நாளிரவு

பொற்கொன்றை!

இன்றைய மலர்

வான் அலை

நாற்புறமும் திறத்தல்

வீடுறைவு

தனிமைநாட்கள், தன்னெறிகள்.

கொரோனோவும் இலக்கியமும்

தனிமையின் புனைவுக் களியாட்டு

தினராத்ரம் என்று ஒரு மலையாளச் சொல்லாட்சி உண்டு வள்ளத்தோள் கவிதையிலிருந்து கசிந்து அரசியல் மேடைக்கு வந்து சீரழிந்து கிடக்கும் சொல். நாளிரவு என தமிழ்ப்படுத்தலாம். நாளும் இரவும். அல்லது புலரந்தி. அதுதான் இப்போது. ஒரு முழுநாளையும் இப்படி உள்ளங்கையில் வைத்துப் பார்க்க முன்பு நேரிட்டதில்லை.

இன்றைய தேவை என்பது நாட்களை எண்ணாமலிருப்பது. ஒவ்வொரு நாளும் காலையில் அன்றைப் பற்றிய எதிர்பார்ப்புடன் எழுவது. அதை செய்வது இந்த புலரியும் அந்தியும். இங்கிருந்து மானசீகமாக வெளியே செல்கிறேன் அதற்காகத்தான் கதைகள். வெவ்வேறு நிலங்கள், வெவ்வேறு காலகட்டங்கள், வெவ்வேறு மனிதர்கள். சிரிப்பு, துக்கம். முழு வாழ்க்கையும் அங்கே நிகழ்கிறது

வெளியே செல்வதற்கு புனைவைப்போல மிகச்சிறந்த வழி ஏதுமில்லை. உடல் வெளியே சென்றால் நிகழ்காலத்திற்குத்தானே செல்லமுடியும்? புனைவினூடாக வரலாற்றுக்கே செல்ல முடிகிறது எந்த முயற்சியும் இல்லாமலேயே அனைத்தும் குவிகின்றன. சொல்லப்போனால் புனைவு எழுதாமலிருக்கும் மனநிலையைத்தான் வரவழைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. பல நண்பர்கள் காணொளிகளில் வந்து பேசும்படி அழைக்கிறார்கள். நான் இருக்கும் புனைவுலகில் இருந்து அந்த யதார்த்த உலகுக்கு வருவது எரிச்சலூட்டுகிறதுகுக்கூ உரையாடலின் போது அதை தெளிவாகவே உணர்ந்தேன்.,

உண்மையில் இப்போது எப்படி இருக்கிறேனோ இப்படி பலநாட்கள் இருந்திருக்கிறேன். வெண்முரசின் பலநாவல்களை இப்படி நாளெல்லாம் அறைக்குள் கிடந்து எழுதியிருக்கிறேன். அந்தியில் ஒரு சிறு நடைக்கு மட்டுமே இந்த அறையிலிருந்து வெளியேறுவது. ஆனால் இப்போது வெளியே உலகமே அப்படித்தான் இருக்கிறது என்ற உணர்வு கூடுதலாக இருக்கிறது. அது விந்தையானது.

ஒவ்வொருநாளும் காலையில் இளஞ்சூரியனை பார்க்கிறேன். ஆறுமணிக்கு கையில் டீக்கோப்பையுடன் மேலே மொட்டைமாடியில் நிற்பேன். நேர்முன்னால் தென்னைகளுக்குப் பின்னாலிருந்து சூரியன் எழுவான். செந்நிற கதிர்கள் விரிந்து விரிந்து கண்கூசவைக்கும் ஒளியாகும். மஞ்சள் மலர்களில் தேன்சிட்டுகள் செறிந்திருக்கும். இத்தனை பறவைகள் முன்பு இருந்ததில்லை, உண்மையாகவே. இன்று காலை பச்சைக்கிளியைக்கூட பார்த்தேன்.

அதன்பின் எழுத அமர்கிறேன். முடிந்தால் இன்னொரு நல்ல டீ. வீட்டில் அருண்மொழியும் பிறரும் தூங்கி எழும் நேரம். அருண்மொழி இப்போதெல்லாம் இரவு ஒருமணி வரை வாசித்துக்கொண்டிருக்கிறாள். ஆகவே காலையை தவறவிடுகிறாள். ஆனால் என்னைப்போல பகலில் தூங்குவதில்லை.

பதினொருமணிக்குள் பெரும்பாலும் ஒரு சிறுகதையை எழுதிவிடுகிறேன். நீள்கதை என்றால் மேலும் தொடரும். பதினொரு மணிக்கு ஓரிரு தொலைபேசி அழைப்புக்கள். வந்த அழைப்புக்களை திரும்ப அழைப்பதுதான்.

கூடவே செடிகளுக்கு நீர் ஊற்றுதல். இங்கே நிலத்தடிநீரில் கொஞ்சம் சுண்ணச்சுவை. ஆகவே நீர்த்தூய்மை கருவி வைத்திருக்கிறோம். அது வெளியே கொட்டும் நீர் ஒரு அண்டாவில் சேகரமாகும். அதை பக்கெட்டுகளில் அள்ளி மரங்களுக்கும் செடிகளுக்கும் விடுவது. செம்பருத்தி முழுமையாகவே இலையுதிர்த்தபின் தளிர்த்து இன்று பிறந்ததுபோல நின்றுகொண்டிருக்கிறது. மஞ்சள்மரத்தில் மலர் ஓய்ந்து நான் பார்த்ததே இல்லைஇருபதாண்டுகளில் ஒருமுறைகூட.

இப்போது நல்ல கோடைகாலம். ஆனால் எங்களுக்கு ஏப்ரல் நடுவே, விஷுவை ஒட்டி, கோடை மழை உண்டு. ஓரிரு நல்ல மழைகள் வீசியறைந்துவிட்டன. ஆகவே சுற்றிலும் பசுமை ஒளி கொண்டிருக்கிறது. வானில் முகில்கள் நிறைந்திருப்பதனால் வெயில் இருந்தாலும் காற்று குளிர்ந்திருக்கிறது. அவ்வப்போது மழையிருள் சூழ்கிறது. மலைகள் நீலமாகின்றன

மதியம் சாப்பிட்டபின் ஒரு தூக்கம். இரண்டுமணிமுதல் நான்கரை மணிவரை. எழுந்து ஒரு வெண்முரசு அத்தியாயம் எழுதுகிறேன். ஆறரை மணிக்கு மீண்டும் வெளியே. கீழிருந்து மூன்றாம் நிலையின் மொட்டை மாடிவரை படியில் ஏறி இறங்கி மீண்டும் ஏறி நடைப்பயிற்சி. கூடவே ஃபோன் பேசுதல். ஒருமணி நேரம்.

அந்தி அணைவதை மறுபக்கம் பார்க்கிறேன். இப்போது வலப்பக்கம் சவேரியார் குன்றின் மேல் அந்திச்சூரியன் நின்றிருக்கிறது. இடப்பக்கம் யானைமலை புதைந்ததுபோல நின்று இருளில் அமிழும். சூரியன் அணைந்து மறைந்தபின்னர் ஒரு நிறைவு. பறவையொலிகள் மெல்ல ஓய்கின்றன.

வீட்டுக்கே காய்கறிகளையும் கீரையையும் கொண்டுவந்து தருகிறார்கள். இவர்கள் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து கொண்டுவந்து விற்பவர்கள். புதிய வணிகர்கள். பெரும்பாலும் இளைஞர்கள், அரசு அங்கீகரித்தவர்கள். ஆகவே சமூக இடைவெளி, முகமூடி எல்லாமே கச்சிதமாகப் பேணப்படுகின்றன.

என்ன ஆச்சரியமென்றால் காய்கறிகள் மலிவு. ஏனென்றால் நடுவே மொத்த வியாபாரி என்ற பகல்கொள்ளையன் இல்லை. இனி ஊரடங்கு முடிந்தபின் அவர்கள் உள்ளே வந்து இந்த பகிர்வுமுறையை அழிப்பார்கள் –உழவர் சந்தையை அழித்ததுபோல. விலை மீண்டும் ஏறும்

பகலெல்லாம் கீழே அஜிதனும் சைதன்யாவும் படிக்கிறார்கள், பாட்டு கேட்கிறார்கள். அவர்களின் உலகமே வேறு. அஜிதனும் சைதன்யாவும் சேந்ந்து யூட்யூப் பார்த்து சமைக்கிறார்கள். சமைக்கப்பட்ட ஏதாவது சிற்றுணவுடன் மேலே வந்து நாற்காலிகளில் மொட்டைமாடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம். நோய்த்தொற்றுச் செய்திகள் பேசுவதில்லை. வேடிக்கைகள், கதைகள், இலக்கியம்.

மீண்டும் சற்று எழுத்து. கொஞ்சம் வாசிப்பு. இரவு 12 மணிக்கு படுத்துவிடுகிறேன். என் படுக்கையறையின் எல்லா சன்னல்களையும் திறந்து வைத்திருக்கிறேன். ஒரு சன்னல்வழியாக நுழைந்து மறுசன்னல் வழியாக வெளியே செல்லலாம். ஆகவே சிட்டுக்குருவிகள் உள்ளே உலவிக்கொண்டிருக்கின்றன. அவை பறித்துக்கொண்டு போடும் கருவேப்பிலைகளால் படுக்கையறையில் ஒரு பசுந்தழை மணம். அது நன்றாகத்தான் இருக்கிறது, தூங்குவதற்கு இனிமேல் எனக்கு நாலைந்து கருவேப்பிலைகள் தேவைப்படலாம்

இரவில் என் படுக்கையில் படுத்தபடியே வானத்தின் விண்மீன்களைப் பார்க்கமுடியும். நிலவைக்கூட பார்க்கலாம். வெட்டவெளியில் படுத்து துயில்வதுபோல ஒரு நிறைவு. வீடு எவரை முழுதாக தளைக்க முடியும்?

ஓநாயின் மூக்கு [சிறுகதை]

வான்நெசவு [சிறுகதை]

பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

வான்கீழ் [சிறுகதை]

எழுகதிர் [சிறுகதை]

நகைமுகன் [சிறுகதை]

ஏகம் [சிறுகதை]

ஆட்டக்கதை [சிறுகதை]

குருவி [சிறுகதை]

சூழ்திரு [சிறுகதை]

லூப் [சிறுகதை]

அனலுக்குமேல் [சிறுகதை]

பெயர்நூறான் [சிறுகதை]

இடம் [சிறுகதை]

சுற்றுகள் [சிறுகதை]

பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

வேரில் திகழ்வது [சிறுகதை]

ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

தங்கத்தின் மணம் [சிறுகதை]

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

ஏதேன் [சிறுகதை]

மொழி [சிறுகதை]

ஆடகம் [சிறுகதை]

கோட்டை [சிறுகதை]

துளி [சிறுகதை]

விலங்கு [சிறுகதை]

வேட்டு [சிறுகதை]

அங்கி [சிறுகதை]

தவளையும் இளவரசனும் [சிறுகதை]

பூனை [சிறுகதை]

வருக்கை [சிறுகதை]

“ஆனையில்லா!” [சிறுகதை]

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

சக்தி ரூபேண! [சிறுகதை]

எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை

முந்தைய கட்டுரைமதுரம் [சிறுகதை]
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–39