சூழ்திரு, குருவி -கடிதங்கள்

சூழ்திரு [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

 

சூழ்திரு கதையை வாசித்தேன். வீட்டில் அனைவருடன் அமர்ந்து இன்னொருமுறை சத்தமாக வாசித்தேன் [என் வீட்டின் பெயர் ஸ்ரீனிவாசம். சூழ்திருவின் ஏகதேச மொழிபெயர்ப்புதான்]

 

டீடெயில்கள்தான் கதையின் பலம். அப்பா டீயை சுவைத்துக் குடிப்பதில் தொடங்குகிறது. அவருடைய சுவையில் தொடங்கி நூல்பிடித்ததுபோல செல்கிறது. அவருடைய ருசி நுட்பமானது. நுட்பத்தை தேடுவது. அவியலில் எங்கே எப்போது தயிர் விடவேண்டும் என்று அவர் சொல்கிறார். இடைக்கா தாளம் எப்படி சோபானப்பாட்டில் கலக்கவேண்டும் என்று சொல்கிறார். [ஃபைபர் வந்ததும் நல்ல தவில் சத்தம் காதில் விழுவதே இல்லாமலாகிவிட்டது]

 

அந்த ரசனைதான் அவர். அழகான ரசனை. எல்லாவற்றையும் ரசிக்கிறார். கார் அவருக்கு பொருட்டே இல்லை. மாடைத்தான் பார்க்கிறார். மாடு கம்பீரமாக இருக்கவேண்டும். வேகமெல்லாம் தேவையில்லை. நாதஸ்வரம் கேட்கவேண்டும் என்றால் சீவல் வேண்டும். சாப்பாட்டில் ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய சுவை.

 

ருசியாகத்தான் தெய்வம் மனிதனுக்குமுன் வரவேண்டும் வேறு வழியே இல்லை என்ற வரிதான் கதையின் மையம். எந்த ருசிரா ராம ஏமிருசிரா ராம ஓ! ராம என்ற தியாகையரின் வரிதான் ஞாபகத்திற்கு வந்தது

 

 

ஸ்ரீதர்

 

 

அன்புள்ள ஜெயமோகன்,

 

இலக்கியத்தின் நுணுக்கமான,நுட்பமான இயல்புகளையும்,ருசிகளையும் தெரிந்து கொண்டு அனுபவிக்க வாசகர் முகாம் அனுபவங்கள் கூடுதல் உதவியாக இருக்கும் என்று விரும்பியது கைகூடாத நிலையில் கொரோனா புண்ணியத்தில் வாசகர்களுக்கு ஒரு ஜாக்பாட் அடித்திருக்கிறது.

 

ஊரெல்லாம் வாசிப்பு சுவையறியாதவர்கள் வீட்டை சிறையென எண்ணிப் புலம்பும் போது நம் இணையதளத்தில் ஒரு இலக்கியக் கொண்டாட்டம் நடக்கிறது.தினம் வெண்முரசுடன் ஒரு குதூகலக் கதை.ஒவ்வொரு கதையையும் வாசிக்கும் ஒவ்வொரு வாசகரும் வித விதமான கோணங்களில் ஆய்ந்து எழுதும் கடிதங்கள் முகாமின் பணியைச் செய்கின்றன.பல கடிதங்கள் பொறாமையைக் கிளப்புகின்றன.நாம் யாரின் அருகாமையில் வாழ்கிறோம் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

 

கரடிநாயரின் தலைமையில் பெருவட்டர்,டீக்கனார், தவளைக்கண்ணன்,அனந்தன் கும்பல் அடிக்கும் லூட்டி தாங்க முடியவில்லை.  ஆனை,குரங்கு,நாகம்,மலைப் பாம்பு,நாய்,பூனை போன்ற புலி எல்லாம் உறவினர்கள் போல் ஆகி விட்டன.அதுவும் ஆனையில்லாக் கதையே இல்லை.ஆனை  பாத்திரமாக இல்லாத ‘லூப்’,இன்று வெளியான ‘சூழ்திரு’ கதைகளில் கூட ஓரிரு வரிகளில் தலை காட்டி விட்டுச் செல்கிறது.

 

நேரடி அனுபவக் களத்திலிருந்து உருவான கதைகளை இலக்கியம் தீண்டும் போது பெறும் விளைச்சல்களை வானில் அலைகின்றன குரல்கள்,சுற்றுகள்,லூப்  என்ற தொலை தொடர்புக் கள கதைகள்  நிரூபிக்கின்றன.வேட்டு போன்ற கதைகள் நேரடி அனுபவம் தேவையில்லை என்றும் சொல்கின்றன. கொரோனாவால் விளைந்த நன்மைகளில் ஒன்று இந்த இலக்கியக் கொண்டாட்டம்.நன்றி.

 

 

சாந்தமூர்த்தி

மன்னார்குடி.

 

குருவி [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

 

குருவி சிறுகதையை வாசித்தேன். எங்கள் வாட்ஸப் குழுமத்தில் இதை ஆடியோவாக பதிவுசெய்து பகிர்ந்துகொண்டேன். பலபேர் அதைக் கேட்டால்தான் ரசிக்கிறார்கள்.

குருவி கதையின் அழகு அதன் ஒட்டுமொத்தமான அமைப்புதான். மாடன்பிள்ளை கலைஞன். ஆகவே அவன் தன்னை கோமாளியாகவே ஆக்கிக்கொள்கிறான். மேமாசம் தண்ணீர் விடாததற்கு டிசம்பரில் கேரள பஸ்ஸை மறிப்பதும், போலீஸ் ஸ்டேஷனில் சலம்புவதும், அடிவாங்குவது நல்ல போதை என்றும் சொல்வதும் எல்லாம் அவனை நினைத்து புன்னகைக்க வைக்கின்றன

 

அதிலும் ஆறுமுகம் அவனிடம் ஒவ்வொன்றாகச் சொல்கிறார். அப்பா என்கிறார். அம்மா என்கிறார். சாமி என்கிறார். அவன் எல்லாவற்றையுமே வசைபாடுபவன். அவனுக்கு ஒன்றுமே பொருட்டு இல்லை. அவனுடைய கலை மட்டும்தான். நானே பிரம்மம் நானே கடவுள் என்கிறான். அந்தக்கலைஞனுக்கு கர்வபங்கம் குருவியால் நடைபெறுகிறது.

 

குருவியால் கர்வபங்கம் அடைந்தாலும் இந்த பூமி முழுக்க நிறைந்திருக்கும் கலையை குருவியாக அவன் கண்டுகொள்கிறான். அந்தக்குருவியாக தன்னை உணரும்போது நிறைவடைகிறான்

 

எம்.சந்திரசேகர்

 

 

ஜெ.வணக்கம்

 

 

 

குருவி கதை படித்தேன். மீண்டும் தொலைப்பேசித்துறை தொடர்பான ஒரு கதை.இந்த வகையில் இது மூன்றாவது என எண்ணுகிறேன்.

 

மாந்தருக்கு அழகால்.செல்வத்தால் ஞானத்தால் செருக்கு வரும் என்பார்கள் மாடன் பிள்ளைக்கு அவனிடம் மட்டுமே இருக்கும் ஞானத்தால் செருக்கு உள்ளது. அதனால்தான் தன்னை மிஞ்சி யாரும் இல்லை என்னும் உணர்வு ஆழ் மனத்தில் படிந்துள்ளது. அதனால்தான் தந்தை.தாய். கடவுள் மற்றும் அதிகாரிகள் என எல்லாரையும் துச்சமாக மதிக்கிறான். இதை அவன் வாயிலிருந்து வரும் சொற்கள் வழி நன்கு வாசகர் மனத்தில் படியும்படி உணர்த்தியிருக்கிறீர்கள். அதே நேரத்தில் கலைஞனை மனிதன் என்னும் வட்டத்தில் அடைக்காதீர்கள் என்கிறான் மாடன் பிள்ளை.

 

ஆமாம்.நேர்மையான கலைஞனிடத்தில் ஏதோ ஒரு கிறுக்குத்தனம் உள்ளதைப் பரவலாக உலகில் பார்க்கிறோம். அதையும் மாடன் சிறையில் அடைபடுவதையும், அங்கு அடிபடுவதையும் நீங்கள் காட்டித் தெரிவிக்கிறீர்கள்.ஆனால் ஒரே நொடியில் அவன் செருக்கு காணாமல் போகிறது. கூட்டைப் பார்த்தவுடன் தான் செய்வதெல்லாம் சாதாரணம் என்று அவனுக்குத் தோன்றுகிறது. தன் செயல் அவனைத் தாழ்த்தும் கழிவிரக்கமே அவன் அழுகை. இதை எழுதாமல் மறைமுகமாக அருமையாக உணர்த்தி உள்ளீர்கள்.

 

தன்னைப் பெரிதாக நினைத்தவன் அதே துறையில் ஒரு சிறு குருவி தன்னை விடத் திறமையாக இருப்பதைப் பார்க்கிறான். தன்னை மிகச் சாதாரணம் என்றெண்ணிக் கடைசியில் மன்னிப்பும் கேட்க வேண்டாம் என்கிறான்.கதையில் சொல்லியிருப்பதை விட வாசகரை நிறைய ஊகிக்கவைப்பதே தங்கள் வெற்றி என நான் எண்ணுகிறேன்.

 

வளவ.துரையன்

 

முந்தைய கட்டுரைலூப்,சுற்றுக்கள் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎழுகதிர் [சிறுகதை]