துளி,மொழி,வேரில் திகழ்வது -கடிதங்கள்

வேரில் திகழ்வது [சிறுகதை]

அன்புள்ள ஜெ

வேரில் திகழ்வது கதை ஒரு குறுநாவல். ஆனால் அதன் வேகம் காரணமாக அதை வாசித்ததே தெரியவில்லை. உண்மையைச் சொல்லப்போனால் சிற்றிதழ்களில் கதைகளை வாசிப்பதை மிகவும் குறைத்திருந்தேன். கதைகளில் வாழ்க்கை இருக்கிறது, ஆனால் சுவாரசியம் இல்லை. கதைகள் அப்படியே வாழ்க்கையின் யதார்த்ததைச் சொன்னால்போதாது. அதை கதையாக ஆக்கவேண்டும்.

ஜானகிராமனின் எல்லாச் சிறுகதைகளும் சுவாரசியமான கதைகள். கதை என்பதற்குள் ஒரு விளையாட்டு உள்ளது. எழுதுபவனும் வாசிப்பவனும் சேர்ந்து ஆடும் ஆட்டம் அது. அந்த ஆட்டம்தான் சுவாரசியமாக்குகிறது. அது இந்தக்கதைகளில் இருக்கிறது. எல்லாக் கதைகளுமே சலிப்பில்லாமல் வாசிக்கவைப்பவையாக இருக்கின்றன. அதற்கு எல்லாவகையான உத்திகளையும் கையாள்கிறீர்கள். கதைகளில் உள்ள இந்த பரபரப்பான கதையோட்டம் மிகமிக முக்கியமான அம்சம் என நினைக்கிறேன்.

அந்தக்கதையிலுள்ள உணர்ச்சியான ஆன்மீகமான விஷயங்கள் எல்லாம் அதற்கு பிறகுதான். தன் மகள் பெரியவளானதும் மனைவியை மன்னிக்கப்போன ரொசாரியோவின் உணர்ச்ச்சிதான் கதையில் மையம். ஆனால் அது மிகச்சுவாரசியமான ஒரு வாழ்க்கைச்சூழலுக்குள் நிறுத்தப்பட்டிருக்கிறது

கணேஷ் ஆறுமுகம்

***

வணக்கம் ஜெ

வேரில் திகழ்வது கதையைப் படித்தேன்.

மேசையிலிருந்த ரொசாரியோவின் படத்தைக் கண்டு திகைத்து தந்தையைக் கட்டியணைத்த அழுத தருணம் இச்சிறுகதையின் உச்சம். ஒவ்வொரு உயிரினமும் தமக்கே உரிய நுண்ணுர்வுடன் துலங்கும் உலகு புலப்பட்டது. அவ்வாறான நுண்ணுணர்வுக்கான பெயர்களில் ஒன்று அல்லது தலையாயதுதான் தன்னைப் பிறிதொன்றாக எண்ணுதல். அந்த நுண்ணுணர்வின் ஆயிரம் பெயர்களின் அன்பு கூட ஒன்றாக இருக்கலாம்.

அரவின் குமார்

***

துளி [சிறுகதை]

மொழி [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

துளி சிறுகதையையும் இடம் சிறுகதையையும் வீட்டில் வாசித்துக் காட்டினேன். மிகப்பெரிய கொண்டாட்டம். எங்களுக்கு திருநெல்வேலிதான். ஆகவே இந்தப் பேச்சுமொழி தெரிந்ததுதான். தாத்தா பேசுவது போலவே இருக்கிறது என்று என் மகள் சொன்னாள்.

நான் சின்ன வயசில் வாசித்த கதைகளில் சுந்தர ராமசாமியின் சிலகதைகள் இதேபோல அபாரமான சிரிப்பும் அதற்கு அப்பால் ஒரு ஆழமும் கொண்ட கதைகள். பிரசாதம் ஒரு சிறந்த உதாரணம். நீங்கள் சுட்டிக்காட்டிய லவ்வு இன்னொரு உதாரணம். இந்தக்கதைகள் அந்த உலகைச் சேர்ந்தவை. மேலும் ஆழமான ஒரு ஆன்மிக தரிசனத்தை கொண்ட கதைகள் இவை

ஆர். கிருஷ்ணமூர்த்தி

***

அன்புள்ள ஜெயமோகன்,

இப்போது தங்கள் தளத்தில் வெளியிட்டுவரும் சிறுகதைகளை தொடர்ந்து வசித்துவருகிறேன் . இந்த lockdown இறுக்கத்தில் உங்கள் கதைகள் தரும் ஆசுவாசம் சொல்லி முடியாது. எனக்கு பிடித்த கதைகளாக ‘இடம்’ மற்றும் ‘மொழி’ யை குறிப்பிடுவேன். இடம் சிரித்து முடியவில்லை . மொழி நுணுக்கமாக மொழியை தாண்டிய தொடர்படுத்துதலை குறிப்பதாக எண்ணிக்கொண்டேன். அந்த சிறுகதையை என் மனைவியை வாசிக்க சொன்னேன். குழந்தை மாட்டிக்கொள்வது என்ற வுடன் பதறி வாசிக்க மறுத்தாள் . இல்லை முழுக்க வாசி என்று கட்டாயப்படுத்தவுடன் வாசித்து  பேசிக்கொண்டே இருந்தாள் .

அன்புடன்
ஆ .கந்தசாமி
புனே

***

முந்தைய கட்டுரைகதைகள், கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎழுகதிர்,லூப்- கடிதங்கள்