குருவி [சிறுகதை]
அன்புள்ள ஜெ
குருவி கதை படித்தேன். இந்த வரிசை கதைகளில் இதேபோன்ற எளிமையான நேரடியான கதைகளே எனக்கு மிகவும் பிடிக்கின்றன. இந்தக்கதையை நான் வேறு ஒருவகையில் என் மகனுக்குச் சொன்னேன். அவனுக்கு ஐந்து வயது. அவனுக்கு அந்தக்கதையின் சாராம்சம் புரிந்ததைக் கண்டதும் ஆச்சரியமாக இருந்தது. ஏற்கனவே எழுதிய லூப் கதையையும் அவனுக்குச் சொல்லியிருந்தேன்.
கொரோனாக்கதைகளில் இந்தவகையான சில கதைகள் கிளாசிக் வகை. கிளாசிக் வகை கதையை எந்த வடிவிலும் சுருக்கலாம். நாடகமாக கூட போடலாம். [குருவி ஒரு நல்ல ஓரங்கநாடகம். யாராவது அதை எழுதி நடிக்கலாம்]
குருவி கதையில் அவன் தன்னுடைய ஆணவத்தை இழந்தான், தான் சின்னவன் என்று புரிந்துகொண்டான் என்பதுதான் முதலில் தோன்றியது. ஆனால் அடுத்து தோன்றியது, அப்படி அல்ல. அவன் இன்னும் பெரிய ஒரு செல்ஃபை அடைகிறான். தன்னை அந்தக் குருவிபோல என்று உணர்கிறான். இங்கே வந்து வந்து செல்லும் எல்லா ஆர்ட்டிஸ்ட்களும் ஒரே குருவிதான். அதுதான் அவன். அவனே மைக்கேலாஞ்சலோ. அவனே ராஜா ரவிவர்மா. அவனுடைய அந்த செல்ஃப் வளர்ந்து உருவாகும் அந்த உச்சம்தான் உண்மையில் கதையின் மையம்
அவன் ஆணவம் அழிகையில் மேலும் பெரிய செல்ஃப் அவனுக்கு கிடைக்கிறது. அவன் ஒரு குருவியாக மாறிவிடுகிறான். இனி அவனுக்கு உலகத்தின் அங்கீகாரம் தேவையில்லை. புகழ் தேவையில்லை. குருவியைப்போல தன் ஆத்மார்த்தமான இயல்பினாலேயே அவன் கலையை உண்டுபண்ணுவான்
ராகேஷ்
அன்புள்ள ஜெயமோகன்,
கண்ணதாசனின் உதவியாளர் இராம.கண்ணப்பன் கவிஞரைக் குறித்து எழுதிய நூலொன்றில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். கவிஞருடனேயே பல காலம் உடனிருந்து அவரது வரிகளை எழுத்தாக்கியவர் அவர். ஒரு கட்டத்தில் இராம.கண்ணப்பனுக்கும் அவரது இரு நண்பர்களுக்கும் (அவர்களும் கவிதை எழுதுபவர்கள்) மெட்டுக்குப் பாடல் எழுதும் ஆசை பிறக்கிறது. நாமும் எழுதிப் பார்க்கலாமே என்று தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். அந்த ஆசையை கவிஞரிடமே தெரிவிக்கிறார்கள். அவரும் அவர்களை ஊக்குவித்து, இசையமைப்பாளர் அவருக்கு அளித்த ஒரு மெட்டை அவர்களுக்குத் தருகிறார்.
அந்த மெட்டின்படி அவர்கள் ஒரு பாட்டை எழுதலாம் என்றும் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். இவர்கள் மூவரும் அந்த மெட்டை வைத்து நாட்கணக்கில் உருட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவருக்கும் உருப்படியாக ஒரு வரி கூட தோன்றவில்லை. முடிவில் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு கவிஞரிடம் சென்று தங்களால் பாடலை எழுதமுடியவில்லை என்கிறார்கள். கவிஞர் ஆச்சர்யத்துடன், ஏன் உங்களால் முடியவில்லை, அது எளிமையானதுதானே என்று சொல்லி, உடனே அந்த மெட்டுக்கான வரிகளைச் சொல்கிறார். பத்து நிமிடங்களுக்குள் ஒரு பாடல் தயாராகிவிட்டது.
“குருவி” கதையை வாசித்ததும் இந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. கலைஞர்கள் வேறு ரகம், அவர்கள் வெறும் தொழில்நுட்பவாதிகள் அல்ல. தொழில்நுட்பவாதிகளால் ஒரு படைப்பை உருவாக்கமுடியும், அதற்கு உயிரளிக்கமுடியாது. கலைஞர்களின் படைப்பில் கலையரசியின், வாக்தேவியின் ஒரு மெல்லிய தொடுதல் நிகழ்ந்திருக்கும். அதை முழுக்க உணர்ந்தவர்களாதலால், மெய்யான கலைஞர்கள் ஒருபோதும் தன்னுடைய படைப்பை தன் படைப்பு என சொந்தம் கொண்டாடுவதில்லை, அது அவர்கள் வழியாக வந்தது என்பதை உணர்ந்திருக்கிறார்கள். தாங்கள் வெறும் புல்லாங்குழல்கள் மட்டுமே, இசை வேறெங்கிருந்தோ வந்தது என்பதைத்தான் அவர்கள் வெவ்வேறு வகையில் வெளிப்படுத்திக்கொண்டேயிருக்கிறார்கள்.
மாடன் பிள்ளை அப்பழுக்கற்ற கலைஞனாக இருப்பினும், அதுகுறித்த ஒரு செருக்கு அவனிடம் இருக்கிறது. அதுவே அவனுக்கு, தான் பிறரை விட உயர்ந்த பீடத்தில் இருப்பதாக ஒரு நிமிர்வை அளிக்கிறது. அது உண்மையென்றபோதிலும், கதையின் முடிவில் அவன் தன்னை விடப் பெரியதொரு கலைஞனைக் கண்டுவிட்டிருக்கிறான். ஒரு அடைக்காய்ப் பாக்கு போல இருக்கும் சிறிய குருவி அவனது கலைச்செருக்கை இல்லாமலாக்கிவிடுகிறது. அச்சிறிய குருவியின் முன் அவன் மிகக் குள்ளமானவனாக ஆகிவிடுகிறான். அந்த தரிசனத்தை அடைந்தபின் அவனுக்கு ஆணவம் இல்லை, அகந்தை இல்லை, மேல் கீழ் என்ற எந்த பேதமும் இல்லை. யாரும் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டாம் என்ற முடிவிற்கும் வருகிறான்.
கலை என்பது வேலையல்ல.. அதைத் தாண்டிய ஒரு மகத்துவம்.. அந்தக் குருவியின்முன் தானும்கூட ஒரு கலைஞனில்லை, வெறும் வேலைக்காரன்தான் என்பதை உணர்கிறான், நான் என் வேலையைச் செய்கிறேன் என்று சொல்வது இதை உணர்ந்ததால்தான். “வேலை” என்ற சொல்லை அவன் பயன்படுத்துவதேகூட மாபெரும் இந்த தரிசனத்தைக் கண்டுகொண்டதால்தான் அல்லவா?
மிக்க அன்புடன்
கணேஷ்பாபு
சிங்கப்பூர்
லூப் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
லூப் கதையை ஒரு மனக்கிளர்ச்சியுடன் வாசித்து ஒரு ஆழமான சோர்வை அடைந்தேன். அந்தக் காடு நம் நாகரீகத்தின் நடுவே ஒரு லூப். அந்தப்பாம்பும் அதுபோல ஒரு லூப். அந்தப் பாம்புப்படத்தை நீங்கள் பச்சை நிறத்தில் போட்டதே அதற்காகத்தான்
நம்முடைய நாகரீகத்தின் உள்ளே இருந்தாகவேண்டிய அந்த பச்சை லூப் அழிந்துவிட்டது. அதற்கான குரல்தான் ஞானம் சாருடையது.
அழகான ஆழமான கதை
செல்வி ராமகிருஷ்ணன்
வணக்கம் ,
ஜெயமோகனின் கதைகளை படிக்க வேண்டுமென்றால் மண்டையில கொஞ்சமாவது இருக்கனும் .நாஞ்சில்நாடன் கதைகள் என்னை போன்றோர் படிக்கும் வகையில் மிக எளிமையாக ,எனது வாழ்க்கை அனுபவங்களோடு ஒத்து போகும் வகையில் இருந்ததால் உற்சாகமாய் படித்துள்ளேன் . தனிமை நாட்களில் வரும் உங்கள் கதைகள் மிக எளியவை என்னை போன்ற சாமனியர்களுக்கானவை . இப்போது வரும் கதையை போல எல்லோருக்கும் அனுபவங்கள் நிச்சயாமாக இருக்கும் (.லூப் சிறுகதை )
நிறைய நாட்கள் இப்படி எண்ணம் வந்துபோயிருக்கிறது .மனித குலம் இந்த பூமியில் வரும் முன் இந்த பூமி பச்சை பசேலென முழு காடாய் இருந்தது கற்பனையில் கண் முன் விரியும் . இருபது ஆணடுகளுக்கு முன்பு பறக்கை அருகில் இரண்டாண்டுகள் குடியிருந்தேன் . கீழசரக்கல்விளை தாண்டி வயல் களை ஒட்டிய பகுதியை அதிகாலை கடக்கும் போதெல்லாம் பாம்புகள் வாகனங்களில் அடிபட்டு இறந்துகிடக்கும் .
சில ஆண்டுகளுக்கு முன் எனது யோகா மையத்தின் பொறுப்பாளர் ஆறுமுகம் ஐயா “சாகுல் பாம்பு ஒன்னு வந்துட்டுது ,சவுட்டு மெத்தைக்கு (மிதியடி)அடியில பிடிச்சி போட்டுருக்கேன் என்ன செய்யணுமோ ,செய் ” என்றார் . அதுக்க வீட்டுல நம்மோ கெட்டிடம் கெட்டி வெச்சிருக்கோம் பாவம் அது போகட்டும் என ஒரு குச்சியால் விரட்டி கேட்டின் வெளியே அனுப்பி வைத்தோம் . வானில் அலைகின்றன குரல்கள் . குரல்கள் எக்ஸ்சேஞ் பெட்டிக்குள் மட்டும் அல்ல பிரபஞ்சத்திலும் பரவியே உள்ளன .தனிமை நாட்கள் அவற்றை கண்டுபிடிக்க உதவும் .
மொழி கதையில் வரும் அந்த பெரிய தேக்கு மர கதவு எவ்வளவு பெரிய தொழில்நுட்பம் ,இப்போது அதற்கான ஆசாரிகளே இல்லையே .நான் படித்து முடித்து சோமன் அண்ணன் வோர்க்ஷாப்பில் பயிற்சியில் இருந்த போது குழந்தைகள் அறையினுள் மாட்டிக்கொண்ட தானியங்கி பூட்டு கொண்ட இரு கதவுகளை சோமன் அண்ணனின் யோசனைப்படி பூட்டுக்கும், கதவுக்கும் பெரிய சேதம் இல்லாமல் உடைத்துள்ளேன் .
இப்படி தனிமை நாட்கள் கதைகள் ஓவ்வொன்றும் ஒரு மறந்து போயிருந்த அனுபவங்களை நினைவு படுத்துகின்றன .என்னை மீண்டும் இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் ஒரு முறை வாழ வைத்ததற்கு நன்றி .
ஷாகுல் ஹமீது ,
நாகர்கோயில்.