சூழ்திரு, பாப்பாவின் சொந்த யானை-கடிதங்கள்

 

சூழ்திரு [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

சூழ்திரு கதையின் நுட்பமான ரசனையின் கதையை வாசித்துக்கொண்டே சென்றேன். ருசி என்ற ஒரே புள்ளி வழியாகச் செல்கிறது கதை. முதல் வரி முதல் ருசிதான். அதிலே அந்த கருங்குரங்கான சுக்ரியும் சேர்க்கலாம். அது லோட்டாவை கவிழ்த்து எஞ்சிய டீயை விரல்விட்டு தேடிப்பார்க்கிறது. கரடிநாயர் பாலி என்றால் சரியான சுக்ரீவன்தான்

கரடிநாயர் சாப்பாட்டையும் சங்கீதத்தையும் வாழ்க்கையையும் ஒன்றாகவே சேர்த்துச் சொல்கிறார். ஆணும்பெண்ணும் இணைவதுபோல இடைக்காயும் பாட்டும் சேரவேண்டும் என்கிறார். அதேபோலத்தான் அவியலில் தயிர் கலக்கவேண்டும்

அவருடைய உலகம் சுவைகளால் ஆனது. அதை அழகாக கடைசியில் நாணுக்குட்டன் நாயர் சொல்கிறார். ருசியாகத்தான் தெய்வமே வந்து மனிதனுடன் தொடர்புகொள்ளமுடியும்

சுவையாகி வருவது என்று ஒரு கட்டுரை முன்னாடி எழுதியிருந்தீர்கள். அதை நினைத்துக்கொண்டேன்

ஆர்.குமாரவேல்

***

அன்புள்ள ஜெ,

சூழ்திருவில் கடவுளே பந்தியாக வருகிறார். படிக்கப் படிக்க நேரடியாக பிள்ளைவாளுடன் நாமும் அமர்ந்து மெய்மறந்து உணவின் சுவையிலேயே ஒன்றிப் போய் தெய்வ கடாட்சம் பெற்று விடுகிறோம். மிக இனிமையாக உள்ளது ஜெ. பந்தியில் வரிசையாக வரும் அமுது போல் உங்கள் கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை. எங்கள் அனைவருக்கும் தினமும் அமுது படைக்கும் நீங்கள் நாணுக்குட்டன் நாயருக்கு மேல். நன்றி

நாரா.சிதம்பரம்

***

பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

இந்தக் கரோனா காலகட்டத்தில் அத்தனை வீடுகளிலும் ஒரு விஷயத்தைச் சொல்கிறார்கள். பெண்குழந்தைகள் சந்தோசமாக இருக்கின்றன. அவர்கள் அப்பாக்களுக்காக ஏங்கிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். அப்பாக்களில் கொஞ்சம் பொழுது உள்ளவர்கள் மிகக் கொஞ்சம். இப்போது ஏகப்பட்ட பாப்பாக்களுக்கு அப்பாக்கள் முழுசாக கிடைத்திருக்கிறார்கள். அவர்களை அந்தப் பாப்பாக்கள் டப்பிகளில் அடைத்து கொண்டுபோய் ஒளித்துக்கொள்கிறார்கள்.

அழகான கதை ஜெ. எந்த மறைபொருளும் இல்லாத கதை. எந்த அமைப்புச் சிக்கலும் இல்லை. ஆனால் க்யூட்டான கதை.

ராம்குமார்

***

அன்புள்ள ஜெ

பாப்பாவின் சொந்த யானை சிரித்துக்கொண்டே வாசித்த கதை. ஏனென்றால் இதே நாடகத்தை நானும் என் வீட்டிலே போட்டேன். கதையைச் சொன்னதும் மீண்டும் சிரிப்பு

அந்தப் பாப்பாவின் குணம்தான் எங்கள் பாப்பாவுக்கும். பயந்தாங்கொள்ளி. ஆனால் ஈகோ பயங்கரம். ஈகோவுக்காக எங்கே வேண்டுமென்றாலும் தைரியமாக போவாள்

ரமேஷ்

***

முந்தைய கட்டுரைவான் நெசவு, மதுரம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைபத்துலட்சம் காலடிகள்- கடிதங்கள்