லூப் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
என்னதான் சீரியசான கதைகள் வந்தாலும் லூப் போன்ற கதைகள் அளிக்கும் விடுதலையே வேறுதான். எத்தனை மனிதர்கள் ஒரு சின்ன கதைக்குள்ளே. பாம்பைக்கண்டதும் கடவுளைக் கூப்பிடும் கம்யூனிஸ்டு பெண்மணி, யதார்த்தமாக “பாம்புசாமி” என்று சொல்லும் காணிக்காரன் “தோனே பெரிய பாம்பு ஞங்கா பிடிச்சது” என்று பெருமையை விட்டுக்கொடுக்காத துணைக்காணிக்காரன்
ஞானத்தின் கதாபாத்திரம் அற்புதமாக வந்துள்ளது. அவருடைய ஈஸினெஸ் அபாரமானமானது. “அப்பன் பனையிலே இருந்து விளுந்தா கோளிக்காலு கடிக்கலாம்னு நினைக்காதீக” என்று சொல்பவர். காட்டில் வாழ்ந்த ஆடுமேய்ப்பனின் மகன். காட்டில் ஏசு வாழ்கிறார் என்று உணர்பவர். மனிதகுமாரன் சிலுவையில் தொங்குவதுபோல பாம்பு கம்பியில் தொங்குகிறது என நினைப்பவர். அவருடைய உள்ளே இருந்து வரும் ஆன்மீகம்தான் கதை
லூப் என்றால் இணைப்பு. இங்கே அந்த இணைப்பு அறுந்துவிட்டிருக்கிறது. இயற்கைக்கும் மனிதனுக்குமான இணைப்பு. டெக்னாலஜிக்கும் இயற்கைக்குமான இணைப்பு. அந்தலூப்புடன் டெக்னாலஜி இருந்தால்போதும் என்கிறார் ஞானம். அது ஒரு தர்சனம். ஆனால் அதை நாம் இழந்துவிட்டோம் என்று சொல்லி கதை முடிகிறது. ஒரு கொப்பளிப்பு ஆக வெளிப்படும் ஞானத்தின் ஆவேசம்தான் கதையின் மையம். ஒரு பாம்பு ஓர் உயிர். உயிரையும் சேர்த்து பின்னிக்கொள்ளும் ஒரு தொழில்நுட்பத்தையே ஞானம் தேடுகிறார் என்று நினைக்கிறேன்
செந்தில்குமார்
அன்புள்ள ஜெ,
’லூப்’ கதையை வாசித்தேன்.
துரை ஒரு கணம் கூட யோசிக்காமல் மலைப்பாம்பை சுட்டுவிடலாம் என்று சொல்கிறான். பாம்பை சாத்தான் என்று நினைப்பதாலா? சாத்தானுக்கு லூசிபர் என்ற பெயரும் உண்டுதானே? ஆனால் அதே பைபிளை வாசிக்கும் ஞானத்திற்கு அது ‘பச்சைபிள்ளை’. பாம்பை பிள்ளையாகப் பார்க்கும் ஞானம் அவருடையது. ‘சத்யகிறிஸ்தியானிகள்’ என்றால் கூட நம் மண்ணில் பாம்பை சாத்தானாகப் பார்க்க முடியாது என்றே நினைக்கிறேன். பாம்பின் கதையை கேட்டு ஞானத்தை ’அஷடு’ என்று சொல்லும் ஜி எம் மும் அதே மன நிலையில்தான் இருக்கிறார்.
மலைப்பாம்பை பார்த்தவுடன் ‘என்றே பொன்னுபகவதியே’ என்று ஐடியாலஜி பறந்து விடுவது நல்ல இடம். உண்மையில் கம்யூனிஸ்டு சகாவின் பெயர் பத்ரகாளிப்பிள்ளை என்பதே நகைமுரணாக இருந்தது. இன்னொரு இடத்தில் மலைப்பாம்பை ’கெட்டுப்போன நெய்யில் செய்ததாக்கும்’ என்று ஒரு பழங்குடி சொல்லும்போது எனக்குள் உள்ள ’விலங்கு’ விழித்துக்கொண்டது. ’சிந்தனை கூண்டில்’ இன்னும் அடைக்க முடியவில்லை.
கதையில் இன்னொரு முக்கியமான கோணமும் உள்ளது. என்னதான் தொழில்நுட்பம் இருந்தாலும் அங்கே ‘பாம்புக்க லூப்பும் இருக்கட்டும்’ என்று பாம்புக்கு ஒரு இடம் இருந்தது. அப்படி நினைத்த காலம் சட்டென்று மறைந்து அந்தக் காடே தேவையற்ற ’லூப்’ ஆகிவிட்டது. நம் ஆன்மாவை அழித்து சாலை, கல்லூரி, தொழிற்சாலை என வேகமாக ’முன்னேறிக்கொண்டு இருக்கிறோம்’. காடு அழியும்போது அதனுடன் நம் வேரும் அழிந்துவிடுகிறது அல்லவா?
அன்புடன்
ராஜா
அனலுக்குமேல் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
நான் அனலுக்குமேல் கதையை வாசித்தபோது நேராகச் சென்று டானா தீவுக்கூட்டம், ஜான் ஃப்ரம், கார்கோ கல்ட், ஃப்ரேசரின் ஓவியம் எல்லாவற்றையும் விக்கியில் பார்த்தேன். மார்வின் ஹாரீஸின் புத்தகத்தில் விரிவாகவே எழுதப்பட்டுள்ளது. ஆச்சரியமான ஒரு விஷயம் கார்கோ கல்ட் என்பது. அதில் அந்தப் பழங்குடிகளின் நம்பிக்கை உள்ளது. ஆனால் அந்த வகையான நம்பிக்கையின் வளர்ச்சிநிலைகள் என்றுதான் எல்லா ப்ரோப்பெட் மதங்களையும் சொல்லவேண்டும் என நினைக்கிறேன்.
அந்த கார்கோ கல்டுக்கு ஒரு கார்கோ கல்ட் உருவாக்கப்படுகிறது இந்தக் கதையில். நவநாகரீகத்தின் உச்சியில் நின்றபடி மீண்டும் காட்டுவாழ்க்கைக்குச் செல்கிறார்கள். அதை தெரிந்தே நடிக்கிறார்கள். அது ஒருவகை ஆன்மிக விடுதலையாக ஆகிவிடுகிறது
ராஜசேகர்
https://en.wikipedia.org/wiki/Tanna_Island
https://en.wikipedia.org/wiki/Cargo_cult
அன்புள்ள ஜெ
அனலுக்குமேல் கதையை ஒரு போஸ்ட் மாடர்ன் ஸ்டேட் என்று சொல்லலாம். பிரிமாடர்ன் காலகட்டத்தில் மனிதன் இயற்கையை பீதியுடன் பார்த்தான். அதை அந்த பீதியைக்கொண்டும் தன் தேவையைக்கொண்டும் விளங்கிக்கொண்டான். மதங்களை உருவாக்கினான். மாடர்ன் காலகட்டத்தில் அவன் மதங்களை கட்டுடைத்தான். மதங்களை தர்க்கப்படுத்தி புரிந்துகொண்டான். அந்த வெறுமையில் நின்று சீரழிந்தான்.
போஸ்ட் மாடர்ன் காலகட்டம் என்பது மைமிங் தான். போலச்செய்தல் என்று தமிழில் சொல்லலாம். தெரிந்தே நடிப்பது. இன்றைக்கு காவியங்களின் யூனிட்டி சாத்தியமில்லை. ஆகவே மாக் எபிக்குகளை படைக்கிறோம். இன்றைக்கு எல்லாமே மைமிங்தான். சிலசமயம் புரட்சிகள் மக்கள் கிளர்ச்சிகளும்கூட மைமிங் தான் வால் ஸ்ட்ரீட் புரட்சி, மெரினா புரட்சி, அரபு வசந்தம், அன்னா ஹராசே புரட்சி எல்லாமே பழைய காலகட்டத்தில் உண்மையான உணர்ச்சிகளுடன் நடந்த நிகழ்ச்சிகளின் மைமிங் தான். இன்றைக்கு மிமிக்ரிதான் மிகப்பெரிய கலை.
இங்கே மதங்களை மிமிக் செய்கிறார்கள் கல்ட் உருவாக்குபவர்கள். கார்கோ கல்டை மிமிக் செய்கிறார்கள். பிரிமாடர்ன் காலகட்டத்தை மிமிக் செய்கிறார்கள். நீங்கள் சிலப்பதிகாரத்தை ஏன் கொற்றவை என எழுதுகிறீர்களோ மகாபாரதத்தை ஏன் வெண்முரசு என எழுதுகிறீர்களோ அதே காரணம்தான்.
ஒரு போஸ்ட் மாடர்ன் காலகட்டத்தின் அபத்தத்தையும் அதன் கொண்டாட்டத்தையும் சொன்ன கதை இது. எதிர்காலத்தில் இன்னும் ஆழமாக வாசிக்கப்படலாம்
ராமச்சந்திரன்