இரு தொடக்கங்கள்

அன்புள்ள ஜெ ,

நன்றாக உள்ளீர் என நம்புகிறேன். உங்களைத் தினமும் மனதாலும், செயலாலும் பின் தொடர்ந்தே வந்தாலும், இந்நாட்கள் உங்களுடன் மிக அணுக்கமாக உணர்கிறேன். கொரோனாவின் காரணத்தால் அல்ல, கடந்த ஒரு வருடத்தை, உங்களிடம் இருந்து கற்றதையும், கேட்டதையும், வாசித்ததையும் மனதுக்குள் தொகுத்துக்கொண்டிருக்கிறேன்.

இந்த தருணத்தில் சென்ற வருடம் நான் உங்கள் இறகுக்குள் இருந்ததையும், நடுவில் வழுக்கி விழுந்து மீண்டும் உங்கள் அடி திரும்பியதையும் நினைவுகூருகிறேன். அந்த தடுமாற்றம் என்னளவிலிருந்த குழப்பங்களின் வெளிப்பாடே. நீங்கள் கடைசி மின்னஞ்சலில் அனுப்பிய வரிகள் “அறிதல் என்பதே இவ்வுலகின் மிகப்பெரிய இன்பம். அது அருளப்பட்டவர்கள் பிற துன்பங்கள் அனைத்தையும் அதனூடாக கடக்க வேண்டும். அதன்பொருட்டு நிறைவு கொள்ளவும் வேண்டும்.” இதைத் தினமும் மந்திரம் போல் மனதிலிருந்த அதனைக் குழப்பத்தின் நடுவில் உரக்கச் சொல்லிச் சொல்லி தேவையற்ற அலைபாய்தல்களைக் குறைத்துள்ளேன்.

என் மனம் பல திசைகளில், உணர்ச்சிக் கொந்தளிப்புகளில் இருந்த அத்தனை தருணத்திலும் ஒளியாய் உங்கள் சொல் என்னை வழி நடத்திக்கொண்டிருக்கிறது. இச்சராசரி சூழலில், இவர்களில் நான் ஒன்றில்லை என்ற ஆதாரம் உங்கள் எழுத்தைப் படிக்கும் ஒவ்வொரு நொடியிலும் தோன்றும் உண்மை. அகசக்திக்கும் செயலாற்றலுக்கும் அறத்திற்கும் ஒரு குறியீடாக நான் உங்களையும், உங்கள் செயல்களையும் உருவகித்துளேன் . அறையில் உங்கள் சொற்களை எழுதி வைத்தும், காணொளிகளைக் கண்டும், உரக்க வாசித்தும், என் வெளியிலும் உளியிலும் நிரப்பிக் கொண்டிருக்கிறேன்.

அறையில் பெரிய ஜன்னலும், சிறிய கதவும் இருக்கிறது. அந்த கதவுக்கப்பால் என் வீடு எப்போது என்னை நான் இருக்கும் உலகிலிருந்து பிரித்துவிடுமோ என்ற ஐயம் இருப்பினும், உங்கள் வார்த்தைகளால் ஜன்னலுக்கப்பால் சிறகடித்துப் பறக்கிறேன். இப்போது உங்கள் புனைவு உலகிற்குள் அடியெடுத்து வைத்திருக்கிறேன், கடந்த வருடம் உங்களின் ஆக்கங்களை வாசிப்பதற்கான மனநிலையையும், தமிழில் புரிதலும், தர்க்க தத்துவ அடித்தளங்களும் நடப்பட்டிருந்தது என உணர்கிறேன். நடுவில் உங்களுடன் தொடர்பில் இல்லாமல் இருந்தது போல் புறத்தில் தோன்றினாலும், அது உண்மை அல்ல என மீண்டும் எனக்குள் சொல்கிறேன்.

காரணம் நான் என் கவனத்தை எந்த திசையில் திருப்பினாலும், corkயை தண்ணீரில் எதனை விசையுடன் கீழ் அழுத்தினாலும், அதே விசையுடன் அது மீண்டும் நீரின் மேல் வந்துவிடுகிறது. அதை போன்றே நான் எத்திசையில் திரும்பினாலும், அது உங்களின் சொற்களுக்கே என்னை இட்டுச்செல்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு என் அப்பா மருத்துவமனையில் இருந்தபோதுள்ள பரிதவிப்புகளும், பதற்றங்களும், கடந்த மாதம் என் அம்மா அதே மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டபோது எனக்கு மீண்டும் ஒரு கணம் தோன்றி தன்னுள் மறைந்து போனது.

இம்முறை அந்த உணர்ச்சிக் கொந்தளிப்புடனே தெளிவாகச் சிந்திக்கவும், செயலாற்றவும், அதைக் கடந்து வரவும் முடிந்தது. அந்நிகழ்விற்குப் பிறகு ஒரு விஷயம் மட்டும் ஆழமாய் பதிந்திருக்கிறது. உங்கள் சொற்களும், ஆக்கங்களும், புனைவும், உங்களால் காட்டப்படுகிற தத்துவமும், தர்க்கமும், வரலாறும், இதனைத்திலும் நான் தீவிரமாகச் செயல்படும் பொருட்டே என் தனத்தைக் கண்டுகொள்ள முடியும் என்றுணர்ந்துள்ளேன். எப்படி என்று தர்க்கப் பூர்வமாக விளக்க முடியாவிடினும், அது நான் அறிந்த உண்மையே.

நீங்கள் புனைவு களியாட்டம் துடங்குவதற்கு முந்தைய நாள் தான், நான் முதல் முறையாய் ஒரு கதையை எழுதத் துவங்கினேன். பரிச்சைக்குப் படித்துக்கொண்டிருந்த போது, ஒரு தருணத்தில் தோன்றியது, சரி எழுதிப் பார்ப்போமே என்று எழுதினேன். முழுதாக வரவில்லை. அடுத்த நாள் தளத்தைப் படித்ததும், என் முன் இருந்த பாதை தெரிந்தது. கடந்த வருடம் வாசகர் சந்திப்பில் தொடங்கி நீங்கள் சொல்லிவந்த அனைத்தையும் நினைவுகூரத் தொடங்கினேன், உங்களது சிறுகதைகள் பற்றிய கட்டுரைகள், தினமும் வரும் சிறுகதைகள், உங்கள் சிறுகதைத் தொகுப்பு அனைத்தையும் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

உங்களிடம் பேசவேண்டும் போல் இருந்தது. அடிக்கடி அப்படி எண்ணம் எழுந்தாலும் உங்களை நேரில் காணும் வாய்ப்பிற்காகக் காத்துக்கொண்டிருப்பேன். சிலமுறை செல் பேசி எண் கூட கேட்டு வாங்க வேண்டும் என்று தோணியிருக்கிறது. உங்கள் குரலைக் கேட்டாலே எந்நிலையிலிருந்தும் மீண்டு விடமுடியும் என்ற நம்பிக்கை வந்துவிடும். ஆனால் கடிதத்துடன் உரையாடுவது மனதில் ஆழமாய் நிலைத்திருக்கும் என்று தான் கடிதம் எழுத முயல்வேன். பல சமயங்களில் முழுதாக எழுத முடியாது, இதனைத்தும் வார்த்தைகள் இன்றி கூறிவிட முடியாத என்ற எண்ணமும் வரும். இத்தருணங்களில் உங்கள் சொற்கள் ஏதாவது கண்ணிலோ, மனதிலோ தென்பட்டு, என் பார்வையை உடனே மாற்றிவிடும்.

அம்மா மருத்துவமனையில் இருக்கும் போது தான் ஊட்டி முகாமின் அறிவிப்பு வந்திருக்கிறது, முகாமிற்குப் பதிவு செய்யாததற்கு என்னை நானே நோந்து கொண்டிருக்கிறேன். வீட்டிற்கு வந்த உடனே கடிதம் எழுதி நானும் பங்கேற்க விரும்புகிறேன் என்று எழுத ஆரம்பித்தேன். பிறகு அப்படிக் கேட்பது முறையா என்று தெரியவில்லை. அப்படியே நிறுத்திவிட்டேன். ஆனால் குருவிடம் எதற்குத் தயக்கம், எனக்கு ஊட்டி முகாமில் கலந்து கொள்ள, தீவிரமாய் இலக்கிய விவாதங்களில் பங்கேற்க விருப்பம் என உங்களிடம் சொல்லிவிட வேண்டும் என்தோணியது, சொல்லிவிட்டேன்.

நான் என்னவாக போகிறேன், என் குடும்பத்தை எப்படிப் பார்த்துக் கொள்ளப் போகிறேன் என்ற பயம் என்னுள் இருந்தது. ஆனால் இப்போது நான் என்னவனாலும், என் குடும்பத்தையும் பார்த்துக்கொள்வேன் அதற்கு ஒருதுணையாய் நீங்கள் அருளிய அறமும், உங்கள் சொல்லும், இலக்கியமும் என்றும் இருக்குமென்று என் ஆழ்மனதுணர்கிறது. என் தந்தையுடன் சிறுவயதில் எனக்கிருந்த உறவுக்கும், உங்களுடன் இப்போதிருக்கும் உறவுக்கும் ஒரே வித்தியாசம் தான், என் அப்பாவிடம் தர்க்கங்கள் ஒருபோதும் இருந்ததில்லை, பாசத்தின் கட்டமைப்பிலே இருந்தேன். திட்டுவதும், அரவணைப்பதும் பாசத்தின் வெவேறு அளவிலானது தான். அன்பைப் பற்றியும், தியாகத்தைப் பற்றியும் அவரிடம் கற்றேன். நீங்கள் ஒரு மனிதனாகவும், ஆளுமையாகவும், தகப்பனாகவும், உங்களைச் சூழ்ந்திருக்கும் வட்டத்தின் கட்டமைப்பாலும், நான் அறத்தைக் கற்றுக்கொள்கிறேன்.

அறம் தொகுதியிலிருந்து சில வரிகளாவது படிக்காமல் என் நாளை துவங்குவதில்லை. பதினைந்து வருடங்களாக கற்காதவற்றை உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன். என் வேர்களைக் கண்டடைவதற்கான வழி என் முன் உள்ளது. உங்கள் அருளில் புதியதோர் கீற்றாய் துளிர்த்துள்ளேன். இவனைத்திலும் நான் எங்கப்பாவின் கையை இருக்கப் பிடித்திருப்பது போல் உங்களின் சொற்களை மனதால் பிடித்துக்கொண்டிருப்பது புரிகிறது. நாம் எத்தனை வளந்தாலும் நம்முள் இருக்கும் சிறுபிள்ளை வளராமல் இருப்பதே ஓராசிர்வாதம் என நினைக்கிறேன்.

அன்புடன்

என்.

***

அன்புள்ள என்

தனிப்பட்ட வாழ்க்கையில் உருவாகும் இடர்கள் கற்பதற்கும் மேலே செல்வதற்கும் தடைகள்தான். ஆனால் அதை நாம் கடந்தே ஆகவேண்டும் அதற்கான உளக்கருவிகள், வழிமுறைகள் ஒவ்வொருவருக்கும் ஒன்று அதை நாம் கண்டடையவேண்டும். சிலருக்கு பிரச்சினையில் இருந்து மானசீகமாக விலகிக்கொள்வது, சிலருக்கு அதை சிறுகச்சிறுக எதிர்கொள்வது, சிலருக்கு அதை வேறு ஒன்றாக கற்பனைசெய்துகொள்வது.

ஆனால் விலகியாகவேண்டும் என்னும் உறுதியான எண்ணம் இருந்தால்போதும்

ஜெ

***

அன்பு நிறை ஜெ,

பலமுறை இவ்வாறாக என் கடிதத்தை தொடங்கி எழுதாமல் பாதியிலேயே நிறுத்தி, அல்லது சொல்லவந்ததை சொல்லாமல் எதாவது ஒன்றை தட்டச்சு செய்து உங்களுக்கு அனுப்பியதுண்டு .. சில நாட்களாக என்னை மெல்ல கவனித்த பின்பு தான் உணர்ந்தேன் உங்களிடம் எடுத்த மாத்திரமே என்னை வெளிப்படுத்திவிட வேண்டும், ஒரு ஈர்ப்பை உருவாக்கி விட வேண்டும் என்று நினைத்து தான் என் முன்னெடுப்புகள் இருந்ததென்று.

பதின் பருவத்தில் வரும் காதல் போல ஒரு வகை விளக்க முடியா நிலை, நான் யார் என்பதை நான் விரும்பும் பெண்ணிடம் ஒரே செய்கையில் அல்லது சொல்லால் சொல்லி, என்னை போன்று உன்னை யாருமே விரும்ப முடியாதடி என்று உணர்த்த துடிக்கும் அதே மனநிலையில் தான் உங்களுக்கு எழுதும் ஒவ்வொரு கடிதத்தையும் தொடங்குவேன்.. ஆனால் இம்முறை மனதில் படுவதை அப்படியே எழுதி உங்களிடம் உரையாடிவிடலாம் என எழுத ஆரம்பித்து விட்டேன். நீங்கள் சொல்லுவது போல அதுவே அடுக்கடுக்காக எழுந்து வரட்டும்…

இந்த நோய் தொற்று காலம் நீங்கள் இல்லாவிடில் பெரும் துன்பமிகுந்ததாக மாறி போய் இருக்கும்.. இந்த சூழல் என்ன என்று அவதானிப்பதுக்கு முன்பாகவே புனைவு களியாட்டத்தை தொடங்கி வைத்து விட்டீர்கள்.. கடந்து ஐந்து ஆண்டுகளாகவே சுய தனிமையில் தான் இருக்கிறேன், குடிமை பணி தேர்விற்கான முயற்சி.. அதில் இரண்டு ஆண்டுகள் முழுவதுமாய் எல்லாவற்றிலிருந்தும் விலகி வெறும் 3 சட்டை, 2 ஜீன் பேண்டுடன் இந்தியாவெங்கும் சுற்றி திரிந்தேன், உடன் துணைக்கு உங்கள் தளமும் என் காதலும் மட்டுமே.. எது எனக்கான அறம்..

வெகு நிச்சயமாக இன்னும் ஒரு தலைமுறைக்கு பொருளியல் தேவை இல்லை.. மாநகரில் உள்ள சிறந்த கல்லூரியில் பொறியியல் படிப்பு, அயல்நாட்டு கல்லூரியில் மேற்படிப்பிற்காக நான் ஏற்படுத்திக் கொண்ட வாய்ப்பு, போகவிடாமல் என் மனம் மாற்றி குடிமை பணிக்கு தயார் செய்ய அறிவுறுத்திய பெற்றோர், அதுவரை சேவை என்பதை வார்த்தையளவிலேயே அறிந்திருந்த எனக்கு வெகுநிச்சயம் சேவையே என் பணியாக செய்ய முடியாது என உள்ளுக்குள் உணர்த்திய மனம், இது எனக்கானது அல்ல ஓடு ஓடு வேற எதையாவது செய்டா இது நமக்கு ஒத்தே வராது என்று உள்ளுக்குள் கத்தி கொண்டே இருக்கும் குரல்.. மாப்ள பணம் இருக்கு பவர் தான் வேணும் சீக்ரம் தேர்வை எழுதி முடி என்று எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் நண்பர்கள்..

இவை எல்லாத்திலிருந்தும் விலகி உங்களை தான் கண்டடைந்தேன்.. உங்களின் ஒவ்வொரு சொல்லும் என்னை மீட்டெடுத்தது … புறப்பாடு, முகங்களின் தேசம் மட்டும் படித்துவிட்டு 120 நாள் தொடர் பைக் பயணம், 16000 கிலோ மீட்டர் நீண்டது.. நேபாள், பூட்டான் என வரைபடத்தில் கண்ட இடத்தில் எல்லாம் சக்கரங்கள் சென்றன.. எதுவுமே முன்னமே திட்டமிடவில்லை, காணுகின்ற வழியில் தோனுகிற இடம் எல்லாம் போவது அது மட்டுமே பயண திட்டம், எரிபொருள் தவிர எதற்குமே பெரிதாக பணமில்லை. காதலியையும், தம்பியையும் தவிர இந்த பயணத்தை பற்றி யாருக்குமே இதுவரை எதுவும் தெரியாது, பயணத்தில் தடங்கல் எனில் இவர்கள் இருவரும் மட்டுமே எதாவது செய்து இருக்க வேண்டும்.

அந்த 120 நாட்கள் மட்டும் அல்ல 2016 டிசம்பர் முதல் 2018 அக்டோபர் வரையிலான என் இந்திய பெருநிலத்தின் பயணத்தில் எனக்கு உடன்இருந்து உயிர் தந்தவர்கள் முகமறியாதவர்கள் மட்டுமே, நீங்கள் சொன்ன ஒரே வாக்கியம் ” உங்கள் பயணத்தில் அன்னமிட்ட கைகளும், பாலூட்டிய மார்புகளும் ஏராளம் என ” அதை மட்டுமே நம்பி என் பயணங்கள் அமைந்தன. 2016 இல் இருந்து இன்றுவரை 22 இந்திய மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள், 3 அண்டை தேசங்கள் என அளந்து அலைந்து திரிந்தேன்.. வழி நெடுகிலும் உங்கள் எழுத்துக்களும் நீங்கள் காட்டிய தரிசனங்களும் நீண்டு கொண்டே வந்தன..

இப்போது நினைத்து பார்க்கிறேன் எல்லாரும் போல நானும் ஒரு சராசரி வாழ்கை வாழ்ந்திருந்தால் மண்டை வெடித்து போய் இருப்பேன். எனக்கு இது தான் வந்தது எனக்கு என் நண்பர்களை போல குடித்து பொழுதுகளை கழிக்கவோ, அயல்நாடு சென்று பொருள் ஈட்டவோ, ஜாதியை பிடித்துக்கொண்டு அப்பா அம்மா சொல்லும் கட்டளைகளை கேட்டுக்கொண்டு இருக்கவோ, சக ஊழியர்களை பின்னுக்கு தள்ளி முன்னேறி ஒரு இடத்தை பிடிக்கவோ, கடவுளின் பெயரால் பல புனித போர்கள் செய்யவோ, சுயநலத்திற்காக பிறரை நாடிச்செல்லவோ நோகடிக்கவோ எதுவுமே தெரிந்திருக்கவில்லை.. என் ஒட்டு மொத்த சமூகமும் “அப்பா அம்மா குடுக்குற பணம், அதான் இஷ்டத்துக்கு வாழறான்” என்ற பழியை மட்டுமே சுமந்து கொண்டு நான் இருக்க வேண்டுமென்று நினைக்கின்றது.. இன்றும் எனக்கு தேவையான பொருளை தெளிவான நியாயமான முறையில் சம்பாத்தித்து கொண்டு தான் இருக்கிறேன்.. பழி சொல்பவர்களை பொறுத்த வரை நாற்பதாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்தால் சுயமாக வாழ்வது , இருபதாயிரம் ருபாய் சம்பாதித்தால் பெற்றோரின் ஆதரவில் பெற்றோர் சொல் கேளாமல் வாழும் பிள்ளை என அர்த்தம்.

2018 அக்டோபர் வீடு திரும்பியதும் பித்து பிடித்தது போல் இருந்தது எடுத்ததற்கெல்லாம் வெடித்துக் கொண்டிருந்தேன், என் சாந்தம் மொத்தம் என்னை விட்டு விலகியிருந்தது.. எனக்கென்று ஒரு தனி வீடு இல்லாவிடில் உடனிருப்பவர்களை கொன்றுவிடுவேன் என்று என்னும் அளவிற்கு இனம் புரியா ஒரு பிரிதலின் வெறி.. என் சுயமென நினைத்தது எல்லாம் உடைந்து நொறுங்கி கொண்டிருப்பதை போல ஒரு உணர்வு.. காலும் கையும் காப்புகாய்த்து ரத்தம் வடியும் வரை எதாவது வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது…

ஒரு கட்டத்தில் உங்களை தொடர்ந்து வாசிப்பதலிலால் தான் இவையனைத்தும் என்று ஒரு எண்ணம் வந்தது, ஒரு 6 மாதம் உங்களை வாசிக்காமல் விட்டுவிட்டால் என்ன என்று யோசித்தேன், அதை முயற்சியும் செய்தேன். உங்கள் சொல்லை மட்டும் நம்பி பித்து நிலையில் காரணமே இல்லாமல் ஊர் எங்கும் திரிந்து என்ன அடைந்தேன்?? தேறாதவன் என்ற பட்டத்தை, பெரும் தன்னிரக்கத்தை, நீங்கள் கோபித்து கொண்டால் நானும் கோபித்தேன், நீங்கள் துவண்டு போனால் நானும் வாடினேன், உங்கள் மகிழ்ச்சி என்னையும் களிப்புற செய்தது.. சரி இப்படியே போனால் நீ என்பது என்ன தான்டா ?? என்ற ஒரு கேள்வி என்னை உங்கள் எழுத்தில் இருந்து விலகி போக செய்தது, அது 2-3 மாதங்கள் நீடித்தது..

நீண்ட பயணங்களின் பலனாய் முதுகு தண்டில் ஜவ்வு வீங்கி கால்களுக்கு செல்லும் நரம்பில் அழுத்தியதால் இடது காலில் உணர்வில்லாமல் பத்து நாட்கள் இருக்க நேர்ந்தது.. பதினைந்து நாட்கள் படுத்த படுக்கையாக தொடர் வர்மா சிகிழ்ச்சை. ஒரே துணை காடு நாவல், ஏழாம் உலகம் மீண்டும் உங்களை நோக்கி ஒரு பயணம் , புத்துயிர்ப்பு போன்ற ஒரு தருணம்.. உங்கள் அபுனைவு, பயண கட்டுரைகளில் இருந்து விலகி புனைவு உலகில் நுழைந்தேன்.. புனைவையும் அபுனைவையும் சரி விகிதமாக வாசிக்க தொடங்கினேன்.. நீங்கள் பரிந்துரைப்பதை எல்லாம் தேடி சேகரிக்க ஆரம்பித்தேன்

ஓரு கட்டத்தில் “செயல் புரிக,செயல் புரிக” என்று நீங்கள் சொல்லியவை மட்டும் என்னுள் எஞ்சி இருந்தது. தினம் காலையில் எழுந்து இறைவனை தொழுவது போல உங்களின் இணைய பக்கத்தை படித்து விட்டு அத்துடன் முடித்து கொண்டு அன்றைய நாளிற்கான திட்டமிடல்கள், அதை நோக்கிய செயல்.. ஒவ்வொரு தினமும் உங்களைப்பற்றிய எண்ணங்கள், மானசீக உரையாடல்களுடனே தொடங்கி முடிவுபெறுகின்றது. கட்டற்று கிடந்த மனமும் உடலும் , ஒரு மையத்தை நோக்கி குவிய தொடங்கியது.. ஆன்ம தேடலை கொண்டவன் என்பதிலிருந்து ஆன்ம கண்டடைதல் பெறுபவன் என்னும் நிலை நோக்கி நகர்ந்துகொண்டே வந்தேன்..

இந்திய வரலாறு, தத்துவம் உங்களிடமிடமிருந்து கற்க ஆரம்பித்தேன், காந்தியை முழுமையாய் அடிபணிந்தேன், உடல் வலியிலிருந்து மீள யோகா பயிற்சி செய்ய தொடங்கினேன்.. மீண்டும் ஒரே ஒரு முறை முழு முயற்சி செய்து பார்க்கலாமென தேர்வுக்கு தயாராக தொடங்கினேன் , உங்கள் எழுத்து மட்டுமே தந்த உத்வேகத்தாலும், தன்னம்பிக்கையாலும் இந்திய வரலாற்றை விருப்பப் பாடமாக தேர்ந்தெடுத்து வகுப்பேதும் சேராமல் தயார் செய்ய தொடங்கினேன், மதிப்பெண்களின் நல்ல முன்னேற்றம்.. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காதலியை நேரில் சந்திக்கிறேன் முன்பைவிட மிக ஆழமான காதல், தீவிரமான வாசிப்பு..

ஊரடங்கு உத்தரவு வந்ததும் ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டது, என் அந்தரங்க சுதந்திரம் பறிபோகும், குடுப்பதிற்கான நிறைய நேரம் போய் விடும் இந்தமுறையும் திட்டமிட்ட படி எதையும் செய்ய இயலாமல் போய்விடுமோ என பயந்தேன். உள்ளூர பெரு நம்பிக்கையுடன், உங்கள் புனைவு களியாட்டம் தொடங்கிய பின்பு அதி தீவிரமாக உங்கள் கட்டளைகளை மட்டுமே பின் தொடர்ந்தேன். வாழ்வின் அற்புதமான கணங்களாக இந்த தினங்களை உணர்கிறேன்…

உங்களுக்கும் இந்த கால கட்டம் மிகவும் உன்னதமானது என்பதை உங்கள் எழுத்தின் வாயிலாக அறிகிறேன், உங்கள் சிறுகதை ஆக்கங்கள் அடுக்கடுக்காக குவிந்து உச்சம் பெறும் வருடம் இதுவாக தான் இருக்க முடியும்… ஒரு வகையில் உங்கள் வாசகர்கள் எல்லோரும் ஒரே மாதிரி தான் இருக்கிறோம், எல்லாருமே உங்களை பிரதிபலித்து கொண்டே இருக்கிறோம்.. உங்களுடன் மனமார்ந்த தொடர்பிலிருந்து உங்கள் படைப்புகளை அருகாமையிலேருந்து பின்தொடர்பவர்கள் இதை நன்றாக உணர்ந்திருக்க கூடும்..

இந்த தினங்களில் ஒருநாளைக்கு தேர்வுக்கு தயாரித்தல் போக, உங்கள் இணையதளம் தவிர கூடுதலாக 100 பக்கங்கள் அபுனைவு, புனைவு வாசிக்கிறேன். கொரோனா பற்றிய பேச்சுக்கள் செய்திகள் அறவே இல்லை, முதல் முறையாக குடும்பத்துடன் அற்புதமாக நேரத்தை செலவிடுகிறேன், அம்மா அப்பாவிற்கு பிடித்ததை சமைத்து தருகிறேன், மாலையில் 2 மணிநேரம் வீட்டு தோட்டத்தில் மண் தரையில் வேர்வை சொட்ட சொட்ட குடும்பத்துடன் விளையாடுகிறேன்… மின்வெட்டு நேரங்களிள் அம்மா பாட சொல்லி கேட்டு என்னால் முடிந்தமட்டும் எதாவது பாடுகிறேன், (ஒரு வகையில் இவை அனைத்திற்கும் நான் எந்த சமூக வலைத்தளங்களிலும் இல்லாமல் இருப்பது கூட ஒரு கரணம் , கடந்த ஐந்து ஆண்டுகளாக வாட்ஸ் ஆப் கூட பயன்படுத்தியதில்லை)..

உண்மையில் இப்போது தான் என் தன்னிரக்கத்திலிருந்து விடுபடுகிறேன். கடந்த மூன்று வருடங்கள் நான் எதுவுமே செய்ய வில்லை நான் இந்த சமூகத்திற்கு ஒத்துவராதவன் நான் யாரையும் பெருமையோ மகிழ்ச்சியோ பட வைக்கவில்லை என்றெல்லாம் எண்ணி எண்ணி என்னை மிகவும் காய படுத்தி வந்துள்ளேன். இந்த இருபது நாட்களில் தான் நான் கடந்த நான்கு ஆண்டுகளில் செய்தவற்றை எல்லாம் சிறுபட்டியலிட்டு பார்த்தேன் திகைப்படைந்தேன். எப்படி எல்லாம் வாழ்க்கை இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ அதைவிட பல படி சிறப்பாக தான் செயல் பட்டிருக்கிறேன், ஏன் தேவையற்ற மனகுழப்பமும் தயக்கமும் அடைந்தேன் என இன்னும் புரியவில்லை.

அதை அப்படியே விட்டு விட்டு நீங்கள் சொல்வது போல் தினம் தினம் என்னயே வரையறுத்து அதையே மீறி செல்கிறேன். யாருடைய அங்கீகாரத்திற்கு காத்திருக்கவில்லை. ஆக்க சக்தி கொண்ட மனிதர்களுடனே இருந்து வருகிறேன், சோர்வற்று மகிழ்வுடனே ஒரு ஒரு அடியையும் எடுத்துவைக்கிறேன்.. இனி வரும் வருடங்களில் உங்களுடன் சேர்ந்தே, உங்கள் சொற்களுக்கு அடிபணிந்தே என் வாழ்க்கை பயணத்தை அமைத்துக்கொள்ள உத்தேசிக்கிறேன்.. இந்த புத்தாண்டிலிருந்து என் அறத்திற்கும், உங்கள் அருளிற்கும் கடமை பட்டவனாக செயல் புரிய உறுதி ஏற்கிறேன், எந்த அன்றாட தருணங்களும் எனக்குள் அலைக்கழிப்புகளையும் மனசோர்வையும் ஏற்படுத்தா வண்ணம் தீவிர செயலால் ஆனா ஒரு அரணை ஏற்படுத்திக் கொள்கிறேன்…

இந்த கடிதம் ஆரம்பத்தில் சொன்னது போலவே திட்டமிடாத ஒன்று, அதுவாக எழுந்து எழுந்து இங்கே என்னை உங்களிடம் கொண்டு வந்து சேர்த்துவிட்டது.. நான் உங்களுக்கு எழுதும் என் முதல் கடிதம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று திட்டமிட்ட ஒழுங்கு எதுவும் இதில் இல்லை, (சற்று முன்புதான் வீட்டை கழுவி துடைத்து விட்டு வந்து வேக வேகமாக எழுதி முடித்தேன்), ஆனால் இத்தனை வருடம் சேர்த்து வைத்திருந்த அன்பை சொல்லிவிட்ட நிறைவு.. எழுத்து பிழை, இலக்கண பிழை இருப்பின் மன்னிக்கவும்…

இனி வரும் வருடங்களில் நீங்கள், அருண்மொழி அம்மா. அஜிதன் , சைதன்யா அனைவரும் உடல் நலத்துடனும், குன்றாத வளத்துடனும் வாழ்வாங்கு வாழ தமிழையும், பிரபஞ்சத்தையும் வேண்டிக்கொள்கிறேன். நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெற்றிடவும், எங்கள் கனவுகள் மெய்ப்படவும், எங்கள் குடும்பங்கள் அன்பும் அறனும் பொங்க பொங்க வாழவும் உங்கள் ஆசீர்வாதங்களை வேண்டும் உங்கள் அன்பு குழந்தை,

***

அன்புள்ள இ

நித்ய சைதன்ய யதியின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றை சமீபத்தில்கூட குறிப்பிட்டிருந்தேன் – அலையாதவர் அமைய முடியாது. அகச்சக்தியை வீசி வீசி எறிந்தபின்னரே உளம்பயில முடியும். ஆகவே அந்தப்பயணங்கள் உங்களுக்கு தேவையானவைதான். அந்தப்பயணங்களால் நீங்கள் கற்றுக்கொண்ட சில இருக்கக்கூடும்—காலப்போக்கில் தெரியவரும். ஆனால் நீங்கள் உள்ளூர அமைந்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கு ஒரு வெற்றி அது – உங்கள்மேல் உங்கள் எல்லைகள் மேல் அடையும் வெற்றி

இனி உலகியல்ரீதியாக வெல்லுங்கள். அந்தத்தேர்வோ எதுவோ. வென்று அடையுங்கள். வேலையை அல்ல. அதிகாரத்தை அல்ல. இந்த உலகம் என்னும் ஓநாய்க்கூட்டம் உங்களை பின் தொடராமலிருக்கும் சுதந்திரத்தை. ஆகவே அடைந்தபின் அதை ஒரு பொருட்டாகவும் கருதாமலிருங்கள். நீங்கள் மட்டுமே செய்யக்கூடுவது ஒன்று உண்டு. அதைச் செய்யுங்கள்

ஜெ.

***

முந்தைய கட்டுரைகன்னி- [சிறுகதை] ம.நவீன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–73