்த்செய்துவிட்டால் அது உடைந்து சரிய ஆரம்பித்துவிடும். ஒவ்வொருவரும் அடியை பகிர்ந்துகொள்ளும் அமைப்பு. ஒரு சிறு விரிசல்போதும் பத்தேமாரி கடலுக்குள் சென்றுவிடும்.

இந்தக்கதையின் அமைப்புதான் அத்தனை பெரிய அனுபவத்தை அளிக்கிறது. ஒரு துப்பறியும் நிபுணர் வெவ்வேறு விஷயங்களை தொட்டுத் தொட்டுச் செல்கிறர். பலவற்றைச் சொல்கிறார். ஒவ்வொன்றும் வந்து ஒரே அமைப்பாக ஆகின்றன. கதைசொல்லியால் அவை அவ்வாறு ஆக்கப்படுகின்றன.

இந்த அமைப்பெல்லாம் மிகமிக சிக்கலானது. இரும்புக்கோட்டை மாதிரியானது. ஆனால் அதிலே பூத்த மலர் ஹாஷிமின் காதல். அந்தக்காதலை அந்தப்பெண் அறிந்துகொள்ளும் இடம். அது புனைவின் ஓர் உச்சமான இடமாக இந்தக்கதையில் உள்ளது. ஆனால் இருந்த இரும்பு கட்டுமானத்தில் மலர்களுக்கு இடம் கிடையாது. நசுக்கிவிட்டு மேலே செல்லும்

பத்துலட்சம் காலடிகளை வாசித்துக்கொண்டிருந்தபோது ஒன்று தோன்றியது. இந்த மாபெரும் அமைப்பு எவ்வளவு பழுதற்றதானாலும் இதில் ஒரு விரிசலாகவும் மீறலாகவும்தானே காதல் நிகழமுடியும்? இப்படி கப்பலில் ஒரு ஓட்டையாகத்தானே அது வரும்?

அப்போது ஒன்று தோன்றியது, இது அனார்க்கலி காதல்தானே? அதில் அனார்க்கலி புதைக்கப்படுகிறாள். இதில் சலீம் கடலில் அமிழ்த்தப்படுகிறான். இந்த மீறல்தான் காதல். லைலா மஜ்னு, அம்பிகாபதி அமராவதி எல்லா கதையுமே இதுதான்.

ஆச்சரியம் என்னவென்றால் இதை முகலாயர் கதையுடன் இணைத்து வாசிக்கும் க்ளூவையும் நீங்களே அளித்திருக்கிறீர்கள்.

ஜெயராமன்

***

அன்புடன் ஆசிரியருக்கு

பத்து லட்சம் காலடிகள் வாசித்தேன். ஏனோ கல்பொரு சிறுநுரை நினைவுக்கு வந்தது. மைந்தனை இழக்கத் துணிந்த தந்தை. கடல் நோக்கிய மாளிகை. கெத்தேல் சாகிப், யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி மாதிரியான சராசரி மனிதர்களைவிட உயரமானவர்கள் அடிக்கடி உங்கள் கதைகளில் தலைகாட்டி விடுகின்றனர். அவர்களுடைய இயல்பில் எந்த நாயகத் தன்மையும் ஏற்றப்படுவதில்லை. இயல்பாகவே அவர்கள் அவ்வாறுதான் இருக்கிறார்கள். அவர்கள் உருவாகிவந்த பண்பாட்டின் அழுத்தத்துடனும் தீர்மானத்துடனும் தெய்வச்சிலைகள் போல. வெளியே நின்று வியந்துவிட்டு நகர்ந்து செல்லலாம். ஒருவகையில் அப்துல்லா பூக்கோயத் தங்ஙளின் பழுதற்ற வடிவம் என்று தோன்றுகிறது. கதை முழுக்க விரவியிருக்கும் பண்பாட்டுக் குறிப்புகளின் ஒரு பருவடிவமாக அப்துல்லா இருக்கிறார். புத்தகத்தில் படித்துக் கொண்டிருக்கும் வரலாறு திடீரென உருவெடுத்து நடமாடுவதுபோல. மலைப்பை ஏற்படுத்திய கதை.

அன்புடன்

சுரேஷ் பிரதீப்

***

பெயர்நூறான் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

ஜே சைதன்யாவின் சிந்தனை மரபு கட்டுரையில் ஒரு அழகான வரி வரும். பெயரில்லாததைச் சொல்வதற்குத்தான் அத்தனை பெயர்கள் என்று. சைதன்யாவை நீங்கள் தினம் ஒரு பெயர் போட்டு கொஞ்சம் இடம் வரும். அதைத்தான் பெயர்நூறான் கதையிலும் நினைத்துக்கொண்டேன். உண்மையில் குழந்தை என்ற அற்புதத்திற்கு எந்தப்பெயரும் பொருந்தாது. பலபெயர்களை போட்டு போட்டு ஒரு பெயருக்கு பழகிக்கொள்கிறோம், அவ்வளவுதான்

மகிழ்

***

வணக்கம் ஜெ.

பெயர்நூறான் கதையை வாசித்தேன். முதல் குழந்தை பிறக்கும் தருணம். படபடப்பு, மகிழ்ச்சி, கற்பனை மிகச்சிறப்பாகக் கடத்தப்பட்டிருந்தது. கற்பனைகளை உதிர்த்துக் கொண்டு விதையெழுவது போல குழந்தை பிறக்கிறது. ஒரு குழந்தை பிறப்பதற்கு சூட்சும் வடிவில் ஒராயிரம் குழந்தைகள் கற்பனையில் பிறந்து மிதந்து கொண்டிருக்கின்றன. அந்த அத்தனைக் குழந்தைகளின் வடிவாக ஒரு குழந்தையை எண்ணும் மனநிலை வெளிபடுகிறது.

அரவின் குமார்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–38
அடுத்த கட்டுரைவான்நெசவு,சூழ்திரு- கடிதங்கள்