அன்புள்ள ஜெ
கோவை சிறுமுகை மருத்துவ ஜெயமோகன் அவர்களின் இறப்பு குறித்த அஞ்சலிக் குறிப்பை வாசித்தேன். நானும் தனிப்பட்ட முறையில் துயரடைந்த நிகழ்ச்சி. அவர் காய்ச்சலால் அவதிப்பட்டார். ஆகவே வழக்கமான கொரோனா சோதனை நடத்தப்பட்டது. கொரோனா இல்லை, ஆனால் டெங்கு இருக்கலாம் என்று சந்தேகம் வந்து மருத்துவ சிகிச்சை தொடங்குவதற்குள் அவர் மரணம் அடைந்தார். அவர் பணியாற்றிய தொங்குமராட்டா காட்டுப்பகுதியில் கொரோனா இல்லை
ஆனால் கொரோனா நோயால் அவர் மரணமடைந்ததாக சமூகவலைத்தளம் முழுக்க செய்தி பரப்பப் பட்டது. அவருடைய உடலை கொண்டுவர ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவருடைய அம்மா அதனால் தற்கொலை செய்ய முயன்று ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும் அடுத்த பொய்ச்செய்தி பரப்பப்பட்டது. ஊர்மக்கள் மேல் கடுமையான வசைகள் கொட்டப்பட்டன. சமூகவலைத்தளம் முழுக்க அப்படி ஒரு வெறுப்பு.
ஆனால் உண்மையில் அப்படி ஏதும் நடக்கவில்லை. ஊரார் அனுதாபம் தெரிவிக்க வரக்கூடாது என்று போலீஸ் சொல்லிவிட்டனர். அதையும் மீறி துக்கம் விசாரிக்க உறவினர் வந்தனர். ஒருவர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அத்தனைபேருக்கும் அது டெங்கு என்று தெரியும். அத்தனை பேரும் துக்கத்தின்போது திரு வாசுதேவன் அவர்களுக்கு ஆறுதலாகவே இருந்தனர். மகன் இறந்த செய்தி கேள்விப்பட்டதுமே அவர் அம்மா சாணிப்பாலை குடித்துவிட்டார் – என்று சொல்லப்படுகிறது
இத்தனைப் பொய்ச்செய்திகள் ஏன்? யார் இதைப் பரப்புகிறார்கள்? என்ன லாபம்? இதன்வழியாக மக்களை குரூரமானவர்களாக காட்டுகிறார்கள். ஏளனம் செய்கிறார்கள். டாக்டர்களின் மனவலிமையையும் இல்லாமலாக்குகிறார்கள். இதை திட்டமிட்டுத்தான் செய்கிறார்களா? இது பொய்ச்செய்தி என்று தெரிந்ததும் எவருக்குமே எந்த குற்றவுணர்ச்சியும் இல்லை, அடுத்த செய்திக்கு போய்விட்டார்கள்.
திகைப்பாக இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பொய்ச்செய்திகளே வரும், செவிகொடுக்கவே வேண்டாம் என்று நீங்கள் சொன்னதை நினைத்துக்கொள்கிறேன்
ஆர்.பிரகாஷ்
***
அன்புள்ள ஆசிரியருக்கு,
புத்தாண்டின் மகிழ்ச்சி தரும் செய்தியை உங்களுக்கு சொல்லவே இந்த கடிதம்.
அமெரிக்காவின் டல்லஸ் நகரிலிருந்து மாதமிருமுறை வெளிவரும் மின்னிதழான ஆனந்தசந்திரிகை உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து கிடக்கும் தமிழர்களுக்காக இணையவழி தமிழ் பள்ளியை நடத்துகிறது .ஐந்தாம் வகுப்புவரை உள்ள இப்பள்ளியில் நிறைய மாணவர்கள் படித்து பயன்பெறுகிறார்கள்.
ஆனந்தசந்திரிகை ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு தினத்தில் ஆண்டு மலரை வெளியிடுகிறது .ஆண்டு மலர் மட்டும் கொஞ்சம் பிரதிகள் அச்சு பதிப்பாக வெளிவருகிறது.
இவ்வாண்டு ஆண்டு மலரில் மூத்த எழுத்தாளர் லக்ஷ்மி மணிவண்ணனின் மூன்று கவிதையும்,பெல்ஜியம் பிரியா மாதவன்(கட்டுரை),யோகேஸ்வரன் (புத்தக விமர்சனம்),சிங்கை சுபஸ்ரீ (பயண கட்டுரை),கணேஷ் பெரியசாமி சுவிட்சர்லாந்து(கட்டுரை) ஆனந்த சந்திரிகையில் இணை ஆசிரியர் ஆக இருக்கும் லோகமாதேவி இரண்டு கட்டுரையும்,உங்களின் வெள்ளிநிலம் புத்தக அறிமுகமும்,அமெரிக்கவில் வாழும் ராஜன் சோமசுந்தரத்தின் இசை பற்றி ஒரு கட்டுரையை இராம்கி என்பவரும் எழுதியுள்ளனர்.நான் எழுதிய ஒரு சிறுகதையும் இவ்வாண்டு பிரசுரமாகியுள்ளது .
இவர்களில் பலர் உலகம் முழுவதும் பரவியுள்ள உங்கள் வாசகர்கள்,நண்பர்கள் ,மாணவர்கள் .நான் எழுதலாமா என கேட்பவரை எழுதுங்கள் என்று நீங்கள் சொல்வதால் இத்தனைபேர் உருவாகி வந்துள்ளனர்.இலக்கியத்தில் பல படைப்பாளிகளை உருவாக்க வேண்டும் என்ற உங்கள் முயற்சிக்கு கிடைத்த பலன் .
ஷாகுல் ஹமீது,
நாகர்கோயில்.
***
ஆனந்த சந்திரிகை இதழ்
அனைவருமெழுதுவது…