‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–31

பகுதி நான்கு : அலைமீள்கை – 14

நான் சிந்துவின் வழியாக வடபுலம் சென்று இமையமலையின் அடிவாரத்தில் பருஷ்னி நிகர்நிலத்தை தொடும் இடத்தில் அமைந்திருந்த காட்டில் கிருதவர்மன் தங்கியிருந்த குருநிலைக்கு ஏழு நாட்களுக்குப் பின் சென்றுசேர்ந்தேன். அங்கே இருந்த முனிவர்கள் எவரென்று கிளம்பும்போது நான் அறிந்திருக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்த செய்திகள் அனைத்தும் குழப்பமாகவே இருந்தன. அது விஸ்வாமித்ரரின் குருநிலை என்று அங்கு சென்ற பின்னரே அறிந்தேன். விஸ்வாமித்ரர் குறித்து துவாரகையில் அச்சமும் குழப்பங்களும் இருந்தன. அவர் ஷத்ரியர்களின் தலைமுனிவர், அந்தணர்களுக்கு எதிரானவர். யாதவர் முதலியவர்களுக்கும் உகந்தவர் அல்ல.

ஆனால் அங்கே சென்ற என்னை அவர்கள் வரவேற்று அமரச்செய்தனர். அங்கிருந்த விஸ்வாமித்ரரின் முதன்மைக்குடிலுக்குச் சென்று அவரை சந்தித்தேன். அவர் சடைமகுடமும் நீண்ட தாடியும் மணிக்குண்டலங்கள் ஒளிரும் காதுகளும் கொண்டிருந்தார். அவர்களுக்கு படைக்கலம் ஏந்தும் நெறி உண்டு. அந்தக் குடிலுக்குள் சுவர்களில் வாள்களும் வேல்களும் மழுக்களும் விற்களும் தொங்கின. அவர் புலித்தோல் விரிக்கப்பட்ட பீடத்தில் அமர்ந்திருந்தார். புலித்தோல் ஆடை அணிந்திருந்தார். நான் அவரை வணங்கி கிருதவர்மனை சந்திக்கும்பொருட்டு வந்திருப்பதாக சொன்னேன்.

அவர் எவ்வுணர்வையும் காட்டவில்லை. “யாதவரே, ஓராண்டுக்கு முன்பு இங்கு வந்தவர் கிருதவர்மன் என நான் அறிந்திருக்கவில்லை. வெந்து உருகிய உடலுடன் வந்துநின்று இங்கே தங்கவிழைவதாகச் சொன்னார். இது குருநிலை, இங்கு நீங்கள் தங்குவதற்கான தகுதி என்ன என்று கேட்டேன். நான் மகாருத்ரனுக்கு அணுக்கமானவன், அதை நீங்கள் உசாவி அறிந்துகொள்ளலாம் என்றார். எனில் இங்கிருக்கும் மகாருத்ரரின் ஆலயத்தின் தீப்பந்தத்தை தொடுக என்றேன். மகாருத்ர உபாசனை கொண்டவர்களின் வெறுங்கையில் பந்தத்தின் தழல் எரியும். அவர் அந்தத் தழலை தன் கையில் நீர் என அள்ளி எடுத்தார். மலரிதழ் என கைகளில் நிறுத்திக் காட்டினார். மகாருத்ரரே, இங்கு தங்குக என்று அழைத்தோம்.”

“அவருக்கு தனிக்குடில் வேண்டும் என்றும், எந்த மானுடரும் அவரை காணலாகாது என்றும் சொன்னார். ஆகவே இங்குள்ள புறங்காட்டில் ஓடையருகே சிறுகுடில் ஒன்றை அவருக்கு அமைத்துக்கொடுத்தோம். அங்கு சென்றவர் இன்றுவரை தன்னை வெளிக்காட்டவில்லை. அவருக்கான உணவு நாளுக்கு ஒருமுறை அந்த ஓடைக்கரையில் கொண்டுசென்று வைக்கப்படுகிறது. அதை வைக்கும் இளைய மாணவர்கூட அவரை பார்த்ததில்லை. சில நாட்களுக்கு முன்புதான் துவாரகையில் இருந்து வந்த ஓர் ஒற்றனிடமிருந்து என் மாணவர்கள் அவர் கிருதவர்மன் என்று அறிந்தனர். என்னிடம் அவர்கள் அதை சொன்னபோது நான் அடையாளங்களைக் கொண்டு அதை உறுதிசெய்துகொண்டேன். அவர் உருத்திரவழி தேர்ந்தவர் என அறியேன்” என்றார்.

“ஆம், அவரும் அவர் நண்பரும் ஆசிரியருமான அஸ்வத்தாமனும் மகாருத்ர உபாசனையை மேற்கொண்டவர்கள் என்று நான் கேட்டிருக்கிறேன். அவர்களுக்கு எரிவிழி அண்ணல் எழுந்த குரலுக்கு அணைவார் என்று சூதர்கள் சொல்லி அறிந்திருக்கிறேன்” என்று நான் சொன்னேன். “குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் துரோணரின் மைந்தர் மகாருத்ரனாகவே எழுந்தார். அவரை வெல்ல அர்ஜுனனால் இயலவில்லை. ஏழுநிலை எரி எழுந்து சூழ்ந்த பின்னரும் கிருதவர்மனை அழிக்க முடியவில்லை. அவருள் எரிந்த ருத்ரனின் அனல் அனலுக்கு அனல்நின்று அவரைக் காத்தது என்கிறார்கள்” என்றேன்.

“அவரை நாங்கள் சந்திப்பதில்லை. அவர் எங்களிடம் கோரியது அது. ஆகவே அவரை நீர் சந்திக்க எந்த ஒருக்கத்தையும் நாங்கள் செய்ய முடியாது. நீர் உமது விழைவுப்படி சென்று அவரை சந்திக்க முடியுமென்றால் சந்திக்கலாம்” என்றார் விஸ்வாமித்ரர். “ஆனால் கருதுக, சிவருத்ர நோன்பு கொண்டவர்கள் முக்கண் திறக்கும் ஆற்றல் கொண்டவர்கள்! முனிந்தால் அழித்து நீறாக்க அவர்களால் இயலும்.” நான் “நான் அவர் குடியில் பிறந்தவன். அவருடைய குருதி. அதை நம்பி அவர் முன் செல்கிறேன்” என்றேன். “அன்றி அவரால் அழிக்கப்படுவேன் என்றால் அதை என் நல்லூழ் என்றே கருதுவேன்.” விஸ்வாமித்ரர் “ஆகுக!” என என்னை வாழ்த்தி ஒப்புதல் அளித்தார்.

நான் புறக்காட்டுக்குள் நுழைந்தேன். என்னை அழைத்துச்சென்ற மாணவன் அந்த ஓடைக்கரை வந்ததும் நின்று “நீங்களே இனிமேல் செல்லவேண்டியதுதான், யாதவரே” என்றான். அவனை “செல்க!” என்று அனுப்பிவிட்டு நான் ஓடையை கடந்தேன். நான் அச்சம்கொள்ளவில்லை. ஏன் என்று இப்போது எண்ணினாலும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. குட்டி நாய் பெரிய நாயை நம்பிக்கையுடன் அணுகுவதுபோல அவரை நோக்கி சென்றேன். அவர் பகல் முழுக்க தன் குடிலின் இருளுக்குள் இருப்பது வழக்கம். இரவில்தான் வெளியே சென்று காட்டில் உலாவினார். ஆகவே நான் குடில்நோக்கி கூப்பிய கைகளுடன் மெல்லடி எடுத்துவைத்து சென்றேன்.

குடில்முற்றத்தை நான் அடைந்தபோது “அங்கேயே நில்” என்று குடிலுக்குள்ளிருந்து அவர் குரல் கொடுத்தார். என்னை அவர் தொலைவிலேயே பார்த்துவிட்டிருந்தார், நான் யாதவன் என்றும் அறிந்துவிட்டார் என்று தோன்றியது. நான் குடிலுக்கு வெளியே முற்றத்தில் நின்றேன். அரையிருள் படிந்த குடிலுக்குள் அமர்ந்து கதவின் விளிம்பினூடாக என்னை நோக்கியபடி அவர் “எதன் பொருட்டு வந்தாய்?” என்றார். நான் யார் என்று கேட்கவில்லை. எனில் நான் எவர் என அவர் அறிவார். அது எனக்கு நம்பிக்கை அளித்தது. தலைதாழ்த்தி வணங்கி “அருள்க, மூதாதையே!” என்றேன். அவர் உறுமலோசை எழுப்பினார்.

நான் அவர் முகத்தை பார்க்க முயன்றேன். அது என் பார்வை வட்டத்திற்கு அப்பால் இருந்தது. இருளில் ஒரு மெல்லிய நிழல் தீற்றலென தெரிந்தது அவர் முகத்தின் ஒரு கீற்று. ஒரு விழி. அந்தத் துளிக் காட்சியிலிருந்து ஒரு முழு வடிவை உருவாக்கிக்கொள்ள முயன்றேன். எவ்வண்ணமேனும் மானுடரின் உடல் போன்ற ஒன்றை அங்கு உருவாக்கிக்கொள்ளாமல் என்னால் உரையாட முடியாது. நான் நெடுநாட்களுக்கு முன் அவரை பார்த்திருந்தேன். அன்று உளம்தெளியாச் சிறுவன். அதன்பின் சூதர்கள் அவரைப்பற்றி பாடியதைத்தான் கேட்டிருக்கிறேன். பதினெட்டு வீரகதைப் பாடல்களின் பாட்டுடைத்தலைவன் அவரே. துவாரகையில் அவரைப்பற்றிய பாடல்கள் விருஷ்ணிகளின் அவைகளில் இருந்து விலக்கப்படவில்லை. யாதவப் பெருவீரர் எழுவர் எனும்போது அவரும் எப்போதுமே சொல்லப்பட்டார்.

அப்பாடல்களில் அவருடைய தோற்றம் பற்றி அவர்கள் ஒரு சொல்லுருவை அளித்திருந்தார்கள். ஆனால் அது சூதர்கள் அனைத்து வீரர்களுக்கும் அளிக்கும் ஒரு பொதுச்சித்திரம் மட்டுமே. உயர்ந்த தோள்கள், விரிந்த நெஞ்சு, நீண்ட கைகள், ஒளிமிக்க கண்கள். மூத்த யானை என தலை உயர்ந்தவர். அச்சொற்களால் எப்பயனும் இல்லை. ஏனெனில் அவை மீள மீளச் சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வெறும் சொற்களென மாறிவிட்டிருந்தன. அவற்றைக்கொண்டு கற்பனையை எழுப்பியபோது அர்ஜுனனும், கர்ணனும், அபிமன்யுவுமெல்லாம்தான் தோன்றினார்கள். அவர்கள் அல்ல இவர் என்று அறிந்திருந்ததனால் அந்த உளச்சித்திரம் உடனே அழிந்தது. நான் அவருக்கு ஒரு முகம் கொடுக்க முயன்றேன். ஆனால் அப்போது எழுந்த முகம் அர்ஜுனனும் கர்ணனும் அபிமன்யுவும் கலந்து உருவான ஒன்றே என்று கண்டேன்.

அப்போது எனக்கு தேவையாக இருந்தது சற்றேனும் கிருதவர்மன் என்று நான் எண்ணிக்கொள்ள வேண்டிய ஒரு முகம். நான் அவருடைய முந்தைய பழைய முகத்தை நினைவுகூர முயன்றேன். அது சற்றும் நினைவில் எழவில்லை. அப்போது நான் சிறுவனாக இருந்தேன். அவரை ஒரு தேரில் கட்டி தெருவினூடாக இழுத்து வந்ததை நான் பார்த்ததாகவே என்றும் உணர்ந்திருந்தேன். அவர் அடைந்த வஞ்சம் அவர் உரைத்த சூளுரை அனைத்தும் அருகிருந்து கண்டதுபோல. ஆனால் உண்மையில் நான் காணவில்லை. ஒரு மாளிகை முகப்பில் நின்று அந்தத் தேர் வருவதை நான் கண்டது உண்மை. அதில் அவர் முகம் தெளிந்ததும் உண்மை. ஆனால் அது அக்கணமே என்னுள்ளிருந்து மறைந்தும்விட்டது. பின்னர் சூதர்களின் பாடல்களினூடாக, வெவ்வேறு கதைகளினூடாக அது எனக்கு அளிக்கப்பட்டு என்னால் கற்பனையில் நிலைநிறுத்தப்பட்டது.

நான் அவரை எவ்வண்ணம் பார்ப்பது என்று எண்ணினேன். எங்கிருக்கிறார்? அவரை அந்த சிறுதீற்றலிலிருந்து எப்படி உருவாக்கிக்கொள்வது? இருண்ட சுனையின் கரிய நீருக்குள் அசையாமல் நின்றிருக்கும் ஒரு மீன்போல அவருடைய ஒரு கண் மட்டும் அங்கே தெரிந்துகொண்டிருந்தது. நான் அதை பார்க்க முயலும்தோறும் எனது சித்தம் மயங்கியது. அந்த அலைக்கழிவிலேயே அவரை சந்தித்தபோது எழுந்த அனைத்து ஊக்கத்தையும் இழந்தேன். அவரிடம் சொல்ல வேண்டிய சொற்கள் அனைத்தையும் மறந்தேன். “சொல்க, எதன் பொருட்டு என்னை பார்க்க வந்தாய்?” என்று அவர் என்னை கேட்டார். அந்த ஒற்றைவிழியிலிருந்து என் விழியை விலக்கினேன். சுவரில் படிந்திருந்த ஒரு விரிசலை நோக்கினேன். அதில் ஒரு முகம் எழுந்தது. திடுக்கிட வைப்பதுபோல. மெய்யாகவே அங்கு ஒருவர் தோன்றியதுபோல. மேலும் சில கணங்களில் அவ்வுரு நன்கு தெளிந்தது. கூரிய கண்கள் கொண்ட முனிவரின் உருவம் அது.

அது உருவழிந்த உரு கொண்டிருந்தாலும் தன் உணர்வெழுச்சியாலேயே மானுடத்தன்மையை திரட்டிக்கொண்டது. அதை என்னால் பார்க்க முடிந்தது. அதிலிருந்து என் நோக்கை விலக்க முயன்றேன். பின்னர் அவ்வண்ணம் ஒரு நோக்கு இருப்பது நன்று, அதனுடன் என்னால் உரையாட முடியும் என்று கண்டுகொண்டேன். “தங்களை நேரில் கண்டு துவாரகைக்கு அழைக்க வந்தேன், மூதாதையே” என்றேன். “நான் இளைய யாதவராகிய கிருஷ்ணனின் மைந்தன். சத்யபாமையில் பிறந்த எட்டாமவனாகிய பிரதிபானு. குருதிவழி உடன்பிறப்பின் மைந்தன் நான் என்பதனால் தங்கள் மைந்தன் என என்னை கொள்க! தங்கள் அந்தகக் குடிபிறந்த சத்யபாமையின் மைந்தன் என்பதனால் என்னை உங்கள் கொடிவழி எனக் கொள்க!” என்றேன்.

அவர் முகம் மாறுவதை கண்டேன். “துவாரகையை விட்டு நெடுநாட்களாகிறது” என்றபோது குரலும் மென்மையாகிவிட்டிருந்தது. “ஆம், தாங்கள் தங்களை துவாரகையின் முதன்மை எதிரியென அறிவித்துவிட்டுச் சென்றவர். துவாரகையை அழிப்பது தாங்கள் கொண்ட வஞ்சம் என்றும் அறிவேன். தாங்கள் என் தந்தையை தோல்வியுறச் செய்வதை வாழ்வின் இறுதி இலக்கெனக் கொண்டவர். இன்றும் அவ்விலக்கை உள்ளே வைத்திருப்பவர்” என்றேன். “ஆம், அது என் வாழ்வு” என்றார் . “இத்தருணத்தில் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள், தந்தை அங்கில்லை, நகரம் முற்றாக கைவிடப்பட்டிருக்கிறது, அவர் முன்னரே மும்முறை தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். தன் மூத்தவரால், தன் மைந்தரால், தன் குடியால். மீண்டும் அவரை நீங்கள் வெல்ல வேண்டியிருக்கும்” என்றேன்.

“ஆம், அவர் தன்னைத்தானே தோற்கடித்திருக்கிறார்” என்று கூறி மெல்ல நகைத்தார். “அவர் தன்னெதிரே அவர் நம்பிய அனைத்தும் வீழ்ந்து அழிவதை பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் இயற்றிய அனைத்திற்கும் ஈடென அவர் அளித்துக்கொண்டிருப்பது அது. அவ்வண்ணம் அளிக்காது எவரும் இங்கிருந்து செல்ல இயலாது. மண்ணில் மானுட வடிவென தெய்வம் எழுந்தாலும் அதுவே நெறி.” அவரது உள்ளம் என்ன என்பதை உணர்ந்துகொண்டேன். அந்தச் சிரிப்பில் இருந்தது சற்றும் குறையாத யாதவ வஞ்சம். “அரசே, தாங்கள் என்னுடன் துவாரகைக்கு எழுந்தருள வேண்டும். எந்தையின் தோல்வியை முழுமைப்படுத்தும் பொறுப்பு தங்களுக்கு உள்ளது” என்றேன்.

குரல் கூர்கொள்ள “அங்கு வந்து உங்கள் மூன்று தரப்பையும் முற்றழித்தால்தான் அத்தோல்வி முழுமையடையும்” என்று அவர் கூறினார். “ஆம், நீங்கள் வராவிடில் அதில் ஒரு தரப்பு வெல்லும். அது ஷத்ரியர்கள் தரப்பு” என்றேன். அவர் அமைதியாக இருந்தார். என் சொல் சென்று தைத்துள்ளது என உணர்ந்தேன். “அதை பாரதவர்ஷம் முழுதிலுமிருந்து பிற ஷத்ரியர்கள் அங்கு நிலைநிறுத்துவார்கள்” என்றேன். “அது நன்று. ஷத்ரியர்கள் நிலைகொள்வது என்பது இளைய யாதவரின் தோல்விதான்” என்றார். நான் மிகமிக நுட்பமாக சொல்லெடுத்தேன். “நான் கூற் விழைவதை என்னால் சரியாக சொல்ல இயலவில்லை, தந்தையே. நான் மிக இளையோன். இவ்விதம் எண்ணி நோக்குக!” என்றேன்.

அச்சொற்களை சொல்லும்போதே என்னுள் சொல் கோத்துக்கொண்டிருந்தேன். உண்மையில் அத்தருணம் வரை அங்கு எதை சொல்லவேண்டும் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை. எவ்வாறு உரைப்பதென்றும் தெரியவில்லை. விழுந்துகொண்டிருப்பவன் கைகளால் துழாவி அகப்பட்ட அனைத்தையும் பற்றிக்கொள்வதுபோல் பற்றிக்கொண்டேன். எப்போதும் உயிரின் பதைப்பு உளம் அறிந்ததைவிட, அறிவு அறிந்ததைவிட மேலும் அறிந்திருக்கிறது. வலுவாக ஒன்றை பற்றிக்கொண்டேன். “நீங்கள் வந்தால் யாதவர்களின் ஆற்றல் நிகர்நிலை அடையும். நிகர்நிலையடைந்த ஆற்றலே துவாரகையை அழிக்கும்” என்றேன்.

“நீங்கள் வராவிடில் ஷத்ரியர்கள் போர்முகம் கொள்வார்கள். இன்னும் சில நாட்களில் ருக்மி தன் பெரும்படையுடன் துவாரகைக்குள் நுழைவார். மலர் கொய்வதுபோல் துவாரகையை எடுத்து தன் மருகருக்கு அளிப்பார். பிரத்யும்னனை முடிசூட்டிவிட்டு அவர் செல்வார்” என்றேன். “பிரத்யும்னனை எண்ணுக, அவர் ருக்மிணியின் மைந்தர்! ஷத்ரியக் குருதி கொண்டவர். ருக்மியின் மருகர். ஆகவே ஷத்ரியர்கள் அவரை கொண்டாடுவார்கள். அவரை நிலைநிறுத்துவார்கள்.” அவர் “ஆம்” என்றார். நான் தொடர்ந்தேன். “ஆனால் பிரத்யும்னன் அசுரர்களுக்கும் நிஷாதர்களுக்கும் அணுக்கமானவரும்கூட. சம்பராசுரரின், வஜ்ரநாபரின் மகள்களை மணந்தவர். தன் மகனுக்கு பாணாசுரரின் மகளை மணம்முடித்தவர்.”

“இன்று அவர்கள் எதிர்தரப்பில் இருக்கலாம், முரண் கொண்டிருக்கலாம். ஆனால் அவர்களின் தேவை என்ன, அதை எவ்வண்ணம் அவர்களுக்கு அளிப்பது என்பதை அவர் கற்றுக்கொண்டாரென்றால் மிக விரைவிலேயே அவர்களை தன்னுடன் சேர்த்துக்கொள்வார். அவ்வண்ணம் நிகழ்ந்திருக்கிறது. அரசுசூழ்தலென்பது அறுதியாக எவருக்கு என்ன அளிக்கப்படுகிறது, நிகராக என்ன பெறப்படுகிறது என்பதை சார்ந்தது. அசுரர்கள் அவரை ஆதரிப்பார்கள். அவரை ஆற்றல் மிக்க மன்னராக அரியணையில் அமரச்செய்வார்கள். ஐயமே வேண்டியதில்லை” என்றேன். “பிரத்யும்னன் துவாரகையின் அரசர் ஆனார் என்றால் ஆயிரம் ஆண்டுக்காலம் அங்கே அவருடைய கோல் நின்றிருக்கும்.” கிருதவர்மன் ஒருகணம் கழித்து “மெய்” என்றார்.

“மூதாதையே, எண்ணிப்பாருங்கள்! அவ்வாறு அசுரர்கள் பிரத்யும்னனுடன் ஒத்துப் போகும்போது சாம்பனுக்கு வேறு வழியில்லை. அசுரர்கள் ஷத்ரியர்களை முரண்பட்டு எதிர்த்து நின்றிருக்கும் வரை மட்டுமே தனிக்கோல் கொண்டு சாம்பன் அங்கே அமர்ந்திருக்க இயலும். ஆகவே ஒத்திசைவு நிகழுமென்றால் சாம்பன் பிரத்யும்னனின் கீழ் படைகொண்டு நிற்பார். அவருக்கும் ஏதேனும் அளிக்கப்படும். பெரும்பாலும் இணை அரசொன்று சற்று அப்பால் அளிக்கப்பட வாய்ப்புண்டு. அவ்வண்ணம் அவர்கள் ஒருங்கிணைந்தால் அதன் பிறகு யாதவர்களின் இடமென்ன?” என்றேன். “ஒவ்வொன்றும் அதை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறது. ஒவ்வொருநாளும் அதற்கான வாய்ப்புகள் பெருகிக்கொண்டிருக்கின்றன.”

“நீங்கள் வந்துவிடுவீர்கள் என்ற ஐயம் எழுந்ததுமே இருதரப்பும் பதற்றம் கொண்டுவிட்டனர். உங்களை தேடிக்கொண்டிருக்கின்றனர். உண்மையில் உங்களை கண்டடைந்தவர்கள் அவர்களே. அவர்கள் ஒருங்கிணைந்தால் யாதவர்கள் அங்கே இல்லை என்றுதான் பொருள். அவர்கள் யானை முன் சிறு முயலென்றாகிவிடுவார்கள்” என்றேன். “இன்றுவரை அங்கே ஆற்றலில் முத்தரப்பிற்கும் நிகர்நிலை இருப்பதனால்தான் போர் எழாமல் இருக்கிறது. அழிவு நிகழாமல் இருக்கிறது. எங்கும் ஒரு தரப்பு மிகச் சிறிதாகுமெனில் அதன் பிறகு அங்கு தோல்விதான் நிகழும், அழிவு அல்ல. வென்ற தரப்பு தன்னை மேலும் திரட்டிக்கொள்ள முடியும். வெற்றி அவர்களுக்கு என அறிந்தபின் தோற்பவர்கள் தங்களை காத்துக்கொள்ளும்பொருட்டு அடங்கி அவர்கள் அளிப்பதை பெற்றுக்கொள்வார்கள்.”

“எனினும் அது ஷத்ரியர்களின் வெற்றி அல்ல” என்றேன். அவர் அடைந்த எண்ணத்தை உடனே அடையாளம் கண்டு அதை தொட்டு தொடர்ந்தேன். “அது ஷத்ரியர்களின் வெற்றிதான், அதை நான் மறுக்கவில்லை. பிரத்யும்னன் தான் ஷத்ரியக்குருதி கொண்டவர் என்பதையே பிற ஷத்ரியர்களிடம் காட்டுவார். அவரை ஆதரித்தெழுபவர்கள் அனைவருமே இளைய யாதவர் மேல் வஞ்சம் கொண்ட ஷத்ரியர்களாகவே இருப்பார்கள். இன்று பாரதவர்ஷத்தில் ஷத்ரிய அரசுகள் அனைத்தும் ஆற்றல் இழந்துள்ளன. அதனால் எழுந்து நிலைகொள்ள இயல்பவர் எவரோ அவர் அனைத்து ஷத்ரிய அரசுகளையும் இணைக்கவேண்டும் என அனைவரும் விழைகிறார்கள். அவருடன் ஒத்துழைத்து எவ்வண்ணமேனும் ஷத்ரிய அரசு ஒன்றை எழுப்பி நிறுத்திவிடவேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். மகதத்தை, கலிங்கத்தை, வங்கத்தை, காமரூபத்தை இன்று எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். முளைக்க வாய்ப்புள்ள ஒவ்வொரு விதைக்கும் நீரூற்றப்படுகிறது. அவ்வாறே துவாரகைக்கும் ஊற்றப்படும். துவாரகை எழும், பிரத்யும்னன் வெல்ல முடியாதவர் ஆவார். அசுரரும் நிஷாதரும் ஆதரிக்கும் ஒரு ஷத்ரியரை எவராலும் வெல்ல இயலாது.”

“ஆனால் அவர் இளைய யாதவருக்கு எதிரான ஷத்ரிய அரசர் என்ற தோற்றத்தை அவர் ஷத்ரியர்கள் நடுவே மட்டும் கொடுப்பார். இல்லையேல் அவரால் அரசமைக்க இயலாது. ஆனால் ஓர் அரசர் என்ற நிலையில் எண்ணிப்பாருங்கள், இளைய யாதவரை அவர் துறப்பாரா? அவருக்கு படை வல்லமையை வெளியிலிருந்து ஷத்ரியர்கள் அளிக்கலாம். அரியணையை வென்று அவருக்கு அளிக்கலாம். ஆனால் இன்றும் நாளையும் எந்நாளும் குடிகளென அவருக்கு அமையப்போகிறவர்கள் எவர்? அவர்கள் யாதவர்களே. யாதவ நிலத்தை அவர் ஆளப்போகிறார். ஷத்ரியராக அரசர்களுக்கு தன்னை காட்டிக்கொள்ளும் அவர் குடியினராக தன்னை யாதவர் முன் காட்டியே ஆகவேண்டும். அவருடைய அன்னை யாதவப்பெண் அல்ல என்பது அவருக்கு எவ்வளவு பெரிய இழப்பு! அதை எவ்வண்ணம் ஈடுகட்டுவார்?”

“தன் தந்தை யாதவர் என்பதைக்கொண்டு!” என்று தொடர்ந்தேன். “ஆகவே தன் குருதிவழி இளைய யாதவருடையது என்பதை அவர் வலியுறுத்தியே தீரவேண்டும். தன் அரியணையில் ஆழ அமர்வது வரை அவர் அதை செய்யாமலிருக்கலாம். அதன் பின் தன்னை இளைய யாதவரின் மைந்தர் என்றே குடிகள் முன் முன்வைப்பார். ஏற்கெனவே எங்கள் மைந்தர் எண்பதின்மரில் இளைய யாதவரின் தோற்றம் மிக அணுக்கமாக இருப்பது அவரிடம் மட்டுமே” என்றேன். “ஆம்” என்று கிருதவர்மன் சொன்னார். அந்த ஒரு முனகலிலேயே நான் அவர் உள்ளத்தை புரிந்துகொண்டேன். பிரத்யும்னனிடம் எழும் தந்தையின் தோற்றம் அவரை ஒவ்வாமையை நோக்கி செலுத்துகிறது.

“பிரத்யும்னன் ஷத்ரியர் என்பது ஒன்றுதான் ஷத்ரியர்கள் அவரை ஏற்றுக்கொள்ள வைக்கிறது. ஆனால் கண் தெரியும் தோற்றம் என்பது எளிதாக மறுக்கக்கூடியதல்ல. அது மீள மீள அவர் எவர் என்பதை வலியுறுத்திக்கொண்டே இருக்கிறது. ஆகவே ஷத்ரியர் அவர்மேல் ஐயம் கொள்வார்கள். அந்த ஐயத்தை எதிர்கொள்ள தன் குடிகள் மேல் முழு செல்வாக்கை அடைவதே பிரத்யும்னன் செய்யவேண்டியது. அதற்குரிய சிறந்த கருவி அவருடைய உடல். தந்தையை விழிக்குமுன் நிறுத்தும் தன் தோற்றம்.” நான் எனக்குள் புன்னகைத்தேன். “அத்தோற்றத்தை அவர் குடிகள் முன் முன்னிறுத்துவார். அதை முன்னிறுத்துவதற்கு எளிய வழி என்ன என்பதை எண்ணிப்பாருங்கள்.”

அவர் எண்ண சற்று இடம் கொடுத்து நான் மீண்டும் தொடர்ந்தேன். “அவர் தந்தையின் தெய்வத்தோற்றத்தை உருவாக்குவார். இன்றுள்ள முதிய தோற்றத்தை அல்ல, முடிசூடி துவாரகையை உருவாக்கியபோது இருந்த அந்த இளம் தோற்றத்தை. ஏனெனில் அத்தோற்றத்திற்கு இணையானது பிரத்யும்னனின் தோற்றம். எந்த அரசரும் தெய்வத்தின் தோற்றத்தில் தன்னை அமைத்துக்கொள்வார். தனக்குரிய தெய்வத்தை படைத்துக்கொள்வார். நாளடைவில் தன்னை தெய்வம் என்றாக்கிகொள்வார். இளைய யாதவரை தெய்வம் என்று நிலைநிறுத்தினால் பிரத்யும்னன் தெய்வவடிவம் கொண்ட அரசர். அதை எந்நிலையிலும் பிரத்யும்னன் தவிர்க்க முடியாது. அது மிகச்சிறந்த அரசியல் சூழ்ச்சி.”

“ஆகவே துவாரகையில் பிரத்யும்னன் அமர்ந்தால் இளைய யாதவருக்கு எங்கும் சிலைகள் அமையும். ஆலயங்களில் அவர் வழிபடப்படுவார். அவருடைய பிறந்த நாளும் முடிசூட்டு நாளும் பெருவிழவென கொண்டாடப்படும். அவரைப் பற்றிய காவியங்கள் எழுதப்படும். பாடல்கள் புனைந்து பாடப்படும். கூத்துகள் நடக்கும். அவ்வண்ணம் இளைய யாதவரை தெய்வமெனக்கொண்டு நிலைநிறுத்தி அதன் நீட்சியென தன்னை காட்டிக்கொள்வார். தன் மைந்தரையும் அவ்வண்ணமே நிலைநிறுத்துவார். அவ்வாறுதான் துவாரகையில் எந்தை மீண்டும் பேருருக்கொண்டு எழப்போகிறார். இதுவே நடக்கும், ஐயம் வேண்டியதில்லை” என்றேன். “நீங்கள் இங்கு அமர்ந்து செயலொழிந்தால் எந்தையை அவருடைய காலத்திரையிலிருந்து மீட்டு தெய்வமென்றாக்கி நிலைநிறுத்தும் அரசியல்சூழ்ச்சியொன்றுக்கு வழிகோலுகிறீர்கள் என்றே பொருள்.”

முந்தைய கட்டுரைஏகம் [சிறுகதை]
அடுத்த கட்டுரைஆட்டக்கதை,குருவி- கடிதங்கள்