லூப் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
நலம்தானே?
லூப் கதையை சிரிப்புடன் படித்துக்கொண்டிருந்தேன். என் மனைவி என்ன சிரிப்பு என்று கேட்டாள். கதையை சொன்னேன். அந்தக்கால டெலிபோனைப்பற்றி கொஞ்சம் சொல்லவேண்டியிருந்தது. இரண்டு கம்பிகள் வழியாக ஃபோன் போகும் என்பதெல்லாம்கூட இன்றைக்கு யாருக்கும் தெரியவில்லை. சிரித்து கண்ணீர்மல்கினோம்
இந்தக்கதையின் மையம் இத்தனை தொழில்நுட்பம், வளர்ச்சி நடுவே நாம் உயிர்ச்சூழலை ஏன் இணைத்துக்கொள்ளக்கூடாது என்பதுதான். இவ்வளவு ஃபோன் இருக்கே, ஒரு மலைப்பாம்பு லூப்பும் இருக்கட்டுமே என்றுதான் ஞானம் கேட்கிறார். மனிதநாகரீகத்தை நோக்கி கேட்பது அது. என்80 வயதான அம்மாவுக்கு கதையை சொன்னதுமே கதையின் மையத்தை அவர் சொன்னது ஆச்சரியமாக இருந்தது. ஆமடா அதுக்கும் ஒரு எடம் குடுத்து இதையெல்லாம் செஞ்சிருக்கலாமேடா என்றார்கள்.
நகைச்சுவையாகவே செல்லும் கதை சட்டென்று ஞானம் இமோஷனல் ஆகும்போது வேறு லெவலுக்கு செல்கிறது. அப்போது கதையின் மையம் உருவாகி வந்துவிடுகிறது
ரா. கிருஷ்ணசாமி
அன்புள்ள ஜெ.
லூப் படித்தேன். கதை நெடுக இயல்பான நகைச்சுவை இழையோடுகிறது.நெல்சனின் நக்கல் நையாண்டிகளுக்கு இடை இடையே “நான் சீனியாராக்கும்” எனும் .ஞானத்தின் அஃபிஷியல் நினைவுறுத்தல் (எஃபெக்ட் இல்லாத) ரசிக்க வைத்தது. இக்கதையில் அனைத்து அம்சங்களையும் கோர்க்கும் சரடாக நான் பார்ப்பது வேற்று நாட்டவர், பல மதத்தவர், பிற உயிரினங்கள், இயற்கை இவை அனைத்தும் இயைந்து வாழும் வாழ்க்கை முறை முன்னர் இருந்ததென்பது.
இதற்கு ஊறு வருதை அனுமதிக்காத தைரியமும் இருந்தது. காலப்போக்கில் இவை நீர்த்துப்போனதையும் இறுதியில் சுட்டிக் காட்டி விட்டீர்கள்.
அன்புடன்
ரமேஷ் கிருஷ்ணன்
பொலிவதும் கலைவதும் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
பொலிவதும் கலைவதும் ஒரு கவிதையின் தலைப்பு. வாழ்க்கையைப்பற்றி இரண்டு வார்த்தை சொல்வதாக இருந்தால் சொல்லலாம். அந்தப் படம் பொலிந்து அப்படியே கலைந்துவிடுகிறது. அப்படி ஒரு கலை இருக்கிறது என்பதை அதற்குப்பிறகு நானே இணையத்திலே தேடி கண்டுபிடித்தேன். ஆச்சரியமாக இருந்தது. அவ்வளவு பெரிய ஓவியம் கண்முன்னால் கலைந்து மறைவது ஒரு பெரிய கனவுமாதிரி இருக்கும் என நினைக்கிறேன்.
வாழ்க்கையைப்பற்றிய ஒரு தரிசனம்தான் அது. கலைந்த வண்ணங்களாகவே வாழ்க்கை மிச்சமாகிறது. அது காதல்தோல்வி என்பது ஒரு காரணம்தான். அவளை கல்யாணம்செய்திருந்தாலும்கூட வாழ்க்கை ஒரு பொலிவும் கலைவும்தான். மிச்சமாவது அவ்வளவு வண்ணங்களும் தான். ஆனால் அந்த வண்ணங்களிலிருந்து கற்பனைவழியாக அந்த ஓவியத்தை வரைந்துகொள்ள முடியும். அந்த கற்பனைதான் வாழ்க்கையிலே மிஞ்சியிருக்கிறது
ராகவேந்திரன் மகாதேவன்
வணக்கம் ஜெ
பொலிவதும் கலைவதும் கதையை வாசித்தேன். சிறுகுழந்தைகள் விளையாட்டுச் சாமான்களை அடுக்கி மீண்டும் கலைத்து விளையாடும் பாவனை விளையாட்டுதான் மனத்தில் தோன்றியது. பொலிவதும் கலைவதும் என்பது இயற்கையின் விதியாகக் கூட இருக்கிறது. அந்த இயல்பைத்தான் தேவிக்கும் சூடியிருக்கிறோம். மெளனியின் அழியாச்சுடர் கதையை நினைவுப்படுத்தியது.
அரவின் குமார்