‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–34

பகுதி நான்கு : அலைமீள்கை – 17

துவாரகைக்கு நான் கிருதவர்மனுடன் வந்துகொண்டிருக்கிறேன் என்ற செய்தியை முன்னரே மூத்தவரிடம் தெரிவித்திருந்தமையால் நகருக்கு நெடுந்தொலைவிலேயே எங்களை வரவேற்கும் பொருட்டு சுஃபானுவும் மூன்று உடன்பிறந்தாரும் அணிப்படையினருடன் வந்திருந்தார்கள். அவர்கள் பாலை நிலத்தில் துவாரகையின் செம்பருந்துக்கொடி உயர்ந்து பறக்கும் மூங்கிலுடன் நின்றிருப்பதை தொலைவிலேயே நாங்கள் கண்டோம். இணையாக யாதவக்குடியின் பசுக்கொடியும் பறந்தது. என்னுடன் வந்திருந்த சிறிய காவல்படையினர் கொம்பொலி எழுப்பி எங்கள் வருகையை அறிவித்தனர். அங்கிருந்து முரசுகளும் முழவுகளும் சங்கும் மணியும் ஒலித்தன. கிருதவர்மனுக்கான வாழ்த்தொலிகள் எழுந்தன.

கிருதவர்மன் அந்த வாழ்த்துகளை எப்படி எடுத்துக்கொள்கிறார் என்று பார்ப்பதற்காக நான் திரும்பி அவர் முகத்தை பார்த்தேன். அவர் முகம் இறுகியிருந்தது. எந்த உவகையும் அதில் தெரியவில்லை. அது அவ்வாறே இருக்கும் என்று எனக்கு தெரிந்திருந்தது. அவர் உணர்வுகளை வெளிக்காட்டுபவர் அல்ல. நான் அவருடைய கண்களை நோக்கிக்கொண்டிருந்தேன். நான் அவருக்கு இணையாக வந்துகொண்டிருந்தமையால் என்னால் அவர் விழிகளை சற்று அப்பாலிருந்தே பார்க்க இயன்றது. உணர்வுகளுக்கு அப்பால் ஒன்று மானுடரின் கண்களில் எழுவதுண்டு. தன்னிலை என்று அதை சொல்லலாம். தன்னை அவ்வண்ணம் அக்கணத்தில் அந்த ஆத்மா வைத்துக்கொள்ளும் நிலை அது. கண்களை ஆத்மாவை நோக்கி போடப்பட்ட சிறுதுளைகள் என்று என் ஆசிரியர் ஸ்ரீகரர் கூறுவதுண்டு. கூர்ந்து நோக்கினால் எவரும் அதை பார்த்துவிடமுடியும்.

நான் அவருடைய விழிகளை முதல்முறையாகக் கண்டது அந்தச் சிறுகுடிலில் இருந்து அவர் வெளியே வந்தபோதுதான். அதுவரை அவர் என நினைத்திருந்த சுவரிலிருந்து எழுந்தவர் போலிருந்தார். உண்மையில் அங்கே தோன்றிய உரு போலவே அவர் இருந்தது என்னை திகைப்புறச் செய்தது. நான் அவரை நடுக்குடன் நோக்கிக்கொண்டிருந்தேன். அது ஒரு மானுட உடலென்றே தோன்றவில்லை. வெந்து உருகிய தசைகள் உறைந்த மெழுகுருவென்றாகியிருந்தன. இழுபட்டு கோணலாகத் திறந்த வாயில் பற்கள் புடைத்திருந்தன. செந்நிறத் தோல் மூடிய தலையில் ஒரு பகுதியில் மட்டும் சற்றே முடியிருந்தது. ஒரு செவியும் கழுத்தும் தோளும் உருவழிந்து ஒற்றைச் சதைக்குழைவெனத் தெரிந்தன.

ஆனால் அவர் விழிகள் உயிருடனிருந்தன. அவர் என்னை கூர்ந்து நோக்கினார். “செல்வோம்” என்று அவர் சொன்னபோது அவை ஒரு கணம் புன்னகைத்தன. பின்னர் கண்டுகொண்டேன், அவருடைய முகத்தில் உணர்ச்சிகளைக் காட்டுவது விழிகள் மட்டுமே. முகம் என்பது நாம் அறிந்த பொது அமைப்பு ஒன்றை கொண்டது. அதில் மிகச் சிறிய மாறுதல் ஏற்பட்டால்கூட உணர்ச்சிகளை அது தொடர்புறுத்துவதில்லை, பிழையாக உணர்ச்சிகளை காட்டிவிடுகிறது. விழித்தசை சற்று கீழிறங்கியமையால் ஒருவர் சோர்வும் சலிப்பும் உற்றவராகத் தெரிகிறார். வாய் சற்று கோணலாகிவிட்டமையால் ஒருவர் ஏளனம் மிக்கவராகத் தெரிகிறார். கிருதவர்மனின் முகம் உணர்வுகளுக்கு அப்பால் சென்றுவிட்டது. ஆனால் விழிகள் அந்தத் திரைக்கு அப்பாலிருந்து எழுந்து வந்தன.

மூத்தவர் சுஃபானுவும் இளையவர்களும் கைகூப்பியபடி வந்தனர். தேரிலிருந்து இறங்கிய கிருதவர்மன் நிமிர்ந்த தலையுடன் என்ன நிகழ்கிறது என்ற அறிதல் இல்லாதவர்போல் அங்கு நிற்க அவர்கள் அருகணைந்து கால்தொட்டு வணங்கி “வாழ்த்துக, தந்தையே!” என முகமன் உரைத்தனர். அச்சொற்களைக் கேட்டு அவருடைய உடல் சற்றே மாறுகிறதோ என்று நான் ஐயுற்றேன். ஒரு மெல்லிய குறுகல், அல்லது விதிர்ப்பு. அவர் சற்று கம்மிய குரலில் “நன்று! நலம் சூழ்க!” என்று சொல்லி சுஃபானுவின் தோளில் தட்டினார். அக்கணம் அவர் கண்களை நான் நேருக்கு நேர் பார்த்தேன். எந்த மறைவுமின்றி அவர் ஆத்மாவை சென்று சுட்டின அவை. அவர் தன்னை ஒரு பிதாமகர் என்று எண்ணிக்கொள்கிறார் என்று அறிந்தேன்.

ஆனால் அது நான் எண்ணியதே என்று அப்போது உணர்ந்தேன். எனினும் அது ஏமாற்றத்தை அளித்தது. தந்தையே, அங்கு அவர் உங்கள் இடத்தில் தன்னை வைத்துக்கொண்டார். தன்னை எங்கள் அனைவருக்கும் தந்தையென நிறுத்தினார். அக்கணம் அவரில் வந்த கனிவு அவர் ஒருபோதும் துவாரகையின் முற்றழிவை, உங்கள் மைந்தர்களின் சாவை விரும்பமாட்டார் என்று எனக்குக் காட்டியது. இத்தனைக்கும் சுஃபானுவும் இளையவர்களும் மிகமிக வழக்கமான சொற்களை, பெரிய உணர்வெழுச்சி ஏதுமின்றித்தான் சொல்லியிருந்தார்கள். அவர் அதை எதிர்பாராதவர்போல தோன்றினார். அல்லது அதை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாரா?

எனில் துவாரகையின் முற்றழிவைப்பற்றி நான் கூறுகையில் எல்லாம் அவர் அதை பிறிதொரு பொருளில்தான் எடுத்துக்கொண்டிருக்கிறாரா? அப்போது அறிந்தேன் தந்தையே, ஒருபோதும் அவர் உங்கள் எதிரி அல்ல. உங்கள் அணைப்பை, வெறும் தொடுகையை எதிர்பார்த்திருக்கும் உடன்பிறந்தான். இந்த நாடகத்தில் ஒருபோதும் அது நிகழப்போவதில்லை என்று அறிந்து அதே விசையில் மறுமுனை கொள்பவர். நான் அவரை அதன் பின்பு பார்க்கவில்லை. அந்த ஒரு கணநேர கண்ணையே என்னுள் விரித்து விரித்துப் பெருக்கி அவரென்று ஆக்கிக்கொண்டேன்.

அவர் அங்கு வந்திருப்பது உங்கள் உருவில். அங்கு உங்கள் மைந்தர்களுக்கு நடுவே ஒற்றுமையை உருவாக்கவே அவர் முயல்வார். அனைவருக்கும் முதன்மைத் தந்தையென அங்கு அமர்ந்திருப்பார். துவாரகை முந்தைய பொலிவைவிட மிகுந்தெழுவதையே அவர் விழைகிறார். அவ்வண்ணம் ஒன்றை நிகழ்த்தவும் அவரால் இயலும். அவர் உங்களை வெல்வது துவாரகையை உங்கள் காலத்தைவிட பொலிவுற்றதாக ஆக்கும்போது மட்டும்தான். உங்களைக் கடந்து செல்வது உங்களின் புகழையும் நிலைநிறுத்தும் ஒருவனாக தன்னை ஆக்கிக்கொள்வதனூடாக. உங்களுக்கு புகழ் அளித்து உங்களை சிறிதாக்குவதனூடாக அவரது ஆணவம் நிறைவுறும்போது. தந்தையே, நீங்கள் வேறெங்கு எவ்வண்ணம் பேருருக்கொண்டிருந்தாலும் அவர் அகத்தில் சிறுத்து அவர் அளிக்கும் அன்னத்தை உண்ணும் இளம்சிறுவன்போல் அமர்ந்திருப்பீர்கள். அதைத்தான் அவர் விரும்புகிறார்.

அதற்கப்பால் ஒன்று, தந்தையே. அவர் என் அன்னைமேல் கொண்ட வெற்றி அது. கிருதவர்மனை அந்நாள் வரை இயக்கியது உங்கள்மேல் கொண்ட வஞ்சம் என்று எண்ணியிருந்தேன். அந்த வஞ்சத்தின் உள்ளென அமைந்திருந்தது எங்கள் அன்னைமேல் கொண்ட காதல். அவ்வஞ்சம் மிக உயரிய ஒன்றின் கருநிழல். இன்று மைந்தர் வந்து அடிபணிகையில் அவர் காண்பது அன்னையை, இம்மைந்தர் அவர் மைந்தரும் என ஆகும் தருணம் அமைவது அவ்வண்ணம்தான். தந்தையே, மெய்க்காதலில் இருந்து வஞ்சமும் கசப்பும் காழ்ப்பும் எழக்கூடும். ஆனால் அவை அனைத்தும் காதலின் வடிவாகவே ஆழத்தில் திகழும். தன் முதன்மை இனிமையை ஒருபோதும் காதல் இழந்துவிடுவதில்லை.

நான் என்னுள் ஏமாற்றம் இருக்கிறதா என்று பார்த்தேன். ஏமாற்றம் என்றும் அதை கூற இயலாது. ஒன்று ஊகிக்கலாம். அது ஒரு சிறு உவகையால் ஈடுகட்டப்பட்ட ஏமாற்றம். அவரை நான் வகுத்துவிட்டேன். இனி அதைக்கொண்டு நான் அவரை ஆள இயலும். அதுவரை அவர் எவர் என என் அகம் பதைத்துக்கொண்டிருந்தது, அதை கடந்துவிட்டேன். விஸ்வாமித்ரரின் குடிலில் இருந்து கிளம்பியது முதல் நான் அகம் பதறிக்கொண்டுதான் இருந்தேன். என்னிடம் விஸ்வாமித்ரர் சொன்ன சொற்கள் நான் கொண்ட அனைத்து உருவகங்களையும் சிதைத்துவிட்டன. பிறிதொன்றை என்னால் உருவாக்கிக்கொள்ள முடியவுமில்லை.

ஏனென்றால் அவை உண்மை என நான் அறிந்திருந்தேன். விஸ்வாமித்ரர் பேசப்பேச நான் அகநடுக்குடன் அதை உணர்ந்துகொண்டிருந்தேன். தந்தையே, கிருதவர்மனுடன் குடிலுக்கு வெளியே நின்று உரையாடுகையில் நான் உணர்ந்தது உங்கள் இருப்பைத்தான். ஆனால் அங்கிருந்து கிளம்பியதுமே அது மறைந்துவிட்டது. அதன்பின் நாங்கள் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. அவர் முற்றாக தன்னில் ஆழ்ந்திருந்தார், அவர் அருகே நான் இருக்கையில்கூட அங்கே எவருமில்லை என்னும் உடலுணர்வையே அடைந்தேன். அது என்னுள் இருந்து புலன்களை ஆளும் விலங்கை பதற்றம் கொள்ளச் செய்தது. அப்பதற்றம் அடங்கிவிட்டது.

 

துவாரகையின் முகப்பில் யாதவர்கள் அத்தனை பெருங்கூட்டமாக வந்து நின்றிருப்பார்கள் என்று கிருதவர்மன் எதிர்பார்த்திருக்க முடியாது. அவர் முதலில் அதை உணரவில்லை. தொலைவிலேயே முழவுகளும் கொம்புகளும் ஒலிப்பதை கேட்டோம். அவர் அத்தகைய ஓசைகளுக்கு அயலாகிவிட்டிருந்தார். ஆகவே அதை உணரவில்லை. சுஃபானுதான் “தங்களுக்காக காத்திருக்கிறார்கள், தந்தையே” என்றார். அதன் பின்னரே அவர் அதை உணர்ந்தார். ஏதோ சொல்லவருபவர்போல கைகளை உயர்த்தினார். எண்ணம் நிலைக்க அந்தக் கை அப்படியே நின்றது. அவர் கனவுகாண்பவர்போல துவாரகையின் தோரணவாயில் நோக்கி சென்றார்.

துவாரகையின் தோரணவாயிலின் நிழல் பாலை மணலில் பெரிய வில்போல விழுந்துகிடந்தது. மாந்தளிர் என மின்னிய உடல்களுடன் தேர்ப்புரவிகள் ஒவ்வொன்றாக அந்நிழலை தம் உடலில் வாங்கி இருண்டு பின் கடந்து ஒளிர்ந்து மறுபக்கம் சென்றன. தோரணவாயிலில் இருந்த சிற்பங்களின் நிழல்வடிவங்கள் குளம்புச்சுவடுகளும் கால்சுவடுகளும் கலந்து அசைவற்ற அலைப்பரப்பு என கிடந்த மென்மணலில் விழுந்திருந்தன. சிறகுவிரித்த கருடனின் மேல் புரவி ஒன்று நடந்து செல்ல அதன் முதுகில் கருடனின் சிறகு வருடிச் சென்றது.

தேர்கள் அருகே சென்றதும் தோரணவாயிலின் தூண்முகப்பில் இருந்த வாயிற்காவலர் சிற்பங்களின் கால்கள் பேருருக்கொண்டு தலைக்கு மேல் எழுந்தன. அவற்றிலணிந்திருந்த கழல்கள் மட்டுமே விழிகளுக்குத் தெரிந்தன. அண்ணாந்து நோக்கியபோது வளைவின் நடுவே கட்டப்பட்டிருந்த பெரிய கண்டாமணியின் நாக்கின் இரும்பு உருளை கோபுரக் கலசமெனத் தெரிந்தது. அங்கே குளவிக்கூடுகள் அன்னைப்பன்றியின் அகிடுகள்போல தொங்கின. நான் விந்தையானதொரு உளத்துடிப்பை உணர்ந்தேன். தந்தையே, எங்களுடன் இன்னொருவரும் விழிக்குத் தெரியாமல் இருந்துகொண்டிருப்பதுபோல.

எவர்? எவர்? நான் தொட்டுத் தொட்டுச் சென்று அதை தெளிவுடன் அறிந்தேன். எங்களுடன் வந்துகொண்டிருந்தவர் திருஷ்டத்யும்னன். என்னருகே, அல்லது என் உடலுக்குள்ளா? அருகே திறந்த தேரின் தட்டில் இடத்தூணில் கைகள் சேர்த்து பின்னால் கட்டப்பட்டு இடையில் ஒற்றை ஆடையுடன், கலைந்த குழலுடன், உடலெங்கும் புழுதியும் உலர்ந்த குருதியும் வியர்வையில் கலந்து கரைந்து வழிய, தலை குனிந்து நின்றிருக்கிறாரா கிருதவர்மன்? அத்தருணத்தின் எடை எண்ணமுடியாத அளவு மிகுதியானது. அது அத்தருணத்தை நசுக்கிப் பரப்பிச் சிதைக்கிறது. எந்தச் சொல்லொழுங்கும் அற்றதாக்குகிறது. ஒவ்வொரு எண்ணத்தையும் அத்துமீறச் செய்கிறது.

யாதவர்கள் நெடுங்காலத்திற்குப் பின்னர்தான் அத்தனை பெரிய கேளிக்கை ஒன்றை அடைகிறார்கள் என்று தோன்றியது. முன்பு இந்நகரில் அவ்வப்போது நகர்நுழைவு நடந்துகொண்டிருக்கும். நீங்கள் இந்நகரிலிருந்து பிரிந்து செல்வீர்கள். இங்கிருந்து உங்களைத் தேடி பல்லாயிரம் உள்ளங்கள் அலைந்து கொண்டிருக்கும். நீங்கள் எவ்வண்ணம் எங்கிருக்கிறீர்கள் என்பதை கற்பனை செய்துகொள்வார்கள். சிறு தகவல்கள், செய்திகள் வந்துகொண்டிருக்கும். பின்னர் நீங்கள் வரும் செய்தி வரும். அணுகிக் கொண்டிருக்கிறீர்கள் என்ற செய்தி வரும். நாள் நாளாக துளித்துளியாக நகர் ஒருங்கும். முரசில் கோல் விழுந்ததென ஒருகணத்தில் பொங்கி எழும். பின்னர் நீங்கள் நகர்நுழைவது வரை இந்நகர் திருவிழா கொண்டாடிக்கொண்டிருக்கும். நீங்கள் நகர் நுழையும் கணம் பித்தெடுத்துத் துள்ளி அலைப்புறும். அந்நாட்களை அவர்கள் நினைவிலிருந்து மீட்டுக்கொண்டிருந்தார்கள்.

நீங்கள் துவாரகையின் தெருக்களினூடாக அரண்மனை நோக்கி செல்லும் காட்சியை பலநூறு முறை கண்டதுபோல் உள்ளது. ஒன்று கண்டால் பலநூறை எண்ணிக்கொள்வதுபோல. நகரின் இருபுறங்களிலும் களிவெறிகொண்ட மக்கள் ஆர்ப்பாட்டமிடுவார்கள். அழுது, சிரித்து, கூவி, நெஞ்சில் அறைந்து மகிழ்வு கொண்டாடுவார்கள். விலங்குகள்போல, பறவைக்கூட்டம்போல. தந்தையே, அன்று அதற்கும் மேலாக அவருக்கு வரவேற்பிருந்தது. நீங்களே திரும்பிவந்திருந்தால்கூட அந்த வரவேற்பு இருந்திருக்காது. இருபுறமும் யாதவக் குடிகள் அவரது தேரை தொடுவதற்கு முண்டியடித்தனர். மண்ணில் விழுந்து அவருடைய தேர் சென்ற மண்ணை முத்தமிட்டனர். அவரது தேர்த்தடம் பல்லாயிரம் கைகளால் மூச்சால் அக்கணமே கலைந்தது. அழுகையும் விம்மலும் ஏக்கமும் என துவாரகை அவர் சென்ற வழியெங்கும் உணர்வழிந்து கொந்தளித்துக் கொண்டிருந்தது.

அத்தகைய களியாட்டை முன்பு நான் கண்டதில்லை. அவர்கள் மெய்யாகவே உங்களை அவர் வடிவில் காண்கிறார்களா? ஆனால் ஒருபோதும் உங்களுக்கு அத்தனை வரவேற்பு கிடைத்ததில்லை. அவர்கள் காத்திருந்த மீட்கும் தெய்வம் யார்? நீங்களா இல்லை கிருதவர்மனேதானா? எவ்வகையிலேனும் ஒரு வடிவில் தாங்கள் எழுந்தருளவேண்டும் என்று எண்ணினார்கள் போலும். அவ்வாறு வந்தவரை தாங்கள் என்று எண்ணிக்கொண்டார்களா? நான் அவர் அருகே தேரில் நின்றிருந்தேன். அவர் என்ன எண்ணுகிறார்? அதே தெருக்களினூடாக அவர் இழுத்துச் செல்லப்பட்டார். அன்னைமுன் சென்று நிற்பதை அவர் சாவென உணர்ந்தார். அப்போது எவ்வகையில் உணர்கிறார்? வென்று எழுந்துவிட்டாரா?

இரட்டைத்தூண்களின் அருகே இருந்த தேர்நிலையை அடைந்தோம். அவர் இயல்பாக மேலே நோக்கினார். அங்கே அன்னை நின்று நோக்கிக்கொண்டிருப்பதாக ஒருகணம் என் அகம் திடுக்கிட்டது. அரண்மனை முகப்பில் அவரை வரவேற்பதற்காக மூத்தவர் ஃபானுவும் பிறரும் காத்திருந்தனர். அந்தணர் வேதம் ஓதி அவரை வாழ்த்தினர். மங்கலச்சேடியரும் இசைச்சூதரும் முறைமை செய்தனர். ஃபானு கிருதவர்மன் தேரிலிருந்து இறங்கியதும் அவரை வரவேற்பதற்காக கைநீட்டியபடி வந்தார். கிருதவர்மனின் கால்தொட்டு சென்னி சூடும்போது அறியாமல் விம்மி அழுதுவிட்டார். கிருதவர்மன் அவரை இரு கைகளாலும் அள்ளி தன் தோளோடு அணைத்தார். “நன்று! சூழ்க நலம்!” என்றார்.

“இனி நான் எதுவும் துயரடைவதற்கில்லை. இனி என் கொடிவழிகள் சிறப்புறும். நான் மாண்புறுவேன்” என்று ஃபானு சொன்னார். “துவாரகை மாண்புறும்” என்று கிருதவர்மன் கூறினார். அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றோம். செல்லும் வழியிலேயே அவர் திரும்பி என்னிடம் “பிற மைந்தர்கள் இந்த அரண்மனையில்தான் இருக்கிறார்கள் அல்லவா?” என்றார். நான் “ஆம்” என்றேன். “அவர்கள் ஏன் என்னை வரவேற்க வரவில்லை?” என்றார். நான் ஃபானுவை பார்க்க அவர் ஒன்றும் சொல்லாமல் நின்றார். “இந்நகருக்கு நான் யாதவனாக வரவில்லை” என்றார். பின்னர் “எனில் நான் சென்று அவர்களை பார்க்கிறேன்” என்றார்.

ஃபானு “அல்ல, அது முறையல்ல” என்றார். “தாங்கள் எங்கள் தந்தையின் இடத்தில் இருப்பவர்.” நான் ஃபானுவிடம் “அல்ல, மூத்தவரே. அவர் விரும்பியதை செய்யட்டும். தந்தையருக்கு அறிவுரை கூறவும் வழிநடத்தவும் நாம் இங்கு அழைத்து வரவில்லை. தந்தையரின் பாதையை நாம் தொடர்வோம்” என்று சொன்னேன். ஃபானு பல்லைக் கடித்து “என்ன சொல்கிறாய்?” என்றார். நான் விழிகளால் நிகழட்டும் என்று காட்டினேன். அவர் அடங்கினார். கிருதவர்மன் அண்ணாந்து அரண்மனையை நோக்கினார். “நெடுங்காலம்” என்றார். “ஆம்” என்று அவரே சொல்லிக்கொண்டார். திரும்பி என்னிடம் “சததன்வாவை அறிந்திருக்கிறீர்களா?” என்றார். “ஆம்” என்றேன். “தந்தையால் கொல்லப்பட்டவர்.” அவர் “ஆம்” என்றார். நீண்ட பெருமூச்சுடன் “இன்று நகர்நுழைகையில் அவரும் என்னுடன் இருந்ததாகவே உணர்ந்தேன்” என்றார்.

எங்கள் விழிகள் மாறிவிட்டிருந்தன. கிருதவர்மன் என்னிடம் “என்னை பிரத்யும்னனிடம் அழைத்துச் செல்க!” என்று சொன்னார். “தாங்கள் சற்று ஓய்வெடுக்கலாம்” என்று சுஃபானு சொன்னார். “இல்லை, ஓய்வெடுத்தபின் நான் சென்று சந்திப்பது வேறு. நகரணைந்ததும் முதலில் உங்களை சந்தித்ததுமே அவர்களை சந்திக்கிறேன் என்பது வேறு. என் எண்ணமென்ன என்று அவர்கள் தெளிவுறுவதற்கு ஒரு வாய்ப்பு” என்று கிருதவர்மன் கூறினார். சுஃபானு “அவர்கள் எவ்வகையில் அதை எதிர்கொள்வார்கள் என்பது…” என்றார். “அதை எண்ணாமலேயே அவனை சந்திக்கச் செல்கையிலேயே என் நோக்கம் கூர்கொள்கிறது” என்றார் கிருதவர்மன். “ஆனால்…” என்று ஃபானு சொன்னார். “என் விழைவு இது” என்று கிருதவர்மன் சொல்ல ஃபானு தலைவணங்கினார்.

நான் அமைச்சரிடம் “தந்தையை அங்கே அழைத்துச் செல்க!” என்றேன். இன்னொரு அமைச்சரிடம் “முன்னால் சென்று கிருதவர்மன் வந்துகொண்டிருப்பதை பிரத்யும்னனுக்கு அறிவியுங்கள்” என்று ஆணையிட்டேன். என்னருகே ஓடிவந்த சுஃபானு “என்ன எண்ணுகிறாய் நீ? அவர் தந்தைக்கு நிகரான இடத்திலிருக்கும் யாதவ மூதாதை. அவரே சென்று பிரத்யும்னனை சந்திப்பதென்றால் தலைவணங்குவதுபோல் அல்லவா?” என்றார். “அல்ல, அவர் செல்லட்டும். பிரத்யும்னனை சந்திக்க அவர் இரு கைகளையும் விரித்துக்கொண்டு தானே தேடிச்சென்றார் என்பது இன்று துவாரகையில் அவரைப்பற்றி எழுந்திருக்கும் எண்ணத்தை மேலும் பெரிதுபடுத்தும். அவர் பேருருக்கொள்வது நமக்கே நல்லது” என்றேன்.

“அவரை வாழ்த்தி வரவேற்பதென்றால் பிரத்யும்னன் அரியணையிலிருந்து எழுந்து வந்து கால்தொட்டு சென்னி சூடியாகவேண்டும். அவரை அவர் அவைச்சிறுமை செய்வாரெனில் துவாரகையில் அதன்பொருட்டே பெரும் பழியை ஏற்றுக்கொள்பவர் ஆவார். இரண்டுமே அவரை படியிறக்கம் செய்வதுதான். ஷத்ரியர் நோக்கில் அவரை யாதவ மைந்தராக நிறுத்துவதுதான். இரண்டில் ஒன்றை தெரிவு செய்யும் நிலையை அவருக்கு நான் அளித்துவிட்டேன்” என்றேன்.

இடைநாழியினூடாக கிருதவர்மன் செல்கையில் அரண்மனையின் ஏவலர்கள் அனைவரும் கைகூப்பி வணங்கியபடி வந்து நின்றிருப்பதை கண்டேன். ஒவ்வொருவரும் கண்கனிந்து மெய்ப்புகொண்டவர்கள்போல் இருந்தார்கள். உடல் ஒடுங்கி கைகூப்பியிருந்தார்கள். அவர் எவரையும் பார்க்கவில்லை. அவர் சென்ற வழியில் காலடியில் அத்தனை உள்ளங்களும் சென்று படிகின்றன என்று கண்டேன். தலைவரில்லாது செயல்பட்டவர்கள் அவர்கள். தந்தையே, தலைவரென்று ஒருவர் இலாது செயல்படும் திறன் கொண்டவர்கள் இப்புவியில் சிலரே. அவர்கள் தந்தையென்றும் தலைவரென்றும் ஆகிறவர்கள். எஞ்சியோர் தந்தையும் தலைவரும் இல்லாத நிலையில் கைவிடப்படுகிறார்கள். தந்தையென்றும் தலைவன் என்றும் தெய்வ வடிவென்றும் ஒன்றை உருவாக்கி அதன் நிழலில் இளைப்பாறுகிறார்கள். துவாரகை எப்படி கைவிடப்பட்டிருந்தது என்பது அப்போது தெரிந்தது. எத்தனை ஏக்கத்துடன், துயருடன் அது தங்களை எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தது என.

எத்தனை விரைவாக கிருதவர்மன் தங்கள் வடிவென மாறிக்கொண்டிருக்கிறார் என்பதைக் கண்டு நான் வியந்தேன். அவர் ஒன்றும் செய்யவில்லை, அவரை அவ்வண்ணம் ஆக்கியது அச்சூழல். கிருதவர்மனின் முகம் தங்களுடையது அல்ல. நடை தங்களுடையதல்ல. ஆனால் நான் ஓரக்கண்ணால் கண்ட அசைவு தங்களுடையது. ஒருகணத்தில் அவரை நிழலென தரையிலோ சுவரிலோ கண்டால் அது நீங்களே என்று தோன்றியது. தந்தையே, பீலித் திருமுடி சூடிய குழல்கொண்டிருப்பதைப் போலவே!

கிருதவர்மன் அங்கு செல்வதற்குள்ளாகவே அரண்மனையில் தங்கள் பகுதியிலிருந்து பிரத்யும்னனும் அவர் மைந்தர் அநிருத்தனும் இளையோரும் பெருங்கூட்டமாக கைகூப்பியபடி இடைநாழியில் எதிரே வந்தார்கள். பிரத்யும்னன் அருகணைந்து வந்த விசையிலேயே குனிந்து கிருதவர்மனின் கால் தொட்டு சென்னி சூடினார். உடைந்த குரலில் “தந்தையே, தங்கள் வருகைக்காக நான் நல்லூழ் கொண்டிருக்கிறேன்” என்று அவர் சொன்னார். “உன்னை அங்கு எதிர்பார்த்தேன்” என்று கிருதவர்மன் சொன்னார். “நான் வந்திருக்கலாம். அதை யாதவர்கள் விரும்புவார்களா என்று ஐயுற்றேன். தங்களுக்கு மட்டுமே உரியவர் நீங்கள் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். அவ்வெண்ணத்தால் அங்கு பூசல் உருவானால் அந்நிலையின் மங்கலத்தன்மை குறைந்துவிடுமென்று ஐயுற்றேன். ஆகவேதான் நான் ஒழிந்தேன்” என்றார்.

“நான் அனைவருக்கும் உரியவன், இக்குடியின் மூதாதை” என்று அவர் சொன்னார். “ஆம், ஆகவேதான் தங்கள் வருகை என்பது எங்கள் குடிக்கு பேரருள்” என்றார் பிரத்யும்னன். ”மைந்தா, வணங்குக!” அநிருத்தன் அவரை வணங்க அவர் அள்ளி எடுத்து நெஞ்சோடு சேர்த்துக்கொண்டார். அவர்கள் ஒவ்வொருவரையாக தழுவினார். ஒவ்வொரு தோளையும் தலையையும் அவர் தொட்டார். கனிந்த குரலில் ஒவ்வொருவரிடமும் நலம் உசாவினார். ஒவ்வொருவரும் கண்கள் கனிந்தனர். அவர் தொடுகையில் உடல் உருகினர்.

“வருக தந்தையே, தங்களை எங்கள் அரண்மனைக்கு அழைத்துசெல்கிறேன்” என்று பிரத்யும்னன் சொன்னார். “இல்லை, என்னை சாம்பனிடம் அழைத்துச் செல்” என்று அவர் சொன்னார். பிரத்யும்னன் “ஆம், அதுவே முறை” என்று கூறி “வருக, நானே அழைத்துச்செல்கிறேன்” என்றார். பிரத்யும்னனும் இளையோரும் சூழ அவர் சாம்பனின் அரண்மனைப் பகுதி நோக்கி நடந்தார். அவர்கள் செல்லச் செல்ல சாம்பனின் அரண்மனைக்கு அச்செய்தி சென்றிருக்கலாம். அங்கிருந்து சாம்பனும் இளையோரும் கிளம்பி எதிரே வந்தனர். சாம்பன் அங்கிருந்து வருகையிலேயே இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பிக்கொண்டிருந்தார். அருகணைந்து கால் தொட்டு வணங்குகையில் கிருதவர்மன் அவர் தோளைத் தொட்டு தன் நெஞ்சுடன் அணைத்துக்கொண்டார்.

கிருதவர்மன் ஏதேனும் சொல்வதற்குள்ளாகவே சாம்பன் விம்மி அழத்தொடங்கினார். அவரது இளையோரும் அழத்தொடங்கினர். அவரது கைகளைப் பற்றியபடி “என்ன இது? நீங்கள் இளையோர். ஒற்றைக் குருதியினர். பெருமானுடன் ஒருவனின் மைந்தர். அந்நிலையிலிருந்து சிறு வழுவல் இருந்திருக்கலாம், அது இல்லை என்றாவதில்லை” என்று கிருதவர்மன் கூறினார். சாம்பன் “தாங்கள் வந்துவிட்டீர்கள். இனி தங்கள் காலடியில் அமர்ந்திருப்போம்” என்றார். பிரத்யும்னனை நோக்கி “இளையோனை தழுவிக்கொள்க, மைந்தா!” என்றார் கிருதவர்மன். பிரத்யும்னன் இரு கைகளையும் விரிக்க சாம்பன் பாய்ந்துசென்று தழுவிக்கொண்டார். அவர்கள் கண்ணீருடன் ஒருவரை ஒருவர் இறுக்கிக்கொண்டார்கள்.

இளையோர்கள் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டனர். அங்கு நின்றிருந்த என் உள்ளம்கூட அனைத்தையும் மறந்து உவகை கொண்டது. என் கண்களிலிருந்தும் நீர் வழிந்துகொண்டிருந்தது. “வருக! நாம் சென்று ஃபானுவை பார்ப்போம்” என்றார் கிருதவர்மன். “ஆம், அவர் மூத்தவர். நாம் சென்று பார்த்தாகவேண்டும்” என்று பிரத்யும்னன் சொன்னார். சாம்பனையும், பிரத்யும்னனையும், அனைத்து இளையோரையும் அழைத்துக்கொண்டு கிருதவர்மன் திரும்பி யாதவப் பகுதிக்கு வந்தார். அவரது வருகையைக் கண்டதும் யாதவர்கள் அரண்மனையின் பல பகுதிகளிலிருந்தும் ஓடிவந்து இடைநாழியின் இரு பகுதிகளிலும் செறிந்தனர். அவர்கள் செல்லச்செல்ல வாழ்த்தொலி எழுந்தது.

தன் அவைமுகப்பில் கைகூப்பி உடல் நடுங்கியபடி நின்றிருந்தார் ஃபானு. கிருதவர்மன் சாம்பனின் தோளிலும் பிரத்யும்னனின் தோளிலும் இரு கைகளை போட்டபடி நடந்து வருவதைக் கண்டு கைகூப்பி நின்றார். அருகணைந்த கிருதவர்மன் “இளையோரே, உங்கள் மூத்தவரை வணங்குக!” என்றார். சாம்பனும் பிரத்யும்னனும் வந்து ஃபானுவை கால் தொட்டு வணங்கினர். அவர் இரு கைகளையும் தூக்கி அவர்களை அணைத்துக்கொண்டார். மூவரும் ஒன்றாக தழுவிக்கொண்டனர்.

எங்கிருந்தோ முதிய யாதவ வீரன் ஒருவன் “எழுக மாமன்னர்! எழுக துவாரகை! எழுக பெரும்புகழ்! எழுக பேரறம்! திகழ்க தெய்வங்கள்! நிறைவுறுக மூதாதையர்!” என்று கூவினான். அங்கிருந்த அத்தனை வீரர்களும் பெருங்குரலெடுத்து வாழ்த்தொலி எழுப்பினர். அரண்மனையிலிருந்து அக்குரல் எழுந்து பரவி முற்றத்தை அடைந்து நகரமெங்கும் நிறைந்தது. நகர் கடலோசை என வாழ்த்தொலி எழுப்பியது. மெல்லிய ஆடைபோல் அரண்மனை அதிர்ந்துகொண்டிருந்தது. அத்தனை அறைகளுக்குள்ளும் அவ்வுணர்வு சென்று நிறைந்தது. ஒலியே ஒளியென்றாக முடியும் என்று அன்று கண்டேன்.

முந்தைய கட்டுரைஅஞ்சலி : மருத்துவர் ஜெயமோகன்
அடுத்த கட்டுரைஏகம், ஆனையில்லா -கடிதங்கள்