கைமுக்கு [சிறுகதை]

குமரகம் அஸ்வதி கிளப்பில் அத்தனைபேரும் வந்தபிறகுதான் ஔசேப்பச்சன் வந்தான். வழக்கமாக அவன் முதலிலேயே வந்து அமர்ந்து அத்தனை குடிப்பொருட்களையும் எடுத்து பரப்பி வைத்துக்கொண்டு பொறுமையிழந்து அமர்ந்து வருபவர் ஒவ்வொருவரையாக கெட்டவார்த்தை சொல்வான். பொதுவாக ஔசேப்பச்சனின் கெட்டவார்த்தைகள் விசேஷமான அழகுடன் இருக்கும். உதாரணமாக கொந்தைக்குப் பிறந்தவனே என்றால் கத்தோலிக்க பாதிரியாரின் மைந்தன் என்று பொருள். கொந்தை என்றால் மரச்சிலுவை.

நான் அதைப்பற்றிச் சொன்னபோது ஸ்ரீதரன் “என்னை அவன் ‘கைமுக்குக்குப் பிறந்தவனே’ என்றான். “திருவிந்தாங்கூர் நாயர்களை ஒட்டுமொத்தமாக அவமதிக்கும் வரி இது” என்றான்.

எலி “நீ இதற்கு எதிராக ஒரு கண்டனக் கட்டுரை எழுதலாமே” என்றான். “நாலுபேர் இதைப்பற்றி தெரிந்துகொண்டால் நல்லது அல்லவா?”

“ஆனால் கவிதைதான் சிறந்தது” என்று குமாரன் மாஸ்டர் சொன்னார். “சச்சிதானந்தன் பாணியில் நாலைந்து பக்கம் எழுதவேண்டும்…”

“ஆனால் ‘கைமுக்குக்குப் பிறந்தவனே’ என்றால் என்ன அர்த்தம்? பரம ஆபாசமாக இருக்கிறதே? நடுத்திருவிதாங்கூர் மார்த்தோமாக்காரர்களை கட்டுப்படுத்த கேரளத்தில் சட்ட ஒழுங்கு அமைப்பே இல்லையா?” என்றான் ஸ்ரீதரன்

“ஸ்ரீதரா, நாயர் சர்வீஸ் சொசைட்டியின் கரையோகம் தலைவரான தறையில் கேசவபிள்ளையின் மகனாகிய உன்னால் கேரள வரலாற்றை ஞாபகம் வைத்திருக்க முடியாது என்பது சின்னப்பிள்ளைகளுக்கும் தெரியும்” என்றார் குமாரன் மாஸ்டர் “ஆனால் கேரள வரலாற்றை உணர்ந்தவர்களால் அத்தனை ஆபாசமாக அதை எடுத்துக்கொள்ள முடியாது”

“ஏன்,அவர்கள் ஆபாசத்திற்கு பழகிவிட்டிருப்பார்களா?” என்றான் ஸ்ரீதரன்.

“கேளடா மரக்கழுதை… முன்பெல்லாம் நம்பூதிரிகளில் ஒழுக்கநெறி மீறியவர்களை பிடித்தால்….”

“மீறாத யாராவது இருந்திருக்கிறார்களா?” என்றான் ஸ்ரீதரன் ஆர்வமாக “அத்தனை வாய்ப்புகளும் இருக்கையில் அப்படி இருந்திருந்தால் அவர்களின் பிரச்சினை உடல்குறைபாடுதானே?”

“பிடிபடாதவர்கள் நிறையபேர் இருந்திருக்கிறார்கள், அவர்களைத்தான் ஒழுக்கமானவர்கள் என்கிறார்கள்” என்றார் குமாரன் மாஸ்டர் “பிடிபட்ட நம்பூதிரி தன் நேர்மையை நிரூபிக்கவேண்டும். அதற்கு ஒரு விசாரணை முறை உண்டுபண்ணப்பட்டிருந்தது. அவர் கொதிக்கக் காய்ச்சிய தூய பசுநெய் இருக்கும் குடத்திற்குள் தன் வலது கையை விடவேண்டும். உள்ளே கிடக்கும் ஒரு சுட்டுவிரல் அளவுக்குச் சிறிய வெண்கல அனுமன் சிலையை வெளியே எடுக்கவேண்டும். கை வெந்தால் அவர் குற்றவாளி. மாசுமருவில்லாமல் இருந்தால் அவர் நிரபராதி.”

“மகத்தான வழிமுறை!” என்றான் எலி. எச்சில் உறிஞ்சி “நெய்யில் பொரிக்கப்பட்ட கையின் மணம்! ஆகா!”

“மிக எளிமையானதும், பாரபட்சமில்லாததும், தெய்வத்திற்கு பங்களிப்பாற்ற ஒரு வாய்ப்பு அளிப்பதுமான ஒரு புலனாய்வுமுறை. யாரோ திருவிதாங்கூர் நாயர்தான் அந்த முறையை உருவாக்கியிருக்கவேண்டும் என்பது ஔசேப்பச்சனின் உறுதியான நம்பிக்கை. வேறு எவருக்கும் அந்த அளவுக்கு அறிவுத்திறன் இருக்க வாய்ப்பில்லை என்று ஔசேப்பச்சன் நினைக்கிறான்” என்றார் குமாரன் மாஸ்டர்.

“இதன் கதை என்ன?” என்று நான் கேட்டேன்.

“இப்படி கொதிக்கும் நெய்யில் கைவிடுவது கைமுக்குச் சடங்கு எனப்பட்டது. 1845-ல் கடைசியாக சுசீந்திரம் கோயிலில் கைமுக்குச் சோதனை நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதற்காக பிடித்துக் கொண்டுவரப்பட்ட ஒரு நம்பூதிரி சோதனைக்கு அழைத்து வரப்படும்போது திமிறி தப்பி ஓடி கோபுரத்தின்மேல் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். மகாராஜா சுவாதித்திருநாள் அதன்பின் கைமுக்கை தடைசெய்து அரசாணை பிறப்பித்தார். அருமையான ஒரு பண்பாட்டு வழக்கம் ஈஸ்வர நம்பிக்கை இல்லாத ஒரு அசட்டு நம்பூதிரியால் அவ்வாறாக முடிவுக்கு வந்தது” குமாரன் மாஸ்டர் சொன்னார்.

“சிறப்பு!” என்று நான் சொன்னேன். “அந்த நம்பூதிரி ஒரு அற்புதமான பிரம்மஹத்தியாக மாறியிருப்பார்.”

“முன்னோர் ஒன்றும் மூடர்கள் அல்ல தரப்பினர் சுசீந்திரத்தில் மட்டுமல்ல நாட்டில் உள்ள அத்தனை கோயில்களிலும் கைமுக்கை கொண்டுவரலாம்” என்று ஸ்ரீதரன் அபிப்பிராயப்பட்டான்.

“ஆமாம், இந்த புண்ணிய பாரத நாட்டை ஆளும் புனித ஃப்யூரர், அவரே கூட கையை விட்டு காட்டலாம்” என்றார் குமாரன் மாஸ்டர்.

“ஆனால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஏன் கையை விடவேண்டும்?” என்றான் ஸ்ரீதரன்.

“மடையா, இது நம்பூதிரிகளுக்கான தண்டனை. நாயர்களுக்கு என்றால் நீ நினைப்பதுபோல செய்யலாம்” என்றான் எலி.

“நம் அருமை ஃப்யூரரின் நாக்கை விடவேண்டியிருக்கும்” என்றார் குமாரன் மாஸ்டர். “ஹெய்ல் ஃப்யூரர்!”

அப்போது ஆர்ப்பாட்டமாக ஔசேப்பச்சன் உள்ளே வந்தான். வந்ததுமே “ஒரு சாவுச்சடங்குக்கு போனேன். என் சொந்த தாய்மாமன். நல்லவர்தான், ஆனால் மார்த்தோமாக்காரர்கள் நல்லவர்களாக இருந்தாலும் அப்படி வெளிப்படுவது கடினம்” என்றான்.

“அவர்கள் நியாயத்தீர்ப்பு நாளில் வெளிப்படுவார்கள்” என்று குமாரன் மாஸ்டர் சொன்னார். “ஆனால் மார்த்தோமாக்காரர்களின் பாவங்களை கணக்கிட ஒரு நாள் போதுமா?”

ஔசேப்பச்சன் அமர்ந்துகொண்டு “அடடாடா, இசைக்கருவிகள் சுருதி பிடிக்கப்பட்டிருக்கின்றனவே” என்றான் கைகளை உரசிக்கொண்டு கட்டைக்குரலில்.

“The atmosphere is changing now! For the Spirit of the Lord is here! The evidence is all around! That the Spirit of the Lord is here!” என்று பாடினான்..

“என்ன இது?” என்றேன்.

“ஆன்மிகக் கவிதை… இன்றைக்கு வாசித்தேன்” என்றான் ஔசேப்பச்சன் “ஸ்பிரிட் பற்றியது.”

குமாரன் மாஸ்டர் “ஔசேப்பச்சா, நாங்கள் கைமுக்கு பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.”

“ஆமாம் அது முக்கியமான வரலாற்று நிகழ்வு. சுசீந்திரம் கைமுக்கு நிறுத்தப்பட்ட பிறகுதான் திருவிதாங்கூர் நாயர்கள் அறிவாளிகள ஆனார்கள்” என்றான் ஔசேப்பச்சன்.

“மாஸ்டர் இந்த நாயை நான் வெட்டுவேன்… கண்டிப்பாக வெட்டுவேன்!” என்றான் ஸ்ரீதரன்.

“பார்த்தாயா, நான் சொன்னேனே?” என்று ஔசேப்பச்சன் என்னிடம் சொன்னான்.

“ஸ்ரீதரா நீ அடங்கு… மார்த்தோமாக்காரர்களிடம் நமக்கு என்ன சண்டை? அவர்கள் தங்களுக்குள் சண்டைபோடத்தான் ஊருக்கு ஒரு சர்ச் வைத்திருக்கிறார்களே” என்றான் எலி.

”ஆமாம் பின்னே?” என்றான் ஔசேப்பச்சன்.

”இந்த கைமுக்கு மாதிரி உன் குற்றவாழ்க்கையில் ஏதாவது உண்டா?”

“எக்ஸ்யூஸ் மீ, அது குற்றப்புலனாய்வு வாழ்க்கை”

“சரி எதிர்க்குற்றம்… குறைவான வீரியம் கொண்ட வைரஸ் வாக்ஸின் ஆவது போல… சொல்.”

“பல வழிமுறைகள் உண்டு. உதாரணமாக ஈர்க்குச்சிப் பிரயோகம். இது அவசரநிலை காலகட்டத்தில் நமது சொந்த ஜெயராம் படிக்கல் கண்டுபிடித்தது என்கிறார்கள். குற்றம்சாட்டப்பட்டவர்கள், குற்றம்சாட்டப்பட வாய்ப்புள்ளவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பக்கத்துவீட்டுக்காரர்கள்,, அவர்களைப்பற்றி கேள்விப்பட்டவர்கள், கேள்விப்பட்டவர்ளை தெரிந்தவர்கள், அந்த தெரிந்தவர்களை தேடிச்செல்லும் வழியில் நின்றுகொண்டிருந்தவர்கள் என போலீஸாரால் பிடித்துக் கொண்டுவரப்பட்டவர்களின் ஆண்குறியின் துளைவழியாக தென்னையோலை ஈர்க்குச்சி நுழைக்கப்படும்.”

”நுழைக்கப்பட்டு?” என்று ஸ்ரீதரன் ஆவலாகக் கேட்டான்.

”சுழற்றப்படும்!”

”சுழற்றி?”

”திரும்ப எடுக்கப்படும்… யாரடா இவன்?” என்றான் ஔசேப்பச்சன் “ஜெயராம் படிக்கல் பிறகு பிஜேபியில் சேர்ந்து கீதைஉபதேசம் செய்பவராக ஆனார். கடமையைச் செய், பயனை எதிர்பாராதே என்றார்!”

”ஈர்க்குச்சியை எல்லாம் நுழைத்தால் கடமையைச் செய்யவே கஷ்டமாகிவிடுமே” என்றான் ஸ்ரீதரன்.

“நீ எவருக்காவது நுழைத்திருக்கிறாயா?”

“அய்யோ நானா? டேய் நான் சத்யகிறிஸ்தியானி.”

“அதனால்தான் கேட்டேன், பாவமன்னிப்பு எடுத்தால் தீர்ந்தது.”

“நான் ஒருவனை அடித்திருக்கிறேன். நொறுங்க அடித்திருக்கிறேன்” என்றான் ஔசேப்பச்சன்.

“குற்றத்தை ஒப்புக்கொள்ளவைக்க சந்தேகத்திற்கு இடமானவர்களை அடிப்பது ஒரு மோசமான துப்பறிவாளனின் வழிமுறை” என்றேன்

“குற்றத்தை ஒப்புக்கொள்ளவைப்பதற்காக அல்ல. இவன் கையும் களவுமாக பிடிபட்டான்.”

”அதன்பின் ஏன் அடிக்கவேண்டும்?”

”அதை விரிவாகச் சொல்லவேண்டும்” என்றான் ஔசேப்பச்சன்.

”கதைசொல்லப்போகும் ஔசேப்பச்சனுக்கு ஒரு லார்ஜ்!” என்றான் எலி.

”இந்தச் சம்பவம் நடந்தது சென்னையில்” என்று ஔசேப்பச்சன் சொன்னான்.

“சென்னைக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?’

”நக்கும் நாய்க்கு நாறுமிடமெல்லாம் சொந்தம் என்று ஒரு பழமொழி உண்டு” என்றான் ஸ்ரீதரன்.

”மாஸ்டர், இந்த நாயை ஒருநாள் நான் மிதித்தே கொல்வேன்.”

“கதைசொல்ல விடு ஸ்ரீதரா” என்றேன்

”அவனை விடு, நாயர்களும் மார்த்தோமாக்காரர்களும் நாயும் பீயும்போல…. நீ சொல்லு நஸ்ரானி, என்ன விஷயம்?” என்றார் குமாரன் மாஸ்டர்.

இது நடந்தது நான் சர்வீஸிலிருந்து வெளியே வந்த அதே வருடம்… உனக்கு தெரியுமே நான் குடும்ப பிஸினஸுக்காக வெளியே வரவேண்டியிருந்தது. என் அப்பா தடத்தில் கொச்சுவற்கீஸ் இந்த பிறவியில் அவர் அருந்த வேண்டிய விஸ்கி மற்றும் புணரவேண்டிய பெண்களின் கோட்டா முடிந்து சொர்கத்தில் அதையெல்லாம் தொடர்ந்து செய்வதற்காக விடைபெற்றுப் போனபிறகு குடும்பத்தொழிலை கவனிக்க ஆளில்லை. நான் வி.ஆர்.எஸ் மனு கொடுத்துவிட்டேன். நடுவே ஒரு சின்ன டெபுடேஷன். ஓர் அரசியல் கேஸ். அதற்காகச் சென்னைக்குச் சென்றிருந்தேன். என் நண்பன் கந்தசாமி அங்கே எஸ்.பி. அவனைப் பார்க்கச் சென்றிருந்தபோதுதான் இந்த கேஸில் முட்டிக் கொள்ளப் பார்த்தேன்.

முதலிலேயே சொல்லிவிடுகிறேன், இது துப்பறியும் கதை இல்லை. இதில் நான் வெறும் வேடிக்கை பார்ப்பவன் மட்டும்தான். இதில் நான் நினைத்து நினைத்து தீராத ஒரு பிரச்சினை உள்ளது. மேலும், நான் கிரிமினல் இன்வெஸ்டிகேஷன் துறையைவிட்டு விலகும்போது இந்த வழக்கு வந்தது. இதைக் கவனித்தது எனக்கு விலகுவதற்கான ஒரு காரணத்தை கொடுத்தது. அல்லது இப்படிச் சொல்கிறேன், இதைப்போட்டு உருட்டி உருட்டி நான் போதிய காரணங்களை உருவாக்கிக்கொண்டேன். இனி துப்பறிதல் வேண்டாம், ஒரு சத்யகிறிஸ்தியானியாக நாம் உண்டு நம் பீஃப் உண்டு குடி உண்டு என்று வாழ்வோம் என்று முடிவுசெய்தேன். இளமையில் என் ஜாதகத்தை பார்த்த ஃபாதர் குரியாகோஸ் நான் ஸ்பிரிச்சுவல் பாதையில் செல்வேன் என்று சொன்னதும் நினைவுக்கு வந்தது.”

”சரி சொல்” என்றார் குமாரன் மாஸ்டர்.

கதையை நாகர்கோயிலில் இருந்து தொடங்கவேண்டும் என்றான் ஔசேப்பச்சன். என் நண்பன் கந்தசாமி நாகர்கோயிலில் வேலைபார்க்கும்போது அடிக்கடி கோர்ட்டுக்கு போவதுண்டு. அங்கே கோர்ட் வாசலில் ஒரு பெரியவர் கள்ளிப்பெட்டி மேஜையை கொண்டுவந்து போட்டு டைப் செய்து கொண்டிருந்திருக்கிறார். ஒரு முனிவர் போல தோற்றம். நீண்ட வெண்ணிறமான தாடி. தோளில் புரளும் தலைமுடி. பெரிய சந்தனப்பொட்டு. வெற்றிலை வாய். தடிமனான மூக்குக் கண்ணாடி. மிகநிதானமாக பேசுபவர், ஆனால் விரல்கள் மிக மிக வேகம். அப்போது கம்ப்யூட்டர் டைப்பிங் வந்திருக்கவில்லை. 1995 என நினைக்கிறேன். ஜாப் டைப்பிங் அன்று ஒரு உறுதியான சின்ன தொழில்.

ஆனால் இந்த ஜாப் டைப்பிங் அடிப்பதில் சில நுட்பங்கள் உண்டு. தாசில்தார் ஆபீஸ் முன் ஜாப் டைப்பிங் செய்பவர் கோர்ட் முன் அடிக்க முடியாது. கோர்ட் முன் அடிப்பவர் இன்னொரு இடத்தில் அதைச் செய்யமுடியாது. கோர்ட்டின் முன் அமர்ந்திருப்பவர் அந்த இடத்திலேயே கால்நூற்றாண்டை கடந்தவராக இருப்பார். அவருக்கு அந்த தனிமொழி நன்றாகத் தெரியும். ஆகவே ஓர் அரைக்கண் பார்வையிலேயே அடிப்பார். கையும் அந்த எழுத்துக்களை தானாக அடிக்கும். புதிய ஒருவர் அந்த வார்த்தைகளை பார்த்து அடிப்பதற்குள் கண்பூத்துவிடும். கல்பபிள் ஹோமிசைட், கிரிமினல் இன்டிமிடேஷன் என்றெல்லாம் சொற்களைக் கண்டுபிடித்தவனுக்கும் இந்த ஜாப் டைப்பிங் ஆட்களுக்கும் நடுவே ஒரு கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கவேண்டும். வேறு யாருமே அவற்றை டைப் செய்யமுடியாது.

கந்தசாமி ஆபீஸிலேயே டைப் செய்து பார்த்துவிட்டு மனம் உடைந்துபோய் ஜாப்டைப்பிங்குக்கு கொண்டுசென்று கொடுப்பதுதான் சிறந்தது என்று கண்டுபிடித்தான். அந்தப் பெரியவர் புயல்வேகத்தில் அடித்து கொடுத்துவிடுவார். ரகசியம் வெளியே போகுமா என்ற பயம் இருந்தது, அதற்கு அவசியமே இல்லை என்று தெரிந்தது. பெரியவர் வார்த்தைகளை மட்டும்தான் பார்ப்பார். அவருக்கு கோர்ட் விவகாரம் என எதுவுமே தெரியாது. கரைநாயர் கதகளி பார்ப்பதுபோல என்று சுருக்கமாகச் சொல்லலாம்.

ஒருநாள் பக்கத்து கடையில் இவன் டீ குடித்துக் கொண்டிருந்தபோது பெரியவர் அங்கே டீ குடிக்க வந்தார். கையோடு கள்ளிப்பெட்டி மேஜையையும் டைப் ரைட்டரையும் தூக்கிவந்துவிட்டார். கந்தசாமி அந்த டைப்ரைட்டரைப் பார்த்தான். ஆலிவெட்டி. அந்த இத்தாலிய கம்பெனி இந்தியாவை விட்டு போயே ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. ஒருவேளை இறக்குமதி செய்த மிஷினா? ஆனால் இறக்குமதி செய்யப்பட்ட மிஷினை வைத்துக்கொண்டு எவரும் கோர்ட் வாசலில் உட்காரப்போவதில்லை.

அவன் பெரியவரிடம் அறிமுகம் செய்துகொண்டன். அவர் பெயர் சிவராஜ பிள்ளை. வயது ஐம்பத்தெட்டுதான். வயதுக்கு மீறிய முதுமை. சபரிமலை பக்தர். குருசாமி. முப்பத்தாறு மலை ஏறிவிட்டார். சபரிமலைக்காக வளர்த்த தாடி அப்படியே நிலைத்துவிட்டது.

சிவராஜ பிள்ளை காலை ஆறுமணிக்கெல்லாம் அந்த கள்ளிப்பெட்டியுடன் கோர்ட் வாசலில் சாலையோரமாக வந்து அமர்ந்துவிடுவார். மனுக்கள் வரத்தொடங்கும். கோர்ட் தொடங்குவதற்குள் அடிக்கவேண்டியதை அடித்து கொடுப்பார். மறுநாள் கிடைத்தால் போதும் என்று சொல்லப்படும் மனுக்களுடன் பத்தரை மணிக்கு அங்கிருந்து எழுந்து ராஜப்பா வக்கீலின் ஆபீஸுக்குள் ஒரு மூலையில் மேஜையை கொண்டுபோட்டு அமர்ந்து விடுவார். மாலை ஏழுமணிவரை அங்கே டைப் செய்வார். ஒருநாளுக்கு இருநூறு பக்கம் வரை. ஒரு பக்கத்திற்கு அன்று கூலி ஒரு ரூபாய்தான். ராஜப்பா வக்கீலின் ஆபீஸுக்குரிய மனுக்களை இலவசமாக டைப் செய்யவேண்டும், அமர்ந்திருப்பதற்கான வாடகைக்காக. அன்றைய சூழலில் ஒரு சுமாரான வருமானம்தான்.

டீ குடித்துக்கொண்டே கந்தசாமி சிவராஜ பிள்ளையிடம் அறிமுகம் செய்துகொண்டான்.

”அந்த ஆலிவெட்டி.. அது இப்ப இந்தியாவிலே கிடைக்காது. உங்களுக்கு எப்படி கிடைச்சுது? என்று அவன் அவரிடம் கேட்டான். “பழைய விலைக்கு வாங்கினீங்களா?’

“இல்லை, இது எனக்குக் கிடைச்ச சீதனம் என்று சிவராஜ பிள்ளை சொன்னார்.

சிவராஜ பிள்ளை அவருடைய கதையைச் கந்தசாமியிடம் சுருக்கமாகச் சொன்னார். பிறகு கொஞ்சம் நெருக்கமாகிப் பேசப்பேச இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொன்னார். அவர் போலியோவில் ஒரு காலை இழந்தவர். அதை அவர் சொன்ன பிறகே கந்தசாமி கவனித்தான். சிவராஜ பிள்ளையின் அப்பா அவருக்கு மூன்று வயதாகும்போதே இறந்தார். அவர் நாகர்கோயில் அருகே பறக்கையில் ஒரு பண்ணையாரிடம் மாட்டுவண்டி ஓட்டிக்கொண்டிருந்தார்.

அப்பா செத்தபிறகு சிவராஜ பிள்ளையின் அம்மா பலகாரம் சுட்டு விற்று ஒரே மகனை வளர்த்தார். பண்ணையார் வீட்டு தொழுவத்தில் மகனுடன் தங்கியிருந்தார். வாடகையாக தொழுவத்தில் சாணி வழிப்பதுடன் பண்ணையாரின் பலாத்காரத்திற்கும் இடம் கொடுக்கவேண்டியிருந்தது. முறுக்கு விற்பதற்காகத்தான் சிவராஜ பிள்ளை கோர்ட் வளாகத்திற்கு வந்தார். அம்மா கர்ப்பமாகி அதை உள்ளூர் மருத்துவச்சி எருக்கம் குச்சியை வயிற்றுக்குள் நுழைத்து கலைக்க முயன்றமையால் உடல்நஞ்சாகி இறந்தபின் கோர்ட் வராந்தாவிலேயே வாழலானார். கோர்ட் வாட்ச்மேன் நாராயணசாமியின் ஓரினப் புணர்ச்சிக்கு ஆளாகவேண்டும் என்பதை தவிர்த்தால் வேறு சிக்கல்கள் இல்லை, வெளியே சென்றால் ஊரெங்கும் நிரம்பியிருக்கும் கேடிகளால் புணரப்பட நேரிடும். அதற்கு இது மேல். மேலும் நாராயணசாமி அத்தனை ஊக்கமானவர் அல்ல.

சிவராஜ பிள்ளைக்கு வெளியே கடைகளில் இருந்து டீயை கோர்ட்டுக்குள் கொண்டுசென்று கொடுப்பது வேலை. கோர்ட் முகப்பில் அப்போது குமாரசாமிப்பிள்ளை என்பவர் ஒரு பழைய ஆலிவெட்டி டைப்ரைட்டருடன் அமர்ந்து ஜாப் டைப்பிங் செய்து கொண்டிருந்தார். அதை இவர் நின்றுவேடிக்கை பார்ப்பதுண்டு. அவ்வப்போது வெளியே செல்லும்போது குமாரசாமிப் பிள்ளை இவரை தன் மேஜையை பார்த்துக் கொள்ளச் சொல்வார். ஒரே சாதி என்ற அபிமானம். சிவராஜ பிள்ளை இளமையில் சிவப்பாக அழகாக இருப்பார்.

சிவராஜ பிள்ளை கொஞ்சம் கொஞ்சமாக குமாரசாமிப் பிள்ளையின் உதவியாளராக ஆனார். சிவராஜ பிள்ளை நான்காம் வகுப்புவரை ஏற்கனவே படித்து படிப்பை நிறுத்தியிருந்தார். ஆனால் தானாகவே தமிழும் ஆங்கிலமும் படித்து சமாளிக்கும் அளவுக்கு அறிவு கொண்டிருந்தார். குமாரசாமிப் பிள்ளையை பார்த்து அவர் டைப்பிங் கற்றுக்கொண்டார். டைப்ரைட்டரில் பழகி அல்ல. அந்த கீபோர்டை அதே அளவில் தரையில் வரைந்து அதில் கைகளால் டைப் செய்து கற்றுக்கொண்டார். முதல்முறையாக டைப் ரைட்டரை தொட்டநாளிலேயே ஒரு முழுப்பக்கம் டைப் செய்தார். கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது, அவ்வளவுதான்.

குமாரசாமிப் பிள்ளைக்கு பெரிய குடும்பம். எட்டு பெண்கள். அவர் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதையே பத்து ஆண்டுகளாக முழுநேர கவலையாக கொண்டிருந்தார். ஒரு காய்ச்சலுக்குப்பின் குமாரசாமிப் பிள்ளைக்கு வலது கை தளர்ந்தது. அவரால் டைப் செய்ய முடியாமலாகியது. அவருடைய டைப்ரைட்டர் சிவராஜ பிள்ளையிடம் வந்தது. அவர் டைப்ரைட்டர் வாடகையாக அளிக்கும் இரண்டு ரூபாய்தான் குமாரசாமிப் பிள்ளையின் வருமானம்.

குமாரசாமிப் பிள்ளையின் மனைவி வடை சுட்டு கோர்ட்டுக்கு கொடுத்தனுப்பினாள். அவளுடைய இரண்டம் மகள் வடிவம்மை அதை விற்பதற்காக கோர்ட்டுக்கு வந்தாள். நீண்ட பல்லுடன் கருப்பாக குள்ளமாக இருந்த அவளை சிவராஜ பிள்ளைக்கு பிடிக்கவில்லை. அவர் சிவப்பாக உயரமாக இருந்தார். ஆனால் அவளை கட்டிக்கொள்வதாக இருந்தால் ஆலிவெட்டி டைப்ரைட்டரை தந்துவிடுவதாக குமாரசாமிப் பிள்ளை சொன்னார். அந்த ஆலிவெட்டி டைப்ரைட்டருக்காகவே அவளை மணந்தார்.

சிவராஜபிள்ளைக்கு மூன்று குழந்தைகள். மூத்தவன் மகேஷ். அவரைப்போலவே உயரமான சிவப்பான பையன். அடுத்தது இரண்டு பெண்குழந்தைகள், அவர்கள் அம்மாவைப்போல. மகேஷ் இளமையிலேயே மிகச்சிறப்பாக படித்தான்.

“ஒண்ணாம் வகுப்பிலேயே அவன் முதல் ரேங்குதான். நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்க்கவேணும்னு உறுதியா இருந்தேன். அதனாலே நாகர்கோயிலிலேயே எஸ்.எல்.பி பள்ளிக்கூடத்தில் சேர்த்தேன்” என்றார் சிவராஜ பிள்ளை. அவனைப் படிக்கவைப்பதற்காக குடும்பமே பட்டினி கிடக்க ஆரம்பித்தது அன்றைக்கு தொடங்கியதுதான்.

மகேஷ் பிளஸ்டூவில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம், மாநில அளவில் பதிமூன்றாம் இடம் பெற்று வென்றான். அண்ணா பல்கலையில் கம்ப்யூட்டர் எஞ்சீனியரிங்கில் இடம் கிடைத்தது. படிக்கவைக்க முடியுமா என்று தெரியவில்லை. எந்த வருமானமும் இல்லை, இந்த ஆலிவெட்டி டைப்ரைட்டரை தவிர. அப்போதே கம்ப்யூட்டர் வரத் தொடங்கிவிட்டது. எத்தனைநாள் இந்த வேலை முன்னால் செல்லும் என்று தெரியவில்லை.

நேராகச் சென்று பூதம்வணங்கும் கண்டன் சாஸ்தா கோயில் முன் அமர்ந்துவிட்டார். “சாஸ்தாவே நீயே வழிகாட்டு!” என்று கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தார். தூக்கத்தில் ஒரு கனவு. ஒரு சிறுவன் வந்து அவரிடம் ஏதோ சொல்வதுபோல. விழித்துக்கொண்டார். அது சாஸ்தாவேதான் என்று தெரிந்தது. கண்ணீருடன் வெறுந்தரையில் விழுந்து தலையை மண்ணில் அழுத்தி கதறி அழுதார்.

கைகூப்பியபடி சென்று வீட்டை அடைந்தார். மகனை சென்னை அண்ணா பல்கலையில் படிக்க வைப்பதாக மனைவியிடம் சொன்னபோது அவள் கதறி அழுதாள். கையில் ஒரு பைசாகூட இல்லை. “என்ன செய்வோம் ஒத்தப் பைசா இல்லியே” என்றாள். “சாஸ்தாவை நம்புடி” என்றார் சிவராஜ பிள்ளை.

வக்கீல் அலக்ஸாண்டரிடம் சென்று எனக்கு உதவுங்கள் என்று கேட்டார். அவர் ஒரு சிறுதொகை தந்தார். பார் அசோசிஷியேஷன் ஒரு தொகை தந்தது. கொஞ்சம் கடன் வாங்கினார். அண்ணா பல்கலையில் பையனைச் சேர்த்துவிட்டார்

“பாதிநாள் சோத்திலே வெறும் உப்பைப்போட்டு திங்குதோம் சார். என் மனைவி பலகாரம் போடுதா. பொண்ணுக அதை கடைகளுக்கு கொண்டு போடுதாளுக… வருமானம் இவ்ளவுதான். வட்டி வேற ஏறிட்டிருக்கு. கஷ்டம்தான்… ஆனா பையன் ரெண்டாம் வருசம் முடிச்சாச்சு… இன்னும் ரெண்டு வருஷம். அதுக்கப்றம் எல்லாம் சரியாயிடும்… அவன் மகா கெட்டிக்காரன். இப்பவும் ஃபஸ்ட் ரேங்குதான்… அவனுக்கு தேடிவந்து வேலை குடுப்பாங்க.”

கந்தசாமி அதன்பின் நெல்லைக்கு மாற்றலாகிவிட்டான். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஒருமுறை நாகர்கோயில் போக வேண்டியிருந்தது. கோர்ட் வாசலில் சிவராஜ பிள்ளை அமர்ந்திருந்தார். அவனை அடையாளம் கண்டு கொண்டு புன்னகைத்தார். “எப்டி இருக்கீங்க?” என்று கந்தசாமி கேட்டான்.

“ரொம்ப நல்லா இருக்கேன் சார்… பையன் படிப்பை முடிச்சிட்டான். அவனுக்கு இன்ஃபோஸிஸிலே வேலை கிடைச்சிருக்கு. மெட்ராஸிலேதான் இருக்கான்…நல்ல வேலைசார். பணம் அனுப்பறான். கடன்லாம் முடிச்சாச்சு… பொண்ணு குடுக்க தேடி வர்ராங்க… நாலஞ்சு பொண்ணுக பாத்து வச்சிருக்கேன்” என்றார் சிவராஜ பிள்ளை.

“கொஞ்சம் குடும்பத்தை பாத்துக்கிட்டு கல்யாணத்தை பண்ணி வைக்கலாமே” என்று கந்தசாமி சொன்னான்.

“இல்லை, என் வீட்டுக்காரி போனவருஷம் தவறிட்டா… இனிமே பொண்ணுகளுக்கு ஒரு மங்கலம் நடக்கணுமானா அம்மாவோட எடத்திலே அண்ணிதான் இருக்கணும்… பையன் பொண்ணுகளையும் மெட்ராஸிலேயே காலேஜ்லே சேக்கலாம்னு நினைக்கிறான்… என்னையும் கூப்பிடறான்… சரி, இவனுக்கு எப்டியும் இங்கதான் பொண்ணு பாக்கணும். கல்யாணத்தை பண்ணிவச்சா அப்டியே மெட்ராஸுக்கு போய்டலாம்னு பாக்கிறேன்” என்றார் சிவராஜ பிள்ளை.

மீண்டும் எட்டு மாதம் கழித்து சிவராஜ பிள்ளை அவரே தேடி வந்தார். அத்தனை மகிழ்ச்சியாக அத்தனை மலர்வாக அவரை கந்தசாமி பார்த்ததே இல்லை. “பையன் கல்யாணம் முடிஞ்சு ஆறுமாசமாச்சு சார். பறக்கை ஊரிலே செல்வாக்கான பெரிய குடும்பம். பொண்ணும் மகாலச்சுமி மாதிரி இருக்கா… அவளுக்கு ஐடியிலேதான் வேலை. இவன் அளவுக்கு சம்பளம் இல்லேன்னாலும் மோசமில்லை. பொண்ணுகள்லாம் மெட்ராஸ் காலேஜ்லே சேத்தாச்சு. அங்க ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கியிருக்கான் பையன்”

“அப்டியா? வெரிகுட்” என்றான் கந்தசாமி.

“இஎம்ஐ கட்டணும்… ஆனால் அதெல்லாம் பெரிய விஷயமில்லைன்னு சொல்றான். அவ்ளவுதான் என்  லைஃப் நிறைவா முடிஞ்சது. சாஸ்தா அருளாலே இனி எனக்கு கடமைகள்னு ஒண்ணுமில்லை. பொண்ணுகளை பையன் பாத்துக்கிடுவான். மெட்ராசுக்கே போகப்போறேன்… அங்க சும்மா இருக்க முடியாது. ஏதாவது ஆபீஸிலே டைப்பிஸ்ட் வேலைன்னா செய்யலாம்… பாப்பம்”

“ரொம்ப நல்லது, வாழ்த்துக்கள்” என்றான் கந்தசாமி

“அந்த ஆலிவெட்டி டைப்ரைட்டர் இருக்கு சார். அதை ரொம்ப ஆசைப்பட்டு கேட்டீங்க… உங்களுக்கே குடுத்திடலாம்னு கொண்டுவந்தேன்… கிட்டத்தட்ட நூறு வருசம் பளசு சார். 1911 மாடல்…”

”அது உங்க லைஃப்… உங்க கிட்டயே இருக்கட்டும்… அதுக்கு பெரிய மதிப்பு வந்தாலும் வரும்” என்றான் கந்தசாமி

“பையனுக்கெல்லாம் அது புரியாது சார். தூக்கி போட்டாலும் போட்டிருவான். நீங்க அருமை தெரிஞ்சவரு. அதான் கொண்டுவந்தேன்”

“நான் வாங்கிக்கிட்டா நல்லாருக்காது”

“செரி ஒரு வெலையை போடுங்க”

“வெலை சொல்லுங்க”

“சும்மா ஒரு வெலையை போடுங்க சார்”

“நீங்க சொல்லுங்க”

“ஐநூறு ரூபா குடுங்க”

“ஐநூறா, சேச்சே… ஐயாயிரம் குடுக்கறேன்”

“அட… அது எதுக்கு”

“இருக்கட்டும்… இது சாதாரணமான பொருள் இல்லை”

அப்படி ஆலிவெட்டியை கந்தசாமி வாங்கிக்கொண்டான். அதன்பின் அவன் சிவராஜ பிள்ளையை பார்க்கவில்லை. நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தான். அங்கிருந்து கிரைம் பிராஞ்ச். மூன்று ஆண்டுகளுக்குப் பின் ஒருமுறை தற்செயலாக சென்னையில் ஒரு மாலில் சிவராஜபிள்ளையை பார்த்தான். கையில் ஒரு குழந்தையுடன் நின்றிருந்தார். பாண்ட் போட்டிருந்தார்

“சார்!” என்று கந்தசாமி அழைத்தான்

“சார் நீங்களா? எப்டி இருக்கீங்க?”என்றார் சிவராஜ பிள்ளை. “இது நம்ம பேரன் சார். பையனும் மருமகளும் பொண்ணுகளும் துணி எடுக்கறாங்க கடைக்குள்ள. இவனை உள்ள வச்சிருக்க முடியலை… பயங்கரச் சேட்டை”

“எப்டி போய்ட்டிருக்கு லைஃப்?”

‘நல்லா நிறைவா இருக்குசார். உள்ளூர் ஐயப்பசேவா சங்கத்திலே வைஸ் பிரசிடெண்டா இருக்கேன். தினசரி பூஜைக்குப் போறேன். நாப்பத்திரண்டு மலை ஆயாச்சு… ஐயப்பன் அழைக்கிற வரை போய்ட்டே இருக்கவேண்டியதுதான். பையன் நல்லா பண்றான். மேனேஜரா ஆயிட்டான். சொந்தமா பிளாட் இருக்கு. கார் வைச்சிருக்கான்… இன்னும் ரெண்டு பிளாட் வாங்கி வாடகைக்கு விட்டிருக்கான்… எல்லாம் நல்லாவே போய்ட்டிருக்கு”

“நீ இன்னும் கிரைம் கதைக்கே வரவில்லை” என்றேன்.

“அங்கேதான் வந்துகொண்டிருக்கிறேன்” என்றான் ஔசேப்பச்சன். “கந்தசாமி சென்னையில் சர்வீஸில் இருக்கும்போது ஒருநாள் பி-2 ஸ்டேஷனுக்கு ஒரு கேஸ் வந்தது. இவன் தற்செயலாக அந்தக் கேசைப் பார்த்தான். தற்செயல்களைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறேன். இதுவும் அதில் ஒன்று”

சம்பவம் இதுதான். ஒரு பையன் ஐடியில் வேலைபார்ப்பவன். இரவு கொஞ்சம் பிந்தி அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு மெட்ரோ ரயிலில் திரும்பியிருக்கிறான். இரவு மணி பன்னிரண்டு இருக்கும். மெயின் ரோட்டிலிருந்து ஒரு சிறு சந்து வழியாக ஏறி கடந்தால் அவனுடைய தெரு வரும். ஐந்து நிமிட நடைதான்.அது மோட்டார் ரிப்பேர் செய்பவர்களின் கடைகள் ஒருபக்கமும் ஒரு பெரிய காம்பவுண்ட் சுவர் இன்னொரு பக்கமும் இருக்கும் ஒரு நாலடிச் சந்து.

அவன் செல்லும்போது ஒருவன் பைக்கில் எதிரில் வந்திருக்கிறான். சட்டென்று பைக்கை நிறுத்தி நீண்ட கத்தியை உருவி நீட்டி “சத்தம்போடாதே!” என்று மிரட்டியிருக்கிறான். இவன் திகைத்து நடுங்கிவிட்டான். கைகால்கள் உதறத்தொடங்கிவிட்டன. சிறுநீர் பிரிந்துவிட்டது. அவன் “மரியாதையா கையில் உள்ள  செல்ஃபோனையும் பணத்தையும்ம் மோதிரத்தையும் எடு” என்று சொல்லியிருக்கிறான். இவன் பர்ஸ் செல்போன் எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறான். பர்ஸில் நான்காயிரம் ரூபாய் இருந்திருக்கிறது கையில் ஒருபவுன் மோதிரம் போட்டிருந்திருக்கிறான். அதையும் கழற்றிக்கொடுத்துவிட்டான்.

“சத்தம்போடாமல் ஓடு.. சத்தம் போட்டால் திரும்பி வந்து வெட்டுவேன்” என்று சொல்லிவிட்டு பைக் ஆள் சென்றுவிட்டான். ஆனால் இந்தப் பையன் ஒரு சின்ன விஷயம் செய்தான். இவனிடம் இன்னொரு மொபைல் இருந்தது. சாதாரண ரெட்மி நோட். அந்த பைக் ஆள் மெயின்ரோட்டுக்குள் நுழையும்போது, சரியாக பைக் திரும்பும் நேரம், ஒரு போட்டோ எடுத்துவிட்டான். உடனே அந்த போனிலிருந்து போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு வாட்ஸப் இமெயில் எல்லாவற்றிலும் புகார் அளித்துவிட்டான்.

நல்லவேளையாக அப்போது கண்ட்ரோல் ரூமில் துடிப்பான சின்னப்பையன் ஒருவன் இருந்தான். ராபின்ஸன் என்று பெயர், சொந்த ஊர் கன்யாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம். பொதுவாக இந்த ஏரியா பையன்கள் சூட்டிகையானவர்கள். அவனைப்பற்றி பிறகு எப்போதாவது சொல்கிறேன். அவன் அத்தனை பட்ரோல் ஜீப்புக்கும் செய்தி அனுப்பிவிட்டான். அந்த பைக் ஆளை ஒரு கிலோமீட்டர் தள்ளி பிடித்துவிட்டார்கள்.

அவனை பட்ரோல் போலீஸ் நிறுத்தியபோது மிக கூலாக இறங்கி அருகே வந்திருக்கிறான். “என்ன சார்? ஏதாவது நியூஸா?”என்று கேட்டிருக்கிறான். அவர்கள் பைக் எண்ணை பரிசோதனை செய்திருக்கிறார்கள். அதேதான். ஆனால் அந்த ஆள் ஒரு ஐடி நிறுவனத்தில் டெபுடி மேனேஜர். அடையாள அட்டை வைத்திருந்தான். ஆதார் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், பான் கார்டு எல்லாமே பக்கா. “சரி சார் நீங்க போங்க” என்று சொல்லிவிட்டார்கள்.

ஆனால் இந்தப் பையன் ராபின்ஸன் “இல்லை, அவனை ஸ்டேஷனுக்கு கூட்டிவாருங்கள், என்ன ஏதுன்னு கேட்டுத்தான் அனுப்பவேண்டும்” என்று அடம்பிடித்தான். ஆகவே ஜீப்பில் பைக்கை மறுபடி தொடர்ந்து சென்று “சார் ஸ்டேஷனுக்கு வந்து ஒரு கையெழுத்துபோட்டு போங்க, எஸ்.ஐ திட்டுகிறார்” என்றார்கள். அவனும் “சரி, அதுக்கென்ன?”என்று கூடவே வந்தான். ஸ்டேஷனில் அவனை பி3 எஸ்.ஐ விசாரித்தார். எல்லாமே பக்காதான். சரி பைக்கை சோதனை போடுவோம் என்று பார்த்தார்கள். அதிலும் எந்தப்பொருளும் இல்லை.

போகச்சொல்லிவிடவேண்டியதுதான் என்று எஸ்.ஐ நினைத்தார். ஆனால் இந்த கன்ட்ரோல்ரூம் எஸ்.ஐ. இருக்கிறானே, ராபின்சன் அவனுக்கு ஒரு பிடிவாதம். அவன் சொல்லி தப்பாக போய்விடக்கூடாதே. அவன் அந்த ஆளின் போட்டோவை அனுப்பும்படி சொன்னான். அதன்பிறகு அவனுடைய பைக்கின் போட்டோவை கேட்டான். அந்த பைக்கை பார்த்ததும் அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. மிகமிக தோராயமான சந்தேகம். ஆகவே அவனுடைய கைரேகைகளை பதிவுசெய்துவிட்டு அனுப்புங்கள் என்று சொன்னான். ரிப்போர்ட்டில் சாதாரணமாக கேட்பதுபோல கைரேகையை வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டார்கள்.

ராபின்ஸனுக்கு வந்த சந்தேகம் இதுதான். அந்த பைக்கை அவன் எங்கோ பார்த்திருக்கிறான். மேடவாக்கத்தில் நடந்த ஒரு திருட்டில் ஒரு பைக் சிசிடிவில் மாட்டியிருந்தது. அந்த திருடனின் தோற்றமோ வேறெதுவுமோ சிக்கவில்லை. பக்கத்திலிருந்த கடையின் சிசிடிவியில் அதன் பின்பக்கத்தோற்றம் மட்டும் பதிவாகியிருந்தது. அந்த நம்பர்பிளேட் பொய்யானது. ஆகவே அது திருடனுடையதாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டார்கள். அந்த பைக் ராபின்ஸனின் நினைவில் பதிந்திருந்தது. ஏனென்றால் அவனும் அதேபோல ஒரு பல்ஸர் வைத்திருந்தான்.

அந்த சந்தேகத்தை அவன் டிஎஸ்பியிடம் சொன்னபோது “டேய், உனக்கென்ன கிறுக்கா? அந்த கம்ப்ளெயிண்ட் குடுத்த ஆளை வரச்சொல்லியிருக்கேன். அனேகமா வேணும்னே ஏதோ டிரிக் பண்ணி இவனை மாட்டிவிட்டிருக்கான். இவன் அவனோட சீனியர் ஆபீஸரா இருப்பான், பாத்துட்டே இரு” என்றார்.

“இல்லை சார் இந்த ஃபிங்கர் பிரிண்டை மட்டுமாவது நாம் செக் பண்ணுவோம்” என்று ராபின்சன் சொன்னான்.

ராபின்ஸன் அதைச் சொல்லிக்கொண்டே இருந்தான். ஆனால் டிஎஸ்பி பொருட்படுத்தவில்லை. அதற்கு ஏற்ப அந்த வாட்ஸப் கம்ப்ளெயிண்ட் கொடுத்த பையனை வரச்சொல்லி பலமுறை மெயிலும் மெஸேஜும் அனுப்பியும் அவன் ஸ்டேஷனுக்கு வரவில்லை. ஃபோனில் கூப்பிட்டால் எடுக்கவுமில்லை. சரிதான், வழக்கமான வெஞ்சென்ஸ் மெயில் என்று சொல்லி பிறகு பார்க்கலாம் என்று தூக்கிப்போட்டுவிட்டார்கள்.

அதன்பிறகு மூன்றுமாதம் கழித்து மேலிடத்திலிருந்து அப்பகுதியில் நடக்கும் திருட்டுக்களைப் பற்றி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேட்டு ஒரு மெயில் வந்தது. கண்டுபிடிக்கப்படாத பத்துப்பதினைந்து திருட்டுக்கள் அந்த பகுதியில் இருந்தன. அதைப்பற்றி ஒரு துப்பும் கிடைக்கவில்லை. போலீஸில் ஒரு மனநிலை உண்டு, துப்பு கிடைக்காமல் கொஞ்சநாள் போனால் துப்பு கிடைக்காது என்ற நம்பிக்கைக்கு வந்துவிடுவார்கள். பிறகு துப்பை தேடவே மாட்டார்கள். கண்ணெதிரே துப்பு கிடைத்தாலும் தென்படாது.

அந்த மேலிடத்து மெயிலை படித்ததும் டிஎஸ்பி என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினார். ஏட்டு ஒருவர் ஒரு வழக்கமான யோசனையைச் சொன்னார். கைவசம் பதிவாகியிருந்த கைரேகைகளை லேப் டெஸ்டுக்கு அனுப்பிவிட்டு ‘புலனாய்வு நடக்கிறது, லேப் முடிவை எதிர்பார்க்கிறோம்’ என்று சொல்லி லேப் ரசீதை மேலிடத்துக்கு ஃபார்வார்ட் செய்துவிடலாம் என்று. அது விஷயத்தை மேலும் மூன்றுமாதம் ஒத்திப்போடும். அப்படியே நாற்பத்தேழு கைரேகைகள் லேபுக்கு அனுப்பப் பட்டன. எல்லாமே உள்ளூர் சில்லறைக் குண்டர்களின் ரேகைகள். அதில் ஒன்று இந்த பைக் ஆசாமியுடையது.

இரண்டே நாளில் லேபிலிருந்து கூப்பிட்டார்கள் அந்த பைக் ஆள்தான் திருடன். அதுவும் மூன்று திருட்டு நடந்த இடங்களில் அவன் கைரேகை கிடைத்திருந்தது. முதலில் அது திகைப்பை அளித்தது. ஸ்டேஷனே பரபரப்பாகி விட்டது. அவனுடைய அடையாள அட்டை எண்கள் அந்தக் கடிதத்தில் இருந்தன. அவற்றில் ஆதார், பான்கார்ட், டிரைவிங் லைசன்ஸ் எல்லாமே சரியானவைதான். ஆனாலும் துருவினார்கள் அவன் இன்ஃபோஸிஸில் வேலைபார்க்கிறானா என்று சோதனை செய்தார்கள். அப்படி ஒருவன் அங்கே இல்லை, அது போலி அடையாள அட்டை. அவன் பெயர் மகேஷ்.

ஔசேப்பச்சன் நாடகத்தனமான இடைவெளியை விட்டான். நாங்கள் அதை ஊகித்திருந்தோம். அவன் பேசுவதற்காகக் காத்திருந்தோம்.

குமாரன் மாஸ்டர் “இதுதான் உண்மையில் கதையின் தொடக்கம்” என்றார் ‘ஒரு நல்ல கதை அதைச்சொல்ல ஆரம்பித்து பாதிக்குமேல்தான் உண்மையிலேயே தொடங்கவேண்டும்.”

ஔசேப்பச்சன் சொன்னான். உடனடியாக அவனைத் தேடிச்சென்றார்கள். அவன் தாம்பரத்தில் ஒரு உயர்தர அப்பார்ட்மெண்டில் தங்கியிருந்தான். அவன் மனைவிதான் வீட்டில் இருந்தாள். மிக அழகான பெண். அங்கே அவன் அப்பாவும் இரண்டு தங்கைகளும் இருந்தார்கள்.

போலீஸ் விசாரிக்க வந்திருக்கிறது என்று தெரிந்தும் அவன் ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்தான். போலீஸ் திருட்டு விஷயத்தைச் சொல்லவில்லை. அவன் பைக் மீது தவறான புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது, அதைப்பற்றி விசாரிக்கவேண்டும் என்றுதான் சொன்னார்கள்.

அவன் இயல்பாக இருந்தான். “என்ன சார்?”என்று கேட்டான் ”அதுதான் எல்லா டீடெயிலும் தந்துவிட்டேனே”

‘அந்த கம்ப்ளெயிண்ட் கொடுத்த ஆள் வரவே இல்லை. நீங்க வந்து அவன்மேல் ஒரு கம்ப்ளெயிண்ட் எழுதிக் கொடுத்தாத்தான் அவனைப் புடிச்சு விசாரிக்க முடியும். ஸ்டேஷனுக்கு வந்து எழுதிக்கொடுங்க சார்” என்று போலீஸ்காரர் சொன்னார்.

அவன் தன் பைக்கிலேயே ஸ்டேஷனுக்கு வந்தான். ஸ்டேஷனில் எஸ்.ஐ முதலில் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சாதாரணமாக, கொஞ்சம் அலட்சியமாகப் பதில் சொன்னான். சட்டென்று அடிவிழ ஆரம்பித்தது. எப்போதுமே அடி எதிர்பாராமல் விழவேண்டும், அதன் ஆற்றலே தனி. அடிப்பது வலிக்காக அல்ல, அடிபடுபவன் ஒரு ஆளே அல்ல, அவனை என்னவேண்டுமென்றாலும் செய்யலாம் என்று தெரிவிப்பதறகாக. லாக்கப்பில் கூட்டிச்சென்று அடி நொறுக்கினார்கள். அவன் எல்லாவற்றையும் சொல்லிவிட்டான்.

அவன் எங்கேயும் வேலை பார்க்கவில்லை. அவன் எஞ்சீனியரிங் படிப்பையே முடிக்கவில்லை. முழுநேரத் திருடன். பன்னிரண்டு ஆண்டுகளில் அவன் முந்நூற்றி இருபது திருட்டுக்கள் செய்திருக்கிறான். ஒருமுறைகூட பிடிபடவில்லை.

“அதெப்படி?” என்று நான் கேட்டேன் “அத்தனை பக்காவாக ஒருவன் இருக்க முடியுமா?”

‘கஷ்டம், ஆனால் இது அடிக்கடி நடக்கிறது” என்றான் ஔசேப்பச்சன்.

“நஸ்ரானியே, அதன் தியரி என்ன?”என்றார் குமாரன் மாஸ்டர்.

இந்தியாவின் குற்றச்சூழல், போலீஸ் விசாரணை இரண்டையும் நீ ஒட்டுமொத்தமாகப் பார்த்துத்தான் புரிந்துகொள்ள வேண்டும். ஆங்கில நாவல்களில் நீ படிக்கும் மேலைநாட்டுச் சூழல் அல்ல இங்குள்ளது. இங்கே மக்கள் தொகை மிகமிக அதிகம். மக்கள் நெரிசல் அதைவிட அதிகம். மக்களின் தகவல்கள் ஆவணப்படுத்தப்படுவதே சமீபகாலமாகத்தான். மக்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் போலீஸ் எண்ணிக்கை திகைப்பூட்டும் அளவுக்கு குறைவு. போலீஸாரின் பெரும்பகுதி நேரம்   பாதுகாப்பு கொடுப்பது, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலேயே சென்றுவிடும். குற்றப்புலனாய்வில் மிகமிக குறைவாகவே அறிவியல் கருவிகளும் அறிவியல் முறைகளும் கையாளப்படுகின்றன. குற்றப் புலனாய்வுக்கான நிதி ஒதுக்கீடு வெளியே சொல்ல வெட்கப்படும் அளவுக்கு குறைவு.

இருந்தும் இங்கே எப்படி குற்றம் கட்டுப்பாட்டில் இருக்கிறது? குற்றவாளிகள் எப்படி பிடிபடுகிறார்கள்? இரண்டு காரணங்கள். ஒன்று, இங்கே பொதுவாக ஒரு கிரிமினலுடன் கிரிமினல் அல்லாத எவருக்குமே உறவிருக்காது. அவன் கிரிமினல்களின் உலகுடன் மட்டுமே தொடர்பில் இருக்கமுடியும். எல்லா லௌகீகர்களும் அவனிடமிருந்து ஜாக்ரதையாக விலகிவிடுவார்கள். ஆகவே ஒரு கிரிமினலைப் பற்றி இன்னொரு கிரிமினலிடம் விசாரிக்க முடியும். குற்றவாளி குற்றம் செய்துவிட்டு செலவழிக்க இந்த சமூகத்திற்குள்தான் வந்தாகவேண்டும். அவர்கள் ஒருவரை ஒருவர் வேவுபார்ப்பவர்கள். ஆகவே ஒருவரை அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

இரண்டு, கிரிமினல்களின் இயல்பு. கிரிமினல் என்பவன் ஒரு கலைஞன். அவனுக்கு பாராட்டும் ரசிப்பும் தேவை. அவன் தான் செய்த ஒரு செயலைப்பற்றி எங்காவது சொல்லாமல் இருக்கமாட்டான். சக கிரிமினல்களிடம் பீற்றிக்கொள்வான். விபச்சாரிகளிடம் சொல்வான். ஒரு கிரிமினல் கொஞ்சம் புத்திசாலித்தனமாகக் குற்றம் செய்துவிட்டு சிவில் சமூகத்தில் ஒருவனாக கச்சிதமாக மறைந்துகொண்டால், அந்தக் குற்றம்பற்றி வாயே திறக்காமல் இருந்தால் அவனை பிடிக்கமுடியாது. எங்கள் வலையில் அவன் மாட்டமாட்டான்.முட்டையிட்டு உட்கார்ந்திருக்கும் குளக்கோழியை நாய் பிடிக்காது, ஏனென்றால் அதற்கு மணமே இருக்காது.

இந்த ஆள் பல ஆண்டுகள் தொடர்ந்து திருடியிருக்கிறான். ஆனால் பணம், தங்கம் தவிர எதையுமே திருடியதில்லை. பொருளை விற்பதென்றால் திருட்டு உலகுக்குத்தான் செல்லவேண்டும், மாட்டிக்கொள்வான். தங்கத்தை விற்க முயலவில்லை, திருட்டுநகையை விற்கப்போனால் ஓரிரு முறைகளுக்குமேல் விற்கமுடியாது, போலீஸ் அங்கே வலையை விரித்திருக்கும். இவன் நகைகளை வெவ்வேறு வங்கிகளில் அடமானம் வைப்பான். அது முழுகிப்போகும் நிலையில் அடகுநகைகளை மீட்டு விற்கும் நிறுவனத்திடம் கைமாறி பணம் வாங்கிவிடுவான். அவர்கள் நகைகளை மீட்டு மொத்தமாக நகைநிறுவனங்களிடம் உருக்கக் கொடுத்துவிடுவார்கள். நகைகள் சிக்கிக்கொள்ள வாய்ப்பே இல்லை.

மிகமிக கவனமான திருடன் அவன்.பல நுட்பங்களை அனுபவம் வழியாகவே கற்றிருந்தான். பகலில் பைக்கில் ஊரைச்சுற்றி திருடவேண்டிய இடத்தை அடையாளப்படுத்துவது அவன் வழக்கம். அவன் பைக்கே ஒரு பெரிய கிடங்கு. அதன் டியூப்ளைல் பல அறைகள், துளைகள். அவன் பெரிய பணக்கார குடும்பங்களில் திருடுவதில்லை, அவர்கள் நாய், சிசிடிவி, வாட்ச்மேன் போன்று பல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருப்பார்கள். அவன் திருடியதெல்லாமே நடுத்தரக் குடும்பங்களில்தான். பெரும்பாலும் அப்பார்ட்மெண்டுகளில். அதிலும் தரைத்தளங்களில் உள்ள வீடுகளில் அல்ல, அங்கே சன்னல்கள் வலுவான கம்பிகளுடன் இருக்கும். மேலே உள்ள அப்பார்ட்மெண்டுகளில் ஜன்னல்கள் பாதுகாப்பு குறைவானவை, உறுதியற்றவை.

அந்த ஜன்னல்களில் எரியும் லைட்டை வைத்து அங்கே ஆளிருக்கிறதா இல்லையா என்று ஊகித்துவிடுவான். ஜன்னல் பாரப்பெட்டுகள்மேல் தாவி எளிதாக மேலே செல்வான். அவனிடம் இருந்தது ஒரே ஒரு சிறு இரும்புக் கருவி. ஒருமுனை சுத்தியல், மறுமுனையின் கைப்பிடியில் ஸ்குரூ டிரைவர் இருக்கும். சுத்தியல் வட்டத்திற்குள் ஓர் ஓட்டை. அதில் கம்பியைச் செருகி நெம்புகோலாக ஆக்குவான்.. நம் ஜன்னல்களில் பெரும்பாலானவை வெல்டிங் செய்யப்பட்ட கிரில் பொருத்தப்பட்டவை. பெயிண்ட் அடித்தால் உறுதியான இரும்பு சட்டகம் போல தெரியும். ஆனால் உள்ளே இரும்பை துளி உருக்கி ஒட்டி வைத்திருப்பார்கள். அதுவும் சரியாக குளிரவைக்கப்படாமல் பொருக்காகவே இருக்கும். கையால் ஓங்கி அடித்தாலே உடைந்துவிடும். அவன் கிரில் பொருத்தில் ஈரத்துணியை இறுக்கமாகச் சுற்றி அதன்மேல் சுத்தியலால் ஒரே அடியில் உடைத்துவிடுவான். தப் என்று ஒரு மெல்லிய ஓசைதான் கேட்கும். நான்கு இடங்களில் உடைத்தால் கிரில்லை விலக்கிவிடலாம்.

இப்போது பல ஜன்னல்களில் கம்பிகள் ஸ்குரூ வைத்து பொருத்தப்பட்டிருக்கின்றன. அவற்றை எளிதில் கழற்றிவிடலாம். பல அப்பார்ட்மெண்ட்களில் ஜன்னல்கள் சுவர்களுக்குள் ஒரு இஞ்ச் அளவே நுழைந்திருக்கும். அவற்றை அடித்து பெயர்ப்பதும் எளிது. உள்ளே நுழைந்து பீரோ அல்லது பெட்டிகளை திறந்து நகை, பணம் எடுத்துக்கொண்டு சென்றுவிடுவான். பீரோ சாவிகளின் ஆயிரம் மாடல்களை வைத்திருந்தான்.

அவன் திருடியதெல்லாம் பெரும்பாலும் பத்து பவுனுக்குள்தான்.சாதாரணமாக இந்தவகையான திருட்டுக்கள் தீவிரமாக புலன்விசாரணை செய்யப்படுவதில்லை. போகிறபோக்கில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு ஃபைல்களில் கிடக்கும். ஏதாவது திருட்டுவழக்கில் கைதாகும் குற்றவாளியின் பேரில் இதையும் ஏற்றி, அந்த திருட்டு நகையில் ஒருபவுனை இதில் கணக்கு காட்டி முடித்துவிடுவார்கள். ஆகவே இவன் தொடர்ச்சியாக திருடிக் கொண்டே இருந்திருக்கிறான்.

இப்படி பன்னிரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 16 கிலோ தங்கத்தையும் பதினேழு லட்சம் ரூபாயையும் கொள்ளையடித்திருக்கிறான். சிசிடிவிகளை முன்னரே கண்காணித்திருப்பான், அவை உள்ள தெருக்களை தவிர்த்துவிடுவான். கைரேகைகளை மறைக்க ரப்பர் கையுறைகளை பயன்படுத்துவான். திருடும் பகுதிகளில் எங்கும் செல்ஃபோன்களைப் பயன்படுத்துவதில்லை. அவனை மீறித்தான் ஓரிரு இடங்களில் கைரேகை பதிவாகியது. பைக் ஒரே ஓர் இடத்தில் சிசிடிவி பதிவில் சிக்கியது. இதெல்லாம்கூட கடைசியில் அவன் கொஞ்சம் சலிப்படைந்து கவனத்தை இழக்க ஆரம்பித்த பிறகுதான். அவன் திருடன் என அவன் அவனுக்கேகூட சொல்லிக்கொண்டதில்லை.

திருடன் பிடிபட்டதை அறிந்த கந்தசாமி அவனை விசாரிப்பதற்காகச் சென்றான். மகேஷ் அடிதாங்காதவன். எல்லாவற்றையும் ஒப்பித்துவிட்டான். அப்போதுதான் அவன் அப்பா ஸ்டேஷனுக்கு வந்தார். அவரை உள்ளே வரச்சொன்ன கந்தசாமி திகைத்து எழுந்துவிட்டான், வந்தவர் சிவராஜ பிள்ளை. அவர் தன் பையனை போலீஸ் ஏதோ தவறாக விசாரிக்கிறார்கள் என்றுதான் நினைத்தார். கந்தசாமியைப் பார்த்ததும் சிவராஜ பிள்ளைக்கு ஆறுதல். நம்பிக்கையுடன் வந்து அமர்ந்துகொண்டார். நலம் விசாரிப்புகளை செய்தார். அதன்பின் தன் பையனை தவறாக கூட்டிவந்துவிட்டதாகவும் அவனை விட்டுவிடவேண்டும் என்றும் சொன்னார்.

“என்னால் ஒன்றுமே பேசமுடியவில்லை. அவரிடம் எப்படிச் சொல்வது என்று மனம் மலைத்துவிட்டிருந்தது. பிறகு மெல்ல சொல்ல தொடங்கினேன்” என்று கந்தசாமி சொன்னான் ஆனால் எனக்கு ஒன்று தெரியும், கந்தசாமி நல்லவன்தான். சிவராஜ பிள்ளை மேல் அவனுக்கு பெரிய மதிப்பும் இருந்தது. ஆனால் மனிதமனம் இந்தமாதிரியான சந்தர்ப்பங்களில் அபாரமாக திளைக்கும் தன்மை கொண்டது. இதை அது தவறவே விடாது.

மனிதனுக்கு இருக்கும் அகவயமான இரண்டு சந்தோஷங்கள் தான் நினைத்தபடியே ஒன்று நடப்பது, நினைத்ததற்கு மாறாக நடப்பது. நினைத்தபடியே நடக்கும்போது ஆணவம் நிறைவடைகிறது. நினைக்காதது நடக்கும்போது புதிய ஒன்றை சந்தித்த பரபரப்பு ஏற்படுகிறது. ஆனால் இதெல்லாம் இன்னொருவருக்கு நடக்க வேண்டும். அப்போதுதான் அது இன்பம். தனக்கே நடந்தால் அது ஒரு அவஸ்தை மட்டும்தான். எந்த அவஸ்தையும் அதிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்ற தவிப்பை மட்டும்தான் அளிக்கிறது. துன்பம் மட்டும் அல்ல இன்பமும்கூட ஒருவகை அவஸ்தையாகத்தான் இருக்கிறது.

சரி, கந்தசாமிக்கு வருகிறேன். அவன் சிவராஜ பிள்ளை மீதான அனுதாபத்தை அந்த மனக்கிளர்ச்சியால் கடந்தான். அந்த தருணத்தை முடிந்தவரை நாடகத்தனமாக்கிக்கொண்டான். அதற்கு தனக்கு ஒரு ‘ரோல்’ உருவாக்கிக்கொண்டான். அதாவது ‘அனுதாபப்படும் பொறுப்பான காவல் அதிகாரி!. ஆமாம், மேஜர் சுந்தரராஜன் தான்.

அவன் சிவராஜ பிள்ளையிடம் அமர்த்தலாக “உங்க மகன் எங்கே வேலை பார்க்கிறான்னு தெரியுமா? என்று கேட்டான்.

சிவராஜ பிள்ளை “இன்ஃபோஸிஸில்” என்றார். ஆனால் அவனுடைய அந்த அமுத்தலான கேள்வியே அவருக்கு அவநம்பிக்கையை உருவாக்கியது.

“அவன் எஞ்சீனியரிங் பாஸ் ஆனானா? நீங்க அவன் சர்ட்டிஃபிகெட்டை பார்த்தீர்களா?”

சிவராஜ பிள்ளை அழ ஆரம்பித்தார்.

”சொல்லுங்க” என்றான் கந்தசாமி.

சிவராஜ பிள்ளை ”இல்லை. அவன் சொன்னான்” என்றார்.

“அவன் பொய் சொல்றான். அவனை வரவழைக்கிறேன். அவனிடம் நீங்களே பேசுங்க.”

அவர் நடுங்கிக்கொண்டே இருந்தார். பிறகு “அவன் என்ன தப்பு செஞ்சான் சார்?”என்றார்.

“திருட்டு… ஒண்ணு ரெண்டுல்ல, முந்நூறுக்கும் மேலே. கிட்டத்தட்ட பதினாறு கிலோ தங்கம். பதினேழு லட்சம் ரூபாய்… மேலேகூட இருக்கும். அவன் ஒப்புக்கொண்டாச்சு. அவனே குடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் ஒன்றரைக்கிலோ நகைக்கு அடகுக்கடை  ரசீதுகளை கண்டுபிடிச்சிருக்கோம்…

அவர் ஏதோ சொல்ல வருவதுபோல் இருந்தது. வாய் வலப்பக்கமாக இழுபட்டது. சட்டென்று நாற்காலியிலேயே பக்கவாட்டில் மயங்கி விழுந்துவிட்டார் கந்தசாமி அதை எதிர்பார்த்திருந்தமையால் சட்டென்று பாய்ந்து பிடித்துக்கொண்டான். ஒரு சிறு வலிப்பு வந்தது. தூக்கி பெஞ்சில் படுக்க வைத்தார்கள்.

முகத்தில் நீர் தெளித்தபோது நினைவு திரும்பியது. சிலகணங்கள் என்ன ஏது என்று புரியாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் நெஞ்சைக் கிழிப்பதுபோல ஓர் ஓலம். உடல்மேல் கொதிக்கும் எண்ணையை கொட்டினால் எப்படி இருக்கும். அப்படி ஓர் அலறல், அப்படி ஒரு துடிப்பு. கந்தசாமி சற்றுமுன்பு வரை இருந்த உணர்ச்சிகள் எல்லாம் அகன்று தானும் உடல்நடுங்கி அழுதுவிட்டான்.

சிவராஜ பிள்ளை எழுந்து ஓட முயன்றார். சுவரில் முட்டிக்கொண்டு அப்படியே விழுந்து மீண்டும் வலிப்பு. டாக்டரை வரவழைத்து பெத்தெடின் ஊசி போட்டு அப்படியே தூக்கிக் கொண்டு சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.

மச்சானே, இந்த சமயத்தில்தான் நான் உள்ளே நுழைகிறேன். நான் சும்மா சந்திக்கலாமே என்று கந்தசாமியைக் கூப்பிட்டபோது அவன் மகேஷின் மனைவியையும் தங்கைகளையும் விசாரிக்கவேண்டிய சூழலில் இருந்தான். “என்னால் விசாரிக்க முடியாது. என் கை நடுங்குகிறது…. நீ வந்து கூடவே இரு” என்றான்.

‘நான் என்ன செய்யமுடியும்? என் ஏரியா வேறு” என்றேன்.

“வந்து கூடவே இரு” என்று கெஞ்சினான்.

நான் “சரி” என்றேன். ஆனால் எனக்கு பெரிய ஆர்வம் இருக்கவில்லை.

அந்தப் பெண்களை அவர்களின் அப்பார்ட்மெண்டிலேயே வைத்திருந்தார்கள். அவர்களுக்கு இன்னமும் முழுச் செய்தி சொல்லப்படவில்லை. ஒரு வழக்கு விஷயமாக மகேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறான். சிவராஜ பிள்ளை ஆஸ்பத்திரியில் இருக்கிறார், அவ்வளவுதான் அவர்களுக்கு தெரியும். எல்லாவற்றையும் அவர்களுக்குச் சொல்லவேண்டிய பொறுப்பு கந்தசாமிக்கு. அவன் நடுங்கிக்கொண்டிருந்தான்.

காரில் செல்கையில் “நீயே சொல்… என்னால் முடியாது” என்றான்.

“டேய் நீ போலீஸ்காரன்…. சீப் செண்டிமெண்ட் வேஷம் போடாதே” என்றேன்.

“என்னால் முடியாது… சிவராஜ பிள்ளைக்கு ஏதாவது ஆகிவிட்டால் நானே மெண்டல் ஆகிவிடுவேன்” என்றான். ”அந்தப்பெண் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவள். இரண்டு பிள்ளைகள் இருக்கின்றன. இவனை ஐடி ஊழியன் என்று நம்பி திருமணம் செய்திருக்கிறாள். இந்தச் செய்தியை எப்படி அவள் ஏற்றுக்கொள்வாள்? சாவுச்செய்திதான் பெரிய அதிர்ச்சி. ஆனால் இது அதைவிட நூறுமடங்கு பெரிய அதிர்ச்சி”

நான் “சும்மா பெரிதுபடுத்திக்கொண்டே போகாதே… அதிர்ச்சி தரும் செய்தி ஒருவகை என்றால் இழப்பும் நோயும் நேர் எதிரானவை. இழப்பும் நோயும் கொஞ்சம் கொஞ்சமாக வளரும். மாறாக அதிர்ச்சி உச்சகட்டத்தில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். அதிர்ச்சி தரும் செய்தியிலுள்ள மிகச்சிறந்த அம்சமே அது குறைந்தே ஆகவேண்டும் என்பதுதான். குறையக் குறைய ஆறுதல் அடைகிறார்கள். நிதானமாகிறார்கள். சிலநாட்களுக்குப் பிறகு மகிழ்ச்சியாககூட உணர்கிறார்கள். போதிய அளவு விலகியதும் அதிர்ச்சியான விஷயத்தைப்பற்றி உற்சாகமாகப் பேசிக்கொள்ள தொடங்குகிறார்கள். நல்ல நினைவாக ஆக்கிக் கொள்கிறார்கள்” என்றேன்.

அவன் “நீ குரூரமானவன், சிரியன் கிறிஸ்தவர்கள் மனிதர்களே அல்ல” என்றான்.

“நான் மார்த்தோமா கிறிஸ்தவன்” என்றேன்.

“அவர்கள் இன்னும் மோசம்.”

ஃப்ளாட்டில் எஸ்.ஐயும் இரண்டு கான்ஸ்டபிள்களும் இருந்தனர். அந்தப்பெண் நல்ல அழகி. அவனுடைய தங்கைகள் இருவரும் கொஞ்சம் சுமார்தான். மூவருமே பதறிக் கொண்டிருந்தார்கள். மற்ற பிளாட்டுகளின் கதவுகள் மூடியிருந்தன. சன்னல்களில் தலைகள் நிறைந்திருந்தன.

உள்ளே சென்றபோது கந்தசாமி கெத்தாக இருந்தான்.அவர்களை அமரச் சொன்னான். தானும் அமர்ந்தான். நான் கைகட்டி சுவர் சாய்ந்து பக்கவாட்டில் அவர்களை பார்த்தபடி நின்றேன். அது நிகழ்வதைக் கவனிப்பதற்கு நல்ல கோணம்.

என் ஆர்வம் முழுக்க கந்தசாமி மீதுதான் இருந்தது. அவன் எப்படி அதைக் கையாளப்போகிறான். அவன் அந்தப்பெண் அவ்வளவு அழகாக இருப்பதை எதிர்பார்க்கவில்லை. ஆகவே நிலைகுலைந்துவிட்டான். அவன் நல்ல கருப்பு, குண்டு. ஆகவே அவன் மிகையான கம்பீரம் அடைந்தான். ஆமாம், விஜயகாந்த்!

“சார், அவரை எப்படியோ தவறாக பிடித்துவிட்டீர்கள். அவர் படித்தவர், டீசண்டானவர், ஐடியில் நல்ல வேலைபார்க்கிறார். அமைதியானவர்” என்று அவள் சொன்னாள். “என் அப்பாவுக்கு ஃபோன் செய்தேன். என் தம்பி வந்துகொண்டிருக்கிறான்… இன்னும் சற்றுநேரத்தில் வந்துவிடுவான்” உச்சரிப்பு முன்னும்பின்னுமாக இருந்தாலும் இலக்கணச் சுத்தமாக நல்ல ஆங்கிலம் பேசினாள்.

அவளுடைய ஆங்கிலம் கந்தசாமியைச் சீண்டியது. அவன் பேசியது நல்ல விஜயகாந்த் ஆங்கிலம் “உங்கள் கணவர் எங்கே வேலை பார்ப்பதாகச் சொன்னீர்கள்?”

அவள் “இன்போஸிஸ்” என்றாள்

“ஆபீஸ் நம்பர் ஏதாவது தெரியுமா?”

“தெரியாது”

“அவர் ஆபீஸுக்கு போயிருக்கிறீர்களா?”

“இல்லை”

“அவர் ஆபீஸ் நண்பர்கள் எவரையாவது தெரியுமா? யாருடைய நம்பராவது இருக்கிறதா?”

அவள் திகைத்துவிட்டாள். பிறகு மிக மெல்ல “இல்லை” என்றாள்

உண்மையில் அப்போதே அவளுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது மிகமிக ஆழத்தில் ஏதோ சந்தேகம் கண்டிப்பாக இருந்திருக்கும். மிக ஆழத்தில் இருப்பதனாலேயே அழுத்தமானதாக ,கூரானதாக, தர்க்க அடிப்படை அற்றதாக இருந்திருக்கும். மறுக்கப்படாததாக, அதனாலேயே வளர்ந்துகொண்டிருப்பதாக.

அவளால் நிற்க முடியவில்லை. அப்படியே சோபாவில் அமர்ந்துவிட்டாள். தங்கைகள் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“உங்கள் கணவரிடமிருந்து அவருடைய பீரோவுக்கான சாவியை கைப்பற்றியிருக்கிறோம். அதை சோதனை போடவேண்டும்… அவருடைய பீரோ எது, காட்டுங்கள்.”

அவள் நிமிராமலேயே சுட்டிக்காட்டினாள்.

அந்த பீரோவை திறந்தோம். உள்ளே கிட்டத்தட்ட ஒருகிலோ நகைகள் இருந்தன. ஏராளமான ரசீதுகளும். அவற்றை அள்ளிக்கொண்டுவந்து மேஜையில் வைத்தோம். அவற்றை எடுப்பதை போலீஸ் புகைப்படக்காரர் புகைப்படம் எடுத்தார்.

சட்டென்று அவள் வெறிகொண்டு கூச்சலிட்டபடி ஓடினாள். அவள் பக்கத்து அறைக்குள் நுழைவதற்குள் கந்தசாமி ஓடிச்சென்று கதவுக்கு நடுவே காலைவைத்துவிட்டான். அவள் கதவை அறைந்தபடி கூச்சலிட்டு கதறினாள். அழுதபடியே தரையில் விழுந்தாள். அந்த இரு தங்கைகளும் கதறினார்கள்.

அனைத்துப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு கிளம்பும்போது அந்தவீட்டில் இரண்டு பெண்போலீஸ்காரர்களை நிற்கச்செய்துவிட்டு வந்தோம்.

மகேஷ் இன்னொரு அப்பார்ட்மெண்ட் வைத்திருந்தான். அப்படி ஒரு அப்பார்ட்மெண்ட் இருப்பது அவன் குடும்பத்திற்கு தெரியாது. அங்கே மேலும் நகைகள் கிடைத்தன. கிட்டத்தட்ட மூன்றரைகிலோ தங்கம்.

சிவராஜ பிள்ளையிடம் ஒரு வாக்குமூலம் வாங்கவேண்டியிருந்தது. ஆகவே நானும் கந்தசாமியும் ஆஸ்பத்திரிக்குச் சென்றோம். அவருக்கு குளூகோஸ் அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. களைப்பால் கதறி அழ முடியாதவராக இருந்தார். களைப்பே துயரத்தை குறைக்கும். ஏனென்றால் களைத்த மூளை ஓய்வெடுக்க விரும்பும், அப்படியே மயங்க விரும்பும். மச்சானே, மூளை மயங்க விரும்பினால் இனிய நினைவுகளை உருவாக்கிக் கொள்கிறது. மூளைக்கு மிகமிக பிடித்தமானது மயங்கிக் குழைந்து அமிழ்வது.

நாங்கள் செல்லும்போது சிவராஜ பிள்ளையின் இமைகள் சரிந்து சரிந்து எழுந்தன. நாக்கு குளறியது. முனகலாக “எல்லாம் போச்சு… எல்லாம் போச்சு… இனி ஒண்ணுமில்லை” என்றார். “சாஸ்தாவை கும்பிட்டேன்… அவன் என்னை கைவிட்டுட்டான்… சாஸ்தா என்னைய கைவிட்டுட்டான்”

கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. கைகால்கள் தளர்ந்து மெத்தைமேல் கிடந்தன. நாக்கு குழைந்தது. இமைகளை தூக்கமுடியவில்லை. களைப்பைப் போல பெரிய போதையே இல்லை. உடல் களைத்தாலே நல்ல போதை. உள்ளமும் களைத்து அதன் இறுதி எல்லையை அடைந்து மீளும் அனுபவம் இருக்கிறதே, அது ஒருவகை அனுபூதி, பரவசம். அதை அடைந்தவர்கள் திரும்பத் திரும்ப அதைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். விதவிதமாக வர்ணிப்பார்கள்.

அவருடைய கைரேகை, கையெழுத்து வாங்கிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் வந்தோம். நான் மகேஷைச் சந்திக்க விரும்பினேன். அவன் இன்னொரு விடுபட்ட நிலையில் இருந்தான். இதையும் கூர்மையான போலீஸ்காரர்கள் உணர்ந்திருப்பார்கள். பிடிபட்டு, குற்றம் முழுக்க போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு, போதிய அளவுக்கு அடிவாங்கி ஓருசிலநாட்கள் தூக்கமும் இல்லாமல் இருந்தபின் குற்றவாளிகள் நிம்மதியான ஆறுதலான ஒரு நிலையை அடைகிறார்கள். ஒரு பெரிய வலிக்குப்பின் வலியில்லாத நிலையை அடைவதுபோல.

குற்றவாளிகளுக்கு அக்குற்றம் சார்ந்து குற்றவுணர்வு இருப்பது மிகமிக அரிது. குற்றவுணர்ச்சி என்பது அதிகபட்சம் ஆறுமாதத்தில் இல்லாமலாகும் ஓரு மெல்லுணர்வுதான். ஆனால் அவர்களுக்கு பிடிபடுவதைப் பற்றிய பதற்றம் இருக்கும். குற்றவுணர்ச்சியைக் கடப்பதுபோல அதை அவர்கள் கடப்பதில்லை. ஏனென்றால் கடக்க முயல்வதில்லை, அதற்கான தர்க்கங்களை உண்டுபண்ணிக் கொள்வதில்லை. மாறாக அதை அவர்கள் வளர்த்துக் கொள்வார்கள். ஏனென்றால் அது அவர்களை ஜாக்ரதை உணர்வு கொண்டவர்களாக ஆக்குகிறது. அவர்களின் தொழிலுக்கு அது தேவை.

அதோடு, அது அவர்களின் தொழிலை சுவாரசியமாக்குகிறது. பரபரப்பான சாகசமாக ஆக்குகிறது. இது கொஞ்சம் கடந்த கூற்றுதான், ஆனால் இது உண்மை. ஒரு குற்றச்செயலைச் செய்பவன் தான் எப்படியெல்லாம் பிடிபடக்கூடும் என்று தர்க்கபூர்வமாக யோசிப்பான். அந்த வாய்ப்புகளை எல்லாம் அடைப்பான், அது தொழில்தேவை. ஆனால் அதோடு அவன் தான் பிடிபடுவதைப் பற்றி பலவாறாக கற்பனை செய்து கொள்வான். அந்தக் கற்பனையால்தான் அவனுடைய செயல்கள் சாகசமாக ஆகின்றன. இந்தப் பதற்றம் குற்றவாளியின் வாழ்க்கை முழுக்க இருந்துகொண்டிருப்பது.

குற்றவாளி மெய்யாகவே பிடிபட்டு அந்த போலீஸ் நடத்தும் சடங்குகள் முடிந்ததும் அதுவரை இழுத்து வளைத்து கட்டப்பட்டிருந்த ஒன்று விடுபடுகிறது. அவன் சுதந்திரமானவன் ஆகிறான். அந்த நிம்மதியில் திளைக்கிறான். அத்துடன் அடி. மச்சானே, அடி மூன்றுவகை. விழப்போகும் அடி பயங்கரமானது. நினைக்க நினைக்க பெருகுவது. விழும் அடி அக்கணத்தில் எப்படியேனும் தவிர்த்துவிடவேண்டும் என்னும் தவிப்பு மட்டும்தான். விழுந்த அடி உண்மையில் மிக ஆறுதலானது, இனிமையானது. ஏனென்றால் அது கடந்துபோய்விட்டது, இனி இல்லை என ஆகிவிட்டது. கடந்துவிட்டோம் என்னும் எண்ணம் இனியது.

அடி இனிமேல் இல்லை என்று ஆனபின் குற்றவாளிகளின் முகம் தெளிந்துவிடும். நம்மைக் கண்டால் புன்னகைப்பார்கள். பல குற்றவாளிகளின் முகம் தேவதூதர்களுக்குரிய அமைதியும் கனிவும் கொண்டிருக்கும். எந்த இக்கட்டானாலும் அதன் உச்சத்தைக் கண்டு, இவ்வளவுதான் என்று உணர்வது ஒரு பெரிய ஆறுதல். மனிதனுக்கு தெய்வம் தம்புரான் அளிக்கும் இன்பங்களில் முதன்மையானது அது. அதற்காகவேனும் சிக்கல்களில் நீயெல்லாம் மாட்டிக் கொள்ளவேண்டும் பாண்டித்தமிழ் எழுத்தாளா!

நான் சொல்லவந்தது இதுதான். நான் மகேஷை அழைத்து வரச்சொன்னேன். அவன் அமைதியான முகத்துடன் உள்ளே வந்தபோது என்ன நடந்தது என்றே தெரியவில்லை, ஓர் உறுமலுடன் நான் அவன்மேல் பாய்ந்தேன். அடி நொறுக்க ஆரம்பித்தேன். மிதிமிதியென மிதித்தேன். சற்றுவிட்டு என் வேகம் குறையத் தொடங்கியபின் கந்தசாமி என்னை பிடித்தான். நான் நிலையழிந்ததில் அவனுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.

நான் இரண்டுநாட்கள் அந்தப் பக்கமாகவே போகவில்லை. என்னைப் பற்றியே நினைத்து வெட்கி கூசிவிட்டேன். அடிவாங்கி உதடெல்லாம் உடைந்து அந்த பையன் சுருண்டு கிடந்த காட்சி என் நினைவில் வந்தபடியே இருந்தது. அழகான பையன், கம்பீரமானவன். கண்ணில் அப்படி ஒரு புத்திசாலித்தனம். நான் ஏன் அப்படி ஆனேன்? நான் என்னைப்பற்றி நினைப்பதெல்லாம் பொய்யா? நான் உள்ளூர வேறு ஒருவன்தானா?

பத்து நாட்களுக்குப்பிறகு நானே மீண்டும் கந்தசாமியைச் சந்திக்கச் சென்றேன். அவர்கள் அவனிடம் விரிவாக விசாரணைகள் செய்து கேஸ் உருவாக்கும் முயற்சிகளை தொடங்கியிருந்தனர். சிவராஜபிள்ளை ஆஸ்பத்திரியில்தான் இருந்தார். அவன் மனைவியை அவள் தம்பி வந்து ஊருக்குக் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டான். அவளோ அவள் குடும்பமோ வந்து மகேஷைப் பார்க்கவே இல்லை. அவனுடைய இரு தங்கைகளும்தான் தனியாக அந்த அப்பார்ட்மெண்டில் இருந்தனர். ஒருத்தி அப்பாவுடன் ஆஸ்பத்திரியில் இருந்தாள். ஒருத்தி வீட்டில் இருந்தாள். அவர்கள் அழுது ஓய்ந்து பைத்தியம் போல ஆகிவிட்டிருந்தனர். பக்கத்துவீட்டுக்காரர்கள் எவரும் எட்டிப் பார்க்கவில்லை. நல்லவேளையாக அவர்களின் வங்கிக்கணக்கில் பணம் இருந்தது.

அதற்குள் மகேஷை கோர்ட்டில் ஆஜராக்கி விசாரணைக் கைதியாக காவலில் எடுத்திருந்தனர்.. நாளிதழ்களில் அவனைப் பற்றிய கட்டுரைகள் வந்தன. பெரும்பாலான கட்டுரைகள் நிருபர்களின் கற்பனைகள். மகேஷ் செய்த கொலைகளைக்கூட ஒருவர் பட்டியலிட்டிருந்தார். கற்பழிப்புகள். மகேஷ் புகுந்த வீடுகளில் இருந்த பெண்களுடன் அவன் காதல்விளையாட்டுகள் ஆடியதாக ஒரு கட்டுரை. ஒரு பெண் தங்கச்சங்கிலியை அவளே கொடுத்தாளாம்! நாமெல்லாம் திருடுவதில்லை, ஆனால் திருட்டை நடித்துக்கொண்டே இருக்கிறோம்.

ஒருநிருபர் நாகர்கோயில் அருகே பறக்கைக்குச் சென்று அங்கிருந்த மகேஷின் மனைவி, மனைவியின் அப்பா அம்மா அண்ணா தம்பி ஆகியோரை ரகசியமாக புகைப்படம் எடுத்து செய்திக்கட்டுரை வெளியிட்டிருந்தார். அவன் தங்கைகள் நாள்தோறும் செய்திகளில் படத்துடன் இடம்பெற்றனர்.

நான் சென்றபோது கந்தசாமி மகேஷை விசாரணை செய்துகொண்டிருந்தான். போலீஸ் விசாரணையின் மூன்று கட்டங்களை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். முதல் கட்டத்தில் போலீஸ் மூர்க்கமாக தன் ஆற்றலை வெளிப்படுத்தும். குற்றவாளியை உடைக்கும். குற்றவாளி எதிர்ப்பு தெரிவித்து உறுதியாக இருக்கும்தோறும் அந்த மூர்க்கம் கூடிவரும். இரண்டாம் கட்டத்தில் போலீஸ் நிதானம் அடையும். குற்றவாளியும் பதற்றம் அழிந்து சமநிலையை அடைவான். அது ஒரு கொடுக்கல் வாங்கல் காலகட்டம். போலீஸுடன் குற்றவாளி ஒத்துழைத்தால் போலீஸ் குற்றவாளிக்குச் சில சலுகைகளை அளிக்கும்.

மூன்றாம் கட்டத்தில் போலீஸும் குற்றவாளியும் நட்பாகி விடுகிறார்கள். இருவரும் சேர்ந்தே செயல்பட்டு சிலநாட்கள் ஆகிவிட்டமையால் ஒருவரை ஒருவர் அறிந்துவிட்டிருப்பார்கள். சாதாரணமான உரையாடல் நிறைய நடந்திருக்கும். பேசவும் சிரிக்கவும் தொடங்கியிருப்பார்கள். பல போலீஸ்காரர்களுக்கு குற்றவாளிகள்மேல் ஒரு மானசீகமான மதிப்பு உண்டு, அவர்கள் புத்திசாலிகள் என்ற எண்ணம். ஆகவே அது ஒரு வகையான குட்டி வசந்தகாலம்.

அதோடு ஒரு நுட்பமான விஷயம் உண்டு, இதை நானே சும்மா அடித்துவிடுகிறேன் என நீங்கள் நினைத்தால் மறுக்கமாட்டேன். போலீஸ்காரகள் குற்றவாளிகளுடன் புழங்கிக்கொண்டே இருக்கிறார்கள். குற்றவாளி இப்படியெல்லாம் செய்திருப்பான் என்று கற்பனை செய்து மானசீகமாக நடிக்கிறார்கள். குற்றத்தை புலனாய்வு செய்ய சிறந்த வழி அது. ஆனால் காலப்போக்கில் அவர்களுக்குள் ஒரு நடிப்புக்குற்றவாளி உருவாகிவிடுகிறான். பல போலீஸ்காரர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது இந்த நடிப்பை அறியாமல் நிஜமாக்கி விடுவதனால்தான். சஸ்பெண்ட் ஆகியிருக்கும்போதோ ஓய்வுபெற்ற பிறகோ திருடவும் வழிப்பறி செய்யவும் இறங்கும் போலீஸ்காரர்கள் உண்டு தெரியுமா?

இதேதான் குற்றவாளிகளுக்கும். அவர்கள் போலீஸ்காரர்களாக கற்பனைசெய்துதான் பிடிபடும் வழிகளை ஊகிக்கிறார்கள், அவற்றை தவிர்க்கிறார்கள். ஆகவே அவர்களுக்குள் ஒரு நடிப்புப் போலீஸ் இருக்கிறான். நிறைய குற்றவாளிகள் போலீஸ் சீருடை போட்டு போட்டோ எடுத்துக்கொள்வார்கள். புதிய இடங்களில் தங்களை போலீஸ்காரர்கள் என அறிமுகம் செய்துகொள்வார்கள். சிறிய திருடர்களை போலீஸ் நண்பர்களாக ஆக்கிக்கொண்டால் மிகச் சிறப்பாக பணிபுரிவார்கள்.

இந்த ‘ரோல் பிளேயிங்’ காரணமாக குற்றவாளிக்கும் போலீஸுக்கும் நடுவே ஒரு நல்ல உரையாடல் உருவாகும். இனிமையான பொழுதுகள் பிறக்கும். இருவரும் சேர்ந்து அந்த கேஸை உருவாக்குவார்கள். அப்போது பார்த்தால் அவர்கள் நெடுநாள் நண்பர்கள் போலிருப்பார்கள். சிரித்துப்பேசி கொண்டாட்டமாக இருப்பார்கள். சொன்னேனே அது ஒரு தேனிலவுக் காலகட்டம்.

என்னைக் கண்டதும் மகேஷ் சட்டென்று முகத்தை இறுக்கிக் கொண்டான். நான் இயல்பாக அமர்ந்து கொண்டேன். “உன்னிடம் பேசவேண்டும் மகேஷ்” என்றேன்.

“சர்” என்றான்

“இது விசாரணை இல்லை… இது சும்மா ஒரு உரையாடல். எனக்கு தெரிந்துகொள்ளவேண்டும் போல் இருந்தது” என்றேன். ‘நான் உன்னை ஏன் அடித்தேன் என்று என்னையே கேட்டுக்கொண்டேன். அது கேஸ் சம்பந்தமான நடவடிக்கை இல்லை. நான் இந்த கேசிலேயே இல்லை. நான் ஒரு கணம் உன் அப்பாவின் இடத்தில் என்னை வைத்துப் பார்த்துவிட்டேன். அது பிறகுதான் எனக்குத் தெரிந்தது”

“ஆம், எனக்கு புரிந்தது” என்றான்.

“நான் விஆர்எஸ் கொடுத்துவிட்டேன். இன்னும் ஒருமாதத்தில் போலீஸ் துறையைவிட்டே சென்றுவிடுவேன்” என்றேன். “என் அப்பா எக்ஸ்போர்ட் தொழில் செய்துவந்தார். ஆறுமாதம் முன்பு இறந்துவிட்டார். நாங்கள் மூன்றுபேர். என் அண்ணா துபாயில் சொந்த தொழில் செய்கிறார். அக்கா அமெரிக்காவில் டாக்டர். இப்போது வேறுவழியில்லை, நான் போலீஸ் துறையை விட்டு விலகி சொந்தத் தொழிலைப் பார்க்க போய்த்தான் ஆகவேண்டும்….”

என் உணர்வுகள் அவனுக்கு கொஞ்சம் புதிதாக இருந்தன என்று தெரிந்தது

“எனக்கு இந்தத் துறைமேல் மிகப்பெரிய மோகம் இருக்கிறது. இங்கேதான் என் வாழ்க்கை. நான்கு ஆண்டுக்காலம் இரவுபகலாக படித்து போட்டித்தேர்வு எழுதி நான் இந்த வேலைக்கு வந்தேன். ஆனால் சாவதற்கு முன் என் அப்பா என்னிடம் குடும்பத் தொழிலை பார்க்கும்படிச் சொன்னார். அவர் ஆஸ்பத்திரியில் இருந்தார். அவருக்கு பைபாஸ் செய்திருந்தது. இந்த தொழில் உன் உப்பூப்பன் தடத்தில் குஞ்ஞிவறீது செய்தது. அவர் கையிலிருந்த நாநூறு ரூபாயை முதலீடாகப் போட்டு இதை ஆரம்பித்தார். தடத்தில் ஆல்செயிண்ட்ஸ் எக்ஸ்போர்ட்டர்ஸ் இன்றும் அவர் பெயரில்தான் இருக்கிறது. அந்த பெயர் இல்லாமல் ஆகிவிடக்கூடாது என்று என்னிடம் சொன்னார்.”

”எனக்கும் என் அப்பாவுக்கும் நல்ல உறவே இல்லை. அவர் என்னை குடிகாரநாய் என்றுதான் சொல்வார். நான் அவரை பரோவா மன்னர் என்று சொல்வேன். மூர்க்கமானவர், சர்வாதிகாரி. பரோவா மன்னரின் அதிகாரமெல்லாம் எகிப்தில், நான் மோசே வழிவந்த சத்யகிறிஸ்தியானியாக்கும் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு பெங்களூர் போனேன். ஆனால் அவர் இறந்தபின் அந்த ஆணையை மீறமுடியவில்லை.”

”உன் அப்பாவை பார்த்தபோது என் அப்பாவை நினைத்துக்கொண்டேன். அப்பாக்களிடமிருந்து மகன்களுக்கு விடுதலையே இல்லை”.என்று நான் சொன்னேன் ”மகேஷ், நீ எப்படி இப்படிப்பட்ட ஒரு பெரிய துக்கத்தை உன் அப்பாவுக்கு கொடுத்தாய்? இது உனக்கு நியாயமாக படுகிறதா? அவரைப்பற்றி நீ நினைக்கவே இல்லையா?”

அவன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான்.

“சொல்” என்றேன். “நான் போவதற்குள் மனித மனதைப்பற்றிய இந்த ரகசியத்தை தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். சுயநலம் தவிர அங்கே ஒன்றுமே இல்லையா? இன்னொருவர் உண்மையிலேயே ஒரு பொருட்டே கிடையாதா?”

அவன் கண்களிருந்து நீர் வழிந்தது. அவன் தலைகுனிந்து அமர்ந்திருந்தமையால் நீர்த்துளிகள் மடியில் சொட்டின.

”சொல், ஒரு அண்ணனாக என்னை நினைத்துச் சொல். நான் என்ன வேண்டுமென்றாலும் உனக்காகச் செய்கிறேன்”

”சார், நான் செத்துவிடவேண்டும். அதைப்பற்றித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். என் அப்பாவுக்கு மிகப்பெரிய அசிங்கத்தை தேடித்தந்துவிட்டேன். அவரை நூறுமுறை கொன்றுவிட்டேன். நான் பெரிய பாவி… மிகப்பெரிய பாவி. என் தலைமுறைகளுக்குக் கூட இந்த பாவம் கைமாறிச்செல்லும்… எனக்குத் தெரியும். நான் பாவிகளில் பெரிய பாவி!”

நான் அவன் பேசுவதற்காகக் காத்திருந்தேன்.

அவன் பெருமூச்சுகளாக விட்டுக்கொண்டிருந்தான். பிறகு “சார் நான் சொல்வதை நீங்கள் கூட எப்படி புரிந்துகொள்வீர்கள் என்று தெரியவில்லை” என்றான். “இதை எவரிடம் சொன்னாலும் என் அப்பா பட்ட கஷ்டங்கள், என் குடும்பம் செய்த தியாகங்கள், அப்பாவின் கனவுகள், எனக்கிருந்த பொறுப்பு ஆகியவற்றைப்பற்றித்தான் பேசுவார்கள். ஆனால் ஒரு அப்பட்டமான உண்மை உண்டு. இல்லை என நினைத்துக்கொண்டால் அது இல்லாமல் ஆவதில்லை. அது ஏழையின் தன்மானம்.”.

அவனே தொடர்ந்தான். “சார் அண்ணா பல்கலைகழகத்தில் என்னை அப்பா சேர்த்தபோது அவர் எனக்கு வாங்கித் தந்த உடைகள் என்ன தெரியுமா? இரண்டு சட்டை, இரண்டு வேட்டி. ஆமாம், வேட்டி. சென்னையில் அண்ணா பல்கலையில் வேட்டி உடுத்திக்கொண்டு முதல்நாள் மாணவர் சந்திப்புக்கு போனேன். உள்ளே பழைய ஜட்டி. ராக்கிங் செய்த சீனியர்கள் என் வேட்டியை உருவி ஓடவிட்டார்கள். பழைய ஜட்டியுடன் கூனிக்குறுகி அமர்ந்தேன். அதுதான் என் முதல் கல்லூரி அனுபவம். அன்றைய மாணவர் சந்திப்பில் பிரின்ஸிப்பால் என்னை நோக்கி வேட்டிகட்டிக்கொண்டு வரக்கூடாது என்று சொன்னார். இரண்டாயிரம் கண்கள் என்னை பார்த்தன. இப்போது அப்பா இருக்கும் இதே சிறுமைப்பட்ட நிலையில் அன்று நான் இருந்தேன்.”

ஒரு சீனியர் என்னைப் பார்த்து பரிதாபப்பட்டான். அவன் எனக்கு மூன்று பழைய பான்டை கொண்டுவந்து தந்தான். எனக்கு பொருத்தமே இல்லாத பழைய பாண்டைப் போட்டுக்கொண்டு நான் அடுத்தவாரம் கல்லூரிக்குப் போனேன். அத்தனை பேருக்கும் தெரிந்துவிட்டது, அது பழைய பாண்ட் என்று. அது யாருடையது என்று ஒருவன் கண்டுபிடித்துச் சொன்னான். கிண்டல், சிரிப்பு.

சார், மாணவப் பருவம் உற்சாகமானது. ஆனால் அந்த இளமை குரூரமானது தெரியுமா? சின்னக் குழந்தைகள் பலவீனமான குழந்தையை போட்டு அடிப்பதை பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? மாணவர்களைப்போல இளகியவர்களும் இல்லை, இரக்கமில்லாதவர்களும் இல்லை. அவர்களிடையே சாதி, சமூகமேட்டிமைத்தனம் எல்லாமே உண்டு. உண்மையில் இன்றைய மாணவர்களிடம் நீதியுணர்ச்சி என்பதே இருக்காது. ஏனென்றால் நம் குடும்பங்களில் அதைச் சொல்லிக்கொடுப்பதில்லை. தொழில்நுட்பத்திற்கு வெளியே எதையாவது வாசிக்கக்கூடிய மாணவர்கள் ஓரிருவர் கூட இல்லை. ஆகவே வேறு எந்தவகையிலும் அவர்களுக்கு அறமோ நீதியுணர்வோ அறிமுகமாவதே இல்லை.

அதோடு இன்றைய உயர்கல்வி வளாகங்களில் சமத்துவம், எளியோர் உரிமை போன்ற அரசியல் கருத்துக்களுக்கே இடமில்லை. கல்லூரிகளில் இடதுசாரிக் கருத்துக்கள் கொண்ட ஒருவர் கூட இருப்பதில்லை. அவர்கள் இடதுசாரி ஆவதெல்லாம் நல்ல வேலையில் போய் அமர்ந்தபிறகு ஃபேஸ்புக்கில் மற்றவர்களை வசைபாடுவதற்கும் தாங்கள் தங்கள் ஆடம்பர வாழ்க்கை வழியாக அடையும் குற்றவுணர்ச்சியை சமன் செய்துகொள்வதற்கும்தான்.

தொழில்நுட்ப பல்கலைக்கழகச் சூழல் என்பது வறுமையில் இருப்பவர்களுக்கு ஒரு நரகம். அந்தக் கல்லூரிகளில் பாதிப்பேர் பணக்காரர்கள். எஞ்சியவர்கள் பணக்காரர்கள் போல நடிப்பவர்கள். அத்தனை பேரும் அமெரிக்காவை, நட்சத்திர ஓட்டல் விருந்துகளை கனவு காண்பவர்கள். அவர்கள் தங்களை பணக்காரர்களாக காட்டிக்கொள்வது என்னைப் போன்றவர்களை இழிவுசெய்துதான். நான் ஒடுங்கி கூசிச் சுருங்கி எவர் கண்ணுக்கும் படாமல் வாழ்ந்தவன். ஆனாலும் அவமதிப்புகள். பழைய துணிகளை எனக்குத் தரலாம் என்று அவர்களே முடிவெடுத்தார்கள். அடிக்கடி பழைய சட்டை பாண்டை எனக்கு தருவார்கள். என் உடல்மேல் அமிலத்தை ஊற்றியதுபோல் இருக்கும். ஆனால் மறுக்கவும் துணிவிருக்காது. தனியறையில் அமர்ந்து அழுவேன்.

என் அப்பா பழைய ஆள். அவருக்கு ஒரு கல்லூரிச் சூழலை சொல்லிப் புரியவைக்கவே முடியாது. ஒருநாளும் அவர் ஹாஸ்டல் ஃபீஸையும் கல்லூரி ஃபீஸையும் சரியான நேரத்தில் அனுப்பியதில்லை அவருடைய கஷ்டம் எனக்குத்தெரியும். ஆனால் எப்படியும் அதை கொடுத்துத்தான் ஆகவேண்டும். சற்று முன்னரே முயலலாம்.செய்ய மாட்டார். நான் பல முறை கேட்டபிறகுதான் அலைந்து திரிய தொடங்குவார். கடைசிநாளும் கடந்து எல்லா அவமானங்களையும் அடைந்தபிறகுதான் ஒவ்வொருமுறையும் நான் ஃபீஸ் கட்டியிருக்கிறேன்.

அண்ணா பல்கலை போன்ற உயர்தர கல்விநிலையத்தில் கூட பணம் கட்டாதவர்கள் சிறுமைப்படுத்தப்படுவார்கள் தெரியுமா? வகுப்பிலேயே ஆசிரியர்கள் திட்டி ஏளனம் செய்வார்கள். ஹாஸ்டலில் சாப்பாடு மறுப்பார்கள். ஏனென்றால் இந்தியாவில் இன்னமும்கூட உயர்கல்விக்கும் உயர்குடிக்கும் தொடர்பு நேரடியானது. உயர்கல்வி நிறுவனங்களில் ஏழைகள் மிகக்குறைவு. கல்வி என்பதே இங்கே இன்று ஓர் ஆடம்பரம். கூடுதல் மதிப்பெண்கள் பெற்று அதற்குள் ஊடுருவும் ஏழை ஓர் அத்துமீறலைச் செய்கிறான்.

இந்தியாவில் உயர்குடியில் பிறந்தவர்களுக்கு ஏழைகள்மேல் ஒரு சின்ன கரிசனம் பிறந்ததும், குறைந்தபட்சம் ஏளனம் செய்யக்கூடாது என்ற உணர்வாவது இருந்ததும் எல்லாம் ஒரு முப்பது நாற்பது ஆண்டுக்காலம்தான். அதாவது சென்ற இரண்டு தலைமுறைக்காலம். என் அப்பாவின் காலம்வரை. அது காந்தியில் தொடங்கி நக்சலைட் இயக்கத்தில் முடிந்த ஒரு யுகம். இன்றைய இளைஞர்களிடம் அந்த நுண்ணுணர்வும் இங்கிதமும் துளிகூட கிடையாது. தனக்கு ஒரு சமூகப்பொறுப்பு உண்டு என்ற எண்ணமே எவரிடமும் இல்லை. சொல்லப்போனால் பிறருக்காக எதையாவது செய்யவேண்டும் என்ற எண்ணமே கிடையாது.

எண்பதுகளிலேயே அந்த மனநிலை மாற ஆரம்பித்துவிட்டது. வெல்லவேண்டும், வென்று மேலே செல்லவேண்டும், மேலும் மேலும் அடையவேண்டும், திளைக்கவேண்டும். இதுதான் ஒவ்வொரு இளைஞனுக்கும் இருக்கும் கனவு. ஆடம்பர ஆடைகளிலும், செல்போன்களிலும் தொடங்குகிறது அது. பைக்குகள், கார்கள் நட்சத்திரவிடுதிகள் என்று விரிகிறது. உலகமே தேவைப்படுகிறது. எது கிடைத்தாலும் போதவில்லை. இன்னொருவரிடம் ஒப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்களைவிட மேலே இருப்பவர்களை பார்த்து ஏங்குகிறார்கள். என் கல்லூரியில் படிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் உலகிலேயே விலை உயர்ந்த கார் எது என்று தெரியும். விலை உயர்ந்த வாட்ச் எது என்று தெரியும். விஸ்கி எது என்று தெரியும்.

நக்சலைட் புரட்சியின்போது ஏழைகளுக்காக உயிரைக்கொடுக்க கிளம்பிய இளைஞர்கள் இன்றில்லை. இன்றிருப்பவர்கள் தொலைகாட்சியாலும் இணையத்தாலும் நுகர்வுவெறி நோக்கி தள்ளப்பட்டவர்கள். தாங்கள் அடையாத என்னென்ன இவ்வுலகில் உள்ளன என்று ஊடகங்கள் வழியாக தெரிந்துகொண்டே இருக்கிறார்கள். அந்தக் கனவில் திளைக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை முழுக்கமுழுக்க அந்த பகற்கனவுகளால் ஆனது. அதை நோக்கி வெறிகொண்டு ஓடுவதுதான் படிப்பு ,வேலை எல்லாமே. இதன் நடுவே சமூகஊடகங்களில் புரட்சிக்காரர்களாக வேஷம் போடுகிறார்கள். அது ஒரு ரோல்பிளேயிங். ஒரு சைக்காலஜிக்கல் ரிலீஃப். முற்போக்காக புரட்சிக்காரனாக கலகக்காரனாக பாவனைசெய்து அரசாங்கத்தையோ சமூகத்தையோ மதத்தையோ வசைபாடினால் ஒரு சின்ன நிறைவு….

இந்த குப்பைகள் நடுவே நான் படித்தேன். எனக்கு ஏற்பட்ட அவமானங்களை அப்பாவிடம் ஒருமுறை சொன்னேன். அவருக்கு புரியவில்லை. “நாம் மிக ஏழைகள். அவர்களெல்லாம் பெரிய இடத்துப் பிள்ளைகள். நாம் அடங்கி பணிவாக இருந்தால் அதில் தப்பில்லை. அவர்களிடம் நான் ஏழை என்று சொல். கருணை காட்டவேண்டும் என்று கேட்டுக்கொள். அவர்கள் நம்மை ஒன்றும் செய்ய மாட்டார்கள். அவர்கள் ஏதாவது சின்ன வேலைகள் சொன்னால் செய், அதனால் தப்பில்லை. நாம் ஏழைகள்தானே? வக்கீல் ராஜப்பா வீட்டிற்கு நான் தானே தினமும் மீன் வாங்கிக் கொண்டுசென்று கொடுக்கிறேன்?” என்றார். நான் அவரை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவரிடம் என்னால் பேசவே முடியாது என்று தெரிந்தது

ஒருமுறை எனக்கு ஹாஸ்டல் ஃபீஸ் கட்டவேண்டியிருந்தது.வழக்கம்போல பிந்திப் பிந்தி கடைசிநாள் பலமுறை கடந்துவிட்டது. மெஸ்ஸில் சாப்பாடு தர மறுத்துவிட்டார்கள். பட்டினி, அவமானம். தனியாகவே அலைந்துகொண்டிருந்தேன். எனக்கு கல்லூரியில் நண்பர்களே இல்லை. நண்பர்களுடன் இருக்கக்கூட கையில் கொஞ்சமாவது பணம் தேவை. ஒரு முறையாவது டீக்கு பணம் கொடுக்கக்கூடிய நிலை தேவை. நான் எவர் முகத்தையும் ஏறிட்டே பார்ப்பதில்லை. உண்மையில் என் வகுப்பில் படிப்பவர்களில் எவருடைய பெயரும் எனக்கு தெரியாது. முகங்கள் ஓரளவு நினைவிற்கு வரும், அவ்வளவுதான்.

பகல் முழுக்க கல்லூரி வளாகத்திற்குள் இருந்துவிட்டு பின்மதியம் என் அறைக்குச் சென்றேன். அறையையும் இரண்டு நாட்களில் காலிசெய்து விடவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். அறைக்குள் கொஞ்சநேரம் தூங்கலாம் என்று தோன்றியது. என்னிடம் ஒரு சாவி இருந்தது. அறைநோக்கி நடக்கும்போது எப்படியோ வழிதவறிவிட்டேன். பசிமயக்கமாக இருக்கலாம். ஓர் அறையின் பூட்டை திறந்து உள்ளே போனால் அது வேறு அறை. அதெப்படி பூட்டு திறந்தது? அந்தப் பழைய ஹாஸ்டலின் பூட்டுக்கள் அப்படி. ஒரு சாவி பல பூட்டுகளுக்கு பொருந்தும். அந்த அறையின் கட்டில்மேல் ஒரு பர்ஸ் கிடந்தது.

என் மனம் படபடத்தது. திரும்பிவிடலாம் என்று தோன்றியது. அப்படியே திரும்பி வெளியே சென்றுவிட்டேன். ஆனால் அதெல்லாம் மானசீகமாக பலமுறை செய்தது. நான் அங்கேயே நின்றிருந்தேன். அப்போது அடிவயிற்றில் ஒரு வலி எழுந்தது. சுளுக்கு போல. நாலைந்துவேளை சாப்பிடாவிட்டால் பசி மந்தமானபிறகு வருமே அந்த வலி. அப்படியே பாய்ந்து அந்த பர்ஸை எடுத்து திறந்தேன். உள்ளே கட்டுக்கட்டாக ரூபாய். நான்காயிரத்தி எழுநூறு. அதை மட்டும் எடுத்துக்கொண்டேன். பர்ஸை அப்படியே வீசிவிட்டு வெளியே சென்று கதவை பூட்டினேன்.

என் அறைக்குச் செல்லாமல் ஹாஸ்டலைவிட்டு வெளியேறினேன். கல்லூரியின் அருகில் இருக்கும் கடையில் பரோட்டாவும் சிக்கனும் சாப்பிட்டேன். என்னால் உணவை உள்ளே இறக்கவே முடியவில்லை. நான்கு டீ சாப்பிட்டேன். பஸ்பிடித்து நகருக்குள் சென்றேன். இரண்டு சினிமாக்கள் பார்த்தேன்.ஹரி இயக்கிய ஐயா என்ற படம். பேரரசு இயக்கிய திருப்பாச்சி இன்னொரு படம். என்னால் படம் பார்க்கவே முடியவில்லை. ஆனால் வெட்டவெளியில் நின்றிருக்க படபடப்பாக இருந்தது. என்னை எவரெவரோ பார்த்துக் கொண்டிருப்பதுபோல. செல்பவர்கள் எல்லாரும் என்னை நோக்கி வருபவர்கள் போல. பலவிதமான பிரமைகள்.

என் உடல் தூக்கிவாரிப் போட்டபடியே இருந்தது. சிறுநீர் முட்டிக்கொண்டே இருப்பதைபோல. மூச்சுத் திணறிக்கொண்டே இருப்பதைப்போல. தியேட்டர்களில் மென்மையான இருக்கையில் புதைந்து அமர்வது பெரிய விடுதலை. அதிலும் சூழ்ந்திருப்பவர்கள் எவரும் நம்மை பார்க்காத இருட்டு. அதேசமயம் நாம் தனிமையிலும் இல்லை. திரையரங்குகள் கருப்பைகள் போல. நகரத்தின் கருப்பைகள். கைவிடப்பட்டவர்கள் அங்கே சென்று ஒடுங்கிக்கொள்ளலாம்.

நள்ளிரவில் திரும்பி வந்தேன். மீண்டும் பரோட்டா சிக்கன் சாப்பிட்டேன். இம்முறை பசி நன்றாகவே இருந்தது. ஹாஸ்டலில் என் தோழன் தூங்கிக்கொண்டிருந்தான். அந்தப் பணத்தை பெட்டிக்குள் ஒளித்துவைத்தேன். மறுநாள் ஹாஸ்டலில் பணத்தை தேடுவார்கள் என்று நினைத்தேன். ஆகவே காலையிலேயே பணத்துடன் வெளியே கிளம்பிவிட்டேன். மீண்டும் நான்கு சினிமாக்கள். நள்ளிரவில் திரும்பிவந்தேன்.

அப்படியே நான்கு நாட்கள். என்னை எவருமே கண்டுபிடிக்கவில்லை. பணம் போனதைப்பற்றி எவருமே பேசவுமில்லை. அந்தப் பணத்தை தானே எங்கோ கைமறதியாக விட்டுவிட்டதாக அந்தப்பையன் நினைத்திருக்கிறான். அவன் எவர் என்றே தெரியாது. இன்றுவரை அவன் முகம் தெரியாது. இன்றைக்கு அவன் முகத்தைப் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறேன். அவன்தான் என் விதியின் முகம்….

நாலைந்து நாட்களுக்குப்பிறகு நான் ஹாஸ்டல் பணம் கட்டினேன். மிகமிக கவனமாக இருந்தேன். போஸ்டாபீஸில் ஒரு அக்கவுண்ட் திறந்து எஞ்சிய பணத்தை போட்டுவைத்தேன். பணம் கொஞ்சநாளில் தீர்ந்தது. என் மனம் மீண்டும் பணத்தை எடுப்பதைப்பற்றி கனவு காண ஆரம்பித்தது. அந்தக்கனவே என்னை துணுக்குறச் செய்தது. என்னை நானே அருவருத்தேன். என் அப்பாவை நினைத்தபோது கூசி சுருங்கினேன். ஆனால் அந்தக்கனவு விட்டுப்போகவே இல்லை.

சார், பணத்தேவை இருந்தது. ஆனால் அதைவிட முக்கியமானது ஒன்று உண்டு. திரில். என் வாழ்க்கையில் சுவாரசியமான எதுவுமே இல்லை. பள்ளிநாட்களிலேயே நான் சோனியான, தனிமையான பையன். பள்ளியில் சத்துணவு சாப்பிடுபவர்கள்மேல் ஆசிரியர்களுக்கு எந்த மரியாதையும் இருக்காது. நான் சத்துணவு சாப்பிடுபவன். என்னைப்போல சத்துணவு சாப்பிடும் மற்ற பையன்கள் நகரின் சேரிகளில் இருந்து வருபவர்கள். அவர்கள் ஓய்வுநாட்களில் கூலிவேலைக்குச் செல்பவர்கள். முரடர்கள், ஆரோக்கியமானவர்கள், கெட்டவார்த்தை பேசுபவர்கள், அடிதடியில் ஈடுபடுபவர்கள். அவர்களுக்குள் எனக்கு இடமில்லை. நான் நன்றாகப் படித்ததே அந்த தனிமையிலிருந்து வெளியே செல்லத்தான்.

அப்படியே புத்தக வாசிப்பில் இறங்கினேன். என் பள்ளி அருகேதான் நாகர்கோயில் முனிசிப்பல் நூலகம். அங்கே புத்தகங்கள் படித்தேன். நான் படித்த நூல்களில் பெரும்பகுதி கிரைம் திரில்லர்கள்தான். தமிழ்வாணன், ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா. அப்படியே சுஜாதா. அதன்பின் ஜேம்ஸ் ஹேட்லி சேஸ் முதல் ஸ்டீஃபன் கிங் வரை. பத்தாம் கிளாஸ் படிக்கும்போதே சுந்தர ராமசாமியை படித்துவிட்டேன். 2003ல் நான் பிளஸ்டூ படிக்கும் போது சுந்தர ராமசாமி எங்கள் எஸ்.எல்.பி பள்ளிக்கூட மைதானத்திற்கு மாலைநடைக்கு வருவார். அவரை தொலைவிலிருந்து பார்த்திருக்கிறேன். பக்கத்தில் சென்று அறிமுகம் செய்ய தைரியமில்லை. ஒரு அழுக்கில்லாத சட்டை இருந்திருந்தால் அவரிடம் பேசியிருப்பேன். பேசியிருந்தால் இன்னொரு திசைக்கு போயிருப்பேன்.

என் வாழ்க்கையின் எல்லா சுவராசியங்களும் கற்பனையில்தான். நல்ல சாப்பாடு, நல்ல சட்டை, சினிமா எல்லாமே. அந்த திருட்டு எனக்கு அற்புதமான ஒரு கனவு அனுபவம். அது என்னை கிளர்ச்சியடையச் செய்தது. எந்தக் காமக் கனவிலும் அந்தக் கிளர்ச்சி கிடையாது. கைகாலெல்லாம் பரபரத்தன. படுக்கவோ உட்காரவோ முடியாது. நினைக்க நினைக்க உடலும் உள்ளமும் பதறும். தொண்டை உலர்ந்து நெஞ்சு துடிதுடிக்கும். அந்த திருட்டுக்கு பிறகு எனக்கு சலிப்பு என்பதே இல்லை. நாட்கள் ஓடியதே தெரியவில்லை.

சரி, திருடினால்தானா, திருடுவதைப்பற்றி கற்பனை மட்டும் செய்வோம் என்று முடிவுசெய்தேன். கற்பனை செய்து அதிலேயே திளைத்தேன். விதவிதமாக திருடினேன். மிகமிக புத்திசாலித்தனமாக, மிக தைரியமாக திருட்டுக்களைச் செய்தேன். ஒரு கற்பனை சலிக்கையில் இன்னொன்றைச் செய்தேன். ஒரு கட்டத்தில் கற்பனையில் திருடித்திருடி, திருட்டு மீதான எல்லா குற்றவுணர்ச்சியையும் களைந்துவிட்டேன். கொஞ்சம் கூட பயமில்லாதவன் ஆனேன். திருடுவது ஏன் சரி என்பதற்கான எல்லா நியாயங்களையும் உருவாக்கிக்கொண்டேன். அதன்பின் நேரடியாக திருடவேண்டியதுதான். அதைச்செய்தேன்.

இரண்டாவது திருட்டு மிக எளிமையானது, சொல்லப்போனால் ஆபத்தானது. நான் அதே சாவியால் அதே அறையை திறந்து உள்ளே சென்று தேடினேன். உள்ளே ஆயிரத்தி இருநூறு ரூபாய்தான் கிடைத்தது. ஆனால் பாத்ரூமில் ஒரு தங்கச் செயின் இருந்தது. இரண்டு பவுன் எடைகொண்டது. அதை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். இம்முறை திகில் உச்சத்தில் இருந்தது. சிறு ஒலிக்கே நான் நடுநடுங்கினேன். அத்துடன் விந்தையான ஓர் உணர்ச்சி இருந்தது. என் உடல் கூசி, விதிர்த்து, உடலுறவுபோல விந்து வெளியேற்றியது. அது ஒரு வகையான இன்ப அனுபவமாகவே இருந்தது. இப்படிச் சொல்கிறேனே, உங்களால் காகிதம் கசக்கும் ஒலியை கேட்கவே முடியாது. வலிப்பு வந்துவிடும். ஆனால் ஒருவர் அடிக்கடி காகிதத்தை கசக்கிக்கொண்டே இருக்கிறார்!

சினிமாதான். வாழ்க்கையே. ஒருநாளுக்கு குறைந்தது இரண்டு சினிமா.நல்ல சாப்பாடு. நான்குநாட்களுக்கு பிறகு அந்த தங்கச்சங்கிலியை விற்கக்கூடாது, பிடிபடுவேன் என்று புரிந்துகொண்டேன். சரசா ஃபைனான்சில் அதை அடகு வைத்தேன். அந்தப் பணத்தில் புதிய சட்டைகள் வாங்கிக்கொண்டேன். ஆனால் விலை உயர்ந்த துணிகளை வாங்கவில்லை. எனக்குத்தெரியும், அது அபாயம் என்று. மலிவான பிளாட்ஃபார்ம் சட்டைகள்தான்.

மூன்றாவது திருட்டை ஒரு வாரத்திற்குள்ளாகவே செய்தேன். அந்தச் சாவியை வைத்து என் ஃப்ளோரில் இருந்த எல்லா பூட்டையும் திறக்க முயன்றேன். ஒரு அறை திறந்தது. உள்ளிருந்து நாநூறு ரூபாய் கிடைத்தது. ஒரு பவுன் மோதிரமும். அதன்பின் திருடிக்கொண்டே இருந்தேன். புதிய விஷயங்களாக கண்டுபிடித்தேன். எங்கள் ஹாஸ்டலில் உள்ள பூட்டுகளை எதேனும் ஒரு சாவியைக்கொண்டு கொஞ்சம் திருகி அழுத்திப் பிடித்தபின் ஒரு வலுவான கம்பியால் அழுத்தமாக நெம்பினால் திறந்துகொள்ளும். உள்ளே சென்று திருடியபிறகு வெளியே வந்து ஒரு கிடுக்கியால் இறுக்கினால் திரும்ப மூடும். என் ஹாஸ்டலிலேயே எட்டு முறை திருடினேன். அதன்பிறகு பக்கத்து ஹாஸ்டலுக்குப் போய் ஏழுமுறை. சீனியர்களுக்கான ஹாஸ்டல்களுக்குள் போய் பன்னிரண்டு முறை.

நிறையப் பணம் வந்தது. இங்கே ஒரு பார்ட் டைம் வேலைக்குச் செல்கிறேன், ஆகவே பணம் அனுப்பவேண்டாம் என்று அப்பாவுக்கு எழுதினேன். என் பிராஜக்டுக்கு அரசாங்கம் ஸ்காலர்ஷிப் தருகிறது என்று சொல்லி அப்பாவுக்கு கொஞ்சம் பணமும் அவ்வப்போது அனுப்பினேன். ஆனால் என் படிப்பு அழிந்துவிட்டது. என் பாடநூல்களை தொட்டுக்கூட பார்க்கமுடியவில்லை. படித்த அனைத்தையும் மறந்துவிட்டேன். தொடர்ச்சியே இல்லை. இரவும் பகலும் திருட்டு நினைவுதான். நாள்தோறும் சினிமா.எல்லா படங்களையும் ஏழெட்டு முறை பார்ப்பேன். சாதுரியன் என்று ஒரு படம். பாரதிராஜாவின் மகன் நடித்தது. எவருமே அந்தப்படத்தை கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அந்தப்படத்தை நான் திரையரங்கிலேயே ஆறுமுறை பார்த்திருக்கிறேன்.

ஹாஸ்டலில் திருட்டு கூடிக்கூடி வந்ததும் நிறைய கண்காணிப்புகள் ஆரம்பித்தன. அதற்குமேல் அங்கே திருடுவது கஷ்டம் என்று புரிந்துகொண்டேன்.வெளியே சுற்றி எப்படி திருடுவது என்று பார்க்க தொடங்கினேன். தங்கம், ரூபாய் தவிர எதை திருடினாலும் இன்னொருவரின் உதவி தேவை, அது எப்படி இருந்தாலும் ஆபத்து. பணக்கார வீட்டில் பெரிய திருட்டாகச் செய்தால் கேஸ் வலுவானதாகி பெரிய அதிகாரிகள் விசாரிப்பார்கள். அதுவும் ஆபத்து. நடுத்தர வீடுகளில் பொதுவாக ஐந்தாறு பவுன் நகைகள் வரை பீரோக்களில் வைத்திருப்பார்கள். பத்து பவுனுக்குள் திருட்டு நடந்தால் போலீஸ் பெரிதாக நினைப்பதில்லை. ஒரே ஏரியாவில் திரும்பத்திரும்ப திருடினால் தொடர்திருட்டு என்று சொல்லி கவனிப்பார்கள். நாளிதழ்களில் செய்தி வரும், மேலிட அழுத்தம் விழும். ஆகவே சென்னையைச் சுற்றி மிக விரிவாக அலைந்து திருடினேன்.

திருடத்திருடத்தான் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டேன். நம் மாடிகளில் வெளியே பார்த்து திறந்திருக்கும் சன்னல்கள் மிகப் பலவீனமானவை. கிரில் என்பதைப்போல மோசடி வேறில்லை. சில கிரில்களை வெறும் ஐந்தே நிமிடத்தில் நாலு இடங்களில் உடைத்து உள்ளே சென்றிருக்கிறேன்..நெம்புகோல் என்பது மிகமிக அபாரமான ஒரு கருவி. என்னிடம் இருக்கும் சுத்தியலின் பிடியில் ஒரு துளை உண்டு. அதில் கம்பியை பொருத்திக்கொள்வேன். பைக்கில் ஒன்றுடன் ஒன்று பொருந்தும் உறுதியான கம்பிகளை வைத்திருந்தேன். பைக்கின் பம்பர் குழாய்க்குள் போட்டு வைத்திருப்பேன்.அவற்றை ஒன்றுடன் ஒன்று பொருத்தி ஐந்தடி நீளமாக்கி நுனியில் பிடித்து நெம்பினால் கடினமான கம்பிகளைக்கூட திறந்துவிடும்.

நான் என் வேலைகளை தன்னந்தனியாகவே செய்தேன். எடுத்த பணத்தை மிக கவனமாக செலவு செய்தேன். ஹாஸ்டலை விட்டு வெளியேறி வெளியே ஒரு அப்பார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டேன். கொஞ்சநாளிலேயே ஒரு அப்பாட்மெண்ட் வாங்கிவிட்டேன். அங்கெல்லாம் ஐடியில் வேலை என்று சொன்னேன். ஒருவனின் ஐடி கார்டை திருடி போலியாக ஐடி கார்ட் செய்துகொண்டேன். தொடர்ச்சியாக திருடினேன். ஆரம்பநாட்களில் ஒரேநாளில் நான்கு வீடுகளில்கூட திருடியிருக்கிறேன்.. ஒரே ஒருமுறை ஒரே வீட்டில் நாநூறு பவுன் திருடினேன். அது ஒரு அரசியல்வாதியின் வைப்பாட்டி வீடு. அவர்கள் போலீஸுக்கே போகவில்லை.

பணம் வந்தபோது வெறி வந்தது நகரத்தில் அதுவரை நான் அணுகமுடியாமலிருந்த எல்லா கேளிக்கைகளையும் சென்று அடைந்தேன். நட்சத்திர விடுதிகளில் தங்கி பெண்களை அனுபவித்தேன். விலை உயர்ந்த ஆடைகளை வாங்கினேன். எனக்கு ஷூக்கள் மேல் பெரும் மோகம் உண்டு. என் அப்பா எனக்கு செருப்பே வாங்கித் தந்ததில்லை. பிளஸ்டூ படிப்பதுவரை செருப்பில்லாமல்தான் பள்ளிக்குச் சென்றேன். ஆமாம், செருப்பே இல்லாமல்! பிளஸ்டூவில் பள்ளியிலிருந்து ஒரு செருப்பு கிடைத்தது.. கல்லூரியில் மலிவான பிளாஸ்டிக் செருப்புதான் போட்டேன். பிறர் போட்டிருக்கும் ஷூக்களை பார்த்து பார்த்து ஏங்குவேன். அதற்கு ஒரு காரணம் உண்டு, நான் குனிந்தே நடப்பவன். ஷூக்கள்தான் கண்ணுக்குப்படும். ஒரே ஆண்டில் முப்பது ஜோடி புதிய ஷூக்களை வாங்கியிருக்கிறேன். வாட்ச், செல்போன், பைக்குகள்.

அதன்பின் ஒருமுறை வீட்டுக்கு வந்தேன். அப்பா என்னிடம் என் வேலைபற்றி கேட்டார். அவருடைய நம்பிக்கையும் பதற்றமும் என்னுடைய மனதை அசைத்தது. அதன்பிறகு செலவு செய்வதை குறைத்துக்கொண்டேன். சேமிக்க ஆரம்பித்தேன். பிளாட்டுகள் வாங்கிப்போட்டேன். அவற்றை கடனுக்கு வாங்கி ஈம்.எம்.ஐ கட்டுவதுதான் ஏமாற்றுவதற்கு சரியான வழி என்று கண்டுபிடித்தேன். அப்பாவை மகிழ்ச்சியில் ஆழ்த்த என்னென்ன செய்யவேண்டுமோ எல்லாவற்றையும் செய்தேன். அவர் சொன்னதனால்தான் தேவகியை மணந்தேன். அந்தப்பெண் பறக்கை சாமிநாதப் பண்ணையாரின் மகள். அப்பா அவர்முன் கக்கத்தில் துண்டுடன் எழுந்து வணங்கி நிற்பவர். அந்த திருமண ஆலோசனை வந்தபோதே அப்பா பரவசத்தில் அழுதுவிட்டார். அவரை டைப்பிங் வேலையில் இருந்து விடுவித்து சென்னை வரவழைத்தேன். இரண்டு லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து ஐயப்ப சேவா சங்கம் பொறுப்பாளராக ஆக்கினேன். தங்கைகளை நல்ல கல்லூரிகளில் படிக்க வைத்தேன். என்னை போலீஸ் பிடிக்கும் என்ற எண்ணமே இல்லாமலாகியிருந்தது. வாழ்க்கையை முறையாக அமைத்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்தேன்.

”சரி அப்படியென்றால் ஏன் வழிப்பறி செய்தாய்?” என்று நான் கேட்டேன்.

அவன் பேசாமல் அமர்ந்திருந்தான்.

“சொல், அது உன் வழியே அல்ல. நீ அதற்கு முன் வழிப்பறியே செய்ததில்லை என்று சொன்னாய்”

”அது உண்மைதான்”

”அப்படியென்றால் ஏன் அதைச் செய்தாய்?”

”சார் உண்மையிலேயே எனக்கு தெரியாது. உண்மையிலேயே ஏன் அதை செய்தேன் என்று தெரியாது. இந்த போலீஸ் ஸ்டேஷனில் இருந்து நான் இரவுபகலாக அதைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஏதோ பேய் என்மேல் கூடி அதைச் செய்திருக்கிறது…. இல்லை ஒருவேளை நான் அதைச் செய்யவே இல்லை. அந்தப்பையன் வேண்டுமென்றே ஏதோ சொல்லியிருக்கிறான். வேறு யாரையோ புகார் செய்ய தற்செயலாக நான் மாட்டியிருக்கிறேன்.”

“நீ அதைச் செய்தான், உனக்கே தெரியும்.”

“ஆமாம் செய்தேன். ஆனால் உண்மையாகவே தெரியவில்லை. கொஞ்சம்கூட தெரியவில்லை.”

“அது போலீஸ்காரர்களாகிய எங்களுக்குத் தெரிந்ததுதான்” என்றேன்.

அவன் திகைப்புடன் என்னைப் பார்த்தான்.

“உனக்கு போர் அடித்தது. நீ போலீஸ் உன்னை பின்தொடர்ந்து வருகிறதா என்று பார்த்துக் கொண்டே இருந்தாய். போலீஸ் பின்னாலிருக்கிறது என்று கற்பனை செய்துகொண்டாய். அதனால்தான் ஜாக்ரதையாக இருந்தாய். ஆனால் முந்நூறுக்கும் மேல் திருட்டுக்கள். ஒன்றில்கூட போலீஸ் உன்னை சந்தேகப்படவில்லை. ஒரு கட்டத்தில் உனக்குச் சலிப்பாகிவிட்டது.

“இல்லை, அப்படி தோன்றவில்லை” என்றான்.

“எல்லா குற்றவாளிகளுக்கும் அந்த ஒளிந்துபிடி விளையாட்டில் ஈடுபாடு உண்டு… போலீஸ் உன்னை பிடிக்கவே பிடிக்காது என்றால் உன் செயல் திருட்டே அல்ல. அதில் சாகசம் இல்லை, திறமை இல்லை.”

“நீங்கள் எதையோ சொல்கிறீர்கள், அப்படி இல்லை”

“பெரிய கொலைக் குற்றவாளிகள்கூட சிறிய க்ளூக்களை கொடுப்பார்கள். வலிய வந்து போலீஸிடம் பேச்சுக்கொடுப்பார்கள். அவரை நாம் கொஞ்சம்கூட சந்தேகப்படவில்லை என்றால் அவர்களே தன்மேல் மெல்லிய சந்தேகத்தை உருவாக்கிக் கொள்வார்கள். டாஸ்டாயெவ்ஸ்கி அதை தன் குற்றமும் தண்டனையும் நாவலில் அற்புதமாக எழுதியிருக்கிறார். அது உலக அளவில் கிரைம் இன்வெஸ்டிகேஷனில் ஒரு முக்கியமான தியரி”

“நான் அப்படி நினைக்கவே இல்லை”

“நீ நினைக்கவேண்டாம், உன்னை அறியாமலேயே அதைச் செய்தாய்’ என்றேன்.

அவன் பெருமூச்சுவிட்டான்.

““வெறும் திரில்லுக்காக, இல்லையா?”

“இல்லைசார்”

“பிறகு என்ன? சரி, அந்த வழிப்பறியைச் செய்யும்போது உன் மனம் கிளர்ச்சி அடைந்ததா? வழக்கமான மற்ற திருட்டுக்களைச் செய்வதை விட கூடுதலாக பதற்றமும் பரவசமும் இருந்ததா?

“இல்லை சார், எரிச்சல்தான்”

“எரிச்சலா?”

“ஆமாம், அன்றைக்கு ஒரு திருட்டுக்காகச் சென்றிருந்தேன். அந்த வீட்டில் விளக்கு எரிந்தது. ஆட்கள் திரும்பி வந்திருந்தார்கள். பைக்கில் திரும்பி வரும்போது இந்தப் பையனைப் பார்த்தேன். ஒரு எரிச்சல் வந்தது. எவர்மேல் என்று தெரியவில்லை… எரிச்சல். கொல்லவேண்டும் என்றுகூட தோன்றியது”

“அவனையா?”

“ஆமாம்”

“ஏன்?”

“தெரியவில்லை… சுத்தியலை எடுத்து அவன் மண்டையை உடைக்கவேண்டும் என்று தோன்றியது….”

“ஆனால் கத்தி வைத்திருந்தாய்”

“ஆமாம்”

“எதற்கு?”

“அந்தக் கத்தியை பத்தாண்டுகளாக வைத்திருக்கிறேன்… எதிர்பாராமல் எவராவது குறுக்கிட்டால் மிரட்டுவதற்கு… ஆகவேதான் பெரிய கத்தி..”

“அதை ஒருமுறைகூட காட்ட நேரிடவில்லை இல்லையா?”

“ஆமாம்”

“அதுதான் எரிச்சலா?”

“தெரியவில்லை சார்… எரிச்சல், அவ்வளவுதான்”.

“அவனிடம் பணம் பிடுங்கிய பிறகு?”

“கசப்பு. கசப்பு மட்டும்தான்”

“மகேஷ், எரிச்சல் வந்தது அவன் உண்மையிலேயே ஐடி ஊழியன் என்பதனாலா?”

‘தெரியவில்லை சார், இருக்கலாம்… அந்த நேரம் அப்படி ஒரு வெறி வந்தது”

“சரி, போலீஸ் உன்னை விசாரிக்க கூப்பிட்டபோது எப்படி இருந்தது? படபடப்பு? கிளர்ச்சி?”

“இல்லை, பலமுறை போலீஸ் என்னை சோதனை செய்திருக்கிறது. ஐடி கார்டை காட்டியதும் விட்டுவிடுவார்கள்”

“சரி,இப்படிக் கேட்கிறேன். பிறகு என்ன ஆயிற்று? இந்த வழக்கின் வழியாக மாட்டிக்கொண்டோம் என்று தெரியும் ஒரு கணம் வருமே அப்போது?”

அவன் பேசாமல் இருந்தான்.

“சொல், எப்போது உனக்கு க்ளூ வந்தது, மாட்டிக்கொண்டோம் என்று?”

“மாட்டிக்கொண்டோம் என்று தோன்றியது போலீஸ் வீட்டுக்கு வந்தபோதுதான்…. ஆனால் என் கைரேகையை வாங்கியதுமே உள்ளூர தோன்றிவிட்டது. அந்த கம்ப்ளெயிண்ட் செக்க்ஷனில் இருந்த எஸ்.ஐயின் குரலை ஃபோனில் கேட்டேன். அவன் ஏதோ கூச்சலிட்டான். ஆனால் எக்ஸைட் ஆகியிருந்தான். அவனுக்கு தெரிந்துவிட்டது, அவன் விடமாட்டான் என்று தோன்றியது”

“ராபின்சன்?”

“அவன் பெயர் தெரியாது.”

“சரி, வீட்டுக்கு போலீஸ் வந்தது. அந்தச் செய்தி வந்தபோது நீ எங்கிருந்தாய்?”

“என் ரகசிய அப்பார்ட்மெண்டில்… பகலில் அங்கேதான் இருப்பேன்”

“என்ன தோன்றியது? பயமா? பதற்றமா?”

“இல்லை சார்.”

“வேறென்ன?”

“ஒருவகை அமைதி….”

 “அமைதி என்றால்?”

 “சாவுவீடுகளில் ஓரிரு நாட்களுக்கு பிறகு இருக்குமே அதைப்போல…”

 “ஓ” என்றேன்.

இருவரும் சற்றுநேரம் அமர்ந்திருந்தோம்.

நான் பெருமூச்சு விட்டுக்கொண்டு எழுந்தேன். “சரி மகேஷ். எனக்கு குற்றத்திற்கும் மனிதமனதிற்கும் இடையே உள்ள உறவைப்பற்றி ஏதோ சில கருத்துக்கள் இருந்தன. சில மயக்கங்கள் இருந்தன. அதனால்தான் கேட்டேன். நான் ஏதாவது உதவிசெய்யவேண்டுமா?”

“சார், நான் இப்போது செய்யவேண்டியது என்ன? ஒரு நண்பராக எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்”

“எதையும் மறைக்கவேண்டாம்…. போலீசுக்கு இனிமேல் இதில் ஆர்வமிருக்காது…அவர்களின் பணிமுடிந்துவிட்டது. அவர்கள் உரிய சாட்சிகளுடன் கேஸ் போடட்டும்… நல்ல வக்கீலை வைத்து நீதிமன்றத்தில் பார்த்துக்கொள். கோர்ட்டுக்கு கேஸ்போனதுமே ஜாமீன் வாங்கிவிடலாம்”

“நல்ல வக்கீல்.” என்றான் “சரி சார்”

“ஓகே மகேஷ், குட் லக்”

நான் அடுத்தமாதமே போலீசிலிருந்து விலகிவிட்டேன். குடும்பத்தொழிலில் தலைகீழாக போய் விழுந்து மூழ்கி தண்ணீர் குடித்து கண்டபடி நீச்சலடித்து ஒருவழியாக சமாளித்து நிலைகொண்டு மீண்டபோது இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன்பிறகு ஒருமுறை கந்தசாமியைச் சந்தித்தேன்.ஒரு நட்சத்திர ஓட்டல் பாரில். மிதமான போதையில் இருந்தான். என்னைப் பார்த்ததும் கட்டித்தழுவல், கண்ணீர்விடுதல். தனியாக வந்திருந்தான். மேலிருந்து எவரோ அவனை வசைபாடியிருந்தனர். அவனைவிட சாதியில் குறைவான யாரோ. ஆகவே மனவருத்தம். நான் இன்னும் ஒரு விஸ்கி வாங்கி ஊற்றியபோது தணிந்தான்.

பலவற்றைப் பேசிக்கொண்டோம். நடுவே நான் மகேஷ் பற்றி கேட்டேன். அவனுக்கு கொஞ்சம் கழித்துத்தான் ஞாபகம் வந்தது. அவன் சிவராஜ பிள்ளையைப் பற்றி அதற்குப்பின் கேட்டுக்கொள்ளவே இல்லை. போலீஸ் துறையின் உள்ளரசியல் மிகச்சிக்கலானது. ஒரு நையாண்டிச் சிரிப்புடன் கடந்துசெல்பவர்கள் அதைச் சமாளிக்கலாம், மற்றவர்கள் கந்தசாமியைப்போல அலைக்கழியவேண்டும்.

நான் கேட்டதும் “ஆமாம் சிவராஜ பிள்ளை!” என்றான் கந்தசாமி “அந்த ஆலிவெட்டி டைப்ரைட்டரை நான் ஐஜி திரிவேதியின் மகனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தேன். அவனுக்கு பயங்கர சந்தோஷம். அது உலகிலேயே ஒன்றிரண்டுதான் இருக்கிறது என்றான். அதுதான் என்னை மற்ற கோஷ்டியினர் செய்த சதியில் இருந்து காப்பாற்றி பதவி உயர்வு கிடைக்க வைத்தது…”

அவன் முகம் மலர்ந்தது. “எக்கச்சக்கமாக மாட்டிக்கொண்டிருந்தேன். ஒரு வழக்கு அதை பிறகு சொல்கிறேன். அவரிடம் காலைப்பிடித்து மன்றாடலாம் என்று வீட்டுக்கு போயிருந்தேன். வரவேற்பு அறையில் ஒரு பழைய டைப்ரைட்டர் அலங்காரமாக கண்ணாடிப் பேழைக்குள் இருந்தது. என்னிடமிருந்த ஆலிவெட்டி போலவே இருந்தது. அதை யார் வைத்திருக்கிறார்கள் என்று அவர் மகளிடம் கேட்டேன். அவர் மகன் என்று சொன்னாள். அவன் ஐஐஎம்மில் படித்துவிட்டு ஜிப்ஸி சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தில் சி.இ.ஓ ஆக இருந்தான். நல்ல பையன். நான் அவர் குடும்பத்தைப் பற்றி துப்புரவாக விசாரித்தபிறகுதான் வீட்டுக்கே சென்றேன்”

‘நான் உடனே கணக்குபோட்டுவிட்டேன். என் ஆலிவெட்டி டைப்ரைட்டர் பற்றிச் சொன்னேன். அவனுக்கு பரவசமாகிவிட்டது. நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோதுதான் ஐஜி வந்தார். என்னை பார்த்ததும் அவர் முகம் மாறிவிட்டது. ஆனால் பையனின் மலர்ந்த முகத்தை பார்த்தபின் என்னிடம் கடுமையாக பேசமுடியவில்லை. நான் மறுநாளே ஆலிவெட்டியை கொண்டுசென்று பரிசாகக் கொடுத்துவிட்டேன். பிரச்சினையில் வெற்றி” என்றான் கந்தசாமி “என்னை மாட்டிவிட்டவர்களுக்கு மூக்கறுப்பு… என்னைப்பற்றி இந்த கீழ்ச்சாதி நாய்களுக்கு தெரியாது. என் குடும்பம் அந்தக்காலத்திலே….”

“சரி சிவராஜபிள்ளை இப்போது எப்படி இருக்கிறார்? என்று பேச்சை மாற்றி இழுத்துக்கொண்டு வந்தேன்”

“தெரியவில்லை. அந்த கேஸை யார் விசாரிக்கிறார்கள் என்று கேட்கிறேன்”

என் முன்னால் அமர்ந்தே ஃபோனில் அழைத்தான். அந்த வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் மாற்றலாகி போய்விட்டார். தனித்தனியாக பன்னிரண்டு வழக்குகள். எல்லாமே நீதிமன்றத்தில் இருந்தன. அதைப்பற்றி அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு பெரிதாக ஏதும் தெரியவில்லை. ஏட்டு ரங்கமன்னாருக்கு தெரியும் என்றார் இன்ஸ்பெக்டர். எழுந்து சென்று அவரிடம் ஃபோனில் பேசிவிட்டு வந்த கந்தசாமி திகைப்புடன் என்னிடம் ஃபோனை தந்து “நீங்களே பேசுங்கள்” என்றான்.

நான் அவரிடம் பேசினேன். சிவராஜ பிள்ளை சென்னையில்தான் இருக்கிறார். எல்லா வழக்குகளையும் அவரும் மகனும் சேர்ந்து நல்ல வக்கீல்களை வைத்து நடத்துகிறார்கள். இருவரும் சேர்ந்து கோர்ட்டுகளுக்கு வருகிறார்கள். “அவங்க கிட்ட நிறைய பணம் இருக்கு சார்…கேஸ் போய்ட்டிருக்கு… ஒண்ணுரெண்டுலே தண்டனை கிடைக்கலாம். ஆனா பொதுவா சான்ஸ் இல்லை…நேரடியா சாட்சி இல்லை. குற்றங்கள் எல்லாமே சின்னச்சின்ன அளவிலே இருக்கு…”

“அவரும் கூடவே வராரா?” என்றேன்.

“ஆமா சார்… அதோட இப்பவும் அவன் கைவரிசைய காட்டிட்டு இருக்கிறதா பேச்சு இருக்கு”

“இப்பவுமா?”

“ஆமா சார்.”

“நான் அவனை சந்திக்கலாமா?”

“அட்ரஸ் இருக்குசார்… நானும் வர்ரேன். நாமளும் அட்ரஸ் கன்ஃபர்ம் பண்ணினது மாதிரி இருக்கும்”

கந்தசாமிக்கு இன்னொரு விஸ்கியை ஊற்றி அங்கேயே விட்டுவிட்டு கிளம்பி என் அறைக்குச் சென்றேன்.

மறுநாள் காலை ரங்கமன்னார் என்னை சிவராஜ பிள்ளையையும் மகேஷையும் சந்திக்க அழைத்துச் சென்றார். புதிய ஒரு அப்பார்ட்மெண்ட். ஒரு பெண் குழந்தையுடன் வெளியே நின்று சோறு ஊட்டிக்கொண்டிருந்தாள். முன்பின் தெரிவிக்காமல் சென்றிருந்தோம். ஆனால் அவளுக்கு நாங்கள் போலீஸ் என்று தெரிந்திருந்தது. “வாங்க சார்” என்று உள்ளே அழைத்துச் சென்றாள்.

உள்ளே சிவராஜ பிள்ளை அறையில் தூங்கிக்கொண்டிருந்தார். மகேஷ் சவரம் செய்துகொண்டிருந்தான். எங்களை சோபாவில் அமரச்செய்தாள். மகேஷ் முகம் கழுவிவிட்டு வந்தான். இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் என்னை வரவேற்றான்.

“நான் இப்ப போலீஸில் இல்லை தெரியுமே” என்றேன்.

“ஆமாம்” என்றான்.

“உன்னை பாக்கணும்னு தோணிச்சு. அதான் ரங்கமன்னாரை கூட்டிட்டுவந்தேன்…” என்றேன்.

அவன் புன்னகையுடன் “டீ சாப்பிடறீங்களா?” என்றான்.

ரங்கமன்னார் “வேண்டாம்… டீ இப்ப சாப்பிடறதில்லை” என்றார். பின்னர் “பேசிட்டிருங்க சார்” என்று செல்ஃபோனுடன் வெளியே சென்றார்.

“எப்டி போய்ட்டிருக்கு?” என்றேன்.

“கேஸெல்லாம் நடந்திட்டிருக்கு…” என்றான் மகேஷ்

“அதாவது இழுத்துட்டிருக்கீங்க?”

“ஆமா திருட்டுக்கேஸ்களை பொறுத்தவரை எவ்ளவு இழுக்கிறோமோ அவ்வளவு நல்லது… சின்ன கேஸெல்லாம் அப்டியே கெடக்கும். பிராசிக்யூஷன் அவ்ளவு ஆர்வமா எடுத்து நடத்துறதில்லை.  நெறைய கேஸ்களிலே கேஸ்கட்டே இல்லாம ஆயிடும். இந்த கேஸிலே என் கைரேகை கிடைச்ச ரெண்டு இடங்களிலே ஒண்ணிலே பில்டிங்கை இடிச்சிட்டாங்க…ஒண்ணுலே சம்பந்தப்பட்டவங்க இந்தியாவிலே இல்லை. மத்த கேஸ்களிலே எவிடென்ஸே இல்லை…ஸோ…”

அவன் மனைவி டீ கொண்டுவந்தாள்

“என் மனைவி, மகேஸ்வரி” என்றான்

நான் வணக்கம் சொன்னேன். அவள் புன்னகைத்துவிட்டு உள்ளே சென்றாள்

“ஒரு குழந்தை, இல்லையா?” என்று ஆங்கிலத்தில் சொன்னேன்

“ஆமாம்”

“முதல்மனைவி?”

“அவள் விவாகரத்து வாங்கிக்கொண்டாள். வேறு கல்யாணம் ஆகிவிட்டது. மகன் அவளுடன் இருக்கிறான். எப்போதாவது அவனை மட்டும் பார்ப்பேன்”

“தங்கைகள்?”

“இரண்டுபேருக்குமே கல்யாணம் செய்து வைத்துவிட்டேன். ஒருத்தி கல்கத்தாவில் இருக்கிறாள். ஒருத்தி ஆஸ்திரேலியாவில்… இங்கே வருவதில்லை”

நான் பெருமூச்சுவிட்டேன்.

“நீங்கள் கேட்கவந்ததைக் கேட்கலாம் சார்” என்றான்

“சரி” என்றேன் “இப்போதும் திருடுகிறாயா?”

“ஆமாம், அது என் தொழில்… வேறு எதையுமே என்னால் வெற்றிகரமாகச் செய்ய முடியாது. மற்றபடி இதை சட்டப்படி எப்படிச் சமாளிப்பதென்றும் தெரியும். போலீஸிலும் கொடுக்கவேண்டியதை கொடுத்துவிடுகிறேன்.”

“ஓகோ

“நிறைய பணம் தேவை. ஏராளமாக கப்பம் கட்டவேண்டியிருக்கிறது. போலீஸுக்கும் வக்கீல்களுக்கும். பிறகு… தெரியுமே, வழக்குகளை எப்படி முடிப்பது என்று? ஆகவே வேறுவழியில்லை. இந்த வண்டியில் இருந்து இறங்கமுடியாது”

“அப்பா என்ன சொல்கிறார்?

“மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்” அவன் கண்ணடித்து “இப்போது கொஞ்சநாளாக பக்கார்டி மேல் ஒரு மோகம்” என்றான்

“உன் மனைவி?

“அவளுக்கு எல்லாம் தெரியும்… அவள் அப்பாவும் புகழ்பெற்ற ஒரு கிரிமினல்தான்… போலி முத்திரைத்தாள்…நாகராஜராவ் என்று பெயர். ஹைதராபாத்காரர்”

“தெலுங்கா?”

“ஆமாம்”

நான் புன்னகைத்து “சரி, இனி நான் உன் அப்பாவிடம் மட்டும்தான் பேசவேண்டும்… அதுவும் ஓரிரு சொற்கள்” என்றேன்

“நீங்கள் எதை அறிய முயல்கிறீர்கள்? அல்லது எதை நிரூபிக்க முயல்கிறீர்கள்?”

“தெரியவில்லை” என்றேன் சிரித்தபடி “போலீஸ் வேலையை விட்டது சரிதானா என்று பார்க்க நினைக்கிறேனோ என்னவோ”

அவன் சிரித்தபடி “இருங்கள் அப்பாவை அழைத்து வருகிறேன்” என்று சென்றான்

சற்றுநேரத்தில் சிவராஜ பிள்ளை வந்தார். தாடியை குட்டையாக டிரிம் செய்து கிராப் அடித்திருந்தார். ரத்தச் சிவப்பு டி ஷர்ட். காக்கி பெர்முடா கால்சட்டை அணிந்திருந்தார். ஆமாம், பெர்முடாவேதான். பார்க்க சென்னையின் உயர்நடுத்தர வர்க்கத்து முதியவர் போல் இருந்தார்

தயக்கமில்லாமல் என்னைப் பார்த்து புன்னகை செய்தார். நான் எழுந்து வணங்கினேன். அவர் சோபாவில் அமர்ந்தார். கையில் சிவப்புக்கல் வைத்த மோதிரம். பூமா ஸிலிப்பர்கள்.

“பேசிக்கொண்டிருங்கள் நான் ரங்கமன்னாரிடம் பேசிவிட்டு வருகிறேன்” என்று மகேஷ் எழுந்து சென்றான்

நான் சிவராஜ பிள்ளையிடம் “ஞாபகம் இருக்கா?”என்றேன்

“முகம் நினைவிலே இருக்கு” என்றார்

நான் பொதுவாக என்னைப்பற்றி சொன்னேன். “நான் இந்த கேஸிலே ரொம்ப ஆர்வம் எடுத்துகிட்டவன்… உங்களைப் பத்தி கந்தசாமி நெறைய சொல்லியிருக்கார்”

“ஆமா நல்ல மனுஷன்… டிஐஜி ஆயிட்டார்னு சொன்னாங்க”

“ஊருக்கு போறதுண்டா?”

“இல்ல, முழுக்க இங்கியேதான்” அவர் புன்னகைத்து “பையனுக்கு ஒத்தாசையா இருக்கேன். கோர்ட் விஷயங்களை பாத்துக்கறேன். நானே ஒரு பாதி வக்கீல்னு இப்பதான் தெரிஞ்சுது” என்றார்.

நான் அவரை சிலகணங்கள் பார்த்துவிட்டு “உங்களுக்கு கஷ்டமா இல்லியா?” என்றேன்.

“கஷ்டமெல்லாம் கொஞ்சநாள்தான்… தாண்டியாச்சு” என்றார். “இப்ப ஒண்ணுமில்லை. எல்லாம் ஸ்மூத்தா போய்ட்டிருக்கு”

“இருந்தாலும் உங்க பையன் படிச்சு—”

அவர் இடைமறித்து “அதுக்கென்ன? இப்பவும் நல்லாத்தானே இருக்கான்? தங்கச்சிகளை நல்லா கட்டிக்குடுத்திருக்கான். சௌகரியமா இருக்கான்… அப்றம் என்ன?”

“இந்த தொழிலை நியாயப்படுத்தறீங்களா?”

“ஆமா, எல்லா தொழிலும் அதுக்கான திருட்டுத்தனத்தோடத்தான் இருக்கு. இவனை புடிச்சாரே அந்த இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்குறப்ப கையும் களவுமா பிடிபட்டு சஸ்பென்ஷனிலே இருக்கார். கந்தசாமி எப்டி பிரமோஷன் வாங்கினார்? அவர் மேலே என்னென்ன கேஸ்… போலீஸ் இப்டீன்னா கோர்ட்லாம்… சரி விடுங்க, உங்க தொழில் என்ன? வியாபாரம்தானே? மனுசனை ஏமாத்தாம வியாபாரம் உண்டா? சொல்லுங்க”

“அப்டி இல்லை” என்று தொடங்கினேன்.

அவர் மறித்து “அது சட்டபூர்வமா பண்றது, இது சட்டவிரோதம், அவ்ளவுதானே? சட்டத்திலே இருந்து தப்பிச்சா அப்றம் என்ன?”

அவர் நிறைய தனக்குள் பேசி நிரூபித்து நிறுவிக்கொண்டிருக்கிறார் என்று தோன்றியது. ஆகவே நான் அதைப்பற்றி மேலே பேசவில்லை.

அவரே “எல்லாம் கணக்குதான்… விடுங்க” என்றார்.

நான் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவரே தொடர்ந்தார் “பாருங்க சார், எனக்கு என் மகன் முக்கியம். அவன்தான் எனக்கு எல்லாம். அவன் எதுக்கு இதையெல்லாம் பண்ணினான்? எனக்காக. நான் நாலுபேர் முன்னாடி நிமுந்து நிக்கணும், என் சுமையை தான் வாங்கிக்கணும்ங்கிறதுக்காக. அப்ப அவனுக்கு ஒரு சிக்கல்னா நான் கூட நிக்கவேண்டாமா? அதைத்தான் செய்றேன். அவனுக்கு ஒத்தாசையா இருக்கேன்…இந்தா அவன்கூடவே இருக்கேன். வசதியா இருக்கேன். பொண்ணுக நல்லா இருக்காங்க… ஒரு குறைவும் இல்லை… அப்றம் என்ன? வர்ரத பாத்துக்கலாம்… இப்ப எல்லாமே தெளிவா இருக்கு.”

நான் ஒரு புன்னகையை அடைந்தேன். “கடைசியா சாஸ்தா அருள் புரிஞ்சிட்டார்” என்றேன்.

அவர் என் கண்களை நேருக்குநேர் பார்த்து “ஆமா, சாஸ்தாவோட வழிகளை நாம என்ன கண்டோம்?” என்றார்.

“சரி” என்று கைகூப்பி நான் எழுந்துகொண்டேன். ரங்கமன்னார் மகேஷிடம் ஒரு நல்ல தொகை வாங்கியிருந்தது முகநிறைவில் தெரிந்தது. விடைபெற்றுக்கொண்டோம்.

ஔசேப்பச்சன் கதையை முடித்துவிட்டான் என்று தெரிந்தது. ஆனால் அவன் கதைகளில் கடைசியாக அவனுடைய ஒரு முத்தாய்ப்பு இருக்கும். அதற்காக நான் எதிர்பார்த்திருந்தேன்.

ஸ்ரீதரன் “எதிர்பார்த்தது இல்லைதான், ஆனால் எதிர்பார்க்க முடியாததும் இல்லை” என்றான்.

ஔசேப்பச்சன் “சிவராஜ பிள்ளையின் ஊர் சுசீந்திரம்… அதைச் சொல்ல மறந்துவிட்டேன்” என்றான். ”சுசீந்திரம் கைமுக்கு பற்றி பேசிக்கொண்டிருந்தோம். சிவராஜபிள்ளை நினைவுக்கு வந்தது அப்படித்தான்” என்றான்.

நான் “இந்த எண்ணைக் கொப்பரையில் என்பது கைமுக்குவது ஒரு பெரிய அனுபவம்தான்… அதை கடந்து வந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன். உடைந்து போய்விடலாம். அல்லது மேலும் கடுமையானவர்களாக ஆகிவிடலாம்” என்றேன்

“எண்ணைக் கொப்பரையில் கைவிடுவது!”என்றார் குமாரன் மாஸ்டர் “நல்ல ஒரு மெட்டஃபர். நாம் இதை பயன்படுத்தலாம்…. வாழ்க்கையில் பலருக்கும் ஒரு எண்ணைக் கொப்பரை அனுபவம் வந்துசேரும்”

“நான் விட்டிருக்கேன்” என்றேன்.

ஔசேப்பச்சன் “மச்சானே, இந்த சுசீந்திரம் கைமுக்கு நிகழ்ச்சியில் பலபேர் தப்பி வந்திருக்கிறார்கள், தெரியுமா?” என்றான்.

“அப்படியா?”

“ஆமாம் கொப்பரையில் கைவிடுவார்கள். வெண்கல அனுமாரை எடுத்து வெளியே போட்டுவிடுவார்கள்.”

“கை வேகாதா?”

“வேகாது”

“எப்படி?

“அதற்கு அந்த சோதனையை நடத்தும் கோயில் யோகக்காரர்கள் என்னும் அமைப்புடன் பேரம்பேசியிருக்கவேண்டும். எண்ணையை கலத்தில் பாதியளவுதான் ஊற்றுவார்கள்.. அதை ஊரார் காண கொதிக்க வைப்பார்கள். அனுமார்சிலை உள்ளே போடப்படும். குற்றவாளி உள்ளே கைவிட்டு எண்ணையை தொடாமல் துழாவிவிட்டு கையை வெளியே எடுத்துவிடவேண்டும்…. குற்றவாளியின் கையில் ஏற்கனவே ஒரு அனுமான் சிலை கொடுக்கப்பட்டிருக்கும். உள்ளே போடப்பட்டதைப்போலவே இன்னொரு சிலை. அவர் வெளியே எடுத்து போடுவது அதைத்தான்…”

”அடப்பாவிகளா!” என்றேன்.

“கையில் கொதிக்கும் எண்ணை பட்ட புண்ணே இருக்காது. அந்தச் சோதனையை கடந்தவர் நிரபராதி மட்டும் அல்ல தெய்வத்தாலேயே ஏற்கப்பட்ட புனிதரும்கூட… பலர் அதன்பின் முக்கியமான பல பொறுப்புகளுக்கு சென்றிருக்கிறார்கள். கோயில்களில் தலைமை யோகக்காரர்களாகக்கூட ஆகியிருக்கிறார்கள். ஒருவர் துறவியாகி அவதார புருஷனாகக்கூட புகழ்பெற்றார்” என்றான் ஔசேப்பச்சன்.

நான் புன்னகையுடன் பெருமூச்சுவிட்டேன்.

“கேட்டாயா அரைமலையாளி எழுத்தாளா, எண்ணைக் கொப்பரைகளில் இருந்து நாம் எப்போதும் கள்ளச்சிலைகளைத்தான் எடுக்கிறோம் ஹஹஹஹா!”

ஸ்ரீதரன் “அந்த பெண்தான் பாவம்… இவனை நம்பி…” என்றாள் “தேவகிதானே அவள் பெயர்? மகேஷின் முதல் மனைவி?”

“அவளைப்பற்றி கிளம்பும்போது மகேஷிடம் பேசினேன்” என்றான் ஔசேப்பச்சன் “அவளுக்கு விவாகரத்து கொடுக்கும்போது கனத்த ஜீவனாம்சம் கொடுக்கவேண்டியிருந்தது. மகேஷ் தன் பெயரில் இருந்த இரண்டு அப்பார்ட்மெண்டுகளை கொடுத்து செட்டில் செய்தான். அவளுடைய நகை அவள் கொண்டுவந்த சொத்து எல்லாவற்றையுமே அவள் கொண்டுசென்றாள். ஆனால் அவளை கல்யாணம் செய்த பிறகு ஒரு வீடும் ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸும் நாகர்கோயிலில் அவள் பெயரில் வாங்கியிருந்தான்.. அவள் அந்த சொத்தை தானே எடுத்துக்கொண்டாள்”

“அடடா!” என்றார் குமாரன் மாஸ்டர்

“மிகப்பெரிய சொத்து அது…அதற்கான கடனை மகேஷ் தன்பேரில் எடுத்திருந்தான். அதை அவன் இப்போதும் கட்டிக்கொண்டிருக்கிறான். மாதம் ஒன்றேகால் லட்சம் ரூபாய்….அவன் திருடுவதை நிறுத்தமுடியாததே அந்த இஎம்ஐ கட்டுவதற்காகத்தான்… திருடித்தான் அதை கட்டுகிறான் என்று அவளுக்கும் தெரியும். அவள் தன் புதிய கணவனுடன் அந்த வீட்டில் வாழ்கிறாள். எட்டு கடைகளை வாடகைக்கு விட்டிருக்கிறாள்” என்றான் ஔசேப்பச்சன் “அதன் பின் ராஜகுமாரியும் ராஜகுமாரனும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள். சுபம் மங்களம்..”

“லோகோ சமஸ்தா சுகினோ பவந்து” என்றார் குமாரன் மாஸ்டர்

”அச்சாயா, இப்படியே கதையை விட்டால் சோறு இறங்காது” என்று நான் சொன்னேன். “நல்லதாக ஏதாவது சொல்லு”

“அடுத்த இருபது ஆண்டுக்காலம் ஃப்யூரர் ஆட்சிதான்” என்றான் ஔசேப்பச்சன்.

“இந்த மார்த்தோமாக்காரர்களை ஒட்டுமொத்தமாக தீயை வைத்து கொளுத்தவேண்டும்…இரக்கமே இல்லாதவர்கள்’ என்று ஸ்ரீதரன் கண்ணீர் மல்கினான்

“டேய்!”

“பின்னே என்ன?”

”சரி பாண்டித்தமிழ் எழுத்தாளனுக்காக நாம் ஒரு சின்ன நம்பிக்கையை அளிப்போம்” என்றார் குமாரன் மாஸ்டர் “அந்த ஒரிஜினல் அனுமார்சிலை அங்கேதான் இருக்கும்”

“ஆ!” என்றேன் “கொதிக்கும் நெய்யில்!”

“கவிதை! அழகியல்! மெய்யியல்!” என்றான் ஔசேப்பச்சன்  “ஆகவே நாம் உலகமெங்கும் நிறைந்திருக்கும் வைஸ்வாநரன் என்னும் அழிவில்லாத பசிதேவனுக்கு பீஃப் பொரியலை ஹவிஸாக்குவோம். ஓம் tதீர்க்க ஸ்வாகா!”

***

முந்தைய கட்டுரைவனவாசம் ,வான்நெசவு -கடிதங்கள்
அடுத்த கட்டுரைசத்யானந்த யோக மையம்