ஏகம் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
ஏகாந்தமாக இருந்து பாட்டு கேட்பது என்று சாதாரணமாகச் சொல்கிறோம். அதன் பொருள் என்ன என்று இப்போது புரிந்தது. பாடுபவன் பாட்டு கேட்பவன் மூன்றும் இல்லாமலாகி ஏகம் மட்டுமே எஞ்சும் நிலையில் இருப்பது. அது நல்ல பாட்டில் அவ்வப்போது நிகழும். அது பாடுபவரை நாம் நெருங்கிச் செல்வது இல்லை. பாட்டு கேட்பவராகிய நாமும் பாடுபவரும் சேர்ந்து இன்னொன்றாக ஆவது
அறிவார்ந்த எந்தக் கேள்வியில் இருந்தும் நான் என்ற ஆணவமும் அதிலிருந்து பேத எண்ணமும்தான் வரும். அறிவைக்கடந்துதான் கலையும் இலக்கியமும் யோகமும் நிலைகொள்ளமுடியும். மெய்யான அன்பேகூட அப்படிப்பட்ட ஒரு நிலைதான்
சந்தானம்
***
அன்புள்ள ஐயா,
தங்களின் ஏகம் சிறுகதை படித்தேன். மிக மிக கனமான கதை.
அனல் பட்டுப் பொசுங்கிய வட்டத் தனிமையில் இசை வழியாகச் சென்று சேரும் இரு தனி மனிதர்கள்..
மனிதன் தனிமையானவன்தான்.. மிகத் தனிமை கொண்டவன்.. தன் அந்தரங்கத்தில் ஆண்டவனையே அனுமதிக்காதவன்.. ஆனால் தனிமையை வெல்லத் தெரிந்தவன்.. இசையால், மொழியால், அன்பால்.
அன்புடன்,
தயானந்த்
***
வான்கீழ் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
வான்கீழ் கதையை ஒரு புன்னகையுடன் படித்தேன். நான் டவர் எரக்ஷனில் பதினெட்டு ஆண்டுகள் வேலைபார்த்தவன். நான் சொல்வது ஒன்று உண்டு. ஒரு ஃபோட்டொவை புளோ அப் செய்வது மாதிரித்தான் அந்த வேலை.நம் கையில் ஒரு ப்ளூபிரின்ட் உண்டு. அதை அப்படியே ஆயிரம் மடங்கு பெரிசாக இரும்பிலே செய்துவிடுகிறோம்
நுணுக்கமான தகவல்கள். நிறைய வேடிக்கை பார்த்திருக்கிறீர்கள். இந்த டெலிகாம் கதைகளில் எல்லாம் செய்திகளை எப்படியோ ஒரு உருமாற்றம் அடையச்செய்துவிடுகிறீர்கள். அவற்றை ஒரு உருவகமாக ஆக்கிவிடுகிறீர்கள் என நினைக்கிறேன். அப்படி உருவகமாக ஆனால்தான் உங்கள் மனதில் அது நிற்கிறது
குமரேசன் நம்பர் போட்டுக்கொண்டிருக்கிறான். அது எதற்காக என்றால் ஒரு பீஸ் அதற்கான இடத்திலே மட்டும்தான் உட்கார முடியும். மாற்றவே முடியாது. மாற்றினால் மொத்த டவரும் அப்படியே தப்பாக ஆகிவிடும். அதேபோலத்தான் ஆணும் பெண்ணும் இல்லையா? அவர்கள் இடம் மாறவே முடியாது
ஜி.சங்கர சுப்ரமணியன்
***
ஜெ.வணக்கம் நலம்தானே?
வான்கீழ் படித்தேன்.மனத்தை மென்மையாக வருடும் இனம்புரியாத காதல்கதைதான். குமரேசன் மனத்தாலேயே ராஜம்மையிடம் பேசிக் காதலிக்கிறான். டவர் மேல் கூட மானசீகமாக பலமுறை ஏறி இருக்கிறான்.அவனால் அதுதான்எல்லாரும் ராஜம்மையிடம் நெருங்கும்போது அவனால் முடியவில்லை.
அவனுக்கு உடற்குறைபற்றி மனக்குறை இருந்திருக்கலாம். ஆனால் ராஜம்மை பற்றி,”அவளுக்கு நல்ல அமௌண்டு குடுப்பாங்க”என்று ஐசக் சொல்லும்போது “நாறப்பேச்சு பேசாதே” என்று குமரேசன் சொல்வதைப் பார்க்கும்போது அவன் மனத்தில் ராஜம்மையிடம் கொண்டுள்ள காதலை மென்மையாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். ஒரு கட்டத்தில் “அவள் கிடைக்காவிட்டால் செத்துப் போயிடுவேன்” என்று கூறும் அளவிற்கு அவன் சொல்லபோது அவனது தூய அன்பு வெளிப்படுகிறது.
அவளுக்கு ஓர் ஆறுதல் தேவைப்படுகிறது.குமரேசன் தவிர மற்றவர்கள் அனைவரும் அவளை அனுபவிக்கவே பேசுகிறார்கள். வயிற்றுப்பிழைப்பிற்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு போலும் அவளுக்கு டவரைச் சாமி என்றதும் மேலே போக வேண்டும் என்னும் ஆசை வருகிறது. இருவரும் ஏறும் விவரம் கதையில் நன்கு வெளிப்படுகிறது ஒரு கட்டத்தில் அவள் கண் சிவப்பாகிறது.
மனஆழத்தில் அடங்கி இருக்கும் அம்பு எனும் ஊற்று வெளிப்பட நல்ல தருணம் நோக்கிக் காத்திருக்கையில் அவன் தொட உள்ளிருந்து ஆர்ட்டிஷியன் ஊற்று வெளிப்படுவது போலக் கட்டி அணைக்கிறாள். இறுதி வரியான”உழுது போட்ட புதுமண்ணின் மனம் என்பது முக்கியமானது. அவள் இப்பொழுது விளைச்சலுக்குத் தயாராகி விட்டாள் என்பதை உணர்த்துகிறீர்கள் “வெள்ளம் எறக்குதல்”சீட்டை எறக்குதல்” போன்ற குழுச்சொற்கள் புதியன. மனங்களில் உள்ள அன்பு திடீரென வெடிக்கும் நல்ல கதை
வளவ.துரையன்
***