லூப் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
ஒரு தொழிற்சூழலில் இருந்து இத்தனை கதைகள் தொடர்ச்சியாக வெளிவருவது தமிழில் இதுதான் முதல்முறை என நினைக்கிறேன். ஒரு தொழிற்சூழலில் உள்ள வாழ்க்கையைச் சொல்லும் சில நாவல்கள் வந்திருக்கின்றன. ஆனால் அதை குறியீடாக ஆக்கி கவித்துவமாக எழுதப்பட்ட கதைகள் பெரும்பாலும் இல்லை. நான் கட்டுமானத்துறையில் வேலைபார்க்கிறேன். இந்த தளத்தின் குறியீட்டுத்தன்மையைப் பற்றி நான் நிறையவே யோசித்திருக்கிறேன். குறிப்பாக எடையை ஒவ்வொரு பொருளும் தாங்குவது, அதன் எல்லை இதையெல்லாம் அற்புதமான கதைகளின் கருக்களாக ஆக்கமுடியும். எழுதிப்பார்க்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு.
இந்த லூப் கதையில் உள்ள அழகான அம்சம் என்பது அந்த உற்சாகமான வேலைச்சூழல். என் அப்பா 26 ஆண்டுகள் தொலைபேசியில் வேலைசெய்தார். அதில் 23 ஆண்டுகள் ஒரே அலுவலகத்தில்தான் இருந்தார். அவருடைய எல்லா நண்பர்களும் ஒரே ஊரைச்சேர்ந்தவர்கள். ஒரே ஆபீசில் வேலைசெய்தவர்கள். அவர்கள் வேலை முடிந்து ஆப்பிஸிலேயே ரிக்ரியேஷன் கிளப்பிலேயே 9 மணிவரை டிவி பார்த்து பேசி சிரித்து அதன்பிறகுதான் வீட்டுக்கே வருவார்கள். அந்த வாழ்க்கையே வேறுதான். இந்தக்கதையில் ஊழியர்கள் நடுவே உள்ள கொண்டாட்டமான உறவு அழகாக இருந்தது
செல்வராஜ் கே.
அன்பார்ந்த ஜெயமோகனுக்கு
வணக்கம், நலம்தானே?
லூப் சிறுகதை படித்தேன். மீண்டும் தொலைப்பேசித் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு கதை. ஆனால் இதில் மிகக்கனமான விஷயத்தை மிகவும் எளிதாகச்சொல்லி மறைமுகமாய் விளங்க வைத்திருக்கிறீர்கள். இதுபோன்ற கதைகளில் எள்ளலும் நகைச்சுவையும் இல்லாவிடில் வாசிக்கக் களைப்பாயிருக்கும். கூத்துகளில் கட்டியங்காரன் போல, சர்க்கஸில் பஃபூன் போல நகைச்சுவை அளவோடு தேவை.
தொடக்கத்திலேயே ’நான் என்ன சர்ச்சில பாவமன்னிப்பா கேக்கறன் பொய் சொல்றதுக்கு” என்பதில் தொடங்கும் நகைச்சுவை கதை முழுதும் பரவலாக ஓடி வருகிறது. அதுவும் ‘அவர் கூப்பிடமுயன்றது பரமபத்திலிருக்கும் ஏசுவை” என்பதும் ”அவரு எடுக்காட்டாலும் மாதா எடுக்க வேண்டியதுதானே” என்பதும் உச்சம் ”திருச்சபை உள்ள நாம் பாக்காத ஆனையா, கடுவாயா, கருநாதமா” ”கத்தோலிக்க மதத்துல சேத்துடுவோம், ஆறு மாசத்துல சகல கள்ளமும் படிச்சுடுவான்” ”பிஷப் என்னும் சொல்லை ஆடுமேய்யபவனுக்குப் பயன்படுத்தல்” போன்றவை படித்தபின்னும் மனத்தை விட்டு அகலாதவை.
துரை பாம்பைச் சுட்டுவேன் என்று சொன்னவுடன் வரும் ஆவேசம்தான் கதையின் முக்கியத்துவத்தை அப்பொழுதுதான் உணர வைக்கிறது. காடுகளை அழித்து நாம் மாளிகைகள் கட்டுவோம், அணைக்கட்டுகள் அமைப்போம். பாதைகள் போடுவோம், கல்லூரிகள், அவற்றுக்கான விடுதிகள் கட்டுவோம். இதெல்லாம் தவறு என்பதைச் சொல்லாமல் சொல்லும் கதை இது. கம்பி மேல் நடக்கும் வித்தைதான். துளி தவறினாலும் பிரச்சாரக் கதையாகிவிடும் சாத்தியம். கடைசியில் கதை சொல்லி சில ஆண்டுகள் கழித்து வரும்போது காட்டையே காணவில்லையே?
இதுதான் யதார்த்தம்.
வளவ. துரையன்
பெயர்நூறான் [சிறுகதை]
அன்புள்ள ஜெ,
இந்த ஊரடங்குக் காலத்தில் உங்கள் தளத்தில் வரும் கதைகள் மிகமிக ஆசுவாசமான அனுபவத்தை அளிக்கின்றன. சிறுவயதில் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று மீண்டும் வாழ்வதுபோல ஒரு அனுபவம். இன்றைய கதை பெயர்நூறான் ஓர் அற்புதம். என் பையனுக்கு பத்து பெயர். நான் ஒரு பெயர். என் மனைவி ஒரு பெயர். பாட்டிகள் தாத்தாக்கள் வேறுவேறு பெயர். அவனே அவன் பெயரை ஒன்று சொல்லிக்கொள்வான். பெயரிட்டு நமக்கு போதவே இல்லை இல்லையா?
என் மகன் வாணியம்பாடி அருகே ஒரு ஊரிலே பிறந்தான். வாணியம்பாடியில்தான் அவன் அம்மாவை காட்டிக்கொண்டிருந்தோம். ஒரு வேலைவிசயமாக வந்தபோது சட்டென்று குழந்தை பிறந்துவிட்டது. அந்த அனுபவமெல்லாம் இந்தக்கதையில் வந்துசெல்கின்றன
மலைச்சாமி
அன்பு ஆசிரியர்,
பெயர்நூறான் இன்று வாசித்து முடித்ததும் (நிச்சயமாக) மற்ற வாசகர் போலவே பல்வேறு எண்ணங்கள் மனதில் ஓடின. என் மகன் பிறந்த நினைவுகளை நினைத்துக்கொண்டே படியிறங்கியபோது அவன் மேலேறி வந்தான். “உன்னத்தான் நெனச்சேன்” என்றேன். “That’s the connection “ என்றான்.
என் மனைவி பிரசவ வார்டில் இருந்தபோழுது அதே நேரம் மற்றொரு மருத்துவமனையில் என் அம்மாவிற்கு மார்பக புற்றுநோய் ஆபிரேஷன்.
மனைவியை நினைத்து மகன் வர சந்தோசபடுவதா அம்மாவை நினைத்து கலங்குவதா? இரண்டும் கெட்டான் நிலையில் பிரசவ அறை வாசலில் நின்றிருந்தேன். நர்ஸ் “ஏன் உன் கணவர் இப்படி பயந்திருக்கிறார்” என்று என் மனைவியை கேட்குமளவுக்கு.
என் மகனை நர்ஸ் கொண்டு வந்து நான் நின்ற வாசலருகே இருந்த தொட்டிலில் (5 மீட்டர் தூரம்) போட்டுச்சென்றாள்- அவன் எதிர்த்திசை பார்க்க.
இன்றும் எனக்கு பிடிபடாதது- அக்கணம் அவன் பின்பக்கமாய் தலை திருப்பி சரியாக என்னைப் பார்த்தான். என் கண்களில் கண்ணீர். (இக்கதையில் அப்பனும் மகனும் பேசும் தருணம் போல அது). எதேச்சையா அல்ல உண்மையாகவே என்னைப் பார்த்தானா? என்ன சொல்லியிருப்பான் என்னிடம்? புரியல! இதை யாரும் நம்பும்படி இருக்குமா, தெரியல!! பெயர்நூறான் படித்தபின் அது சாத்தியமே என்று கூட தோன்றுகிறது.
இதை அவனிடம் அடிக்கடி ‘connection at birth’ என்று கதை போல சொல்வேன்.
அனைவர் நெஞ்சுக்கருகிலும் நின்று பேசும்படியான கதையிது. எதோ ஒரு சிறு புள்ளியில் நம் வாழ்வை தொடும் கதைகளே மனதில் எஞ்சும்.
அந்த மலரும் நினைவுகளுக்காக நன்றி.
இளங்கோவன் பரமசிவன்
குறிப்பு: அம்மா அடுத்த ஒரு மாதத்தில் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். (அப்பா இறந்த 7வது மாதம்)