மாயப்பொன் [சிறுகதை]

Savannah Martinez Savannah Martinez saved to Animal Art Golden tiger

“ஒண்ணு பிளைச்சா மூணாக்கும்…இப்ப செரியா வரும்னு நினைக்கேன்” என்றான் நேசையன்.

“நீ என்ன அமிருத சஞ்சீவினியாலே காச்சப்போறே? காச்சுதது நாடன் சாராயம். மலைச்சரக்கு. அதில என்ன சயன்ஸு மயிரு… ? எனக்கு வேண்டியது எளுவது லிட்டர் எரிப்பன்.நான் நாளைக்களிஞ்சு மத்தநாள் அருமனை அண்டியாப்பீஸிலே எறக்கியாகணும்…உன்னால முடியுமான்னு சொல்லிப்போடு. முடியல்லேன்னா நமக்கு ஆளிருக்கு” என்றான் லாத்தி மாணிக்கம்

“அது நான் செரியாக்கித் தாறேன். செய்யுதத ஒரு இதுவாட்டு செய்யலாமுண்ணாக்கும் சொன்னது”

“லே, இத குடிக்குதவனப்பத்தி என்ன நினைக்கே? குடிக்குதவன நீ பாத்திருக்கியா? இல்ல கேக்கேன். உன்னைய கூட்டிட்டுப்போயி இத குடிக்கவன் எங்க இருந்து எப்டி குடிக்கான்னு காட்டணும்லே. நீ இந்த காட்டுப்பொத்தை மலைமேலே மலைமாடன்சாமி மாதிரி இருந்து பளகிட்டே பாத்துக்க…கீள எறங்கி வா…காட்டுதேன்” என்றான் லாத்தி.

“நான் கண்டிட்டுண்டு” என்றான் நேசையன்

“கண்டிருக்கேல்ல? அங்க ருசிக்கோ மணத்துக்கோ சொப்பனத்துக்கோ எடமுண்டாடே? மனுசன் வாறான், ஆத்மாவுக்க மேலே தீய வச்சு கொளுத்துதான். எரிஞ்சுகிட்டே போறான். எங்கிணயாவது கரிஞ்சு கரிக்கட்டையா கெடக்கான்… அவ்ளவுதான், போவியா”

நேசையன் கண்டதுண்டு. பெரும்பாலும் கடைகளின் பின்பக்கம் இறக்கிக் கட்டப்பட்ட சாய்ப்புகளில். சிலசமயம் சந்தைகளை ஒட்டிய மூத்திரச்சந்துகளில். லாரியின் டியூபுக்குள் சாராயம் நிறைத்து வைக்கப்பட்டிருக்கும். பழைய லாரி டயர்கள், ஓட்டை உடைசல்கள் புழுதி ஒட்டடை நிறைந்துகிடக்கும் இடம். மூத்திர நாற்றம், வாந்தி நாற்றம். சாராய மணம் வராமலிருக்க அங்கே டீசலை கிரீஸுடன் சேர்த்து தெளித்திருப்பார்கள். தெரிந்தவர்களுக்குத்தான் சரக்கு கொடுக்கப்படும். அல்லது தெரிந்தவன் கூட்டிவரவேண்டும்

பணத்தை வாங்கிக்கொண்டு டியூபின் வால்வை திறந்து அலுமினிய டம்ளரில் ஊற்றி கொடுப்பான். தொட்டுக்கொள்ள வருபவனே வாங்கி வந்திருக்கவேண்டும். ஊறுகாயோ சிப்ஸோ. ஆனால் பாதிப்பேர் அருகே மளிகைக்கடையிலிருந்து ஒரு உப்புப் பரலைத்தான் எடுத்து வந்திருப்பார்கள். மூக்கைப் பிடித்துக்கொண்டு ஒரே மிடறாக விழுங்கி உடலை உலுக்கி குமட்டி துவண்டு ஏப்பம் விட்டு உப்பை நாக்கில் தீற்றிக்கொள்வார்கள். மீண்டும் ஒரு குபுக் ஏப்பம். பற்களை கிட்டித்து உதடுகளால் ஓர் இளிப்பு,  உடனே விலகிச் சென்றுவிடுவார்கள். அவ்வளவுதான், அவர்களுக்கு எதுவும் தெரியாது.

அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றுதான். அவர்கள் செல்லச் செல்ல உள்ளிருந்து தீ பற்றிப் படர்ந்து ஏறவேண்டும். காதுகளில் அனல் படவேண்டும். மூச்சில் ஆவி எழவேண்டும். கண்கள் வெம்மை கொள்ள வேண்டும். வாயில் கொழகொழவென்று எச்சில் ஊறவேண்டும். வியர்வை பூத்து நடைதள்ளாடி சற்றுநேரத்திலேயே தலைசுழலத் தொடங்கிவிடவேண்டும். அவர்கள் அறிந்த உலகம் கரைந்து மறைந்துவிடவேண்டும்

ஒவ்வொருவரும் பழகிய குடிகாரர்கள். குடிகாரர்களுக்கு போதை எளிதில் ஏறுவதில்லை. சேற்றில் புதைந்து வைரம் மட்டுமேயான கட்டைகள். தீ பற்றி ஏறுவதில்லை தீ ஏறுவதற்கு பல உத்திகளை பயன்படுத்துகிறார்கள். லீஸ் ராஜப்பனின் சரக்கில் எவரெடி பேட்டரி செல்களை போடுகிறார்கள். கஞ்சா இலை போடுவதுண்டு. ஊமத்தைக்காய்கள் போடுவதுண்டு. எதைப்போட்டாலும் எவருக்கும் புகார் இல்லை, ஏறவேண்டும். எரிந்து எழவேண்டும், சாம்பலாகவேண்டும்.

நேசையன் ஒருபோதும் கலப்படத்திற்கு ஒத்துக்கொண்டதில்லை. அவன் ஒப்புக்கொள்ளமாட்டான் என்று லாத்திக்கும் தெரியும். நேசையனின் அப்பா சூசையும் இதைத்தான் செய்திருந்தார். அவருடைய கைமணத்தை இன்றைக்கும் நினைவுகூரும் கிழடுகள் இருக்கிறார்கள். போலீஸ் அவரைப் பிடித்து கழுத்தில் காலிப்புட்டிகளை தொங்கவிட்டு அடித்து இழுத்துச் சென்றது. ஸ்டேஷனில் வைத்து விடிய விடிய அடித்தார்கள். காலையில் லாக்கப்பில் செத்துக்கிடந்தார். அவரை நேராக கொண்டு சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்து மாரடைப்பால் செத்ததாக எழுதி வாங்கிக் கொண்டார்கள்.

ஆனால் நேசையன் ஒரு மாதத்திற்குள் தொழிலுக்கு வந்துவிட்டான். அவன் அப்பனுடன் எட்டு ஆண்டுகள் தொழில்செய்தவன். அவனால் வேறொன்றைச் செய்யமுடியாது. அதைச் செய்கையில்தான் அவன் நேசையன். பணம் அவனுக்குப் பெரிய விஷயமல்ல. எள்ளுமலையில் பணத்திற்கு பெரிய மதிப்பு இல்லை

அவன் மனைவி அவனிடம் கண்ணீருடன் “நாம வல்ல கூலிவேலையும் செய்து பிளைப்போம். சொல்லுகதைக் கேளுங்க” என்றாள்.

“நான் கூலிக்காரன் இல்லை” என்று அவன் சொன்னான் “நான் செய்யப்பட்டது இது மட்டும்தான்… புலிகிட்ட உறுமாதே மியாவ்னு சத்தம்போடுன்னு சொல்லுதே… அது நடக்காது”

அது நள்ளிரவு. பாயில் மல்லாந்து படுத்து மோட்டுவளையை பார்த்துக்கொண்டிருந்தான்

அவள் சீறி எழுந்து “அப்ப என்னை கொல்லுங்க… என்னையும் என் பிள்ளையளையும் கொல்லுங்க…” என்றாள்.

அவன் பேசாமல் படுத்திருந்தான். அவன் அவளிடம் பேசுவதே குறைவுதான்

“நான் இனி இந்த மலையிலே இருக்க மாட்டேன். எங்கிணயாம்போயி மண்ணு சுமக்குதேன்… கூலிவேலை செய்யுதேன்… எனக்க பிள்ளைக இந்த தொளிலை செய்யமாட்டாவ”

அவன் ஒன்றும் சொல்லாமல் எழுந்து சென்று திண்ணையில் அமர்ந்து பீடி ஒன்றை பற்றவைத்துக்கொண்டான். அவள் வீட்டுக்குள் விம்மி அழுதுகொண்டிருந்தாள்

அவள் சொன்னதுபோலவே மறுநாள் கிளம்பிச் சென்றாள். அவன் அவளை தடுக்கவில்லை. வெறுமே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான். சின்னவன் அவள் இடுப்பில் இருந்து கை சப்பிக் கொண்டிருந்தான். பெரியவன் திரும்பித் திரும்பி அவனைப் பார்த்தான். அவள் ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். கண்ணீரை அடக்கமுடியவில்லை. போய்விட்டாள்.

அவள் மூலச்சல் பக்கம் அவளுடைய தாய்மாமனிடம் போய்விட்டதாகச் சொன்னார்கள்.லாத்தி சென்று பார்த்து பணம்கொடுத்து வந்தான். அவள் அங்கே ஒரு பெட்டிக்கடை வைத்துக்கொண்டதாக நேசையன் கேள்விப்பட்டான். எட்டு ஆண்டுகளில் அவன் ஒருமுறைகூட சென்றுபார்க்கவில்லை.

லாத்தி “சரக்குகள் கீள இருக்கு… வந்தபிறவு ஒருதடவை பாத்துக்க, நான் நாளைக்கு வாறேன்” என்றபின் தோல்பையை இடுக்கிக்கொண்டு சென்று கீழே ஒற்றையடிப்பாதையில் இரும்பன் ராகவன் வைத்திருந்த பைக்கில் ஏறிக்கொண்டான். இரும்பன் மண்ணில் காலை தென்னி தென்னி உதைத்து ஓட்ட பைக் ஓசையில்லாமல் சென்றது. கீழே போனபிறகுதான் இஞ்சினை ஸ்டார்ட் செய்வார்கள்

நேசையன் மலைமேல் ஏறிச்சென்றான். குதிரைமுக்கைக் கடந்து பன்றிப்பாறையை ஏறி அப்பால் கடந்தால் அவனுடைய இடம். ஆனால் பன்றிப்பாறைமேல் நின்றால்கூட ஒன்றும் தெரியாது. மேலிருந்து உருண்டு ஆங்காங்கே நின்றுவிட்ட பாறைகள்தான் சிறிய கட்டிடங்கள் போல, எருமைக்கூட்டங்கள் போல தெரியும். கீழே சரிவின் எல்லையில் சிற்றாறு ஓடிக்கொண்டிருக்கும். பாறைகள் நடுவே நீரின் ஓசையும் அலைச்சிதறலும். பெரும்பாலும் அப்பகுதியில் யானைநடமாட்டம் இருக்கும். யானைக்காலடிகள் சேற்றில்பதிந்த பள்ளங்கள் பரவியிருக்கும். எவராவது அங்கே வந்தால்கூட யானைக்காலடிகளைப் பார்த்து திரும்பிவிடுவார்கள்.

சரிவில் இரண்டு பாறைகள் நடுவே உள்ள வெடிப்புக்குள் அவன் வாற்று குடில் கட்டியிருந்தான். அங்குதான் உறையடுப்புகள் இருந்தன. அருகே வரும் வரை அந்தப்பாறை பிளந்து நடுவே அவ்வளவு பெரிய இடம் இருப்பது தெரியாது. அந்தக் குடிலைத் தெரிந்தவர்கள் கூட அவ்வப்போது கண்டுபிடிக்க முடியாமல் அலைமோதுவார்கள்.

பாறைக்குமேல் எழுந்து நின்றிருந்த பெரிய இலஞ்சிமரத்தின் உச்சிக்கிளையில் பிளந்த மூங்கில்களை அடுக்கி வைத்து பரண் அமைத்திருந்தான். பரணுக்குமேல் மூங்கில் முடைந்த பாயால் கூரை. உண்மையில் அது ஒரு நீளமான கூடை போல. அதனுள் அமர்ந்து உள்ளே நுழைந்துகொண்டு படுத்து தூங்கவேண்டும். ஆனால் நன்றாகக் கால்நீட்டமுடியும். மூங்கில்பாய் மேல் தேன்மெழுகும் அரக்கும் கலந்து பூசியிருந்தமையால் பெருமழைக்குக் கூட தாங்கும். ஒரு பரண்தான், இரவில் அவனும் பகலில் கூமனும் உலைகளைப் பார்த்துக்கொண்டார்கள். உறைபோடும் நாட்களில் மாறியும்.

அவன் பாறைக்குள் நுழைந்து குடிலை அடைந்தான். உலைக்கான காட்டுவிறகுகள் குவிக்கப்பட்டிருந்தன. பெரிய கூனைப் பானைகள் சற்றே சரிந்து வாய்திறந்து காத்திருந்தன. அவன் சிறிய கல்லில் அமர்ந்து ஒரு பீடியை பற்றவைத்துக்கொண்டான். நெடுநேரம் அமர்வதற்காக அந்தப் பாறைமேல் இஞ்சிப்புல் நாரைக்கொண்டு பின்னிய மெத்தையை போட்டிருந்தான்.

கழுதைக் குளம்படி கேட்டது. கூமன் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட நான்கு கழுதைகளை கூட்டிக்கொண்டு மேலே வந்துகொண்டிருந்தான். நான்கும் விலாவின் இருபக்கமும் பொதிச்சுமைகளுடன், தலைதாழ்த்தி, செவிகளை தழைத்து, உடலை உந்தி உந்தி வந்தன. துணிகிழிவதுபோல மூச்சு சீறின.

அவன் எழுந்து நின்றான். கூமன் அருகே வந்து “லாரிக்காரன் அந்தாலே எறக்கிட்டுப் போய்ட்டான் அண்ணாச்சி” என்றான் “உண்ணிப்பாறை முக்கிலே… ”

நேசையன் கழுதைகளைப் பிடித்து நிறுத்தி அவற்றின் விலாக்களில் தொங்கிய மூட்டைகளை இறக்கினான். கழுதையின் உடலில் இருந்து மூட்டைகளை இறக்குவதற்கு ஒரு பயிற்சி வேண்டும். ஒருபக்கம் மூட்டையை கழற்றினால் மறுபக்க எடையால் அதன் முதுகு முறிந்துவிடக்கூடும். இருமூட்டைகளையும் சரித்து ஒரேகணத்தில் பின்பக்கம் வழியாக கீழே இறக்கவேண்டும். கூமனுக்கு பலமுறை சொல்லிக்கொடுத்தும் அது தெரியவில்லை. கீழே மூட்டைகளை வேலைக்காரர்களே ஏற்றிவிடுவார்கள்.

அவன் மூட்டைகளை இறக்கிக்கொண்டிருந்தபோது கூமன் மண்கலத்தில் இருந்து தகரப்போணியில் தண்ணீர் அள்ளிக் குடித்தான். கல்லில் அமர்ந்து இளைப்பாறினான்.எடை இறங்கியபின் கழுதைகள் ஆசுவாசத்துடன் விலகிச்சென்று கொழுத்துக் கிடந்த இஞ்சிப்புல்லை மேயத்தொடங்கின.

“மத்தவனா வந்திருக்கான்?” என்றான் நேசையன் “களுதைகளை கண்டா சந்தேகம் வந்திரப்பிடாது”

“கோணையன் நிக்கான்” என்றான் கூமன். “போறப்ப புல்லுகெட்டு கொண்டு போவான்.”

“அவன் மேலே ஏறி வந்திரப்பிடாது.”

“இல்ல, அவன் இம்பிடு தூரம் ஏறிக்கிடமாட்டான்” என்றபடி எழுந்தான். கழுதைகளை ஒன்றுடன் ஒன்று கட்டினான். அவற்றை இழுத்துக்கொண்டு கீழே சென்றான். கழுதைகள் எடை இல்லா முதுகை உணர்ந்து இயல்பாக மூச்சுவிட்டபடி சென்றன. அவற்றின் வால்களின் சுழற்சியை நேசையன் நோக்கிக்கொண்டிருந்தான்.

பின்னர் சாக்குகளை பிரித்து கருப்பட்டிகளை எடுத்துப் பார்த்தான். கருப்பட்டிகளை ஒன்றோடொன்று தட்டிப் பார்த்தான். மரக்கட்டை போல ஓசையெழுப்பினால் அது தவிட்டுக் கருப்பட்டி. மெத்மெத்தென்று இருந்தால் பதம் வராதது. நல்ல கருப்பட்டி அதற்கு நடுவே இருக்கவேண்டும். ஒவ்வொன்றிலும் சற்றே கிள்ளி வாயில் வைத்துப் பார்த்தான். எட்டு கருப்பட்டிகள் கரிச்சுவை கொண்டிருந்தன. அவற்றை எடுத்து அப்பால் வைத்தான்.

சற்றுநேரத்திலேயே கூமன் வந்து விட்டான். அப்போது நேசையன் கருப்பட்டிகளை தரம் பிரித்து வைத்திருந்தான். கூமன் பாயை எடுத்துப் போட்டு நின்றபடியே இடிக்கும்படி மூங்கில் பிடி பொருத்தப்பட்ட இடிப்பலகையால் கருப்பட்டிகளை அடித்து உடைத்தான்.

“இண்ணைக்கு நான் முத்திரையைப் பாத்தேன்” என்றான் கூமன்.

“எங்க?”என்றான் நேசையன்.

“மேக்க மலையிலே… ஆத்தங்கரை சேத்திலே , ஒத்தைக்கால்.”

“ஒத்தைக்காலா?”

“ஆமா… ஒத்தை முன்கால்” என்றான் கூமன் “எனக்க ஒரு காலளவை விட பெரிசாக்கும். உள்ள காலை வச்சுப்பாத்தேன். முளுக்காலும் உள்ள நிக்குது”

“ஒத்தக்கால் மட்டுமா?”

“அண்ணா, இன்னொரு கால் எங்க வச்சிருக்குன்னு எங்க கண்டோம்?”.

நேசையன் “அதுக்கு ஒரு நேக்கு இருக்கு” என்றான்.

“அது எப்பமுமே பாறையிலேயாக்கும் காலு வச்சு போவுது.”

“ஏலே, அப்டி போவ முடியுமா?”

“போவுதே.”

“ஏல, அது எம்பிடு கிலோ கனம்லே இருக்கும்?” என்றான் நேசையன்.

“நீங்க ஒருக்கா பாத்தியள்லா, அதுக்க காலுக்க நடுவிலே உள்ள இடைவெளிய? அண்ணாச்சி குடிலுகெட்ட மூங்கில் நடுகது மாதிரியாக்கும் காலுக. அது அவ்ளவு பெரிய புலி… நல்லா வளர்ந்த கடுவன்புலி நாலு ஆளுக்க கனமிருக்கும்…”

“அப்டீன்னா ஒரு இருநூத்தம்பது கிலோ இருக்குமாலே?”

“அண்ணா, இது முந்நூறு இருக்கும். அதுக்கமேலேகூட இருக்கும்”

“முந்நூறுக்கும் மேலயா?”

“அண்ணனை நான் கூட்டிட்டுப்போயி காட்டுதேன்… பாருங்க… அளந்து அதவச்சு கணக்குப் போட்டுப் பாருங்க… அண்ணா, முந்நூற்றம்பது கிலோ இருக்கும்.. அது கடுவன்புலியில்ல, ராட்சதனாக்கும்”

“என்ன வயசுலே இருக்கும்?”

“நல்ல மூத்த கடுவாயாக்கும்… எனக்க கணக்கிலே பதிமூணு… சிலப்பம் பதினஞ்சு.”

“பதினஞ்சுன்னா நல்லா விளைஞ்சாச்சு… வயசுபோன பாட்டாவாக்கும்.”

“ஆனா பல்லு இருக்கே… நகம் அப்டியே இருக்கே.”

“நேரிலே முளுசா பாத்தவன் ஆருலே?”

“முளுசான்னா? காணிக்காரனுக பாத்திருக்கானுக. அவனுக அது சாமியாக்கும்னு சொல்லுதானுக.”

“அவனுகளுக்கு அது கடுத்தா சாமியாக்குமே” என்றான் நேசையன். “ஐயப்பன் சாத்தா கடுத்தா மேலே ஏறியில்லா காட்டிலே லாந்துதாரு?”

கூமன் அடுப்பை பற்றவைத்து பெரிய கலத்தை ஏற்றினான். தகரப்போணிகளை மூங்கில் கழியில் காவடியாக கட்டி ஆற்றிலிருந்து நீர் மொண்டு கொண்டுவந்து அதில் ஊற்றினான். தீப்பெட்டியை குடிலுக்குள் மூடிவைத்த கலத்தில் இருந்து எடுத்து விறகை மூட்டினான். தீ சுள்ளிகளில் பற்றிக்கொண்டு மெல்ல படர்ந்து விறகின்மேல் ஏறி நின்று ஆடியது.

அவர்கள் இரவில் மட்டும்தான் அடுப்பு மூட்டுவது. இருட்டில் புகை தெரியாது. தழல்வெளிச்சத்தை பாறை முழுமையாக மறைத்துவிடும். மேலும் அங்கே காற்று மலை ஏறி சுழன்றடிக்கும். புகை உடனே கரைந்து மறைந்துவிடும்.

நேசையன் கருப்பட்டித் துண்டுகளில் பெரியவற்றை கழியால் அடித்து உடைத்துக் கொண்டிருந்தான்.

“அண்ணா, காணிக்காரனுக சொல்லுகதிலே சத்தியம் உண்டா?” என்றான் கூமன்.

“என்னது?”

“அது கடுத்தா சாமியாக்குமா?”

“ஏல, சாமி எதுக்கு காட்டிலே அலையுது?”

“இல்ல, அவனுகளுக்க சாமி காட்டிலேதானே?”

நேசையன் பீடியை தூரவீசிவிட்டு “ஏலே, அப்டீன்னா அவனுக கிட்ட கடுத்தா சாமிய தேடிப்போயி கும்பிடச்சொல்லுலே” என்றான்.

“அவனுக சொல்லுதானுக, கடுத்தா சாமிய அப்டி சும்மா பாத்துகிட முடியாதாம். சாமிய நாம தேடிப்போவ முடியாதாம். சாமிதான் நம்மளை தேடி வரணும்…”

“அதுக்கு நாம என்ன பண்ணணும்? தவம் பண்ணணுமோ?” என்றான் நேசையன்.

“அவனுக சொல்லுகது பூசைன்னு. ஆனா அவனுகளுக்க பூசை வேறமாதிரியாக்கும். தின்னுகது, குடிக்கது, டேன்ஸ் ஆடுகது. முட்டன்காணி எனக்க கிட்ட சொன்னான், அருளு வந்த நாளிலே மானத்து நிலாவு கீள வந்து நிக்குமாம். அப்ப இங்கிண நல்ல குளுமையான வெளிச்சம் வந்துபோடும். அந்த வெளிச்சத்திலே நாம கடுத்தாவை பாக்கலாம்”

“ஏலே அவன் பாத்தானாலே?”

“அவரு பாக்கல்ல… ஆனால் பூசாரி பாத்திருக்காரு.”

“அவனுக கஞ்சாவை இளுத்து ஏத்திக்கிடுவானுக… கடுத்தா மட்டுமில்ல கர்த்தாவாகிய ஏசுவையே கண்டுபோடுவானுக.”

மலைச்சரிவில் பாறைகள் நடுவே தாழ்வாக கூரையிடப்பட்ட குடில்கள் மூன்று இருந்தன. அவற்றுக்குள்தான் உறைபோடுவது. மண்ணில் எட்டடி ஆழத்திற்கு குழி எடுத்து கீழிருந்தே களிமண் பொத்தி சுவராக ஆக்கி எழுப்பிக் கொண்டு வந்திருந்தனர். அதற்குள் தீமூட்டி சூளைபோலச் சுட்டு சுவர்களை மண்பானைபோல போல ஆக்கி, அந்த தொட்டிக்குள் காட்டிலிருந்து பொறுக்கிக் கொண்டுவந்த சாணியையும் இலைகளையும் போட்டு நொதிக்க வைத்திருந்தனர். அது புளித்து குமிழிகள் வெடித்து அழுகல் நாற்றம் எடுத்தது.

அதற்குள் எப்போதும் கைவைத்தால் தாங்காத அளவுக்கு சூடு இருக்கும். மழையிலும் வெயிலிலும் அணையாத தீ. விறகோ எண்ணையோ இல்லாத தீ. “அது உயிருள்ள தீயாக்கும்… மனுசனுக்க வயித்துக்குள்ள எரியுத தீ, கேட்டியா?”என்று நேசையன் சொல்வதுண்டு. அந்த சாணிச்சேற்றுக்குள் கழுத்தளவு இறக்கப்பட்ட கூனைகள் நிரந்தரமாக அமைந்திருந்தன.

கூனைகளுக்குள் உடைத்த கருப்பட்டியை போட்டான் கூமன். நேசையன் கொதிக்கும் நீரை கொண்டுவந்து கருப்பட்டித் தூளின் மேல் அளந்து ஊற்றினான். நிறைந்தபின் கழியை விட்டு ஒருமுறை கலக்கிவிட்டு மண்ணாலான தட்டுகளால் கூனைகளை மூடி விளிம்பை அரக்கையும் தேன்மெழுகையும் களிமண்ணையும் கலந்து உருக்கிக் குழைத்த சாந்தால் மூடினான்.

கூனைகளின் மூடியில் விரல் விடுமளவுக்கு ஓட்டை இருந்தது. அதில் வேய்மூங்கிலைச் செருகி அதன் மறுமுனையின் ஓட்டையை குடிலுக்குமேல் எடுத்து விட்டான். உள்ளே கருப்பட்டி நொதிக்கும்போது சாராயமணம் வரும். அது கரடிகளை தேடிவரச்செய்வது. மேலே வீசினால் காற்றில் பறந்துபோய்விடும். வேய்குழலின் பொருத்தையும் களிமண் சாந்தால் மூடினான்.

“நாளைக்கு சாயங்காலம் லாத்தி வருவாருண்ணக்கும் சொன்னது… எளுவது குப்பிண்ணு சொன்னாக” என்றான் கூமன்.

“பாப்பம்.”

“எளுவது வருமா?” என்றான் கூமன்.

“பாப்பம்” என்று நேசையன் மீண்டும் சொன்னான்.

நேசையன் வேலைமுடிந்து வந்து கல்லில் அமர்ந்தான். ”அண்ணா தேயிலைவெள்ளம் போடவா?”என்றான் கூமன்.

“போடு.”

கூமன் அடுப்பில் தகரப்போணியை வைத்து நீரூற்றினான். அதில் சீனியும் டீத்தூளும் சேர்த்தே போட்டான். கொதிக்கவைத்து இறக்கி துணியாலான அரிப்பில் போட்டு பிழிந்தான். நேசையனுக்கு கடுப்பமான கருப்புச்சாயா பிடிக்கும். ஆனால் அதை வேகமாக குடித்துவிடுவான்.

தகரப்போணியில் கூமன் தந்த சாயாவை நேசையன் நாலைந்து முறையாக விழுங்கினான். சூடு உடலுக்குள் பரவியதும் தசைகள் இறுக்கம் தளர்ந்து சற்றே உருகின. அவன் கால்நீட்டி அமர்ந்து பீடி பற்றவைத்துக் கொண்டான்.

கூமனும் பீடி பிடித்தபடி குந்தி அமர்ந்தான். கூமனால் பலமணிநேரம் குந்தி அமரமுடியும். எதையுமே யோசிக்காமல் சும்மா காட்டைப் பார்த்துக்கொண்டிருக்க முடியும். பீடியோ வெற்றிலைபாக்கோ இருந்தால் முகம் மலர்ந்திருக்கும்.

காடு இருட்டிக்கொண்டு வந்தது. சீக்கிரமே சூரியன் கரடிமலைக்கு அப்பால் இறங்கிவிட்டது. பறவையோசைகள் உரக்க எழுந்து மெல்ல அணைந்தன. கீழே ஆற்றில் நீரின் வெளிச்சம் எஞ்சியிருந்தது. பிறகு அதுவும் ஓசை மட்டுமே என்றாகியது.

பீடியை வீசிவிட்டு நேசையன் எழுந்து மலைச்சரிவில் மண்ணோடு படிந்ததுபோல கிடந்த இன்னொரு உறைக்குடிலை நோக்கிச் சென்றான். கூமன் பின்னால் வந்தான். உறைகுடிலின் தட்டிக்கூரைக்கு மேல் காட்டிலிருந்து காய்ந்த சருகுகளை கொண்டுவந்து பரப்பியிருந்தனர். சற்று அப்பால் நின்றால்கூட அதை குடில் என்று சொல்லமுடியாது..

“இது கனிஞ்சிருச்சுண்ணாக்கும் தோணுது…சக்கைப்பளம் பளுத்த மணம்”என்றான் கூமன்.

“ம்” என்று நேசையன் சொன்னான்.

குடிலுக்குள் மெல்லிய மணம் நிறைந்திருந்தது. நேசையன் மூச்சை இழுத்துவிட்ட்டான். அவன் முகம் மலர்ந்திருந்தது.

“பிறந்த குளந்தை முதச் சிரிப்பை சிரிக்கது மாதிரியாக்கும்” என்றான் நேசையன்.

“நான் வெடிகாலையிலே பூ விரியுத மாதிரிண்ணு நினைப்பேன்” என்றான் கூமன்.

நேசையன் ஒவ்வொரு கூனையின் மூடியாக சென்று வேய்மூங்கில் குழலை அகற்றிவிட்டு துளையருகே மூக்கை வைத்துப் பார்த்தான்.

“ஏன் பொண்ணு சமையுத மாதிரின்னு சொல்லப்பிடாதோ”

“என்ன அண்ணாச்சி, நீங்க ஒருமாதிரி…” என்றபோது கூமனுக்கு சிரிப்பு பொங்கியது

“இது மூணும் திரண்டுபோச்சுலே”

“மூணிலே எளுவது வருமா அண்ணாச்சி?”

“பத்து பத்துன்னு முப்பது வரும், மிஞ்சினா முப்பத்தஞ்சு வரும்.”

“அவனுக எளுவதில்லா கேக்கானுக?”

“அவனுக கேப்பானுக… நாம இங்க என்ன ஃபேக்டரியா நடத்துகோம்… வரணும்லா?”

“இங்க நம்மகிட்ட ஒரு முகம் காட்டுதானுக. போற வளியிலே தண்ணியச் சேத்து கண்ட பொடிகளை கலக்கி நாப்பத எளுவதா ஆக்கிப்போடுவானுக”

“விடு… அதைப்பத்தி நம்மகிட்ட பேசாதே” என்று நேசையன் எரிச்சலுடன் சொன்னான்.

“இல்ல சொல்லுதேன்”

“அதப்பத்தி நமக்கு என்னலே? குடிக்குதவனுக்கு விதியிருந்தா நல்லதைக் குடிக்கான்..”.

நேசையன் கூனைகளின் மூடியை ஒட்டியிருந்த கலவையை கத்தியால் சுரண்டி விலக்கினான். இடைவெளியில் கத்தியைக் கொடுத்து நெம்பித் திறந்தான். குபீரென்று புதுச்சாராயத்தின் மணம் எழுந்து வந்தது.

“அண்ணாச்சி இதாக்கும் மணம்… புதுமளை மணம் மாதிரி”

நேசையன் மூன்று கூனைகளையும் திறந்தான். உள்ளே கரியநிறத்தில் ஊறல் நிறைந்திருந்தது;. மிகச்சிறிய குமிழிகள் வெடிக்கும் மெல்லிய ஓசை கேட்டது. நுரை உடைந்து மறையும் ஓசை. கண்ணாடித்தாள் நலுங்கும் ஓசைபோல. நேசையன் குனிந்து ஒவ்வொன்றாக பார்த்தான். மனநிறைவுடன் தலையை அசைத்தான்.

கூமன் கூனைக்கலங்களை உருட்டி தூக்கி அடுப்பின்மேல் வைத்தான். அடுப்பு தரையிலிருந்து நான்கு விரல்கடைதான் உயரம். ஆனால் இடுப்பளவு ஆழமான குழி. மண்ணை தோண்டி உள்ளே களிமண் சுவர்கட்டி செய்யப்பட்ட உறையடுப்பு அது. உள்ளே காற்று நுழைவதற்கு இருபக்கமும் சேற்றில் மூங்கில் பதித்து செய்யப்பட்ட எட்டு துளைகள். விறகை அடுக்கியபின் முன்பக்கம் மண்கட்டி வைத்து மூடினால் உள்ளே அனல் கனன்றுகொண்டே இருக்கும். உறையடுப்பில் புகை குறைய வேண்டும். தீயில் தழல் எழக்கூடாது.

கூமன் உறைகுடில்களுக்குள் போய் உறை இறக்கப்பட்ட கூனைகளில் இருந்து மூங்கில் கழி இணைக்கப்பட்ட தகர டின்னால் ஊறலை மேலிருந்து மெல்ல அள்ளி தகரவாளியில் விட்டான். தேன்போல தெளிந்திருந்தது. அதைக் கொண்டுவந்து முதல் கூனையில் விட்டான். ஒவ்வொரு கூனை ஊறலையும் தனித்தனியாகத்தான் காய்ச்சவேண்டும் என்பது நேசையன் கட்டாயமாக கடைப்பிடிப்பது. “ஓரோண்ணுக்கும் ஒரு ருசியும் மணமும் உண்டு” என்று சொல்வான்.

“என்னலே சொல்லுதே, ஒரே கருப்பட்டி ஒரே கலம்” என்று ஒருமுறை லாத்தி சொன்னான்.

“ஒரே பொஞ்சாதியிலே நீரு பெத்த நாலு பிள்ளையளும் நாலு டிசைனுல்லாவே?”என்றான் நேசையன்.

“வாய வச்சுட்டு சும்மாருலே” என்றான் லாத்தி.

கூமன் கிகிகி என்று சிரித்தான்.

‘நீ என்னலே பீயக் கண்ட பண்ணி மாதிரி சிரிக்கே?”என்றான் லாத்தி.

நான்கு கூனைகளிலாக ஊறலை விட்டு முக்கால்வாசி நிறைத்தான் கூமன்.

“போரும்லே” என்று நேசையன் சொன்னான். குடிலுக்குள் சென்று பழக்கூடையை எடுத்துவந்தான். கூமனும் குடிலில் இருந்து பழக்கூடைகளை கொண்டுவந்து வைத்தான்.

காட்டிலிருந்து கொண்டுவந்து சேர்க்கப்பட்ட மலைவாழைப்பழங்கள். அவை அழுகி ஒன்றாகச் சேர்ந்து கூழ் போலிருந்தன. அவற்றைக் கொண்டுவரும்போதே நேசையன் அமர்ந்து தோலை நீக்கியிருந்தான். மீண்டும் கையை விட்டு அந்த களியில் தோல் கிடக்கிறதா என்று பார்த்தான்.

“காணிக்காரனுக தோலோடத்தான் போடுதானுக” என்றான் கூமன் அவன் அதை வழக்கமாகவே சொல்வான்.

“பலரும் அப்டி போடுதானுக. நான் போடுறதில்லை” என்று நேசையன் சொன்னான். “நல்ல சாராயம் இனிப்பிலே இருந்து மட்டும்தான் வரணும்…தோலோ எலையோ உமியோ மரப்பொடியோ எது கிடந்தாலும் ருசி கெட்டிரும்… ”

“ஏன்?”

“இது இனிப்பிலே ஊறிவாறது. ஆண்டவராகிய ஏசு மாதிரி… இன்னொண்ணு உண்டு, எலையிலயும் தோலிலேயும் வாறது. அதாக்கும் சாத்தான் மாதிரி… அதும் இதும் ஒரே மாதிரித்தான் இருக்கும். ஆனா அது ஏறிப்போச்சுன்னா கண்ணைப்பிடுங்கிட்டுப் போயிரும்.”

கூமன் அதற்கு சிரித்தான்.

அந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் பேசிக்கொள்ள விரும்புவார்கள். ஆனால் வேறெதையும் பேசவும் முடியாது.

நேசையன் அழுகிய பழங்களின் கூழை அள்ளி கருப்பட்டி புளித்து எழுந்த சாராய ஊறலுடன் போட்டான். கழியை விட்டு நன்றாகக் கலக்கினான். பழக்கூழ் ஊறலில் கலந்தபோது மணம் மாறுபட்டது.

நேசையன் அவற்றின் மூடியை பொருத்தினான். மூடி விளிம்பை களிமண் கொண்டு பொத்தி நன்றாக மூடினான். அதன்மேல் தீப்பந்தத்தைக் காட்டி களிமண்ணை சுட்டு உலரச்செய்தான்.

மூடிகளின் நடுவே இருந்த ஓட்டையில் பொருத்தப்பட்ட வேய்மூங்கில் குழாய்கள் எழுந்து வளைந்து சென்றன. அவற்றை அருகே அமைக்கப்பட்டிருந்த செம்பாலான நீண்ட உருளைகளுக்குள் விட்டிருந்தனர். செம்பு உருளைக்குமேல் வைக்கோலும் சணல் சாக்கும் சுற்றப்பட்டு அதன்மேல் உயரத்திலிருந்த பானையில் இருந்து குழாய் வழியாக குளிர்ந்த நீர் விழுந்துகொண்டிருந்தது.

நேசையன் குளிர்நீர் பானையை எட்டிப்பார்த்தான். “தண்ணி கொண்டாறேன் அண்ணாச்சி” என்றான்.

“அப்பவே நிறைச்சு வச்சிருக்கணும்லா?”என்றான் நேசையன்.

கூமன் கீழே ஆற்றிலிருந்து தகர டின்களில் தண்ணீர் மொண்டு, அவற்றை காவடியாக கட்டி சுமந்து கொண்டுவந்து பானைகளை நிறைத்தான்.

நேசையன் “ஏசுவே!” என்று பிரார்த்தனை செய்தபின் தீப்பெட்டியை உரசி அடுப்பை பற்றவைத்தான். தீ எரிந்து விறகுகள் சிவந்த கனல்கட்டைகளாக ஆனபோது முகப்பை மூடினான். உள்ளே தீ நொறுங்கி அனலாகி எரிய தொடங்கியது.

கூமன் சாக்குப்பையில் இருந்து குப்பிகளை எடுத்துக் கொண்டுவந்து செம்புக்குழாய்களின் அருகே வைத்துவிட்டு அருகே அமர்ந்து பீடியை பற்றவைத்துக்கொண்டான்.

நேசையன் நின்றபடி கலங்களுக்குள் ஊறல் சூடாகத் தொடங்குவதை ஓசைவழியாகவே உணர்ந்துகொண்டிருந்தான்.

சாராயம் ஊறலில் இருந்து ஆவியாகி எழுந்து குழாய்கள் வழியாகச் சென்று செம்புக்குழாய்க்குள் குளிர்ந்து வியர்த்து துளித்துச் சேர்த்து ஊறி சிறிய உலோகமூக்குத் துளை வழியாகக் சொட்டியது. கூமன் முதல் குப்பியை எடுத்து அதன் கீழே வைத்தான்.

நேசையன் குனிந்து முதல்துளியை கையில் வாங்கி முகர்ந்து பார்த்தான். முகம் மலர்ந்தது.

“எப்டி அண்ணச்சி?”

“பதமிருக்குடே.”

“பிறவு என்ன?” என்றான்.

“வெத்திலயும் பாக்கும் சுண்ணாம்பும் சேந்தா சிவப்பு வரும். அது எல்லாவனுக்கும் தெரிஞ்சதாக்கும். ஆனா ஆயிரம்தடவை வெத்தில போட்டாத்தான் ஒருக்கா அமைஞ்சுவரும். அந்த ஒரு வெத்திலைருசிக்காகத்தான் ஓரோருத்தனும் போட்டு சவைக்குதான்”

”ஆமா”

“ஒவ்வொரு வாற்றிலும் ஒண்ணு இருக்குடே. இப்ப கடவுள் எந்திரிச்சு நம்ம முன்னால வந்தா இந்தாண்ணு நாம நீட்டி குடுக்குத மாதிரி ஒரு குப்பி… அதாக்கும் நான் தேடுதது. எப்பமோ ஒண்ணு அமையுது. ஒருக்கா அமைஞ்சா இந்நா கிட்டிப்போச்சுன்னு தோணும். ஆனா மறுக்கா கைவிட்டிரும். திரும்பத்திரும்ப இதிலே கிடந்து முட்டுகது இதுக்காக்கும்.. கர்த்தர் உயிர்த்தெளுந்து வாறது மாதிரி ஒரு ஐட்டம்…”

நேசையன் சாராயத்தை கையில் விட்டு தீப்பெட்டியால் பற்றவைத்தான். நீலச்சுடர் கையை தொடாமல் அந்தரத்தில் எரிந்து அணைந்தது.

“சுத்தமா இருக்குடே”

நேசையன் ஒவ்வொரு பானையாக தொட்டுப்பார்த்து விறகை வெளியே இழுத்து வெப்பத்தை சரியாக அமைத்தான். வெப்பம் கூடிப்போனால் அடுப்பை அணைத்தே கட்டுப்படுத்தவேண்டியிருக்கும்.

“நீ வேணுமானா படுத்து உறங்குலே” என்றான் நேசையன்.

“இல்ல நான் இருக்கேன்.”

“வேணுமானா விளிக்கேன்… நீ உறங்கு”

கூமன் நூலேணியின் கம்புகளில் கால்வைத்து மேலேறிச் சென்று பரணுக்குள் நுழைந்துகொண்டான்.

நேசையன் கைகளை கட்டியபடி அனல்கொண்ட பானைகளை பார்த்துக்கொண்டு நடந்தான். ஒவ்வொரு குப்பியாக விலக்கி வைத்தான். சொட்டுச் சொட்டாக குப்பிகள் நிறைந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு குப்பிக்கும் ஒரு மணம் இருந்தது.மிகமிகக் கொஞ்சமான வேறுபாடு. மல்லிகைப் பூவுக்கும் செண்பகப் பூவுக்குமான வேறுபாடு அல்ல, ஒரு மல்லிகைப்பூவுக்கும் இன்னொரு மல்லிகைப்பூவுக்குமான வேறுபாடு.

எழுந்து சென்று எல்லா அடுப்புகளிலும் விறகுகளை நீக்கி அனலை கழியால் தட்டி சாம்பல் களைந்தபின் மூடிவைத்தான். அடுப்புக்குள் காற்று செல்லவேண்டிய துளைகள் அதிகமாகக் காற்றுவீசும் தென்மேற்கை நோக்கி அமைக்கப்பட்டிருந்தன. உள்ளே காற்று நுழைந்து அனலைச் சீறவைத்தது.

முதல் ஏழு குப்பிகளில் இருந்த சாராயத்தை கொண்டுவந்து இன்னொரு மண்கலத்தில் விட்டான். சாராயம் இளஞ்சூடாக இருந்தது. குடிலுக்குள் சென்று கூடையில் இருந்த கதலிப்பழங்களை எடுத்து வந்தான். அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் போட்டான். அதை பெரிய அடுப்பின் அடுகே அனல்படும்படி வைத்தான்.

கைகளை நெட்டி முறித்தபடி பானைகளை பார்வையிட்டுக்கொண்டு நடந்தான். அனலை இறக்கிக்கொண்டே இருக்கவேண்டியிருந்தது. வானத்தில் விண்மீன்கள் எழுந்து பரவின. தெற்கத்திக் காற்று குளிருடன் வீசியது. அடுப்பின் அனலருகே நின்றிருந்தபோது குளிர் தெரியவில்லை. கொஞ்சம் தள்ளிவந்தபோது உடல் சிலிர்த்தது.

கீழே ஆற்றங்கரையில் யானைக்கூட்டம் ஒன்று இறங்கியிருந்தது. அவன் அறிந்த கூட்டம்தான். எட்டு குட்டிகள் கொண்டது. ஆகவே மிக எச்சரிக்கையானது. அவனுடைய மணத்தை அறிந்து யானைக்கிழவி ஏதோ சொன்னது. அவற்றுக்கு அந்த இடத்தில் அவர்கள் இருப்பது நன்றாகவே தெரியும். சொல்லப்போனால் அந்த யானைக்கூட்டம்தான் அவனுக்குக் காவல். அவை கீழே சாலைவரை பரவியிருக்கும் வேய்மூங்கில் காடுகளில்தான் பெரும்பாலும் இருக்கும். எவராவது வந்தால் தொலைவிலேயே மணம் பிடித்து பிளிறி ஆள்காட்டிவிடும்.

அந்தக் யானைக்கிழவிக்கு நேசையன் மீது நல்லெண்ணம் இருந்தது. மலம்கழிக்கவும் விறகு எடுக்கவும் வாழைப்பழம் பொறுக்கவும் காட்டுக்குள் போகும்போது பலமுறை அதற்கு மிக அருகே சென்றிருக்கிறான். காணிக்காரர்களின் முரசு போல உறுமி தள்ளிச்செல் என்று சொல்லும். வெறும் அதட்டல்தான். செவிமடக்குவதோ தலைகுலுக்குவதோ கிடையாது. நாலைந்து முறை அருகே வந்து தொட்டு மோப்பம் பிடித்துவிட்டுச் சென்றிருக்கிறது. குட்டிகள் ஆவலுடன் அவனை மோப்பம் பிடிக்க தும்பிக்கை நீட்டி வந்தால் அதட்டி அப்பால் விலக்கிவிடும்.

விடியற் காலையில் இருபது குப்பி நிறைந்துவிட்டது. நேசையன் எல்லா விறகையும் இழுத்து கலங்களை குளிரச்செய்தான். அடுப்புகளை நன்றாக அணைத்து புகை வராமலாக்கினான்.

இமைகள் தழைந்து வந்தன. அவன் கொட்டாவி விட்டுக்கொண்டு அமர்ந்திருந்தபோது கூமன் மேலிருந்து இறங்கி வந்தான்.

“வெடிஞ்சுபோட்டு அண்ணாச்சி, டீ போடவா?”

“போடு” என்றான் நேசையன்.

கூமன் காட்டுக்குள் சென்றுவிட்டு ஆற்றில் முகம் கைகால் கழுவி வந்தான். அவனே போணியில் தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்தான்.

“எம்பிடு அண்ணாச்சி?”

“இருபது தேறும்லே”

“இருபதா? அண்ணாச்சி அவன் நாறப்பேச்சு பேசுவானே?”

“அதுக்கு என்ன செய்யுதது?”

டீயை குடித்துவிட்டு நேசையன் காட்டுக்குள் சென்றுவந்தான். அதற்குள் கூமன் நான்கு பெரிய மரவள்ளிக்கிழங்குகளை தீயில் சுடப்போட்டிருந்தான். இன்னொரு கனலின் மேல் வைக்கப்பட்ட கல்லில் கருவாடு வெந்துகொண்டிருந்தது.

“திங்குதியளா அண்ணாச்சி?”

“எடு” என்றான் நேசையன் “அந்த செவப்பு குப்பியை எடுலே”

கூமன் சிவப்புக் குப்பியை எடுத்து தந்தான். அதை திறந்து அலுமினிய கோப்பையில் சற்றே விட்டுக்கொண்டான். கருவாட்டை கடித்துக்கொண்டு அதைக் குடித்தான். இளஞ்சூடான சாராயம் பழம் கனிந்த மணத்துடன் மூக்கை உள்ளிருந்து எரித்தது.

கிழங்கையும் சாப்பிட்டுவிட்டு பீடியை பற்றவைத்தபடி மேலேறி பரணில் படுத்துக்கொண்டான். கண்களை மூடிக்கொண்டு பீடியை இழுத்தான். பிள்ளைகளின் நினைவு வந்தது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்த முகம். மரியத்தின் முகம் நினைவுக்கு வந்தது. பெருமூச்சு விட்டுக்கொண்டே இருந்தான்.

அவன் விழித்துக்கொண்டபோது பரணின் கூரைமேல் மழை பெய்துகொண்டிருந்தது. அந்த ஓசையைக் கேட்டுக்கொண்டு நெடுநேரம் படுத்திருந்தான். சிறுநீர் முட்டியது. ஊர்ந்து வெளியே வந்து மழைக்காகிதத்தை எடுத்து மேலே போட்டுக்கொண்டு கீழிறங்கி வந்தான். குடிலுக்குள் கூமன் அமர்ந்திருந்தான்.

“பீடி இருக்காலே?”

“இருக்கு அண்ணாச்சி…” என்று கொண்டுவந்து நீட்டினான்.

“என்ன மணி ஆச்சு?”

“அதாச்சு நாலு, நாலரை… மளையிலே இன்னும் கொஞ்சம் இருட்டிப்போச்சு” என்றான் கூமன் “கஞ்சி குடிச்சுதியளா? முயலு சுட்டிருக்கேன்”

“கொண்டா”

சிறுபயறு போட்டு காய்ச்சிய கஞ்சி. அதை பெரிய தகரப்பாத்திரத்தில் மொண்டு ஊற்றி கொண்டுவந்து தந்தான். முயலையும் நன்றாகவே சுட்டிருந்தான்.முயலிறைச்சி சீக்கிரமே உருகிவிடும். பதமாகச் சுடாவிட்டால் எலும்புதான் இருக்கும். மாங்காயை அனலில் சுட்டு பச்சைமிளகாயுடன் சேர்த்து சதைத்த துவையல்.

அவன் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது கீழே யானையின் ஓசை கேட்டது.

“அவனுகதான்… போயி கூட்டிட்டு வாலே”

கூமன் கீழே சென்றான். கஞ்சி குடித்து பாத்திரத்தை கழுவி குடிலில் வைத்துக் கொண்டிருந்தபோது லாத்தி மேலேறி வருவதை பார்த்தான். கூமன் கூட்டி வந்து கொண்டிருந்தான்.

பீடி பற்றவைத்துக் கொண்டு அவர்கள் வருவதை பார்த்துக் கொண்டிருந்தான். மேலிருந்து இறங்கி வர தாமதமாகும்.

மூச்சிரைக்க வந்து நின்ற லாத்தி உரக்க “இவன் என்னலே சொல்லுதான்? இருவது குப்பியா? இருவது குப்பிய வச்சு நான் என்னலே நொட்டுகது?” என்றான்.

“இருபதுதான் தேறும்…அம்பிடுதான்”

“லே இஞ்சபாரு, இது தொளிலு. நான் குடுக்கல்லேண்ணா அவன் மத்தவன் கிட்ட வாங்குவான். அங்க கணக்கு போச்சுன்னா பிறவு இங்க வரமுடியாது. இஞ்சபாரு, இந்த தொளிலிலே கூடுதல் ரிஸ்க் எடுக்குதவன் விக்குதவனாக்கும். அவனை வச்சுத்தான் வெளையாட்டே”

“அதுக்கு நான் என்ன பண்ண?”

“லே இதை இன்னும் காய்ச்சு… இன்னும் கொஞ்சம் காய்ச்சுலே…”

“இது மண்டி… இனிமே காய்ச்சினா சுண்டிரும்… பதம் கெட்டுப் போயிரும். ஒருநாள் இருந்தா நாளைக்கு ஒரு அஞ்சு தேறும்”

“குடிச்சா கிறுக்கு ஏறும்லா? பின்ன என்ன? காய்ச்சி குடுலே”

”அப்டி காய்ச்சப்பிடாது…”

“நீ என்ன தேவாமிர்தமா காய்ச்சுதே? லே சொன்னதக் கேளு… இல்லேண்ணா வேற ரெண்டு ஊறல எடு”

“அதுக வெளையல்ல… வெளைஞ்சத எடுத்தாச்சு…. நாலுநாள் களிஞ்சு வாரும் , இந்த ஊறலை இப்டியே வச்சா  இன்னும் கொஞ்சம் கனியும். இதிலே இருந்து இன்னும் இருபது குப்பி எடுத்து தாறேன்”

“எனக்கு இப்ப வேணும்… இந்நா இப்ப வேணும்…” லாத்தி வெறிகொண்டு கூச்சலிட்டான். “உனக்கு வேண்டாம்னா நீ போயி சாவுலே… நான் காய்ச்சுதேன். லே கூமா நீ காய்ச்சுலே…அடுப்ப எரி… நான்லா சொல்லுதேன்”

கூமன் பேசாமல் நின்றான்

“இல்லேண்ணா நான் ஆளை விளிச்சு கொண்டு வாறேன்… “ என்று லாத்தி திரும்பினான்.

நேசையன் பீடியை வீசிவிட்டு எழுந்து “நீ காய்ச்சுவியாலே? காய்ச்சிப் பாருலே” என்றான். “நீ என்ன நினைச்சே? உனக்கு இது சாக்கடை… எனக்கு அமிர்தம்தான்லே… எனக்க ஏசுவுக்கு நான் குடுக்கப்பட்டது இதுதான்… இதை தொட்டு பாரு… ஏலே ஆம்புளைன்னா தொட்டு பாருலே”

“உனக்க சாராயம் எனக்கு இனிமே வேண்டாம்லே…நான் வேற ஆளப்பாக்குதேன்”

“வேற ஆளை பாத்துப் போவும்வே… நான் வேண்டாம்னா சொன்னேன்? எனக்கு ஒரு மயிரானும் இதைக் குடிக்கணும்னு இல்லை. எனக்கு எவனுக்க பைசாவும் வேண்டாம். நான் காய்ச்சுதது எனக்க சத்தியத்துக்காக்கும்… இந்தா இனிப்பு மூத்து அதிலே கிறுக்கு ஊறி வருதுல்லா அதாக்கும் நானறிஞ்ச சத்தியம்…நான் ஜெவம் செய்யுதது அந்த சத்தியத்தையாக்கும்”

சட்டென்று அவன் குரல் உடைந்தது. “ஒண்ணு தொட்டா பத்து கெட்டுப் போவுது. ஒருமையிலே மனசு நிக்கேல்ல… காய்ச்சிக் காய்ச்சி நான் போற எடம் தெளியல்ல…” திரும்பி கூனைகளைப் பார்த்து “எளவு இந்த சனியனுகளை வச்சு…. நான் சாவுதேன்…” என்று கூவியபடி பாய்ந்து தடியை எடுத்து அவற்றை அடித்து உடைக்க பாய்ந்தான்.

கூமன் “அண்ணா, என்ன இது… அண்ணா!” என்று பாய்ந்து வந்து கட்டிக்கொண்டான். லாத்தி அவனைப் பிடித்து நிறுத்தினான்

“லே, என்னலே இது… நான் என்னமோ எனக்க மனசுக்க வேவலாதியச் சொன்னேன்… லே விடு… என்னலே இது” என்றான் லாத்தி . அந்தக் கழியை பிடுங்கி அப்பால் வீசினான். “கொண்டுபோலே அந்ந்தாலே”

கூமன் அவனை இழுத்துக்கொண்டுபோய் அமரச்செய்தான்.

“நான் சாவுதேன்…நான் செத்து ஒளியுதேன்… எனக்கு வரல்ல…எனக்க கையிலே அருளில்லை” நேசையன் தன் தலையில் அறைந்துகொண்டு அழுதான்.

கூமனும் மாணிக்கமும் அவனை திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர். நேசையன் தன் கால்முட்டில் தலைசாய்த்து அமர்ந்தான். உடலை குறுக்கிக்கொண்டு அவ்வப்போது விதிர்த்துக்கொண்டிருந்தான்.

“அண்ணா”என்று கூமன் மிக மெல்ல அழைத்தான். “கொஞ்சம் குடிக்குதியளா?”

நேசையன் வேண்டாம் என்று தலையசைத்தான்.

“கதளிப்பளம் போட்டு வைச்சது இருக்கு”

“வேண்டாம்”

“எடுலே” என்றான் லாத்தி “எனக்கு வேணும்’

கூமன் அந்த சிறிய பானையை எடுத்து கொண்டுவந்து கலக்கி சற்று தெளியவிட்டு உள்ளிருந்து மேலே தேங்கிய சாராயத்தை ஒரு தகரப்போணியால் மெல்ல எடுத்து இன்னொன்றில் ஊற்றிக் கொண்டுவந்து கொடுத்தான். கதளிப்பழம் கருத்து சுருங்கி அடியில் தேங்கியிருந்தது

லாத்தி முகர்ந்து பார்த்து முகம் மலர்ந்தான். “லே நேசையா, இது தேவாமிர்தமாக்கும்… சத்தியமாட்டு உனக்கை கைப்புண்ணியம் இந்த மலையிலே ஒருத்தனுக்கும் இல்லை. நான் உனக்க அப்பன் காய்ச்சினதையும் குடிச்சவனாக்கும்… சத்தியமா சொல்லுதேன், இது உனக்க கையிலே இருக்க அருளுடே”

“இல்ல” என்று வேறெங்கோ பார்த்தபடி நேசையன் சொன்னான் .“அதிலே மணம் கனியல்ல”

“நீ என்ன சொல்லுதே? கிறுக்காலே உனக்கு? லே இஞ்சபாரு, இதுக்குமேலே என்னத்த ஒரு சாராயம்? ஏலே எந்தச் சீமைச்சாராயம் இதுக்கு பக்கத்திலே வரும்? குப்பிக்கு ஐயாயிரம் வெலையுள்ள சரக்க நான் குடிச்சிருக்கேன். அதெல்லாம் இதுக்க ஒரு சொட்டுக்கு சமானம் கெடையாது. இது இந்த மலைக்க மனசு கனிஞ்ச இனிப்பாக்கும்… ஏலே இனிப்பிலே எளுந்த கிறுக்குன்னு சொன்னியே அது இதாக்கும்”

“கனியல்ல…. இன்னும் நல்லா கனியல்ல” என்றான் நேசையன்.

“சும்மா மோணையன் மாதிரி பேசப்பிடாது”

“எனக்கு தெரியும்”

“என்ன மயிரு தெரியும் உனக்கு? சும்மா நீயே என்னமாம் நினைச்சுக்கிடுதே. என்னமோ எங்கியோ வெளைஞ்சு கிடக்கு, நீ அங்க போவ முடியல்லன்னு நினைச்சுகிடுதே. அப்டி ஏன் நினைக்கே தெரியுமா? உனக்க திமிரினாலே. நீ பெரிய இவன்… மலைக்கடுத்தா சாமிக்க சொந்தக்காரன்..”

நேசையன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். லாத்தி குரலை தழைத்தான். “லே, இஞ்சபாரு. ஒவ்வொண்ணுக்கும் அதுக்கான லிமிட் உண்டு பாத்துக்க… ஏன்னா நாம மனுசனுங்க… தேவன்மாரோ கெந்தர்வன்மாரோ இல்லைல்லா? மனுசன் போற தூரம் அம்பிடுதான்…”

“நான் இதைக்காட்டிலும் போனதுண்டு”

“அப்ப ஏன் மறுக்கா அங்க போகல்ல? அதைச் சொல்லு…”

நேசையன் பேசாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தான்.

“சொல்லுலே, ஏன் அதை மறுக்கா உன்னாலே செய்ய முடியல்ல? ஏன்னா அது உனக்க திறமை இல்லை. நீ அதை படிச்சு செய்துகிட முடியாது. அது என்னமோ கடவுளருளாலே நடக்குது… இந்த காட்டிலே என்னென்ன நடக்குது. அம்பது வருசம் சும்மா நின்ன மரம் பூத்து காய்விடுது. அம்பது வருசம் செடியா நின்னது சட்டுன்னு மரமாயிடுது… இதெல்லாம் நமக்கு என்னத்த தெரியும்…?”

லாத்தி அவனருகே வந்து அமர்ந்தான். “அதெல்லாம் கடவுளுக்க வெளையாட்டு… மக்கா நீயில்லலே நானாக்கும் இதையெல்லாம் நடத்துகதுண்ணு நம்ம கிட்ட சொல்லுதாரு கடவுள். மனுசன் கடவுளா ஆக ஆசைப்படக்கூடாது பாத்துக்க. அத அந்தாலே விட்டிரு… இந்நா நீ காச்சினியே இதுக்க குணமுள்ள ஒரு துள்ளி தேவன்மாரு குடிச்சிருக்க மாட்டாக. இந்த மலைக்காட்டு தெய்வங்கள் குடிச்சிருக்க மாட்டாக. என் மகன் சத்தியநேசன் மேலே ஆணையாட்டு சொல்லுதேன்… உள்ளதாக்கும்”

லாத்தி நேசையனின் தோளில் தொட்டு சொன்னான். “சொன்னா கேளு… இதாக்கும் உனக்க ஜெயம்… இதுக்கு மேலே என்னமோ உண்டுண்ணு சொல்லி அலையாதே. செத்திருவே… காட்டிலே ஒரு மாயப்பொன்னு உண்டுண்ணு சொல்லுவாக, கேட்டிருக்கியா?. மாயப்பொன்னாக்கும் கடுத்தா சாமிக்க வெளையாட்டு. மஞ்சள் வெளிச்சத்த காட்டி பொன்னு பொன்னுன்னு அலையச்செய்வான். அதை தேடிப்போறவன் நடுக்காட்டிலே திக்கறியாம நிப்பான். அங்க சோறும் தண்ணியுமில்லாம கெடந்து அலறி விளிப்பான். அவனை கடுத்தா கேறிப்பிடிக்கும். குருதிகுடிச்சு மாம்சம் தின்னும்”

மேலும் கனிந்த குரலில் “மஞ்சமலைக்கு பொறத்தாலே ஒரு எடமிருக்கு. அங்க மண்டையோடுகள் கெடக்கும். நான் கண்டிருக்கேன். எல்லாம் மாயப்பொன்னு தேடிப் போனவனுக. நம்ம காணிக்காரன் உறுமனாக்கும் சொன்னது… வேண்டாம்லே. இதுவும் ஒருமாதிரி மாயப்பொன்னாக்கும்” என்றான் லாத்தி.

நேசையன் கண்ணீருடன் “பின்ன நான் என்னத்துக்கு சீவிக்கணும்?” என்றான். “இந்தா இதை நான் காச்சியாச்சே. எப்ப வேணுமானாலும் காச்சுவேனே. பிறவு என்ன? இனி என்னத்துக்கு இந்தக்காட்டிலே கெடக்கணும்?” என்றான்.

“இதெல்லாம் நீ கடவுளுகிட்ட கேக்கவேண்டியது”

“ஒரு மாயப்பொன்னு இருக்கட்டும்… அதைத் தேடிப்போறேன். போறவளியிலே சாவுதேன்… அந்தச் சாவு வரை நினைக்கவும் சொப்பனம் காணவும் என்னமாம் இருக்கும்”

“நீ வெளங்கமாட்டே”

நேசையன் புன்னகைத்தான்.

“இருபது லிட்டர் இருக்கு… பரவாயில்ல… இந்தா இந்த ரெண்டுலிட்டர் கதளிப்பழச் சாராயமும் அம்பது லிட்டருக்கு சமானமாக்கும். அருமனையிலேயும் கொலசேகரத்திலயும் நல்ல குடும்பக்கார பெருவட்டன்மாரும் நாயன்மாரும் இதுக்கு கேட்ட பைசா குடுப்பானுக… நான் கொண்டு போறேன்” என்றான் லாத்தி. “நீ உனக்கு பிடிச்ச மாதிரி காச்சு… எனக்கு ஒண்ணுமில்ல”

நேசையன் தலையசைத்தான்.

லாத்தி “லே போலாமாலே?”என்றான்.

“கூமன் “கெளம்பலாம் அண்ணாச்சி” என்றான்.

குப்பிகளை சாக்கில் அடுக்கி கட்டி இருவரும் தோளில் ஏற்றிக்கொண்டனர். லாத்தி “லே நேசையா, இந்த கதளிச்சாராயத்திலே ஒரு குப்பி உனக்கு வச்சிருதேன்லே” என்றான்.

“வேண்டாம்” என்றான் நேசையன் ‘கொண்டுபோங்க.”

“கொஞ்சம்…”

“வேண்டாம்…கொண்டுபோங்க”

“உள்ளதத்தான் சொல்லுதியா? கொண்டுபோனா எனக்கு பொன்னுவிலையாக்கும்.”

“கொண்டுபோங்க”

“செரி”

லாத்தி அதையும் எடுத்துக்கொண்டான். அவர்கள் மலையேறி பாறையின்மேல் தோன்றி அப்பால் சென்று மறைந்தனர். நேசையன் வெறுமே காட்டைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். அதுவரை இருந்த மேகமூட்டம் விலகி வடக்காகச் செல்லத் தொடங்கியது. வானம் மேகப்படலம் பிளந்து வெண்மைகொண்டது. விடிவதுபோல காடு வெளிச்சமாகியது. ஈரமான இலைகள் பளபளத்து அசையத் தொடங்கின. பாறைகளின் மொட்டை வளைவுகள் மின்னின. ஆற்றின் நீரலைகளில் வெளிச்சம் அலையடித்தது.

காற்றில் மென்மையான நீர்த்துளிகள் இருந்தன. கையிலிருந்த முடிமேல் அவை பூம்பொடி போல படிந்து கையே நரைத்துவிட்டது போல தோன்றியது. உதறியபோது நீர் சொட்டியது.

கூமன் திரும்பி வந்தான். “அண்ணா அப்டியே இருக்கியளா?”என்றான். “பேசிக்கிட்டே போறாரு. உங்களைப் பத்தியாக்கும் பேச்சு” என்றான்.

நேசையன் ஒன்றும் சொல்லவில்லை.

“அவரு சொல்லுதாரு, உங்களை கடுத்தா பிடிச்சுப் போட்டுதுன்னு. கடுத்தா பொன்னு காட்டியாக்கும்  மனுசனைப் பிடிக்குதது” என்றான் கூமன்

“பீடி இருக்காலே?” என்றான்.

“இருக்கு அண்ணா.”

கூமன் அதை பற்றவைத்தே தந்தான். நேசையன் அதை ஆழ இழுத்து காட்டின் ஈரமான ஒளியை பார்த்துக்கொண்டிருந்தான்.

“மறுக்கா விடிஞ்சது மாதிரி ஆயிட்டே. அண்ணா கஞ்சி சூடா இருக்கு, குடிக்குதியளா?

“இல்லடே, நான் இப்பம்தானே குடிச்சேன்”

“நான் குடிக்கட்டா?”

“குடிச்சுகிட்டு நீ உறங்கு கேட்டியா?”

“செரி அண்ணா” அவன் கஞ்சியை தகரப்பாத்திரத்தில் அள்ளினான். “கடுத்தா பொன்னுக்க நெறமாக்கும், பாத்தவவனுக சொல்லுதானுக” என்றான். “நல்ல பொன்னுருக்கி நீட்டி சன்னமா கம்பியாக்கி அதை மினுங்குத முடியாக்கி செய்தது மாதிரி இருக்குமாம். கண்ணிலே பச்சைப்பொன்னு மின்னும்னு சொல்லுதானுக”

அவன் கஞ்சி குடித்து சிறுநீர் கழித்தபின் “அப்ப நான் உறங்குதேன் அண்ணா” என்று பரண்மேல் ஏறிச்சென்றான்.

நேசையன் கீழே கல்மேல் அமர்ந்திருந்தான். அங்கே அமர்ந்திருக்க எந்த தேவையும் இல்லை. இன்னொருமுறை காய்ச்சியிருக்கலாம். இன்னும் நாலைந்து லிட்டர் கிடைக்கும். ஆனால் எழுந்து அதைச் செய்யத் தோன்றவில்லை.

காற்று எல்லா திசைகளில் இருந்தும் அடித்துக் கொண்டிருந்தது. சென்றவழியிலேயே மீண்டு வந்தது. காற்றில் மணம் பெற்ற கிழவி உறுமியது. அது அங்கே எங்கோதான் இருந்திருக்க வேண்டும்.

கையை மார்பில் கட்டிக்கொண்டு நேசையன் அமர்ந்திருந்தான். அவன் மனம் வெறுமையாக இருந்தது. வழக்கமாக தொட்டுத் தொட்டு ஓடும் எண்ணங்கள் ஏதுமில்லை. தனிமை, ஆனால் அது அழுத்தவில்லை. இதமான காற்றுபோலவோ, மென்மையான மணம் போலவோ இருந்தது.

அவன் விழித்துக்கொண்டபோதுதான் தூங்கியிருப்பது தெரிந்தது. பக்கவாட்டில் சரிந்து பாறையில் சாய்ந்திருந்தான். தலைசரிந்து எச்சில் மார்பில் வழிந்திருந்தது. சுற்றிலும் நல்ல வெளிச்சம். பகல் போலிருந்தது. அண்ணாந்து பார்த்தான். நிலவு வெண்ணிறமாக தலைக்குமேல் வட்டமாக நின்றிருந்தது. இன்றைக்கு பௌர்ணமியா? இல்லையே, அதற்கு இன்னும் இரண்டுநாட்கள் இருக்கின்றன. தூங்கியதனால் இருக்கலாம், கண்கூசும் ஒளி. ஒவ்வொன்றும் மின்னிக்கொண்டிருந்தன. பாறைமொட்டைகள் எல்லாம் கண்ணாடிபோல தெரிந்தன.

மெல்லிய சொட் சொட் ஒலியை அவன் கேட்டான். என்ன அது என்று எழுந்து சென்று பார்த்தான். ஊறல் சொட்டுகிறதா? ஆனான் அனல் இல்லையே. ஒருவேளை காற்றில் தீ கனன்றிருக்கலாம். அவன் குடிலுக்குள் சென்று பார்த்தபோது செம்புக்குழாயின் மூக்குநுனி ஊறி துளித்துச் சொட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்தான்.

கீழே தகரப்போணியை வைத்திருந்தான் கூமன். அதில் சொட்டு கனிந்து திரண்டு ஒளிகொண்டு முத்தாகி நீண்டு உதிர்ந்து விழுந்து கொண்டிருந்தது. மிகமிக மெல்ல. யோசித்து யோசித்து சொட்டுவதுபோல. ஒரு ஒரு சொல்லாக. அது கடிகாரத்தின் ஓசை என்றால் காலம் ஐம்பதில் ஒருமடங்கு வேகம் குறைந்துவிட்டது.

சொட்டிச் சொட்டி, சொட்டும் வேகம் மேலும் குறைந்தது. ஒரு சொட்டுக்குப்பின் நீண்ட தயக்கம். இன்னொரு சொட்டு. கடைசிச் சொட்டு மூக்கு நுனியிலேயே நீண்டநேரம் நின்றது. ஒளிகொண்டு  பிறகு உதிர்ந்தது.

அவன் அந்த சாராயத்தை எடுத்துப் பார்த்தான். அவன் கதளிப்பழம் இட்டு வற்றவைத்த  சாராயத்தில் பழமணம் ஓங்கியிருந்தது. ஆனால் இதில் மிகமென்மையாக ஒரு ஞாபகத்தின் அளவுக்கே அந்தமணம் இருந்தது. எடுத்து முகர்ந்து பார்த்தான்.

நெஞ்சு திடுதிடுவென அடித்துக்கொண்டது. மீண்டும் முகர்ந்து பார்த்தபோது உறுதியாயிற்று. அதுதான், அவன் காத்திருந்ததுதான். ஒருமுறை தோன்றி பின் மறைந்து விளையாடிய தெய்வம்தான்.

அவன் அதை முகர்ந்தபடியே இருந்தான். “லே, கூமன், லே” என்று அழைத்தான். பிறகு அவனை அழைக்கவேண்டாம் என்று தோன்றியது. அப்போது எவரும் உடனிருப்பதை விரும்பவில்லை. குனிந்து அதைப்பார்த்தான். இளம்பொன்னிறம். நிலவில் தூக்கி காட்டினான். பொன், உருகிய பொன்!.

நாளை லாத்தியிடம் காட்டவேண்டும். பார் என்று சொல்ல வேண்டும். என்னால் முடியும். நான் சென்று சேரமுடியும். குடித்துப்பார், இன்னொரு முறை ஒரு துளி உன் நாவில் படுவதற்காக நீ வாழ்க்கையை இழக்கவும் துணிவாய். கொல்வாய், சாவாய், அனைத்தையும் இழப்பாய், கிறுக்கெடுத்து அலைவாய்.

பின்பு ஓர் எண்ணம் வந்து அவன் புன்னகைத்தான். ஏன் அதை இன்னொருவருக்குக் காட்டவேண்டும்? அதை முழுமையாகவே குடித்துவிடவேண்டும். ஒரு சொட்டு மிச்சமில்லாமல். குவளையில்கூட மணம் எஞ்சாமல். அது நிகழ்ந்ததைக்கூட எவரிடமும் சொல்லக்கூடாது.

அவன் அந்தக்குவளையுடன் நடந்து சென்று கீழே ஆற்றின்கரையில் ஒளிகொண்டு நின்ற மொட்டைப்பாறை மேல் ஏறினான். அதில் கால்நீட்டி அமர்ந்து அதை எடுத்து முகர்ந்தான். மெல்ல கையில் வைத்து சுழற்றி அது ஆவியாகி மூச்சில் கலக்கவைத்தான். நாவூறியதும் துளித்துளியாக குடித்தான்.

காற்று ஒழுகும் ஓசையும் நீரின் சலசலப்பும் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. நிலவொளி மென்மையாக அலைகொண்டிருந்தது. தூரத்தில் இலைகள் தகடுகளாக பளபளத்தன.

அவன் குவளையை அண்ணாந்து இறுதித்துளியையும் நாவில் விட்டுக்கொண்டான். குவளையை அப்பால் கவிழ்த்து வைத்தான். கைகளை விரித்துக்கொண்டு பாறையில் படுத்திருந்தான். பாறை மிகமிக மென்மையானதாக இருந்தது. சேறு போல குழைந்தது. பிறகு பஞ்சாகியது. பின்னர் நுரையாக மாறியது.

அவன் தலைக்குமேல் இருந்த நிலவைப் பார்த்தான். மிகப்பெரிய நிலவு. மலைப்பகுதிகளில் நிலவு இளஞ்செந்நிறமாகவே இருக்கும். அன்று அது மஞ்சள்நிறமாகத் தோன்றியது. பின்னர் பால்வெண்ணிறமாக மாறியது. கண்களை நிறைக்கும் வெண்ணிற ஒளி. கூசவைக்கும் ஒளி.

அவன் நோக்கிக்கொண்டிருக்க ஒரு பட்டுநூலில் கட்டி இறக்கப்பட்டதுபோல அது கீழே வந்தது. மிக அருகே. ஆனால் அளவில் பெரிதாகவில்லை. சுடர்விடும் வெண்ணிறமான தாம்பாளம்போல. அவன் எழுந்து அமர்ந்து பார்த்தான். நேர்முன்னால் அது நின்றது. தொட்டுவிடும் தொலைவில். குளுமையான வெண்ணிற ஒளியுடன்.

அவன் மிகமெல்லிய மூச்சொலியைக் கேட்டான். செவி அடிபடும் ஒலி. அவனுக்கு தெரிந்திருந்தது. ஆகவே தலைதிருப்பிப் பார்த்தபோது அவன் வியப்படையவில்லை. மென்முடிகள் நிலவில் பொன் என ஒளிவிட, தீ மின்னும் கண்களுடன், அமர்ந்தநிலையிலேயே ஆளுயரத்தில், அவனருகே அந்தப் பெரும்புலி தெரிந்தது.

***

முந்தைய கட்டுரைஅறத்தொடு நிற்றல் – கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–42