உத்திஷ்டத ஜாக்ரத!

 

என் அன்பிற்கினிய ஜெ,

 

வணக்கம். நலமாக இருக்கிறீர்கள் என்றே எண்ணுகிறேன்.

நேற்று அந்த கூக்கு நிகழ்வில் உங்களை சந்திக்க ஆவலில் உட்கார்ந்திருந்தேன். நீங்கள் சிறிது நேரம் நேரலையில் தெரிந்தீர்கள். ஏதோ ஒன்றை பரபரப்பாக எழுதிக் கொண்டிருந்தீர்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே எங்களுடன் உரையாட மடிக்கணினியை தூக்கிக் கொண்டு வெளியில் வந்து உட்கார்ந்திருந்தீர்கள். உங்கள் பின்னால் அழகான அந்த மஞ்சள் அரளியைப் பார்த்தேன். அது மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டிருந்தது. தொழில் நுட்பக் கோளாறு காரணமாக காலத்தில் உறைந்த வண்ணமாக சிறிது நேரம் தெரிந்தீர்கள். சற்று நேரத்திற்கெல்லாம் உங்கள் தளத்தில் நிகழ்ச்சி நடைபெறவில்லை என்று சொல்லியிருந்தீர்கள். அப்படி சொல்லவில்லையானால் அந்த 3 மணி நேரங்கூட நீங்கள் வருவீர்கள் என்று பலரும் உட்கார்ந்திருப்பார்கள். உங்களின் துரித் செயல்பாடுகளுக்காய் நன்றி. ரியல் டைமில் உங்களை சிறிது நேரமே பார்த்தாலும் உங்களின் வேகமும், நேரமில்லை/ மறு நொடியே மரணித்து விடுவேன் போன்ற வினையாற்றல்களும் ஊக்கமளித்தன. நான் இப்பொழுது செய்து கொண்டிருப்பதையும் அப்படியே திறனாக செய்ய முற்படுகிறேன் ஜெ. நன்றி.

ஒரு போதும் சென்றடையவில்லை என்ற நிறைவின்மையை அடைக” என்ற உங்களின் ஒற்றை வரியைக் கொண்டு நண்பர் ஒருவர் குழுவில் விவாதத்தை ஆரம்பித்திருந்தார்.

இந்த வரிகள் ஆன்மீகவாதிக்கான வரிகள் அல்ல. அவன் முழுமையை அடைய முடியும் என்ற வாதத்தை முன் வைத்து, “ஆன்மீகவாதி தன் ஊழ்கம் மூலமாக அந்த பேரொளியை அடைய முயற்சிக்கிறான். அந்த நிலையை சென்றடைய வேண்டும் என்றும் அந்த நிறைவை அடைய வேண்டும் என்றும் தான் அதுவரை பெற்ற அனைத்தையும் துறந்து அந்நிலைக்கு செல்லும் பாதையில் சேர்கிறான். அவன் லட்சியமே சென்றடைந்து நிறைவு பெற வேண்டும் என்பதே. அதை நோக்கி செல்லவே நம் தத்துவங்கள் போதிக்கின்றன. தத்வம்ஸி என்பதுகூட நான் அதுவாகிறேன் எனும் நிறைவை சொல்பவைதான். நான் சென்றடைந்து அவனாகிவிட்டேன் என்பதே ஒரு நிறைவுதானே. தன் பவசக்கரத்திலிருந்து விடுபட்டு அவன் பேரோளியுடன் ஒன்றாகிவிட்டான். நிறைவடைந்து விட்டான். சென்றடையவில்லை என்று சொல்லியிருந்தால் மற்றொரு தருனத்தில் அவன் சென்றடையலாம் என்று கொள்ளாம். ஆனால் அவரோ ஒருபோதும் சென்றடையவில்லை என்று சொல்கிறார். அது ஆன்மீகவாதியை தளர்வடைய வைக்கும் சொல். ஊழ்கத்தில் அமர்ந்தவன் நான் அங்கு சென்றடைய போகிறேன் எனும் சொல்லே பெரும் ஊக்கத்தை தருவது. அதனால்தான் இவ்வரிகளை என்னால் ஆன்மீகவாதியுடன் தொடர்புகொள்ள முடியவில்லை. இவ்வாறுதான் நான் எண்ணுகிறேன். இதற்கு அவரின் சொல்லென எழுவதை ஒருவாறு அறிகிறேன். ஆனால் அவர்தான்  அதை சொல்ல வேண்டும். மறுபிறவி என்றொன்று எனக்கில்லை எனும் நிறைவு வேறெது எனக்கு தரமுடியும். எனவே நான் நிறைவை நோக்கியே சென்றடைய விரும்புவேன்” என்று முடித்தார். வேறொருவரும் இதையே வழிமொழிந்தார்.

ஆனால், எனக்கோ உங்களுடைய வரிகள் யாவருக்கும் பொருத்தமானது என்று தோன்றியது.  நீங்கள் ஆன்மீக வழியை நாடியபோது குரு நித்திய சைதன்யா உங்களிடம், எழுத்தின் வழி மூலமும் கூட அந்நிலையை அடையலாம் என்று சொன்ன நிகழ்வு தான் நியாபகம் வந்தது. பின்னும், விஷ்ணுபுரம் கெளஸ்தூபத்தில் அஜிதன் எழுப்பும் தருக்கம் நிறை கேள்விகள் யாவும் அந்த நிறைவின்மையை சொல்வதாகத்தான் தெரிகிறது. “எங்கோ எட்ட முடியாத தொலைவில், துள்ளியமான மழைக்கால வான்வெளுப்பு போல உறுத்தாத பேரொளி ஒன்றைக் காண்கிறேன். ஆனால் அங்கு நான் ஒரு போதும் போக முடியாது.  ஞானத்தைச் சேர்க்க இத்தனை வருடங்கள் ஆயின. உதற எத்தனை வருடங்கள் ஆகுமோ? என் ஆயுள் போதுமா அதற்கு?” – என அவன் தன் ஞானத்தை கேள்விக்குள்ளாக்குகிறான். அதில் வரும் சித்தனோ, முழுமை என்ற ஒன்றை அடைய முடியாது என்று முற்றும் உணர்ந்த சூனியமாகத் தெரிந்தார். ஒருவேளை அஜிதனுக்கு முழுமை என்ற புள்ளி ஒன்றிருந்தால் அது சித்தனாகத்தான் இருக்க முடியும். யாவும் சூனியம் என்ற புள்ளியையே இறுதியில் அடையும் என்றே நான் புரிந்துகொண்டேன். லெளகீகமாயினும், ஆன்மீகமாயினும், கலையின் எத்திறையாயினும் அதன் உச்சத்தை நோக்கிய பயணத்தில் கண்டடைவது நிறைவின்மையே என்றும் நினைக்கிறேன். அந்த நிறைவின்மை என்றபுள்ளிதான் முழுமை/சூனியம். ”ஒரு போதும் சென்றடையவில்லை என்ற நிறைவின்மையை அடைக” என்பதும் அது தான் என்றே புரிந்துகொள்கிறேன். நீங்களுமே எழுத்துலகின் உச்சத்தில் நின்று நிறைவின்மையைக் காணுவதாக எண்ணுகிறேன். அல்லது கண்டுவிட்டீர்கள் என்றோ/ அதை நோக்கிய பாதையில் நடந்து கொண்டிருப்பதாக கற்பனை செய்து கொள்கிறேன்.

இயற்கையிலும் அதே நிறைவின்மை இருப்பதாகத்தான் காண்கிறேன். பரிபூரண நிறைவின்மையை அடையத்தான் யாவும் முயன்று கொண்டிருக்கின்றன அல்லது அடைந்துவிட்டன என்றே கருதுகிறேன். சூனியம் என்று நீங்கள் விஷ்ணுபுர கெளஸ்தூபத்தில் சொல்வதை நான் அறிவியல் கோட்பாட்டில், கருந்துகளுக்கு ஒப்பிட்டுப்பார்த்தேன். யாவும் சென்று சேரும் புள்ளி அது. அனைத்துப் பேரொளிகளும் தன்னை அழித்துக்கொள்ளும் புள்ளி. அதன் முடிவு ஒரு சூனியப்புள்ளி என்றே கருதுகிறேன். பேரொளிகள் யாவும் நாம் அறிந்தவை எனில், அறியப்படாத கரும் பொருள்களும்(Dark matter), கரும் ஆற்றலும்(dark energy)  பூமியைவிட அதி வேகத்தில் சுற்றும் காண முடியாத பேரொளிகள்(ஐன்ஸ்டீன் கோட்பாடு) இவையாவும் என்ன? ஏன் அனைவரும் பேரொளியை மட்டிடுமே சென்றடைய முற்படுகிறார்கள். ஒருவேளை அவர்கள் அறிந்ததது அது என்பதாலா. அதில் சென்றால் முழுமை அடைந்துவிடுவார்களா?

முழுமை என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அதில் பயணம் செய்து பேரொளியை அடைவேன் என்று கூறுபவர்களுக்கு நான் உங்களின் கீழ்கண்ட வரிகளையே கேட்பேன். ”அறிந்தவை, அறிபவை அறியப்படப் போகிறவை என காலம் மூன்றெனில், அறியப்படாதவையும் அறியமுடியாதவையும் எந்தக் காலம்? அறிதல் ஒடுங்கக் காலம் ஒடுங்குமா? அறிதல் என்பது என்ன? அறிவது எதை? அறியப்படுவதே அறிவாகிறதா? அறியப்படாமைக்கும் அறிவுக்கும் என்ன உறவு? அறிதலுக்கும் அப்பால் உள்ளது எது?” –விஷ்ணுபுரம்.

என்னைப் பொறுத்தவரயில்  ”ஒரு போதும் சென்றடையவில்லை என்ற நிறைவின்மையை அடைக” என்பதே பேருண்மை. இது யாவருக்கும், யாவற்றிர்க்கும் பொருந்தும். இதைப் புரிந்து கொள்ள அத்துனை கேள்விகளையும் கேட்டு, பதில்களையும் சொல்லி தருக்கத்தின் உச்சியினின்று நீங்கள் விஷ்ணுபுரத்தில் விளக்கியிருக்கிறீர்கள். இந்த வரிகளும் அதையே சொல்வதாகத்தான் பட்டது. நான் புரிந்து கொண்டது சரியா ஜெ. ஏதேனும் இக்கருத்தில் நான் மாறுபட்ட நிலைப்பாடு எடுக்க வேண்டுமா. உங்களுக்கு நேரமிருப்பின், பதிலுக்கான தகுதியுள்ள சந்தேகமெனில் கண்டிப்பாக சொல்லுங்கள். கேட்க ஆவலாக காத்துக்கிடக்கிறேன் ஜெ.

(முடிந்தவரையில் கோர்வையாக சொல்ல முற்பட்டிருக்கிறேன் ஜெ. இதில் பிழை ஏதுமிருந்தால் திருத்தவும் அன்பு ஜெ.)

 

 

என்றும் அன்புடன்.

ரம்யா.

 

 

அன்புள்ள ரம்யா

 

உங்கள் வரிகளைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். நிறைவு என்பது என்பது  ‘நாம்’ அடைவதாக இருக்க முடியாது. நம்மை இழந்து அடைவது என்றுதான் நமக்குச் சொல்லப்பட்டுள்ளது. அதாவது நாம் என நம்மை தொகுத்து அடையாளப்படுத்திக்கொள்ளும் அனைத்தையும் விட்டபின் சென்றடைவது. அதுவரை நம்மை உந்தவேண்டியது நிறைவின்மையாகவே இருக்கவேண்டும்

நிறைவின்மை என்பது என்ன என்பதையும் வகுத்துக்கொள்ளவேண்டும் என நினைக்கிறேன். நிறைவின்மை என்று நாம் பொதுவாக உணர்வது நமது ஆணவத்தால் அடைவது. நாம் இன்னும் மேலானவர்கள் நமக்கு இதற்குமேலும் தகுதி உள்ளது என்ற எண்ணத்தால் வரும் நிறைவின்மை. அது கசப்பை, ஏமாற்றத்தை அளிக்கும். அத்தகையோர் மிக எளிதாக  ‘சினிக்’குகளாக மாறி அனைத்தையும் ஏளனம் செய்பவர்களாக ஆகிவிடுவதைக் காணலாம்

இந்த சினிக்குகளை பாருங்கள். அவர்கள் ஏன் ஏளனம் செய்கிறார்கள்? அவர்களால் ஏளனம் செய்யப்படுபவர்களைவிட மேலானவர்கள் என தங்களை நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அப்படி உண்மையிலேயே நம்ப, இன்னொருவருக்குச் சொல்ல எந்த அடிப்படையும் இல்லை. ஆகவே அந்த சினிஸிஸத்தை சேர்த்துக்கொள்கிறார்கள். நம் ஆணவத்தைப் பெருக்கிக்கொண்டு அடையும் நிறைவின்மை போல நீங்காத பெரும்சுமை, நோய் வேறில்லை

ஆனால் இன்னொரு வகை நிறைவின்மை உண்டு. நான் சொல்வது அதைத்தான். அதை எய்துதலில் நிறைவின்மை என்று சொல்வேன். உதாரணமாக, என்னை எடுத்துக்கொள்வோம். நான் விரிவாக பயணம் செய்திருக்கிறேன். இந்தியாவில், உலகநாடுகளில். ஆனால் பயணமே செய்யவில்லை என்று தோன்றிக்கொண்டும் இருக்கிறது. இமையமலையை பார்க்கவே இல்லையோ? இந்தியாவின் கலைச்செல்வங்களில் மிகமிக சிறு அளவுதான் கண்ணில் பட்டிருக்கிறதோ? உலகமே என் கண்ணுக்கு அப்பால்தான் இருக்கிறதோ? பயணத்தில் ஒரு துளி அளவுகூட நிறைவில்லை. தவிப்புதான். எழு எழு என்னும் சிறகின் உந்துதல்தான்

அதையே ஆன்மிகத்திற்கும் சொல்வேன். செல்க செல்க என்றே தோன்றிக்கொண்டிருக்கிறது. அதையே நிறைவின்மை என்று சொன்னேன். எழுதியவை, வாசித்தவை, சென்றவை சார்ந்து நிறைவு உருவாகுமென்றால் அதன்பின் செய்வதற்கு என்ன? அது மெய்யாக நோக்கினால் நிறைவு அல்ல, சலிப்பு அல்லது இயலாமை. அதைக் கடந்தே ஆகவேண்டும். உள்ளிருந்து எழும் ஒரு விசையால் சென்றுகொண்டே இருக்கவேண்டும்

“உத்திஷ்டத!  ஜாக்ரத! ப்ராப்யவரான் நிபோதத!’ என்று கடோபநிஷத் சொல்லும் வரி விவேகானந்தருக்கு மிகப்பிரியமானது. எழுக, விழிப்புகொள்க, இலக்கடையும் வரைச் செல்க’. இலக்கு என்பது முழுநிறைவு, அது நம்மைக் கடந்தது. விழிப்பு என்பது அதுவரை நிறைவுகொள்ளாமல் இருப்பது

 

ஜெ

 

முந்தைய கட்டுரைஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–75