பாப்பாவின் சொந்த யானை,சூழ்திரு -கடிதங்கள்

பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

இந்த கொரோனா காலக் கதைகளில் பலவகையான படைப்புக்கள் வந்துகொண்டிருக்கின்றன. மிகச்சிக்கலான வடிவமைப்பும் உருவகத்தன்மையும் கொணடது பத்துலட்சம் காலடிகள். ஆனால் எனக்கு அதே அளவுக்கோ இன்னும் கொஞ்சம அழமாகவோ பிடித்தமானதாக இருப்பது பாப்பாவின் சொந்த யானை போன்ற ஒரு கதைதான். அதில் மிகமிக மென்மையாகத் தீட்டிக்காட்டப்படும் வாழ்க்கைச் சித்திரத்தை ஒரு மாஸ்டர் டச் என்று சொல்வேன். மிகப்பெரிய ஓவியனின் பென்ஸில் ஸ்கெச் போன்றது அது.

பாப்பாவின் குணாதிசயம் அதில் அற்புதமாக வந்திருக்கிறது. அவள் சின்னக்குழந்தை. ஆனால் தனக்கென்று ஒரு பிரைவேட் உலகத்தை வைத்திருக்கிறாள். அவள் எல்லாவற்றையும் கண்டு பயப்படுகிறாள். மலையன் வேஷமிட்டு தமையன் வரும்போது அலறுகிறாள். ஆனால் காலை தொட்டு வணங்க முடியாது என்று மறுத்துவிடுகிறாள். அப்போது அவளுக்கு அது மலையன் அல்ல, அண்ணாதான் என்று தெரியும்

அப்பாவை சின்ன வண்டாக மாற்றி டப்பியில் அடைத்து தன் அந்தரங்க உலகில் கொண்டு அடைத்துவைத்துவிடும் செல்லப்பாப்பா ஃபெமினைன் ப்யூட்டி என்று சொல்வோமே அதன் ஒரு உச்ச வடிவம். பாப்பாவுக்கு முத்தங்கள்

செல்வக்குமார்

***

அன்புள்ள ஜெ

பாப்பாவின் சொந்த யானை அந்தப் படமும் அருமை. படத்தை பிடித்தபிறகு எழுதுகிறீர்களா என்ன?

இந்த வரிசையில் மென்மையான இனிமை கொண்ட கதைகள் இவை. பெயர்நூறான் இதே மாதிரியான கதை. நுட்பமான அழகான கதை. ஆனால் வெறும் உரையாடல்கள் வழியாகவே செல்கிறது. பாப்பாவின் குணச்சித்திரம் அவள் பேசும் வார்த்தைகள் வழியாகவே வருகிறது. அவள் பிஸ்கட் கொடுக்கும் கனிவுடன் இருக்கிறாள்

ஜெ, இதில் நான் கவனித்த ஒன்று. அவளுடைய பிரைவஸி. இதை நானே என் குழந்தைகளிடம் கவனித்திருக்கிறேன். சின்னக்குழந்தையாக இருக்கும்போதே அவர்கள் இந்த பிரைவஸியை உருவாக்கிக் கொள்கிறார்கள். அவள் அப்பாவின் காதில் பரமரகசியமாக சொல்லமாட்டேன் என்று சொல்லும்போது சிரித்துவிட்டேன்

மகாதேவன்

***

 

சூழ்திரு [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

சூழ்திரு ஓர் அழகான கதை. அதிலும் இப்படி உலகத்தையே வெளியே விட்டு கதவைச் சாத்திக்கொண்டு வாழும் சூழ்நிலையில் எண்ணி எண்ணி மகிழவேண்டிய கதை. இதுவரை வாழ்ந்தோமா? சுவையாக வரும் தெய்வத்தை அறிந்தோமா? இல்லை. கடமைகள் இருந்தன. பல இலட்சியங்கள். எல்லாவற்றுக்கும் பின்னால் ஓடிக்கொண்டிருந்தோம். சட்டென்று கதவு மூடியபோதுதான் எதையெல்லாம் இழந்திருக்கிறோம் என்று உணர்ந்துகொண்டோம்

சூழ்திரு சொல்கிறது, திருமகளாக பெருமாள் சூழ்ந்திருக்கிறார். அனுபவிக்காமல் கண்ணைமூடிக்கொண்டிருந்தாயே என்று

எஸ்.கண்ணன்

***

அன்புள்ள ஜெ,

நலம், என்றும் நலமறிய ஆவல்.

என்ன ஒரு கலை ரசனை வாழ்வியல் அந்தக் கால கட்டத்தில். திருமண அழைப்பிதழில் இன்னார் சமையல் என அறிந்து அனந்தனின் அப்பாதான் தன் நண்பர்களிடம் எவ்வளவு சிலாகித்துப் பேசுகிறார். அவ்வளவு ரசனைக்காரரான அப்பா அனந்தனிடம் கண்டிப்புடனேயே இருக்கிறார். அனந்தன் அப்பாவுடன் திருமணத்திற்குத் தயாராகிச் செல்வதற்கு உடனே சம்மதம் தெரிவிக்காமல்தான் இருக்கிறார். அனந்தனின் ஆர்வம் எவ்வளவு தூரம் என்பதை அறிந்துகொள்ளும் சோதனையாக இருக்குமோ?

அவருக்குப் பிடித்த ராகத்தை வாசிக்க சொல்லி நாயனக்காரரிடம் சொல்வதாகட்டும், அப்பாவுக்கு புடிக்குமென மஹாலக்ஷ்மி அம்மாவிடமிருந்து லட்டு வாங்கிக்கொடுப்பதாகட்டும், சாப்பிட்ட உணவை சொல்லச்சொல்லி பேசுவதாகட்டும், அப்பா உணவை எடுத்துச் சாப்பிடும் வரிசையில் அனந்தன் சாப்பிட கற்றுக்கொள்வதாகட்டும் அடுத்த தலைப்புமுறைக்கு அந்த ரசனை எடுத்துச் சொல்லப்படுகிற சந்தோசம் தான். மிகச்சிறப்பு.

திருமண உணவுப் பந்தியில் எவ்வளவு உணவு வகைகளை சமைத்து பரிமாறினார்கள். அடேங்கப்பா! எந்த உணவை எந்த வரிசையில் இலையில் வைப்பது, எந்த சாதஉணவை எந்தந்த கூட்டு, பொரியலோடுச் சேர்த்து சாப்பிடுவது என மிகப் பெரிய விசயத்தைக் கற்றுகொடுத்திருக்கிறீர்கள் எங்களுக்கு. குறிப்பு எடுத்து வைத்துக் கொள்கிறேன். மிக்க நன்றி.

கடைசியாக பந்தல்காரனையும் பார்த்துவிட்டுச் செல்லலாமென அனந்தன் அப்பா சொல்வது, என்ன ரசனையான மனிதரென, எவ்வளவுச் சிறப்பான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறாரென வியப்பாக உள்ளது.

இந்த மாதிரியான கலை ரசனை குறைந்து, மறைந்துப் போனதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்? இதை மீட்டெடுக்க என்ன வழியென தங்கள் கருத்தைப் பதிவுச் செய்தால் பெரும் உதவியாக இருக்கும்.

என்றும் மாறா அன்புடன்,

முத்து காளிமுத்து

***

முந்தைய கட்டுரைபத்துலட்சம் காலடிகள், எழுகதிர் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஓநாயின் மூக்கு [சிறுகதை]