பத்துலட்சம் காலடிகள், எழுகதிர் -கடிதங்கள்

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

இந்த கதைகளில் பலவகையான எழுத்துமுறைகள் உள்ளன. மாஜிக்கல்ரியலிச பாணி கதைகளான எழுகதிர், தங்கத்தின் மணம், விலங்கு போன்றவை. யதார்த்தமான அங்கதக்கதைகளான ஆனையில்லா, பூனை போன்றவை. உருவகத்தன்மை கொண்டவையான லூப் போன்றவை. இந்தக்கதைகள் எல்லாமே கதையை விட கவித்துவமான ஒரு தருணத்தையே அதிகமாக போகஸ் செய்கின்றன. திருப்பம் என்பதைவிட கவித்துவ தருணத்தை அடைந்துவிட்டால் நிறைவடைகின்றன.

இதில் வேறுபட்டிருக்கும் கதைகள் என்றால் வேட்டு, வேர்களில் திகழ்வது போன்ற கதைகள். அவை சிக்கலான கட்டமைப்பு கொண்டவை. அங்கே இங்கே திரும்பிச்செல்பவை. ஒருபக்கம் சரித்திரம். இன்னொருபக்கம் உண்மையான ஒரு வாழ்க்கைப்பிரச்சினை. இரண்டையும் இணைப்பது துப்பறிதல் என்னும் கதையோட்டம். சரித்திரத்தில் இருந்து ஒரு அழகான உருவகத்தை எடுத்து வாழ்க்கையில்போட்டு கதையை முடிக்கிறீர்கள்

அதற்கு மிகச்சிறந்த உதாரணமான கதை என்றால் இன்று வெளிவந்த பத்துலட்சம் காலடிகள். அதில் மூன்று சிக்கலான அமைப்புக்கள் உள்ளன. ஒன்று ஹாஜி அப்துல்லாவின் அமைப்பு. இன்னொன்று போலீஸின் அமைப்பு. மூன்று மாப்பிள்ளாக்களின் கட்டுமானம் என்ற அமைப்பு. மூன்று அமைப்பையும் ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஃபோகஸ் செய்து சரியாக பொருத்திவிட்டு கதை விலகிவிடுகிறது

கதை ஒரு அற்புதமான விளையாட்டாக இருக்கிறது. எங்கே போகிறதென்றே தெரியாமல் தொட்டுத்தொட்டு இணைத்துக்கொண்டே செல்கிறது. கதையைச் சொல்லும் ஔசேப்பச்சன் ப்ளாட்டாகச் சொல்லாமல் அவனே விளையாட்டும் நக்கலுமாகச் சொல்வதனால்தான் இந்த ஆட்டம் சுவாரசியமாக இருக்கிறது.

மூன்று அமைப்புக்களில் எதிலும் ஒரு பிழைகூட பெரியதாக ஆகிவிடும். அமைப்பு என்பதே பிழையில்லாமல் இருந்தால் மட்டுமே வேலைசெய்யக்கூடியது.

பல இடங்கள் சிரிப்பை வரவழைத்தன. ஆனால் ஒரு மார்த்தோமா கிறிஸ்தவரின் ஓய்வெடுத்தல் என்பது குடி, தீனி, கம்யுனிசத்தை கெட்டவார்த்தை சொல்லுதல் என்ற மூன்று அம்சங்கள் கொண்டது என்ற இடம் நினைத்து நினைத்து சிரிக்கவைத்தது. எனக்கு நாலைந்து கேரள கிறிஸ்தவ நண்பர்கள் உண்டு

எம்.ராஜேந்திரன்

***

தலைவரே..

அதிகாலைல கதையை வாசித்ததில் இருந்து இதுவரை மனக் கொந்தளிப்பு அடங்கவே இல்லை. எனக்கு அரசியல் ஈடுபாடு அறவே இல்லை என்றாலும் சூழல் காரணமாக ஆழத்தில் எங்கோ சிறிதளவு கசப்பு இஸ்லாமியர்கள் மீது இருந்தது. கொரேனா பரவல் காரணமாக அந்த கசப்பு சற்று அதிகரிக்கவே செய்தது. ஆனால் இன்று பத்துலட்சம் காலடிகள் கதையை வாசித்ததும் நான் எண்ணுவது மட்டுமல்ல, ஹாஜி எம். அப்துல்லா போன்ற மாமனிதர்கள் வாழ்ந்ததும், வாழ்ந்து கொண்டிருப்பதும் கூட சேர்ந்ததே இஸ்லாம் என்று உணர்தேன்.

ஆனால் இது எங்கள் நெறி. இதை யாரும் எந்நிலையிலும் மீறமுடியாது. நானேகூட மீறமுடியாது. மீறாமலிருக்கும்வரைத்தான் இதெல்லாம் இருக்கும்ஒரு சிறிய பிழைக்குக் கூட இங்கே இடமில்லை

மேற்கண்ட வரிகளை வாசித்ததும் ஏற்பட்ட அபாரமான மனஎழுச்சியை வார்த்தைகளில் எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. இடையே மனுநீதி சோழன் கதையும் நினைவிற்கு வந்தது..இந்த கதையின் இருந்து வெளியேவர சிறிது காலம் ஆகும். நன்றி

சதீஷ்

***

எழுகதிர் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

எழுகதிர் சிறுகதையை பற்றி எழுதவேண்டும் என நினைத்தேன். அதற்குள் பத்துலட்சம் காலடிகள். எழுதவேண்டும் என்றால் என்ணங்களை தொகுத்துக்கொள்ளவேண்டும். அதற்குள் வந்துகொண்டே இருக்கின்றன கதைகள், கடிதங்கள். ஒட்டுமொத்தமாக பிறகெப்போதாவதுதான் எழுதவேண்டும் என நினைக்கிறேன்

எழுகதிர் ஸ்ரீகண்டனின் தேடலை காட்டுகிறது. அவனுக்குள் இருந்து எழும் ‘ஓடு ஓடு’ என்ற விசையை. நான் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்மேனியாவில் ஒரு அமெரிக்கனை பார்த்தேன். என்ன செய்கிறாய் என்று கேட்டேன். கிடைத்த வேலையைச் செய்தபடி உலகமெங்கும் சுற்றுவதாகச் சொன்னான். ஷேர்மார்க்கெட்டில் கொஞ்சம் பணம் ஈட்டுவதுதான் அவனுக்கு வாழ்வாதாரம். இருபதாண்டுகளாக உலகம் முழுக்கச் சுற்றிக்கொண்டிருக்கிறான்.

அந்த வேகத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எதனால் இப்ப்டி அலைகிறாய் என்று கேட்டேன். உள்ளே ஏதோ ஒன்று உட்காரவிடவில்லை என்று சொன்னான். அப்படிப்பட்டவர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள். இன்றைக்கு மட்டும் அல்ல. கடந்தகாலங்களிலும் அப்படிப்பட்ட பயணிகள் இருந்துகொண்டேதான் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அலைந்து அலைந்துதான் உலகத்தை பதிவுசெய்திருக்கிறார்கள்.

அந்த உள்ளே இருந்து செலுத்தும் அந்த தூண்டுதலைத்தான் அந்த மணியாக உருவகம் செய்திருக்கிறீர்கள் என நினைக்கிறே

டி.ராஜ்குமார்

***

வணக்கம் ஜெ

எழுகதிர் சிறுகதையை வாசித்தேன். திருடர்கால் வாழ்வின் சாகசங்கள் நிறைந்த கதை. ஒவ்வொரு வரிகளும் கண்முன்னால் காட்சிகளாக விரிந்தன. ஸ்ரீ கண்டன் நாயரின் வலையில் கதைசொல்லி விழுகிறான். கோவிலில் உடலெங்கும் காயமடைந்து நாகத்திடமிருந்து தப்பித்த பெருச்சாளியைப் போல கதைசொல்லி ஸ்ரீ கண்டனிடம் தப்பித்திருக்கிறான். எது அப்படி அவனைக் காப்பாற்றியிருக்கிறது என்றெண்ணினால் கணம் தோன்றும் தந்தையின் கண்ணீர் நிறைந்த தோற்றம்தான் போலும்.

அரவின் குமார்

***

முந்தைய கட்டுரைவான்கீழ், குருவி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைபாப்பாவின் சொந்த யானை,சூழ்திரு -கடிதங்கள்