‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–26

பகுதி நான்கு : அலைமீள்கை – 9

தந்தையே, நான் காளிந்தியன்னையின் அரண்மனையைச் சென்றடைந்தபோது அங்கே அவர் மைந்தர்கள் நால்வர் முன்னரே வந்து எனக்காகக் காத்துநின்றிருந்தனர். அவர்கள் பெரும்பாலும் துவாரகைக்கு வெளியே அவர்களின் அன்னையின் ஊரில் வளர்ந்தவர்கள். இளமையில் விழவுகள், அரசச்சடங்குகளில் மட்டுமே அவர்களை நான் பெரும்பாலும் கண்டிருக்கிறேன். அவர்கள் சற்று வளர்ந்த பின்னரே துவாரகைக்கு வந்தனர். அதன் பின்னரே அவர் மைந்தர்களில் பத்ரனும் பூர்ணநமாம்ஷுவும் சோமகனும் எனக்கு நெருக்கமானார்கள். அவர்கள் நீர்விளையாட்டை விழைபவர்கள். ஆனால் கடல் அவர்களுக்கு பழக்கமில்லை. நான் அவர்களுக்கு கடலாடக் கற்றுக்கொடுத்தேன்.

ஆனால் அவர்களால் இறுதிவரை கடலை புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவர்கள் இளமை முதலே யமுனையில் நீராடி வளர்ந்தவர்கள். ஒரு திசை நோக்கி ஒழுகும் நீர் அவர்களின் தோள்களின் நினைவாக இருந்தது. எல்லாத் திசைக்கும் செல்வதும், எங்கும் செல்லாததுமான கடல் அவர்களுக்கு பழகவே இல்லை. “இது தனக்கென உள்ளம் கொண்டிருக்கிறது. இது நம்முடன் விளையாடுகிறது” என்று சோமகன் ஒருமுறை சொன்னான். “நான் என்ன நினைத்தாலும் அதை அது முன்னரே அறிந்து என்னை தோற்கடிக்கிறது. இதில் நீந்திக்கொண்டிருக்கையில் இதை மீறி எண்ணம்சூழ்வதும் இயல்வது அல்ல.” நான் அவனுடைய எண்ணங்களை புரிந்துகொள்ளாமல் “முயல்க, வெல்லமுடியும்!” என்று சொன்னேன்.

ஆனால் அவர்கள் மிக விரைவிலேயே நம்பிக்கை இழந்தனர். “கடல் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. எங்களால் கடலை புரிந்துகொள்ளவும் முடியாது” என்று பத்ரன் சொன்னான். “நம்மை முற்றிலும் ஏற்றுக்கொள்ளாத ஒன்றை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது.” நான் அவனுடைய உளநிலையை அப்போதும் சென்றடையவில்லை. “நீங்கள் அஞ்சுகிறீர்கள். தொடக்கத்திலேயே நீங்கள் அயலார் என எண்ணிக்கொள்கிறீர்கள். அந்த விலகல் உங்கள் ஒவ்வொரு அசைவிலும் உள்ளது. அதுவே உங்களை தோற்கடிக்கிறது” என்றேன். அவர்கள் அதை செவிகொள்ளவே இல்லை.

ஆனாலும் அவர்கள் கடலாட வந்துகொண்டிருந்தனர். ஏனென்றால் துவாரகையில் நெடுநீர் என இருந்தது கடல் மட்டுமே. அதை அவர்களால் தவிர்க்கமுடியாது. அவர்களுக்காக நான் கடல்தெப்பங்களை உருவாக்கினேன். அதை அவர்கள் பற்றிக்கொண்டனர். பின்னர் தெப்பங்களில்லாது கடலாட முடியாதவர்களாக ஆனார்கள். அவர்கள் தெப்பங்களுடன் கடலில் நீந்துவதை பலர் இளிவரல் செய்தனர். அது அவர்களை சீற்றமுறச் செய்தது. ஆனாலும் அவர்கள் தெப்பங்களுடனேயே நீந்த வந்தனர். நீந்தும்போது அவர்கள் தெப்பங்களை பற்றிக்கொண்டிருக்கும் வெறியைக் கண்டால் அன்னையை தழுவியிருக்கும் மகவுகள் எனத் தோன்றும்.

பின்னர் ஒரு சூதன் அவர்களுக்கான கதையை உருவாக்கி அளித்தான். அவர்களின் குடித்தெய்வமான யமுனைஅன்னை கடல்நீராடுவதை விரும்பவில்லை. அவர்களுக்கு தெப்பம் என வந்திருப்பது அவளுடைய ஊர்தியான ஆமையே. தெப்பத்தை அவர்கள் ஆமை என்றே சொல்லத் தொடங்கினர். ஆமை வடிவில் அதை அமைத்துக்கொண்டனர். “கூர்மர்” என்று தங்களை சொல்லிக்கொள்ளவும் தொடங்கினர். கடலுக்குள் இருந்து மாபெரும் ஆமைகள் தங்களை பாதுகாப்பதாக அவர்கள் நம்பினர். மெல்லமெல்ல கடல்மேல் அச்சத்தைக் களைந்து கடலுக்குரியவர்களாக எண்ணிக்கொள்ளத் தலைப்பட்டனர்.

அந்நிலையில் ஒருமுறை கடலாமை ஒன்று அவர்களுக்கு கிடைத்தது. அது பீதர்களின் தூண்டிலில் மாட்டி அவர்களால் கப்பலுக்கு எடுக்கப்பட்டது. மிகப் பெரியது, ஒரு மனிதர் அதன்மேல் ஏறி பயணம் செய்யமுடியும். காளிந்தியன்னையின் மைந்தர்களில் மூத்தவரான சுருதன் அதை விலைகொடுத்து வாங்கினார். அதை தன் அரண்மனையருகே ஒரு சிறுகுளத்தை உருவாக்கி அங்கே கொண்டுசென்று வைத்துக்கொண்டார். ஒவ்வொரு நாளும் அவர்கள் அந்த ஆமையை வழிபட்டனர். அதற்கு பூசையும் படையலும் செய்தனர்.

அதை வாரம் ஒருமுறை கடலுக்கு கொண்டுசென்றனர். முதலில் அது சென்றுவிடும் என அஞ்சி காலுக்கு தளையிட்டிருந்தனர். ஆனால் அது திரும்பிவந்தது. ஆகவே அதை கடலில் விட்டு கூட்டிவர வண்டி ஒன்றையும் அவர்கள் அமைத்துக்கொண்டனர். இளவரசர்கள் அதைச் சூழ்ந்து கூச்சலிட்டபடி, வாழ்த்துக்கள் சூழ கடலாட வருவார்கள். இளவரசர்கள் சாந்தனும் தர்ஷனும் அதன் மேல் ஏறி நீந்தி விளையாடுவதைக் கண்டு ஒருமுறை நான் அதைப் பிடித்து மேலேற முயன்றேன். அவர்கள் அதில் தங்கள் குடியல்லாது எவரும் ஏறக்கூடாது என்று கூறிவிட்டனர்.

இப்புவியைத் தாங்கும் ஆமையின் வழிவந்தவர்கள் அவர்கள் என்று தங்களை சொல்லிக்கொண்டார்கள். அதன்படி அந்த ஆமைக்கு அவர்கள் ‘பூதலன்’ என்று பெயரிட்டனர். விண்ணளந்தோன் எடுத்த தொல்வடிவங்களாகிய மீனும் ஆமையும் தங்கள் குடிக்குரிய அடையாளங்கள் என்று கருதினர். அவர்கள் அவையிலிருந்த பாவலன் ஒருவன் பாடிய கூர்மவிலாசம் என்னும் காவியம் சூதர்கள் நடுவே புகழ்பெற்றது. அவர்களின் அத்தனை நிகழ்வுகளிலும் அந்தக் காவியத்தின் ஓரிரு பாடல்களையேனும் எவரேனும் பாடுவதுண்டு.

காளிந்தியன்னையின் அரண்மனையின் முகப்பில் ஆமை அடையாளம் பொறிக்கப்பட்டிருந்தது. ஆமை அடையாளம் கொண்ட கச்சைகளுடன் அவர்கள் அங்கே நின்றனர். சாந்தனும் தர்ஷனும் பூர்ணநமாம்ஷுவும் சோமகனும் என்னை வரவேற்றபோது ஒரே முகம் கொண்டிருந்தனர். நான் அவர்களை அணுகி முகமன் உரைத்தபோது அவர்கள் மிக மிக வறண்ட சொற்களால் எதிர்முகமன் சொன்னார்கள். “வருக!” என அழைத்துச்சென்றனர். “நான் காளிந்தியன்னையை சந்திக்க வந்துள்ளேன். அவர்களின் ஒப்புதல் பெற்றுள்ளேன்” என்றேன். “அவ்வொப்புதலை அளித்தவர் நாங்கள். நாங்கள் உடனிருப்போம்” என்று சோமகன் சொன்னான்.

நான் மீண்டும் எரிச்சல்கொண்டேன். “ஏன் நீங்கள் உடனிருக்கவேண்டும்? மெய்யாகவே கேட்கிறேன், அன்னை இங்கே சிறையிலிருக்கிறாரா என்ன? சாம்பனின் துணைவி என்னுடன் வருவதாகச் சொன்னார். அவரைக் கடந்து இங்கே வந்துள்ளேன்” என்றேன். “நாங்கள் உடனிருக்கவேண்டும்” என்று சாந்தன் சொன்னான். “அன்னையின் சொற்கள் இங்குள்ள அரசியலில் இருந்து எழுவன அல்ல. ஆனால் அவற்றை இங்குள்ள அரசியலைச் சார்ந்தவை என எவரேனும் விளக்கிக்கொண்டால் அது தீங்கென முடியலாம். ஆகவே அவர் சொல்லும் எச்சொல்லும் எங்கள் முன்னால் மட்டுமே எழும்.”

“அதற்கு மாறாக நீங்களே அச்சொல்லை சொல்லிவிடலாமே?” என்று நான் கேட்டேன். “நான் வந்திருப்பது அவர்களிடமிருந்து ஒரு வாழ்த்துச்சொல் பெறுவதற்காக மட்டுமே. மூத்தவர் ஃபானு துவாரகையில் முடிசூடவிருக்கிறார். அன்னையின் வாழ்த்தை அவர் விழைகிறார்.” தர்ஷன் “அதைத்தான் நாங்களும் எண்ணினோம். அன்னை இங்கே சாம்பனின் ஆட்சிக்கு வாழ்த்து அளித்துள்ளார். அவருடைய அரசர் என அமர்ந்திருப்பவர் அவரே. இன்னொருவரை அவர் வாழ்த்த வாய்ப்பில்லை” என்றான். “அவர் அன்னை, ஆகவே அனைவரையும் வாழ்த்துபவர். அவருடைய வாழ்த்தை தேடிவந்திருக்கிறேன். வாழ்த்து வரவில்லை என்றால் அவ்வண்ணமே கொள்கிறேன். வாழ்த்துரைக்க வாய்ப்பில்லை என நீங்கள் முடிவுசொல்ல வேண்டியதில்லை” என்றேன்.

“ஆம், நீங்கள் வாழ்த்து கோரலாம், அவர் மறுமொழி உரைக்கலாம். நாங்கள் உடனிருக்கையிலேயே அது நிகழும்” என்றான் சோமகன். “இளையோனே, நீயே எண்ணிப்பார். நான் வந்திருப்பது மைந்தன் என அன்னையை சந்திக்க. ஒரு சொல் தனியாக அவரிடம் பேச எனக்கு உரிமை இல்லையா?” என்றேன். “உரிமை உண்டு. ஆனால் இப்போது அல்ல. இன்றுள்ள அரசியல் சூழலை சிடுக்காக்கிக்கொள்ள எங்களுக்கு விருப்பம் இல்லை” என்றான் சோமகன்.

“நன்று, நான் மீறிச்சென்று அன்னையை சந்தித்தால் என்ன செய்வீர்கள்?” என்றேன். “சிறையிடுவோம். அல்லது எங்களைக் கொன்று வென்று நீங்கள் செல்லவேண்டும்…” நான் அவர்களின் விழிகளை பார்த்தேன். செய்வதற்கொன்றும் இல்லை என்று தெரிந்தது. அவர்கள் உறுதிகொண்டிருந்தனர். கிருஷ்ணையின் ஆணவத்தைச் சீண்டி அவரை அகற்றியதுபோல இவர்களை அகற்ற முடியாது. “நன்று, எனில் உடன்வருக… அவ்வண்ணமே அன்னையை சந்திக்கிறேன்” என்றேன். அவர்கள் சற்று ஆறுதல் கொள்வது தெரிந்தது.

என்னுடன் வந்தபோது அவர்களில் சோமகனின் தோள் என்மேல் மெல்ல உரசிச் சென்றது. நான் அதை உடனே உணர்ந்துகொண்டேன். அது தற்செயலாக நடந்ததுதான். ஆனால் அந்தத் தற்செயல்களை உருவாக்குவது ஆழுள்ளம். அங்கிருக்கும் ஒரு விழைவு அல்லது தவிப்பு. நீச்சலில் உடல்கள் மெல்ல தொட்டுச்செல்லுதல் ஒரு சொல் போன்றது. அவன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை. அவர்கள் அனைவருமே இறுகித்தானிருந்தனர். மீண்டும் ஒருமுறை அவன் என்மேல் படுவான் என நான் எதிர்பார்த்தேன். அவ்வண்ணமே வாயில் கடக்கையில் அவன் புறங்கை என் கைமேல் தொட்டுச் சென்றது. நான் புன்னகைத்துக்கொண்டேன்.

 

காளிந்தி அன்னையின் வருகைக்காக நாங்கள் காத்திருந்தோம். ஒருவர் விழிகளை ஒருவர் சந்திக்கவில்லை. அப்போது எவர் என்னிடம் பேசினாலும் அது பிழையாக ஆகும் என்று அவர்கள் நினைத்தார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் வேவுபார்க்கிறார்களா என்று நான் நோக்கிக்கொண்டிருந்தேன். ஆகவே மெல்ல ஓர் அசைவொலியை எழுப்பினேன். அவர்களில் இருவர் அனிச்சையாக சோமகனை பார்த்தனர். ஆக அவன்தான் அவர்களின் ஐயத்தில் இருக்கிறான். என் புன்னகை பெரிதாகியது. அங்கே கணிகர் அமர்ந்திருப்பதாக நினைத்துக்கொண்டேன். அவரிடம் நான் புன்னகை செய்தேன். அப்புன்னகை என் முகத்தில் எழ அவர்கள் குழம்பி ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டார்கள்.

ஏவலன் வந்து வணங்கி “அன்னை எழுந்தருள்கிறார்” என்றான். சற்றுநேரத்திலேயே ஏவற்பெண்டு ஒருத்தி மங்கலத்தாலத்துடன் வந்தாள். அவள்தான் அங்கே அன்னையை பார்த்துக்கொள்பவள் என்று தெரிந்தது. அவள் “அரசியை இங்கே அழைத்துவரும்படி ஆணை… அவரை அழைத்துவருவது சற்று கடினம். அவர் இடைவிடாத விளையாட்டில் இருப்பவர். இங்கே யாதவர்கோன் இருப்பதாகவே எண்ணிக்கொண்டிருக்கிறார். இங்கே ஒரு களிப்பாவை உள்ளது என்று சொல்லியே அவரை அழைத்துவருகிறேன். அவர் நீங்கள் விரும்பியபடி நடக்க வாய்ப்பில்லை” என்றாள். நான் “அறிவேன்” என்றேன்.

நாங்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு அப்பால் ஒரு திறந்த மண்வெளி அலையலையாகப் பெருகி வான் வரை சென்று வளைவாக நின்றிருந்தது. முற்றிலும் முகிலற்ற நீலவானம் வளைந்து மண்ணில் படிந்திருந்தது. அங்கே ஒரு மரம்கூட இல்லை, மிகச் சிறிய புதர்கள் தொலைவில் சிறு விலங்குகள் எனத் தெரிந்தன. முள்ளம்பன்றிகள் என முள்சிலிர்த்தவை. காற்று அங்கே அலைகொண்டிருந்தது. நான் அமைதியின்மையை உணர்ந்தேன். அதை என்னவென்று விளக்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் நான் நம்பிக்கொண்டிருப்பவை, இயற்றுபவை அனைத்தும் பித்தென்றாகி பொருளற்றவையாகி முன்னால் விரிந்துகிடக்கும் உணர்வு அது என பின்னர் விளக்கிக்கொண்டேன்.

அன்னையை ஏவற்பெண்டு கைபற்றி அழைத்துவந்தாள். அவர் மண்நிறமான மரவுரி ஆடை மட்டும் அணிந்திருந்தார். களிந்த குடிக்குரிய கல்மணி மாலை, சங்கு வளையல்கள். அவர் ஓர் இளங்கன்னி என்று என் உள்ளம் எண்ணியது. என் நெஞ்சில் பதிந்திருக்கும் அதே தோற்றம். சிறுமியுடையவை என மெலிந்த கைகளைக் கோத்து மடியில் வைத்துக்கொண்டார். அவர் எங்கிருக்கிறார், எங்கு வந்துள்ளார் எதையும் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. முகத்தில் இளம்புன்னகை இருந்தது. விழிகள் நீண்டு கனவில் எனத் தோன்றின. அவர் ஏதோ இசையில் மயங்கி அங்கிருப்பவராகத் தோன்றினார். எதையோ மறுகணம் எதிர்பார்ப்பவர்போல, பிறர் அறியாத இன்பநினைவொன்றை தன்னுள் அடக்கிக்கொண்டு தவிப்பவர்போல.

நான் “அன்னையே, தங்கள் வாழ்த்தை பெற்றுக்கொள்ள வந்துள்ளேன்” என்றேன். அன்னை என்னை நோக்கி புன்னகை புரிந்தார். என் சொற்கள் அவரை சென்றடையவில்லை. “அன்னையே, உங்கள் மைந்தர் ஃபானு இந்நகரின் அரசர் என முடிசூட்டிக்கொள்ளவிருக்கிறார். அவரே இந்நகரின் முழுதுரிமைகொண்ட அரசர் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள் என்று தெரியும். அதை ஏற்று நீங்கள் ஒரு வாழ்த்துச்சொல் அளிக்கவேண்டும்” என்றேன். பூர்ணநமாம்ஷு “இது அத்துமீறல். அன்னையின் எண்ணத்தை நீங்கள் சொல்லவேண்டியதில்லை” என்றான். “நான் என் எதிர்பார்ப்பை சொன்னேன்” என்றேன். “வாழ்த்துக்களை மட்டும் கோருக! நீங்கள் சொல்லும் சொற்களுக்கு அன்னை பொறுப்பல்ல” என்றான் பூர்ணநமாம்ஷு.

“அன்னையே, உங்கள் ஒரு சொல்லுக்காக யாதவபுரி காத்திருக்கிறது” என்றேன். அவர் மீண்டும் என்னை நோக்கி புன்னகை செய்தார். எனக்கும் அவருக்கும் மட்டும் தெரிந்த ஒன்றை நினைவுகூர்பவர்போல. அவரிடம் என் சொற்கள் சென்று சேர்கின்றனவா என்று தெரியவில்லை. மீண்டும் “அன்னையே, தங்களிடமிருந்து வாழ்த்துச்சொல் ஒன்றைப் பெறவே வந்தேன்” என்றேன். அவர் அதே புன்னகையுடன் அமர்ந்திருந்தார். நான் எழுந்துசென்று அவர் காலடிகளைப் பணிந்து “என் தமையனின் பொருட்டு என்னை வாழ்த்துக, அன்னையே!” என்றேன். அவர் என் தலைமேல் கைவைத்து சொல்லின்றி வாழ்த்தினார்.

பூர்ணநமாம்ஷு “வாழ்த்து பெற்றுவிட்டீர்கள் மூத்தவரே, இதற்குமேல் ஏதும் எதிர்பார்ப்பதற்கில்லை” என்றான். தர்ஷனும் “ஆம், இவ்வளவே அவரால் இயற்றக்கூடுவது” என்றான். நான் எழுந்துகொண்டு “ஆம், இதுவே அன்னையின் சொல் என நீடிக்கட்டும்” என்றேன். அவர்கள் அமைதிகொள்வதை, நீள்மூச்செறிவதை கண்டேன். ஏவற்பெண்டு “அன்னை அறைநீங்குகிறார்” என்று அறிவித்தாள். அவள் அன்னையை தொட்டதும் அவர் எழுந்து இனிய புன்னகையுடன் அனைவரையும் பார்த்தபின் அறைநீங்கினார்.

அவர் தன் மைந்தரை நோக்கவில்லை, ஒரு சொல்லும் உரைக்கவில்லை என்பதை நான் கண்டேன். நாங்கள் எழுந்துகொண்டோம். தர்ஷன் என்னிடம் “ஆறு மாதங்களுக்கு முன்பு யாதவர் சாத்யகி இங்கே வந்து அன்னையை கண்டார். அன்றும் அன்னை ஒருசொல்லும் உரைக்கவில்லை. ஆனால் அன்னையின் சொல்லை பெற்றுவிட்டார் என்று அவர் சொல்லிக்கொண்டதாகவும் தந்தையைக் கண்டு அதை சொன்னதாகவும் அறிந்தேன்” என்றான். “அவ்வண்ணம் ஒரு பொய்ச்சொல் திகழக்கூடாது என்பதனாலேயே உடனிருந்தோம். அன்று அவரை தனியாக சந்திக்கவிட்டு வெளியே நின்றிருந்தோம். அது பிழை என உணர்ந்தோம்.”

“அவர் தந்தையை சந்தித்ததாகச் சொன்னதே பொய். தந்தை இப்போது உயிருடன் இல்லை, அதனை நாங்கள் அறிவோம்” என்றான் பூர்ணநமாம்ஷு. நான் சற்று திகைப்புடன் “எவர் சொன்னார்கள்?” என்றேன். “எவர் சொல்லவேண்டும்? இந்நகர் இப்படி சிக்கல்களில் உழல்கையில் அவர் இருந்தால் இங்கு வந்திருக்க மாட்டாரா? இது அவர் உருவாக்கிய அரசு, அவர் சமைத்த நகர்” என்றான். நான் “அவர் மறைந்த செய்தியை உன்னிடம் எவரேனும் சொன்னார்களா? உன் தமையன்கள்?” என்றேன்.

“இல்லை, ஆனால் அவ்வண்ணமே அனைவரும் எண்ணுகிறார்கள் என்று தோன்றுகிறது. சாத்யகி இங்கிருந்து செல்லும்போது ஒருவேளை அவர் உடன்வந்துவிடக்கூடும் என்னும் எதிர்பார்ப்பு இருந்தது. அவர் மட்டும் திரும்பி வந்ததுமே அனைவரும் அறிந்துகொண்டனர், அவர் வரப்போவதில்லை என்று. சாத்யகி அங்கே என்ன நிகழ்ந்தது என்று எவரிடமும் சொல்லவில்லை. அவர் நாவிலிருந்து அவர் அரசரைக் கண்டாரா இல்லையா என்பதை வரவழைக்க மூன்று தரப்பினருமே முயன்றனர். அவர் ஒருசொல் கூறாமல் தன் பாடிவீட்டுக்குச் சென்று முழுத் தனிமையில் ஒடுங்கிவிட்டிருக்கிறார். கானாடுவதும் கடலாடுவதும் அன்றி எதையும் செய்வதில்லை.”

“பல நாட்கள் அவரை கூர்நோக்கிய பின் அவையில் மூத்தவர் சாம்பன் சொன்னார், சாத்யகியின் சொல்லின்மை அரசரை அவர் கண்டதனால் உருவானது அல்ல, அவர் அரசரை காணவில்லை, அதை மறைக்கவிரும்புகிறார், ஆகவேதான் இச்சொல்லின்மை என்று” என அவன் தொடர்ந்தான். “ஒருவேளை அரசர் மறைந்திருக்கலாம் என்று சகஸ்ரஜித் சொன்னபோது சாம்பன் இருக்கலாம் என்றார். ஆனால் சுமித்ரன் அதை ஏற்கவில்லை. அவர்கள் பதின்மரில் அவரே கூர்மதியாளர் என்பதனால் அவையும் ஏற்கவில்லை. ஆனால் எனக்கும் அதுவே மெய்யாக இருக்கும் என்ற எண்ணம் வந்தது.”

“உன் விழைவோ அது?” என்றேன். அவன் சீற்றம்கொள்ளவில்லை, நிலைகுலைந்து “நானா? நான் ஏன் தந்தையின் சாவை விழையவேண்டும்?” என்றான். “இந்நகரில் இன்று தந்தையின் சாவை விழையாத எவரேனும் உள்ளனரா? எண்பது மைந்தரும் விழைவது அதுவல்லவா?” என்றேன். “என்ன சொல்கிறீர்கள்?” என்று அவன் கூச்சலிட்டான். “மிகைநாடகம் வேண்டாம். நாம் ஒருவருக்கொருவர் எதையும் நிறுவிக்கொள்ள வேண்டியதில்லை” என்றேன். “தந்தை இந்நகரின் இயல்பான விசைகளை கட்டுப்படுத்தி வைத்திருந்த மைய முடிச்சு. அவர் இல்லாமலானாலொழிய நம்மால் இங்கே இயல்பான விசைமையங்களை உருவாக்கிக்கொள்ள முடியாது. இந்த ஆட்டத்தில் அவர் இல்லை என்பதே உகந்தது.”

“ஆகவே அவர் இல்லை என்று நாம் எண்ணிக்கொள்கிறோம்” என்று நான் தொடர்ந்தேன். “இல்லை என்னும் சொல் இறப்பு என்னும் சொல்லாக நம்முள் இடமாற்றம் ஆகிறது. முதலில் அதிர்ச்சி பின் குற்றவுணர்வு பின் அது பழகி ஒருவகை சலிப்பு இறுதியாக மெல்லிய இன்பம் என அது வளர்கிறது. இன்று நம் அனைவர் அகத்திலும் தந்தை உயிரிழந்து மறைந்துவிட்டிருக்கிறார். எண்பது கைகளால் எண்பதாயிரம் முறை அவருக்கு ஈமக்கடன்களை செய்துவிட்டிருக்கிறோம்.”

“இது என்ன பேச்சு?” என்றான் தர்ஷன். “இதை பேசவேண்டிய இடம் இது அல்ல. ஆனால் பேசவேண்டியிருக்கிறது” என்றேன். “இனி இங்கே தந்தை வரமாட்டார் என்றே நினைக்கிறேன். இனிமேல் வந்தால் அவர் இங்கிருந்து சென்றதுபோல, நாம் அறிந்திருப்பதுபோல வரமுடியாது. வைரமுடி சூடி, ஒளிரும் படைக்கலத்துடன் அனலெழும் தேரில் பெரும்படை பின்தொடரவே நகர்மேல் எழுந்தருளமுடியும். அது நிகழ வாய்ப்பில்லை. அவ்வகையில் நோக்கினால் தந்தை இறந்திருக்கிறார் என்றே கொள்ளலாம். இறப்பு என்பது மீண்டெழல் இல்லாமை. திரும்பி வராத பயணங்களும் மீட்சியில்லாத உளவீழ்ச்சிகளும் சாவே.”

“ஆனால் அவர் வேறுவகையில் வேறு முகங்களுடன் வரக்கூடும்” என்றேன். “அவருடைய முகங்கள் எண்ணிறந்தவை. குழவி, காதலன், முனிவர் என அவர் அடைந்த வளர்நிலைகள் பல. இசைஞர், கவிஞர், மெய்யறிஞர், படிவர் என அவர் சென்ற இடங்களும் பல. தன்னைச் சூழ்ந்திருப்பவர்களில் ஊடுருவி தான் என அவர் வெளிப்படுவதுண்டு. அனைத்திற்கும் மேலாக அவரை எண்ணி தங்களுக்குள் அவரை வளர்த்துக்கொள்வோரின் அகத்திருந்து அவர் உருத்திரண்டு வருவதும் உண்டு.” அவர்கள் முற்றிலும் குழம்பியிருந்தனர். விழிகள் வெறித்திருந்தன.

“இதோ அவர்மேல் பெருங்காதல்கொண்டு அக்காதலன்றி பிறிதொன்றிலாது வாழும் காளிந்தியன்னையை கண்டோம்” என்று தொடர்ந்தேன். “ஆனால் இங்கு வருவதற்கு முன் அதே பெருங்காதலால் பிறிதொன்றிலாதாகி எல்லையற்ற காழ்ப்பும் வெறுப்பும் கொண்டு நின்றிருக்கும் ஒருவரை கண்டேன். கிருஷ்ணையில் எழுவதும் அவரே. அவ்வண்ணமும் அவர் இந்நகர்மேல் எழக்கூடும். பேருருக்கொண்டு.” பூர்ணநமாம்ஷு “அவ்வண்ணம் எவர்?” என்றான். “ஏன், இப்போது எங்கள் அவையில் அமர்ந்து சொல்கோக்கும் கணிகர் அவருடைய ஒரு வடிவே என்றிருக்கக்கூடாதா?” என்றேன்.

அவர்கள் திகைத்துவிட்டனர். “அவர் தந்தைக்கு நிகராக நின்று களமாடியவர். தந்தையை பல களங்களில் வென்றவர். அறுதியாக தந்தையால் வெல்லப்பட்டு அவ்வஞ்சத்தை திரட்டிக்கொண்டு மேலெழுந்தவர். நிழலும் நாமே என்றால் அவர் தந்தையே” என்றேன். பூர்ணநமாம்ஷு “கணிகர் நம் தந்தையால் வெல்லப்படவில்லை. அவருடைய நோக்கம் அஸ்தினபுரியின் அரசகுடியை அழிப்பது. அதை அவர் இயற்றினார். வென்று அந்நகரிலிருந்து நீங்கினார். இங்கு அவர் நோக்கம் எதுவென்று யார் அறிவார்?” என்றான். “ஆம், ஊழ் அவரை கருவியாகக் கொள்கிறது” என்றேன்.

அவர்களை முழுமையாக நிலைகுலைய வைத்துவிட்டேன் என்று உணர்ந்ததும் நான் புன்னகைத்தேன். “வருகிறேன்” என்றேன். தர்ஷன் என் பின்னால் வந்து “அவர்கள் பொதுவான ஒரு வாழ்த்தை மட்டுமே சொன்னார்கள். அவ்வாறன்றி ஒன்றை நீங்களும் சொல்லமாட்டீர்கள் என நம்புகிறேன்” என்றான். “அவர்கள் வாழ்த்தினார்கள். எங்களுக்கு அதுவே நிறைவு. அதில் அரசியலேதும் இல்லை. உங்களுக்கு அவர் அரசியல் கருவி, எங்களுக்கு அப்படி அல்ல, அன்னையேதான்” என்றேன். தர்ஷன் “இங்கே இன்று அரசியல் கருவி அல்லாத எவரேனும் உளரா?” என்றான்.

“நீ குழம்பியிருக்கிறாய்” என அவன் தோளை தொட்டேன். பின்னர் சோமகனை நோக்கி புன்னகைத்து “பார்ப்போம்” என்றேன். அவன் திகைப்பதை உணர்ந்த கணமே விழிகளைத் திருப்பி அவன் சொல்வதென்ன என்பதற்கு செவியோ விழியோ கொடுக்காமல் முன்னால் நடந்தேன். முதுகெல்லாம் காதுகளாகவும் கண்களாகவும் அங்கே நிகழ்வதென்ன என்பதை உணர்ந்தேன். அவர்கள் நடுவே சோமகனை தனித்து நிறுத்திவிட்டேன். அவனுள் ஒரு சிறு விதை, அவனை அறியாமலேயே விழுந்து கிடப்பது. அது இருந்தமையாலேயே அவன் சற்று கலங்கியே எதிர்வினையாற்றுவான், அதுவே போதும்.

நான் திரும்பி நடந்தபோது இயற்றியவை பயனுள்ளவையா என்று எண்ணிக்கொண்டேன். என் தேரை அணுகி அதில் ஏறி அமர்ந்து “அரண்மனைக்கு” என்றேன். நகருள் தேர் நுழைவது வரை குழம்பிய உளநிலையிலேயே இருந்தேன். கிருஷ்ணையின் முன் இறுதியில் நான் என் சூழ்திறனின் எல்லையை கடந்தேன். பிற அனைத்து நிலைகளிலும் சொல்லெண்ணி செயல்பட்டிருக்கிறேன். விரும்பியதை இயற்றியிருக்கிறேன். கணிகர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்? அப்போது நான் விழைந்த ஒன்று இருந்தது, கணிகர் முன் அவ்வாறு என் கூர்மையை காட்டி நின்றிருக்கவேண்டும். அவர் விழிகளை நோக்கி அப்போது புன்னகை செய்யவேண்டும்.

முந்தைய கட்டுரைஅஞ்சலி : எம்.கே.அர்ஜுனன்
அடுத்த கட்டுரைஆனையில்லா, துளி -கடிதங்கள்