வான்நெசவு,சூழ்திரு- கடிதங்கள்

வான்நெசவு [சிறுகதை]

அன்புள்ள ஜெ வணக்கம்

புனைவுக்களியாட்டு கதைத் தொடரின் மற்றுமோர் மிக முக்கியமான படைப்பு இது.

ஒரு தனி மனிதனின் கனவும், உயர்ந்த லட்சியங்களும், நல்லெண்ணமும் ,எத்தனை கோடி இந்தியர்களின் கனவை வாழ்வை மேம்படுத்தி உள்ளது.

சொந்த வீடு கட்டுவதும் கார் வாங்குவதும் இந்திய கீழ் நடுத்தர குடும்பங்களுக்கு எளிதான ஒன்றல்ல, என் அப்பா பத்து வயதிலிருந்து உழைத்து வருகிறார் 50 ஆண்டுகள் ஓய்வின்றி உழைத்தும், அவருக்கென சொந்தமாக கையகல நிலம் இன்றுவரை இல்லை,20 ஆண்டுகள் பல்வேறு பணிகளை செய்து தொழில்களில் ஈடுபட்ட பின்பே ஒரு துண்டு நிலம் என்னால் வாங்க முடிந்தது,ஒரு பேசிக் மாடல் செகண்ட் ஹேண்ட் காரை முதல் முறை வாங்குவதற்குள் பட்ட பாடும் பின்பு அடைந்த பரவசங்களும் சொல்லில் அடங்காதது.

சாம் பிட்ரோடா

இன்று வரையுமே இந்தியாவில் பொருட்களின் உற்பத்தி சார்ந்த, தொழில் துறையும் ஏற்றுமதியும் பெரிதாக இல்லை, விவசாய துறையை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. சிவகாசியும், திருப்பூரும், போன்று சில நகரங்கள் பிரத்தியேக தொழில்களின் காரணமாக சில லட்சம் மக்களுக்கு வாழ்வளித்தது உண்மை, ஆனால் நாடு தழுவிய அளவில் இந்திய பொருளாதாரத்தில் ஓரிரு தசாப்தங்களில் அசுரப் பாய்ச்சல் நிகழ்ந்ததன் பின்னணியில் தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளதை இன்றளவும் இந்திய பொருளாதாரத்தில் முக்கியமான கன்னியாக திகழ்வதை யாரும் மறுக்க முடியாது.

இந்தியர்களின் விதியை சமைத்த “சாம் பிட்ரோடா “அவர்களின் பெருங்கனவின்,  ஊடு பாவுகள் தான் குமரேசனை போன்ற கோடிக்கணக்கானோர், நாராயண மூர்த்திகளும் அசீம் பிரேம்ஜி களும் ஷிவ் நாடார்களும், அடைந்தது ஒருவகை உயரம். எனினும் இந்த நெசவின் நாடாக்கள்(shuttle) குமரேசனை போன்றோரே, ஒவ்வொரு பின்னலுக்கு பின்னாலும் இவர்களின் ரத்தமும் வியர்வையும் உண்டு.

32 ஆண்டுகால வெற்றிகரமான இல்லறத்திற்கு பின் ஆரம்பித்த அதே இடத்திற்கு வருகிறார்கள் குமரேசனும் ராஜம்மையும்.

ராஜம்மையை நாயே சனியனே என்று திட்டும் இடம் அழகு, அவளும் அவரின் ஊனத்தை செல்லமாக சாடுகிறார்,ஆண்டுகள் செல்லச் செல்ல அன்பு வெளிப்படும், பரிமாறும், வழிகள் மாறுகின்றன, திட்டுவதும் சண்டையிடுவதும் கூட ஒருவகை உறவு கொள்ளல் தான்.

இந்தியர்களின் தலையெழுத்தையே மாற்றிய ஒரு துறை இப்போது கைவிடப்பட்டு, துருப்பிடித்து, மட்கி அழிந்து கொண்டிருப்பதன் சித்திரமும் இக்கதையில்  இருக்கிறது, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பணியாற்றிய இடத்தில் எதற்கும் உதவாத குடிகாரன் இருக்கிறான், ஒரு குடும்பம் போல் தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து செய்த வேலையை இப்போது ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்கின்றனர், நேருவின் நவரத்தினங்களுக்கும் இதுதான் நிகழ்ந்தது.

தேவை இருக்கும் வரை ஒன்று வாழும், மனித அகம் சார்ந்த தேவைகள் தஞ்சாவூர் கோபுரம் போல ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் நிற்கிறது, சில ஆண்டுகளில் டவர்கள் அழிகிறது.எவ்வளவு உயர்ந்த நோக்கமும் காலத்தின் முன் சிதைவது தான் இயல்போ?

ஒவ்வொரு கனவிற்கும் உற்பத்தி தேதியும். உபயோகத்திலிருக்கும் நாட்களும், காலாவதி தேதியோடும்தான் மனதினுள் எழ தெய்வங்கள் அனுமதிக்கின்றனவா? மானிடர்க்கு அமுது அளிக்கப்படவில்லையோ?

காலமெனும் ஸ்ட்ரைக்கரால், சிதறடிக்கப்படும் காய்கள் நாம், ஒன்று குழியில் வீழும், ஒன்று சிறிது காலம் வாழும்,  காலம் என்னும் ஸ்ட்ரைக்கர் சிலருக்கு சில நேரங்களில் வசப்படுகிறது, எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் அல்ல…

கதிர் முருகன்

கோவை

***

அன்புமிக்கநண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம் நலம்தானே

வான்நெசவு படித்தேன் வான்கீழ் கதையின் தொடர்ச்சி அருமையாக வந்துள்ளது. நவீன இலக்கியத்தில் முதியோர் காதல்குறித்து யாருமே எழுதவில்ல. மரபில் கூட பாரதிதாசன் தான் எழுதி உள்ளார்.முதியபருவத்தில் காதல் என்பதன் அருமை அனுபவித்தவர்களுக்குதான் தெரியும்.

குமரேசனும் ராஜம்மையும் முதியபருவத்தில் இப்பொழுதுதான் அடியெடுத்து வைத்துள்ளார்கள். எதிர்பாராமல் காலம் அவர்களை அந்த டவர் இருந்த இடத்திற்கே கொண்டுவந்து சேர்க்கிறது. காலம் ஒரு கேரம் போர்டு ஸ்ட்ரைக்கர் என்பது புதிய உவமை. பெரும்பாலும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்களுக்குத் தாங்கள் முதல் முதல் காதலைத் தெரிவித்த இடத்தைப் பார்ப்பது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி தரும்

அந்த இடத்திற்கு வந்தவுடனேயே குமரேசனுக்கு ஏற்படும் மாற்றம் கதையில் நன்கு படம்பிடிக்கப்பட்டுள்ளது. மேலே போனதும் சின்னப்பொண்ணா ஆயிடுவே என்பதும் அந்த எண்ணஓட்டம்தான். வயதான அவர்களால் அதுவும் மாற்றுத்திறனாளியான அவனால் நிச்சயம் ஏறமுடியாது என்பதால் லிப்ட்டைத் தாங்கள் பயன்படுத்தி இருக்கும் உத்தி கதையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது. முடிந்த ஒரு சிறுகதையை முப்பத்தி ரண்டு வருஷம் கழித்து மீண்டும் தொடர்வது ஒரு சவால். தாங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.

வளவ. துரையன்

***

சூழ்திரு [சிறுகதை]

அன்புநிறை ஜெ,

லூப், சூழ்திரு கதையைப் பற்றி இன்றிரவு நண்பர் குழுவுடன் பேசிக் கொண்டிருந்தோம். மிக நிறைவான கலந்துரையாடல்.

ஒரு சொல் குறித்த சிறு சந்தேகம்.

சூழ்திரு கதையில் வங்கம் என்று குத்துப்போணியை சொல்வது வருகிறது. நானும் இதைக் கேட்டிருக்கிறேன். வங்கம், கலம் (vessels) என்னும் சொற்கள் கப்பல்களையும் பாத்திரங்களையும் குறிப்பதன் தொடர்பு என்ன? வடிவ ஒற்றுமை கருதியா?

மிக்க அன்புடன்,
சுபா.

***

அன்புள்ள சுபா

வங்கம் என்றால் வளைவானது என்று நேர்பொருள்

அந்த அர்த்ததில்தான் வங்கம் என்று படகுகள், கப்பல்கள் சொல்லப்பட்டன.

வளைவான வாய் கொண்ட பித்தளையால் ஆன கனமான கோப்பைக்கு வங்கம் என்று பெயர்

ஜெ

***

அன்புள்ள ஜெ

சூழ்திரு கதையை நானும் குடும்பத்தினரும் அமர்ந்து படித்தோம். கரோனா காலம் இல்லாவிட்டால் இது நடந்திருக்காது. மிக எளிமையான கதை. நஸ்டால்ஜியா வகையானது. ஆனால் வெறும் நஸ்டால்ஜியா அல்ல. அது மையமாக ஒரு பெரிய தரிசனத்தை வைத்திருக்கிறது. நேரடியாக அதைநோக்கியே செல்கிறது. முதல் வரியிலிருந்து சுவை என்பதையே சொல்லிச் செல்கிறது

சென்ற இருபதாண்டுகளாகவே ‘நேரடியான எளிமையான ஆழம்’ என்பது சிறுகதையில் இல்லாமலாகிவிட்டதோ என்று எனக்கு தோன்றுவதுண்டு. உலகம் முழுக்க அத்தகைய கதைகள் திரும்ப வந்துவிட்டன. நாம் சிற்றிதழ்ச்சூழலில் சிக்கலாக எழுதியே மொழியை இழந்துவிட்டோம். அதைவிட சொல்வதற்கு டீடெயில்கள் இல்லாததனால் உணர்வுகளையும் எண்ணங்களையும் மட்டுமே வைத்து எழுதுகிறோம். இதெல்லாம் என் மனப்பதிவுதான். இந்தக்கதை அதைப் போக்கிவிட்டது

இதற்குப்பிறகுதான் பிரதமன் படித்தேன். அது இன்னொருவகையான மாஸ்டர்பீஸ். இதற்கு முன்னாடி படிக்கவேண்டியது

அதுசரி, கரடிநாயரின் மகனுக்கு கவிதையில் ருசி இருக்கிறது. டிரெஸ்ஸில் ருசி மகாமட்டம் என்று தெரிகிறது. என் மனைவிக்கும் அதே அபிப்பிராயம்தான்

சரவணக்குமார்

***

முந்தைய கட்டுரைபத்துலட்சம் காலடிகள்,பெயர்நூறான் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைபாப்பாவின் சொந்த யானை, எழுகதிர் -கடிதங்கள்