அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் இந்தியா வந்திருந்த போது சென்னையில் நாஞ்சில் நாடன் விழாவில் கோவை நண்பர் ரவீந்திரன் மூலம் தங்களைச் சந்தித்த இனிய நினைவுகளோடு இக்கடிதத்தைஎழுதுகிறேன்.
தங்களுடைய சமீபத்திய கதைகளில் ‘யானை டாக்டர்’ என் மனதை மிகவும் கவர்ந்துவிட்டது! மனித நாகரிகம் என்ற பெயரில் சிலரது போக்குகள் ஒருபுறம், கறைபடாதஉள்ளத்தோடு வாழும் விலங்குகள் வாழ்க்கை மற்றொருபுறம் இரண்டையும் பின்னிப்பிணைத்திருக்கும் கதைப் பாங்கு மிக மிகச் சிறப்பானது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய கருத்தாழமிக்க கதை இது என்று அன்பர் பகவதிப் பெருமாள் எழுதியதை நான் மனமார வழிமொழிகிறேன்.
சமூக அநீதிகளின் அடித்தளம் என்று தாங்கள் சுட்டிக் காட்டும் சமுதாயக் கூட்டு மனநிலையில் இந்தக் கருத்து விதைகள் விழுந்தால், அதனால் ஏற்படும் சின்னச் சின்ன மாற்றங்கள் கூட அந்த வாயில்லாப் பிராணிகளின் வாழ்வில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் உங்கள் எழுத்து மூலம் நீங்கள்voice of the voiceless ஆகச் செயல்படுகிறீர்கள் என்பது உண்மை. பணி தொடரட்டும்.
யானை டாக்டர் விழைகின்ற அந்த மாற்றங்கள் சமுதாய அரசியல் தளத்தில் எந்த அளவுக்குப் பதிவாகி இருக்கின்றன என்று இணையத்தில் தேடிப் பார்த்தேன். இதழில் பேராசிரியர் அய்யாசாமி எழுதிய கட்டுரை என் இதயத்தைத் தொட்டது. கோவில் யானைகள் பற்றிய உங்கள் கருத்தும், பேராசிரியர் கருத்தும் ஒத்துப் போவதால் அவருக்கு உங்கள் கதையை அனுப்பி இருக்கிறேன். அவருடைய கட்டுரையையும் இத்துடன் இணைத்திருக்கிறேன்.
மனிதனுக்கு மனிதன் செய்யும் கொடுமையும், விலங்குகளுக்கு மனிதன் செய்யும் கொடுமையும் அடிப்படையில் வெவ்வேறானவை அல்ல; நெருங்கிப் பின்னிப் பிணைந்தவையே. ‘யானை டாக்டர் கதை’ இந்த உண்மையின் அற்புதமான இலக்கியவடிவம்!
அன்புள்ள
ராம்
அன்புள்ள ராம்
நாம் மிருகங்களின் குரலாக ஒலிக்க முடியுமா? செவிகூர்ந்து அவற்றின் குரலைக் கேட்கும் மனநிலை வந்தால் போதும்
ஜெ
உங்களின் உச்சமான சிறுகதைகளில் முக்கியமான ஒன்று.
பவானியாற்றின் குறுக்கே கட்டப் பட்ட பாலங்களுக்கும், அணைகளுக்கும் கதை சொல்லிக் கொண்டிருக்கும் பெரிசுகளைப் பார்த்திருக்கிறேன்.
இயற்கையின் படைப்புகளில்,மனிதனொரு வலிமையான மிருகம். மற்றெல்லாமும், இயற்கையின் விதிகளோடு போட்டியிட்டுத் தோற்றுப் போக, மனிதன் மட்டும், திட்டமிட்டு, சமன் குலைத்து, இயற்கையைத் தோற்கடிப்பானோ? ப்ரமையோ?
பாலா
அன்புள்ள பாலா
மனிதனின் வெற்றியை தற்காலிகமான என்ற சொல்லை சேர்த்து பயன்படுத்தலாம்
ஜெ