அரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்

 

அன்புள்ள ஜெமோ,

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020 அளித்த சில மகிழ்ச்சியான எண்ணங்களைத் தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.

கடந்த ஆண்டின் எண்ணிக்கையான 66-ஐத் தொட வாய்ப்பில்லை என்கிற எங்களது அனுமானத்தைப் பொய்த்து, இம்முறை வந்த மொத்த கதைகள் – 98! இலக்கியச் செயல்பாட்டில் எண்ணிக்கை என்றுமே முக்கியமில்லைதான். ஆனால், நீங்கள் கடந்த முறை சொன்னது போல ‘அறிவியல் புனைவு’ என்கிற குறுகிய சட்டகத்துக்குள் இத்தனை பேர் ஆர்வமுடன் எழுதுவது வியப்பளிக்கிறது. பலரிடம் சொல்ல நல்ல கதைகள் இருக்கின்றன என்பது ஆறுதல். இளம் தலைமுறையினர் அறிவியல் புனைவு வழியாக முதல் முறையாக எழுத முற்படுகிறார்களோ என்கிற எண்ணம் எழுந்தது. அப்படி இருந்தால் மகிழ்ச்சி!

இந்த வருடம் போட்டிக்கு நடுவராக இருந்து கதைகளைத் தேர்வு செய்திருப்பவர் எழுத்தாளர் சாரு நிவேதிதா. நாங்கள் தேர்ந்தெடுத்த 15 கதைகளை அவருக்கு அனுப்பியிருந்தோம். அவற்றைக் குறித்தும் அறிவியல் புனைவுகள் குறித்தும் தனது பார்வையைக் கட்டுரையாக எழுதியிருக்கிறார். போட்டிக்கு வந்திருந்த கதைகளைக் குறித்த எங்களது பொதுவான கருத்துகளையும் பகிர்ந்திருக்கிறோம். இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 அறிவியல் சிறுகதைகளும் வெளியாகியுள்ளன.

http://aroo.space/

’அரூ அறிவியல் சிறுகதைகள் 2020’ குறித்த உங்கள் கருத்துகளை அறிய ஆவலாக உள்ளோம்.

அரூவின் முதல் இதழிலிருந்து தாங்கள் அளிக்கும் ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் எங்களது மனமார்ந்த நன்றி.

இதழைக் குறித்த உங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். மேம்படுத்திக்கொள்ள உதவும். தொடர்ந்து கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம்.

அன்புடன்,
பாலா, சுஜா, ராம்

அன்புள்ள அரூ நண்பர்களுக்கு

 

சாரு நிவேதிதாவிடம் எனக்கு பிடித்தமான ஓர் அம்சம், நான் அவருடன் அணுக்கமாக உணரும் ஓர் இடம், இலக்கியத்தை அவர் மிகத்தீவிரமாகவே எப்போதும் எடுத்துக்கொள்கிறார் என்பது. அதில் மழுப்பல்கள் ஒப்பேற்றல்கள் இல்லை. எப்போதும் அதற்கு முழுமையாகவே தன்னை அளித்துவிடுகிறார். இக்கதைகளை தேர்வு செய்வதற்கு இயல்பாக ஒரு வாசிப்பும் சுருக்கமான பட்டியலும்போதும். ஆனால் அத்தனை கதைகளையும் வாசித்து, தன் அளவுகோலை விளக்கி, கதைகளை விவாதித்து முடிவை முன்வைக்கிறார். எப்போதும் இலக்கியத்தில் செல்லுபடியாகக்கூடிய நாணயம் என்பது இதுவே – முழுதளிப்பு. அவருடைய கட்டுரை முக்கியமான ஒன்று

 

கதைகளை எழுதிய அனைவருக்கும் நன்றி

 

ஜெ

 

முந்தைய கட்டுரைஓலைச்சுவடி இதழ் -பேட்டி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–27