இடம், அங்கி -கடிதங்கள்

இடம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

 

இடம் அற்புதமான கதை. இத்தகைய கதைகளை எழுதுவதற்கு விலங்குகளின் நடத்தைகளை கூர்ந்து கவனிப்பது மட்டுமல்ல அவற்றை மனிதர்களுடன் ஏதோ ஒருவகையில் இணைத்துச் சொல்லவேண்டியிருக்கிறது. இன்றைக்கு இணையத்தில் கொரில்லாக்கள் சிம்பன்ஸிக்கள் உராங்குட்டான்கள் செய்யும் சேஷ்டைகளின் வீடியோக்கள் இறைந்து கிடக்கின்றன. அதோடு ஒப்பிடுகையில் இந்தக்கதையில் பெரிதாக எந்த நிகழ்ச்சியும் இல்லை. ஆனால் குரங்குக்கு ஒரு குணாதிசயம் உருவாகி வந்துவிட்டது. அது திருப்பி அடிக்கிறது, திருடித்தின்கிறது, ஆனால் தன்னை மனிதர்களுக்கு சமானமாக நினைத்துக்கொள்கிறது. ஆகவேதான் இது நாயரா என்று கரடி கேட்கிறார்

 

இதில் கருப்பனின் நடத்தைதான் சுவாரசியம். இது எங்களுக்கும் நடந்தது. பழனி அடிவாரத்தில் தோட்டத்தில் ஒரு பாம்பு வந்துவிட்டது. நாய் அதைப்போய் பிடிக்கும் என்று நினைத்தோம். பார்த்தால் நாய் பயந்து ஓடி வீட்டுக்கே போய்விட்டது. கருப்பன் குரங்கை தன்னைவிட மேலானது என்று ஏற்றுக்கொண்டுவிட்டது. அதன் முகத்தை நக்கி பணிவிடை செய்ய தயாராக இருக்கிறது குரங்கு கருப்பனை அப்படித்தான் கீழாக நடத்துகிறது. குரங்கு கருப்பன் என எல்லாருக்குமே உருவாகி வந்திருக்கும் அந்த குணச்சித்திரம்தான் கதையின் அழகான அம்சம்

 

சந்திரகுமார் வி

 

இடம் சிறுகதை விமர்சனம்:

 

https://valaipesy.blogspot.com/2020/04/blog-post.html

 

 

அன்பும் நேசமும்,

பிரகாஷ்.

 

அங்கி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

அங்கி கதையில் உள்ள கருணையை நினைக்க நினைக்க உள்ளம் நெகிழ்ந்தபடியே செல்கிறது. மிக ஈஸியாக செல்கிறது கதை. அந்த பாதிரியார் வந்ததுமே அவர் யார் என தெரிந்துவிடுகிறது. அதில் சர்ப்ரைஸ் ஏதுமில்லை [இந்த வரிசை கதைகள் எதிலுமே சர்ப்ரைஸ் இல்லை. எல்லாமே சாதாரணமான நம்பகமான திருப்பங்கள்தான்] ஆனால் அவர் பாவமன்னிப்பை வழங்குமிடத்தில் ஒரு humanist height உள்ளது. அதுதான் கதை. திருப்பம் வழியாக அது பலவீனமாகிவிடக்கூடாதே என நினைக்கிறீர்கள் என்று தோன்றியது. அந்த இடம் மனதை நிஜமாகவே ஒரு elevated நிலைக்கு கொண்டுசென்றுவிட்டது

 

ராஜேஷ்

வணக்கம் ஜெ

 

அங்கி சிறுகதையை வாசித்தேன்.

 

அந்த ஆளொழிந்த தேவாலயத்தில் இருந்தவர் தூக்கிட்ட பாதிரியார் மட்டுமல்ல…ஏசு, காந்தி என வரும் பெரிய நிரையில் ஒராள். அதைப் போலவே உலகின் ஒவ்வொருவரும் அங்கே சென்று பாவமன்னிப்பு வாங்க  வேண்டியவர்களே எனக் கதையை வாசித்தப் போது எண்ணம் எழுந்தது.

 

அரவின் குமார்

முந்தைய கட்டுரைஅனலுக்குமேல், லூப் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவானில் அலைகின்றன குரல்கள், தங்கத்தின்மணம் -கடிதங்கள்