‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–38

பகுதி நான்கு : அலைமீள்கை – 21

தந்தையே, எந்த ஒரு அவையிலும் நான் பார்க்கும் ஒன்றுண்டு, அது கூடி சற்றுநேரம் கலைவுகொண்டிருக்கும். அதன் மையம் நோக்கி செல்வதற்கான தயக்கம் அனைவரிலும் வெளிப்படும். எவரோ ஒருவர் அந்த மெல்லிய படலத்தை கிழித்து எழுந்து அந்த மையத்தை நோக்கி செல்லவேண்டியிருக்கிறது. மெல்லமெல்ல அவை குவியும். உச்சம்கொள்ளும். ஆர்ப்பரிக்கும். அழுது சிரித்து கொந்தளித்து எங்கோ வானிலென இருக்கும். அங்கிருப்போர் தேவரோ அசுரரோ என தெரிவர். பின்னர் மெல்ல மெல்ல அந்த அலை வளைந்து பின்னடைகிறது. ஒவ்வொருவரும் மண்ணில் இறங்குகிறார்கள். தங்களுக்கு உரியதென்ன, தங்கள் நலன்கள் என்ன என்று கணிக்கத் தொடங்குகிறார்கள். அதன்பின் அங்கே திரள் என்பது இல்லை. ஒவ்வொருவரும் தனியர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விசை.

அவையில் அந்த தரைபரவல் நிகழலாயிற்று. அவர்களின் உடல்நெகிழ்வுகள் அதையே காட்டின. இயல்பாக பின்சரிந்து அமர்ந்து கைகளை கட்டிக்கொண்டும் தாடியை வருடிக்கொண்டும் அவர்கள் கிருதவர்மனின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தார்கள். “மைந்தர்களே, யாதவர்களாகிய நாம் குருக்ஷேத்ரத்தில் நம் நற்பெயரை இழந்தோம். குருக்ஷேத்ரத்தில் நானும் சாத்யகியும் பெரும்புகழ் ஈட்டிக்கொண்டோம் என்பதில் ஐயமில்லை. ஆனால் யாதவர்கள் அழிந்தார்கள், புகழ்மறைந்தார்கள் என்பதே உண்மை. அதை நாம் ஈடுகட்டியாகவேண்டும். அந்தச் சிறுமையிலிருந்து கடந்துசென்றாகவேண்டும்.”

அப்போரில் பிரத்யும்னனும் சாம்பனும் தந்தையின் ஆணைக்கேற்ப விலகி நின்றார்கள் என்பது உண்மை. போரில் பலராமரும் பங்குகொள்ளவில்லை என்பதும் உண்மை. ஆனால் அது நாம் கூறும் ஒரு மாற்றுரை என்ற அளவிலேயே வரலாற்றில் நிற்கும். நாம் அஞ்சினோம், தன்னலம் கணித்து விலகினோம் என்றே அது வரலாற்றில் பதிவாகும். ஆகவே நாம் படைவல்லமையுடன் எழுந்தாகவேண்டும். இன்று நம்மிடம் குருக்ஷேத்ரப் போரில் வென்று மீண்ட இரு போர்வீரர்கள் இருக்கிறோம். நானும் சாத்யகியும் படைமுகம் நிற்கிறோம் என்பதே ஓர் ஆற்றல்தான். இளைய யாதவரின் ஆற்றலையும் மதிநுட்பத்தையும் கொண்டவர் என்று அறியப்படும் பலராமர் இருக்கிறார். படைத்தலைமைக்கு நம்மிடம் குறைவில்லை. யாதவர்கள் ஒருங்கிணைந்தால் படை எண்ணிக்கைக்கும் குறைவிருக்காது.

நாம் நிலம் வெல்வோம். முடிசூடுவோம், முழுதாள்வோம். இங்கு இதுவரை நிகழ்ந்த பூசல்கள் அனைத்திலும் இருந்த இடர் என்ன? நீங்கள் அனைவரும் துவாரகைக்காக விழைவுகொண்டீர்கள், இந்த மணிமுடிக்காக கனவு கண்டீர்கள். மைந்தரே, அது பிழை. துவாரகை கைப்பிடியளவு நிலம். இது ஒரு தொடக்கம். இந்நிலத்தை அல்ல, நீங்கள் பங்குபோட்டுக்கொள்ளவேண்டியது விரிந்து பரந்திருக்கும் பாரதவர்ஷத்தைத்தான். அங்கு உங்கள் ஒவ்வொருவருக்கும் நிலங்கள் அமையும். ஐயம் வேண்டியதில்லை, நீங்கள் எண்பதின்மரும் தனித்தனியாக முடிசூடி அமையும் நாடுகள் அமையும். உங்கள் கொடிவழிகள் முடிசூடி பாரதநிலத்தில் நீண்டு வளரும் உங்கள் புகழ் என்றுமிருக்கும். மரம் விதைகளை உருவாக்குவது தன் காலடியில் உதிர்ப்பதற்காக அல்ல, வெடித்துச் சிதறி நிலமெங்கும் பரவுவதற்காக. எண்பதின்மரின் தோற்றத்தில் இளைய யாதவர் எழுந்தது பாரதநிலத்தை வெல்வதற்காக என்றே உணர்க!

இளைய யாதவரின் மைந்தர் என்னும் அடையாளம் உங்கள் பெரும் படைக்கலம். வெல்லற்கரியவர் என அவர் இன்னமும் பாரதவர்ஷத்தால் நம்பப்படுகிறார். நீங்கள் இயற்றுவதனைத்திற்கும் அவரது சொற்களின் துணை உண்டு. பாரதவர்ஷம் முழுக்க இன்று ஐந்தாவது வேதம் என்று அவர் சொற்கள் ஏற்கப்படுகின்றன. பல்லாயிரம் பல்லாயிரம் மாந்தர் அச்சொற்களை நோக்கி வந்து குழுமுகிறார்கள். ஒரு நிலத்தில் ஐந்தாம் வேதம் ஏற்கப்பட்டுவிட்டது என்று அரசர் அறிவிப்பாரெனில் சில நாட்களுக்குள்ளேயே எட்டு பெருங்குடிகளும் திரண்டு அங்கு சென்று அந்நிலம் பொலிவு கொள்வதை காண்கிறோம். இன்று ஷத்ரியர்கள் அல்லாத அத்தனை அரசர்களுக்கும் இருக்கும் நல்வாய்ப்பு அது.

ஷத்ரியர்களால் ஐந்தாவது வேதத்தை ஏற்றுக்கொள்ள இயலாது. பாஞ்சாலம் தவிர எந்நிலமும் ஐந்தாம் வேதத்தை முழுமையாக ஏற்றதென்று இன்றும் அறிவிக்கப்படவில்லை. எனில் அவ்வாறு அறிவித்தால் வேதம் அளிக்கும் இயல்பான முடியுரிமையை அவர்கள் இழந்தவர்கள் ஆவார்கள். ஐந்தாம் வேதத்தை மறுக்கவில்லை என்ற நிலைபாட்டை அன்றி வேறு எதையும் இன்று ஷத்ரியர்கள் ஏற்க இயலாது. ஐந்தாம் வேதத்தை ஏற்றுகொண்ட நாடுகள் தவிர வேறெந்த நாடும் ஓங்கவும் இயலாது. ஆகவே நாம் ஷத்ரிய அடையாளத்துடன் இல்லை என்பதும், நமது கோன்மை தொல்வேத நெறியால் அமைக்கப்பட்டதல்ல என்பதும் நமக்கு மிகப் பெரிய வாய்ப்பு.

நாம் செல்லுமிடமெல்லாம் உங்கள் தந்தையின் ஐந்தாம் வேதத்தை கையில் ஏந்திச் செல்வோம். படைகொண்டு செல்லும் எவரும் ஒரு கையில் வாளும் மறுகையில் சொல்லும் கொண்டிருக்கவேண்டும் என்பதை அறிக! ஐந்தாம் வேதத்தின் பொருட்டு படையெழுகை நடக்கும் என்றால் நமது நில விழைவையோ கோன்மை விழைவையோ குடி ஆணவத்தையோ முற்றாக மறைத்துவிட முடியும். அறத்தின் பொருட்டே, அழியாச் சொல்லின் பொருட்டே நாம் படைகொண்டெழுகிறோம் என்று வரலாற்றில் நிலைநிறுத்த முடியும். ஆம், நாம் இளைய யாதவரின் நகரை சேர்ந்தவர், அவர் மைந்தர் என்ற வகையில் அவர் சொல்லுக்காக திரள்வோம். அவர் சொல்வதை பாரதவர்ஷம் முழுக்க நிலைநிறுத்தும் பொறுப்பை அஸ்தினபுரியிடமிருந்து நாம் ஏற்றுக்கொள்வோம். அதன்பொருட்டு படைகொண்டு செல்வோம். அதன்பொருட்டு பாரதவர்ஷத்தை முற்றாக வெல்வோம்.

மைந்தரே, அதன் பின் உங்களுக்கு இந்த துவாரகை ஒரு பொருட்டா என்ன? இன்று இந்த அவையில் அறிவிக்கிறேன். தந்தையென, பாரதவர்ஷத்தின் பெரும்போர்வீரன் என நின்று இதை உங்களுக்கு சொல்கிறேன். நான் பாரதவர்ஷத்தை வென்று உங்களுக்கு அளிக்கும்வரை ஓயமாட்டேன். வென்றபின் வெல்லும் தென்னிலத்தை முழுக்க பிரத்யும்னன் ஆள்வான். வடபுலம் முழுக்கவே சாம்பனுக்கு உரியது. கிழக்கும் மேற்கும் அவ்வாறே இளைய யாதவரின் மைந்தரால் பங்கிடப்படும். இந்தத் தலைமுறை முடிவதற்குள் எண்பது பேரரசுகள் பாரதவர்ஷத்தில் உருவாகும். அவையனைத்தும் இளைய யாதவரின் ஐந்தாவது வேதத்தை நிலைநிறுத்துவதாக இங்கு அமையும். ஆம், எண்பது அரசுகள். எண்பது அரசக்கொடிவழிகள்! யயாதிக்குப் பின் மாபெரும் பிரஜாபதியென உங்கள் தந்தையே அறியப்படுவார்.

இந்த எண்பது அரசுகளில் எதுவும் வீழ்ச்சியடைய முடியாது. எண்பதும் தனித்தனியாக வளரும். ஆனால் ஒன்று தாக்கப்பட்டால் எண்பதில் பிற நாடுகள் வந்து உதவி செய்யும். இதற்கு இணையான அரசியல் கூட்டு இதற்கு முன்பு இங்கு உருவானதில்லை. இதற்கு இணையான ஒரு கோன்மை இங்கு நிலைபெற்றதில்லை. ஒருவேளை இவ்வண்ணம் நிலைபெற வேண்டும் என்பதற்காகவே ஐந்தாவது வேதம் இங்கு எழுந்ததோ என்று ஐயுறுகிறேன். நாம் இளைய யாதவரின் பெருங்கனவை நனவாக்கும் தருணம். அவரது சொல்லை நிலைநிறுத்தும் தருணம். நமது குடி பாரதவர்ஷம் முழுக்க நிறைந்து இது நம் நிலமென்று ஆகும் தருணம்.

மைந்தர்ளே, பாரதவர்ஷம் முழுக்க நிறைந்து பெருகவேண்டும் என்று விழையாத ஒரு குடியும் இங்கு இல்லை. ஒவ்வொரு குடி வேண்டுதலின் போதும் பூசகர் சொல்லும் வரிகளில் “எங்கும் நிறைக! பாரதவர்ஷமே ஆகுக!” என்னும் சொல் இல்லாமல் இருந்ததில்லை. அச்சொல்லை மெய்யாக்கும் வாய்ப்பு நமக்கு மட்டுமே கிடைக்கிறது. இத்தருணத்தில் உறுதி கொள்வோம். நாம் பாரதவர்ஷத்தை வெல்வோம். நம் மூதாதையர் அனைவருக்கும் இச்சொல்லை அளிப்போம். இங்கு நம்மிடம் இருக்கும் அனைத்து சொல் வேறுபாடுகளையும் மறப்போம், ஒருங்கிணைந்து எழுவோம். நமக்கு இளைய யாதவர் அளித்த அறைகூவல் இது. அவரே எண்ணி வியக்கும் அளவுக்கு அதை மேற்கொள்வோம். ஆம், அவ்வாறே ஆகுக!

தலைகுனிந்து வணங்கிய கிருதவர்மனை நோக்கி அனைவரும் திகைத்தவர்கள் என அமர்ந்திருந்தனர். சாத்யகி எழுந்து கிருதவர்மனை தழுவிக்கொண்டதும் வாழ்த்தொலிகள் பொங்கி எழுந்தன.

தந்தையே, அதன் பின்பு உணவுக்கலங்கள் வரத்தொடங்கின. ஒவ்வொருவரும் கலைந்து அவரவர்களுக்கு உரியவர்களுடன் உரையாடத்தொடங்கினார்கள். கூச்சலும் சிரிப்பும் அவையை நிறைத்திருந்தன. என் அருகே அமர்ந்திருந்த கணிகர் மெல்லிய குரலில் “எனக்கொரு ஐயம். இந்த அவையில் அதை எழுப்பலாமா என்று எனக்கு தெரியவில்லை. எவரேனும் அதை எழுப்பலாம்” என்றார். “என்ன?” என்று நான் கேட்டேன். “இல்லை, இந்த அரங்கின் உவகைக் கொண்டாட்டத்தை சற்று குறைக்கக் கூடியதாக அது இருக்கலாம். பிறிதொருமுறை கூட அதை பேசலாம்” என்றார்.

அவருடைய சூழ்ச்சியை நான் புரிந்துகொண்டேன். அத்தகைய ஒரு பெருங்கூச்சல் அரங்கில் கூச்சலிடும் சொற்களை எவரும் செவிகொள்வதில்லை. மெல்ல சொல்லும் சொற்களை நோக்கி செவிகள் வரும். அவர் எனக்காக அதை சொல்லவில்லை. அவர் அங்கே எதையும் சொல்லவேண்டியதில்லை என்று எனக்கு தோன்றியது. அவரை தவிர்க்க நான் விழைந்தேன். ஆனால் எனக்கு அப்பால் அமர்ந்திருந்த பிரஃபானு “என்ன அது? சொல்லுங்கள் கணிகரே, என்ன?” என்றார். நான் “இதை நாம் பிறகு பேசிக்கொள்வோம். இத்தருணத்தில் அல்ல” என்றேன்.

பிரஃபானு நான் தடுத்தமையாலேயே ஆர்வம் கொண்டார். மிக நுண்ணிய ஒன்று அங்கே எழுகிறது என எண்ணினார். எழுந்து கணிகர் அருகே வந்து “கூறுக, தங்கள் ஐயம் என்ன?” என்றார். “ஐயம் அல்ல. என்ன செய்வது என்பதைப்பற்றிய பேச்சு மட்டுமே” என்றார் கணிகர். “கூறுக!” என்று பிரஃபானு கேட்டார். கணிகர் அவரையே இலக்காக்கினார் என்று உணர்ந்தேன். அந்த அவையில் அவர் சொன்னதை கூறுவதினூடாக தனக்கு கிடைக்கவிருக்கும் ஒரு சிறு முதன்மையை ஒருபோதும் அவர் இழக்கப்போவதில்லை. சலிப்புடன் பீடத்தில் சாய்ந்துகொண்டு என்ன நிகழ்கிறது என்று பார்ப்போம் என்று நான் என்னை விடுவித்துக்கொண்டேன்.

கணிகர் அவரிடம் மெதுவாக பேச அவர் தலையசைத்தார். அவர் முகம் மாறியது. அவர் தலைவணங்கியபின் திரும்பி உணவுப்பீடத்தை கையால் தட்டினார். அனைவரும் திரும்பி அவரை பார்த்தனர். எழுந்து கைதூக்கி உரத்த குரலில் “அவையீரே, ஒரு சொல்! இளைய யாதவரின் மகனாக ஒரு சொல்! நான் இந்த அவையில் ஒரு சொல் உரைக்கவிருக்கிறேன்” என்றார். ஃபானு எரிச்சலுடன் “என்ன அது?” என்றார். அந்த எரிச்சலால் அவர் மேலும் கூர்கொண்டார். தான் சொல்வதை கேட்ட பின் ஃபானு நிறைவுறுவார் என எண்ணினார். “அதை இங்கு உரைக்கலாமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இங்கே அதற்கு ஒரு முடிவு கண்டுவிட்டால் மேற்கொண்டு செல்லலாம் என்று தோன்றுகிறது” என்றார்.

ஃபானு “கூறுக!” என்றார். அவை சொல்லவிந்து செவிகூர்ந்தது. ஆனால் கிருதவர்மன் அது ஒவ்வாத சொல்லின் தொடக்கம் என உள்ளுணர்ந்தார். எரிச்சல் வெளிப்படையாகவே தெரிய “மைந்தா, இங்கு ஒரு முடிவு எடுத்திருக்கிறோம். அம்முடிவை எவ்வண்ணம் நிலைநிறுத்தப் போகிறோம் என்பது குறித்த சூழ்ச்சியை தனி அவையில் பிறகு நடத்தலாம். இம்முடிவு மட்டுமே பொது அவைக்குரியது” என்றார். “ஆம், ஆனால்…” என்று அவர் தொடங்க “நீ கூறவிருப்பது அம்முடிவில் ஏதேனும் மாற்றோ விலக்கோ எனில் மட்டும் கூறுக! அதை நடைமுறைப்படுத்துவதன் இடர்களைக் குறித்தோ வாய்ப்புகளைக் குறித்தோ எனில் தனி அவையில் ஆகுக!” என்று கிருதவர்மன் மீண்டும் கூறினார்.

கிருதவர்மனின் கண்களில் இருந்த உணர்விலிருந்து அவர் கணிகரின் உள்ளத்தை தெரிந்துகொண்டார் என்று எனக்கு தோன்றியது. கணிகரை அவர் மதிக்கிறார். கூடவே அஞ்சுகிறார். ஓரளவு தெரிந்தும் இருக்கிறார். ஆனால் எவரும் அவரை முழுமையாக தெரிந்துகொள்ள இயலாது என நான் எண்ணிக்கொண்டேன். பிரஃபானு “நான் எண்ணுவதை இங்கு கூறியாகவேண்டும். இங்கேயே முடிவெடுக்கப்படவேண்டும். ஏனெனில் இங்கு முடிவெடுத்தால் மட்டுமே சில தெளிவுகள் கிடைக்கும். வேறு எங்காயினும் இந்தச் சொல்லாடல் நின்று நின்று செல்லும். எண்ணியிராத உணர்வுகளும் கருத்துகளும் எழுந்து வரும். இங்கெனில் அது மிக எளிதில் முடிந்துவிடும்” என்றார்.

“கூறுக!” என்று ஃபானு சொன்னார். நான் மூத்தவர் ஃபானுவின் முகத்தை பார்த்தேன். புன்னகைக்கவேண்டும்போல் இருந்தது. அது எளியோரின் உளப்பாங்கு, ஓர் ஆவல் எழுந்துவிட்டால் என்னதான் இழப்பு என்றாலும் அதை அறிந்தே ஆகவேண்டும் என விழைவார்கள். அரசர்கள் ஒன்றை செவிகொள்வதோ தவிர்ப்பதோ கூட தங்கள் அரசுசூழ்தலின் தேவைக்கேற்பவே. பிரஃபானு “நாம் விதர்ப்ப நாட்டு அரசர் ருக்மியை எப்போது எதிர்கொள்ளப்போகிறோம்?” என்றார். “இங்கு யாதவக் கூட்டமைப்பை குறித்தும் பாரதவர்ஷத்தை யாதவர்கள் வெல்வதைக் குறித்தும் பேசினோம். ருக்மி தன்னை ஷத்ரியர் என்று எண்ணிக்கொள்கிறார். ஷத்ரிய மேன்மைக்காக துவாரகை மேல் படைகொண்டு வந்து நம் எல்லைக்கப்பால் நின்றிருக்கிறார். அவரை எங்கு நிறுத்துவோம்?”

“அவர் நமது நட்பு நாடு” என்று கிருதவர்மன் கூறினார். “ஆம், ஆனால் அவர் நட்புகொண்டு வருவது தனது குருதியைச் சேர்ந்த பிரத்யும்னனிடமே ஒழிய அந்தகக் குருதி கொண்ட ஃபானுவிடம் அல்ல. மூத்தவர் ஃபானுவை அவர் ஏற்கிறாரா இல்லையா என்பதை நான் அறிந்தாகவேண்டும். ஃபானுவின் தலைமை கொள்ளும் இந்நிலத்திற்கு துணையரசாக அவர் திகழமுடியுமா என்று அறியவேண்டும். அதன் பின்னரே நாம் இந்த முடிவை எடுக்கமுடியும்” என்றார் பிரஃபானு. “அதற்கும் நம் முடிவுக்கும் என்ன தொடர்பு?” என்று கிருதவர்மன் கேட்டார். “அவரை பிரத்யும்னனால் மீறமுடியுமா? அவர் சொல்லை ஏற்று அன்னை ருக்மிணி ஆணையிட்டால் அவர் மைந்தர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் முதலில் இந்த அவையில் அதை அறிவிக்கட்டும்” என்று பிரஃபானு சொன்னார்.

“முதலில் நாம் ஃபானு நமது தலைவர் என்று அறிவிப்போம். அதன் பின்னர் முறையாக அவருக்கு முடிசூட்டு விழாவுக்கு அழைப்பு தெரிவிப்போம்” என்று கிருதவர்மன் கூறினார். “அதுவே முறை. ஆனால் அதற்கு அப்பால் ஒன்றிருக்கிறது, நமது எல்லையில் அவரது படைகள் இருக்கின்றன. நாம் முடிசூட்டுவிழா முடிவை எடுத்திருப்பதை அவருக்கு தெரிவிக்க வேண்டும். அவருக்கு அதற்கு உடன்பாடுள்ளதா என்று கேட்கவேண்டும்” என்றார் பிரஃபானு. “அவர் எளியவரல்ல. எண்பதின்மரும் சேர்ந்து ஃபானுவை அரசராக்கினால் முதல் எதிர்ப்பு தனக்கே வரும் என்று அவர் அறிந்திருப்பார். பாரதவர்ஷம் எங்கும் யாதவர்கள் எழுந்தால் விதர்ப்பமும் பிற ஷத்ரிய நாடுகளும் ஆற்றல் குன்றும் என்றும் யாதவர்களின் காலடியில் ஷத்ரியர்கள் அமர்ந்திருக்கும் காலம் வரும் என்றும் அவர் அறிந்திருப்பார்.”

“இதை ஏன் இங்கு பேசுகிறோம்? பேசிப் பேசி இதை ஏன் இங்கு வளர்க்கிறோம்?” என்று கிருதவர்மன் எரிச்சலுடன் சொன்னார். “எதையும் சழக்குப்பேச்சாக, பூசலாக ஆக்கும் பழக்கத்தை யாதவர்களாகிய நாம் என்று கைவிடப்போகிறோம்?” பிரஃபானு “நான் பேசுவது அரசுசூழ்கை” என்றார். கிருதவர்மன் “நோக்குக, அவருடைய குருதிமைந்தன் பிரத்யும்னன் இங்கிருக்கிறான். அவன்தான் தென்பாரதத்தை முழுவதும் ஆட்சி செய்யவிருக்கிறான்” என்றார். “ஆம். ஆனால் அவர் யாதவக்குருதியின் ஒரு பகுதியாக ஆட்சி செய்யவிருக்கிறார். ஷத்ரிய அரசராக அல்ல” என்று பிரஃபானு சொன்னார். “அதை அவர் ஏற்பாரா? நான் கேட்கவிழைவது அதையே.”

அவையில் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் பார்த்தனர். சிறுகுரல்களில் பேசத்தொடங்கினர். தான் ஒரு ஆழ்விளைவை உருவாக்கிவிட்டோம் என்னும் நிறைவை அடைந்த பிரஃபானு தன்னைத்தானே வியந்து மகிழ்ந்து புன்னகைத்து “ஒரு முடிவை எடுக்கவேண்டியது இன்றியமையாதது. இந்த அவையில் இந்த முடிவை நான் கூறுவதற்கு முதன்மையான அடிப்படை ஒன்றுள்ளது. இங்கு பிரத்யும்னன் இருக்கிறார். இங்கு யாதவ மைந்தர் நடுவே அவர் தன்னுடைய நிலைபாட்டை அறிவிக்கட்டும். அவர் ருக்மியை எவ்வாறு எதிர்கொள்வார்? ருக்மி ஷத்ரியர் என நிலைபாடு எடுத்து துவாரகைக்கு எதிராக நிலைகொள்வாரெனில் பிரத்யும்னன் ருக்மிக்கு எதிராக நம்முடன் நிற்பாரா? பிரத்யும்னன் நம்முடன் சேர்ந்து ருக்மிக்கு எதிராக என்றேனும் போர்புரிய ஒருக்கமாக இருப்பாரா?” என்றார்.

“ஆம், அது உண்மை” என்றார் குடித்தலைவரான கூர்மர். பிரஃபானு “அவ்வாறெனில் மட்டுமே நாம் ருக்மியுடன் பேசமுடியும். அவரை நமக்கு அடிபணிந்திருக்கச் செய்யமுடியும். அவருடைய படைகளை நமது எல்லையிலிருந்து அகற்றும்படி கோரமுடியும். எல்லையில் அவர் படை இருக்கும் வரை நாம் இங்கு முடிசூடுவது பொய்யாகவே ஆகும்” என்றார். கிருதவர்மன் “நாம் ஓர் அறிவிப்பை பாரதவர்ஷத்துக்கு வெளியிடுகிறோம். அதில் உடன்பாடும் எதிர்ப்பும் இருக்கும். உடன்பாடுகளை உரக்க சொல்ல சிலர் இருப்பார்கள். எதிர்ப்புகளை எவரும் உரக்க சொல்லமாட்டார்கள். எதிர்ப்புகள் புகைந்துகொண்டுதான் இருக்கும். நமது வெற்றியால் அவ்வெதிர்ப்புகளை இல்லாமல் ஆக்க முடியும். அதற்குமேல் எழும் எதிர்ப்புகளை மட்டுமே நாம் படைபலம் கொண்டு வெல்ல வேண்டியதிருக்கும்” என்றார்.

சாத்யகி “இன்றிருக்கும் சூழலில் ருக்மி நம்மை எதிர்க்கமாட்டார். ஒருங்கிணைந்த துவாரகையை எதிர்க்கும் ஆற்றல் அவருக்கு இல்லை. ஏனெனில் தேவையெனில் அஸ்தினபுரியின் படையை நாம் சேர்த்துகொள்ள முடியும் எனும்போது மொத்த பாரதவர்ஷமும் நம்முடன் இருப்பதாகவே பொருள். ருக்மி அதற்கு மாறாக எதுவும் செய்ய இன்று வாய்ப்பில்லை” என்றார். பிரஃபானு அது தன் நாள் என எண்ணிக்கொண்டார். உரக்க “வாய்ப்புகளைக்கொண்டு எண்ணவேண்டியதில்லை. நான் கோருவது ஒன்றே. இந்த அவையில் பிரத்யும்னன் கூறட்டும், அவர் எண்பதின்மருள் ஒருவராகவே நிலைகொள்வார் என்று. எந்நிலையிலும் அதுவே அவர் நிலை என்று. அதன் பிறகே அவருக்கு தன் மாதுலர் என்று. அதை கூறுவதற்கான ஒரு நல்வாய்ப்பல்லவா இந்த உண்டாட்டு? அதன் பிறகு ருக்மியை என்ன செய்வதென்று முடிவு செய்வோம்” என்றார்.

அதன்பின் ஒருவரும் ஒன்றும் சொல்ல இயலவில்லை. சில கணங்களில் அனைத்து ஓசைகளும் அடங்கி உண்டாட்டறை அமைதிகொண்டது. அனைவரும் பிரத்யும்னனை நோக்க, பிரத்யும்னன் தன் இளையவர்களை நோக்கினார். அவர் எழுவதற்குள் அநிருத்தன் எழுந்தான். அவன் எழுந்த அணியொலிகளும் ஆடையொலிகளும் கேட்டன. “இதில் எந்த ஐயமும் வேண்டியதில்லை. எந்தையின் பொருட்டு நான் இந்த அவையில் கூறுகிறேன், யாதவக் கூட்டமைப்பே எங்கள் முதன்மைத் தெரிவு. இளைய யாதவரின் மைந்தர், பெயர்மைந்தர் என்னும் நிலையிலேயே எப்போதும் நிலைகொள்வோம்” என்றான். அவையெங்கும் பெருமூச்சொலிகள் எழுந்தன. யாதவர்களை நன்கறிந்த நான் அவர்கள் ஏமாற்றம் அடைகிறார்கள் என்பதை புரிந்துகொண்டேன். அவர்கள் பூசலிட விழைகிறார்கள். தங்கள் காலடி நிலம் பற்றி எரிந்தாலும் பூசலைப்போல அவர்கள் களிப்பது பிறிதொன்றிலில்லை.

“பிதாமகர் ருக்மி நமக்கு முதன்மையானவரே. அவரிடம் நானே பேசுகிறேன், அவர் புரிந்துகொள்வார். எனக்கும் அவருக்கும் எப்போதும் நல்லுறவே இருந்துள்ளது” என்றான் அநிருத்தன். பிரஃபானு யாதவர்களின் உளநிலையில் தானும் இருந்தார். அது கீழிறங்கி அமைய அவர் விரும்பவில்லை. “நல்லுறவைப்பற்றி பிறகு பேசுவோம். இப்போது அறுதியாகக் கேட்கவிருக்கும் வினா இதுவே. முதன்மையாக எவரை கொள்வீர்கள்? ஷத்ரிய மைந்தர்கள் கூறுக!” என்றார். அநிருத்தன் “நாங்கள் முதன்மையாக யாதவர்கள்” என்றான். “இதை எந்தையின் மைந்தர், அன்னை ருக்மிணியின் மைந்தர் அனைவர் பொருட்டும் சொல்கிறேன்.” பிரத்யும்னனும் இளையோரும் கைதூக்கி அதை ஏற்றுக்கொண்டனர்.

அநிருத்தன் “நான் கிருதவர்மனின் சொற்களுடன் முழுமையாக உடன்படுகிறேன். யாதவக் கூட்டை ஏற்கிறேன். எந்நிலையிலும் அதற்கு நிலைகொள்வேன் என்றும், அதன்பொருட்டு எவரிடமும் போர்புரிவேன் என்றும், தேவையெனில் அதற்காக உயிர்கொடுப்பேன் என்றும், எனது தனி விழைவுகளையும் ஆணவத்தையும் ஒருபோதும் அந்தப் பொதுநோக்கத்திற்கு எதிராக வைக்கமாட்டேன் என்றும் ஆணைகூறுகிறேன்” என்றான். “ஆனால்…” என்று பிரஃபானு மீண்டும் தொடங்க “அறுதிச்சொல்லை அவன் கூறிவிட்டான். அதை திரித்து ஐயுற்று விவாதிக்க வேண்டியதில்லை” என்றார் கிருதவர்மன்.

“நன்று, என் ஐயம் என்னவென்றால்…” என அவர் மீண்டும் தொடங்க “அறிவிலி, இக்கணம் நீ அமரவில்லை என்றால் என் கையால் உன் தலையை துண்டிப்பேன்” என்று சாத்யகி வாளை உருவியபடி எழுந்தார். பிரஃபானு அதை எதிர்பார்க்கவில்லை. அவர் முகம் குழம்பிச்சுருங்கியது. உடல் நடுங்கத் தொடங்கியது. அவர் தன் உடன்பிறந்தார் அனைவரின் முன்னும் பேருருவாக எழுந்துவிட்டதாக எண்ணிக்கொண்டிருந்தார். எங்கே பிழை செய்தோம் என்று அவருக்கு புரியவில்லை. கால் தளர்ந்து அமர்ந்தார். நான் அவரிடம் “சொல்லை எடுப்பதில் அல்ல, நிறுத்துவதில்தான் நுண்ணறிவு உள்ளது” என்றேன். அவர் உதடுகளை அழுத்திக்கொண்டார். விழிகளில் நீர் நிறைந்திருந்தது.

ஃபானு “இது நம் அவைமுடிவு எனில் இச்செய்தியை நாம் முறையாக அவருக்கு அறிவிக்க வேண்டும். ருக்மிக்கு இங்கிருந்து ஒரு தூது செல்லட்டும்” என்றார். “அநிருத்தன் செல்லட்டும். அதுவே நன்று” என்று கிருதவர்மன் சொன்னார். கணிகர் “அவரும் அவருடைய குருதியை சார்ந்தவர். ஆகவே அணுக்கம் கூடும். அது நன்று” என்றார். “ஆனால் அணுக்கம் கூடுவதனால் சொல் பெருகும், சொல் பெருகும்போது முரண்பாடு பெருகும். குருதியைச் சேராத ஒருவர் செல்வதே முறையானது” என்றபோது அவர் ஒருகணம் என்னை பார்த்தார். ”என் தெரிவு பிரதிபானு செல்லலாம் என்பது.”

“ஏன்?” என்று சுஃபானு கேட்டார். “எற்கெனவே சாத்யகியை சந்திக்கவும் கிருதவர்மனை சந்திக்கவும் அவரே சென்றிருக்கிறார். வென்று வந்திருக்கிறார். அவர் இப்பொறுப்பையும் சிறப்பாக நிறைவேற்றுவார். அத்துடன் அவர்கள் இருவரையும் சந்திக்கச் சென்றவரே இவரையும் சந்திக்கச் சென்றார் என்பது அவருக்கும் மதிப்பை அளிப்பதாக அமையும். மூவரையும் இணையான இடத்தில் வைக்கிறோம் என்று காட்டும்” என்றார் கணிகர். ஃபானு “ஆம், அவ்வண்ணமே அவரிடம் தெரிவிக்கலாம்” என்றார். கணிகர் “சாத்யகிக்கும் கிருதவர்மனுக்கும் நிகராக ருக்மி நின்றிருப்பார் எனில் அவர் பெருவீரராகவும் வரலாற்றில் அறியப்படுவார். துவாரகை என்னும் பெருவிசை எழும்போது அவரது இடமென்ன என்பது அவ்வாறாக வகுக்கப்படுகிறது” என்றார்.

“சாத்யகிக்கும் கிருதவர்மனுக்கும் நிகராக குல மூதாதையின் இடம்” என்றார் கணிகர். “அவர் இங்கு துணையரசராக அல்ல, மூதாதையாகவே கணிக்கப்படுவார் என்பதை அதனூடாக அவருக்கு நாம் உணர்த்த முடியும். ஆகவே இளையவர் பிரதிபானு செல்வதே உகந்ததாக இருக்கும் என்று எண்ணுகிறேன்” என்றார். ஃபானு “ஆம், அவ்வாறே நானும் எண்ணுகிறேன்” என்றார். சுஃபானு என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். அவர் விழிகள் மாறுபட்டிருந்தன. முதன்முறையாக என்னை அவர் அஞ்சத் தொடங்கியிருக்கிறார் என்பதை அறிந்து நான் புன்னகையை உள்ளடக்கி முகத்தை இறுக வைத்துக்கொண்டேன்.

சுஃபானு “ஆம், ஆனால் ஒருவேளை கிருதவர்மனிடமும் சாத்யகியிடமும் இளையவன் என்னென்ன பேசினான் என்பதை அறிவதற்கு ருக்மி முயல்வாரெனில் அந்த முயற்சி வீணாகிவிடக்கூடும். பிறிதொரு இளையவனை அனுப்பலாம். சாம்பனின் இளையோரோ லக்ஷ்மணையன்னையின் மைந்தர்களோ யாராவது ஒருவர்” என்றார். “அல்ல, அவர்களின் சொல்திறன் இன்னும் நிறுவப்படவில்லை. பிரதிபானு நிகரற்ற சொல்வீரர் என்பது முற்றாக நிறுவப்பட்டு நாமனைவரும் அறிந்ததாக உள்ளது” என்றார் கணிகர். “ஆம், அவனே செல்லட்டும்” என்று ஃபானு சொன்னார். கிருதவர்மன் “ஆம், எனில் அவ்வாறே. அவரிடம் கூறுவதென்ன என்பது தெளிவாக அமைந்துவிட்டபிறகு சென்று பேசுபவர் தனியாகச் சொல்லாடுவதற்கு ஒன்றுமில்லை. பிரதிபானு சென்று அவரை சந்திக்கட்டும்” என்றார்.

முந்தைய கட்டுரைஓநாயின் மூக்கு [சிறுகதை]
அடுத்த கட்டுரைபத்துலட்சம் காலடிகள்,பெயர்நூறான் -கடிதங்கள்