இடம், ஆயிரம் ஊற்றுக்கள் -கடிதங்கள்

 

ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

 

ஆயிரம் ஊற்றுக்கள் கதை அந்த தலைப்பிலேயே ஒரு பெரிய நெகிழவைக் கொண்டிருக்கிறது. ஆயிரம் ஊற்றுக்களும் எங்கிருந்து எழுகின்றன? அந்த அன்னையின் மனசிலிருந்தா? அல்லது அவளால் பேணப்படும் அந்த மண்ணில் இருந்தா?

 

இயற்கையில் இந்த வன்முறை இருந்துகொண்டுதானே இருக்கிறது? ஒரு காட்டாளத்தியாக இருந்திருக்கலாம் என்று உமையம்மை ராணி சொல்லும்போது ஆண்டாள் காட்டில் மானை பிடித்து தின்னும் புலி உண்டு ராணி என்று பதில் சொல்கிறாள்

 

அந்தசூழல் திவான் உள்ளிட்ட மனிதர்கள் அந்தக்கால பாஷை எல்லாமே அற்புதமாக வந்திருந்தது அந்தக்கதையில். இந்த வரிசைக்கதைகளிலேயே அது ஒரு மாறுபட்ட படைப்பு

 

சங்கர்

 

 

வணக்கம் ஜெ

 

ஆயிரம் ஊற்றுக்கள் சிறுகதையை வாசித்தேன்.

மைந்தர் மேல் அன்னையரின் உள்ளத்தில் தாங்கள் எண்ணி கொள்ளும் பாவனைகளுக்கிடையில் ஊற்று என மைந்தர் மேல் அன்பு பொலிந்து கொண்டே இருக்கிறது.

 

பாவனைகளால் அமைத்துக் கொள்ளப்படும் செயற்கை உலகைக் காண்கின்றேன். அதனடியில் வற்றாதச் சுனையாக உளவுணர்ச்சிகள் இருந்து கொண்டே இருக்கின்றன. அப்படியான பாவனைகளைப் புனைந்து கொண்டிருக்கும் உமையம்மையை அணுகி தன்னை இழக்கிறாள் ஆண்டாள். அப்படியான பாவனைகள் இடையில் எழும் மெய்யுணர்ச்சியைக் கண்டு எண்ணி கொள்ளும் பாவனையாகவே இறுதியில் வற்றிய குளத்தின் பிரவாகத்தைக் காண்கிறேன்.

 

அரவின் குமார்

இடம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

 

இடம் மிக கொண்டாட்டமான ஒரு படைப்பு. வரிக்குவரியாக நகைச்சுவை. அதிலும் கேரக்டர் நகைச்சுவை. நமக்குத்தான் சிரிப்பு. அவர்கள் இயல்பாகவே இருக்கிறார்கள். குறிப்பாக குரங்கைப்பிடிக்க கதளிவாழைப்பழம் கேட்கிறான். அது கதலிதான் சாப்பிடுமா, காட்டில் கதலியா உள்ளது என்று கேட்டபோது உடனே இல்லாமல்தானே இங்கே வந்திருக்கிறது என்று பதில். கொண்டுசெல்லும்போது ஊரே அதில் வாழைப்பழம் பிடுங்கி சாப்பிடுகிறது. அதில் எந்த திரிபும் கோணலும் இல்லை. ஆனால் யதார்த்தமான அந்த செயல்பாடு சிரிப்பை அளிக்கிறது.

 

ஒவ்வொருவருக்கும் அங்கே ஒரு அஜெண்டா உள்ளது. குரங்குபிடிக்க ஐந்து ரூபாயா என்று குமுறுகிறார் அப்பு. குரங்கைப் பிடித்தால் இவ்வளவு என்று குறவன் பேரம்பேசுகிறான். தவளைக்கண்ணன் மூழ்கும்போது மேலே கொப்புளமாக எழுவது அவனுடைய ஆத்மாதான் என்று ஒருவர் ஞானம் பகிர்ந்துகொள்கிறர். இந்த ஒரு கதைப்பரப்புக்குள் மதநம்பிக்கைகள் வேடிக்கையாக மோதிக்கொண்டே இருக்கின்றன. கரடிநாயரின் சாதியை லாரன்ஸ் சீண்டிக்கொண்டே இருக்கிறான்

 

அதைவிடமுக்கியமானது அவர்கள் பரம ரகசியமாக சாராயம் குடிக்கச் செல்கிறார்கள். பரமரகசியம் என்று ஊருக்கே தெரிந்திருக்கிறது. மொத்த ஊரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறது. பரமரகசியங்களைக்கூட ஊர் அறியத்தான் செய்யமுடியும்!

 

ராஜேந்திரன் எம்

ஜெ.

 

வணக்கம் நலம்தானே?

 

அண்மைக்காலத்தில் படித்த அருமையான எள்ளல் கதை இடம். புதுச்சேரியில் காலை நடை முடிந்து பேசிக்கொண்டிருந்தபோது இது போன்ற ஒரு நிகழ்வு பற்றிக்கோடி காட்டினீர்கள். சாலையில் எல்லாரும் குடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த குரங்குக்கும் சற்று ஊற்றிக் கொடுக்க அது மீண்டும் அதையே சுட்டிக்காட்டியதை மிக நகைச்சுவையாக சைகைகளுடன் காட்டியது இன்று நினைவுக்கு வருகிறது.

 

காட்டில் வாழ்ந்த ஓர் உயிரினம் நாட்டுக்கு வந்தால் மனிதன் அதை எப்படிக் கெடுத்துவிடுகிறான் என்பது புரிந்தது. உண்மையில் விலங்கு மனிதனை விட உயர்ந்தது.பிறரை அச்சுறுத்தும்.கெடுக்காது. நாளடைவில் மனிதனின் குணங்களைப் பெற்ற அது அங்கேயே நிரந்தர இடம் பிடித்துவிடுகிறது. அதை விரட்ட நினைத்த அவன் அதற்கும் ஓர் இடம் அளித்து ஏற்றுக் கொள்கிறான். அதையும் தன்னைப்போல் மாற்றி விட்டானன்றோ?

 

இரண்டு இடங்களில் வாசிப்பதை நிறுத்தி விட்டி ஒரு நிமிடம் சிரித்து முடித்துப் பிந்தான் படிக்க முடிந்தது. நாணுவட்டர் “ஜாக்கெட்டும் உள்பாடியும் எடுத்திட்டுப் போச்சு” என்றவுடன் “அம்மணி இப்ப போடற்தில்லையா? பாத்தா சொல்ல முடியல.”என்று சொல்லும் இடம். ” சர்க்கார்னா இன்னும் பெரிய கொரங்காக்கும், பேனும் பார்க்கும், காதையும் கடிக்கும ” என்ற இடம்.

 

அவ்வப்போது வரும் மதம் பற்றிய கிண்டல்கள் கதையைப் படிக்கக் களைப்பில்லாமல் கொண்டு செல்கின்றன.

 

வளவ துரையன்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–29
அடுத்த கட்டுரைவானில் அலைகின்றன குரல்கள், வேரில் திகழ்வது -கடிதங்கள்