‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–25

பகுதி நான்கு : அலைமீள்கை – 8

நான் காளிந்தி அன்னையை சந்திக்கச் சென்றபோது என் நெஞ்சு ஒழிந்து கிடந்தது. ஒரு சொல் எஞ்சியிருக்கவில்லை. நீள்மூச்செறிந்தபடி, தன்னந்தனியனாக உணர்ந்தபடி நடந்தேன். கணிகர் என்னிடம் சொன்ன அனைத்தையும் மறந்துவிட்டேன். நான் உணர்ந்தது ஒன்றையே. தந்தையே, பாலைநிலங்களில் ஆழ்ந்த மண்வெடிப்புகளுக்குள் மிகமிகத் தூய்மையான நீர் தேங்கியிருக்கும். புறவுலகிலிருந்து ஒளி மட்டுமே அங்கே சென்று அதை தொடும். அத்தகைய நீர்ச்சுனை ஒன்றில் என் கைகளை கழுவப் போகிறேன்.

ஆனால் அது என் பணி, நான் செய்தே ஆகவேண்டியது. ஏனென்றால் நான் இந்த ஆடலில் இருந்துகொண்டிருக்கிறேன். இந்தக் களத்தில் நான் வென்றாகவேண்டியிருக்கிறது. காளிந்தியன்னையை சந்திக்கவேண்டும் என்று நான் செய்தி அனுப்பினேன். ஆனால் அச்செய்திக்கு எனக்கு மறுமொழி வந்தது இளவரசி கிருஷ்ணையிடமிருந்து. கிருஷ்ணையின் ஆட்சியில் காளிந்தியன்னை இருக்கிறார் என அறிந்திருந்தேன். ஆனால் அவ்வண்ணம் ஒரு நேரடியான கட்டுப்பாடு இருக்கும் என நான் எண்ணியிருக்கவே இல்லை.

எதன்பொருட்டு நான் அன்னையை சந்திக்கவேண்டும் என்று கிருஷ்ணை கேட்டிருந்தார். என் அன்னையை சந்திக்க எனக்கு தனியான நோக்கங்கள் தேவையில்லை, அவர்களை சந்தித்தாலே போதும் என்று சொல்லி அனுப்பினேன். எனில் இளவரசி கிருஷ்ணையை சந்தித்தபின் நான் அரசியை சந்திக்கலாம் என்று செய்தி வந்தது. வேறுவழியில்லை. ஆகவே நான் கிருஷ்ணையை சந்திக்கச் சென்றேன்.

இளவரசியின் அரண்மனை மைய அரண்மனையிலிருந்து சற்றே விலகி இருந்தது. அங்கே துரியோதனனின் அரவக்கொடி பறப்பதை கண்டேன். அங்கு முன்பு அஸ்தினபுரியின் அமுதகலக்கொடி பறந்துகொண்டிருந்ததை நினைவுகூர்ந்தேன். என்னை உள்ளே அழைத்துச்சென்ற ஏவலன் அங்கே சிறுகூடத்தில் அமர்த்திவிட்டுச் சென்றான். அந்த அறையிலிருந்த முழுமையும் தூய்மையும் என்னை திகைக்கச் செய்தன. தந்தையே, மொத்த துவாரகையிலும் ஓர் அரசியின் அவை என தோன்றியது அதுவே.

இளவரசி கிருஷ்ணை என்னை உள்ளே அழைப்பதாகச் சொன்னார்கள். நான் உள்ளே நுழைந்து அங்கே பீடத்தில் அமர்ந்திருந்த இளவரசி கிருஷ்ணையை வணங்கினேன். அவர் முகமன் உரைத்து பீடம் அளித்தார். “கூறுக!” என்று கூரிய சொல்லால் ஆணையிட்டார். அவர் களைத்துப்போயிருந்தார். கண்களைச் சூழ்ந்து கருவளையங்கள். அகவை முதிர்ந்தவர்போல, நோயுற்றவர்போல தோன்றினார். முன்பு சாம்பனின் துணைவியாக அவர் துவாரகையில் நுழைந்தபோது இருந்த தோற்றத்தை நினைவுகூர்ந்தேன். அவரை பேரரசி திரௌபதியின் இளைய வடிவம் என்றனர். நகரே சாலைகளில் கூடி அவரை வரவேற்றது. ‘கன்னங்கரிய முத்து’ என்றனர் சூதர்.

“இளவரசி, நான் என் அன்னை காளிந்தியை சந்திக்கவேண்டும்” என்றேன். “என் தனிப்பட்ட நோக்கத்துக்காக அன்னையை சந்திக்க விழைகிறேன். அவருடைய நற்சொல் என்னை நிறைவுறச் செய்யும் என எண்ணுகிறேன். அதன்பொருட்டு நான் எவருடைய ஆணையையும் பெறவேண்டியதில்லை என அறிவேன். ஆனால் தாங்கள் என் அன்னையை பேணி பணிவிடைசெய்து வருவதனால் என் வணக்கத்தையும் நன்றியையும் சொல்லும்பொருட்டு வந்தேன்” என்றேன்.

“அவர் தன் விருப்பத்தால் என் ஆணைக்குள் இருக்கிறார்” என்று இளவரசி கிருஷ்ணை சொன்னார். அவரின் விழியை என்னால் நோக்கமுடியவில்லை. வஞ்சமா சினமா வெறுப்பா எனத் தெரியாத அனல் ஒன்று அங்கே நிறைந்திருந்தது. “நான் ஒப்பாமல் எவரும் அவரை சந்திக்கமுடியாது” என்றார். “ஆனால் எவ்வண்ணம் நீங்கள் எனக்கு ஒப்புதல் மறுக்கமுடியும்?” என்றேன். “முடியும், அவர் என்னை அதன்பொருட்டு அமர்த்தியிருப்பதனால். அதை மறுக்கவேண்டும் என்றால் நீங்கள் யாதவர்கள் படைகொண்டு வந்து என்னை வெல்லுங்கள்” என்றார்.

நான் அவரை நேருக்குநேர் பார்த்தேன். அவரிடம் எளிதில் சொல்லாட முடியாது என்று புரிந்துகொண்டேன். ஆகவே பணிவுடன் சொல்லெடுத்தேன். “இளவரசி, நான் பூசலுக்கு வரவில்லை. என் அன்னையை சந்திக்க எனக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்” என்றேன். அவர் என்னை சில கணங்கள் கூர்ந்து நோக்கிவிட்டு “அன்னை அரசியலுக்கு அப்பால் இருக்கிறார். அவர்மேல் உங்கள் அழுக்குகளை கொண்டுவந்து கொட்டவேண்டியதில்லை” என்றார். “ஆம், அறிவேன். நான் வந்தது அவருடைய வாழ்த்தை நாடித்தான்” என்றேன்.

இளவரசி கிருஷ்ணை “எதன்பொருட்டு?” என்றார். அக்கணம் என்னுள் ஒரு கூர் எழுந்தது. “அன்னை முன்னர் என்னிடம் ஒருமுறை சொன்னார், நான் என் தந்தையின் தோற்றம் கொண்டவன் என்று. அதை நினைவுகூர்கிறேன். துவாரகையின் யாதவர்குடியின் அரசனாக நான் முடிசூடிக்கொள்ளவேண்டும் என்றால் எட்டு அன்னையரில் காளிந்தியன்னையின் வாழ்த்தே முதலில் அமைவது என்று தோன்றியது” என்றேன். இளவரசி கிருஷ்ணையின் கண்கள் சுருங்கின. “நீங்களா, முடிசூடுவதா?” என்றார். “ஆம், ஏன் நான் முடிசூடக்கூடாது? யாதவக்குடிகளில் விருஷ்ணிகளின் ஆதரவு என்னிடமே” என்றேன்.

“மூத்தவர் ஃபானுவின் அவைமுதல்வர்களில் ஒருவர் நீங்கள். அவருடைய தூது என வந்தவர்” என்றார். “இன்று ஒவ்வொருவரும் அவ்வண்ணம் ஒவ்வொரு தோற்றத்தில் இருக்கிறார்கள். நான் என் இலக்கை நன்கறிந்தவன்” என்றேன். “ஏனென்றால் நானே யாதவ மைந்தர் பதின்மரில் தகுதி கொண்டவன்.” அவர் விழிகளில் ஐயம் அலையடிப்பதை கண்டேன். “கணிகர் என்னிடம் சொன்னார், என் வழிகள் சிக்கலானவை, ஆனால் அவை என்னை தகுதிப்படுத்தி இலக்கடையச் செய்யும் என்று” என்றேன்.

அவர் உள்ளத்தின் ஆழத்தில் ஒரு புன்னகை மலர்வதை விழிகளில் முழுக்க மறைக்க முடியவில்லை. “கணிகர் இங்கிருக்கிறார் என அறிவேன்” என்றார். “அவர் என்னுடன் இருக்கிறார்” என்றேன். “அவரிடமிருந்து ஆணைபெற்றே அன்னையை சந்திக்கச் செல்கிறேன்.” இளவரசி கிருஷ்ணை உள்ளூர புன்னகைத்துக்கொண்டே இருப்பதை என்னால் காணமுடிந்தது. என்னுள் கணிகர் ஒவ்வா விழைவொன்றை தூண்டிவிட்டு அது பெருகிய களிமயக்கினால் நான் அங்கே வந்திருக்கிறேன் என்று அவர் எண்ணுவதை புரிந்துகொண்டேன். ஆனால் என் விழிகளில் என் எண்ணங்கள் தெரியாதவாறு என்னை மறைத்துக்கொண்டேன்.

“நீங்கள் அன்னையின் வாழ்த்தைக் கொண்டு என்ன செய்யமுடியும்?” என்று இளவரசி கிருஷ்ணை கேட்டார். “இளவரசி, நீங்களே அறிவீர்கள். லக்ஷ்மணையன்னையின் மைந்தரை பேசி நம்பவைத்து யாதவர் தரப்புக்கு கொண்டுவந்தவர்களில் நானும் ஒருவன். அவர்களில் மூவர் என்னை ஆதரிக்கிறார்கள். என் இளையோர் இருவர் என்னுடன் இருக்கிறார்கள். காளிந்தியன்னை என்னை ஆதரிக்கிறார் என்ற ஒரு சொல்போதும், விருஷ்ணிகளில் ஒருசாரார் எனக்கு ஆதரவு தெரிவிப்பார்கள்” என்றேன்.

“அதை வைத்து நீங்கள் எதிர்த்து எழுவீர்களா என்ன?” என்றார். மிகமிக சொல்தேர்ந்து கூறப்பட்டது அந்தக் கேள்வி. நான் “ஆம், அரசி” என்றேன். “கிளர்ந்தெழவேண்டியதில்லை. கிளர்ந்தெழக்கூடும் என்ற வாய்ப்பு இருந்தாலே போதுமானது… அவ்வண்ணம் ஒரு வாய்ப்பு கண்ணுக்குப்பட்டாலே என்னை நோக்கி ஆதரவு வரத்தொடங்கும். என்ன இருந்தாலும் ஃபானு அந்தகர்களின் தலைவர். விருஷ்ணிகள் அவரை இன்னும் முற்றேற்கவில்லை.”

“விருஷ்ணிகளின் ஆதரவுக்கும் காளிந்தியன்னையின் ஆதரவுக்கும் என்ன தொடர்பு?” என்று இளவரசி கிருஷ்ணை கேட்டார். “ஓர் உணர்வுத்தொடர்பு உள்ளது. விருஷ்ணிகளில் பலர் அன்னை காளிந்தியை பர்சானபுரியின் ராதையின் வடிவமாகவே எண்ணுகிறார்கள். பர்சானபுரியின் கோபிகை இன்று விருஷ்ணிகளின் இல்லந்தோறும் அமைந்திருக்கும் தெய்வம்” என்றேன். இளவரசி கிருஷ்ணையின் விழிகளை நோக்கியபோது அவர் நிறைவுற்றுவிட்டிருப்பதை உணர்ந்தேன்.

என்னால் அத்தனை கூர்மையாக அத்தருணத்தை உருவாக்க முடிந்ததை எண்ணி நானே வியந்தேன். “இளவரசி, மூத்தவர் சாம்பன் துவாரகையை முழுதாள்வதை நான் அறிவேன். அவரை வென்று இந்நகரை யாதவர் கைப்பற்றமுடியாதென்பதை என் மூத்தவர் உணரவில்லை. ஷத்ரியரும் விலகி நின்றிருக்கையில் யாதவர் ஒருபோதும் அசுரர்களையும் நிஷாதர்களையும் போரில் வெல்லமுடியாது. நான் நிலைமையை நன்குணர்ந்தவன். அதை என் மூத்தவரின் அவையில் என்னால் சொல்லமுடியாது. ஆகவே எனக்கான கனவுகளை நானே உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்.”

சொல்க என்பதுபோல அவர் பார்த்தார். “இளவரசி, நான் விழைவது ஒரு யாதவநிலம். மதுராவையும் மதுவனத்தையும் இணைத்து ஓர் அரசு. இங்கல்ல, யாதவக்குடிகள் வாழும் கங்கையமுனை சமவெளியில். இங்கே இப்படி ஒரு மாபெரும் வணிகநகரை ஆட்சிசெய்யும் ஆற்றல் யாதவர்களிடமில்லை. அதை கணிகரும் என்னிடம் சொன்னார்” என்றேன். அவர் “ஆம்” என்றார். “ஒருவேளை என் கணக்குகள் நிறைவேறும் என்றால் நான் சாம்பனிடம் அதைப்பற்றி நேரில் பேசவே விழைகிறேன். அதில் இருசாராருக்கும் நன்மையே விளையும்” என்றேன்.

“சாம்பன் விழைந்தால் நீங்கள் இங்கு வந்து இணையக்கூடுமா?” என்றார் இளவரசி கிருஷ்ணை. “ஆம், ஆனால் வெறுமனே இளையோனாக வரமாட்டேன். என்னுடன் விருஷ்ணிகளின் குடித்தலைவர்கள் பலர் வந்தாகவேண்டும். என் இளையோர் சிலரும் உடனிருக்கவேண்டும். யாதவர்களின் தலைவன் என சாம்பன் என்னை ஏற்பார் என்றால், எனக்கான நிலத்தை வாக்களிப்பார் என்றால் வருவேன். அதற்கு இன்னும் பொழுதும் நாளும் உள்ளது” என்றேன். இளவரசி கிருஷ்ணை “ஆம், அதையே நானும் எண்ணினேன். உங்கள் தரப்பை திரட்டிக்கொள்க. கணிகரிடம் எண்ணிச் சொல்சூழ்க. உரிய தருணத்தில் சாம்பனிடம் பேச நானே உங்களுக்கு அவையமைக்கிறேன்” என்றார்.

“இளவரசி, மெய்யாகவே நான் உங்களை சந்திக்க வந்ததே இதன்பொருட்டுத்தான்” என்று நான் சொன்னேன். “இந்தப் பேச்சு எல்லா வகையிலும் எனக்கு உதவுவது.” இளவரசி கிருஷ்ணை என்னிடம் “கணிகரின் நோக்கம் என்ன?” என்றார். “உரிய முறையில் விருஷ்ணிகளை கோல்கொள்ளச் செய்வது என்று அவர் என்னிடம் சொன்னார். விருஷ்ணிகளின் தலைவனாக நானே உகந்தவன் என்பதனால் அவர் என்னை ஆதரிக்கிறார்.” இளவரசி கிருஷ்ணை உள்ளே வாய்விட்டு சிரிப்பதை கண்கள் காட்டின. அவர் என்னை அறிவிலா தன்விரும்பி என நினைக்கிறார். அவ்வெண்ணமே நீடிக்கட்டும். என்னை இளையோன், அறிவிலி என்று பிறர் எண்ணுவதுபோல எனக்கான கவசம் வேறில்லை.

“நன்று, நான் உங்களுக்கான சந்திப்பை ஒருக்குகிறேன்” என்று இளவரசி கிருஷ்ணை சொன்னார். அவருடைய ஏவலன் சென்று காளிந்தி அன்னையின் அணுக்கியிடம் பேசிவிட்டு வந்து அவர் சித்தமாக இருப்பதாக சொன்னான். “நான் தங்களுக்கு இதன்பொருட்டு கடமைப்பட்டிருக்கிறேன், இளவரசி” என்றேன். “நம் அணுக்கம் நீடிக்கட்டும்” என்று அவர் சொன்னார். “நான் தங்களை சந்திக்கவேண்டும் என்று கணிகர் சொன்னார். அவ்வாறு சந்திப்பதை இங்கே எவரிடமிருந்தும் மறைக்கவும் முடியாது. ஆகவே இந்த முறையான சந்திப்பு நிகழ்வது நன்று என்றார்” என்றேன்.

இளவரசி கிருஷ்ணை வாய்விட்டு நகைத்து “கணிகர் அறியாத ஒன்றில்லை” என்றார். “அவரை நான் சந்திக்க விழைகிறேன். அவர் எந்தைக்கு அணுக்கமானவராக இருந்தார்” என்றார். “ஆம், அதை சொல்லிக்கொண்டே இருந்தார்…” என்றேன்.

 

காளிந்தி அன்னையின் தவக்குடிலுக்கு நான் கிளம்பியபோது என்னுடன் தானும் வருவதாக கிருஷ்ணையும் கிளம்பினார். நான் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. இளவரசி வெளியே சென்றபின் நான் கூடத்தில் காத்திருந்தேன். என்னை அழைத்துச்செல்லவிருந்த ஏவலன் “சற்றே பொறுங்கள், அரசியும் உடன் வருகிறார்” என்றான். நான் ”யார்?” என்றேன். “அரசி கிருஷ்ணை, தானும் உடன் வருவதாகச் சொன்னார்” என்றான்.

நான் திகைத்துவிட்டேன். அது எவ்வகையிலும் முறையானது அல்ல. அதுவரை மிக நுட்பமாக அத்தருணத்தை நான் கையாண்டதாக எண்ணிக்கொண்டிருந்தேன். முறைமைகளை மீறிய ஒரு முரட்டுச் செயல்பாடு வழியாக என்னை அவர் வென்றுவிட்டார் என்று தோன்றியதும் சினம் எழுந்தது. என் உடலெங்கும் அது படபடத்தது. அவ்வண்ணமென்றால் என் மாற்றுருவை அவர் ஏற்கவில்லை. அந்த அறையிலிருந்து விலகியதுமே அதன் மேல் ஐயம் கொள்கிறார். அல்லது அந்த மாற்றுருவை முழுமையாக நம்பி என்னை ஓர் அறிவிலி என்றே எண்ணுகிறார்.

ஆனால் என்னை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று என்னை நானே ஆணையிட்டுக்கொண்டேன். நான் அதுவரை உருவாக்கிய அனைத்தையும் அந்தப் பொறுமையிழப்பால் இழந்துவிடலாகாது. சற்றுநேரத்திலேயே மேலாடை அணிந்தபடி இளவரசி கிருஷ்ணை வந்தார். “செல்வோம், நானும் உடன் வருகிறேன். நான் அன்னையைப் பார்த்து இரு நாட்களாகின்றன” என்றார். நான் “அரசி, இது தனிப்பட்ட முறையில் நான் அன்னையை சந்திக்கும் நிகழ்வு. அவர்கள் என்னிடம் ஏதேனும் தனிச்செய்தி சொல்ல விரும்பினால் சொல்லலாம் என்றே அவரை பார்க்கச் செல்கிறேன்” என்றேன்.

“அவ்வண்ணம் ஒரு தனிச்செய்தி இன்று அவருக்கு இருக்கும் என்று நான் எண்ணவில்லை. அப்படி இருப்பினும் கூட அதை நான் அறியாது கூற வேண்டியதில்லை” என்று கிருஷ்ணை கூறினார். சினம் மேலெழ நான் ஒருகணம் நடுங்கினேன். பின்னர் “என் அன்னையிடமிருந்து ஒரு வாழ்த்தை நான் பெற்றுக்கொள்ள நீங்கள் உடனிருந்தாக வேண்டுமா?” என்றேன். “ஆம், என் ஆணையில்லாமல் இங்கே எதுவும் நிகழாது” என்றார். என் அத்தனை கட்டுப்பாடுகளும் சிதறின. “இளவரசி, இந்த அரசில் அல்ல எந்த அரசிலும் என் மூத்தவரின் ஆணைக்கப்பால் பிறிதொரு ஆணையை நான் ஏற்றுக்கொள்வதில்லை” என்றேன்.

அவர் சினத்தில் முகம் சுருங்க பற்கள் தெரிய என்னைப் பார்த்து “யாதவபுரிக்குள் எனது ஆணையே செல்லும். என் கோல் இங்கு நிலைகொள்கிறது” என்றார். “இல்லை, அது என்னிடம் செல்லாது, இளவரசி” என்றபடி நான் திரும்பிக்கொண்டேன். “நான் சென்று அன்னையை சந்திக்கப் போகிறேன். நீங்கள் ஒன்று செய்யலாம். உங்கள் படைகளை அனுப்பி என்னை சிறைப்படுத்திவிடலாம். தலை கொய்யலாம். ஆனால் என் விருப்பின்றி ஒரு ஆணையை என் மீது செலுத்தமுடியாது” என்றேன். அவர் நடுங்குவதை கண்டேன். என்னுடைய அந்த முகத்தை அவர் எதிர்பார்க்கவில்லை. அவர் நினைத்தவன் அல்ல நான் என்று அக்கணத்தில் உணர்ந்துகொண்டிருந்தார்.

நான் தலைவணங்கி அறையைவிட்டு வெளியே கிளம்பும்போது அவர் என் பின்னால் வந்தார். “என்னால் உங்கள் தலை கொய்ய முடியாது என்று எண்ணுகிறீர்களா?” என்றார். “முடியும். ஏனெனில் முன்பின் எண்ணாது வெறும் விழைவையும் ஆணவத்தையும் மட்டுமே நம்பிச்சென்ற ஒருவரின் மகள் நீங்கள். என் தலை கொய்யலாம். ஆனால் யாதவநிலத்தில் உங்கள் அசுரகுடியினரைவிட மிகுதியான படைவீரர்கள் இருக்கிறார்கள் என்பதை எண்ணுங்கள். நாங்கள் திரண்டெழுந்து வந்து உங்களை வென்று உங்கள் மைந்தர்களின் தலைகொண்டு போவது நிகழக்கூடாதது அல்ல. என் தலையை உங்கள் மைந்தர்களின் தலையை வைத்து ஆடுங்கள்” என்றேன்.

அவர் உடல் நடுங்க முகமெங்கும் சினம் கொதிக்க நின்றார். கைகளை முறுக்கி பற்களை இறுகக் கடித்து என்னை நோக்கி வந்து “அங்கு நீங்கள் என்ன பேசினாலும் எனக்கு தெரியும். நான் அறியாது எதையும் இந்நகரில் எவரும் உரைக்க இயலாது” என்றார். “அது உங்கள் திறன். அதைப்பற்றி எனக்கு ஒரு பொருட்டும் இல்லை. ஆனால் என் மீது பிறர் ஆணை எழாது என்பதை மீண்டும் சொல்ல விழைகிறேன்” என்றேன். தளர்ந்து அவர் கையை தொங்கவிட்டபோது வளையல்கள் ஒன்றின் மேல் ஒன்று அமைந்து ஓசையெழுந்தது. “நன்று, செல்க!” என்றார். நான் மீண்டும் தலைவணங்கினேன்.

“ஆனால் அரசியென நான் அமர்ந்திருக்கையில் என் முன் நின்று நீங்கள் சொன்ன இச்சொற்களுக்காக தாங்கள் வருந்தவேண்டியிருக்கும். துவாரகை பேரரசென எழும். மணிமுடி சூடி சாம்பன் இதில் அமர்ந்திருப்பார். ஒருநாள் இங்கிருந்து படைகொண்டு சென்று அஸ்தினபுரியை அழிப்பேன். அங்கு வஞ்சத்தில் வென்று அமர்ந்திருக்கும் அவ்வீணர்களை சிதைப்பேன். அவர்களின் கொடிவழியில் ஒருதுளிக் குருதியும் எஞ்சாமலாக்குவேன். அன்று ஒருவேளை விருஷ்ணி குலமும் முற்றழிக்கப்பட்டிருக்குமெனில் அது இப்போது நீங்கள் உரைத்த இச்சொற்களுக்காகவே” என்றார்.

நான் உரக்க நகைத்து “எது அழியும் எது வாழும் என்பதை மானுடரின் ஆணவம் முடிவெடுப்பதில்லை என்பதை தங்கள் தந்தையின் வரலாற்றைக்கொண்டு குருக்ஷேத்ரத்தில் அறிந்தேன். இனி இத்தகைய சொற்கள் எதையும் செவிகொள்வதில்லை என்று சொல்லிக்கொண்டேன்” என்றேன். “என் தந்தை வஞ்சத்தால் தோற்கடிக்கப்பட்டார். அரசனுக்குரிய பேரியல்புகளுள் தந்தைக்குரிய நல்லியல்புகளும் கொண்டவர். அவரை வென்றது அச்சிறப்புகளே” என்றார் கிருஷ்ணை. “நான் அத்தகைய புறவாயில்கள் எதையும் திறந்துபோட்டு அமர்ந்திருக்கவில்லை. எனக்கு அரச முறைமைக்கு அப்பாற்பட்ட நெறியென ஏதுமில்லை. எந்த எல்லைக்கும் சென்று எதையும் இயற்றி வெல்லலாம், வெற்றியே அறமென்றாகும் என்று சொன்னவர் உங்கள் தந்தை. இதோ அதை தலைமேற்கொண்டு அமர்ந்திருக்கிறேன்” என்றார்.

“எந்தை வென்றவர் அல்ல” என்று நான் சொன்னேன். “அவர் சொல் முழுமையானதும் அல்ல.” அவர் ஏளனத்துடன் “இல்லை, என் நோக்கில் அவரே வென்றவர். கலியுகத்தின் இறைவன் அவரே. முழுமையாகவே அவரை ஏற்று ஒழுகவிருப்பவள் நான். ஆகவே இங்கு, இந்த துவாரகையில் என் தந்தை கனவுகண்ட அரசொன்றை நிறுவுவதும் அதன் மேல் அமர்ந்து எந்தை பெயர் சொல்லி ஒரு மைந்தனை ஈன்று அரியணை அமர்த்திச் செல்வதும் மட்டுமே நான் கொண்டிருக்கும் இலக்கு. அது நிகழும். நோக்குக!” என்றார்.

நான் “இது தங்கள் தந்தையின் குரல் அல்ல, இளவரசி. இது அஸ்தினபுரியின் அரசி திரௌபதியின் குரல்” என்றேன். “இதுவல்லவா சத்யவதியின் குரல்? தேவயானியின் குரல், தமயந்தியின் குரல்? காலந்தோறும் இவ்வண்ணம் பெண்டிர் அலையலையென எழுந்து வருகிறீர்கள் போலும். நன்று, இதை வைத்து ஆடுவது ஊழ் எனில் அதுவே முடிவெடுக்கட்டும்” என்று சொல்லி நான் திரும்பிச்சென்றேன். என் பின் உருகும் இரும்புப் பதுமை என அரசி கிருஷ்ணை நின்றுகொண்டிருப்பதை நோக்காமலே நடந்தேன். இரும்பு இரும்பையே ஈனுகின்றது. எரிகொண்டுருகி அனல்கொண்டு நிற்கையிலும் இரும்பு இரும்பின் இயல்புகளையே வெளிப்படுத்துகிறது.

நான் எண்ணிக்கொண்டேன் இரும்பு இங்கு ஆற்றும் பணிதான் என்ன? வெட்டுவது, துளைப்பது, முறுக்குவது, பற்றி இறுக்குவது. இரும்பு உலோகங்களின் அரசன். கொதிநிலையில் இரும்பு பொன்னென்று தன்னை காட்டுகிறது. ஒருவேளை பொன்னென்று அது தன்னை எண்ணிக்கொண்டிருக்கவும் கூடும். ஆயினும் இரும்பு இரும்பேதான். அதன் ஆற்றல்கள் எல்லையற்றவை. ஆனால் அதைக்கொண்டு ஓர் ஆலயச்சிலையை எவரும் வடிப்பதில்லை. அதன் உறுதி இணையற்றது ஆயினும் காலத்தில் துருவேறி மண்ணென்றும் புழுதியென்றும் ஆகி அது மறைந்தே ஆகவேண்டும். உருகி எழுந்து பொன் பொன்னென்று தருக்கும் இரும்பிடம் நீ துரு மட்டுமே என்று சொல்வதற்குரிய நாவுகள் என்றும் சூழ்ந்திருக்கவேண்டுமல்லவா?

அறியேன், இது நான் என்னிடமே சொல்லிக்கொண்டதாக இருக்கலாம். ஏவலனுடன் நடக்கையில் நான் அங்கே நிகழ்ந்த அந்நாடகத்தின் பொருளென்ன என்று எண்ணிக்கொண்டேன். முதலில் ஒருமுகம், பின்னர் இன்னொரு முகம். இரு முகம் காட்டி ஒரே அவையில் நின்றிருக்கிறேன். இரண்டுமே என் முகங்கள் அல்ல. ஒன்று நான் அவர்களுக்காகக் காட்டியது. ஒன்று எனக்கென சமைத்துக்கொண்டது. இத்தருண வெளிப்பாடுகளுக்கு அப்பால் நான் யார்? வெறும் விழைவும் ஆணவமும் என நிறைந்திருக்கும் என் அகத்துக்கும் அப்பால் நான் யார்?

அப்போது ஒன்று தோன்றியது, அங்கு நான் கண்ட கிருஷ்ணையின் மெய்யுருவும் அதுவல்ல என்று. அவர் தன்னை அவ்வண்ணம் சமைத்துக்கொள்கிறார். அதற்கப்பால் ஆழத்தில் பிறிதொருவராக நின்றிருக்கிறாரா? எந்தையே, அவர் உங்களை தெய்வமென்று ஏற்றவர் அல்லவா? அவ்வண்ணம் தெய்வங்களை மானுடர் உதறிவிட முடியுமா? தெய்வங்கள் மேல் கசப்பு கொள்வதும் வஞ்சம் கொள்வதும்கூட இறைவழிபாடே அல்லவா?

முந்தைய கட்டுரைகுக்கூ- ஆளுமைகளுடன் உரையாடல்கள்
அடுத்த கட்டுரைவேரில் திகழ்வது, வேட்டு -கடிதங்கள்