பகுதி நான்கு : அலைமீள்கை – 10
நான் அவைக்குள் நுழையும்போது சுஃபானு பேசிக்கொண்டிருந்தார். குடித்தலைவர் இருவரும் யாதவ மைந்தர்களும் மட்டுமே அவர்முன் இருந்தனர். அறைக்குள் கடற்காற்று சுழன்றுகொண்டிருந்தது. மூத்தவர் ஃபானு கைகளை மார்பில் கட்டி அமர்ந்திருந்தார். அங்கு பேசப்படுவனவற்றை அவர் முன்னரே அறிந்திருப்பதுபோல முகம் காட்டினார். அவ்வப்போது ஏற்று தலையை அசைத்தார். நான் நுழையும் அசைவைக் கண்டு சுஃபானு திரும்பிப்பார்த்தார். நான் தலைவணங்கி பின்னிருக்கையில் அமர்ந்தேன்.
இருக்கையில் கால்நீட்டி சாய்ந்தபின் அப்பால் அமர்ந்திருந்த கணிகரை பார்த்தேன். அவர் விழிதாழ்த்தி எதையோ ஆழ்ந்து எண்ணுபவர்போல் இருந்தார். அவையில் இருந்தவர்கள் ஆழ்ந்த செவிக்கூர் இல்லாமலேயே அமர்ந்திருந்தனர். பேசிக்கொண்டிருந்தது என்ன என்பதைப்போல சுஃபானு அனைவரையும் ஒருமுறை பார்த்தார். நான் வந்து அமர்ந்து ஓரிரு கணங்களே ஆகிவிட்டிருந்தன. ஆனால் அங்கே முன்னரே அவ்வண்ணமே அமர்ந்திருக்கிறேன் என்னும் உணர்வை அடைந்தேன். சுஃபானு என்னை நோக்கி “கிருதவர்மனை எவ்வண்ணமேனும் அழைத்துவரவேண்டும் என்று கணிகர் கூறுகிறார், இளையோனே” என்றார். அனைவரும் என்னை திரும்பி நோக்கினர். கணிகர் அப்போதுதான் என்னைப் பார்ப்பவர்போல புன்னகை செய்தார்.
“கிருதவர்மன் இங்கு வந்துசேராமல் போர் தொடங்காது என்கிறார் கணிகர். அது உண்மை என்றே தோன்றுகிறது. அவர் இங்கு வந்தால் அனைத்தும் முழுமையாக மாறிவிடும். தந்தை வரக்கூடும் என்ற எண்ணத்தில் இதுவரை இங்கே ஒவ்வொன்றும் ஒத்திப்போடப்பட்டன. இப்போது அவர் வரப்போவதில்லை என்பது உறுதியாகியிருக்கிறது. இனி வரவேண்டியவர் கிருதவர்மன். அவர் வருவது நம்மை வலுவாக்கும். வராவிட்டால்கூட நாம் நம்மைச் சார்ந்திருக்கும் ஓர் உறுதிப்பாட்டை அடைவோம். ஆனால் அதற்கு முன் கிருதவர்மன் நம் தரப்பில் இருக்கிறார், நமக்கென எழவிருக்கிறார் என நாம் அவர்களை நம்பச்செய்யவேண்டும். நம் குடிகளும் படைகளும் அவ்வாறே எண்ணவேண்டும். நாமே அப்படி சில நாட்கள் கருதவேண்டும்” என்றார் சுஃபானு.
“அது நம்மை ஊக்கம் கொண்டவர்களாக ஆக்கும். நம் எதிரிகள் அஞ்சுவர். நம்மவர் இணைந்து உடன்நிற்பர். நம் ஆற்றல் பெருகும்… இன்று நம்மை நாமே திரட்டிக்கொள்ள மிகச் சிறந்த வழி என்பது கிருதவர்மனின் பெயரை தலைக்கொள்வதே” என்று சுஃபானு தொடர்ந்தார். “ஆகவே இன்று நாம் செய்யவேண்டியது கிருதவர்மன் இருக்கிறார் என்று முடிவு செய்வது. அவர் இருந்தால் என்ன செய்வோம் என்பதை நாமே வகுத்துக்கொண்டு அவ்வண்ணம் முன்னேறுவது. அவர் இருக்கிறார் என்ற செய்தியே நம் குடிப்பூசலை முற்றாக ஒழித்துவிடும். நம்மை போரில் வழிநடத்த மாபெரும் குருக்ஷேத்ரப் போரில் களம்நின்று வென்ற இருவர் இருக்கிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்திருக்கலாம். ஆனால் அவ்வண்ணம் அவர்களை எதிர்த்தரப்பினர் ஆக்கிய தந்தை இன்று களத்தில் இல்லை. இருவருமே யாதவர் என்பதனால் நம்மை அவர்கள் ஆதரித்தே ஆகவேண்டும்.”
“அவர்களில் ரிஷபவனத்தின் சாத்யகி ஒருவேளை நம்மை வழி நடத்த ஒப்பமாட்டார் என்ற ஐயம் நமக்கிருந்தது. ஆகவேதான் இதுவரை தயங்கிக்கொண்டிருந்தோம். நம் படைவீரர்களுக்கும் அந்த ஐயம் இருக்கிறது. அதை களைவோம். நாம் படை ஒருமை கொள்ளத்தொடங்கியதுமே ஒவ்வொன்றும் மாறிவிடும்” என்றார் சுஃபானு. பிரஃபானு “மெய்யாகவே அவர் இருக்கிறார் என்பதை நாம் இப்போது உறுதிசெய்ய இயலாது” என்றார். “அதைத்தான் இவ்வளவு நேரம் மீள மீள சொல்லிக்கொண்டிருந்தோம், அறிவிலி” என்று சுஃபானு சொன்னார். “அமர்க! அவர் இருக்கிறார். அதில் ஐயமே இல்லை. குருக்ஷேத்ரப் படைக்களத்தை கடந்து வந்தவர் அவ்வண்ணம் இல்லாமல் ஆக இயலாது.”
பின்னர் தன்னை அமைதிப்படுத்தி குரல் தணிய “ஆம் இருக்கிறார், நமக்குத் தெரியும். ஒன்று, உளம் சோர்ந்து எங்கோ அமர்ந்திருக்கிறார். அல்லது போரில் உளம்தேறி இங்குள்ளவற்றைத் துறந்து அகன்று எங்கோ மெய்மைத்தவம் ஒன்றில் ஈடுபட்டிருக்கிறார். இரண்டாயினும் அவர் இங்கு வருவதற்கான களம் அமைக்கவேண்டும். தெய்வங்கள் வந்து இறங்குவதற்கு முதலில் பீடம் அமைக்கவேண்டும் என்று கணிகர் கூறியது அதனால்தான். முறையான இலக்கணப்படி அமைந்த பீடம் ஒருங்குகையில் தெய்வம் இறங்கி வந்தாகவேண்டும் என்பது வழிபாட்டுநெறிநூல்களின் கூற்று. தெய்வம் வந்திறங்கும், ஐயமே தேவையில்லை. இங்கு கிருதவர்மனுக்கான அனைத்தும் ஒருங்குக! அவருக்கான எதிர்பார்ப்பும் கூர்கொள்ளுகையில் அச்செய்தி அவரை சென்றடையும்” என்றார்.
“நம்மைப்பற்றி ஏதேனும் ஐயம் அவருக்கு இருக்கலாம். நாம் பிரிந்து பூசலிட்டுக்கொண்டிருக்கிறோம். நமது ஒருங்கிணைவு தந்தைக்கெதிரானது என்றோ, நம் பூசல் துவாரகையின் அழிவுக்கு வழி வகுக்கும் என்றோ இங்கு பேசப்படும் அனைத்தும் அவர் செவிகளுக்கு சென்றிருக்கலாம். நாம் ஒருங்கிணைந்து பேரரசின் அடித்தளத்தை அமைத்துவிட்டோம் என்று தெரிந்தால் அவர் வருவது எளிதாகிவிடும்” என்றார் பிரஃபானு. “ஆம், அதற்கு வாய்ப்புள்ளது. இங்கே நாம் எண்ணுவது எவ்வண்ணமோ அங்கே சென்று அவருக்குச் சேரும் என எண்ணுவோம்” என்றார் சுஃபானு. “நம் ஆற்றலும் நேர்மையும் அவரை வரவழைக்கலாம். நம் அச்சமும் சிறுமையும்கூட அவரை எரிச்சலூட்டி இங்கு வரவழைக்கலாம். நாம் அவருக்காக ஒருங்குவதே தேவையானது.”
மூத்தவர் ஃபானு முன்னால் அசைந்து “அதைவிட ஒன்று உண்டு, அவர் வருகிறார் என்று கூறி நாம் ஒருங்கிணைந்தால் நம் எதிரிகளும் தங்களை ஒருங்கிணைத்துக்கொண்டாக வேண்டும். அவர்களின் மெய்யான ஆற்றல் என்ன என்பது நமக்கு தெரியும். அவர்கள் ஒருங்கிணைகிறார்கள் என்பது நமது தரப்புக்கு மேலும் அச்சத்தை கொடுக்கும். நமது தரப்பினரிடம் இன்று இருக்கும் அனைத்துப் பூசல்களும் அழிந்து நாம் ஒற்றைப் பெரும்படையாக திரள்வதற்கு அது ஒரு வழிவகுக்கும். அறிக, வலுவான எதிரியே வலுவான ஒற்றுமையை உருவாக்குகிறான், நாம் நமது எதிரிகள் இருவரையுமே அச்சுறுத்தி ஒருங்கிணையச்செய்து நம்மை ஒருங்கிணைய வைப்போம்” என்றார்.
“வீட்டைக் கொளுத்தி பிள்ளைகளை சுறுசுறுப்பாக்குவோம் என்று ஒரு பழமொழி உண்டு” என்று முதிய குடித்தலைவரான ஊர்மிளர் சொன்னார். சீற்றத்துடன் அவரை திரும்பி நோக்கிய ஃபானு “சொல்வதற்கு தரப்பிருந்தால் கூறலாம். வெறும் நம்பிக்கையின்மைகளையோ உளச்சோர்வுகளையோ அவைமுன் வைக்கவேண்டியதில்லை” என்றார். “அவ்வண்ணமென்றால் நன்றே நிகழ்க!” என்று சொல்லி அவர் கையை வீசிவிட்டு தலையை அசைத்தார். ஃபானு “நான் கூறுவது இதுதான். இன்னும் இவ்வண்ணம் வாளாவிருந்தால் நாம் இங்கு ஆள்வது அரிது. இப்போது மூவரும் இணை ஆற்றல் கொண்டவர்கள்போல் ஒருவரை ஒருவர் கவ்விக்கொண்டிருக்கிறோம். ஒருவர் இன்னொருவரை அசைவிலாது செய்துகொண்டிருக்கிறோம்” என்றார்.
“இவ்வண்ணம் சென்றால் மூவருமே சோர்வுறுவோம், சலிப்புறுவோம். ஒவ்வொரு நாளும் நமது படைகளிலும் குடிகளிலும் சலிப்பும் ஆர்வமின்மையும் எழுவதை பார்த்திருப்பீர்கள். இவ்வண்ணம் செல்லுகையில் எவர் மிகையாக சலிப்புறுகிறார்கள் என்பதே ஒரு போர்முறையாக ஆகிவிடுகிறது. சற்றே சலிப்பு குறைந்தவர் மற்றவர்களை வென்று ஆட்சியை அமைக்கும் வாய்ப்பு அமைகிறது. சூதர்களிடையே தங்கள் கழிக்கோல்களை முன்னால் பரப்பி வைத்து அவற்றில் எவருடையதில் ஈ வந்தமர்கிறதோ அவர் வென்றவர் என்று ஒரு விளையாட்டு உண்டு, அதைப்போல! அரசு என்பது அத்தகைய செயலின்மைகளின் போட்டியல்ல” என்றார் சுஃபானு.
“அத்துடன் ஒன்றுண்டு, அது நேற்றிரவெல்லாம் நான் எண்ண எண்ண என்னுள் பெருகியது. கணிகர் அதற்கு தொடக்கம் அமைத்தார். அது கரையுடைந்து புதிய நதிவழி உருவாவதுபோல் முற்றிலும் புதிய வாய்ப்புகளை எனக்கு காட்டித் தந்தது. நாம் கிருதவர்மன் வருவது நமக்குத் தெரியும் என்று அறிவித்தோம் எனில், விளைவாக நமது படைகளும் குடிகளும் ஊக்கம் கொண்டு எழுவார்களெனில், அவர்களை அது அச்சுறுத்துமெனில், அவரை அவர்களும் தேடத்தொடங்குவார்கள். அவர்களின் ஒற்றர்களும் கிருதவர்மன் எங்கிருக்கிறார் என்பதைத் தேடி நாடெங்கும் அலைவார்கள். நமது ஒற்றர்களும் அலையட்டும். நமது ஒற்றர்கள் கிருதவர்மனையும் தேடட்டும், கிருதவர்மனைத் தேடும் அவர்களையும் தொடரட்டும். அவ்வண்ணம் நம் தேடல் மும்மடங்கு பெருகும். அவர் எங்கிருக்கிறார் என்பதை மிக விரைவிலேயே கண்டடைவோம்.”
அவையை ஒரு முறை நோக்கிவிட்டு சுஃபானு தொடர்ந்தார் “நாம் அவரை தேடுவதும் அச்செய்திகள் பரிமாறப்படுவதும் ஒவ்வொரு நாளும் அவர் இங்கு பேசப்படுவதும் மெல்ல மெல்ல அவரை பேருருவாக்கும். ஒரு கட்டத்தில் வந்து அருளப்போகும் பெருந்தெய்வம் என்றே கிருதவர்மன் கருதப்படுவார். இதுவரை எந்நிலையிலும் தந்தை இங்கு வந்துவிடுவாரென்ற ஐயமும் அச்சமும் நம் அனைவருக்கும் இருந்தது. அவர்களுக்கும் இருந்தது. ஆகவேதான் நாம் தயங்கிக்கொண்டிருந்தோம். எத்தனை படைகூட்டினாலும், எத்தனை சொல் சேர்த்துவைத்தாலும், இறுதியில் அவர் வந்து சொல்கையில் குடிகளும் படைகளும் அவர் சார்ந்தே எண்ணக்கூடும் என்றும் அதுவே முடிவாக அமையக்கூடும் என்றும் எண்ணினோம். இன்று அவ்வாறு அல்ல. தந்தை இங்கு எழுந்தருளப் போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது.”
“அவையோரே, இங்கு என்ன நடக்கிறது என்பதை தந்தை அறிந்துகொள்ளவே மாதங்கள் பிந்துகின்றன. ஆகவே வந்து தோன்றவிருக்கும் ஒரு தெய்வம் ஒன்றுக்காக காத்திருக்கிறது துவாரகை. இதுவரை எதிர்பார்த்திருந்த தெய்வமோ மூன்று தரப்பினருக்கும் இணையான முதன்மை அளித்தது. அதன் கோல் மூன்றில் எவருடையதைச் சுட்டவும் இணையான வாய்ப்பிருந்தது. இன்று அவ்வாறல்ல, இனி எழுந்தருளவிருக்கும் தெய்வம் யாதவர்களுக்கு மட்டுமே உரியது. யாதவர்களின் படைநடத்தி போர்முகம் செல்லக்கூடியது. கனிந்த தந்தை அல்ல, வஞ்சமும் காழ்ப்பும் கொண்ட இருள் தெய்வம் அது. அத்தெய்வத்தை பெரிதாக்குவோம். போற்றல்களினூடாக தெய்வங்கள் பெரிதாகின்றன. சடங்குகளினூடாக மேலும் பெரிதாகின்றன. அச்சத்தினூடாக ஆற்றல் கொள்கின்றன. நாம் கிருதவர்மனை இங்கு எழவிருக்கும் தெய்வமாக நிறுத்துவோம். தெய்வம் என்று அவர் எழுந்தாகவேண்டும்!”
நான் அவையை பார்த்தேன். அங்கு அனைத்தும் முடிவு செய்யப்பட்டுவிட்டது என்று தோன்றியது. அதில் எவருக்கும் ஐயமிருக்கிறதென்று தோன்றவில்லை. அல்லது அனைவருக்கும் சற்று ஐயமிருந்தது. ஆகவேதான் ஓங்கி அதை சொல்லிச் சொல்லி அந்த ஐயத்தை கரைத்துக்கொண்டிருந்தார்கள். “கிருதவர்மனின் தலைமையில் நாம் இங்கு நம்மை நிலைநிறுத்திக்கொள்ளப் போகிறோம். ஆனால் நாம் ஒரு படைநகர்வை நிகழ்த்த இயலாது. நாம் துவாரகைக்கு வெளியில் இருந்தால் துவாரகையை நோக்கி ஒரு படைகுவிப்பு செய்யலாம். நாமோ துவாரகையிலேயே இருக்கிறோம். துவாரகையின் பிற பகுதிகள் மேல் நாம் படைகொண்டு செல்ல இயலாது, தன் நாட்டுக்குள் ஒரு பகுதியை நோக்கி அரசன் தன் படைகளை செலுத்தினான் என்றால் தன் நாடெங்கும் அவன் ஆளுகை இல்லையென்பதை அவனே அறிவித்துக்கொண்டதாகும்” என்றார் சுஃபானு.
“ஆகவே கணிகர் இங்கு ஒரு எண்ணத்தை கூறினார். மூத்தவர் ஃபானுவின் மைந்தர் சந்திரஃபானுவை இங்கு துவாரகையின் பட்டத்து இளவரசாக அறிவிப்போம்” என்றார் சுஃபானு. “பட்டத்து இளவரசர் என்றால்?” என்று ஒருவர் கேட்க “ஆம், ஃபானு ஏற்கெனவே அரசர் என்ற நிலையில் துவாரகையின் பட்டத்து இளவரசராக நாம் அவர் மைந்தரை நியமிப்போம். அவ்விழாவிற்கு அனைவரையும் அழைப்போம். பிற நாட்டினர் ஷத்ரியர்கள் அழைக்கப்படட்டும். ஏன் ருக்மியையே அழைப்போம். இங்கு விழா நிகழட்டும். அதில் எவர் பங்கெடுக்கிறார்கள் எவர் ஒளிந்திருக்கிறார்கள் என்று பார்ப்போம். நம் எதிரிகள் என்ன செய்கிறார்கள் என்று கணிப்போம். அவர்களுக்கு ஓர் அழுத்தத்தை கொடுப்போம். அதற்கெதிராக அவர்கள் எதையாவது செய்தே ஆகவேண்டும். அச்செயலினூடாக அவர்கள் மீது ஐயத்தையும் கசப்பையும் மக்களிடையே வளர்க்க முடியும்.”
“இன்று கண்ணுக்குத் தெரியாத அரசியலாடலாக இருக்கும் உளப்பிரிவு அதன்பின் கண்ணுக்குத் தெரியும் படைநிலைகளாக மாறும். நோய் தோள் மேல் கொப்புளமாக வெடிப்பதுபோல” என்றார் சுஃபானு. “மருந்து என்ன என்று அதற்கு முன்னரே வகுக்கவேண்டும். நோயை படைக்கலமாகக் கொள்ள அது ஒரு நெறி” என்றார் பிரஃபானு. “அதை நோயின் இயல்புகளைக் கொண்டு முடிவுசெய்வோம். இதை முதலில் செய்வோம்” என்றார் சுஃபானு. “ஆம், இன்று மாலையே உரிய அரசாணைகளை பிறப்பிக்கிறேன்” என்று ஃபானு சொன்னார். அவையினர் வாழ்த்தொலி எழுப்பி அச்சொற்களை ஏற்றார்கள்.
அவர்கள் என்னை முற்றாக மறந்துவிட்டார்கள் என்று எனக்குத் தோன்றியது. ஆனால் கணிகர் விடப்போவதில்லை. மீண்டும் மீண்டும் என் பெயரை அங்கே கூறி என்னை முன்னகர்த்திவிடுவார். நான் முற்றொழிந்து, அங்கு இல்லாதவனாக இனிமேல் பொழுது கழிக்க இயலாது. இவ்வாடலில் நான் இறங்கியே ஆகவேண்டும். இத்தகைய ஆடல்களின் நெறிகளில் ஒன்று வெல்க அன்றி அழிக என்பது. வென்று நிலைகொள்க, வெல்பவரோடு நிலைகொள்க. நான் அப்போதும் முடிவெடுக்கவில்லை. ஃபானு அந்த அவையில் அப்போது ஆற்றல் மிக்கவராகத் தோன்றினார். ஆனால் அப்போதும் அவர் மேல் ஐயங்கள் எஞ்சியிருந்தன.
அங்கு அறிவிக்கப்பட்டதிலேயே ஒரு கூரிய இடர் இருந்தது. ஃபானு அந்தகக் குடியை சேர்ந்தவர் என்றே கருதப்பட்டார். யாதவர்களில் அன்னையின் முதல் மைந்தரே குடித்தலைவர், அன்னை அந்தகக் குடியினர். அவருடைய முதல் துணைவியும் அந்தகக் குடியை சேர்ந்தவர். அவர் விருஷ்ணி குலத்துப் பெண்ணை மணந்து பெற்ற மைந்தரை அவை நிற்கச் செய்திருந்தால் அது ஏற்புக்குரியதாக இருந்திருக்கும். ஆனால் அவர் மணந்ததும் அந்தகக் குடியின் தலைவர் சுகதரின் மகள் சபரியை. அவர் மைந்தர் சந்திரஃபானு முழுக்க முழுக்க அந்தகக் குடியினர் என்றே கருதப்படுவார். இளைய மூத்தவர் ஸ்வரஃபானு மணந்திருப்பது விருஷ்ணி குலத்திலிருந்து. அவர் அந்தகராக கருதப்படவில்லை. அவர் மகன் தூய விருஷ்ணி என கருதப்பட்டான். ஆகவே விருஷ்ணி குலத்தின் ஐயம் பெருகவே வாய்ப்பு. இந்த அறைகூவலுக்கு உள்ளே ஒருங்கிணையும் விசை எழும்போது அதற்கு நிகரான எதிர்விசையாக ஐயங்களும் விலகல்களும் எழும். அரசியல் ஆடல்கள் மேலும் விசை கொள்ளும்.
ஃபானு மகிழ்ச்சியுடன் கைவீசி “ஆகவே இன்று நாம் படைப்புறப்பாட்டை நமக்கு நாமே அறிவித்துக்கொள்கிறோம். இன்னும் சில நாட்களில் உலகுக்கு அது அறிவிக்கப்படும். அவ்வாறே ஆகுக!” என்றார். “வெற்றிவேல்! வீரவேல்!” என்று அவையினர் கூவினர். தலைமை நிமித்திகன் எழுந்து தலைவணங்கி அனைவரும் அன்னக்கூடத்திற்குச் செல்லலாம் என்று அறிவித்தான். ஆடைகளும் படைக்கலங்களும் அணிகளும் ஒலிக்க ஒவ்வொருவராக எழுந்து அன்னக்கூடத்திற்கு செல்லத்தொடங்கினர்.
அன்னநிலையில் அவையில் இருந்த படிநிலையே நீடிக்கவேண்டும் என்பது நெறியாயினும் மிக இயல்பாக அது நிலைமாறுவதையும் எப்போதும் கண்டிருக்கிறேன். அது பல தருணங்களில் அவைநிகழ்வுகளின் நீட்சியாக அன்றி அங்கு நிகழ்ந்தவற்றின் மாற்றாக அமைவதுண்டு. அவைநிலையில் அமர்ந்திருக்கையில் அங்கு சிலரை நோக்கி சில சொல்லப்படாமல் விட்டுவிடப்படுவதை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பார்கள். அரசரே அங்கு சிலரிடம் சிலவற்றை பின்னர் சொல்லவேண்டும் என்று குறித்திருப்பார். அமர்ந்த பின்னர் இயல்பாக நகையாட்டு என அவர்களை அழைத்து தன்னருகே அமரச்செய்வார். ஒவ்வொருவரும் அவ்வாறு முன்பிலாத ஒருவரை நோக்கி நகர கண்ணுக்கு முன் ஒரு சுழிப்பு நடக்கும். அவையின் வண்ணம் மாறுபடும்.
சற்று நேரத்திற்குப் பின் பார்த்தால் ஒவ்வொருவரும் அவர்கள் எவருடன் பேசுவார்கள் என்று முன்பு கணித்திருக்காத ஒருவரிடம் பேசிக்கொண்டிருப்பார்கள். அது உண்டாட்டுக்கே உரிய நகையாடலும் எளிய உடலசைவுகளும் கொண்டதாக இருப்பினும் விழிகளை நோக்கினால் அது மேலும் கூரியதென்று தெரியும். அவையில் யாரிடம் எது சொன்னாலும் பிறர் அதை நோக்குகிறார்கள் என்ற தன்னுணர்வு இருக்கும். ஆகவே அது சொல்லெண்ணிச் சுருக்கப்பட்டதாகவோ வேண்டுமென்றே மிகையாக்கப்பட்டதாகவோதான் வெளிப்படும். உண்டாட்டில் ஒவ்வொருவரும் பேசும் பேரோசையே ஒவ்வொருவருக்கும் திரை என்றாகிறது. உண்டாட்டின் கூச்சலுக்கு நடுவே ஒருவர் இன்னொருவரிடம் மிகத் தனியாக பேசமுடியும். மிக நுண்ணிய சூழ்ச்சிகளைக்கூட அங்கு வகுத்துவிடமுடியும்.
நான் தயங்கிய காலடிகளுடன் உண்டாட்டு அறைக்கு சென்றேன். இப்படி ஒரு வாரத்தில் நிகழும் மூன்றாவது உண்டாட்டு இது. உண்டு குடித்து களித்துக்கொண்டிருப்பதாகவே பிறர் எண்ணுவார்கள். அல்லது மெய்யாகவே அதைத்தான் செய்கிறோமா? நான் அமர்வதற்காக இளையோன் ஸ்ரீஃபானுவின் அருகிருந்த பீடத்தை நோக்கி சென்றேன். அவன் என்னிடம் “ஒருவழியாக போர் தொடங்கிவிட்டது” என்றான். “இன்னும் இல்லை” என்று நான் சொன்னேன். “தந்தை வரவில்லை என்று சாத்யகி திரும்பிவந்து கூறியபோதே போர் தொடங்கிய செய்தியை நான் உணர்ந்துவிட்டேன். எப்போதென்ற வினாவே எஞ்சியிருந்தது” என்றான் ஸ்ரீஃபானு. “இந்தப் போர்ச்சூழ்ச்சிகளையும் உண்டாட்டையும் கேட்டுக்கேட்டு சலித்துவிட்டேன்.” நான் சிரித்துக்கொண்டு “ஆம்” என்று சொன்னேன்.
எனக்கு வலப்பக்கம் இருந்த இருக்கையில் இருந்த குடித்தலைவர் எழுந்து அப்பால் செல்ல அங்கே ஒரு புலித்தோல் கொண்டுவந்து விரிக்கப்பட்டது. என் அகத்தே மெல்லிய திடுக்கிடலை உணர்ந்தேன். ஒரு மரத்தாலத்தில் கணிகரை இரு ஏவலர் கொண்டுவந்து அங்கே அமரச்செய்தனர். என் அருகே இருந்த ஸ்ரீஃபானு “கணிகர் இவ்வண்ணம் ஊண்மேடையில் அமர்ந்து உண்பார் என்பதே விந்தையானது. ஊண் மேடைக்குமேல் பார்த்தால் அவர் இருப்பதே தெரியாது. நீங்கள் அவரிடம் ஏதாவது பேசிக்கொண்டிருந்தால் வெற்றிடத்திடம் உரையாடுவதாக பிறருக்குத் தோன்றலாம்” என்றான். நான் புன்னகைத்தேன். இவன் உடனிருக்கையில் கணிகர் என்னிடம் எவ்வகையிலும் ஆழ்ந்து உரையாட முடியாது என்று உணர்ந்தேன். அது எனக்கு ஆறுதலையே அளித்தது.
நான் அன்று கணிகரிடம் பேசுவதை உண்மையில் விரும்பியிருந்தேன். அங்கு பேசுவதற்காக சில சொற்களை உளம் கருதியும் இருந்தேன். சாம்பனின் துணைவியிடமும் காளிந்தியன்னையின் மைந்தரிடமும் அடைந்த வெற்றியை நான் சரியாகச் சொல்லி உணர்த்தக்கூடிய இடம் அவரே. ஆனால் அப்போது அதற்கான தருணம் வந்தபோது நான் ஐயுற்றேன், அச்சம் கொண்டேன். அனைத்திலிருந்தும் விலகிவிடவேண்டும் என்றும் விந்தையானதோர் இருள் எனக்காக தொலைவில் காத்திருப்பது போலும் தோன்றியது. ஸ்ஃபானுவுக்கு மறுபக்கம் படைத்தலைவராகிய சுபூர்ணர் வந்தமர்ந்தார்.
நான் அகத்தே சற்று திடுக்கிட்டேன். அங்கு அமரச்செய்வதற்கு அவரைப்போல உகந்தவர் பிறிதில்லை. ஏனெனில் படை எழுச்சியை ஒவ்வொரு நாளும் அவையில் சொல்லிக்கொண்டிருந்தவர் அவர். படைக்கலன்கள் துருப்பிடிக்கின்றன என்பதே அவருடைய மாறாச் சொல்லாக இருந்தது. இளையோனை தன் சொற்களால் முழுதாக இழுத்துக்கொள்வார். இயல்பாக அது நடக்கவில்லை, அவரை அங்கு அமரச்செய்வதற்காக கணிகர் எதையோ செய்திருக்கக்கூடும் என்று எண்ணினேன். எனில் அவர் என்னிடம் மிகக் கூர்மையாக, மிகத் தனிமையாக எதையோ சொல்ல விரும்புகிறார் என்று பொருள்.
கணிகருக்கு நான் தலைவணங்கி முகமன் உரைத்தேன். “நல்லுணவு! நன்று!” என்று அவர் சொன்னார். “நான் ஊனுணவு அருந்துவதில்லை. ஆனால் ஊனுணவின் மணமும் அதை உண்ணும் ஷத்ரியர்களின் சுவைமெய்ப்பாடுகளும் எனக்கு பிடிக்கும்” என்றார். “ஷத்ரியர்களுடன் அமர்ந்து உணவுண்பது அந்தணருக்கு உகந்ததல்ல அல்லவா?” என்று நான் சொன்னேன். “ஆம், ஆனால் அரசுசூழ் அந்தணர்கள் அதை செய்யலாம். நான் வேள்வியில் அமர்வதில்லை, இறைபூசனை செய்வதுடன் நின்றுவிடுவேன்” என்றார். நான் புன்னகைத்தேன்.
அவர் சூழ நோக்கி “இங்கு எங்கும் ஊனுணவு நிறைந்திருக்கிறது. அன்னம் நன்று, அது அன்னத்தை வளர்ப்பது. அத்தனை விலங்குகளும் ஏதேனும் ஒரு அனலுக்கு அவியாகின்றன. விலங்குகளின் வயிற்றில் எரியும் அனல். வைஸ்வாநரன்! அன்ன வடிவானவன், அன்னத்தை உண்பவன்!” என்றார். அவர் எங்கு பேசிச்செல்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. அவர் தன் சொற்களை வந்தடைவதற்காக காத்திருந்தேன். ஆனால் அவர் தனக்கு உணவு கொண்டுவரும்படி கைகாட்டினார். தனது உணவை தானே தெரிவுசெய்தார். எளிய அப்பங்கள் இரண்டு. ஒரு கோப்பை பால். பழத்துண்டுகள். அவற்றை அவர் மிகமிக கூர்ந்து நோக்கி தெரிவுசெய்தார். நான் அவரை நோக்கிக்கொண்டிருந்தேன்.