இடம்,பெயர்நூறான் –கடிதங்கள்

இடம் [சிறுகதை]

ஜெ

 

கரடிநாயர் கதைவரிசையிலெயே ஹிலாரியஸ் ஆன கதை இதுதான். அந்தக்குரங்கு ஊரின் ஒரு பகுதியாக  ஆவதன் சித்திரம் மிக அழகானது. இந்த கதையின் ஓர் அம்சம் என்னவென்றால் பெரும்பாலான ஊர்கள் அன்னியர்களை இப்படித்தான் எதிர்கொள்கின்றன. அந்தச் சமூகத்திற்குள் நுழைவதற்கு ஒரு லைசென்ஸ் தேவையாகிறது . அது அந்த சமூகத்தில் தன் இடத்தை கண்டுபிடித்து நிறுவிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

 

இந்த கதையின் அமைப்பு குரங்கு வெர்ஸஸ் கிராமம். ஒரு சிறுகதைக்குள் கிராமமே வரவேண்டும். கிராமத்தின் மக்களின் எல்லா பிரதிநிதிகளும் வந்தாகவேண்டும். மனநிலைகள் வந்தாகவேண்டும். அங்குள்ள சமூக அமைப்பு வந்தாகவேண்டும். வைக்கம் முகமது பஷீரின் கதைகளில்தான் அதை கண்டிருக்கிறேன்.

 

ஆர்.கே.நாராயணனின் கதைகளில் இப்படி ஒரு சித்தரிப்பு உண்டு. ஆனால் அதில் கவித்துவமான முத்தாய்ப்பு இருக்காது. இங்கே எல்லா கதைகளிலும் அந்த முத்தாய்ப்பு அமைந்துள்ளது. அது கதையை உயரே தூக்குகிறது.

 

எத்தனை கதாபாத்திரங்கள். வீட்டு ஓடு முழுக்க உடைந்து கிடக்க அதை ஒருவன் சொல்லி பிலாக்காணம் வைக்கிறான். ஒருவர் தன் டார்ச் லைட்டின் பல்பு உடைந்துவிட்டது என்று அதே துயதத்துடன் கேட்கிறார்

 

ராம்குமார்

 

 

 

அன்புள்ள ஜெ,

 

நியூயார்க் நகரத்திலிருந்து ஒரு மணி தூரத்தில் தான் இருக்கிறோம். தினம் வரும் கோரோனா செய்திகளில் படத்தட்டுத்தான் கழிகிறது. உங்களின் தற்கொள்கைகளும் சிறுகதைகளும் தான் அதை கலைத்து புத்துணர்ச்சி அளிக்கிறது. நன்றி.

 

 

தினமும் என் 10 வயது மகன் , 5 வயது மகளுடன் ஒரு மாலை நடை. போன வாரம் நடை போன போது ஏதாவது கதை சொல்லும்படி வற்புறுத்தினார்கள். ஆனையில்லா கதையை கொஞ்சம் எளிமைப்படுத்தி சொன்னேன். மறுநாள் மொழியை சொன்னேன். இப்போது அவர்களுக்கு கரடி நாயரும், அனந்தன், லட்சுமி, போத்தி எல்லோரும் தெரிந்த மனிதர்கள்.

 

 

இன்று தங்கத்தின் மணம் கதையை கொஞ்சம் மாற்றி சொன்ன பிறகு என் மகன் அனந்தன், லட்சுமி, போத்தியை வைத்து ஒரு சிறுகதை சொன்னான். கூடிய விரைவில் நீங்கள் “கரடியும் நண்பர்களும்” சிறுகதை தொகுப்பு போடுவதற்குள் நாங்கள் போட்டுவிடுவோம்  என்று நினைக்கிறோம்.

 

 

அறம் சிறுகதைகள் வந்தபோது ஏற்பட்ட அதே ஆனந்தம் இப்போதும்.

 

அன்புடன்

ரா.ஜெய்சங்கர்

 

பெயர்நூறான் [சிறுகதை]

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

 

பெயர்நூறான் வாசிக்க அத்தனை நிறைவாக மகிழ்ச்சியாக இருந்தது. “மூக்கு வைக்க மறந்துட்டாங்க ஜாக்கிசான்”  வாசிக்கையில் வாய்விட்டு சிரித்தேன். உண்மைக்குமே இன்று ஜாக்கிசான் அவர்களின் பிறந்தநாள்தான்.

 

எத்தனை எளிய கதை?  ஆனால் அத்தனை நிறைந்திருந்தது மனது.இதிலே சொல்லியிருப்பதுபோலவே குழந்தைகளை பிறந்ததும் பார்க்கும் மகிழ்ச்சியென்பது  அந்தரங்கமாக மிகமிக எளிமையானதுதான், இக்கதை வாசிப்பைப்போலவே !

 

நன்றி

அன்புடன்

லோகமாதேவி

 

 

ஜெ.

 

வணக்கம் நலம்தானே?

 

“பெயர் நூறான்” படித்தேன். தலைப்பால் தமிழுக்குப் புதிய சொல் ஒன்று கிடைத்தது .கதையைப்படிக்கும் எப்பாலாருக்கும் அவர்களின் முதல் பிரசவம் நினைவுக்கு வரும் . நான் கூட தலைப்பிரசவ அவத்தைகள் மருத்துவமனையில் காத்திருப்பு பற்றித் தொண்ணூறுகளில் ‘கருடன்’ என்று ஒரு கதை அழகியசிங்கரின் நவீன விருட்சத்தில் எழுதி உள்ளது நினைவுக்கு வந்தது. நமக்கு நெருக்கமானவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும்போது நாம் அடையும் பதற்றம், காட்டும் அவசரம் எல்லாம் ரவியின் மூலம் சிறப்பாகப் பதிவாகி உள்ளன. அப்பொழுது ஒருவர் அடையும் உணர்ச்சிகளை அனுபவித்தில்தான் உணரமுடியும்.

 

ரவி முதலில் காட்டும் உணர்ச்சியின் வெளிப்பாடுதான் “நீங்க இங்க இருக்கீஙக” என்று மணிமேகலை மருத்துவரிடம் கேட்பது. பின்னர் மகவு பிறந்தபின் அவன் அடையும் குதூகலம் ,முதல் குழந்தையைப் பார்க்கும்போது அடையும் மகிழ்ச்சி எல்லாம் நன்கு பதிவாகி உள்ளன. உணர்ச்சிகளாலே பின்னப்பட்ட கதை அது தெரியாமல் சாமர்த்தியமாக மறைக்கப்பட்டுள்ளது

 

வளவ துரையன்

முந்தைய கட்டுரைவேரில் திகழ்வது, வேட்டு -கடிதங்கள்
அடுத்த கட்டுரைதுளி, மொழி- கடிதங்கள்