‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–36

பகுதி நான்கு : அலைமீள்கை – 19

அன்று என் அறைக்கு திரும்புகையில் கணிகருடனான உரையாடலையே எண்ணிக்கொண்டிருந்தேன். என்னை மீறிய ஒன்று, நான் முற்றிலும் விரும்பாத ஒன்றுக்கு இட்டுச்செல்வது, என்னை முற்றழிக்கக்கூடியது அவரிடமிருந்தது. அதிலிருந்து முழுமையாக விலகிவிடவேண்டுமென்று விரும்பினேன். நான் என்றும் எதிர்த்து வெல்ல முயலும் ஒன்றை பற்றிக்கொண்டு தொற்றி அதன் மேல் ஏறி என் உயிராற்றல் அனைத்தையும் குவிக்கச்செய்து வளர்த்து பேருருக்கொள்ளச் செய்துவிடுகிறது அது.

ஆலமரங்கள் வளர்ந்தெழுகையில் அவற்றின் மேல் அவற்றின் அடியிலிருந்த சிற்றாலயங்கள் சென்று அமர்ந்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். இந்த விழைவில், வஞ்சத்தில் நான் சென்று அமர்ந்திருக்கக்கூடும். ஆனால் எவ்வண்ணம் அதை வெல்வது என்று எனக்கு தெரியவில்லை. அதுநாள் வரை நான் அவற்றை வென்றிருந்த வழி என்பது என்னை சிறியவனாக எண்ணிக்கொள்வது. அத்தனை பெரியவற்றை தாங்கும் கலமல்ல நான் என்றாக்கிக்கொள்வது. என்னை ஒரு பெருந்திரளில் பிறரால் அறியப்படாதவனாக அமர்த்திக்கொள்கையில் அப்பெருந்திரளில் ஒருவனாக என்னை நான் பார்க்கும் விழியும் அமைகிறது. நான் எவருமல்ல என்று எனக்கு சொல்லிக்கொள்கிறேன். அதுவே எனக்கு காப்பு.

அது முதலில் உடைந்தபோதே எனது அனைத்துத் தளைகளும் சிதைந்தன. வெட்டவெளியில் நின்றிருந்தேன். தந்தையே, நான் பிறிதொருவன், அறியப்படாதவன், கணிக்கப்படாதவன், எனது எல்லைகள் முடிவற்றவை என்று எண்ணிக்கொண்டேன். என்னுள் ஓடிக்கொண்டிருந்த அவ்வெண்ணங்கள் என்னை பேருருக்கொள்ளச் செய்கின்றன. என் காலடியில் சிற்றுருவாக அனைவரையும் பார்க்கத்தொடங்கினேன். மூத்தவரை, துவாரகையை, ஏன் தங்களைக் கூட. அதை பிறிதொரு மானுடர் அப்போது பார்க்க நேர்ந்தால் இளிவரல் செய்து சிரிக்கக்கூடும். ஆனால் நான் அவற்றை சிறுகுழவியென பேணிக்கொண்டிருந்தேன்.

தந்தையே, ஒவ்வொரு மானுடனுக்குள்ளும் ஆணவமென்னும் சிறுமை தேங்கிக்கிடக்கிறது. எல்லையற்ற ஆணவம். தன்னையே உலகமுதல்வன் என, இறைநிகர்த்தோன் என எண்ணிக்கொள்ளாத எளிய மானுடர் எவரேனும் இப்புவியில் வாழ்கின்றனரா? பிறர்மேல் உண்மையான மதிப்புள்ள பாமரன் என ஒருவன் உண்டா? உண்மையில் எவரும் அதை ஏற்றுக்கொள்வதில்லை என்பதனாலேயே அவன் அதை ஆழப் புதைத்துக்கொள்கிறான். தன் ஆழ்ந்த தனிமையில் மட்டும் அதை எடுத்துப் பார்க்கிறான். அந்தத் தனிமையாலேயே அது இனிமைகொள்கிறது. அவனுடைய அனைத்து துயர்களுக்கும் மருந்தாகிறது. அவனை தன் கைகளில் ஏந்திக்கொள்கிறது.

எவரோ ஒருவர் அதை ஏற்றுக்கொள்கிறார். மிச்சமின்றி வாங்கிக்கொள்கிறார். அவர்மேல் அவன் அப்படியே கவிந்துவிடுகிறான். அவரை தன்னை அறிந்தவர் என்றும் தன்மேல் பெருமதிப்பும் அன்பும் கொண்டவர் என்றும் எண்ணிக்கொள்கிறான். கணிகையர் இந்த வாயிலை திறந்தே உள் நுழைந்து ஆட்கொள்கின்றனர். அரசியல்சூழ்ச்சி அறிந்த அந்தணர் இதைக் கொண்டே மாமன்னர்களுக்கு கடிவாளமிடுகின்றனர். அதை அறிந்து ஏற்றுக்கொண்ட ஒருவன், ஏற்றுக்கொண்டதாக நடித்தாலே போதும் அவ்வாணவத்திற்குரியவனை தன் அடிமையென்றே ஆக்கிவிடமுடியும்.

கணிகரோ அதை அவ்வண்ணமே பெற்றுக்கொண்டார். ‘ஆம், அதனால் என்ன? அது மெய்தானே?’ என்னும் அவருடைய பாவனை எனக்கு முதலில் திகைப்பை ஊட்டியது. பிறிதொரு மானுடர் என்னை அவ்வாறு பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் மிக விரைவிலேயே ‘ஆம், அது அவ்வாறுதானே?’ என்று நானும் எண்ணத் தலைப்பட்டேன். நானும் அவருடன் இணைநின்று உரையாடலானேன். அவரை நான் கையாள முயன்றேன், அவர் என்னை கையாள்வதை ஆழ உணர்ந்திருந்தேன்.

நான் அவரை அஞ்சியது அதனால்தான். ஆகவே உறுதிகொண்டேன், இனி அவருடன் தொடர்பில்லை. இனி அவரை எவ்வகையிலும் என்னுடன் உரையாட நான் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. அவைகளில் அவர் இருக்கட்டும், என் அருகே வந்து அமர வேண்டியதில்லை. அவர் ஒன்றும் சொல்வதில்லை. அரசுசூழ் அவையில் கூட மிகக் குறைவாகவே அவர் பேசினார். ஆனால் என்னை பார்க்கையில் எல்லாம் விழிகளால் அவர் ஒன்று காட்டினார். மணிமுடி சூடி பாரதவர்ஷத்தை ஆண்டுகொண்டிருக்கும் பேரரசன் ஒருவன் முன் அமைச்சர் ஒருவர் பணிவது போன்ற புன்னகையும் தணிதலும். அதனூடாக என் ஆணவத்தை அனலோம்பினார்.

இனி அவர் பார்வையை நோக்குவதில்லை என்று எண்ணிக்கொண்டேன். எவ்வண்ணம் அவரிடம் இருந்து தப்பலாமென்று கணித்தேன். அவரை எதிர்கொள்வது அரிது. அவரை வகுத்துக் கொள்வது அதனிலும் அரிது. அவரை ஒழிவது ஒன்றே வழி. படிப்படியாக அல்ல, அறுத்துக்கொண்டு முற்றொழிதலாக. மறு எண்ணமில்லாததாக. தந்தையே, உயிர் கொல்லும் ஒவ்வொன்றுக்கும் இருக்கும் பெரும் கவர்ச்சி என்ன என்று எண்ண எண்ண வியப்பு ஏற்படுகிறது. அகிபீனா உண்டு இறந்தவர்கள் உண்டு. அரிதொன்றை விழைந்து இறந்தவர்கள் அதனினும் உண்டு. தீங்கில் திளைத்தவர்கள் அத்தீங்குகளை அமுதென உண்டு திளைத்திருக்கிறார்கள்.

நஞ்சென வருவன அனைத்தும் இனியவை. அவை ஒவ்வொன்றும் நாம் கொல்ல முனைகையில் அணுக்கமாகின்றன. விலக்க முயல்கையில் மேலும் இனிதாகின்றன. ஒற்றைக்கணத்தில் வெட்டிச் செல்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். அம்முடிச்சுகளை மெல்ல அவிழ்க்க முயல்பவர்கள் மேலும் மேலும் முடிச்சுகளையே போடுகிறார்கள். இனி அவரில்லை என்று நான் எண்ணிக்கொண்டேன். அதை ஆயிரம் முறை என்னுள் அமைந்த அந்த துடிக்கும் குழந்தையிடம் சொல்லிக்கொண்டேன்.

ஆனால் என் ஊழ் பிறிதொன்றாக இருந்தது. அன்று மூத்தவர் அவையில் ஒரு சிறு நிகழ்வு. நான் சற்று பிந்தியே அங்கு சென்றேன். கிருதவர்மன் அங்கு வந்திருந்தார். அவைமையமென அவரே திகழ்ந்தார். அனைவரும் மகிழ்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். பிரத்யும்னன் கிருதவர்மனுக்கு நேர் முன்னால் அமர்ந்திருக்க சற்று அப்பால் சாய்வான மஞ்சத்தில் கால் நீட்டி ஃபானு  அமர்ந்திருந்தார். சாம்பன் சாளரத்தோரம் கைகளைக் கட்டி நின்றார். வெவ்வேறு நிலைகளில் தம்பியர் அனைவரும் அங்கு இருந்தனர். உரத்த குரல்கள், சிரிப்புகள்.

அவர்கள் சாம்பனின் போர் வெற்றிகள் அசுர குலத்திற்கே உரிய கண்மூடித்தனத்தால் எவ்வண்ணம் வெல்லப்பட்டன என்பதை பகடியாக்கிக் கொண்டிருந்தார்கள். “அவருடைய பெருவெற்றிகள் அனைத்தும் கோட்டைகளை உடைத்துச் சென்று அடையப்பட்டவை, கோட்டைவாயில் திறந்திருப்பது அவருக்கு ஒரு பொருட்டே அல்ல!” சென்ற சில நாட்களாகவே அந்தப் பகடிகளை பார்த்துக்கொண்டிருந்தேன். எவையெல்லாம் மெய்யான ஏளனங்களாக, வசைகளாக, காழ்ப்புகளாக திகழ்ந்தனவோ அவைதான் அவைகளில் நட்பான பகடியாகிக்கொண்டிருந்தன. பகடியாகி தங்களை பெருக்கிக்கொள்கின்றனவா அன்றி தங்களை வலுவிழக்க வைத்துக்கொள்கின்றனவா என்பது எப்போதும் ஐயமாகவே உள்ளது.

நான் உள்ளே நுழைந்தபோது கிருதவர்மன் என்னை நோக்கி புன்னகைத்து கை நீட்டி “இவன் சொல்வலன். இவனில்லையேல் நான் இங்கு வந்திருக்கமாட்டேன்” என்றார். ஒருகணம், அதனினும் குறைவான ஒரு கணத்தில் உடன்பிறந்தார் அனைவருமே அமைதியாகி விழிகூர்ந்து பின் செயற்கையாக தங்களை மீட்டுக்கொள்வதை நான் கண்டேன். என் உள்ளம் திக் என்றது. நெய் தொட்ட அனலென. மேலும் கிருதவர்மன் என்னைப்பற்றி எதுவும் சொல்லக்கூடாதென்று நான் எண்ணினேன். அவர் விழிகளில் இருந்து ஒழிவதுபோல் அவரது வலப்பக்கமாக சென்று உடன்பிறந்தாருக்குப் பின்னால் சென்றேன்.

ஆனால் அவர் திரும்பி “வா! வா! எங்கு சென்று ஒளிகிறாய்?” என்றார். “இவ்வாறு ஒளிந்துகொள்ளும் ஒருவனையே நாம் ஐயப்பட வேண்டும். அவர்களுக்குள் என்ன இருக்கிறதென்றே தெரியாது. எண்ணுக, இவன் ஒருவேளை துவாரகையில் இருந்து கிளைத்து ஒரு நாட்டை உருவாக்கக்கூடும், அங்கு தனிமுடி சூடி அமர்ந்து நம் குடிக்கு மேலும் பெருமை சேர்க்கக் கூடும்!” என்றார். நான் அவரிடம் தனியாகச் சொன்ன சொற்களை அவையில் பகடியாக சொல்லப்போகிறார் என்று நான் அஞ்சினேன். இறந்தவன்போல் உள்ளும் புறமும் அசைவிழந்தேன்.

அவர் கை நீட்டி என்னை அருகணைத்து, என் தோளை வளைத்து தன் உடலுடன் சேர்த்துக்கொண்டு “பிறர் உள்ளத்தை கூர்ந்து அறிந்திருக்கிறான். எங்கு எச்சொல்லை எடுக்கவேண்டுமென்றும், அச்சொல் வளரத்தொடங்க வேண்டும் என்றும், அச்சொல் வளரத்தொடங்குகையில் எவ்வாறு அதிலிருந்து முற்றிலும் விலகி நின்றிருக்க வேண்டும் என்றும் அறிந்திருக்கிறான். தந்தையிடமிருந்து கற்றிருக்கிறான். ஆனால் இவன் தந்தையை மிகுதியாக பார்த்திருக்க வாய்ப்பில்லை. குருதியினூடாக பெற்றிருக்கிறான்” என்றார். நான் ஆறுதல் அடைந்து மீண்டேன். என் நெஞ்சு படபடத்துக்கொண்டிருந்தது.

மூத்தவர் ஃபானு  என்னை பெருமிதத்துடன் நோக்கி “இவனை நாங்கள் சற்று பிந்தியே அடையாளம் கண்டுகொண்டோம். நாங்கள் ஒவ்வொருவரும் பதின்மர் என்பதனால் எவ்வண்ணமோ அவையில் ஓரிருவர் பிறர் அறியாமல் இருந்துவிட நேர்கிறது” என்றார். “கருவூலத்தில் மறந்துவிட்ட அறைகளில் சில சமயங்களில் பழம்பொன் கிடைக்கும். அப்போது எழும் உவகைக்கு அளவே இல்லை” என்று பிரத்யும்னன் சொன்னார். “உரிய படைக்கலம் உரிய பொழுதில் வந்து நம் கைகளை அடையும் என்பார்கள்” என்று சாம்பன் சொன்னார்.

ஆனால் அச்சொற்கள் அனைத்துமே சற்று பொய்யானவை என்று எனக்கு தோன்றியது. அவை அப்போது உண்மையான உணர்ச்சியுடன் சொல்லப்பட்டன, நம்பி முன்வைக்கப்பட்டன என்றாலும் அச்சொற்களுக்குள்ளேயே என்னை வேவு பார்க்கும் ஒன்று இருந்தது. அது என்னை பிறிதொரு இடத்தில் வந்து தொட்டு நோக்குகிறது. பதற்றத்துடன் ஆராய்கிறது. இனி எந்த அவையிலும் எனது விழியை எவரும் கவனிக்காமல் இருக்கமாட்டார்கள். எங்கிருந்தாலும் ஒன்று வந்து என்னை தொடாதிருக்காது.

நான் மேலும் என்னை குறுக்கிக்கொள்ள முயன்றேன். அப்போது எனது உடலசைவுகள் அனைத்தும் மேலும் செயற்கையாயின. எவ்வண்ணம் கணிகர் உடல் மடிந்தவரானார்? இத்தகைய அவைகளில் தன்னை குறுக்கிக் குறுக்கி அவ்வாறு ஆனாரா? அவ்வாறு அறிந்ததனால் தன்னை குறுக்கிக்கொண்டிருக்கிறாரா? அல்லது நேர்மாறாக இருக்கக்கூடுமா? பூனை சிறுதுளைகளுக்குள் தன்னை நீட்டி இழுத்து மடித்து உள்நுழைகிறது. குறுகியோர் வெல்கிறார்கள் என்பதனால் வெல்வோர் குறுகுகிறார்களா என்ன?

மீண்டும் இளிவரல்கள், ஏளனங்களுக்கு சென்றன அவை நிகழ்வுகள். இம்முறை இயல்பாக பிரத்யும்னனுக்கும் ருக்மிக்குமான உறவு நோக்கி சென்றது பேச்சு. தன் மாமனைக் கொன்ற தந்தையின் மைந்தனை ருக்மி எப்படி பார்ப்பார்? ஒரு மற்போருக்கு பிரத்யும்னன் ருக்மியை அழைக்க ருக்மி அஞ்சுவதைப்பற்றி ஃபானுமான் நடித்தான். விழிநீர் வார விழுந்து புரண்டு நகைத்தனர். பிரத்யும்னன் அந்த நகையாடலை விரும்பி தானும் நிலத்தில் கையால் அறைந்து நகைத்தார்.

அப்போது மூத்தவர் ஃபானு  என்னிடம் திரும்பி “இளையவனே, சென்று நமக்கு ஊண் ஒருங்கிவிட்டதா என்று பார். சூதர்களிடம் எல்லா உணவுப்பொருட்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளதா என்பதை இன்னொரு முறை பார்த்து சொல்” என்றார். மிக இயல்பாக வந்த ஆணை. மெய்யாகவே அதைத்தான் நான் அங்கு பெரும்பாலும் செய்துகொண்டிருந்தேன். அவர் அவ்வாறே சொல்லியிருக்கலாம், என் நிலை சற்றே மேம்பட்டுவிட்டதை அவரது நா உணராமலிருந்திருக்கலாம். ஆனால் அத்தருணத்தில் அவையில் அச்சொல் எழுந்தது என்னை நடுக்குறச் செய்தது.

ஒருகணத்தில் நான் பல விழிகளைத் தொட்டு மீண்டு வந்தேன். அத்தனை விழிகளிலும் ஒரு நிறைவை கண்டேன். அவை ஒருகணத்திலும் குறைவான அளவில் ஏளனத்தை கைக்கொள்வதை கண்டேன். என் உளமயக்காக இருக்கலாம். கண்ணுடன் உள்ளத்தின் ஆழத்தில் இருக்கும் சுஷுப்தி மேலும் தொடர்பு கொண்டிருக்கிறது. கண்மூடாமல் சுஷுப்தியோ ஸ்வப்னமோ எழுவதில்லை. கண்டவை சுஷுப்தியாகின்றன. காணாதவை ஸ்வப்னம் ஆகின்றன. காணமுடியாதவை துரியத்தில் எழுகின்றன.

நான் தனித்துச் சோர்ந்து அவை நீங்கினேன். என்னுள் அத்தனை விழிகளும் நிலைத்திருப்பதாக உணர்ந்தேன். உணவறைக்குச் சென்று சூதர்களுக்கு அங்கு நிகழவிருந்த விருந்துகளுக்கான அனைத்தையும் ஒவ்வொன்றாக நோக்கி ஆணையிட்டுக்கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் என் உள்ளம் எரிந்துகொண்டிருந்தது. முதன்முறையாக ஒன்றை உணர்ந்தேன். இனி அவைச்சிறுமைகளை என்னால் தாங்க இயலாது. இனி என் முன் பணியாத ஒவ்வொரு விழியும் என்னை சீற்றம்கொள்ளச் செய்யும். இனி ஒருபோதும் பிறரிடம் என்னால் முழுமையுடன் தலைவணங்க இயலாது. எழுந்துவிட்ட பின் மடிவது இயல்வதல்ல.

இனி எங்கும் நான் என்னை மறைத்துக்கொள்ள இயலாது. ஆகவே இனி தயங்குவதிலும் பொருளில்லை. அவ்வெண்ணம் எழுந்ததுமே கணிகர்தான் என் முன்னில் முதலில் தோன்றினார். அவரை பார்க்கவேண்டும் என்று எண்ணமெழுந்ததும் இயல்பாக அதை திமிறும் குதிரையென கடிவாளம் பற்றி இழுத்து அடக்கினேன். பின்பு இதை ஏன் செய்கிறேன் என்று எண்ணிக்கொண்டேன். இந்த எண்பதின்மரில் எவரையும் அஞ்சாத நான் ஏன் அவரை அஞ்சவேண்டும்? அவரை என்னால் ஆள முடியாதா என்ன? அவரை ஆள்வது கடினம், ஆனால் என்னை நானே ஆள்வதுதான் அது.

எனது ஆற்றல்களுடன் அவர் ஆடுவதில்லை. எனது ஐயங்களுடன், விழைவுகளுடன், அச்சங்களுடன் ஆடுகிறார். ஒவ்வொரு மானுடருக்குள்ளும் வாழும் இருளுடன் உறவாடுகிறார். அவரை எதிர்கொள்ள மிகச் சிறந்த வழி நம் இருள்மேல் நாம் ஆள்கை கொள்வது. நம்மை நாம் அறிந்திருப்பது. ஆனல் அது எளிதல்ல. ஆணவமும் விழைவும் யோகியருக்கு மட்டுமே கட்டுப்படுபவை. என் ஆணவத்தின், விழைவின் விசையை பிற எவரை விடவும் நானே அறிவேன்.

ஆனாலும் அவரை சந்தித்தே ஆகவேண்டும் என்று எனக்கு தோன்றியது. அவரிடம் இருந்துதான் அனைத்தையும் தொடங்க முடியும். எனது விழைவுக்கு மிகப்பெரும் கருவி அவரே. அவரை எனது கருவியாக்க வேண்டுமெனில் நான் அவரது கருவியாக வேண்டும். ஒருவருக்கொருவர் கொண்டும் கொடுத்தும் மட்டுமே இத்தருணத்தை பெரிதாக்கிக்கொள்ள முடியும். உணவகத்தில் அனைத்தையும் ஒருக்கச் சொல்லிவிட்டு நான் அவைக்கூடத்தில் நின்றிருந்தேன். உணவு ஒருங்கியதும் நானே மணியோசையை எழுப்பினேன்.

உடன்பிறந்தார் அனைவரும் உரக்க பேசிச் சிரித்தபடி வந்து உணவுண்டனர். அவர்களுக்கு ஆகவேண்டிய ஒவ்வொன்றையும் நோக்கி நோக்கி செய்தேன். சூதர்களுக்கு ஆணையிட்டேன். சில தருணங்களில் உணவுக்கலத்தை நானே எடுத்து வைத்தேன். அவர்கள் உண்ணுகையில் எது குறைகிறதோ அதை நோக்கி பரிமாறினேன். அங்கு ஒரு ஏவலனைப் போலிருந்தேன். அப்போது அது எவ்வகையிலும் உளம்குன்றச் செய்யவில்லை. ஏனெனில் நான் அறிந்திருந்தேன், நான் எவரென்று. அவர்களுக்கு அதை அறிவிக்கும் பொழுதுக்காக காத்திருந்தேன். அந்த எண்ணத்தினூடாக அத்தருணத்தை கடந்துவிட்டிருந்தேன்.

பெரும்படைக்கலம் ஒன்றை கரந்து வைத்திருக்கிறேன். ஓர் இமை கூட அசைக்காமல் இந்த எண்பதின்மரிலும் எஞ்சிய அனைவரையும் சங்கறுத்துக் கொல்ல என்னால் இயலும். எனில் நான் எதை அஞ்சவேண்டும்? எங்கும் குன்ற வேண்டியதில்லை. அவர்களை இரக்கத்துடன் பார்த்தேன். ஏளனத்துடன் அவர்களின் சிரிப்புகளை நோக்கினேன். அவர்கள் உணவுண்டு மயங்கி குழறி சரிந்தபோது ஏவலரைக்கொண்டு ஒவ்வொருவரையாக அவரவர்களின் அறைகளுக்கு அழைத்துச்செல்லச் செய்தேன்.

 

உணவறை ஒழிந்தது. கலங்கள் ஒவ்வொன்றையாக கொண்டுசென்றனர். அறையெங்கும் எஞ்சியிருந்த உணவின் மணம் அகலும் பொருட்டு அங்கு குந்திரிக்கமும் சாம்பிராணியும் இட்டனர். சாளரங்களினூடாக காற்றை திறந்துவிட்டு அந்த அறையை புகையால் கழுவினர். நான் என் அறைக்கு சென்றேன். என் உடலிலும் உணவும் மதுவும் மணத்தது. ஆடை மாற்றி நீராடி பிறிதொரு ஆடை அணிந்தேன். சற்றுநேரம் கண்மூடி ஓய்வெடுத்தேன். என் உள்ளம் தெளிவாக இருந்தது.

நான் கணிகரைப் பார்க்கச் சென்றேன். தன் குடிலில் அவர் அப்போதும் தனித்திருந்தார். “உள்ளே வருக!” என்று என்னை அழைத்தார். நான் உள்ளே சென்று அவருடன் அமர்ந்துகொண்டேன். இம்முறை அந்தச் சிறுகுடிலில் உடலுடன் உடல் ஒட்டி அவருடன் அமர்ந்திருப்பது மிக அணுக்கத்தை உருவாக்கியது. ஒரு சிறு கோழிமுட்டைக்குள் இரண்டு கருவுயிரிகளாக உயிருடன் அமர்ந்திருப்பதுபோல. எழும் இரு கோழிகுஞ்சுகள். “சொல்க!” என்று அவர் என்னிடம் சொன்னார்.

நான் என் உள்ளத்தை அவரிடம் சொல்லத் தொடங்கினேன். என் கனவை மட்டுமே சொல்லவேண்டும் என நினைத்தேன். ஆனால் சொல்லிச்சொல்லி என் ஐயங்களையும், கசப்புகளையும், காழ்ப்புகளையும் சொன்னேன். “ஆம், அதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்” என்றார். “நீங்கள் முழுமையாக வெல்லவேண்டும். மும்முடி சூடி இந்த துவாரகையில் அமரவேண்டும்.” நான் “நான் ஆற்றல்கொண்டவன். இச்சிறு எல்லைக்குள் என்னை சுருட்டிக்கொள்ள என்னால் இயலவில்லை. கணிகரே, எனக்கு துவாரகை வேண்டும். அதைவிடக் குறைவான ஒன்று எனக்கு தேவையில்லை. நீங்கள் உடன் நிற்பீர்கள் எனில் நான் வெல்வேன்” என்றேன்.

“எனில் நீங்கள் எனக்கு அளிப்பதென்ன?” என்றார். “எதையும்… அந்தணரே, எதையும்” என்றேன். “நான் முடிசூடினால் இந்நகரின் முதன்மை அமாத்யர் எனும் பொறுப்பை அடையுங்கள்.” அவர் நகைத்து “பொறுப்பை நாடியிருந்தால் பாரதவர்ஷத்தில் மும்முடி சூடி அமரும் இடத்தையே நான் அடையமுடியும்” என்றார். என்னுள் எரிச்சல் எழுந்தது. இந்த அந்தணனுக்குரிய பாடத்தை பிறிதொருநாள் புகட்டுவேன் என்று எண்ணிக்கொண்டேன். “பிறகென்ன?” என்றேன். என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தார். “கூறுக! பிறகென்ன?” என்றேன்.

“யாதவரே, உங்களை இப்பெருநகரின் தலைவரென அமரச்செய்கிறேன். ஐயம் தேவையில்லை, மும்முடி சூடி நீங்கள் அமர்வீர்கள்” என்றார் கணிகர். என் உள்ளம் படபடத்தது. அதை கூறுபவர் எளிய மானுடர் அல்ல என்று எனக்கு நன்கு தெரிந்தது. சுட்டுவிரல் அசைவால் பாரதவர்ஷத்தை நடுங்கச் செய்பவர்களில் ஒருவர். தந்தையே, அவர் உங்களுக்கு இணையானவர். ஒருவேளை நீங்கள் உங்களுக்கு இணையானவர் என்று இப்புவியில் கண்ட ஒரே மானுடர் அவர். அதை அன்று அத்தனை தெளிவாக உணர்ந்தேன். அந்த மின்னும் கண்கள் பிறிதொருவருக்கு உரியவை. அப்பேரழகுப் புன்னகை உங்களுக்குரியது.

“கூறுக! தாங்கள் எதை கோரினாலும் அளிக்கிறேன். இம்மணிமுடியைச் சூடி அமர்ந்த மறுகணம் சிரமறுத்து அரியணையில் விழவேண்டுமெனிலும் கூட” என்றேன். “வேண்டியதில்லை” என்றார். “தாங்கள் தங்கள் தந்தையை துறந்தாக வேண்டும்.” அது எனக்கு சிறு அதிர்ச்சியையே அளித்தது. அவரிடம் நான் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. “நான் இப்போதே அவரை துறந்திருக்கிறேன்” என்றேன். “இவ்வண்ணமல்ல. பெயரிலிருந்து, உள்ளத்திலிருந்து, உள்ளாழத்திலிருந்து” என்றார்.

நான் அசையாமல் அமர்ந்திருந்தேன். அவர் என்னை நோக்கி “இன்று உங்களுடையதென்று நீங்கள் வைத்திருக்கும் அனைத்தையும் துறப்பது அது. மணிமுடி சூடி துவாரகையில் அமர்ந்திருக்க வேண்டுமென்று எண்ணுகையில்கூட எதன்பொருட்டாக அதை எண்ணுகிறீர்கள்? தந்தையைக் கடந்து செல்லவேண்டும் என்பதுதானே?” என்றார் கணிகர். “மைந்தன் தந்தையைக் கடந்து செல்வதே தந்தைக்குச் செய்யும் பெரும்புகழ் என்பதை அறிந்திருக்கிறீர்கள். ஆகவே தந்தையைக் கடந்து செல்லல் அல்ல. துறந்து செல்வதே தேவை என்று கோருகிறேன்.”

“இங்கு அவர் ஒரு துளிகூட எஞ்சலாகாது. ஒருதுளி கூட. எஞ்சுவது அனைத்தும் அவருடைய எதிர்புகழாக இருக்கவேண்டும். அல்லது அதுகூட எஞ்சவேண்டியதில்லை. அவரை முற்றாகச் சரித்து கீழ் நோக்கி செலுத்தவேண்டும்” என்றார் கணிகர். நான் முனகலாக “இந்நகர் இருக்கும் வரை அவர் இருப்பார்” என்றேன். “ஆம், அவர் இருப்பார். அது எவ்வண்ணம் இருக்கவேண்டுமென்று நான் முடிவெடுப்பேன். முற்றாக இந்நகரை அழித்துவிடவேண்டும்” என்றார்.

நான் திகைப்புடன் ”கணிகரே” என்றேன். “இந்நகர் அழியட்டும். யாதவக் குடி இந்நகர் இல்லாமலும் சிறக்கக்கூடும். நீங்கள் யாதவக் குடிக்கு அரசராகுக! உங்கள் பெயரால் நகர் ஒன்றை உருவாக்குக! ஃபானுபுரம்…” என்றார். “அவ்வாறே” என்றேன். அச்சொல் என்னை கிளரச் செய்தது. “அதை சொல்வது எளிது. நகரிலிருந்து அவரை எடுக்கலாம், உங்கள் ஆழத்திலிருந்து எடுப்பது ஒரு பெரும் தவம்” என்றார் கணிகர். “அதை இயற்றுகிறேன். எனக்கு வழி காட்டுங்கள், முற்றாக அவரை என்னில் இருந்து அகற்றுகிறேன்” என்று நான் கூறினேன்.

“இந்நகரை அழிக்கவேண்டும். அதற்கான வழியை நான் கூறுகிறேன்” என்று கணிகர் சொன்னார். “அழிப்பதென்றால்?” என்றேன். “இந்நகரின் ஒவ்வொரு அடித்தளமும் நொறுங்கவேண்டும். ஒவ்வொரு மாளிகையும் சரியவேண்டும். இந்நகர் கடல்கொண்டு மறையவேண்டும்.” நான் மூச்சு இறுக அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவருடைய இனிய புன்னகை விரிந்தது. “ஒரு குமிழியென இது மறையவேண்டும். கல்பொருசிறுநுரை என” என்றார்.

முந்தைய கட்டுரைபாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]
அடுத்த கட்டுரைஇடம், வேட்டு -கடிதங்கள்