மலைகளின் உரையாடல் [சிறுகதை]

ஓவியம் தண்டபாணி துரைவேல்

நான் டிஜிஎம் ஆபீஸ் முன்னால் காத்து நின்றிருந்தபோது பியூன் சண்முகம் என்னைக் கடந்துசென்றான். “என்ன சார், மறுபடியுமா? சொம்மா சின்னச் சின்னதா என்னுமோ பண்ணினு வர்ரதுக்கு எவனையாவது மண்டையிலே போட வேண்டியதுதானே?” என்றான். நின்று சுற்றிலும் பார்த்து “டிஜிஎம் மண்டையிலேயே போட்ரு… அந்தாள் மேஜைமேலே ஒரு பெரிய பேப்பர் வெயிட் இருக்கு பாத்தியா… எடுத்து போட்டிரு” என்றான்.

“போடா” என்றேன்.

“என்னா கேஸு?”

“நீ உன் வேலையப்பாரு.”

“மறுபடி எதுனா பண்ணுவேன்னு போனவாரம் நீ போறப்பவே நெனைச்சேன்… நீ கில்லாடி ஆளுசார். நான்லாம் இத்தினூண்டு கோட்டர் அடிச்சதுக்கே மெம்மோ வாங்கினுகிறேன். நீ இன்னாடான்னா லூலுகூவாட்டம் சுத்தினாலும் உன் வூட்காரம்மா கரீட்டா சம்பளப் பணத்தை வாங்கிடுது.”

“போறியா இல்லியா?”

“போறேன், அல்லாம உங்கிட்ட தாலிகட்டியா குடும்பம் நடத்தப் போறாங்க?”

அவன் போனபின் நான் பெருமூச்சுவிட்டு இன்னும் என்னை எளிதாக்கிக் கொண்டேன். பாண்டை தொட்டபோது சீப்பு தட்டுபட்டது. அதை எடுத்து தலையைச் சீவிக்கொண்டேன்.

பெல் அடித்தது. உள்ளிருந்து ஆர்டர்லி மாலி வந்து “சுதாகர்…” என்றான்.

நான் எழுந்து மீண்டும் சட்டையை இழுத்துவிட்டு அருகே இருந்த லேப்டாப் பையை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றேன். டி.ஜி.எம் மகாலிங்கம் சார் மேஜைக்கு அப்பால் அமர்ந்திருந்தார். குனிந்து அமர்ந்திருந்தமையால் செக்கச் சிவந்த தூய வழுக்கைத்தலை முதன்மையாக தெரிந்தது. அது ஏதோ வண்டின் மேற்பரப்பு போல, உள்ளே மண்டையோட்டின் பொருத்துவரிகளே தெரியும்.

“வணக்கம் சார்.”

“இதோபார் தொல்லைப்படுத்திண்டே இருந்ததனாலே உன்னை வரச்சொல்லி பர்மிஷன் குடுத்தேன். வேஸ்ட் பண்ண எனக்கு டைமில்லை. யார் பத்தி நீ கம்ப்ளெயிண்ட் பண்ணினாலும் நான் ஏத்துகிடறதா இல்லை.”

“சார், கம்ப்ளெயிண்ட் இல்லை.”

“பின்ன? ஒட்டுமொத்த டெலிகாம் நெட்வர்க்கையையும் கலைச்சு வேற மாதிரி பண்ணணும், அதுக்கு ஒரு பிளான் வச்சிருக்கே, அதானே?” என்றார். “முடியாது, டைம் இல்ல. கெளம்பு.”

“சார், சார், சார், ஒரு கோரிக்கை. அதுக்காகத்தான் வந்தேன்.”

“என்னது? ஃபினான்சியலா எந்த கோரிக்கைன்னாலும் ரேணுகாவே வந்தாகணும்.”

“இல்லை சார்… இது பர்சனல்.”

“சொல்லு” என்றார்.

“நம்ம டிரெயினிங் செண்டரோட ம்யூசியத்திலே ஒரு டிஸ்ப்ளே ஆப்ஜெக்ட் இருக்கு சார்… கன்யாகுமரி மாவட்டத்திலே இருபது வருசம் முன்னாடி ஒரு தூக்கணாங்குருவி கட்டின கூடு…”

“ஆமா, வயர் வச்சே கட்டியிருக்குமே.”

“அதான்… அது எனக்கு வேணும்.”

“எதுக்கு?”

“அதை வச்சு ஒரு ஆராய்ச்சி பண்ணணும் சார்.”

“ஆராய்ச்சியா? நீ எப்பய்யா பறவை ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சே? டெலிகம்யூனிகேஷன்ஸை விட்டாச்சா? கடவுள் அருள்தான்… அப்டியே நவுந்து போயிடு.”

“சார், இதுவும் டெலி கம்யூனிகேஷன்லே ஒரு ஏரியாதான். எனக்கு அந்த குருவிக்கூடு வேணும்.”

“ஸீ, அது டிஸ்ப்ளே மெட்டீரியல். அதை உனக்கு குடுக்க முடியாது. ரூல் கெடையாது.”

“ரூல் கெடையாதுன்னு எனக்கும் தெரியும். அதை ஓவர்ரூல் பண்ற அதிகாரம் உங்களுக்கு உண்டுன்னும் தெரியும்.”

“யோவ் அது ரேர் மெட்டீரியல்… இங்க வர்ர அத்தனை பேருக்கும் அதப்பத்தி தெரியும்.”

“டேமேஜ் ஆயிடுச்சுன்னு சொல்லுங்க… இல்ல திருட்டு போச்சுன்னு சொல்லி ஒரு போலீஸ் கம்ப்ளெயிண்ட் குடுத்து வைங்க.”

“உனக்கு ஏதாவது இருக்கா? போ போ.”

“சார், நான் சொல்றதைக் கேளுங்க” என்றேன். “இப்ப கன்ஸ்ட்ரக்‌ஷன் எஞ்சீனியரிங்கிலே மிகப்பெரிய பிரச்சினை என்ன? எப்படி ரூஃப் சர்ஃபேஸை குறைவான தாங்குலே நிப்பாட்டுறதுங்கிறது தானே? என்னென்னமோ அதுக்கு ஆராய்ச்சி செய்றாங்க. அலுமினியம், அல்லாய்கள், ஃபைபர். பால்கனியையும் போர்ட்டிகோவையும் ஒத்தை பிடிப்பிலே நிப்பாட்டுறதுலே பலபேர் பல புதிய விஷயங்களை செஞ்சிருக்காங்க. அத்தனை பேருக்கும் இன்ஸ்பிரேஷனா இருக்கிறது தாவரங்களோட இலை.”

அவர் சற்றே ஆர்வம் கொண்டார். நான் தொடர்ந்தேன் “இலைங்கிறதிலே ஆயிரக்கணக்கான, பல்லாயிரக்கணக்கான வடிவங்கள் இருக்கு. ஒவ்வொண்ணுக்கும் ஒரு ஸ்பெஷல் கேரக்டர் இருக்கு. சிலது மழையோட அடியையே தாங்குது. சிலது காத்து வேகத்தைத் தாங்குது…. ஒரு இலையோட முழுவெயிட்டையும் அதோட காம்புதான் தாங்கி அதை விரிச்சு நிறுத்தியிருக்கு. ஒரு சின்ன தாங்குலே அவ்ளவு பெரிய சர்ஃபேஸ் எப்டி நிக்குது? அந்த எலையோட நரம்பு அமைப்பிலே இருக்கிற டிசைன். அந்த நெசவு. ஒவ்வொண்ணிலயும் அது ஒவ்வொரு மாதிரி… அதைத்தான் அத்தனை அட்வான்ஸ் லெவல் கன்ஸ்டிரக்‌ஷன் எஞ்சீனியர்ஸும் இன்னிக்கு ஆராய்ச்சி பண்றாங்க.”

“சுருக்கமா சொல்லு.”

“சார், இலைங்கிறது நேச்சர்லே இருக்கிற ரூஃப் கன்ஸ்டிரக்‌ஷன் மாடல். நம்ம தொழில் என்ன? டெலிகம்யூனிகேஷனோட அடிப்படையே சர்க்யூட்டுதான். சிம்பிளான சர்க்யூட்டுகளிலே தொடங்கி இப்ப குளோபல் நெட்வர்க் சர்க்யூட்டுகளை உண்டு பண்ணி போய்ட்டே இருக்கோம். சார், அதுக்கு இயற்கையிலே உள்ள மாடல் என்ன? இயற்கையிலே நாம பார்க்கிற மிகச்சிக்கலான சர்க்யூட்டுகள் என்ன?”

“குருவிக்கூடுன்றியா? யோவ்.”

“ஆமா சார். கடந்த எட்டுமாசமா நான் இதை மட்டும்தான் ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கேன். ப்ளீஸ், ஒரு பத்து நிமிஷம் பாருங்க… ப்ளீஸ் சார்.”

நான் லேப்டாப்பை எடுத்து விரித்தேன். “ஸீ சார், நான் இதிலே ஆறாயிரம் குருவிக்கூடுகளோட டிசைனை போட்டோ எடுத்து ப்ளூப்ரிண்டா மாத்தியிருக்கேன்… அதுக்காக ஒரு சாஃப்ட்வேர் கூட டிசைன் பண்ணியிருக்கேன்.”

“இதோ பார் எனக்கு வேலைகள்…”

“சார், இப்ப இது சயன்ஸ் இல்லைதான், ஃபேண்டஸிதான். ஆனா எல்லா சயன்ஸும் தியரிமேக்கிங்லே ஃபேண்டஸி மாதிரித்தான் இருக்கும். இதை நான் மத்த சீனியர் ஆபீசர்கள் கிட்ட சொல்லமுடியாது. அவங்கள்லாம் டெக்னாலஜியைத்தான் தெரிஞ்சு வச்சிருப்பாங்க. நீங்க சயன்ஸ் படிச்சவரு…. சயன்ஸுக்கும் டெக்னாலஜிக்கும் வித்தியாசம் தெரிஞ்சவரு. அதான் உங்க கிட்ட வந்தேன். ப்ளீஸ்.”

அவர் எங்கே இறங்கி வருவார் என்று எனக்குத்தெரியும். அவரை நான் கவனிக்க ஆரம்பித்து பத்தாண்டுகள் ஆகின்றன. அவருடைய ஆதரவில்தான் என் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

“சார், இந்த டிசைன்களைப் பாருங்க… இதெல்லாமே விதவிதமான குருவிகளோட கூடு.”

“இதோபார், இப்டியே போனா ஒயர்கூடையை சர்க்யூட்னு சொல்ல ஆரம்பிச்சிருவே.”

“சார் ப்ளீஸ். எனக்கு தெரியும். குருவி கூடுகட்டுறது முட்டை போடுறதுக்காக. அதோட முட்டைகள் மரக்கிளைகளிலே பத்தரமா இருக்கணும்ங்கிறதுதான் குருவியோட நோக்கம். காத்தில சிதைஞ்சிரக் கூடாது, மழையிலே நனையக் கூடாது, எதிரிகள் வந்திரக்கூடாது. அதுக்காக அது மரக்கிளைகளோட நுனியில மரப்பொந்துகளிலே பாறை விளிம்புகளிலே எல்லாம் கூடு கட்டுது. அதுக்குண்டான எஞ்சீனியரிங்கை அது செஞ்சு செஞ்சு ஆயிரக்கணக்கான ஆண்டுகளா டெவலெப் செஞ்சிருக்கு. இது என்ஸைக்ளோப்பீடியா டேட்டா. இது தெரியாம இல்லை. ஆனால் அதுமட்டும்தானா?”

“ஒரு வைல்ட் தாட்டா இந்தக்கூடுகளை நாம சர்க்யூட்டுகளா மாத்திப்பாத்தா என்ன ஆகும்? நான் மூணுவருஷம் முன்னாடி இந்த வயர்லே செஞ்ச தூக்கணாங்குருவிக் கூட்டை பாத்தேன். அப்பவே இந்த ஐடியா வந்தது. ஆனா அதிலே ஒவ்வொரு வயரும் தனித்தனியா இணைப்பில்லாமத்தான் இருக்கு. அது சர்க்யூட் இல்லை. வெறும் ஸ்டிரிங் எஞ்சீனியரிங்தான். அதனாலே அப்ப அப்டியே விட்டுட்டேன். பிறகு தோணிச்சு வைல்டா யோசிச்சு இதையெல்லாம் சர்க்யூட்டா ஆக்கினா என்ன ஆகும்? ஏதாவது பேட்டர்ன் தெரியுமா?”

“அப்டி ஒரு பேட்டர்ன் இருக்க வாய்ப்பே இல்லை. ஷீர் மேட்னெஸ்.”

“இருக்கு சார். நான் உண்டு பண்ணியிருக்கேன். ரியலாவே உண்டு பண்ணியிருக்கேன். இங்கபாருங்க… இதெல்லாமே குருவிக்கூடுகளோட நார்களை வயர்களா கற்பனை பண்ணி இணைச்சு நான் உண்டுபண்ணின சர்க்யூட்டுகள்தான்.”

“இப்டி எதைவேணுமானாலும் செய்யலாம்.”

“இல்லை சார், எனக்கு சில பேட்டர்ன்ஸ் தெரியுது. உண்மையாகவே தெரியுது சார். எல்லா பறவைகளையும் சொல்லலை, ஆனால் சில குருவிகள் ரொம்ப அட்வான்ஸ்ட். அதுங்க கூடுகளை சர்க்யூட்டுகளாத்தான் கட்டிட்டிருக்கு. கண்டிப்பா, அதெல்லாம் சர்க்யூட்டுகள்தான்.”

“சரி சரி… நல்ல ஐடியா. டெவெலெப் பண்ணு… “ என்று ஃபைலை விரித்தார். “அப்ப பாப்பமா. கொஞ்சம் வேலை இருக்கு.”

“சார், நான் சொல்றதை கொஞ்சம் செவிகுடுத்து கேளுங்க. நான் இதோ இதிலே நூற்றியிருபது தூக்கணாங்குருவிக் கூடுகளை சர்க்யூட்டுகளா மாத்தியிருக்கேன்… பாருங்க. ஒவ்வொண்ணும் ஒரு பேட்டர்ன். ஆனா எல்லாத்துக்கும் பொதுவா ஒரு பேட்டர்ன் இருக்கு… அதாவது இந்தக்கூடு ஒரு…”

“சரி, நேரடியாகவே கேக்கறேன். குருவி கூடுகட்டுறது வெறும் நாரிலே… அது எப்டி சர்க்யூட் ஆகும்?”

“சார், நாம இப்ப எலக்ட்ரிசிட்டி ஓடுற சர்க்யூட்டுகளை மட்டும்தான் வச்சிருக்கோம். அதனாலே அது மட்டும்தான் இந்த உலகத்திலே உள்ள சர்க்யூட்டுன்னு அர்த்தமில்லை. எல்லா மெட்டீரியலிலயும் ஸ்டேட்டிக் கரெண்ட் கொஞ்சமாவது இருக்கும். எலக்ட்ரிசிட்டி அல்லாம எவ்வளவோ வேவ்ஸ் ஆண்ட் கரெண்ட்ஸ் இங்க இருக்கலாம்.”

“சரி, நான் இப்ப என்ன பண்ணணும்?”

“அந்த வயர்கூட்ட எனக்கு குடுத்திருங்க.”

“நீ அதை அழிச்சிருவே.”

“சார், அந்த கூடு ஒரு அற்புதம்னு சொல்றேன். ரொம்பத் தற்செயலா நடந்த அற்புதம். அதை நான் அழிப்பேனா?”

“உனக்கு எதுக்கு அது? நீயே வயர் வைச்சு இதேமாதிரி பேட்டர்ன்களைச் செய்ஞ்சு பாக்க வேண்டியதுதானே?”

“நான் இருபத்தெட்டு பேட்டர்ன் செஞ்சிருக்கேன்… அதெல்லாமே ஃபெய்லியர். ஏன்னா அது என்னோட டிசைன்… குருவியா பண்றதிலே ஏதோ ஒண்ணு இருக்கு.”

“சரி, என்ன இருக்குண்ணு சொல்லு… நீ என்ன எதிர்பார்க்கிறே?”

“சார், இப்ப இந்தக் குருவிங்கிறது ஒரு தனி மனசு இல்லை. இது ஒட்டுமொத்த தூக்கணாங்குருவியோட மனசு. ஒட்டுமொத்த குருவிகளோட மனசு. ஒரு அளவிலே ஒட்டுமொத்த பறவைகளோட மனசு…”

“சரி.”

“இந்த தனிக்கூடுக்கு பறவைகளோட மொத்தமா ஏதோ கம்யூனிகேஷன் இருக்கு.”

“நீ என்ன சொல்றேன்னே புரியலை.”

“எனக்கும் தெளிவா இல்லை. ஆனா இந்த கூடு பறவைகள் முழுக்க கம்யூனிகேட் பண்ணிட்டிருக்கிற ஒரு நெட்வர்க்கோட சம்பந்தப்பட்டிருக்கு.”

“ஓக்கே, கோ ஆன். ஆனா அந்தக் கூடை தரமுடியாது.”

“சார்.”

“இதோபார், எனக்கு கொஞ்சம் கிறுக்குகளைப் பிடிக்கும். இந்த மெக்கானிக்கலான ரொட்டீன்லே அது ஒரு நல்ல ரிலாக்ஸேஷன். ஆனா அதுக்காக நானே கிறுக்கா ஆக முடியாது.”

“சார், பிளீஸ்.”

“உன்னோட நேரம் முடிஞ்சுபோச்சு.” அவர் பெல்லை அழுத்த பியூன் சண்முகம் வந்து நின்றான்.

நான் அழுகையுடன் “இது அராஜகம். ஒரு ஐடியாவைக்கூட கவனிக்க மாட்டேங்கிறீங்க.”

“இப்ப சொன்னியே குருவிக்கூடுனு… அது ஒட்டுமொத்த குருவிக்கூடுங்கிற கான்ஸெப்டோட ஒரு துளி… அப்டித்தான் இருக்கமுடியும். சயன்ஸும் அப்டித்தான். அதுக்கு குளோபலா சில ரூல்ஸ் இருக்கு… அதை மீறிப்போனா அது மேட்நெஸ்…”

“மேட்நெஸ் இல்லை சார் டிரீம்… சயன்ஸுக்கு அடியிலேதான் சார் மிகப்பெரிய டிரீம் இருக்கு.”

“ப்ளீஸ் கெட் அவுட்… சண்முகம்.”

சண்முகம் என்னை நோக்கி வர நான் அவரை ஒருமுறை கூர்ந்து பார்த்தேன். பேப்பர் வெயிட்டை தூக்கி ஓங்கி மண்டையில் போடத்தோன்றியது. என் கைகால்கள் உதறின. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

வெளியே வந்து சட்டைப் பித்தான்களை தளர்த்திக் கொண்டேன். சண்முகம் என் பின்னால் வந்து சிரித்தபடி “இன்னா சார் டோஸு உட்டாரா? அப்டியே மண்டையிலே போட்ர வேண்டியதுதானே?” என்றான்.

“போடா” என்றேன்.

வீட்டுக்குச் சென்று சட்டையையும் பாண்டையும் கழற்றிவிட்டு லுங்கியை கட்டிக் கொண்டேன். கம்ப்யூட்டரை திறந்து அந்த குருவிக்கூடு வடிவங்களைப் பார்க்கலானேன்.

ரேணுகா வந்து “டிஜிஎம்மை பாத்தீங்களா?” என்றாள்.

“ஆமா, அயோக்கிய நாய். அவனை நான் அப்பவெ மண்டையிலே போட்டிருப்பேன்.”

“உங்க லீவு பேமெண்ட் கொஞ்சம் பெண்டிங் இருக்கு… அதை கிரடிட் பண்ணச் சொன்னார்னா நல்லாயிருக்கும்… சொன்னீங்களா?”

“அதை நீயே போய் சொல்லு.”

அவள் மேலும் சற்றுநேரம் நின்றாள். பிறகு பெருமூச்சுடன் உள்ளே சென்றாள். நான் ஒரு தூக்கணாங்குருவிக் கூட்டை எடுத்து ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருந்தபோது சட்டென்று தோன்றியது, எதற்கு அனுமதி கேட்கவேண்டும்? அங்கே அந்த தூக்கணாங்குருவிக்கூடு மேல் எவருக்கு அக்கறை? எவராவது பெரிய மனிதர் வந்தால் அவரை அழைத்துக் கொண்டு சென்று காட்டுவார்கள். வழக்கமான சில ஜோக்குகள். அவர் அரைநிமிடம் பார்த்து “நைஸ்” என்று கடந்து செல்வார். புதிய டெக்னிஷியங்கள் கொஞ்சபேர் நின்று பார்ப்பார்கள் “என்னமா கட்டியிருக்கு இல்ல!” அவ்வளவுதான்.

அந்த குருவிக்கூடு லைப்ரரி செல்லும் வழியில் நீண்ட காரிடாரில் கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்தது. அந்த காரிடாரை ஒரு மியூஸியம் டிஸ்ப்ளே ஆக்கியவர் முன்பு இருந்த ஜிஎம். அங்கே பழைய எடிசன் கோவர் டெலிஃபோன் முதல் கடைசியாக கைவிடப்பட்ட ரோட்டரி மாடல் டெலிபோன் வரை நூறு பொருட்கள் வரிசையாக கண்ணாடிப் பெட்டிகளுக்குள் இருந்தன. நடுவே சுவர்களில் அண்டோனியோ மியூக்கி முதல் அலக்ஸாண்டர் கிரகாம் பெல், தாமஸ் எடிசன் என பல கறுப்பு வெள்ளை புகைப்படங்கள்.

நான் கையில் இரண்டு புத்தகங்களுடன் டிரெயினிங் சென்டர் சென்றேன். நான் அங்குதான் சீனியர் டிரெயினராக இருந்தேன். லைப்ரரியில் புத்தகங்களை போட்டு வேறு இரண்டு எடுத்துக் கொண்டேன். வரும் வழியில் அந்தப்பூட்டின் டிசைனை கையில் கொண்டு சென்றிருந்த மெழுகுதுண்டில் நகல் எடுத்துக்கொண்டேன். வீட்டுக்கு வந்து அரைமணி நேரத்தில் ஒரு சாவியை வெட்டினேன்.

வகுப்புகள் முடிந்தபிறகும் ஏழுமணிவரை ஆபீசில் ஆளிருக்கும். நூலகம் ஒன்பது மணிவரை திறந்திருக்கும். ஒருவர் கூட நூலகம் பக்கம் செல்வதில்லை. உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நூல்கள் ஒருமுறைகூட கைபடாமல் அங்கே காத்திருக்கும். இந்த வட்டாரத்திலேயே நூலகம் செல்பவன் நான் மட்டுமே.

என்னிடமிருந்த ஒயர்மாடல் தூக்கணாங்குருவிக்கூடு ஒன்றை கையில் எடுத்துக்கொண்டேன். லைப்ரரிக்கு போகும் வழியில் அந்த கூண்டு பக்கம் சென்றேன். எவருமில்லை. கண்ணாடிக் கூண்டை திறந்தேன். மிக எளிமையான பூட்டுதான். அங்கிருந்த வயரால் ஆன தூக்கணாங்குருவிக் கூட்டை எடுத்து பையில் போட்டுக் கொண்டேன். என்னிடமிருந்த வயர் மாடல் குருவிக்கூட்டை அங்கே அதேபோல வைத்தேன். மீண்டும் கூண்டை மூடி பூட்டினேன். பேசாமல் திரும்பிவிட்டேன். இனி எப்படியும் ஐம்பது ஆண்டுகளுக்கு எவரும் அதை எடுத்து பார்க்கப் போவதில்லை. எவருக்கும் சந்தேகமும் வரப்போவதில்லை. இத்தனைக்கும் வயர்களின் வண்ணமும் டிசைனும் முற்றிலும் வேறு.

நான் வீட்டுக்கு வந்தபோது ரேணுகாவின் அம்மா வந்திருந்தாள். அவர் கொஞ்சம் ஆணித்தரமான பேச்சுகொண்ட பெண்மணி. தலைமை ஆசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். அத்தகைய பெண்களை எனக்கு பயம். நான் பேசாமல் போய் என் அறைக்குள் ஒளிந்துகொண்டேன்.

மாமியார் என் அறைக்கு வெளியே வந்து நின்று “மாப்பிள்ளை உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார்.

நான் “தோ வந்துடறேன்… ஷர்ட்டை மாத்திண்டு வர்ரேன்” என்றேன்.

அவர் திரும்பிச் சென்றார். நான் ஒருகணம் யோசித்தேன். மெல்ல எழுந்து சென்று என்னுடைய கம்ப்யூட்டரை எடுத்துக் கொண்டேன். பேக்பேக்கில் சில சட்டைகளையும் ஜீன்ஸ்களையும் எடுத்து வைத்தேன். அடிப்படையான கருவிகள் சிலவற்றையும் எடுத்துக்கொண்டேன். பர்ஸையும் அடையாள அட்டைகளையும் கடன் அட்டைகளையும் எடுத்தேன். மெல்ல பக்கத்து அறைக்குள் நுழைந்து அப்படியே வெளியே சென்றேன்.

எவராவது பார்த்து விடுவார்கள் என்று வேகமாக நடந்தேன். சாலையில் ஆட்டோ நின்றது. அதில் ஏறிக்கொண்டு தாம்பரம் ரயில்நிலையம் போகச்சொன்னேன். கோவைக்கு ரயில் மூன்றுமணிநேரம் கழித்து. பொதுப்பெட்டியிலேயே ஏறிக்கொண்டேன். காலையில் மேட்டுப்பாளையம் வந்தேன். அங்கிருந்து பஸ் பிடித்து பதினொரு மணிக்கு ஊட்டி. ஊட்டியிலிருந்து ஒரு ஆட்டோவை அமர்த்திக் கொண்டு மஞ்சணகொரே போய் அங்கிருந்து ஒத்தமந்து என்ற தனித்த மலைச்சிகரத்தில் அமைந்திருந்த மைக்ரோவேவ் ஸ்டேஷனை அடைந்தேன்.

ஊட்டியே புகைபோன்ற பனிப்படலத்தால் மூடப்பட்டிருந்தது. பேச்சுக்குரல்கள் தண்ணீருக்குள் கேட்பதுபோல ஒலித்தன. எதிர்க்காற்று கடுமையாக குளிர்ந்தது. மைக்ரோவேவ் கோபுரம் வானில் நட்சத்திரத்தை ஏந்தியபடி நின்றிருந்தது. கூண்டுக்குள் காவலன் தூங்கிக் கொண்டிருந்தான். நான் என் அடையாள அட்டையைக் காட்டினேன். அவன் சல்யூட் அடித்து உள்ளே விட்டான்.

உள்ளே ஒரு கிளார்க் மட்டும்தான் இருந்தான். என் அடையாள அட்டையை பார்த்ததும் நடுங்கி குளற ஆரம்பித்தான். அங்கே இருக்கவேண்டிய ஊழியர்களில் அவன் ஒருவன் மட்டும்தான் இருந்தான். எல்லாருமே ஊருக்குப் போயிருந்தார்கள். என் நண்பனும் ஜூனியருமான சசிகுமார் கூட இல்லை.

“இப்ப மழைக்காலம் சார்… இங்க இருக்கிறது ரொம்ப கஷ்டம் சார்” என்று அவன் பதறினான்.

“நான் இன்ஸ்பெக்ஷனுக்கு வரலை. நான் ஒரு ரிசர்ச்சுக்காக வந்திருக்கேன். சீக்ரெட்டா இங்கே தங்கியிருப்பேன். எனக்கு சாப்பாடு டிபன் டீ எல்லாம் வந்திடணும்… மேலே கெஸ்ட் ஹவுஸ் க்ளீனா இருக்குல்ல?”

“இருக்கு சார்.”

“நீங்க உங்க வேலைய பாருங்க, என்னை மறந்திருங்க.”

“சரி சார்” என அவன் ஆறுதல் அடைந்தான்.

“எனக்கு ஒரு நல்ல ஸ்வெட்டர் மட்டும் குடுத்திருங்க.”

அந்த கெஸ்ட் ஹவுஸில் முன்பு நான் எட்டுமாதம் தங்கியிருக்கிறேன். அன்று இடிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தேன். மைக்ரோவேவ் டவர்களில் இடிகள் உருவாக்கும் மின்னூட்டம் பற்றியும் அதன் விளைவான அதிர்வுகளை பற்றியும் ஒரு ரிப்போர்ட் அளித்தேன். அது தேசிய அளவில் மிக முக்கியமானதாக கருதப்பட்டது. அதன் அடிப்படையில்தான் பதினொரு ஆண்டுகளாக எந்த ஆபீஸ் வேலையுமே செய்யாமல் ஆராய்ச்சியாளனாகவே நீடிக்கிறேன்.

என் கருவிகளைப் பரப்பி வைத்தேன். சூடாக டீ வந்தது. அதைக் குடித்தபடி கீழே பார்த்து அமர்ந்திருந்தேன். கெஸ்ட் ஹவுசுக்கு நேர்முன்னால் அடுக்கடுக்காக மலைகள். அருகே பச்சைக்காடு மலையாக எழுந்து வளைந்திருந்தது. அதற்கு அப்பால் மலையடுக்குகள் நீல அலைகளாக சென்றுகொண்டே இருந்தன. துருப்பிடித்தது போன்று மங்கலான வானம். எண்ணைக் கறைபோல மேகங்கள். அவை அசையாமல் நின்றிருந்தன.

அந்த தொடுவான் எல்லைக்கு அப்பால் கேரளம். அது மேற்குக்கடலில் இருந்து மேகங்கள் எழுந்து முட்டிமோதி வந்து ஊட்டியில் மழை வீசியடிக்கும் காலம். முன்பு நான் மிகப்பெரிய இடியோசைகளை அங்கேதான் பதிவு செய்திருக்கிறேன். ஓசையாகவும் மின்னதிர்வாகவும்.

மலையடுக்குகளுக்கு மேல் அவ்வப்போது மெல்லிய மின்னல்கள் அதிர்ந்து கொண்டிருந்தன. பீரோவை நகர்த்தி வைப்பதுபோல மெல்லிய இடியோசை. சில நாட்களில் மழை தொடங்கக்கூடும் என்று தோன்றியது.

நான் முழுமூச்சாக அந்த குருவிக்கூட்டை இணைத்து சர்க்யூட் ஆக மாற்றுவதில் ஈடுபட்டேன். பறவைகள் நாம் பார்ப்பதுபோல உலகைப் பார்ப்பதில்லை. அவற்றுக்கு நம்மைவிட பலமடங்கு நிறவுணர்வு உண்டு. ஆனால் நம்முடைய ஒவ்வொரு நிறமும் அவற்றுக்கு வேறு வேறு வண்ணங்களாகத் தெரியும். ஒரு மிகச்சிறந்த ஆப்டிக்கல் டிவைஸால் மட்டுமே உண்டு பண்ணக்கூடிய வண்ணக்கலவைகள் அவற்றின் பார்வையில் உண்டு.

புதிய ஆய்வுகள் வருந்தோறும் அவற்றின் பார்வையின் விந்தைகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அவை புறஊதா கதிர்களையும் காட்சிக்கு பயன்படுத்திக் கொள்கின்றன. ஆகவே பொருட்களின் விளிம்புகளும், மிகமெல்லிய சரடுகளும் அவற்றுக்கு ஒரு வகை ஊதாநிறமான விளிம்புகளுடனும் துணைக்கோடுகளுடனும் தெரிகின்றன. அகச்சிவப்பு கதிர்களையும் வெப்பக்கதிர்களையும் கூட அவை பார்வைக்கு பயன்படுத்திக் கொள்கின்றன என்று ஒரு தரப்பு உண்டு.

நான் அந்தக்கூட்டை விரிவாக படம் எடுத்து கம்யூட்டரில் டிஜிட்டல் முறையில் தூக்கணாங்குருவியின் பார்வையில் மாற்றினேன். அதற்கான சாஃப்ட்வேரை நானே உருவாக்கியிருந்தேன். அதன் டிசைனை சாத்தியமான எல்லா பேட்டர்ன்களுக்கும் மாற்றினேன். எழுபதுக்கும் மேற்பட்ட பேட்டர்ன்களிலிருந்து இருபது சர்க்யூட்களை ஊகித்து ப்ளூபிரின்ட் எடுத்தேன். அவற்றின் அடிப்படையில் அந்தக்கூட்டின் வயர்களை இணைத்தேன். மிகமிக நுட்பமாக ஸ்ப்ளைசிங் செய்தேன். அதற்கு ஹெயர்-தின் ஒயர்களை ஸ்ப்ளைசிங் செய்யும் மிகமிகச்சிறிய நேனோ கிளிப்புகளை பயன்படுத்தினேன்.

அது கடிகாரம் பழுதுபார்ப்பவன் போல ஒரு கண்ணில் பூதக்கண்ணாடியை மாட்டிக்கொண்டு கிடுக்கிகளால் நுட்பமாகச் செய்யவேண்டிய வேலை. முழுநாளும் அதையே செய்து கொண்டிருந்தேன். என்னை எவரும் தொந்தரவு செய்யவில்லை.

சர்க்யூட்டுகள் வழியாக மிகக்குறைவாக மின்சார ஓட்டத்தை செலுத்திப் பார்த்தேன். அது உருவாக்கும் அலைகளையும் அதிர்வுகளையும் என்னிடமிருக்கும் கருவிகளைக் கொண்டு அளந்தேன். அந்த மைக்ரோவேவ் நிலையத்திலேயே எனக்குத் தேவையான பல கருவிகள் இருந்தன. நான் முன்பு அங்கே வேலை செய்தபோது பயன்படுத்தியவை. அவற்றை ஸ்டோரில் எண் போட்டு சேமித்திருந்தேன், ஆகவே அவை ஸ்க்ராப்புக்குச் செல்லவில்லை. அவற்றை எடுத்துவந்து பயன்படுத்தினேன்.

ஒரு பேட்டர்னை ஆராய்ந்து விளைவுகளை முழுக்க பதிவு செய்தபின்னர் அந்த கிளிப்புகளை மிகமிக மெல்ல நீக்கி அடுத்த பேட்டர்னில் சர்க்யூட் அமைத்தேன். பதினேழு நாட்களில் இருபத்தாறு வகையான சர்க்யூட்களை அமைத்து அது உருவாக்கும் மின்னோட்டம், அதிர்வு ஆகியவற்றை பதிவுசெய்தேன்.

நான் வந்த நான்காம் நாளே மழை தொடங்கிவிட்டிருந்தது. ஊட்டியின் மழை என்பது அங்கிருப்பவர்களுக்கு ஒரு பெருந்துன்பம். உடைகள் ஈரமாகும், காயவே காயாது. ஊரே சேறாகிவிடும். குளிர் நடுக்கி எடுக்கும். மூச்சுத்திணறல் வரும். பலவகையான ஃபங்கஸ் தொற்றுக்கள் வரும். ஊட்டியே ஒடுங்கி இல்லாமலாகிவிடும். மழை மட்டும் நின்று பெய்து கொண்டிருக்கும். நான் என் அறையில் இரவுபகலாக மழையை கேட்டுக்கொண்டிருந்தேன்.

மழை ஓங்கிப் பெய்யும்போது இடி குறைவாக இருக்கும். சற்றே மழை வெளித்து மலைகள் தெரியத் தொடங்கும்போது இடியோசை செவிகளுக்குள் வெடிப்பதுபோல ஒலிக்கும். ஊட்டியின் இடியோசையை வேறெங்கும் கேட்கமுடியாது. வானில் மிக அருகே கேட்கும். அதன்பின் மலைத்தொடர் அடுக்குகள் இடியோசையால் பேசத்தொடங்கும். ஒரு முழுச் சொற்றொடர் போல அது கேட்டுக்கொண்டே இருக்கும். பொதுவாக இடியோசை ஒரு பேரொலி முழங்கி மெல்லமெல்ல ஓய்வதாக இருக்கும். ஊட்டியில் அது அலையலையாக கேட்கும். மலைகள் யானைக்கூட்டங்கள் போல இடியொலியால் உரையாடிக் கொள்வதாகத் தோன்றும்.

எனக்கு தனிமை மிக உகந்ததாக இருந்தது. கீழே எடுபிடிக்கு போஸ் என்ற பையன் இருந்தான். பெரியகுளம்காரன். அவன் உணவும் டீயும் கொண்டுவந்து வைத்துவிடுவான். நாலைந்து நாட்களுக்கு ஒருமுறைதான் குளியல். வியர்வை இல்லை என்பதனால் ஆடை மாற்றவேண்டிய தேவையே இல்லை. நான் வேறொருவரை பார்த்தே பலநாட்களாயின, என்னைப் பிறர் பார்த்தும்.

பேட்டர்ன்கள் முடிய முடிய எனக்கு மெல்லிய சலிப்பு தோன்றத் தொடங்கியது. எதை எதிர்பார்க்கிறேன்? அறிவியல் ஆய்வில் விந்தைகளை எதிர்பார்க்கக்கூடாது, எதிர்பார்ப்பவன் எதையும் அடையமுடியாது. விந்தைகள் நிகழலாம், ஆனால் அது தற்செயல்தான். இங்கே தவத்துக்கு தெய்வம் வந்தாக வேண்டும் என்பதில்லை.

நான் சேர்த்திருக்கும் தகவல்களே பெரிய சாதனைதான். அவற்றை சாஃப்ட்வேரின் துணைகொண்டு மேலும் பல்லாயிரம் சாத்தியக்கூறுகளாக ஆக்கலாம். அவற்றை கலந்து மேலும் பல்லாயிரம் பேட்டர்ன்களாக ஆக்கலாம். அவற்றை பொதுமைப்படுத்தி ஊகங்களை உருவாக்கலாம், கொள்கைகளாக ஆக்கலாம், அவற்றை நிரூபிக்கவும் இதே தரவுகளை பயன்படுத்தலாம்.

ஆனாலும் நான் சோர்வடைந்திருந்தேன். இரண்டுநாள் இடைவெளி விட்டேன். பெய்துகொண்டிருந்த மழையை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். மழையின் பாலிதீன் உறைக்கு அப்பால் மலைகள் இருக்கின்றன என்பது அவ்வபோது எழும் இடியோசைச் சொற்களால்தான் தெரிந்தது. இரண்டுநாளில் என் உள்ளம் அலுப்பு கொண்டது. மீண்டும் சர்க்யூட்டுகளை உருவாக்க ஆரம்பித்தேன்.

ஏற்கனவே உருவாக்கிய சர்க்யூட்டுகளுடன் அதிர்வுமானிகளை இணைத்திருந்தேன். அவற்றை வேறுவேறு வகைகளில் மாற்றினேன். அந்த குருவிக்கூட்டுக்குள் என்னவகையான மின்னூட்டம் ஏற்படுகிறது, எந்தவகையான காந்தப்புலம் உருவாகிறது, மைக்ரோவேவ் அதிர்வுகள் உருவாகின்றனவா? அல்லது வேறேதும் கதிரலைவுகள் உள்ளனவா? இங்கிருந்து வெளியே சென்று மேலும் கருவிகளை சேகரிக்க வேண்டும். எல்லாவகை கதிர்களையும் வைத்து ஆராயவேண்டும்.

சாத்தியங்களை கற்பனை செய்து கொண்டதும் என் ஊக்கம் கூடிவிடுவது வழக்கம். நான் வெறிகொண்டு வேலைசெய்யத் தொடங்கினேன். ஆம், இதெல்லாமே முட்டாள்தனமாக இருக்கலாம். இதில் எந்த அறிவியலும் இல்லாமல் கூட இருக்கலாம். அதெல்லாம் எனக்கே தெரியும். இந்தக் கருவிகளைக் கொண்டு நான் ஆராய்ந்து கொண்டிருப்பது என் மூளையை. அது என்னென்ன சாத்தியங்களை கண்டடைகிறது, எந்தெந்த சர்க்யூட்களில் பாய்ந்தோடி இணைந்து கொள்கிறது, எப்படியெப்படித் தன்னை உருமாற்றி அமைத்துக் கொள்கிறது, எப்படி தன்னைத்தானே கண்டடைகிறது…. அதுதான் எனக்கு முக்கியம். அதை நானே கண்டடையும் பரவசத்துக்காகவே நான் ஆராய்ச்சி செய்கிறேன்.

மற்றபடி இந்த குருவிக்கூட்டைக் கொண்டு ஒரு எலக்ட்ரானிக் கருவியை உருவாக்குவதில் என்ன லாபம்? இது இன்னொரு கருவி. அப்படி எத்தனை லட்சம் கருவிகள்! ஒவ்வொரு கருவியும் இயற்கையின் சக்திகளை நாம் அறிவதில் ஒரு புதிய திறப்பு. இயற்கையை நாம் கையாள்வதில் ஒரு புதிய சாத்தியம். அல்ல, ஒவ்வொரு கருவியும் இயற்கையில் இருந்து நமக்குக் கிடைக்கும் ஒரு சொல். ஒரு குறியீடு.

எல்லா சொற்களும் குறியீடுகள்தான். இயற்கை நம்மைச் சூழ்ந்திருக்கிறது. இந்தவானம், இந்தமழை, இந்த மலைகள், இந்தக்காடு. அவற்றின் மொழி வானமெங்கும் நிறைந்திருக்கிறது. அந்த மொழி கடல் என்றால் மானுடர் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் மொழி என்பது அதில் ஒரு துளி, ஒரு துமி, ஒரு தூசுத்துமி.

இயற்கையின் பெருமொழிமேல் மானுட மொழியைக் கொண்டு முட்டிக் கொண்டே இருக்கிறோம். அடிபெருத்த மரத்தை அறைந்து உலுக்குவதுபோல. அவ்வப்போது ஒரு சொல் உதிர்கிறது. அவ்வாறு காலாகாலமாக உதிர்ந்தவையே அத்தனை சொற்களும். வேதங்களை அபௌருஷேயம் என்கிறார்கள். மானுடனால் உருவாக்கப்பட்டது அல்ல, வானிலிருந்து நேராக நாவில் தோன்றியது. இடியாக, மின்னலாக, புயலாக, தீயாக.

!” என்ற வான்சொல். தாம்ய, தத்த, தய! பிருகதாரண்யக உபநிடத மந்திரம். இடியோசை மானுடனுக்குச் சொன்னது அது. அடங்கு, கொடு, இரங்கு என்று பொருள். அதை நான் டி.எஸ்.எலியட்டின் கவிதையில்தான் முதலில் வாசித்தேன். கல்லூரியில் ஆங்கில வகுப்பு எடுத்த மந்திரமூர்த்தி சார் அதை விளக்கினார். எல்லா வேதங்களும் வானிலிருந்து வந்தவையே. அரபு வேதம், அராமிக் வேதம். ஆப்ரிக்க மொழிகளின் வேதங்கள். அத்தனை மொழிகளிலும் வேதங்கள் இருக்கும். அத்தனை மொழிகளுமே அபௌருஷேயங்கள்தான். மானுடன் பெற்றுக்கொண்டதே மொழி, உருவாக்கியது அல்ல.

மழை விட்டிருந்தது. போஸ் டீ கொண்டுவந்து வைத்தான். நான் அதை எடுத்துக் கொண்டு வந்து பால்கனியில் அமர்ந்தேன். கற்பனையுள்ள எஞ்சீனியர் கட்டியது அது. அது ஒரு மலைவிளிம்பு. நேர்கீழே காலடியில் மலைச்சரிவு இறங்கிப்போய் ஒரு சோலைக்காட்டை அடைந்தது. அங்கே மழையில் ஊறிய பச்சைக் குடைமரங்கள் காற்றில் குமிழியிட்டன. மலைச்சரிவு பச்சை மரக்கூட்டங்களாக மடிந்து ஏறி வான்விளிம்பில் சுழித்து நின்றது. அதற்குமேல் நீலமலைமுடிகள். அதற்குமேல் இளநீல மலைமுடிகள். அதற்குமேல் சாம்பல்நிற மலைமுடிகள். அதற்குமேல் முகிலால் ஆனவை போன்ற மலைமுடிகள். நான் வானிலிருந்து இளவெயில் இறங்கிப் பரவுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மழை மெல்லிய பிசுறுகளாக பொழிந்தது, ஒளிப்பிசிறுகள். அவை காற்றில் அங்குமிங்கும் அலைபாய்ந்தன.

பார்த்திருக்கும் போதே கண்கள் இருட்டிவந்தன. மலைகள் அடர்நிறம் கொண்டன. மிகப்பெரிய பறக்கும் மலை போல ஒரு கருமேகம் வந்து மேலே நின்றது. அதன் உடலுக்குள் சிறிய மின்னல்கள் வெட்டின. அதன் எண்ணங்கள் போல. அது தன்னைத் தானே கொளுத்திக் கொள்ள முயல்வதுபோல. மிகமெல்ல இடியோசை. அந்த ஒலி பொழிந்து உருகி மறைந்தபோது அதற்கு மறுமொழி என இன்னொரு ஓசை. மீண்டுமொரு ஓசை.

இடியோசைகள் வலுத்தபடியே வந்தன. இந்த இடியோசைகளில் ஓர் ஒழுங்கு உள்ளதா? நான் செவிகூர்ந்து அமர்ந்திருந்தேன். முன்பு இங்கிருக்கையிலேயே இடியோசைகளின் ஒழுங்கை அவதானிக்கும் பயிற்சி பெற்றிருந்தேன். தெளிவான சொற்றொடர்கள் என்று அவை தோன்றின. நாம் அறியாத பிரபஞ்ச முழுமொழி ஒன்றில் எழுபவை. அவற்றைக் கேட்கவேண்டும் என்றால் மலைகளாக எழுந்து இங்கே அமையவேண்டும். மலைமுடிகள் என்பவை மாபெரும் பூனைச் செவிகளா?

டீ குடித்துவிட்டு என் அறைக்குள் சென்றேன். குருவிக்கூடு புதிய சர்க்யூட்டுடன் மின்இணைப்பு பெற்றிருந்தது. அடுத்த இணைப்புக்குச் செல்லலாம் என்று மின்சாரத்தை நிறுத்தினேன். சர்க்யூட்டுடன் இணைக்கப்பட்டிருந்த அதிர்வுமானிகள் அணைந்தன. நான் இன்னொரு இணைப்பை எடுத்துக் கொண்டிருக்கையில் வெளியே மின்னல் அதிர்ந்தது. கண்கள் தெளிந்தபோது அதிர்வுமானியில் ஒரு சிவந்த ரேகை மின்னி ஓடியதாகத் தோன்றியது. கண்பிரமையாக இருக்கலாம். அல்லது மின்னலின் எதிரொளிப்பாக இருக்கலாம். ஆனால் அத்தனை துல்லியமாக இருக்க வாய்ப்பில்லை.

நான் அடுத்த மின்னலுக்காக காத்திருந்தேன். மின்னல் தொடங்குவதற்கு முன்னரே அதிர்வுமானியில் மின்னலின் விரிசல்கோடு போல ஓரு அதிர்வுரேகையை கண்டேன். மின்னலில் என் அறை நரைத்து மீண்டும் இருண்டது. எழுந்து சென்று எல்லா சன்னல்களையும் மூடினேன். இருட்டில் அதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். இப்போது ஐயமில்லாமல் பார்த்தேன். மின்னலுக்கு முன் ஒர் மின்னதிர்வு அதில் ஓடிச்சென்றது.

என் உள்ளம் பதற்றங்கள் அடங்கி அமைதிகொண்டது. புன்னகையுடன் அமர்ந்திருந்தேன். அந்த மின்னதிர்வு ஓடுவது என் தலைக்குள். என் மூளையென அமைந்திருக்கும் பல்லாயிரம் கோடி சர்க்யூட்டுகள் கொண்ட புரோட்டீன் அவரை விதைகளுக்குள். பின்பு ஓர் எண்ணம் வந்தது. எழுந்து சென்று ஓசையிடும் புளோயரை எடுத்து அதிர்வுமானியுடன் இணைத்தேன். அதிர்வுமானியின் திரையில் மின்விரிசல் ஓட கூடவே அது “டும்டும்டும் டுடுடும் டுடுடும் டும் டும்டும்! டுடுடும் “ என்று ஓசையிட்டது “டும்டும்டும் டுடுடும் டுடுடும் டும் டும்டும்! டுடுடும்!”

எனக்குள் ஒரு திடுக்கிடல் ஏற்பட்டது. அது ஏன் என்று புரியவில்லை. ஆனால் நெஞ்சின் துடிப்பு காதிலும் கேட்டது. எழுந்து கதவுகளை திறந்தேன். என் அறைக்குள் கருவி ஓசையிட்டது. மின்னல் அதிர்ந்து துடித்துடித்து அடங்க இடியோசை எழுந்து மலைகள்மேல் பரவியது. மலைகள் முழங்கிக்கொண்டே இருந்தன. ஓசையடங்கியபோது செவியில் ஓர் இன்மையின் முழக்கம் எஞ்சியது.

நான் அதிர்வுமானியையே பார்த்துக் கொண்டிருந்தேன் “டும்டும்டும் டுடுடும் டுடுடும் டும் டும்டும்! டுடுடும் டுடுடும் டும்ம்ம்ம்ம்! டும்டும்டும் டுடுடும்! டும்ம்ம்” மின்னல் அதிர்ந்து சுருண்டு ஓய இடியோசை எழுந்து சூழ்ந்துகொண்டது. நான் எண்ணியது சரிதான், அதிர்வுமானியில் முன்னரே மிகமெல்ல ஒலித்த அதே சொற்றொடரைத்தான் பின்பு மலைகள் சொல்லிக் கொண்டிருந்தன.

***

முந்தைய கட்டுரைகதைகள் கடிதங்கள்
அடுத்த கட்டுரைசென்றகாலத்தின் ஆற்றல்