பாப்பாவின் சொந்த யானை, எழுகதிர் -கடிதங்கள்

பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

மகத்தான சிறுகதை என்று ஒன்றைச் சொல்வோம். சிலகதைகள் சொட்டு போல ஒளியுடன் இருக்கும். அப்படிப்பட்ட கதை பாப்பாவின் சொந்த யானை. ஜே.சைதன்யாவின் சிந்தனை மரபு கட்டுரைகளை படித்தவர்களுக்கு அந்த பாப்பாவின் முதல் முகம் எது என்பதில் சந்தேகம் இருக்காது. ஆனால் எனக்கு என் செல்லக்குட்டி மகள்தான். எல்லா மகள்களும் அடிப்படையில் ஒரே மாதிரித்தான். அதிலும் ஆனைப்பாகன் ரோல் கிடைத்த மறுகணமே அடிப்பதற்கு குச்சியுடன் வருவதெல்லாம் சிரித்துக்கொண்டே எழுந்து நின்றுவிட்டேன்

அருண்குமார்

***

அன்புள்ள ஜெ

பாப்பாவின் சொந்த யானை ஒரு அழகான கதை. அந்தக்கதையின் சிறப்பு என்னவென்றால் அந்தக்கதை அபூர்வமான ஒன்றைச் சொல்லவில்லை என்பதுதான். அத்தனைபேருக்கும் தெரிந்த ஒன்றையே அந்தக்கதை சொல்கிறது. அதை வாசிப்பவர்களில் 90 சதவீதம் பேருக்கு மகளிடம் அதேபோன்ற அனுபவம் இருக்கும்

பையன்கள் அப்பாக்களுடன் ஒரு நட்பு உறவைத்தான் ஆசைப்படுகிறார்கள். பெண்கள் வேறுமாதிரி. அவர்களுக்கு அப்பாக்களை முழுசாகவேண்டும். பொத்தி கையில் வைத்துக்கொள்ளவேண்டும். என் மகள் சின்னவயதில் என்னை ‘தாச்சுக்கோ’ சொல்லி படுக்கவைத்து தட்டித்தட்டி தூங்கவைப்பாள். என்னை ஒரு சின்னக்குழந்தையாக ஆக்க விரும்புகிறள் என்று தெரியும். சின்னப்பிள்ளையாக நான் ஆனால் அவள் அம்மாதானே. அம்மாவுக்கு மகன் சொந்தம்தானே?

பல வீடுகளில் இதேபோன்ற பட்டுக்குட்டிகள் இருக்கும். எல்லா குட்டிகளுக்கும் சமர்ப்பணமான கதை. கதைச் சொல்லி சொல்வதுபோல பாப்பா, அப்பாவை பத்திரமா வச்சுக்கோ, வெளியே விட்டுடாதே

எஸ்.மகாராஜ பிள்ளை

***

எழுகதிர் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

எழுகதிர் கதையை ஓர் இடைவெளிக்கு பிறகு மீண்டும் வாசித்தேன். ஏற்கனவே வாசித்த ஒரு கதை சூரியனைப் பற்றிக்கொள்ளுதல் நினைவுக்கு வந்தது. இது ஒரு மெட்டபர் ஆக உங்கள் மனதில் இருக்கிறது என நினைக்கிறேன். உள்ளிருந்து எழும் ஏதோ ஓர் உணர்ச்சி வலசைப்பறவை போல மனிதர்களை அலையச் செய்கிறது.

அந்த வைரம் அவனை கிழக்கே கொண்டுசெல்கிறது என்று சொல்லிவிடலாம்தான். ஆனால் அது ஏன் அப்படிச் செய்கிறது, அந்த வைரத்தின் இயல்புதான் என்ன என்றெல்லாம் யோசித்தால்தான் அது ஒரு அழகான மெட்டபர் என்று தோன்றியது. உள்ளிருந்து துரத்திக்கொண்டு செல்கிறது. உள்ளிருந்தே உந்துகிறது.

உள்ளிருந்தே உந்தும் எல்லா அடிப்படையான விசைகளுக்கும் அது குறியீடுதான். வலசைப்பறவையை அடைத்துவைக்க முடியாது. அதற்கு திசையிலிருந்து அழைப்பு வந்துகொண்டேதான் இருக்கும். ஸ்ரீகண்டன் அந்த அழைப்பை பெற்றுவிட்டவன்

கிருஷ்ணகுமார்

***

அன்புள்ள ஜெ

புனைவு களியாட்டு தொடங்கியதிலிருந்து நாளொரு வண்ணமென சிறுகதைகள் வந்த வண்ணம் உள்ளன.வெறுமே தங்கள் தளத்தை திறப்பதோடு நின்று விடுகிறேன். தொடர்ச்சியாக சிறுகதைகளை படித்து, விரித்து கொள்ளுமளவு என்னிடம் திறனில்லை என்றே தோன்றுகிறது. எனினும் ஏதேன், எழுகதிர் சிறுகதைகளை படித்தேன். ஏதேன் குறித்து எழுதமர்ந்து தாளில் சில வரிகள் கிறுக்கினேன். பின்பு ஏனோ எழுதமாலே நிறுத்திவிட்டேன். மீண்டும் வாசித்து எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.

எழுகதிர் வெளியான அன்று காலையில் ஒருமுறை வாசித்தேன். மாயம் போல இருந்தது. ஸ்ரீ கண்டன் எப்படி உயிர் பிழைத்தான் ? அருண பிந்து எங்கே போனது ? கதைசொல்லிக்கு அவன் மீதுள்ள பிரியம் ஏன் ? என்ற கேள்விகள் எழுந்து நின்றன.

அன்றிரவு இரண்டே முக்கால் மணிக்கு விழிப்பு தட்டியது.எழுந்தமர்ந்து கொண்டேன். ஊழ்கலாமென எண்ணி கண் மூடி அமர்ந்தேன். அதை ஊழ்கம் என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. எழுகதிர் காட்சிகளாக விரிய ஆரம்பித்தது. அந்நிகழ்வு முக்கால் மணிநேரம் நீடித்திருக்கிறது என்பதை கண் விழித்து கைப்பேசியை ஆன் செய்த போது அறிந்து கொண்டேன். கதைசொல்லியாகவே மாறி விட்டதை போல உணர்ந்தேன். தந்தையை கொல்ல பாயும் அவனது கோபம், தன்னை விட்டுவிடாது அழைத்து செல்லுமாறு கண்களில் நீர் கசிய ஸ்ரீயிடம் கெஞ்சுதலின் பாவனைகள் இயல்பாக உடலில் வெளிப்பட்டது. ஒருகணம் மெய் வாழ்வென மாறி போனது. கண் திறக்கையில் அறிந்து கொண்டேன் இலக்கியம் மெய்நிகர் வாழ்வை அளிக்குமென்று.

முன்பு எனக்கொரு சிறு சந்தேகம் இருந்தது. தங்களது உரைகளிலும் தங்களுக்கு வரும் கடிதங்களிலும் வெளிப்படும் இலக்கியம் மெய்நிகர் அனுபவத்தை அளிப்பது என்னும் கருத்தில் எனக்கு ஐயம் இருந்தது. குறிப்பாக ஒரு கடிதம். அக்கடிதத்தை எழுதியவர் பெயர் நினைவில்லை. ஆனால் அது ஈரோட்டில் என்று தான் நினைக்கிறேன். ஆசிரமம் ஊட்டியை போல குளிராக இருக்கும். எங்கள் ஆசிரமத்தில் கதைகளை படிப்பதற்கு முன்பாக அரைமணிநேரம் மௌனத்தை கடைப்பிடிப்பது வழக்கம். இதற்கு பின்பாக கதைகளை படிக்கும் போது கதாபாத்திரங்களுக்கு ஏற்படும் உணர்வுகளை நம்முள் உணரலாம். உதாரணமாக வயிற்றில் ஓர் மெல்லுணர்ச்சியை உணர்தல். என்ற பொருளில் கூறியிருந்தார். அப்போதெல்லாம் எனக்கு ஒரு ஐயம் இருந்தது. எழுத்திலிருந்து அப்படி நிகர் வாழ்வு உருவாகுமா என்று. எழுகதிர் வாசித்த பிறகு அப்படி ஐயம் இல்லை. இன்று என் அனுபவத்தில் இருந்து இலக்கியம் மெய்நிகர் வாழ்வை வழங்குமென்று உறுதியாக கூறுவேன்.

கதை குறித்து சிந்திக்கையில் நாவல் போல விரித்து எழுதமளவு செறிவு கொண்டது என்பதும், ஸ்ரீ கண்டனின் மீதான கதைசொல்லியின் ஈர்ப்பு, சுதந்திரத்தின், விடுதலையின் மீதான ஈர்ப்பு என அறிந்தேன். ஆரம்ப வாசகனாக என் அறிதல்களை உறுதிப்படுத்தி கொள்ள கடிதங்களுக்காக காத்திருந்தேன். நான் நினைத்தவையும் வந்திருந்தன. வெளிவரும் கடிதங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தை திறக்கின்றன.

நன்றி
சக்திவேல்

***

முந்தைய கட்டுரைவான்நெசவு,சூழ்திரு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைமதுரம் [சிறுகதை]