இன்றைய செய்தி ஒன்று துயரத்தை அளித்தது. நீலகிரி மாவட்டம் தெங்குமரஹடா ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் திரு.ஜெயமோகன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார்.
தெங்குமரஹடாவுக்கு நான் நண்பர்களுடன் சென்றிருக்கிறேன். அடர்காட்டுக்குள் இருக்கும் ஊர். காட்டுக்குள் குடியேறியவர்களால் ஆனது, ஆகவே அதை காலிசெய்யவேண்டும் என நீதிமன்றமும் அரசும் ஆணையிட்டுவிட்டன. மக்கள் அதை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே சாலை உள்ளிட்ட எந்த்த வசதியும் இல்லை.அங்கே மருத்துவப் பணி என்பது கிட்டத்தட்ட ஒரு போர்ச்சூழல் பணிதான்.
மருத்துவர் ஜெயமோகன் அப்பகுதிக்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருக்கிறார்.MMC யில் 2007ல் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவர். மருத்துவக் கல்வியில் உயர்நிலை தகுதியுடன் வென்ற அவர் அத்தகைய பிற்பட்ட ஊருக்குச் சென்று பணியாற்றியது சேவைநோக்கத்தால்தான். அவருடைய பணியை நண்பர்கள் நினைவுகூர்கிறார்கள்.29 வயதான ஜெயமோகன் அவர் பெற்றோரின் ஒரே மகன். அவர் அன்னை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாகச் செய்தி அறிந்தேன்.
மருத்துவருக்கு அஞ்சலி