நகைமுகன் [சிறுகதை]

ஆறுமுகம் போனை லொட் லொட் லொட் என்று தட்டினார். “எளவெடுத்தவனுக ஒரு நாலுவார்த்தை பேசவும் விடுதானுக இல்லியே” என்று சலித்துக் கொண்டார்.

மறுமுனையில் டி.இ சதாசிவம் தோன்றினார். “டேய் ஆறுமுகம், கேட்டுட்டுத்தான் இருக்கேன். பாத்துப்பேசு.”

“உங்களச் சொல்லேல்ல சார்…”

“பின்ன ஆரைச்சொன்னே? ஆரைடே சொன்னே?”

“சார், பொதுவாட்டு சொன்னேன்… பொதுவா சொல்லப்பிடாதா?”

“சொல்லப்பிடாது டே. அப்டிப் பொதுவாச் சொல்லப்பிடாது. பொதுவாச் சொன்னேன்னா ஆரை? டிப்பார்ட்மெண்டையா? இல்ல சர்க்காரையா? சொல்லு.”

“நான் சாமியச் சொன்னேன், இப்டி நம்மள படைச்சு கொண்டு வந்து இங்க சேத்திருக்குல்லா? அந்த கோரோயில் முருகனைச் சொன்னேன்.”

“கோரோயில் முருகன் குடுத்ததனாலேதான் நீயும் உன் குடும்பமும் கஞ்சி குடிச்சு கெடக்கு பாத்துக்க. உனக்க அப்பன் சீரங்கன் வேளிமலையிலே மாடு மேய்ச்சவனாக்கும்… அத மறக்காதே.”

“செரி செரி… விடுங்க… அப்பன் வரைக்கும் போகவேண்டாம். நான் சொன்னதத் திருப்பி எடுத்தாச்சு.”

“திருப்பி எடுக்குறப்ப நினைச்சுக்க, அத நான் உனக்கு திருப்பிக்குடுத்தேன்னு.”

“எனக்க தப்பு…. நான் மூணுவட்டி நாலுவட்டியோட திரும்ப எடுத்தாச்சு… போருமா? வேணுமானா பேங்கிலே டெப்பாசிட்டு பண்ணி வைக்கேன்…. இப்பம் நான் சொல்லவா?”

“சொல்லு.”

“இங்க ஸ்டாஃப் போதாது… இருக்கது நான் ஒரு டெக்னீசியனாக்கும். ரெண்டு டெம்பரவரி மஸ்தூருங்களை வச்சு உள்ள சமாளிச்சிட்டிருந்தேன்… ரெண்டுபேரையும் இப்ப லைனுக்கு அனுப்பியாச்சு. இங்க உள்ள எக்ஸேஞ்சப் பாத்துக்கிடுயதுக்கு ஆளில்லை” என்றார் ஆறுமுகம். “நாளைக்கு எலக்சன், இப்பம் இப்டி கெடக்கு.”

“அதுக்கு நான் என்ன செய்ய? எல்லா எடத்திலயும் ஸ்டாஃபு குறவாக்கும்.”

“அப்டிச் சொன்னா முடியுமா? நீங்கள்லா சீனியர் ஆப்பீசர்?”

“அப்ப நான் வரட்டா? நான் வரட்டாடே?”

“அப்டி கேட்டா எப்டி?”

“பின்ன? பின்ன நான் என்ன செய்ய? சொல்லு? எனக்கு இங்க பியூன் இல்ல. தெரியுமா? அவனுக்கு ஒரு மண்ணும் தெரியாது, அவனையும் லைனுக்கு அனுப்பியாச்சு. சாய கொண்டு வாறான் ஒருத்தன் அவனையும் லைனுக்கு அனுப்பலாமான்னு பேசிட்டிருக்கோம்… டேய் இங்க ஆளில்ல… ஒரு ஆளில்ல. லைனுக்கு இன்னும் ஆளுவேணும்… இங்க நான் இருக்க முடியல்ல. இந்நா நாலு போனாக்கும் மாறிமாறி அடிச்சிட்டிருக்கு… இங்க லைன் ஃபால்ட் எவ்ளவுங்குதே? எம்பத்தேளு… டேய் எம்பத்தேளு.”

“இருக்கதிலே நாலிலே ஒண்ணு ஃபால்டா?”

“ஆமா, அதுவும் எல்லாம் முக்கியமான அரசியல்வாதிகளுக்க நம்பர். நேரா மெட்ராஸுக்கு விளிக்கான். அப்டியே டெல்லிக்கு விளிக்கான். இனியிப்ப ஆரு ஐநா சபைக்கு விளிக்கப் போறான்னு தெரியல்ல…”

“செரி, என்ன செய்ய?” என்றார் ஆறுமுகம். “இவனுகளே அத்துவிடுதானுகளோ?”

“பின்ன? இத புரிஞ்சுகிட இம்பிடு நேரமா? டேய் ஒருத்தன் நம்பரை இன்னொருத்தன் கள்ளத்தனமாட்டு கம்பிபோட்டு ஒட்டு கேக்கான். ஒருத்தன் லைனை இன்னொருத்தன் ஆள வச்சு அத்துவிடுதான். ரெண்டுபேரும் மாறிமாறி இங்க வந்து கம்ப்ளெயிண்ட் செய்யுதானுக…”

ஆறுமுகம் “எளவு, இந்த எலெக்சன் முடியுயதுக்குள்ள பொளப்பு சீண்டிரமா போயிருமுன்னுல்லா தோணுது” என்றார். “எப்டியும் இந்திராகாந்தி ஜெயிப்பா. அதுக்கென்னத்துக்கு எலக்சன்? சும்மா மனுசன போட்டு சோலிமெனக்கெடுத்திட்டு?”

“நீ என்ன நெனைக்கே? நம்ம பொளைப்பா சீரளியுது? இந்தா எல்லா சர்க்காராப்பீஸும் அடுக்களையிலே ஆனை நுளைஞ்ச மாதிரி கெடக்கு… என்னமாம் செய்டே, நமக்கு இனி ஒண்ணும் சொல்லுகதுக்கில்ல.”

ஃபோனை வைத்தபின் ஆறுமுகம் பெருமூச்சுவிட்டார். அவரைச்சுற்றி பெரிய ஸ்ட்ரௌஜர் எக்ஸேஞ்ச். அதன் ரிலேக்கள் ரீ ட்ட்ட் ரீஇ ட்ட்ட் என்று ஓடிக்கொண்டிருந்தன. ஒரு நோக்கில் அது ஒரு பெரிய இயந்திரம். ஆனால் ஒன்றல்ல, தேனீக்கூடு போல. நூற்றுக்கணக்கான ரிலேக்களும் சர்க்யூட்டுகளும் தனித்தனியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தன. அவை ஒன்றாகச் சேர்ந்து ஒற்றை இயந்திரமாகவும் செயல்பட்டன. ஒவ்வொன்றின் பேச்சும் தனி. அதை ஒரு ரிலேயின் அருகே சென்று நின்றால் உணரமுடியும். சற்று அப்பால் நின்றால் ஒட்டுமொத்தமாக அந்த இயந்திரம் தனக்குத்தானே பேசிக் கொண்டிருப்பது போலத் தெரியும்.

ஃபோன் அடித்துக்கொண்டே இருந்தது. எடுத்து “அல்லோ” என்றார்.

“சார், இது போனு ஆப்பீஸு தானே?”

“ஆமா.”

“234 நம்பரு கிட்டல்ல… இந்நா இப்ப கிட்டிட்டு இருந்தது… அறுந்துபோச்சு.”

“செரி, நாங்க பாக்குதோம்.”

“எனக்கு இப்ப செரியாவணும்… இப்ப.”

“வாறோம்.”

“எப்ப வருவிய?”

“சார் ஆளுவரணும்லா? வாறோம்.”

“வே, இது எலெக்சன் நேரமாக்கும். நமக்கு கட்சி பொறுப்பு உண்டு… போன் அறுந்தா பின்ன நம்மள கட்சியிலயும் அத்துப்போடுவானுக.”

“நான் என்ன செய்ய? எல்லா லைனும் இப்டித்தான் கெடக்கு. செரியாக்கித் தாறோம்..”

“நாளைக்கு எலக்சன்… எனக்கு இப்ப ஒருமணிக்கூருக்குள்ள செரியாக்கி கிட்டணும்.”

“ஒரு மணிக்கூருக்குள்ள செரியாக்கிக் கிட்டாது சார்.”

“டேய், நான் ஆரு தெரியும்ல?”

“ஆண்டோ சாமுவேல்… பெருவட்டர். ரெட்டைக்காளைக் கட்சி… அதுக்குமேலே என்னமாம் தெரியணுமா?”

“வெளையாடுதியா? ஏலே வெளையாடுதியா?”

“வெளையாடல்ல… உள்ளதச் சொன்னேன். இந்த எக்ஸேஞ்சிலே இப்ப எளுவத்தெட்டு நம்பர் அறுந்து கெடக்கு. இருக்கது முந்நூறு நம்பர். அதை செரிபண்ணுகதுக்கு எட்டு லைன்மேன். வேலியிலே ஏறுத ஓணானையெல்லாம் பிடிச்சு லைனுக்கு அனுப்பியிருக்கு… இதுக்கு மேலே நாங்க என்ன செய்ய?”

“ஆரு இதையெல்லாம் வெட்டிப்போடுகது?”

“உங்க ஃபோனை அவனுக வெட்டுகானுக. அவனுக போனை நீங்க வெட்டுதீக… ரெண்டுபேரு ஃபோனையும் நாங்க கெட்டணும்.”

“நான் டிஇ கிட்ட பேசுதேன்.”

“பேசுங்க… அவருக்க ஃபோனு இப்பம் வேலைசெய்யுது. எப்பம் அது அறுந்துபோவும்னு தெரியல்ல.”

“நான் பாத்துக்கிடுதேன்… இது ஆருக்க வேலைன்னு தெரியும்… உம்மைப் பத்தியும் விசாரிக்கேன்.”

ஆறுமுகம் ஃபோனை வைத்தபோது அடுத்த அழைப்பு. “அல்லோ.”

“சார், நான் லாரன்ஸு. இங்க 284 நம்பர பாக்க வந்தேன். முன்னாள் எம்.எல்.ஏக்க நம்பரு.”

“சொல்லு… லூப்புல்லா?” என்றார் ஆறுமுகம்.

“இல்ல. கம்பியே இல்ல…”

“எங்க போச்சு?”

“நான் என்ன கண்டேன்? ஒரு ஃபர்லாங்குக்கு கம்பியே காணல்ல.”

“அய்யோ… எம்.எல்.ஏக்க நம்பருல்லா?”

“ஆமா, அவரு ஆளு விட்டிருக்காரு. புடுக்குமயிரு மாதிரி மீசைய வச்சுக்கிட்டு ஒருத்தன் ஒப்பம் வந்து நிக்கான்.”

“அவன் இங்க வந்தாம்லே… ஆறாம்முளை செல்லம்மை, அதாவது எனக்க அம்மை, அவளுக்க இடுப்புக்கு கீள இருக்கதைப்பத்தி நுணுக்கமா பேசினான்…. என்னமாம் செய்டே… அவன் இங்க திரும்ப வந்தா செத்துப்போன கிளவியை எடுத்துப்போட்டு ரேப்பு செய்வான்.”

“நான் என்ன செய்ய? கம்பி இருக்கா?”

“கம்பியா? இருந்த கம்பிய நாராயணன் வைத்தியருக்க லைனிலே கெட்டியாச்சே… இனி ஏதாவது வேலிக்கம்பிய அவுத்தாத்தான் உண்டு…” என்றார் ஆறுமுகம்.

“எனக்க அர்ணாக்கொடிய வச்சு கேட்டுதேன்.”

“நீ அஞ்சுரூவா மஞ்சக்கயிற கெட்டியிருக்கே, நான் கண்டிட்டுண்டு” என்றார் ஆறுமுகம். “ஒண்ணு செய், அம்புரோஸ் பெருவட்டன் லைனு பக்கம்தானே?”

“ஆமா.”

“அத அவுத்து இங்க கெட்டு.”

“அய்யோ.”

“கெட்டுலே… அந்த போன நான் ஃபால்டு போடுதேன்… கெட்டு கெட்டு.”

ஃபோனை வைத்தபோது பெருமூச்சு வந்தது. முக்காலியில் விரிந்த புன்னகையுடன் அமர்ந்திருந்த முருகனை பார்த்தார். அவன் வாயின் அமைப்பே அப்படி. சர்க்கஸ் கோமாளிகளின் வாய்போல விரியத் திறந்த உதடுகள், உள்ளே நிறைய பற்கள். புருவமும் மேலேறி வளைந்து இருக்கும். சற்றுமுன் அவன் ஏதோ மாபெரும் வேடிக்கையை கேட்டது போல தோன்றும். அவன் தூங்கும்போதும் அப்படித்தான்.

“பய சிரிச்சு கொண்டாக்கும் உள்ளே இருந்து வெளிய வந்தான்… வயற்றாட்டி பிள்ளையப் பாத்ததும் கெக்கெக்கேன்னு சிரிச்சுப்போட்டா… அப்ப தொடங்கின சிரிப்பு…” என்றாள் முருகனின் அம்மா.

ஆனால் முருகன் அவனாகச் சிரிப்பதில்லை. யார் என்ன பேசினாலும் அவனுக்கு புரியாது. யாராவது வழுக்கி விழக் கண்டால்கூட சிரிக்கமாட்டான், வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பான். அவனுடைய ஆத்தாள் ஆறுமுகத்தின் வீட்டில் சாணிவழிக்க வருபவள். அவள்தான் “பயல எங்கிணயாம் இருத்துங்க கோனாரே… அவனுக்கொரு வாயி சோறு கிட்டணும்” என்று கேட்டாள். அவர் ஆபீஸ் வரச்சொல்லிவிட்டார். டீ கொண்டுவருவான். குப்பை கொண்டு கொட்டுவான். அதைவிட ஆள் என ஒரு உருவம் அங்கே இருக்கும்.

“லே மக்கா, பாத்துக்க. ஆராம் வந்தா டெக்னீசியன் இப்ப வந்திருவாருன்னு சொல்லு. என்னா?”

அவர் மணிகண்டனின் டீக்கடைக்குச் சென்றபோது அங்கே கிட்டத்தட்ட நெரிசல். மணிகண்டனின் தம்பி ஐயப்பன் பெரிய ஏனத்தில் பருப்பு வடைகளை கொண்டுவந்து கண்ணாடிப் பெட்டிக்குள் கொட்டினான். மணிகண்டன் தீவிரமாகச் சுழன்று கொண்டிருந்தான். பாய்லரில் பெருமாள் ஒரே கோப்பையில் பத்து டீயை சுழற்றி ஆற்றினார்.

ஆறுமுகம் பெஞ்சில் அமர்ந்தார். அப்போதுதான் நெடுநேரமாக நின்றுகொண்டிருந்ததே தெரிந்தது.

“என்னவே ஆறுமொகம், எப்டி வே போவுது? எலக்சன்லா?” என்றார் கிருஷ்ணசாமி.

“உமக்கு எலக்சன், நமக்கு தாலியறுப்பு” என்று ஆறுமுகம் சொன்னார். “பாதி போனு அத்து கெடக்கு. எல்லா லைன்மேனும் வெளியே இருக்கானுக. ஒத்த ஒருத்தன் இங்கிண கெடந்து சாவுதேன்.”

“எலக்ஸன்லா!” என்றார் கேசவபிள்ளை. “ஜனநாயகமாக்குமே.”

அதிலிருந்த கேலி சகாவு நேசப்பனை சீற்றமடையச் செய்தது. “என்ன ஒரு சிரிப்பு? இல்ல கேக்கேன். என்ன சிரிப்பு? இப்ப பாவங்களுக்கும் ஓட்டு உரிமை வந்திருக்கு. மாடனும் கோரனும் ஓட்டுபோடுதான்… அதானேவே உம்ம சிரிப்பு? முப்பத்திநாலுலே முதல் எலக்ஸன் வந்தப்ப உம்ம தாத்தன் தாணப்பன் பிள்ளை தானேவே முதல்ல கோமணத்தை இறுக்கிட்டு போயி நின்னாரு…”

“ஆமா, ரெண்டு அண்டியும் ஒரு கோலும் தவிர எல்லாத்தையும் எலக்சனுகாக வித்தாரு. அதனாலத்தான் இந்நா இங்கிண இருந்து உனக்கக்கூட பேசிட்டிருக்கேன். டீ குடிச்சபிறவு மணிகண்டன்கிட்ட கடன் சொல்லணும்.”

“சொல்லும் சொல்லும், ரூபா நாப்பத்தெட்டு நிக்குது.”

“அதுக்கு நடுவில அவனுக்க செவி… ஏலே மணிகண்டா, நீ பாம்பு சென்மம்லே” என்றார் கேசவ பிள்ளை.

“எலெக்ஸன் நல்லதாக்கும்… ஆனா இப்ப நடக்குதது ஒரு யுத்தம்லா? அவனைப்பத்தி இவன் பள்ளு சொல்லுதான். இவனைப்பத்தி அவன் பள்ளு சொல்லுதான். ஒருத்தன் சொல்லுகதிலயும் உண்மை கிடையாது. அடிச்சுச் சொல்லுதானுக, அளுதுகிட்டு சொல்லுதானுக, சொல்லிச் சொல்லி உண்மையா நம்பிச் சொல்லுகானுக..” என்றார் குமாரசாமி நாடார்.

“கேக்கவனுக்கு மதியிருக்குல்லாவே?”

“மக்களே கொளுந்து கம்மூனிஸ்டு, சாதாரணக்காரனுக்க மனசுங்கியது சுண்ணி மாதிரியாக்கும். நாள் முளுக்க அது சுருங்கி இல்லேண்ணு கெடக்கும். தேவையானா ஒரு அஞ்சு நிமிசம் எங்கே எங்கேன்னு நிக்கும், அம்பிடுதான்… அதை எளுப்பத் தெரிஞ்சவன் ராஜ்ஜியம் ஆளுவான்” என்றார் குமாரசாமி நாடார்.

“இது ஒருமாதிரி மத்த பேச்சு” என்றான் சகாவு நேசையன்.

“சாமானியனுக்கு என்னடே தெரியும்? அவனுக்கு என்ன படிப்பா வெவரமா? இனியிப்ப படிப்பும் வெவரமும் இருந்தா என்ன பிரயோசனம்? ஓரோருத்தனுக்கும் ஒரு அபிப்பிராயம் இருக்கு. அதுக்கு காரணம் முதல்ல சாதி, பிறவு மதம், பிறவு அவனுக்க சொந்தக் கணக்குகள். அம்பிடுதான். நீ என்ன நியாயம் சொல்லு, எப்டி தர்க்கம் சொல்லு, அவன் அவனுக்க நம்பிக்கையைத்தான் சொல்லுவான். பூனை நாலுகாலிலேதான் மண்ணிலே விளும்.”

“அப்டி மக்களை ஏமாளிகளா நான் சொல்லமாட்டேன்” என்றான் சகாவு நேசப்பன்.

“மக்கள் ஏமாளிகள் இல்ல… கணக்காளிகளாக்கும். அம்பிடு பயக்களுக்கும் கணக்கு இருக்கு. இப்ப என்ன, ஓரொருத்தனும் கணக்குபாத்து கேட்டு வாங்குதான்லாவே?” என்றார் குமாரசாமி நாடார்.

“இந்த எலக்சன் வந்ததோட எங்கயும் சண்டை பெருத்துப்போச்சு” என்றார் மாடசாமிப் பிள்ளை. “ஒரு ஊர ஒரு பகவதிக்க தட்டகம்னு சொல்லுவா. ஒரு தட்டகத்திலே நூற்றெட்டு தெய்வங்கள் உண்டுண்ணாக்கும் பேச்சு. அதுகளுக்கு சமானமா ஆயிரத்தெட்டு வாதைகளும் உண்டு. தெய்வங்களுக்கு ஒருத்தருக்கொருத்தர் சண்டை. வாதைகளுக்கு அம்பிடு பேருகிட்டயும் சண்டை… அத்தனை பேரையும் கெட்டி இருத்தி ஒரு அமைதியை உண்டாக்கி வச்சிருக்குதது பகவதிக்க அருளாக்கும்… இப்பம் எலக்சன் வந்ததோட பகவதிக்க பவர் போச்சு. கெட்டெல்லாம் அவுந்தாச்சு… எல்லா தெய்வங்களும் பேய்களும் பூதங்களும் வாதைகளும் இறங்கி அலையுது.”

“உள்ளதாக்கும்” என்றார் ஏசுவடியான். “கண்ணாம் பொத்தையிலே முந்தாநாளு இந்துக்களுக்கும் வேதக்காரனுகளுக்கும் பொரிஞ்ச அடி… நேத்து சி.எஸ்.ஐக்காரனுகளுக்கும் கத்தோலிக்கனுகளுக்கும் அடி. இந்நா இண்ணைக்கு காலம்பற கோயிலிலே சி.எஸ்.ஐக்காரனுக அவனுகளுக்குள்ள அடி…”

“பெந்தேகொஸ்தேக்கு அடியுண்டோ?” என்று மைக்கேல் ஆவலாக கேட்டான்.

அவனை அர்த்தமில்லாமல் ஒருகணம் பார்த்துவிட்டு ஏசுவடியான் சொன்னார் “கெட்டவார்த்தைன்னா அப்டி ஒரு ஒரு கெட்டவார்த்தை. படிச்ச புலவனுக ஓடீருவானுக. தனி பைபிளுதான் அதுக்கு எளுதணும்.”

“நேத்து இங்கிண பிரம்மபுரத்திலே நாயன்மாருக்கும் குறுப்பன்மாருக்கும் சினிமா ஸ்டைலு அடியில்லா? சாடிச்சாடி சவிட்டுதானுக” என்றான் மணிகண்டன். “ஏன் அடிச்சானுகன்னு தெரியுமா? முத்தாம்பொத்தை நாடான்மாருகிட்ட இவனுக ரெண்டுபேரும் சேந்து சண்டைக்கு போயிருக்கானுக… அந்தச் சண்டையிலே நாடான்மாருக்கு கூடுதல் அடி குடுத்தது இவனுக ரெண்டுபேருக்குள்ள யாருன்னு இவனுகளுக்குள்ள சண்டையா போச்சு… வெளங்குமா?”

“வதந்தியாக்கும் பிரச்சினை. அந்தாலே அவனை இவன் அடிக்கான் இவனை அவன் அடிக்கான்னு எங்க பாத்தாலும் வதந்தி… ஒரு நியூஸ் பொய்னு தெரிஞ்சாலும் அது தனக்கு சாதகமானா அதை நம்பிடுதானுக.”

“அண்ணாச்சி அது எப்பமும் அப்டியில்லா? நாயிக்கெல்லாம் புண்ணுவந்தா அதை நக்கி நக்கி பெரிசாக்கி அதுவே செத்திரும். மனுசனும் மிருகமாக்குமே… ஒரு பிரச்சனை வந்தா அம்பிடு பேருக்கும் உற்சாகம் ஏறிடும்… அதை எப்டியெல்லாம் பெரிசாக்குததுண்ணு நினைப்பானுக. எண்ணி எண்ணி வளப்பானுக.”

“ஒரு ஊருக்கே கிறுக்குல்லா பிடிச்சிருக்கு?”

“எலே கிறுக்கு எப்பமும் அப்டித்தான் இருக்கு… அதை நம்மாளுக பேசாத நாளு இல்லை. இப்ப என்னான்னா இந்த மைக்கும் ரேடியோவும் வந்துபோட்டு. பேசுதது எல்லாம் பத்து நூறு எரட்டியாச்சு. வீட்டுக்குள்ள குசுவிடுதது நாலுமுக்கு சங்சனிலே சங்குமாதிரி கேக்குது… ஒருபேச்சு கூடினா அது மத்த பேச்சை கூட்டும்… பேசிப்பேசி ஆகாசத்தை கிறுக்காலே நிறைச்சுப்போட்டான்…”

“ஆமாண்ணாச்சி, ரோட்டிலே பாத்தா எல்லாவனும் வெறிபிடிச்ச மாதிரி பேசிட்டிருக்கானுக… சிரிக்கானுக, அளுவுதானுக, அலறி சத்தம்போடுதானுக… இந்நா வாறப்ப நம்ம சுண்டன் பய நின்னு தொண்ட கீறுதான்.. இங்குலாப் சிந்தாபாத்துன்னு” என்றார் மாணிக்க நாடார்.

“ஏன் இங்குலாப்புதானா வே உமக்கு பிரச்சினை? கம்மூனிஸ்டைக் கண்டா உமக்கு கிருமிகடி, இல்லவே?” என்றார் சகாவு.

“அவன் ஆருலே கம்மூனிஸ்டா? குடிகார நாயில்லா அவன்?”

“அவன் உளைப்பாளி, குடிக்கான். நீரு குடிக்கல்லியா? இங்க உயர்சாதி மட்டும் குடிச்சா போருமா?”

“சாதிப்பேச்சு வேண்டாம்.”

“இந்த நாயி பேசுனதில்லா வே சாதிப்பேச்சு? என்னிய சொல்லுதேரா?” என்று நேசப்பன் சகாவு கூச்சலிட்டான்.

“லே பாத்துப்பேசு… பல்லை அடிச்சு பேத்துப்போடுவேன்.”

“அடிலே பாப்பம். ஏலே நீ ஆம்புளைன்னா அடிலே பாப்பம்.”

ஆறுமுகம் டீக்கான காசை சந்தடிக்கு நடுவே கொடுத்துவிட்டு எக்ஸேஞ்சுக்கு வந்தார். இரண்டு போன்களும் மாறி மாறி அடித்துக்கொண்டிருந்தன.

“ஆராம் வந்தானுகளாலே”

முருகன் இல்லை என தலையாட்டினான்.

அவர் போனை எடுத்து “அல்லோ” என்றார்.

“எலே அங்க என்ன எடுக்கிய? தலைவருக்க போனு கட்டாயிக் கெடக்கு? வெட்டி விடுதியளா? சவிட்டி கொடலை எடுத்திருவேன்… இப்ப வாறேம்லே… ஏலே இப்ப வாறேம்லே.”

“சார், நம்பரச் சொல்லுங்க… இங்க ஏகப்பட்ட நம்பர் முறிஞ்சு கிடக்கு… நம்பரச் சொல்லுங்க.”

“நம்பரை நீ பாருலே… வக்காவோளி… அம்புரோஸு பெருவட்டருக்க வீட்டிலே எங்கக் கட்சி கூட்டம் நடந்துகிட்டிருந்தப்ப கம்பிய எவன்லே வெட்டினது?

ஆறுமுகம் “இல்ல… அது… இப்ப… உங்க மாத்துக்கட்சிக்காரனுக” என்றார்.

“அவனுகளா? லேய், அவனுகளாம்லே… செரி நாங்க பாத்துக்கிடுதோம்.”

“இல்ல இல்ல, நாங்க இப்பச் செரியாக்குதோம்… ஒரு அர மணிக்கூர்.”

“அப்டி விடப்பிடாதுல்லா? சூறத்தாயளிக.”

“சார்! சார்!”

ஃபோன் வைக்கப்பட்டது. ஆறுமுகம் படபடப்பாக சிலகணங்கள் நின்றார். திரும்பி முருகனை நோக்கி “சிரிக்காதேலே நாயே” என்றார் “சிரிக்கான் பாரு. இங்க மனுசன் நாய நக்கி ரோட்டிலே கெடக்கான்.”

பலமுறை முயலவேண்டியிருந்தது. டயல் செய்ய முடியாமல் வியர்த்த விரல் வழுக்கியது.

“அல்லோ” என்றான் லாரன்ஸ்.

“லாரன்ஸு மக்கா, அம்புரோஸு பெருவட்டருக்க வீட்டிலே அருவாக் கச்சி கூட்டம் நடக்குதாம்லே… இப்ப விளிச்சானுக… வெட்டீருவேன்னு சொல்லுதானுக.”

“அய்யோ… நான் அந்த ஒயர வெட்டுகத பத்துபேரு பாத்தானே… அவனுக சொன்னா எனக்க தலையில்லாவே தரையிலே கெடக்கும்?”

“ஒண்ணுமில்லலே… நீ சர்க்காரு எம்ப்ளாயியாக்கும்… பேசாம போயி அத செரிபண்ணி குடுத்திரு.”

“அதுக்கு ஒயருக்கு என்ன செய்ய?”

“அங்க வேற யாராவது நம்பர் இருந்தா அந்த ஒயர வெட்டீருடே.”

“இங்க இனி இருக்குத நம்பரு பஞ்சாயத்தாப்பீஸாக்கும்… அங்கயாக்கும் நாளைக்கு ஓட்டுப்பெட்டி வைக்குதது.”

“அது நாளைக்குல்லா? இப்ப வெட்டு நீ.”

“சார்!”

“வெட்டுலே… இல்லேன்னா உன்னைய அவனுக வெட்டுவானுக. பிறவு தலையில்லாம இங்க ஏறி வராதே.”

லாரன்ஸ் “கட்டேலே போவ” என்றான் அவன் ஃபோனை அறைந்து வைத்தது செவியில் முட்டியது.

நன்றாக வியர்த்துவிட்டது. எழுந்துசென்று கூஜாவைத் தூக்கி தண்ணீர் குடித்தார்.

ஃபோன் அலறிக்கொண்டே இருந்தது. எடுத்தார். நாகர்கோயிலில் இருந்து சீனியர் டெக்னீஷியன் மகாதேவன் பேசினார்.

“ஆறுமுகம் அங்க என்ன செய்யுதீக? ரெஸிஸ்டென்ஸ் நெறைய காட்டுதே… ஏகப்பட்ட லூப்பு கெடக்கு போல. வெட்ஜ் பண்ணி வைங்க.”

“அதுக்கு எங்க நேரம்? இங்க அத்துல்லா அலையுதானுக?”

“அதச் சொன்னா மிசின் கேக்காது…. ஆஃப் ஆயிரும்… மொத்த சிஸ்டத்தையும் இளுத்து கிடத்தீரும் பாத்துக்கிடும்.”

ஆறுமுகம் உள்ளே சென்று பார்த்தார். டெலிஃபோன் எக்ஸேஞ்சுக்கே கிறுக்கு பிடித்ததுபோல் இருந்தது. மிகமிகச் சீரான ஒரு இயந்திரம் அது. அதன் ஓசையே ஒரு ராகம் போல இருக்கும். “லே இது அமைதியான ஒரு ஊரு போலயாக்கும். அமைதியான ஊரிலே ஒரு சங்கீதம் உண்டு பாத்துக்கோ” என்று ஓய்வுபெற்ற மாதவன் நாயர் சொல்வதுண்டு. ஆனால் அப்போது ஏகப்பட்ட சிவப்பு விளக்குகள் எரிந்தன. ஏகப்பட்ட எண்கள் கிரீச்சிட்டன.

பல எண்களில் கம்பிகளுக்குக் குறுக்காக மின்னிணைப்பு ஏற்பட்டால் டெலிஃபோன் எக்ஸேஞ்சின் பேட்டரி மின்சாரம் முழுக்க வீணாகும். மின்னெதிர்ப்பால் கருவிகள் சூடாகும். மொத்த எக்ஸேஞ்சே டவுன் ஆகிவிடக்கூடும். ஆகவே எண்களின் ரிலேக்களை ஆப்பு வைத்து விலக்கித் துண்டித்து வைக்கவேண்டும். ஆனால் அதற்கு அரைமணி நேரமாவது பொறுமையாக உழைக்கவேண்டும்.

வெளியே ஃபோன் அடித்துக்கொண்டே இருந்தது. மாறிமாறி இரட்டைப்பிள்ளைகள் அழுவதுபோல.

முருகன் “ஆ ஆ ஆ ஆளு வ்வ வ்வ வந்திருக்கு” என்றான்.

ஆறுமுகம் வெளியே சென்றார். கதர் ஆடையுடன் ஒரு கூட்டம் நின்றிருந்தது. எல்லாமே தொப்பைகள்.

“இவன் ஆருவே? ஒருமாதிரி சிரிக்கான் நம்மளப்பாத்து?”

“அவன் ஒரு மாதிரியாக்கும்…” என்றார் ஆறுமுகம். “இங்க ஓட்டு இல்ல. இது சர்க்காராப்பீஸாக்கும்.”

“நக்கலா வே உமக்கு?” என்றார் மீசைக்காரர் “வே, அம்பிடு லைனும் அந்து கெடக்கு… எங்க மேலிடத்திலே இருந்து நேரிலே ஆளு விட்டிருக்கு.”

“இப்ப செரி பண்ணுதோம்.”

“செரி பண்ணல்லேன்னா என்ன செய்யுகதுன்னு எங்களுக்க தெரியும்.”

“தலைவிளும்!” என்று ஒரு கீச்சுக்குரல்காரன் கத்தினான், அவன் தான் இருப்பதிலேயே பெரிய தொப்பை.

“லே சும்மாரு” என மீசைக்காரர் அதட்டிவிட்டு “நாங்கதான் எப்டியும் சர்காரு… எடதும் வலதும் ஒண்ணும் இல்ல… உம்மைய அளிச்சிருவோம்… புரியுதா?”

“புரியுது.”

“பாத்துக்கிடும்.”

அவர்கள் சென்றதும் மீண்டும் சிலநிமிடங்கள் செயலற்றிருந்தார். போன் அடித்துக்கொண்டே இருந்தது.

“இப்ப என்ன தாலியறுக்கச் சொல்லுதிய?” என்று சீறினார்.

“அங்க வெட்ஜ் வைக்குதியளா இல்லியா? இங்க ரெசிஸ்டென்ஸ் கூடிட்டிருக்கு” என்று மகாதேவன் கூச்சலிட்டார்.

“வைக்கேன் வைக்கேன்… அய்யா வைக்கேன் அய்யா.”

“என்னமாம் நாசமாப் போங்க” என்று மகாதேவன் போனை வைத்தார்.

“முருகா!” என்றார் ஆறுமுகம், முருகன் இளித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

“முருகன், லே மக்கா. இங்க வா. மாமன் ஒரு சோலி சொல்லித்தாறேன்… அத மட்டும் செய்லே… செய்வியாலே? உனக்கு நான் மிட்டாயி வாங்கி தருவேன்.”

“ச்ச் ச்ச் ச்ச் செய்வேன்.”

“வா வா வா” என அழைத்து சென்றார். ஒரு இஞ்ச் நீளமான சிறிய மர ஆப்புகள் ஒரு காகிதப்பெட்டி நிறைய இருந்தன. “இஞ்ச பாத்தியா, இதாக்கும் வெட்ஜ். வெட்ஜுன்னாக்க ஆப்பு… ஆப்பு… இந்த போர்டை பாரு… இந்தா இப்டி சிவப்பு லைட்டு எங்கல்லாம் எரியுதோ அதைப்பாரு… பாத்தியா.”

“ப்ப் ப்ப் பாத்தேன்.”

“அந்த லைட்டுக்க நேர் கீள, இந்தா இந்த ரெண்டுக்கும் நடுவிலே, இந்த ஆப்பைச் செருகிடு… அவ்ளவுதான். எங்கெல்லாம் செவப்பு எரியுதோ அங்கல்லாம் செருகு… என்னலே மக்கா?”

“ச்ச் ச்ச் செரி.”

அவனிடம் அட்டைப்பெட்டியை கொடுத்துவிட்டு வந்து ஃபோனை எடுத்தார். எட்டு எண்கள் பழுது. இன்னொரு ஃபோனில் சுப்ரமணியன் “சார், இங்க ஒரு பிரச்சினை” என்றான்.

“பிரச்சினையை நீங்க வச்சு தாலியறுங்கலே” என்று ஆறுமுகம் ஃபோனை ஓங்கி அறைந்தார்.

டி.இ கூப்பிட்டார் “ஆறுமுகம் நீ எந்த நெலையிலே இருக்கேன்னு தெரியும்… இங்கபாரு, ஒரு சின்ன வேலை. இல்ல பெரிய வேலை. இதை நீயே செய்யணும் கேட்டியா? பிளாக் டெவலெப்மெண்ட் ஆபீஸ்லே ஃபோனிலே ஒரு நாய்ஸ்…. நீ போயி என்னன்னு பாரு.”

“நானா?”

“போடே… போயி பாத்தா நீயே வந்தேன்னு ஒரு நெறைவு அவனுகளுக்கு இருக்கும்.”

“சார் அது அவனுக பலபேரு ஒரே லைனிலே ஃபோனை கனெக்ட் பண்ணுறதனாலே வாறது. இல்லீகல் இன்ஸ்டுருமெண்டு வச்சிருக்கானுக.”

“அதாக்கும் நான் சொல்றது, நீ போனதும் எல்லாவனும் களட்டீருவான். லைன் செரியாயிடும். பாத்து செரியாச்சுன்னு சொல்லிட்டு வந்திரு… அவனுக மெட்ராஸுக்கு கம்ப்ளெயிண்ட் பண்ணிப்போட்டானுக, பாத்துக்க.”

“சார்.”

“டேய் பிளீஸ்டே.”

“செரி.”

“கோவிச்சுகிடாதே.”

“இல்ல.”

ஆறுமுகம் போனை வைத்தபின் சற்றுநேரம் அமைதியாக இருந்தார். பின்பு டி.வி.எஸ்-50 ஐ எடுத்துக்கொண்டு கிளம்பினார்.

செக்யூரிட்டி ஆரோக்கியம் “சார், மணிகண்டன் சாயக்கடையிலே அடிபிடி… ஒருத்தனுக்க மண்டைய உடைச்சிட்டானுக…”

“ஆரு?”

“உடைச்சவன் நாராயணன்… இடும்பன் நாராயணன்… மண்டை உடைஞ்சது யாரோ கீரைவிக்கப் போனவனுக்காக்கும்… “

“அவன் எதுக்குலே உள்ள வந்தான்?”

“ஆருக்கு தெரியும்… அடிபிடி தொடங்கினா பின்ன ஆருண்ணு பாக்கமுடியுமா? பக்கத்திலே நிக்கவன அடிக்கவேண்டியதுதான்.”

ஆறுமுகம் பஸ் ஸ்டாண்ட் வழியாக பிடிஓ ஆபீஸ் போனார். செல்லும் வழியிலேயே ஜங்ஷனில் போஸ்டில் ஏறி இணைப்பு இருக்கிறதா என்று பார்த்தார். இருந்தது. ஆனால் ஆபீஸில் இணைப்புகள் இரைச்சலிட்டன. ஒவ்வொரு ஒயராகத் தேடினார். நடுவே பிடிஓ வந்து “சீக்கிரம் வே” என்றார்.

“செய்யுதேன்லா” என்றார்.

அவர் சென்றதும் அவருடைய பெர்சனல் கிளார்க் “வே சீக்கிரம் வே” என்றார்.

“இந்நா செய்யுதேன்ல?”

அடுத்து பிடிஓவின் ஆர்டர்லி வந்து “என்னவே செய்யுதீரு? பிடிஓ அங்க சத்தம்போடுதாரு” என்றான்.

ஆறுமுகம் மொத்த டூல்பாக்ஸையும் எடுத்து அவன் மண்டையை அறைந்தார். “தாயோளி உன்னைய வெட்டிட்டு நானும் சாவுதேன்ல” என்று கூவியபடி அவனை உதைத்தார்.

அவன் உருண்டு எழுந்து அலறியபடி வெளியே ஓட ஸ்பானரை எடுத்தபடி அவனை துரத்தினார். பி.டி.ஓ அலுவலக ஊழியர்கள் அவரைப் பிடித்துக் கொண்டார்கள்.

“வே என்னது இது? போலீஸு கேசாயிரும்… இது சர்க்கார் ஆப்பீஸாக்கும்.”

“நான் சாவுதேன்.. இவனை கொன்னுட்டு நான் சாவுதேன்… இவன் ஆரு? என்னை திட்ட இவன் ஆரு?”

“டேய் நீ எதுக்குடே அவருகிட்ட பேசினே?”

அழுகையுடன் “நான் சும்மா கேட்டேன்” என்றான் ஆர்டர்லி.

“உனக்க வேலை என்னலே? நீ ஏன் அங்க போனே? உள்ள போ… வாங்கின அடி உனக்கு போறாது” என்றார் ஹெட்கிளார்க் நமச்சிவாயம். “ஆறுமுகம் நீரு இரியும்… வெள்ளம் குடியும்… லே ஒரு சாயை கொண்டு வரச்சொல்லு.”

“சாயை வாங்க ஆளில்லல்லா?” என்றார் கிளார்க்.

“அந்த ஆர்டர்லியை விளி… அவனே வாங்கிட்டு வரட்டு.”

“வேண்டாம், அவன் துப்பி கொண்டாந்திருவான்” என்றார் ஆறுமுகம்.

“செரி வேண்டாம்… நீரு அடங்கும்.”

அவர் வியர்வை ஆறியபின்பு எழுந்து மீண்டும் வேலையைத் தொடங்கினார். “அங்க டெலிஃபோன் எக்ஸேஞ்ச் கிறுக்குபிடிச்சு கெடக்கு… இந்தாலே இவன்.”

“இந்த ஆபீஸு அதைவிட கிறுக்கு பிடிச்சு கெடக்குவே” என்றார் ஹெட்கிளார்க். “பத்துவருசம் பளைய ஃபைலுகளாக்கும் கையிலே கிட்டிட்டு இருக்கு….”

வேலை முடிய இரண்டு மணிநேரமாகியது. பிடிஓ அறைக்குள் சென்று “சார் பாத்தாச்சு… ஒரு எக்ஸ்டென்ஷனுக்கு மேலே லோடு தாங்காது பாத்துக்கிடுங்க” என்றார்.

“சொல்லுதேன்… ஆனா இங்க எல்லாவனுக்கும் மேஜைமேலே ஃபோனு வேணும்… “

அவர் திரும்பி வரும்போது பஸ் ஸ்டாண்ட் அருகே கூட்டம். அவர் டிவிஎஸ்-50 ஐ நிறுத்தி “என்னவாக்கும் சங்கதி?” என்று விசாரித்தார்.

“அம்புரோஸு பெருவட்டருக்க மகன் ஸ்டீபன் பத்து அருவாக் கச்சிக்காரனுகள விளிச்சுகிட்டு வந்து காங்கிரஸ்காரனை அடிச்சுப்போட்டான்… நல்ல அடியாக்கும். ரெத்தம் உண்டு.”

“என்னத்துக்கு அடிச்சான்?”

“இவனுக போயி அவனுகளுக்க போன அத்திருக்கானுக.”

ஆறுமுகம் ஒன்றும் சொல்லாமல் கிளம்பினார். மீண்டும் டெலிஃபோன் எக்ஸேஞ்ச் வந்தார். முக்காலியில் முருகன் புன்னகையுடன் அமர்ந்திருந்தான்.

“முருகன், மக்கா மாமனுக்கு ஒரு சாயை வாங்கிட்டுவாலே.”

அவன் வெளியே போனான். அவர் நாற்காலியில் அமர்ந்து காலரை இழுத்து விட்டுக்கொண்டு மின்விசிறிக் காற்றில் இளைப்பாறினார். அப்போதுதான் எந்த ஃபோனும் அழைக்கவில்லை என்று தெரிந்தது.

அதெப்படி அத்தனை பேரும் ஒட்டுமொத்தமாகத் திருந்திவிட்டான்களா?

செக்யூரிட்டியும் முருகனும் வந்தனர். செக்யூரிட்டி ஆரோக்கியம் “சார், மணிகண்டன் கடைய மூடியாச்சு. அவனை போலீஸு கொண்டு போயிருக்கு.”

“எதுக்கு?”

“ஒருத்தனுக்க மண்டை உடைஞ்சிருக்குல்லா? அவன் மக்கள் ஜனதாக் கச்சியாக்கும்.”

“அப்டி ஒரு கச்சி இருக்கோ?”

“நாசமா போவும்…” என்றார் செக்யூரிட்டி. “ஊளலை வேரறுப்போம்னுல்லா சொல்லுகான்?”

“அப்ப வேர கண்டுபிடிச்சிட்டானுக. பதியம் போட்டுட்டுதானே அறுப்பானுக” என்றார் ஆறுமுகம். “ஒரு சாயைக்கு என்னடே வளி?”

“நான் சைக்கிளிலே போயி வாங்கிட்டு வாறேன். முருகன் அங்க வாசலிலே இருக்கட்டு.”

அவர்கள் சென்றார்கள். அவர் கண்களை மூடிக்கொண்டார். ஏன் ஒரு ஃபோனும் அழைக்கவில்லை. லாரன்ஸ் என்ன ஆனான்?

ஃபோனை எடுத்துப் பார்த்தார். டயல்டோன் இல்லை. தட்டிப்பார்த்த பின் இன்னொரு ஃபோனை எடுத்துப் பார்த்தார். அதிலும் டயல்டோன் இல்லை. ஆச்சரியமாக இருந்தது.

எழுந்துசென்று டெஸ்ட் லைனைப் பார்த்தார். அதிலும் டயல்டோன் இல்லை. ஓடிப்போய் டெலிஃபோன் எக்ஸேஞ்ச்சை பார்த்தார். அது ஒளியும் ஓசையும் இல்லாமல் ஆழ்ந்த அமைதியில் இருந்தது. மொத்தமாக டவுன்!

ஆறுமுகம் தலையில் கையை வைத்துக்கொண்டார். கண்ணுக்குள் ரத்தம் சுழன்றது. மிக மெல்ல மீண்டார். நேராகச் சென்று நாகர்கோயில் மெயினைப் பார்த்தார். அது வேலை செய்துகொண்டிருந்தது.

அதில் இணைப்பு செலுத்தி அழைத்தார். மறுமுனையில் மகாதேவன் கூச்சலிட்டார். “என்னவே செய்யுதீக? தெரியாம கேக்கேன், என்ன அங்க செய்யுதீக? எல்லா லைனும் போச்சா?”

“சார், டெலிஃபோன் எக்ஸேஞ்ச் மொத்தமா போச்சு.”

“வே, என்னவே சொல்லுதீரு?”

“சார், வர்க் ஆவல்ல சார்.”

“அய்யோ… நாளைக்கு எலக்சன் வே.”

“நான் என்ன செய்ய? சாவணுமா?” என்று ஆறுமுகம் கூச்சலிட்டார்.

“முதல்ல போயி பேட்டரிய பாரும்… அது டிரெயின் ஆயிருக்கும்”

ஆறுமுகம் பேட்டரி அறைக்குப் போய்ப் பார்த்தார். பாதி சார்ஜ் இருந்தது. இருந்தாலும் முழு சார்ஜ் போட்டுவிட்டு வந்து லைன்களை சோதனை செய்தார். லைன்களில் இணைப்பு இருந்தது.

லாரன்ஸ் “சார் என்னச்சு? ஒண்ணுமே கிட்டல்ல?” என்றான்.

“டவுன் ஆயிருக்குலே… என்னாண்ணு தெரியல்ல.”

அதற்குள் டீயுடன் செக்யூரிட்டி வந்தார். “என்னாச்சு?”

“டெலிஃபோன் எக்ஸேஞ்ச் ஃபெயிலு.”

“அய்யோ.”

“பாக்குதேன்” என்றார் ஆறுமுகம்.

டீ குடித்தபோது கொஞ்சம் ஆறுதலாக உணர்ந்தார். மகாதேவனை கூப்பிட்டார். அவர் கொஞ்சம் நிதானமாக இருந்தார். அது அவரையும் கொஞ்சம் நிதானப்படுத்தியது.

“இங்கபாருங்க, டென்ஷன் ஆகாதீங்க… எல்லா ஃப்யூசையும் செக்பண்ணுங்க… மொத்தம் நாப்பத்தெட்டு இருக்கு இல்ல?” என்றார் மகாதேவன்.

“ஆமா” என்றார் ஆறுமுகம்.

“ஒண்ணொண்ணா பாருங்க.”

நாற்பத்தெட்டு ஃப்யூஸுமே ஒழுங்காகத்தான் இருந்தன. இம்முறை அழைத்தபோது டிஇ இருந்தார். அவர் காட்டுக்கூச்சல் போட்டார்.

“எவனேலே நீ பழிவாங்குதே? நீ அழிஞ்சே… ஏல, இனி நீ அந்த ஆப்பீஸிலே வேலை பாக்கமாட்டே.”

“என்னைய கொல்லுங்க.. இல்ல வேணுமானா நான் இந்த டெலிபோன் ஆபீஸிலே தூங்கிச் சாவுதேன்.”

“என்னமாம் செய்லே… இல்ல ஒரு கயித்த வாங்கி இங்கிண அனுப்பு… நான் தூங்கிச்சாவுதேன்…”

“செரி.”

“வெளையாடுதியா.. எங்க லூப்புன்னு கண்டுபிடிடே.”

மகாதேவன் “இங்கபாருங்க. அப்ப இனி ஒரு காரணம்தான் இருக்கு. நம்பர்களிலே எதிலயோ கடுமையா லூப் ஆகுது… இல்லேன்னா இபி லைன் கிராஸ் ஆவுது… ஒவ்வொரு நம்பரா எடுத்து செக் பண்ணுங்க.”

“முந்நூறு நம்பரையுமா?”

“வேற வளி? கடைசியா ஃபால்ட் ஆன நம்பரை முதல்ல பாருங்க.”

நூறு நம்பர் முடிந்தபோது அந்தியாகிவிட்டிருந்தது. செக்யூரிட்டி வந்து “இந்த முருகன் பயல அனுப்பீரவா? அந்தியாவுதுல்ல?” என்றார்.

“செரி” என்றார்.

மேலும் நூறு எண்கள். லைனுக்குப் போனவர்கள் எல்லாம் திரும்பி வந்து ரிப்போர்ட் செய்தார்கள்.

“என்ன சார் ஆச்சு?” என்றான் மாதவன்.

“ஆ, எனக்க அம்மை தாலி அறுத்தா… போவியா? வெட்டீருவேன்… ஓடிரு.”

இரவான போது முந்நூறு எண்ணையும் சோதனை போட்டிருந்தார். எதிலும் மிகையான மின்சாரம் ஏதுமில்லை.

இரவு ஒன்பது மணிக்கு டி.இ கூப்பிட்டார். “ஆறுமுகம், கேக்கவேண்டிய எல்லாத்தையும் கேட்டாச்சுடே. எனக்க அம்மைக்கு, ஆயாவுக்கு, அவளுக்க அம்மைக்கு யாருக்கும் கற்பு இல்லேன்னு நிரூபிச்சிட்டானுக… இனி நாம என்ன செய்ய? பேசாம விட்டிரு… இனி ராத்திரி நாம ஒண்ணும் செய்யுகதுக்கில்லை. ஆனா நீ டெலிஃபோன் எக்ஸேஞ்ச்லே இரு… நாம வேலை பாத்தோம்னு காட்டணும் இல்ல.”

“செரி சார்.”

செக்யூரிட்டியை அனுப்பி இரண்டு பரோட்டா வாங்கி வரச்சொல்லி சாப்பிட்டார். தூக்கம் வரும் என்று தோன்றவில்லை. ஆனால் படுத்ததும் இருட்டான குகைக்குள் விழுந்ததுபோல தோன்றியது. அப்படியே தூங்கிவிட்டார்.

காலையில் எழுந்தபோது மழை பெய்து கொண்டிருப்பதைக் கண்டார். நீர் விழும் ஓசை குளுமையாக இருந்தது.

செக்யூரிட்டி “ராத்திரி நல்ல மளையாக்கும்” என்றான். “நல்லவேளை கரெண்டு போகல்ல.”

மணிகண்டன் கடையைத் திறப்பதைக் கண்டு குடையை எடுத்துக்கொண்டு ஓடிச்சென்று பெஞ்சில் அமர்ந்தார். “ஒரு சாய எடுடே.”

“பாலு கொதிக்கணும் பாத்துக்கிடுங்க.”

“செரி…”

இரண்டு போலீஸ்காரர்கள் மஃப்ளர் கட்டிக்கொண்டு ஒரே குடையில் உள்ளே வந்தனர். ஒருவரை ஆறுமுகம் அடையாளம் கண்டுகொண்டர். மீசை ராமன்.

“வே மீசே, நைட் டூட்டியாவே?” என்றார் ஆறுமுகம்.

“ஆமா, சங்சனிலே… எலக்சன்லா?” என்று அவர் அமர்ந்தார். “நீரு?”

“நமக்கு கடவுள் போட்ட டூட்டி… டெலிஃபோன் எக்ஸேஞ்ச் டவுனாப்போச்சு… என்னான்னு கண்டுபிடிக்க முடியல்ல.”

“இடி விளுந்திருக்குமோ?”

“விளலியே.”

மீசைராமன் “நல்லவேளை ஒரு மளை அடிச்சுது. வே, நேத்து மத்தியான்னம் கிடந்த கிடைக்கு ஊரிலே ஒண்ணுரெண்டு தலை உருளும்னாக்கும் நினைச்சோம்… மளை காப்பாத்திப்போட்டுது. ஊரு குளுந்து கெடக்கு… எலக்சனும் மரியாதையா நடந்திரும்னு நினைக்கேன்.”

மணிகண்டன் “போனும் செத்து கிடக்கு… இனி மனுசன் சமாதானமா சீவிக்கலாமே” என்றான்.

மீசை ராமன் முந்தையநாள் அந்திவரை நடந்த அடிதடிகளின் பட்டியலை சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு கிழவிக்கும் அடி விழுந்திருந்தது.

“அவ எதுக்குவே அடிவாங்கினா?”

“இந்திராகாந்திய திட்டின கம்யூனிஸ்டுகாரன் மேலே வெத்திலய துப்பிப்போட்டா.”

“செய்வாளுக… இந்த காதுவடிச்ச கிளவிக முளுக்க இந்திராகாந்திக்க ஆளுகளாக்கும்.”

மணிகண்டன் “நேத்து ஏவாரம் போச்சு… போலீஸ் ஸ்டேஷன்லே நான் என்னமோ கொலைக்குத்தவாளி மாதிரி கேள்வி கேக்குதாக…. நான் என்னத்த கண்டேன். பேசினவன் ஒருத்தன். சண்டை போட்டவன் வேற சிலபேரு. கடைசியில் அடிச்சவனும் அடிபட்டவனும் ஒரு சம்பந்தமும் இல்லாத வேற சிலபேரு… சண்டை போட்டவனுக்கு என்ன சண்டையின்னு தெரியாது. இனியிப்ப மேலே இருக்குத தெய்வத்துக்கும் இதெல்லாம் என்னான்னு தெரியுமோ என்னமோ.”

விடிந்ததும் ஆறுமுகம் டெலிஃபோன் எக்ஸேஞ்ச்லேயே பல்தேய்த்து குளித்தார். பழைய சட்டையையும் பாண்டையும் அணிந்துகொண்டார். என்ன செய்வதென்று தெரியவில்லை. டெஸ்ட் எக்யுப்மெண்டுகளுடன் நாகர்கோயிலில் இருந்து ஆள்வந்தால்தான் இனி வேலை நடக்கும்.

பத்து மணிக்கு அவர் டீஇயை கூப்பிட்டார். “டேய் அதுக்கு நான் கேக்கவேண்டிய வார்த்தையை எல்லாம் கேட்டாச்சு. இனி அதிலே மெனக்கெட எனக்கு நேரமில்லை. மத்த எடத்திலே எல்லாம் ஒளுங்கா போயிட்டிருக்கு… எலக்சன் நடக்கட்டும்… நீரு சும்மா இரும்.”

“எலக்சனுக்கு ஃபோனு வேணுமே?”

“எலக்சனுக்கு பணம் மட்டும்போரும்… வேற ஒண்ணும் வேண்டாம். புரியுதா?”

“இப்ப என்ன செய்ய?”

“எல்லாவனும் ஆடி அடங்கிட்டானுக. இப்ப வேற வழிகளை கண்டுபிடிச்சாச்சு… போலீஸுக்கு வயர்லெஸ் இருக்கு. பிடிஓ அதிலே பேசிக்கிடுவாரு… ஒண்ணும் பிரச்சினை இல்லை. அங்கிண மழை உண்டுமா?”

“ஆமா, பெய்யுது.”

“பெய்யட்டுவே… நாயிங்க மண்டை குளிரட்டு.”

ஆறுமுகம் மணிகண்டனின் கடைக்குச் சென்று தோசை தின்றுவந்தார். அங்கே எல்லா முகங்களும் சிரிப்புடன் இருந்தன.

“என்னவே எல்லாவனும் முருகன் மாதிரி ஆயிட்டானுக?”

“மளைல்லா அண்ணாச்சி? சித்திரை மாச மளைன்னா ஒரு ஐசரியமில்லா?”

“பத்துநாளு இனி வாளைக்கு வெள்ளம் கோரவேண்டாம்” என்றான் கோரன்.

“மாடு கடிக்க புல்லும் வரும்லா?” என்றார் ஞானமுத்து.

“எலக்சன் எப்டி போவுது?”

“லைனிலே நின்னு ஓட்டு போடுதானுவ. கிளவிகள் ஓட்டுபோட எறங்கிட்டாளுகள்னா நாடு நல்லாருக்குண்ணுல்லா அண்ணாச்சி அதுக்க அர்த்தம்?”

“கிளவிக இந்திராகாந்திய ஏத்தி இருத்திப்போடுவாளுக.”

ஆறுமுகம் திரும்ப டெலிஃபோன் எக்ஸேஞ்ச் வந்தார். அங்கே முருகன் வந்திருந்தான். புன்னகையுடன் இருந்தான்.

“ஏம்லே மக்கா, காலம்பற என்ன தின்னே?”

“த் த் த் த்தோசை.”

“விக்கி விக்கி தின்னிருக்கே” என்றபடி அமர்ந்து தந்திபேப்பரை வாசித்தார். அறைகூவல்கள். எதிர் அறைகூவல்கள். வஞ்சினங்கள். கண்டனங்கள்.

எழுந்து கொட்டாவி விட்டபடி டெலிஃபோன் எக்ஸேஞ்ச் அறைக்குள் சென்று பார்த்தார். ஓசையே இல்லாமல் ஆழமான அமைதியில் இருந்தது டெலிஃபோன் எக்ஸேஞ்ச்.

“என்னா பேச்சு ராப்பகலா? இப்பம் என்ன, வாயடைஞ்சு போச்சோ?” என்றார் ஆறுமுகம்.

சட்டென்று அவர் அந்த வெட்ஜ்களைப் பார்த்தார். திகைப்புடன் அருகே சென்று பார்த்தார். வரிசையாக எல்லா எண்களிலும் ஆப்புகள் செருகப்பட்டிருந்தன. எல்லா எண்களிலுமா? ஆமாம், முந்நூற்றி எட்டு எண்களிலும்.

சற்றுநேரம் அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. பின்னர் அடக்கமுடியாமல் சிரிப்பு வந்தது. முதல் சிரிப்பொலி வெடித்ததுமே அவர் சிரிக்க ஆரம்பித்தார். சிரித்துக்கொண்டே இருந்தார். கண்களில் நீர் விழுந்தது. வயிற்றைப் பிடித்துக் கொண்டு முக்காலியில் அமர்ந்துவிட்டார்.

“மக்கா முருகா, இங்க வாலே” என்றார்.

முருகன் வந்து புன்னகை மலர்ந்து நின்றான்.

“நீயாலே இந்த ஆப்பையெல்லாம் வச்சே?”

“ஆமா, ம்ம் ம்ம் முரிகின்… முரிகின் வச்ச ஆப்பு.”

“எப்டி வச்சே? சிவப்பு லைட்ட பாத்துத்தானே வச்சே?”

“ம்ம் ம்ம் ம்ம் முரிகின்… லைட்டு ப்ப் ப்ப் பாத்து வச்ச ஆ ஆ ஆப்பு!”

“தெய்வமே!” என்றார் ஆறுமுகம் “நீதாம்லே அந்த கோரோயில் முருகன். கண்கண்ட தெய்வம்லே நீ!”

டீஇயை கூப்பிட்டபோதும் அவர் சிரித்துக் கொண்டிருந்தார். “சார், இங்க ஒரு சம்பவம் நடந்துபோச்சு” என்றார்.

எல்லாவற்றையும் சொல்லி முடிப்பதற்குள் டிஇ சிரிக்க ஆரம்பித்தார். அப்பால் மகாதேவன் சிரிப்பது தெரிந்தது.

“அவன் எல்லா லைட்டுக்கும் ஆப்ப செருகிட்டான் சார்.. பச்சை செவப்பு மஞ்சள் எல்லாத்துக்கும்” என்றார் ஆறுமுகம்.

“எல்லாம் ஒண்ணுதான் வே, போவப்போவ தெரிஞ்சுகிடுவே” என்று பக்கத்தில் இருந்த மகாதேவன் ஃபோனில் கூவினார்.

ஆறுமுகம் சிரித்தார். கண்களில் இருந்து நீர் வழிந்தது. கையால் துடைத்துக்கொண்டார்.

“ஆறுமுகம் நம்ம செல்லக்குட்டிப் பயலுக்கு ஒரு நல்ல சாயையும் வடையும் வாங்கிக்குடுடே… இந்தா எக்ஸேஞ்சே சிரிச்சிட்டிருக்கு அவனாலே “ என்றார் டி.இ.

மகாதேவன் ஃபோனை வாங்கி சிரித்தபடியே “ஆறுமுகம், பய சாதாரணமான ஆளு இல்ல கேட்டியா? அவனுக்கு என்னமோ தோணியிருக்கு பாத்தியா?” என்றார். “உள்ளதைச் சொல்லணுமானா எனக்கும் நேத்து அப்டி செய்யணும்னுதான்வே ஆசை.”

ஆறுமுகம் “செரி சார், இப்ப என்ன செய்ய?”

“வெட்ஜுகளை எடுத்து விடு… வால்டேஜ் ஃபெயிலியர்னு மினிட்லே எளுது… வேற என்ன செய்ய?”

ஆறுமுகம் ஃபோனை வைத்துவிட்டு பார்த்தார். முருகன் முகப்பில் அவனுடைய குட்டி முக்காலியில் சிரிப்பு மலர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தான்.

***

முந்தைய கட்டுரைஆயிரம் ஊற்றுக்கள், ஆடகம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைபொற்கொன்றை!