அனலுக்கு மேல், இடம் -கடிதங்கள்

 

அனலுக்குமேல் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

அனலுக்கு மேல் ஒரு விசித்திரமான கதை. அந்தக்கதையின் சில குறியீடுகளை கொண்டே கதையை உருவாக்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது. முதல் குறியீடு இதெல்லாம் ஆதியான அனலுக்கு மேல் நடக்கிறது என்பதுதான்.

 

மண்ணுக்கு அடியில் இருக்கும் அனல் அது. மண்ணுக்குமேல் எழுந்து ஓர் அறிவிப்பு போலவோ பதாகை போலவோ நின்றுகொண்டிருக்கிறது. அதற்குமேல் தான் இதெல்லாம் நடக்கின்றன. தீ குளிர்ந்து உருவான ஒரு எரிமலைப்படிவில்தான் வாழ்க்கை நடக்கிறது. அந்த ஆழத்திலுள்ள தீயின் கதைதான் இது. குரூரம் காமம் எல்லாமே அந்த தீதான். அதுதான் மானுடத்தின் கொடியா? தெரியவில்லை.

 

இரண்டாவது குறியீடு அந்த நிகழ்ச்சி ஒரு மைம் ஒரு நடிப்பு என்பது. நாம் நமக்கு முன்னால் நடந்தவற்றை நடிக்கிறோம். அதற்கும் முன்னால் நடந்ததை அவர்கள் நடிக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சம் மாற்றிக்கொண்டு நடிக்கிறோம். நம் பண்பாடு என்பதே அதுதான், ஒரு தொடர்ச்சியான நடிப்பு. நடித்து நடித்து நாம் உருவாக்கிக்கொள்ளும் சில பொதுவான புரிதல்கள்

 

இதேபோன்ற ஒரு ரேவ் பார்ட்டியில் 1991ல் நான் கலந்துகொண்டேன். இப்படி உக்கிரம் இல்லை. ஆனால் கேனிபால் போல வேஷம் போட்டுக்கொண்டு கொஞ்சம் டிரக் சேர்த்துக்கொண்டு ஒரு காட்டில் ஒரு டான்ஸ் ஆடினோம். ஒரு கம்பெனி பார்ட்டி அது. அது இந்த அளவுக்கு இல்லை. ஆனால் இதெல்லாம் இன்றைக்கு தேவையாக இருக்கிறது

 

ராம்

 

அன்புள்ள ஜெ

 

கார்கோ கல்ட் என்பது உலகிலுள்ள பெரும்பாலான மதங்களின் அடிப்படை வடிவம். எங்கோ ஒரு ஞானிக்கு ஒரு மெய்யறிதல் வாய்க்கிறது. அவர் சென்ற பாதையை அப்படியே மற்றவர்களும் ஃபாலோ செய்கிறார்கள். அவர்களும் அதை செய்தால் அது கிடைக்கும் என நினைக்கிறார்கள். அது மதசம்பிரதாயம் என்று ஆகிவிடுகிறது. அதன்பிறகு பயன் இருக்கிறதோ இல்லையோ சம்பிரதாயத்தை கண்மூடித்தனமாக கடைப்பிடிக்கிறார்கள். அதுதான் மதம்

 

இங்கே மதங்கள் செயலற்றுவிட்டன. ஏனென்றால் கார்கோ கல்ட் என தெரியும். சரி கார்கோ கல்ட் என்று தெரிந்தே அதை மைம் செய்து பார்ப்போமெ என்று செய்கிறார்கள். எல்லா பாவனைகளையும் களைந்து அந்த ஆதிமானுட வாழ்க்கைக்கு, அதாவது ஒரிஜினல் ஃபயருக்கு செல்கிறார்கள்.

 

என்னென்னவோ ஆழத்திலிரிந்து கிளறி எடுத்த ஒரு அபாரமான கதை

 

எஸ்.ஆர்

இடம் [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ,

 

இடம் கதையை பலமுறை நண்பர்கள் குடும்பத்தினருடன் அமர்ந்து படித்துச் சிரித்தேன். அதிலுள்ள கெட்டவார்த்தைகளைக்கூட படித்தேன். அந்த கிராமிய அனுபவம் அதில் முழுமையாக வந்தது

 

கிராமத்தின் இன்னொசென்ஸும் கதையில் உள்ளது. அவர்களின் சூழ்ச்சிகளும் கதையில் உள்ளது. அவர்களின் ஒற்றுமையும் பேசப்படுகிறது. அவர்களின் உள்மோதல்களும் கதையில் உள்ளது

 

மிகமிக ஹிலாரியஸான இடம் படிச்சகுரங்கு போலீஸ் படிக்காத குரங்கு திருடன் என அவர்கள் புரிந்துகொள்வது. அரசாங்கம் என்பது அப்படி வீட்டுக்குமேல் வந்து அமர்ந்திருக்கும் ஒரு பெரிய குரங்குதான் என்று கரடிநாயர் சொல்வது

 

சந்தேகமே இல்லை, தமிழில் வெளிவந்த மிகமிக வேடிக்கையான இலக்கியப்படைப்புகளில் ஒன்று இது. பகடி என்றாலே அரசியல்நோக்கத்துடன் , உள்ளே ஒருவகை கரிப்புடன் சொல்லப்படும் விமர்சனம் என்றுதான் தமிழில் நாம் பழகியிருக்கிறோம். வைக்கம் முகமது பசீரிடம் இருக்கும் பகடி கசப்பு இல்லாதது. கொண்டாட்டமானது. ஆனால் வாழ்க்கையின் ஒட்டுமொத்தமான அசட்டுத்தனத்தை சுட்டிக்காட்டி சிரிப்பது. இது அந்தவகையான உயரிய வகையான பகடி.

 

டி.ராஜா

 

அன்புள்ள ஜெ.

 

யானையில்ல இடம் போன்ற சிறுகதைகளை குடும்பத்தோடு படித்து வெடித்து சிரித்தோம்.

 

இடம் சிறுகதை .இன்றைய சூழலுக்கு பொருத்தமானதாக தோன்றியது.

 

கதையில் வரும் குரங்கு எனக்கு கரோனாவோடு ஒப்பிடத் தோன்றியது. கரோனா வைரஸும் நம்மோடு வாழ ஆசைப்படுகிறது. குரங்குக்கு கதளிப்பழச்சாறு கொடுத்து நம்மோடு சேர்த்தது போல் கரோனாவிற்கும்  ஏதாவது மருந்து கண்டுபிடித்து அதை மட்டுப்படுத்தி ஒரு இடம் கொடுத்து நம்மோடு சீக்கிரம் சேத்திடுங்ளே!!! எனத் தோன்றியது.

 

குரங்கு பிடிக்க கொடுத்த ஒரு தாரு வாழைப்பழம் ஒரு சீப்பா சுருங்கிறது அரசாங்க திட்டசெலவுகளோடு  ஒப்பிடக்கூடியதாக இருந்தது.

 

கொரங்கு இந்துவாக்கும் என்பது இன்றை சூழலுக்கு பொருத்தமானதாக தெரிந்தது.

 

கதையில் வெடித்து சிரித்த பல இடங்கள்

 

நாணம்மை தன் கணவன் ராமன் நாயர் தைரியத்தை போற்ற அதற்கு தங்கையா பெருவட்டடர் ”உள்ளதாக்கும்”.

 

ஒவ்வொரு சமயமும் கேசவன் நாயர் ”ஆம்புளைங்க பேசுற எடத்தில் பொம்புளைக்கு என்ன வேலை?

 

கரடி நாயைப் பார்த்தபின் அவமான உணர்வுடன் “அதுக்கு தேகசொகமில்லை” என்றார்.

 

“நல்லவராக்கும்…  என்றான் தவளைக் கண்ணன் “நல்ல நாயருண்ணா அது ஒருமாதிரி பல்லுபோன நாயாக்கும் கேட்டுதா?”

 

அனந்தனுக்கும் கொச்சு கல்யாணிக்குமான ஒவ்வொரு உரையாடல்களும் வெடிதான்

.

“அவனுக்க ஆத்மாவாக்கும் அது” என்றார் ஆசாரி பிரமநாயகம்

 

“ஏலே அது படிச்ச கொரங்காக்கும்… அத வச்சு காட்டுகொரங்க வெரட்டுவானுக… போலீஸ வச்சு கள்ளன வெரட்டுத மாதிரி”

“அம்மிணி இப்பம் அது போடுகதில்லியா?” என்றான் லாரன்ஸ் “பாத்தா சொல்லமுடியாது”

கொரங்கு இந்துவாக்கும். அது உண்டாக்குத நட்டத்துக்கு இந்துக்கள் கணக்கு சொல்லணும்”

“ஹணிமூனுக்கு அம்மை நேந்துகிட்ட காசும் கிட்டணும்… ஊருக்காகவாக்கும் அம்மை நேந்தது” என்றான் ராமன் நாயர்

 

 

உங்கள் கதைகளின் மூலமாக இந்த குவாரண்டைன் நாட்கள் இனிமையான மறக்கமுடியாத நாட்களாகிறது. அதற்கு நன்றிகள் பல

 

சந்திரசேகர்

ஈரோடு

 

முந்தைய கட்டுரைபெயர்நூறான்,சுற்றுக்கள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅங்கி, விலங்கு -கடிதங்கள்