திருவையாறு, மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

மனநிலை முன்னைக்கு இப்போது சற்றே மேம்பட்டிருக்கிறது. வாழ்கை சற்றே சுவாரசியம் மிகுந்ததாக இருக்கிறது. நீங்களும் உங்களை இசையால் நிறப்பி வந்திருப்பது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது. எந்தை எனக்கு செய்த மிக அரிய செயலாக நான் இன்றைக்கும் நினைப்பது எனக்கு மரபிசையை அறிமுகப்படுத்தியதுதான்.நீங்கள் அதை ரசித்த விதமும் அதை எழுதியிருந்த விதமும் நன்றாக இருந்தது. உங்கள் மனைவியாரின் இசை பரிச்சயமும், அவர் தேர்ந்தெடுத்துத் தந்த  பாடகர்களும் மிகச்சரியாக இருக்கிறது. யேசுதாஸ் வழியாக கர்நாடக இசைக்குள் நுழைந்து பின்னர் அவரைக்கடந்து சென்றுவிட்டால் மீண்டும் அவர் பாடுவதை நம்மால் அவ்வளவு சுலபமாக கேட்கமுடியாது. அவர் திரையிசைக்கும், கர்னாடக இசைக்குமான ஒரு பாலம் போன்றவர். இப்போது உன்னிக்கிருஷ்ணன்.

திருவையாறு எனக்கு இசைகாரணங்களாகவும், இன்ன பிற காரணங்களுக்காகவும் மிகவும் முக்கியமானது. எனது இசைப்பயிற்சி என் நான்காவது வயதில் தொடங்கியது. அதற்கு முன்பிருந்தே சங்கீதத்தின் அறிமுகம் நிகழ்ந்துகொண்டே இருந்தது. என் தந்தை என்னை தோளில் சுமந்துகொண்டு காவிரி மணலிலும் இடுப்பளவு நீரிலும் நடந்துகொண்டே பாடிக்கொண்டு வருவார். மறுகரைவரை அவர் பலமுறை சுமந்து சென்று திரும்ப வருவார். காவேரி என்றால் அகண்ட காவேரி.

தொடர்ந்து ஒரு ஒன்பது-பத்து வருடங்கள் திருவையாறில் உத்சவத்தில் பாடிக்கொண்டிருந்தேன். சமீபகாலமாக, சுமார் பத்து, பன்னிரண்டு வருடங்களாக பாடுவதையே சுத்தமாக நிறுத்திவிட்டிருக்கிறேன். அதன்மீது ஒரு காரணமில்லாத அதீத வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது. வித்வான்களின் போலியான, செயற்கையான செய்கைகளின் மேல் ஒரு தீராத கோபமும் எரிச்சலும் இருக்கிறது. பாடல்கள் கேட்பது கூட இல்லை, பக்கத்திலேயே நிகழ்ச்சிகள் நடந்தாலும். பெரும்பாலும் நிசப்தத்தையே விரும்புகிறேன்.

இந்த முறை என் தந்தை ஆரதனை விழாவிற்கு சென்றிருந்தார். அவருக்கு நான் பாடுவதை நிறுத்திவிட்டிருப்பதில் ஒப்புதல் இல்லை, அடிக்கடி அதுகுறித்து கூறி மிகவும் வருத்தப்படுவார்.  சிறுவயதிலிருந்து என்னை அறிந்தவர்களும் இதே புலம்பல்தான். நான் சொல்வேன் “இதனால் சங்கீதத்துக்கு ஒன்னும் குறைச்சலில்லை” என்று. அங்கிருந்து செல்போனில் எனக்கு கால் செய்து கொஞ்ச நேரம் இதைக்கேளேன் என்று சொல்லி அப்படியே வைத்திருந்தார். கேட்டுக்கொண்டிருந்தேன். அவருக்கு அதில் ஒரு திருப்தி.

முதன் முதலில் நான் திருவையாரில் மேடையேறியபோது எனக்கு மிகவும் பயமாக இருந்தது. எனது குருவும் மேடையில் அமர்ந்திருந்தார்.  மிக அரிதான இரண்டு பாடல்களை தேர்வு செய்து பாடச்சொல்லியிருந்தார் அவர். நன்றாக அமைந்திருந்தது. கீழே இறங்கியதும் பல முன்னனி வித்வான்களிடம் என் குரு என்னை அறிமுகப்படுத்தி, “எப்படி தயார் செஞ்சிருக்கேன் பாத்தியா? என் சிஷ்யப் பிள்ளை.  ஒரு பயலும் இந்தப் பாட்டெல்லாம் பாடமாட்டா. அவ்ளோ சொல்லிவெச்சிருக்கேன்” என்று பெருமிதப்பட்டார். அன்று இரவு அங்கேயே தங்கியிருக்க நேர்ந்தது. அப்போது AIR நேஷனல் ஹூக்கப்பில் என் குருவுடன் மாலையில் பேசிய ஒரு சீனியர் வித்வான் நான் பாடிய அதே பாடலை பாடியபோது எனக்கு உண்மையில் கோபம்தான் வந்தது, என்மீதான எரிச்சலோடு. இதுவரை அந்தப்பாடலை எனக்குத் தெரிந்தவரை யாரும் பாடிக்கேட்கவில்லை. மறுநாள் செய்தித்தாள்களில் என் போட்டோ போட்டு எழுதியிருந்தார்களாம், அப்பா சொன்னார், நான் இதுவரை படிக்கவில்லை.

உங்கள் பதிவு என் பழைய நினைவுகளைக் கிளறுகிறது. நான் தொலைத்த/கடந்த பல விஷயங்களையும். பழங்கதைகள் எப்போதுமே சந்தோஷம் தருவதில்லை அல்லவா?
 
வணக்கம்
ராம்.
 
குறிப்பு:
 
நானெழுதும் எந்த கடிதத்தையும் இனி வலையில் பதிக்காதீர்கள் சார். இது என் தாழ்மையான வேண்டுகோள். இது ஒருவிதமாக மனநோய்போல் ஆகிக்கொண்டிருக்கிறது. நாம் எழுதிய கடிதம் அங்கே பதிந்திருக்கிறதா என்று பார்ப்பது. எனவேதான் இந்த வேண்டுகோள்.
அன்புள்ள ராம்

உங்கள் கடிதத்தை வலையில் பதிக்கிறேன். நீங்கள் எழுதும் கடிதங்கள் நேரடியானவையாக நேர்மையான பதிவுகளாக உள்ளன. ஏன் அவற்றை மனநோயாக ஆக்க வேண்டும்? எழுதுவது நம் எல்லாரிடமும் உள்ள மனநோய்க்கு ஒரு சிகிழ்ச்சை. நிறைய எழுதுங்கள். அனுபவங்கள், நினைவுகள், எதிர்வினைகள் என. வாசிப்பவர்களைப்பற்றி கவலையே படவேண்டாம். அது அளிக்கும் நிறைவையும் முழுமையையும் நீங்கள் மெல்ல மெல்ல உணர்வீர்கள்.

யாருக்கு தன் அகத்தை ஏதேனும் ஒருவழியில் வெளியிடுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறதோ அவன் மகிழ்ச்சியானவன். உங்களால் பாட முடிகிறது, எழுத முடிகிறது. இரண்டுமே பெரிய வரங்கள். இரண்டையும் மேலே கொண்டுசெல்லவும் என்றுதான் நான் சொல்வேன். தொட்டுத் தொடுச் செல்லாதீர்கள், முழுவேகத்துடன் ஆவேசத்துடன் முன்னால்செல்லுங்கள். அதனால் உங்கள் லௌகீக வாழ்க்கையில் எந்த குறையும் வருவதில்லை. இதை பலநூறு நண்பர்களுக்குச் சொல்லி அவர்களின் வாழ்க்கையை வைத்தே இதைச் சொல்கிறேன். கலைகளிலும் சிந்தனையிலும் உண்மையான ஈடுபாட்டை வளர்ப்பதன்மூலம் நாம் நம்முடைய அலுவல்களில் உள்ள சலிப்பைப் போக்கிக் கொள்ள முடியும் ஒவ்வொரு நாளையும் அர்த்தமுள்ளவையாக ஆக்கிக்கொள்ள முடியும். அதன்மூலம் நம் லௌக்கீகத்திறன் பெருகுமே ஒழிய குறையாது.

நீங்கள் மேலும் தீவிரமாக எழுத ஒரு ‘பிளாக்’ ஆரம்பிக்கலாம் என்றுதான் நான் சொல்வேன். உங்கள் பாடல்களைக்கூட அங்கே போட முடியும். இசைத்திறனை வளர்க்க, வெளிப்படுத்த என்னென்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்யுங்கள். நீங்கள் எதுவாக இருந்தாலும் ஒரு பாடகராகவும் உங்கலை உணரும்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுன்கள். என் நண்பர்களில் எத்தனையோபேர் ஆழமான அழகியல் உணர்வு கொண்டவர்களாக இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் ஊடகம் அமையாமல் வாழ்க்கையை வெறுமைகூஇ தவித்துக்கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டில் பிராமணர்கள் அல்லாத சாதியினர் குழந்தைகளுக்கு கலைகளை அறிமுகம்செய்வதையே நிறுத்திவிட்டிருக்கிறார்கள். அதன் விளைவுகளை அனுபவிக்கும் பலரை நான் அறிவேன்.

உங்கள் தந்தை உங்களுக்கு அளித்திருப்பது உங்கள் வ் ஆழ்க்கையை முதுமை வரை மரணத்தின் கணம் வரை அழகுறச்செய்யும் ஒரு மாபெரும் ஆசியை என உணருங்கள். லௌகீகத்தை மடுமே பின் தொடர்பவர்களின் முதுமை சாபம் நிறைந்தது– அங்கே நீங்கள் சென்றுசேரமாட்டீர்கள்.

வெளிப்பாடு என்பதே கலையின் உருவாக்க முறை. அதாவது கலை என்பது வெளிப்படுத்தும்போதுமட்டுமே தன்னை கண்டடையும். கலலையை கைவிட்டுவிடாதீர்கள். அது ஒரு வகை ஆன்மீகமான தற்கொலைபோல

வாழ்த்துக்கள்

ஜெ

 

***

உங்கள் திருவையாறு கட்டுரையைப் படித்தது திருவையாற்றுக்கே போய் வந்த அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு வருடமும், இந்த வருடம் போகணும் என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் போனதே இல்லை. அடுத்த வருடமாவது போகணும். ஆனால், நீங்கள் ஏன் எல்லோரும் சேர்ந்து பாடும் பஞ்ச ரத்தின கீர்த்தனை பற்றி எழுதவேயில்லை. அது தான் சிறிது ஏமாற்றம் அளித்தது.

நன்றி,

விஜய்

 


அன்புள்ள ஜெயக்குமார்

என்னுடையது திருவையாறு பற்றிய ஓர் அறிமுகம் அல்ல. அது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தானே என்று எண்ணினேன். நான் எழுதியது என்னுடைய சொந்த அனுபவத்தைப் பற்றி மட்டுமே. இம்முறை நான் பஞ்சரத்ன கீர்த்தனை பாடும்போது இருக்கவில்லை. அது ஓர் உணர்ச்சிபூர்வமான சடங்கு மட்டும்தான். இசை நிகழ்ச்சி அல்ல
ஜெ

அன்புடன்,
விஜய்
 

அன்புள்ள ஜெயக்குமார்

என்னுடையது திருவையாறு பற்றிய ஓர் அறிமுகம் அல்ல. அது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தானே என்று எண்ணினேன். நான் எழுதியது என்னுடைய சொந்த அனுபவத்தைப் பற்றி மட்டுமே. இம்முறை நான் பஞ்சரத்ன கீர்த்தனை பாடும்போது இருக்கவில்லை. அது ஓர் உணர்ச்சிபூர்வமான சடங்கு மட்டும்தான். இசை நிகழ்ச்சி அல்ல
ஜெ

 

அன்புள்ள திரு.ஜெயமோஹன்,
நீங்கள் சொல்வது சரி தான். பஞ்ச ரத்ன கீர்த்தனை எல்லோரும் சேர்ந்து பாடும் ஒரு நிகழ்ச்சி தான். ஒரு முறையாவது திருவையாற்றுக்கு தியாகராஜ ஆராதனை போது போக வேண்டும்.
 
என் மெயிலுக்கு பதில் எழுதியதற்கு ரொம்ப ரொம்ப நன்றி. இவ்வளவு பெரிய எழுத்தாளரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வருவதே பெரும் பாக்கியம்.
 
நாமும் எழுதிப் பார்ப்போம் என்ற ஆவலில் ஒரு பிளாக் எழுதுகிறேன்.
 
 
நேரம் கிடைத்தால் வருகை தாருங்கள்.
 
அன்புடன்,

விஜய் குமார்
 

அன்புடன்,
விஜய்
***
அன்புள்ள ஜெயமோகனுக்கு,

              தங்களுடைய திருவையாறு பற்றிய கட்டுரையை படித்தேன். தங்கள் எழுத்தை பாராட்டும் நோக்கம் எனக்கில்லை. அது என்றுமே தங்களுக்கு கை வந்த கலை. சிலருக்கு எழுத்து பிழை செய்வது எப்படி சகஜமோ, அது எப்படி பழக்க தோஷமோ அது போல நேர்த்தி மிக்க கட்டுரை எழுதுவது உங்களுக்கு  பழக்க தோஷம் என்று நினைக்கிறேன். தங்களுடைய வலைப்பூவில் ஊமை  செந்நாய் படித்ததில் இருந்தே தினமும் இதை இடை விடாமல் படித்து வருகிறேன். நான் பத்து வயதாக இருக்கும் போது தங்களுடைய பனி மனிதன் தொடரை ஆர்வமாக சிறுவர் மணியில் படித்து இருக்கிறேன். அதில் வரும் டிராகன் வர்ணனையும் அந்த பெரிய தங்க தாமரை மலரையும் அந்த சிறுவன் தலாய் லாமாவும் அடிக்கடி மனதில் வந்து போன காட்சிகள். ஆனால் சில காலம் முன்பு தான் அது தாங்கள் எழுதியது என்று ஓவியர் ஜீவா சொல்லி தெரிந்தது. தங்களின் ஏழாம் உலகம், விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழஅல்லின் குரல் ஆகிய நாவல்களை படித்து இருக்கிறேன். அதை பற்றி தற்போதைய நேர மில்லாமையால் எழுத முடியவில்லை. எழுத நினைத்து பின்னர் கை விட்டு விடுவேன். அதையே மூன்று மாதமாக வெற்றி கரமாக செய்து கொண்டும் வருகிறேன்.

“ஒரு காரணமும் இல்லாமல் ஒருவர் நா நா நா என்று கொடூரமான குரலில் கத்த, மரபுப்பயிற்சி காரணமாக சிலர் அதை ரசிக்கிறார்கள் என்ற எண்ணம்” என்று தங்கள் திருவையாறு பற்றிய கட்டுரையில் எழுதி இருந்தீர்கள். அந்த கருத்தை மாற்றியது போல தாங்கள் எழுதவும் இல்லை. ஆனால், கதகளி பற்றிய ஒரு பதிவில் அதற்கு இந்திய கலை மரபும் அசைவுகளும் தெரிந்திருந்தால் தான் அதை ரசிக்க முடியும் என்றும் எழுதி இருந்தீர்கள். இரண்டும் மரபு பயிற்சி தானே . இரண்டுக்கும் வேறு வேறு நியாயமா?

நன்றி,
பன்னீர் செல்வம்.அன்புள்ள பன்னீர்

உங்கள் கடிதத்தில் என்னுடைய கட்டுரையை சற்றே தெளிவில்லாமல் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று தெரிந்தது. நான் பாகவதர்கள் வெறுமே ஓசையெழுப்புவதாக எண்ணியிருந்தது தொண்ணூறுகளில் என்றும் என் மனைவியை மணம்புரிந்துகொண்ட பின் அந்த எண்ணம் மாறி இசைக்கு அறிமுகமானேன் என்றும்தான் எழுதியிருக்கிறேன்.

உங்கள் கேல்விக்கு ஒரு தளம் உள்ளது. கதகளி போன்ற ஓர் உயர்கலையை அறிந்திருந்த நான் எப்படி கர்நாடக இசையைப்பற்றி அப்படி ஓர் எண்ணம் கொண்டிருந்தேன் என்று கேட்கலாம். அது நாம் அனைவருக்கும் இருக்கும் மாயை. நாம் ஓர் உயர்கலையை ரசிக்கும்போதே இன்னொரு தெரியாத உயர்கலையை இழிவாகவும் எண்ணுவோம். அந்த மாயையை தவிர்ப்பது எளிதல்ல. நம்முடைய மொழி நமக்கு இனிமையாக இருக்கிறது, பிறமொழி வெறும் ஒலியாக இருக்கிறது. பெரும்பாலானவர்கள் தங்கள் மொழி இனிமை என்றும் பிறமொழி காதுக்குக் கடுமையானது என்றும் சொல்வதைக் காணலாம். கிரேக்கர்கள் கிரேக்க மொழியல்லாத பிறமொழிகளை பர் பர் என்ற ஒலிகள் என்று எண்ணி அவற்றைப் பேசுபவர்களை பார்பேரியன்கள் என்று ஒரு கூற்று உண்டு. நாகரீகம் என்பது இத்தகைய பிரமைகளில் இருந்து வெளிவருவதே.

ஜெ

 

***

திருவையாறு

திருவையாறு :கடிதங்கள்

முந்தைய கட்டுரைநான் கடவுள் ஒரு கேள்வி
அடுத்த கட்டுரைடைரி கடிதங்கள்