ஓநாயின் மூக்கு [சிறுகதை]

 

திருவனந்தபுரம் மஸ்கட் ஓட்டலில் அந்திக்குமேல் மட்டுமே கூட்டமிருக்கும். நள்ளிரவில் நெரிசல். சினிமா விவாதத்திற்காக நான் அங்கேதான் தங்கியிருந்தேன். காலையில் அந்த இடமே ஓய்ந்துகிடக்கும். எந்த காட்டேஜிலும் ஆளிருப்பதாகத் தெரியாது. உள்ளேயே நீண்ட காலைநடை செல்லலாம். எதிரே எவருமே வரமாட்டார்கள். ஆனால் இரவில் செவிக்குள் மெழுகு இல்லாமல் ஏஸி காட்டேஜில்கூட தூங்கமுடியாது.

“இரவெல்லாம் குடிக்கிறார்களே, இவர்கள் காலையில் வேலைவெட்டிக்கு போகமாட்டார்களா?”என்று கேட்டேன்

விஸ்கிக் கோப்பையை டீபாயில் வைத்த ஔசேப்பச்சன் “இவர்கள் என்ன உன்னைப்போல அரைமலையாள அரைத்தமிழ் எழுத்தாளர்களா? நல்ல நிலையும் விலையும் உள்ள உயரதிகாரிகள் மத்தியான்னம் தூங்கி எழுந்து குளித்து தலைசீவி மாலை ஐந்துமணிக்கு ஆபீஸுக்குச் செல்வார்கள்”

“சென்று?”

“அங்கே ஏற்கனவே அடித்தளத்தில் வாழும் அற்பப்புழுக்கள் வேலைசெய்து வைத்திருப்பவற்றை மேலிடத்திற்கு ஃபார்வேட் செய்து, ஓரிரு ஃபோன்கள் செய்வார்கள். எஸ் சர் ,சிச்சுவேஷன் அண்டர் கண்ட்ரோல் சார், ஐ வில் லூக் ஆஃப்டர் சார், நோ பிராப்ளம் சார், தேங்க்யூ சார், யுவர் கிரேட்னெஸ் சார். ஹஹஹஹ!, ஓக்கே சார் என்று சொல்லிமுடித்தால் அன்றைய வேலை முடிந்தது. நேராக  இங்கே வந்துவிடுவார்கள்” என்றான் ஔசேப்பச்சன்

“இங்கே விடியவிடிய குடி” என்றேன்

“மச்சானே, இங்கே இவர்கள் செய்வதுதான் உண்மையான வேலை. துறைத்தலைவர்கள் சந்தித்துக்கொண்டு செய்திகளை பரிமாறிக்கொள்கிறார்கள். துறைத்தலைவர்களை குட்டி அரசியல்வாதிகள் சந்திக்கிறார்கள். குட்டி அரசியல்வாதிகளை தொழிலதிபர்கள் சந்திக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் உயர்மட்ட தாசிகள் சந்திக்கிறார்கள். எங்கும் தரகர்கள் நிறைந்திருக்கிறார்கள்…. ஏன் மாஸ்டர், வரலாறு வேறெப்படியாவது நடைபெற்றிருக்கிறதா?”

“அதெப்படி முடியும்?” என்றார் குமாரன் மாஸ்டர் “அன்றைக்கு அரசர், இன்றைக்கு அரசர்கள். ஆகவே அதிகாரப் பரவலாக்கம் நிகழ்ந்துள்ளது. அன்றைக்கு புரோக்கர் ,தாசி தொழில்கள் சிலருக்கு மட்டும். இன்றைக்கு திறமை இருந்தால் யாரும் அதையெல்லாம் செய்யலாம், காரணம் ஜனநாயகம்”

“இதே மஸ்கட் ஓட்டலில் நான் ஒரு கேஸை முன்பு சந்தித்தேன்” என்று ஔசேப்பச்சன் சொன்னான். “அப்போது டெபுடேஷனில் இங்கே வந்திருந்தேன். கடலோரப்பாதுகாப்பில் நான் எக்ஸ்பர்ட் என்று நம்பப்பட்டது. ஏனென்றால் என் குரு அஃபோன்ஸோ ரொசாரியோ உண்மையிலேயே எக்ஸ்பர்ட். அவர் கிடைக்கவில்லை, ஆகவே என்னை அழைத்தார்கள். எனக்கு இங்கே திருவனந்தபுரம் பெண்கள் அழகானவர்கள் என்று ஒரு மூடநம்பிக்கை”

“அழகானவர்கள்தானே?”

“ஒரு நம்பூதிரி ஜோக் சொல்கிறேன் மச்சானே. ஒரு நம்பூதிரி, காளிதாச கவிதையில் ஊறி ஊறி உப்பிப்போன ஆசாமி. இங்கே வந்து ஒரு திருவனந்தபுரம் நாயர் பெண்ணைக் கண்டார். பேரழகி. பாய்ந்து சரண்டர் ஆகிவிட்டார்”

“நம்பூதிரிகள் ரசிகர்கள்” என்றான் முரளி

“கதையைக்கேள். முதலிரவு முடிந்த முதல் காலை. நம்பூதிரி ஒரு ரோஜாப்பூவை எடுத்து பெண்ணின் இதழ்களில் மெல்ல ஒரு தட்டு தட்டி பரமரொமாண்டிக்காக கேட்டார். என் தேவதையே, சூரியனின் பொன்னொளிர் கரங்கள் மலர்களை தொட்டு துயிலெழுப்ப அவற்றிலிருக்கும் பனிமுத்துக்கள் சுடர்விடும் இந்த புலர்காலையில் உனக்கு என்ன தோன்றுகிறது என்று. அவள் என்ன சொன்னாள் தெரியுமா?”

“என்ன?”

“எனக்கு ஆய் வருகிறது என்று” என்று சொல்லி ஔசேப்பச்சன் வெடித்துச் சிரிக்க பக்கத்து இருக்கை பெரிய மனிதர் திரும்பிப்பார்த்தார்

“நாட் எ குட் ஜோக்” என்றேன்

“அது ரொமாண்டிஸிசத்துக்கும் ரியலிசத்திற்குமான போராட்டம்… சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளையும் தகழிசிவசங்கரப்பிள்ளையும் சண்டைபோடுவதுபோல” என்றார் குமாரன் மாஸ்டர்

“பிள்ளை விளையாட்டு நாசமாகப் போக” என்றான் ஔசேப்பச்சன். “நான் சொன்ன சம்பவம் இந்த இடத்தில்தான் நடந்தது… ஏறத்தாழ இதே மேஜையில்”

அவன் சொல்ல விரும்ப நாங்கள் அந்த கூட்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்க விரும்பினோம். அடிக்கடி டிவியில் வரும் முகங்கள் மின்னி மின்னி மறைந்தன. அவை மூளையை அதிரச்செய்தன. ஔசேப்பச்சன் “இதைக்கேளுங்கள்… ஒரு கூட்டக் கொலையின் கதை. குறிப்பாக ஒவ்வொரு நாயரும் கேட்டே ஆகவேண்டிய கதை” என்றான்.

நான் ஆர்வத்துடன் “பெண் சமாச்சாரமா?”  என்றேன்

“கிட்டத்தட்ட” என்றான் ஔசேப்பச்சன்

“சொல்” என்றேன்

“ஒரு இருபதுநாட்களுக்கு முன்பு இங்கே ஒரு சிவில் வழக்கு கொலைவழக்காக ஆக்கப்பட்டதே ஞாபகம் இருக்கிறதா?”

“கரமனை கூடத்தில் குடும்பத்தில் ஏழுபேர் கொல்லப்பட்டது, காரியக்காரர் ரவீந்திரன் நாயர் மீது சந்தேகம், அதுதானே?”

“ஆமாம்” என்றான் ஔசேப்பச்சன்

குமாரன் மாஸ்டர் ஆர்வம் கொண்டு திரும்பி அமர்ந்து கேட்க ஆரம்பித்தார். மம்மூட்டி போல தெரிந்த ஒருவர் அப்பால் செல்வதை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டார்.

“கூடத்தில்வீட்டுக் கோபிநாதன் நாயர், அவர் மனைவி சுமுகி அம்மாள், மகள் ஜெயஸ்ரீ, மகன்கள் பாலகிருஷ்ணன், ஜெயப்பிரகாஷ், மருமகன் உண்ணிக்கிருஷ்ணன் நாயர் ஆகியோர் இருபது ஆண்டுகளில் ஒவ்வொருவராக சந்தேகத்திற்கு இடமான வகையில் இறந்தார்கள். கடைசியாக மருமகன் ஜெயமாதவன் நாயர் இறந்தார்” என்றான் ஔசேப்பச்சன்.

“ஆமாம், ஒருமாதம் டிவியில் போட்டு அலசினார்கள்” என்றேன்.

“திருவனந்தபுரம் காமனையில் உள்ள உமா மந்திரம்  என்னும் மிகப்பழைய பங்களாவில் கடைசியில் ஜயமாதவன் நாயர் மட்டும் தனியாக தங்கியிருந்தார். ஒருநாள் காலையில் இவர்களின் சொத்துக்களை பார்த்துக்கொள்ளும் ரவீந்திரன் நாயர் வந்து பார்த்தபோது ஜயமாதவன் நாயர் நெற்றியில் ஆழமான காயத்துடன் தரையில் கிடந்தார். வலிப்பு வந்து கட்டிலில் இருந்து விழுந்திருக்கலாம் என்று நினைத்த ரவீந்திரன் நாயர் வேலைக்காரி லீலாவின் உதவியுடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றார். ஆனால் மிகத்தொலைவிலுள்ள ஓர் ஆஸ்பத்திரிக்கு. அவர்களுக்கு தெரிந்தவர்களின் ஆஸ்பத்திரி அது. செல்லும்வழியிலேயே ஜயமாதவன் நாயர் இறந்தார்”

“ஆமாம் ஆனால் எந்த முறையான விசாரணையும் நடைபெறவில்லை. ஒரு போஸ்ட்மார்ட்டம் மட்டும் செய்யப்பட்டது” என்றான் ஸ்ரீதரன்

“ஜயமாதவன் நாயர் இறந்ததும் கூடத்தில் குடும்பத்தின் மொத்தச் சொத்தும் ரவீந்திரன் நாயர் பெயருக்கு வந்தது. வேலைக்காரி லீலாவின் மகன், முன்பு அங்கிருந்த ஒரு காரியக்காரரின் மகன்கள் ஆகியோர் சேர்ந்த ஒரு குழு மொத்த சொத்துக்களையும் பங்கிட்டுக்கொண்டிருந்தது. எல்லாமே சட்டபூர்வமாக.   ஏற்கனவே ஜயமாதவன் நாயர் தன்னை பார்த்துக்கொண்டதற்கு நன்றியாக சொத்துக்களை ரவீந்திரன் நாயர் பெயருக்கு உயில் எழுதி வைத்திருந்தார்.”

“ஆமாம் தெளிவாகவே சந்தேகத்திற்குரிய வழக்கு” என்றான் ஸ்ரீதரன்

“இருபது ஆண்டுகளாகவே கூடத்தில் குடும்பத்தின் சொத்துக்கள் ரவீந்திரன் நாயரின் ஏற்பாட்டில் மிகமிக குறைந்த விலையில் விற்கப்பட்டுவந்தன. உயில் விவகாரம் வெளியானதும் கோபிநாதன் நாயரின் தங்கை அதில் சந்தேகம் இருப்பதாக போலீஸில் புகார் செய்தார். அதை விசாரித்த அதிகாரி அதில் சந்தேகத்திற்கு ஏதுமில்லை, எல்லாம் சட்டபூர்வமாகவே உள்ளது என்று சான்றிதழ் அளித்தார். ஆனால் பிறகு தெரியவந்தது, அந்தப் போலீஸ் அதிகாரி இரண்டு ஆண்டுகள் கழித்து ஓய்வுபெற்றபின்  ஜயமாதவன் நாயர் ரவீந்திரன் நாயருக்கு கொடுத்த நிலங்களில் ஒன்றை தன் மனைவியின் பெயருக்கு அடிவிலைக்கு வாங்கி அங்கே ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டினார் என்பது. உழைத்துச் சம்பாதித்த காசில் சட்டபூர்வமாகத்தான் அதை வாங்கினேன் என்று அவர் பத்திரிக்கைகளில் பேட்டி அளித்தார்.”

“ஆமாம், நினைவிருக்கிறது” என்றேன்

“ஜயகிருஷ்ணன் நாயர் செத்து மூன்று ஆண்டுகள் கழித்து கூடத்தாயி ஜோளி சயனைட் வைத்து சொந்தக் குடும்பத்தையே கொன்றபோது திடீரென்று பத்திரிகைகள் இந்த வழக்கை கண்டுபிடித்தன. பரபரப்புச் செய்தியாக்கின”.

“ஆமாம் சொத்துமதிப்பு கிட்டத்தட்ட ஐம்பதுகோடிக்குமேல் இருக்கும் என்றார்கள்”

“சரி, இந்த வழக்கு இப்போது எந்த நிலையில் இருக்கிறது? தெரியுமா?”

“விசாரணை நிலையில்… வேறென்ன?” என்றார் குமாரன் மாஸ்டர்

“எக்ஸாட்லி… விசாரணை நிலையில். ஆனால் விசாரணை பல ஆண்டுகள் இழுக்கும். அதன்பிறகு எவருக்கும் நினைவிருக்காது. அப்படியே போகும். எந்த நிலையிலும் ரவீந்திரன் நாயர் தண்டிக்கப்படமாட்டார். ஆனால் முக்கால்வாசிச் சொத்துக்கள் அவரிடமிருந்து கைமாறப்படும், அவ்வளவுதான் வேறுபாடு”.

நான் “ஆமாம், அதைத்தானே பார்க்கிறோமே” என்றேன்

“நான் சொல்லவந்தது இதேபோன்ற ஒரு வழக்கு. அன்றைக்கு இங்கே டெபுடேஷனுக்கு வந்திருந்தேன். இதேமாதிரி அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தேன். அன்றைக்கு என் மச்சான் சினிமா எடுக்கவில்லை. எனக்கு பால் ஸகரியா அறிமுகம் ஆகவில்லை. ஆகவே என் ரசனைக்குரிய தோழர்கள் இல்லை. நான் எப்போதுமே தனியாக இருந்தேன். ஆனால் அன்றைக்கு நான் இடுப்புக்குக் கீழே மிகவும் செயலூக்கத்துடன் இருந்தேன். ஆகவே பெரிய அளவில் நட்புகள் தேவைப்படவில்லை”

“ஆமாம், அதிலெல்லாம் பங்குவைக்கவே கூடாது” என்றான் ஸ்ரீதரன்

“நான் என்ன சொன்னேன்?” என்ற ஔசேப்பச்சன் மதுவுக்காக கையசைத்தான். கையசைவே போதும், வெயிட்டர் ராமச்சந்திரன் புரிந்துகொள்வான்

“இதேபோன்று அமர்ந்து குடித்தாய்…”

“அதேதான். அப்படிக் குடித்துக்கொண்டிருந்தபோது என்னை நோக்கி ஒருவன் வந்தான். அவனும் குடித்திருந்தான். ஆனால் மிதமிஞ்சிய போதை இல்லை” என்றான் ஔசேப்பச்சன். “ஆனால் அவன் குடிப்பதில்லை என்று பிறகு தெரிந்தது”

“மே ஐ சிட்?” என்று கேட்டான்

நான் “நோ” என்றேன் கறாராக

“தேங்யூ” என்று அவன் அமர்ந்தான்.

இந்த இரப்பாளி என்னிடம் அடிவாங்கிக்கொண்டுதான் போவான் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் அவன் பணக்காரப் பொறுக்கிபோலவும் தென்படவில்லை. அவனுக்கு ஏதோ நரம்புநோய் இருக்கலாம் என்று தோன்றியது. கைகள் உதடுகள் எல்லாம் நடுங்கிக்கொண்டிருந்தன. கண்கள் அலைமோதின. ஆகவே அவனை நான் துரத்திவிடவில்லை

அவன் என்னிடம் சட்டென்று கைகூப்பி கண்கலங்கி “சார், நீங்கள்தான் என்னை காப்பாற்றவேண்டும்” என்றான் “நீங்கள் போலீஸ்காரர் என்று அங்கே ஒருவன் சொன்னான். நான் என் டாக்டருடன் இந்த கிளப்புக்கு வந்தேன்…”

“என்ன?” என்றேன். அவன் ஏதோ சொத்துப்பிரச்சினையை முறையிடப்போகிறான் என்று தோன்றியது. அதை எவரிடமாவது தள்ளிவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்

“என் பெயர் ராஜகேசவன் சார்” என்றான்

“சரி”

“என்னைக் கொன்றுவிடுவார்கள் சார்”

“யார்?” என்றேன். சரிதான், நரம்புநோயாளியேதான் என்று நினைத்துக்கொண்டேன். மிக மெலிந்த உடல். ஒட்டிய கன்னங்கள். அலைபாயும் கண்கள்.“என் குடும்பத்திலுள்ள சொத்துக்களுக்காக ஒவ்வொருவரையாக கொலைசெய்கிறார்கள்… என்னையும் கொலைசெய்துவிடுவார்கள்” என்று அவன் சொன்னான். “நாங்கள் துறையிங்கல் குடும்பம்… பழையகால மாடம்பிகள் நாங்கள். எங்கள் சொத்துக்களெல்லாம் மார்த்தாண்டவர்மா காலம் முதல் இருப்பவை. புகழ்பெற்ற குடும்பம் சார்”

“உங்கள் குடும்பத்தில் யார் கொல்லப்பட்டார்கள்?”

“நிறையபேர், 1979 ல் என் அப்பா துறையிங்கல் ராஜமார்த்தாண்டன் நாயர். அதன்பிறகு இதுவரை ஒன்பது பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இனி நான் மட்டும்தான் மிச்சம்… நானும் இறந்தால் என் சொத்துக்கள் எல்லாமே அவர்களிடம் போய்விடும்”

“கடைசியாக இறந்தது யார்?”

“என் அண்ணன் ராஜமாதவன்நாயர்…”

“எப்படி இறந்தார்?

“அவர் மாடியிலிருந்து குதித்தார்… மூன்றாம் மாடியிலிருந்து. மண்டை உடைந்து அங்கேயே இறந்தார்

“யாராவது தள்ளிவிட்டார்களா?”

“இல்லை அவரே மேலே ஏறினார். மூன்றாவது மாடியின் ஜன்னல் துருத்தின்மேல் ஏறி நின்றார். இறங்குங்கள் அண்ணா என்று நான் கூச்சலிட்டேன். ஆனால் அவர் குதித்தார். என் கண்முன்னாலேயே”

நான் “அதாவது அது தற்கொலை, இல்லையா?”

“ஆமாம், ஆனால் அவர் தானாகவே தற்கொலை செய்துகொள்ளவில்லை. தற்கொலை எண்ணம் அவர் மனதுக்குள் விதைக்கப்பட்டது”

“யாரால்?”

“அவர் மேல் ஒரு யக்ஷி ஏவப்பட்டது” என்று அவன் சொன்னான். குரலை தாழ்த்தி “கொடூரமான யக்ஷி… அவள் எங்கள் குடும்பத்தில் ஒவ்வொருவரையாக கொலைசெய்கிறாள்”

“அதற்கு முன் யார் இறந்தது?” என்றேன்

“என் மூத்த அண்ணா ராஜதிவாகரன் நாயர். அவருக்கு மாரடைப்பு வந்தது. ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோவதற்கு முன்பு இறந்தார். யக்ஷி அவர் நெஞ்சின்மேல் ஏறி அமர்ந்து அழுத்தியிருக்கிறாள்”

சரிதான் என்று நினைத்துக்கொண்டேன்.“ஒரு பெக்?” என்றேன்

“வேண்டாம்” என்றான்

“சரி நான் விசாரிக்கிறேன்” என்று சொல்லி அனுப்பிவிட்டேன்.ஒரு நட் கேஸ் என்று தோன்றியது. அப்படிப்பட்டவர்களை மாதம் ஒருமுறையாவது சந்திக்கநேரும். அதை அப்படியே மறந்துவிட்டேன்

நான் டெபுடேஷனில் வந்த வேலை பைசா பெறாதது. கடலோரம் முழுக்க காவல்நிலையங்களை அமைத்து தகவல்களை ஒழுங்குசெய்வது. ஆகவே பெரும்பாலும் மத்தியான்னமே இங்கே வந்து குடிக்க ஆரம்பிப்பது வழக்கமாகியது. இதை நிறுத்தவேண்டும் என்றால் ஏதாவது வழக்கில் மண்டையை நுழைத்தாகவேண்டும் என்று நினைத்தேன்

அதற்கேற்ப நெய்யாற்றின்கரை அருகே இன்ஸ்பெக்‌ஷனுக்கு போயிருந்தபோது பொழியூர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து எனக்கு ஒரு ரிசார்ட் ஏற்பாடு செய்திருந்தார்கள். பொழியூர் அற்புதமான இடம். நெய்யாறு கடலில் கலக்கும் அழிமுகம் அது..

“பொழி என்றாலே அழிமுகம்தான் ”என்றார் குமாரன் மாஸ்டர்

“ஆமாம்… பூவாறு முதல் பொழியூர் வரையில் உள்ள கடலோரம் இந்தியாவிலேயே அழகான இடங்களில் ஒன்று. ஒருபக்கம் கடல் இணையாகவே காயல். நடுவே மணல்மேட்டில் ரிசார்ட் அமைக்கப்பட்டிருந்தது. தூய்மையான சந்தடியற்ற கடற்கரை .நான் அங்கே ஸ்ரீசக்ரா என்ற விடுதியில் தங்கியிருந்தேன். கடலையும் காயலையும் இரு பால்கனிகளில் அமர்ந்தால் பார்க்கமுடியும். நெடுந்தொலைவுவரை பார்க்கும் வசதியுள்ள பால்கனிகளில் அமர்ந்திருக்கையில் நான் மிகவும் ஓய்வாக உணர்வேன். அரைத்தூக்க நிலையிலேயே இருந்தேன்” ஔசேப்பச்சன் சொன்னான்

பொழியூர் எஸ்.ஐ கோவிந்தன் நல்ல இளைஞன். என்னை மகிழ்விப்பதில் ஆர்வத்துடன் இருந்தான். “இந்த ஓட்டலைவிட நல்ல ஓட்டல் ஒன்று இருக்கிறது சார். ஆனால் வேலைமுடியவில்லை. அடுத்த தடவை வரும்போது அங்கே தங்கலாம். அது பழைய அரண்மனை. அதை இப்போது சசி பிள்ளை வாங்கியிருக்கிறார். அமெரிக்கக்காரர் சசி பிள்ளை பழைய அரண்மனைகளை வாங்கி ரிசார்ட் ஆக மாற்றிக்கொண்டிருக்கிறார்” என்றான்

“அரண்மனையா இங்கேயா?”என்றேன்

“ஆமாம் சார், இங்கே துறையிங்கல் குடும்பம் என்ற நாயர் மாடம்பிகள் இருந்தார்கள். அவர்களின் அரண்மனை. அவர்களின் வீடு அங்கே வயலோரமாக இருக்கிறது. இது மகாராஜா வந்தால் தங்குவதற்காக அவர்கள் கட்டியது. நூற்றி நாற்பது ஆண்டு பழமையான மாளிகை” என்றான் எஸ்.ஐ.

அப்போதும் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. எஸ்.ஐ.கோவிந்தன் சொன்னான். “துறையிங்கல் என்றால் மிகப்பெரிய குடும்பம்.. இருபது முப்பதுகோடி ரூபாயாவது சொத்துமதிப்பு இருக்கும். எல்லாருமே இறந்துவிட்டார்கள். மொத்த சொத்தும் காரியஸ்தன் சந்திரன் பிள்ளைக்கு வந்துவிட்டது. இந்த அரண்மனையை சந்திரன்பிள்ளை எட்டுகோடி ரூபாய்க்கு விற்றதாகச் சொன்னார்கள்”

“என்ன குடும்பம்?” என்றேன். எங்கோ ஒரு மணி அடித்தது.

“துறையிங்கல்”

“அதன் கடைசிவாரிசு பெயர் என்ன?”

“ராஜகேசவன் நாயர்… அவர்களின் பெயர்கள் எல்லாமே அப்படித்தான் ராஜ சேர்ந்திருக்கும்”

நான் எழுந்துவிட்டேன். “அவன் எப்போது இறந்தான்?”

“எட்டு மாதம் இருக்கும் சார்”

“சரியாக தேதி சொல்ல முடியுமா?”

“இதோ சார். ஸ்டேஷனுக்கு ஒரு ஃபோன் செய்து கேட்டுச் செல்கிறேன்”

அவன் ஃபோன் செய்து கேட்டுச் சொன்னான். என்னைச் சந்தித்ததற்கு இரண்டுநாட்கள் கழித்து ராஜகேசவன் ரயில் முன் பாய்ந்திருக்கிறான். திருவனந்தபுரம் தம்பானூர் ரயில்நிலையம் அருகே ஒரு நரம்பு நோய் நிபுணரை பார்க்கச் சென்று அங்கேயே தங்கியிருக்கிறான். அன்றுகாலை அங்கிருந்து வெளியேறி  தம்பானூர் சென்று மேம்பாலத்திலிருந்து கீழே தண்டவாளத்தில் சட்டென்று பாய்ந்துவிட்டான். அவ்வளவுதான்.

எனக்கு ஒரு மெல்லிய படபடப்பு வந்தது. ஒரு தப்பான செய்தி வரப்போகிறது என்று ஆழ்மனசுக்கு தெரிந்ததும் ஒருமாதிரி கெத்துக்கெத்தென்று இருக்குமே, அது. இது ஏன் வருகிறது என நான் யோசிப்பதுண்டு. இது வரும்போதெல்லாம் நான் ஏதோ பெரியவிஷயங்களின்மேல் சென்று முட்டிக்கொள்கிறேன்.

உடனே எஸ்.ஐயிடம் அந்த குடும்பத்தில் நடந்தவை அனைத்தையும் பற்றிய செய்திகளை ஒட்டுமொத்தமாக தொகுத்து தரச்சொன்னேன். திருவனந்தபுரத்தில் எம்.ஆர்.பாபுவை கூப்பிட்டு உள்ளூர் மாத்ருபூமி நிருபர் யார் என்று கேட்டேன். அவர்கள்தானே நாயர் ஸ்பெஷலிஸ்டுகள்? வய்நிறைய வெற்றிலை குதப்பிக்கொண்டே இருக்கும் ஸ்ரீகுமாரன் நாயர் என்பவன் நிருபர். அவனை வரவழைத்து அவன் அறிந்த எல்லா செய்திகளையும் திரட்டி அளிக்கும்படி கேட்டு ஒரு தொகையும் கொடுத்தேன். நீதிமன்றச் செய்திகளை திரட்டித்தர நெய்யாற்றின்கரையில் பிராக்டீஸ் செய்யும் சாமுவேல்ராஜ் என்ற வக்கீலையும் ஏற்பாடுசெய்தேன்

செய்திகள் வந்ததும் ஒட்டுமொத்தமாக ஒரு சித்திரத்தை உருவாக்கிக்கொண்டேன். இந்த கரமனை கூடத்தில் குடும்ப வழக்கில் என்ன நடந்திருக்கிறதோ ஏறத்தாழ அதேதான். இதற்கு ஒரு  ‘ஆல்கேரளா மாடல்’ இருக்கிறது. ஔசேப்பச்சன் சொன்னான்.

“எப்படி?” என்று நான் கேட்டேன்

இதேபோல கேரளம் முழுக்க ஒரு இருநூறு முந்நூறு குடும்பங்களாவது உண்டு… ஏறத்தாழ இதே கதை எல்லா இடங்களிலும் நடந்திருக்கிறது. இதற்கு கேரளத்தில் ஒரு சொல்லாட்சியே உண்டு ‘குடும்பம் அன்னியம் நிந்நு போவது’  இது கேரள வரலாற்றில் இருந்து உருவாகி வந்த ஒரு விஷயம்… அந்தப்பின்னணி இல்லாமல் புரிந்துகொள்ள முடியாது என்றான் ஔசேப்பச்சன்.

சுருக்கமாக இந்தச் சித்திரத்தைச் சொல்கிறேன். பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுவாக்கில் ஒரு நாயர் குடும்பம் தலையெடுத்து அரசசெல்வாக்கு, அதிகாரம், சொத்து என நிலைகொள்கிறது. மூன்றும் இதே வரிசையில்தான் என்று வைத்துக்கொள். அனைத்துக்கும் ஆதாரம் அரசருடனான தொடர்புதான்.

அரசசெல்வாக்கு மூன்று வகைகளில்தான். ஒன்று அரசருக்கு விசுவாசமான ஒருவராக ஆவது. போர்களில் வெல்வது, அதிகாரக் கலகத்தை ஒடுக்குவது, உள்ளூரில் வரிவசூல்செய்யும் திறமைகொண்டிருப்பது. இவர்கள் வழியாகத்தான் அரசர் ஆட்சி செய்யமுடியும். அரசர் என்ற ஆயிரங்காலட்டையின் கால்கள் இவர்கள். இவர்கள் பெரும்பாலும் நாயர்கள். ஆனால் வேளாளர்களிலும் நாடார்களிலும் இவர்களைப்போன்ற நிலப்பிரபுக்கள் நிறையபேர் இருந்தார்கள். மீனவர்களிலும் சிலர் உண்டு.

இன்னொரு வழி என்பது அரசருக்கோ அரசகுடிக்கோ பெண் கொடுப்பது. அந்தக்காலத்தில் திருவிதாங்கூர் அரசர் திருமணம் செய்துகொள்வதில்லை  ஆகவே அவருக்கு அரசி என எவருமில்லை. அவருடைய சகோதரிகளே அரசியராக கருதப்படுவார்கள். அரசருக்கு பெண்தொடர்புகள் மட்டுமே உண்டு என்று சொல்லலாம். அவ்வாறு அரசருக்கு தொடர்புள்ள பெண்களின் வீடுகளை அம்மவீடு என்பார்கள். அந்தப்பெண்களுக்கு தங்கச்சி பட்டம் உண்டு. அவர்களின் பிள்ளைகள் தம்பிகள் என்ற பட்டம் பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு நிலமும் பதவிகளும் அளிக்கப்பட்டிருக்கும்.

”ஆமாம், எங்களூரில் ஓர் அம்மவீடு உண்டு. அரசர் அந்தவழியாகச் செல்கையில் இறங்கி ஒன்றுக்கு போய்விட்டு போனார். இவர்கள் அம்மவீடு என்று சொல்லி நிறுவிவிட்டார்கள்” என்றான் ஸ்ரீதரன்

மூன்றாம்வகையினர் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவானவர்கள். போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோருடன் தொடர்புகொண்டு அவர்களுக்கும் அரசருக்கும் ஊடகமாக திகழ்பவர்கள். தாங்களே வியாபாரம் செய்து பொருள்சேர்த்துக்கொள்பவர்கள். அவர்களில் சிலர் அரசருக்கே வட்டிக்குக் கடன்கொடுப்பவர்களாக இருந்தனர். இதில் முஸ்லீம்கள், சிரியன் கிறிஸ்தவர்கள் பலர் உண்டு.

இந்தக்குடும்பங்களில் வரலாறுகள் மூன்றுவகை. பட்டியல்போடுகிறேன் என்று நினைக்காதே, என் சிந்தனையே அப்படித்தான். என்ன சொன்னேன், மூன்றுவகை. முதல்வகையினர் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்ததும்  காற்று மாறிவீசுவதை உணர்ந்து பாயை திருப்பியவர்கள். அவர்கள் அப்படியே தொழில் வணிகம் என திசைதிரும்பி வெற்றிபெற்றனர். சிலர் அரசியலிலும் கொடிநாட்டினர். பெரும்பாலான முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் இந்த வகையில் அடங்குவார்கள், ஏனென்றால் அவர்களுக்கு ஏற்கனவே வியாபாரம் சார்ந்த பயிற்சி இருந்தது

இன்னொருவகையினர் நிலங்களை பாதுகாத்துக்கொண்டு அவற்றை நகர்ப்புறச் சொத்தாக மாற்றி தப்பித்தவர்கள். அவர்களை அடைக்கோழிகள் என்று அன்புடன் சொல்வதுண்டு. அவர்கள் இன்றும் பழைய பெருமைபேசி திருவனந்தபுரத்தில் வாழ்கிறார்கள். இதேபோன்ற எல்லா கிளப்புகளிலும் உறுப்பினர்களாக இருப்பார்கள். ஆண்கள் சரியான தண்ணிவண்டிகள். பெண்களுக்கு பின்பக்கம் பிரம்மாண்டமாக  இருக்கும். எழுபது வயதிலும் பிராபோடுவார்கள். ரூஜ், கண்மை, லிப்ஸ்டிக் எல்லாம் உண்டு. இமைகளை நிறைய படபடத்துக்கொள்வார்கள். மிஸிஸ் பிள்ளை, மிஸிஸ் நாயர் , மிஸிஸ் தம்பி, மிஸிஸ் உண்ணித்தான் என்றெல்லாம்தான் பெயர்கள் இருக்கும். மண்டைக்குள் பொதுவாக அறிவு இருப்பதில்லை. தங்கள் சொந்த வீட்டையே அரண்மனை என்றுதான் சொல்வார்கள். “ஓ, காலையில் அரண்மனையிலிருந்து கிளம்பும்போதே லேட்” இந்தமாதிரி

மூன்றாம் தரப்பினர்தான் பாவம். அவர்களுக்கு தங்கள் அஸ்திவாரம் பெயர்வதே தெரியவில்லை. தெரிந்தாலும் ஒன்றும் செய்யும் நிலையில் இருக்கவில்லை. கொஞ்சம்கொஞ்சமாக அவர்களின் உலகம் சிதைந்து மறைந்தது. அவர்கள் கரைந்துகொண்டிருக்கும் மணல்தீவில் அமர்ந்திருப்பார்கள். வரலாற்றின் குப்பைக்கூடையில் கிடப்பவர்கள். லாரி ஏறிப்போன தவளைபோல. இவர்கள் மேல் ஏறிச்சென்றது வரலாறு

இந்தவகை ஆட்கள் பெரும்பாலும் நாயர்கள். பெரும்பாலும் நகரிலிருந்து தள்ளியிருக்கும் ஊர்களைச் சார்ந்தவர்கள். நிலைமையை புரிந்துகொள்ள அவர்களுக்கு தடையாக இருந்தது அவர்கள் நகரங்களுடன் தொடர்பில் இல்லை என்பது. ஆகவே . நாடே மாறிவிட்டபிறகும்கூட இவர்கள் தங்கள் சொந்த ஊரில் அரசனைப்போல பாவனைசெய்துகொண்டு வாழ முடிந்தது . மொத்தமாகவே எல்லாம் போனபிறகும் சாதிக்கெத்து பேசி, திருமணங்களையும் ஊர்த்திருவிழாக்களையும் நடத்த சொத்துக்களை விற்று, சிவில் கிரிமினல் வழக்குகளில் நீதிமன்றங்கள் தோறும் அலைந்து சீரழிந்தார்கள்

இந்தக் குடும்பங்களின் வீழ்ச்சியின் கதைகள் நிறைய உள்ளன. எம்.டி.வாசுதேவன் நாயரின் ஃபேவரைட் ஏரியா. நாலுகெட்டு, அசுரவித்து போன்ற நாவல்களை நினைத்துக்கொள். இதில் நிலைமையே புரியாமல் பழங்காலத்தில் வாழும் கிழவர்கள், நின்றிருக்கும் தரை கொதிக்க ஆரம்பிக்கும்போது தவிக்கும் இளைஞர்கள், வெளிக்காற்றுப் படாமல் வாழும் மனைவிகள், தொடைநடுவே  கற்பு பற்றி எரியும் கன்னிகள் என்று பலவகையான முரண்பாடுகள். இளைஞர்களில் சிலர் ஊரைவிட்டு ஓடிவிடுகிறார்கள். எங்காவது சென்று வேலைசெய்து வாழ்கிறார்கள். சிலர் மூழ்கும் கப்பலில் எலிகளாக அதிலேயே சுற்றிச்சுற்றி வருகிறார்கள்.

இந்தக் குடும்பங்களில் சிலவற்றில் ஒரு விபரீதச் சூழல் காணப்படுகிறது. அவர்களை மானசீகமான ஓர் இருட்டு மூடிவிடுகிறது. அந்த மாபெரும் வீடே தூசடைந்து இருண்டு கிடக்கும். வீட்டின் ஒருபகுதி இடிபாடுகளாகவே கிடக்கும். பழைய பல்லக்குகள், உடைந்த சாரட் வண்டிகள் என என்னென்னவோ வீடெங்கும் குவிந்திருக்கும். கரப்பான்பூச்சிகளைப்போல உள்ளே வாழ்வார்கள். ஒரு வீட்டிலுள்ள அத்தனைபேருமே மனநோயாளிகளாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

“அது சாதாரணமானதுதான். மனநோய் பாரம்பரியமானது. அதோடு தொற்றக்கூடியதும்கூட ”என்றார் குமாரன் மாஸ்டர்

“தொற்றுவதா?” என்றேன்

“ஆமாம். ஒரு மனநோயாளி வீட்டில் இருந்தால், அவருடனேயே மற்றவர்கள் நெருக்கமாக பிணைக்கப்பட்டிருந்தால் அவர்களிடமும் மனநோய்க்கூறுகள் வெளிப்பட ஆரம்பிக்கும்”.

“சரி, அப்படியே கொள்வோம். ஆனால் மந்தபுத்தித்தனம் எப்படி? அதுவும் தொற்றுமா? பலகுடும்பங்களில் மொத்தபேருமே மந்தமானவர்களாக இருக்கிறார்கள்” என்றான் ஔசேப்பச்சன்

“தொற்றும்” என்றார் குமாரன் மாஸ்டர் “டேய் நஸ்ரானி, நீ எப்படி மீன் மாதிரி விழித்திருக்கும்போதெல்லாம் குடித்துக்கொண்டே இருக்கிறாய்? உன் அப்பா தடத்தில் கொச்சுவற்கீஸ் குடித்துக்கொண்டே இருந்தார். உங்கள் வீட்டில் பைப் தண்ணீரிலேயே சாராயமணம் வீசுகிறது. முழு எருமையையே துண்டு துண்டாக ஃப்ரிட்ஜில் வைத்திருக்கிறீர்கள் .. ஒரு சமூகம் என்பது என்ன? அது ஒரு நெரேஷன். ஒரு கதை. இந்தக்கேரளச் சமூகம் என்பது ஒரு பெரிய கதை”

“ஆமாம், கற்பனையே இல்லாத ஈ.எம்.எஸ். எழுதியது” என்றான் ஸ்ரீதரன். ”கட்டுரை எழுதுவதுபோல ஆயிரக்கணக்கான அடிக்குறிப்புகளை வேறு போட்டு வைத்திருக்கிறார் திருமேனி”

“அவர் அந்தக்காலத்தில் ஆரியா அந்தர்ஜனத்திற்கு எழுதிய காதல் கடிதங்களிலேயெ இருபது முப்பது அடிக்குறிப்புகள் இருக்குமாம்” என்றான் எலி

“உண்மையா?”என்று பீதியுடன் கேட்டேன்

”பின்னே? அடிப்படையில் கேரள கம்யூனிசம் என்பது என்ன?  ஈ.எம்.எஸ் நம்பூதிரிப்பாடு கேரள சமூகத்துடன் கொண்ட சம்பந்த உறவுதானே” என்றான் எலி. “திருமேனி தீண்டாமையை அனுஷ்டிப்பார், பிள்ளைகளும் பிறந்துகொண்டிருக்கும்”

குமாரன் மாஸ்டர் அவனை உதாசீனம் செய்து “அந்த பெரிய கதைக்குள் ஒவ்வொரு ஊரும் ஒரு கதை. ஒவ்வொரு குடும்பமும் ஒரு கதை. ஒரு குடும்பத்திற்கு பொதுவான ஒரு இண்டலக்சுவல் ஏரினா உள்ளது. ஒரு இமோஷனல் ஏரினா உள்ளது. அதற்குள்தான் அந்தக்குடும்பத்தில் உள்ள அத்தனைபேரும் பிறந்து வளர்கிறார்கள். அதிலிருந்து மீறிச்செல்பவர்கள் இன்னொரு வலுவான இண்டெலக்சுவல் இமோஷனல் ஏரினாவுக்குள் இழுக்கப்படுபவர்கள். மற்றபடி அந்தக்குடும்பம் அதுவே உருவாக்கிக்கொண்ட அந்த யதார்த்தத்தில்தான் வாழும்” என்றார்

“கம்யூனிஸ்டுகள் குருவாயூர் பக்தர்களாக ஆவதைப்போல” என்று  ஸ்ரீதரன் சொன்னான்

ஸ்ரீதரனிடம் நான் “வாயை மூடு” என்றேன்

ஔசேப்பச்சன் குமாரன் மாஸ்டரிடம் “இருக்கலாம். ஆனால் அது ஆச்சரியம் அளிப்பது. நாம் ஒரு வீட்டுக்குள் நுழைகிறோம். ஒரு சரித்திரப்பட செட் போலிருக்கிறது அந்த வீடு. அங்குள்ள மனிதர்களும் பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்பவர்கள்போலிருப்பார்கள். அவர்கள் அத்தனைபேரும் ஒரே முகம், ஒரே கண்கள் , ஒரே மொழி கொண்டவர்கள். அவர்கள் அத்தனைபேரையும் ஒரே பேய் பீடித்திருப்பதுபோல”

“அதை அத்தனை உதாசீனமாகச் சொல்லாதே” என்றார் குமாரன் மாஸ்டர் “அதை நாம் நவீன உளவியல் அல்லது சமூகவியல் கோணத்தில் இப்படியெல்லாம் பார்க்கிறோம். இன்னொரு கோணத்தில் பேய் என்றும் யக்ஷி என்றும் சொல்வார்கள். இரண்டுமே சமானமான உண்மைகள்.  இப்படி சொல்லப்படக்கூடிய ஒன்று, ஒரு பேசுபொருள், அங்கே இருக்கிறது என்பது உண்மை. அது ஒரு சூட்சுமமான சக்தி. அதை தூலமான பொருளில் நம்மால் வரையறை செய்யமுடியாது. அதை கலெக்டிவ் சைக்காலஜிக்கல் டிஸார்டர் என்று நான் சொல்கிறேன். இந்த பாண்டிமலையாளி எழுத்தாளன் பேய்க்கதை எழுதுவான்”

“நான் இரண்டையுமே கலந்துவிடுகிறேன்” என்றேன்

“நாசமாகப் போ, தமிழ் இலக்கியம் கூடவே வங்காள விரிகுடாவில் முழுகட்டும்” என்றார் குமாரன் மாஸ்டர். ஔசேப்பச்சனிடம் “ நீ துறையிங்கல் குடும்பத்தைப்பற்றி சொல்லு” என்றார்

மேலே சொன்ன மூன்றுவகைகளில்  துறையிங்கல் கரைநாயர்கள் முதல்வகையினர். அவர்கள் மார்த்தாண்ட வர்மா 1729 ல்  எட்டுவீட்டுப் பிள்ளைகளை தோற்கடித்து மதுரை நாயக்கர் அரசின் படைத்தளபதியான தளவாய் சுப்பையனின் உதவியுடன் திருவிதாங்கூர் ராஜ்யத்தின் அரசராக முடிசூட்டிக்கொண்டபோது அவருடைய படையில் இருந்திருக்கிறார்கள். 1790 வாக்கிலேயே அவர்களுக்கு கொல்லங்கோடு கடற்கரைமேல் அதிகாரத்தை அளிக்கும் செப்புப்பட்டயம் கார்த்திகைத் திருநாள் ராமவர்மா மகாராஜாவால் அளிக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட நூறாண்டுக்காலம் செல்வாக்குடன் இருந்திருக்கிறார்கள்

அவர்களின் செல்வாக்கு மூன்றுநிலைகளைச் சேர்ந்தது. ஆரம்பத்தில் இவர்கள் கரைமாடம்பிகள்.1809ல் வேலுத்தம்பி தளவாய் குண்டறை விளம்பரத்தை வெளியிட்டார். அப்போது இவர்கள் அவருடன் இருந்திருக்கின்றனர். வேலுத்தம்பி தளவாய்  பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டார். அவருடனிருந்த நாயர் நிலப்பிரபுக்களின் முதுகெலும்பு முறிக்கப்பட்டது. பிரிட்டிஷார் துறையிங்கல் குடும்பத்தின் காரணவரான ராஜமுகுந்தன் நாயரை நாடுகடத்தினர். அவர் அந்தமானில் இறந்தார். அவருடைய மருமகன் ராஜபிரபாகரன் நாயர் சொத்துக்களுக்கு உரிமையாளரானார். அதன்பின் இந்தியா சுதந்திரம்பெறும் வரை நூற்றைம்பது ஆண்டுகள் அவர்கள் பிரிட்டிஷ் விசுவாசிகளாகவே நீடித்தனர்.

1860 முதல் படிப்படியாக திருவிதாங்க்கூரில் ரயத்வாரி முறை அமலானபோது பழைய நிலவுடைமை இல்லாமல் ஆயிற்று. இவர்கள் நிலங்களை தனியுரிமைகளாக ஆக்கிக்கொண்டு நீடித்தனர். 1936ல் வலிய கேசு என்று அழைக்கப்பட்ட ராஜகேசவன் நாயர் காலமாகும்வரை இவர்களின் கொடி பறந்தது. அவர் அரசருக்கு நெருக்கமானவர். இதோ இந்த கிளப்பிலேயே ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர். அரசகுடித் தொடர்புகளால் பாம்பின் தலையிலேயே நீடித்தவர். அவருடைய இடுப்புக்கு கீழே ஐந்து தலை நாகம் இருந்தது என்பது தொன்மம். ஆகவே அவருக்கு பெரிய இடங்களில் நல்ல பிடிபாடு இருந்தது. அதை அடுக்களைப் பிடிபாடு என்று அழகியல்ரீதியாக வகுத்திருக்கிறார்கள்

அவருக்குப்பின் அவருடைய மகன் ராஜகோவிந்தன் கொஞ்சநாள் இருந்தார். குடிப்பழக்கம் எல்லைமீறி செத்தார். அவருடைய மகன்தான் ராஜமார்த்தாண்டன் நாயர். அவருடைய கடைசி மகன்தான் நான் பார்த்த ராஜகேசவன் நாயர்.

இந்தக்குடும்பம் முன்பு நான் சொன்னது போல ஒட்டுமொத்தமாகவே இருளால் மூடப்பட்டிருந்தது. ராஜமார்த்தாண்டன் நாயர் பலவகையான குணக்கேடுள் கொண்டவர். முக்கியமாக முன்கோபம் நிறைந்தவர், மூர்க்கமானவர் என்று சொல்லப்படுகிறது. தன் குடும்பத்தினரை மிகமிகக் கொடூரமாக நடத்தியிருக்கிறார். அற்பத்தனமாக இருந்திருக்கிறார். அவரைப்பற்றி ஒரு நல்ல மனப்பதிவுகூட எவருக்கும் இல்லை.

செய்திகளைக்கொண்டு அவருடைய குணச்சித்திரத்தை நான் இப்படி வகுத்துக்கொள்கிறேன். ராஜமார்த்தாண்டன் நாயர் செல்வாக்கான, செல்வந்தரான அப்பாவின் ஒரே மகன். திருவனந்தபுரம் ஸ்ரீமூலவிலாசம் பள்ளியில் மெட்ரிகுலேஷன் வரை படித்தார். ஆனால் படிப்பில் தரைமட்டம். படிப்பை முடிக்கவே ஐந்தாண்டுகள் கூடுதலாக ஆயின. அப்போது அப்பா காலமானார். மொத்தச் சொத்தும் கைவசம் வந்தது. அப்பா சாவதற்கு முன்னரே இவருக்குத் திருமணம் செய்துவைத்திருந்தார்.

சொத்துக்களை நிர்வாகம் செய்யவோ பொதுச்சமூகத்தில் புழங்கவோ ராஜமார்த்தாண்டன் நாயருக்கு பயிற்சி இல்லை. தன் வாழ்க்கை முழுக்க அவர் சொத்துக்களை இழந்துகொண்டே இருந்தார். குடும்ப வழக்குகள் தோற்றன. வக்கீல்கள் ஃபீஸாகவே சொத்துக்களை பிடுங்கிக்கொண்டனர். அரசு கொண்டுவந்த சீர்திருத்தங்களால் சொத்துக்கள் பறிபோயின. பாரம்பரியமான மரியாதைகள் இல்லாமலாயின. ஒவ்வொன்றும் ராஜமார்த்தாண்டன் நாயரை குறுகச் செய்தது. அவர் ஓர் ஆமைபோல ஆனார். வீட்டைவிட்டு வெளியே செல்வதே இல்லை. பல ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் அவர் தன் மாளிகையின் காம்பவுண்டில் இருந்தே வெளியே வந்திருக்கிறார்.

தன் தங்கையை அவர் திருமணம் செய்து கொடுக்கவே இல்லை. தன் மனைவியையும் பிள்ளைகளையும் வீட்டைவிட்டு வெளியே அனுப்பவில்லை. அவருக்கு நான்கு மகன்கள் மூன்று மகள்கள். மகன்கள் எட்டாம் வகுப்புக்குமேல் படிக்கவில்லை. மகள்களும் ஐந்தாம் வகுப்புக்குமேல் படிக்கவில்லை. ராஜமார்த்தாண்டன் நாயர் தன் மகன்கள் மகள்கள் எவருக்குமே திருமணம் செய்துவைக்கவில்லை.

சாகும்போது அவருக்கு எழுபது வயது. அவருடைய மூத்தமகன் ராஜதிவாகரன் நாயருக்கு அப்போது நாற்பத்தொன்பது வயது. அடுத்தவர் ராஜபத்மநாபன் நாயருக்கு நாற்பத்தியாறு. அடுத்தவர் சுகேசினி அவருக்கு நாற்பத்திமூன்று. அவருக்கு இளையவர்களான சுபத்திரைக்கு நாற்பத்தி ஒன்று. சுஜிதைக்கு முப்பத்தாறு. கடைசிமகன் ராஜகேசவன் நாயருக்கு அப்பா சாகும்போது முப்பத்திரண்டு வயது. அவர் அண்ணன் ராஜமாதவன் நாயருக்கு முப்பத்தி நான்கு.

மொத்தக்குடும்பமும் ஒரே வீட்டில் வாழ்ந்தனர். வெளியுலகுடன் எந்த தொடர்பும் இல்லை. வெளியே இருந்து உள்ளே செல்பவர்கள் இருவர். சமையற்காரி சுசீலா. காரியக்காரர் சந்திரன் பிள்ளை. சந்திரன்பிள்ளையின் அப்பா சிவன்பிள்ளை ராஜமார்த்தாண்டன் நாயரின்  அப்பாவிடம் காரியக்காரராக இருந்தவர். சொத்துக்கள் அனைத்தையும் அவர்தான் பார்த்துக்கொண்டார். துறையிங்கல் குடும்பத்திற்கு ஏறத்தாழ ஆயிரத்தைநூறு ஏக்கர் வரை நிலம் சொந்தமாக இருந்தது. நெய்யாற்றின்கரை நகரிலேயே இருபத்தைந்து வீடுகள்.இதைத்தவிர நெடுமங்காட்டுக்கு அப்பால் மூன்று எஸ்டேட்டுகள். அவை மொத்தமாக நாலாயிரம் ஏக்கர்.

ராஜமார்த்தாண்டன் நாயர் மாரடைப்பால் இறந்தார். அதன்பின் வரிசையாக அந்தக்குடும்பத்து உறுப்பினர்கள் இறந்தனர். சிலர் இயற்கையான மரணம் அடைந்தனர். மூவர் தற்கொலை செய்துகொண்டனர். கடைசி மகன்களான ராஜகேசவன், ராஜமாதவன் ஆகியோரும் அவர்களின் மூத்தவளான சுபத்திரையும் தற்கொலை செய்துகொண்டனர். ராஜமாதவன் வீட்டுக்குமேலிருந்து குதித்தார். சுபத்திரை தூக்கிட்டுக்கொண்டாள். ராஜகேசவன் ரயில்முன் பாய்ந்தார். குடும்பத்திற்கு வாரிசுகள் எவரும் எஞ்சவில்லை. கடைசி வாரிசான ராஜகேசவன் தன் சொத்துக்கள் அனைத்தையும் காரியக்காரர் சந்திரன் பிள்ளைக்கு உயில் எழுதியிருந்தார்

“உண்மையாகவா? தன்னை கொல்லப்போகிறார்கள் என்று சொன்னாரே அவரா?” என்றேன்

“தெளிவான சொத்து அபகரிப்பு வழக்கு” என்றார் குமாரன் மாஸ்டர்“ஆமாம்… உயில் எழுதப்பட்டு எட்டு மாதம் கழித்தே அவர் இறந்தார்… அதில்தான் எனக்கு சந்தேகம் வந்தது. நான் விசாரணையை தொடங்கினேன். முதலில் வக்கீல் சாமுவேல்ராஜ் வழியாக ஒரு உள்ளூர் நாயரை பிடித்தேன். அவரைக்கொண்டு போலீஸில் ஒரு புகார் அளிக்கவைத்தேன், இந்த சாவில் சந்தேகம் இருப்பதாகவும் சொத்துமோசடி நடந்திருப்பதாகவும். மாத்ருபூமி நிருபரைக்கொண்டு செய்தி போடச்செய்தேன். ஐஜியை சென்று பார்த்து  இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டேன்” ஔசேப்பச்சன் சொன்னான். ”அவர்களும் இந்த கேஸை யார் தலையிலாவது கட்டிவைக்கும் எண்ணத்துடன் இருந்தார்கள். பொதுவாக நாயர் வழக்குகளில் யார் யாருக்கு அப்பா என்று கண்டுபிடிக்கவே ரொம்பநாளாகும்”

“டேய்!” என்றான் ஸ்ரீதரன்

“மார்த்தோமாக்காரர்களை நாம் படிப்படியாக ஒழிப்போம்…. “ என்று குமாரன் மாஸ்டர் சொன்னார் “மாட்டிறைச்சி தின்னும் இவர்களுக்கான சிறப்பு கேஸ் சேம்பர்களை நமது ஃப்யூரர் அமைக்கும் நாள் தொலைவில் இல்லை”

”நாமும் தின்கிறோமே?”

”இது வேறு… இது பிரம்மார்ப்பணமாக தின்னப்படுவது” என்ற குமாரன் மாஸ்டர்  “சொல்லுடா நஸ்ரானி நாயே” என்றார்

முதலில் நான் விசாரணைக்கு அழைத்தது சந்திரன் பிள்ளையை.அவர் தன் வழக்கறிஞருடன் வந்தார். வழக்கறிஞரான நேமம் சதானந்தன் நாயர் ஒருநாளுக்கு அரைலட்சம் சம்பளம் வாங்குபவர். நான் சும்மா விசாரிக்கத்தான் முயல்கிறேன் என்று அவர்களிடம் சொன்னேன். இந்த கேஸை பெரிதாக்கும் திட்டமேதுமில்லை. அரசு ஒரு டீசண்டான கைகழுவலையே உத்தேசிக்கிறது என்றேன். அதன்பின் சந்திரன் பிள்ளை பேச ஆரம்பித்தார்.

அவர் மிகவும் தன்னம்பிக்கையுடன் இருந்தார்.  அந்த தன்னம்பிக்கை என்னை குழப்பியது. நான் அவர் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் எத்தனைபெரிய நடிகரானாலும் அத்தனை நேரம் கண்களிலிருந்து சூழ்ச்சியை, அச்சத்தை, ஐயத்தை மறைக்கமுடியாது. போலீஸ் எப்படி விசாரணை செய்யும் என்பதைப்பற்றி பொதுவாக பலருக்கும் புரிதல் இல்லை. போலீஸின் உள்ளுணர்வு என்றெல்லாம் கதைகளில் எழுதியிருப்பார்கள். அது அனுபவ அறிதல்தான். நாம் பல்லாயிரம் பேரை விசாரணைசெய்திருப்போம். அதெல்லாம் நம் நினைவில் பதிந்து எங்கோ சேர்ந்திருக்கும். விழியின் ஓர் அசைவு, முகத்தின் ஒரு சின்ன சுளிப்பு நமக்கு முன்பு நடந்த இன்னொன்றை, இன்னொருவரை நினைவுபடுத்திவிடும்.

ராஜமார்த்தாண்டன் நாயரின் குடும்பத்தில் அனைவருக்குமே வலிப்பு நோய் இருந்தது என்றார் சந்திரன் பிள்ளை. ராஜமார்த்தாண்டன் நாயருக்கே ஏழுமுறை வலிப்பு வந்திருக்கிறது. மற்ற அனைவருமே வலிப்பு நோயாளிகள்தான். ஆண்டுக்கு ஏழெட்டுமுறை எல்லாருக்குமே வலிப்பு வந்துகொண்டிருந்தது. ராஜமார்த்தாண்டன் நாயரின் தங்கை சுமங்கலைதான் அக்குடும்பத்தின் மூத்த வலிப்பு நோயாளி. ஆகவேதான் அவளுக்கு திருமணமே ஆகவில்லை.  அவர்களுக்கு மருத்துவம் பார்த்தவர் நெய்யாற்றின்கரையில் டாக்டர் நாராயணபிள்ளை, அதன்பின்  திருவனந்தபுரத்தில் டாக்டர் ஜோசப் செறியான். அவர்களிடம் முழுமையாக விசாரிக்கலாம்

”அவர்கள் எப்படி இறந்தனர்?” என்று நான் கேட்டேன்.

“வலிப்புநோய்தான் முக்கியமான காரணம்” என்றார் சந்திரன் பிள்ளை. ”அவர்கள் எப்போதுமே பதற்றநிலையில்தான் இருப்பார்கள். அவர்களின் கைகள் குளிர்ந்து நடுங்கிக்கொண்டிருக்கும். அவர்கள் எவர் பேசினாலும் பெரிய அச்சத்துடன் பேசுவதுபோலத்தான் இருக்கும். ஓரிரு சொற்றொடர்களிலேயே அவர்கள் திக்கி திணறி மூச்சிளைப்பார்கள். குரல் தழுதழுக்கும். அழத்தொடங்கிவிடுவார்கள். ’தென்னைமரத்தில் தேங்காய் பறிக்க முகம்மது வந்தார், விலையை நேரில் பேசிக்கொள்வதாகச் சொன்னார்’  என்று என்னிடம் சொல்வதற்குள்ளகவே சுகேசினி குரல் உடைந்து அழுதுவிடுவாள்”.

“அவள் தன் அறையில் இறந்து கிடந்தாள் அல்லவா?”

“ஆமாம், அவள் பலநாட்களாகவே ஏதும் சாப்பிடவில்லை”

அவன் சொன்ன ஒரு விஷயம் திகைப்பூட்டுவதாக இருந்தது. ஒருமுறை அவர்களின் இல்லத்தில் ஒரு பழைய பெட்டி மேலிருந்து விழுந்தது. அது அமைந்திருந்த பரண் இற்றுப்போயிருந்தது. அதன்மேல் ஒரு பூனை பாய்ந்ததனால் பரண் உடைந்து பெட்டி சரிந்தது. அந்தப்பெட்டி விழுந்த ஓசையில் ராஜதிவாகரன் நாயர் திடுக்கிட்டு வலிப்பு வந்து விழுந்தார். அடி ஏதும் படவில்லை. ஆனால் அவர் மீளவே இல்லை. வலிப்பு விட்டுவிட்டு வந்துகொண்டிருந்தது. காய்ச்சல் ஏறி ஏறி வந்து மறுநாள் காலையில் உயிரிழந்தார். வெறும் சத்தத்தால்!

“ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகவில்லையா? ”என்று கேட்டேன்

“இல்லை. அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அவர்களிடமிருந்து அவரை மீட்டு கொண்டுபோக என்னால் முடியாது. அந்த வீட்டுக்கு முன்பு பலமுறை நானே டாக்டர்களைக் கூட்டிச் சென்றிருக்கிறேன். நோயாளிகளை பார்க்கமுடியவில்லை. ராஜமார்த்தாண்டன் நாயரை டாக்டர் பார்த்திருக்கிறார்கள். சுகேசினியையும் ராஜமாதவன் நாயரையும் பார்த்திருக்கிறார்கள். மற்றபடி அவர்கள் எந்த மருத்துவ சேவையையும் ஏற்றுக்கொள்வதில்லை”

“அவர்களின் சாவில் ஏதாவது மர்மம் உண்டா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று நான் சந்திரன் பிள்ளையிடம் கேட்டேன்

“நீங்களே விசாரிக்கலாம். எல்லாமே தெளிவாக இருக்கிறது. தற்கொலைசெய்துகொண்டவர்களின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் உள்ளது. மற்றவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது சாட்சிகள் வழியாக பதிவாகியிருக்கிறது. சார், அவர்கள் எல்லாருமே நோயாளிகள்” என்றார் சந்திரன் நாயர்

“அவர்களுக்கு அந்த நோய் எப்படி வந்தது என்று நினைக்கிறீர்கள்?” என்று அவர் கண்களைப்பார்த்து கேட்டேன்

“அது , அவர்களின் குடும்பம் மிகப்பழையது. அவர்களுக்கு ஏதாவது சாபம் இருந்திருக்கலாம்.”

“சாபம் என்றால்?”

“சார், இவர்கள் அநீதிகளைச் செய்யாமல் இவ்வளவு பணத்தை ஈட்டியிருக்கமுடியுமா? அந்த அநீதிகள் தலைமுறைகள் தாண்டிவந்து பிடிக்காமல் விடுமா? யாரோ கண்ணீரோடு சாபம் விட்டிருக்கிறார்கள். யாரோ ஏழை எளியவர். யாரோ ஒரு அபலைப்பெண்… அதுதான்.”

நான் அவர் கண்களை மேலும் கூர்ந்து நோக்கி “அந்தச் செல்வம் முழுக்க இப்போது உங்களுக்கு வந்துள்ளது” என்றேன்

“ஆமாம். ஆனால் நான் அதை கெட்டவழிகளில் சம்பாதிக்கவில்லை. முப்பது ஆண்டுகள் அந்தக்குடும்பத்தை நான் பாதுகாத்தேன். அவர்கள் ஒவ்வொருவருக்கும் வேண்டிய எல்லாவற்றையும் செய்தேன். அவர்கள் மனமறிந்து எனக்கு இந்தச் சொத்தை தந்தார்கள். இது எனக்கு தெய்வவரமாக கிடைத்தது. ஆகவே நான் குருவாயூருக்கும் சபரிமலைக்கும் காணிக்கை கொடுத்தேன். ஏழைகளுக்கு உணவுபோடவும் நன்கொடை கொடுத்தேன். எனக்கு எந்த தயக்கமும் இல்லை”

“நல்லது” என்றேன். தலையசைத்தபோது சந்திரன்பிள்ளை கைகூப்பி எழுந்துகொண்டார்

“சார் உங்களுக்கு தேவையென்றால் எப்போதுவேண்டுமென்றாலும் என்னிடம் பேசலாம். எந்த டாகுமெண்டையும் கேட்கலாம். எதுவுமே ரகசியமில்லை. என்னிடம் ஒளிக்க ஒன்றுமே இல்லை” என்று சந்திரன் பிள்ளை சொன்னார்.

அதன்பின் வேலைக்காரி சுசீலாவை அழைத்து விசாரணை செய்தேன். சுசீலாவுக்கு ஒரு வீடு, இருபது ஏக்கர் நிலம் ராஜகேசவனால் அளிக்கப்பட்டிருந்தது. அறுபதுவயதான சுசீலா நாற்பதாண்டுகளாக அந்த வீட்டில் சமையல் செய்துவந்தாள். அவள் அம்மா இசக்கியம்மையும் அங்கே வேலைக்காரியாக இருந்தவள்தான். சுசீலாவுக்கு நான்கு மகன்கள். அவர்களில் இளையவனாகிய சுரேந்திரன் அவளுடன் வந்தான். நான் இயல்பாக அவளிடம் அந்தக்குடும்பத்தைப் பற்றி விசாரித்தேன் அவள் மிக நிதானமாகவும் தெளிவாகவும் எல்லாவற்றையும் சொன்னாள். எதையுமே ஒளிப்பதுபோல தெரியவில்லை.

ராஜமார்த்தாண்டன் நாயர் கோடீஸ்வரர் ஆனாலும் தன் குடும்பத்தை கடுமையான வறுமையிலெயே வைத்திருந்தார். ஒருவகையான நோயுற்ற சிக்கனம் அவரிடமிருந்தது. சமையலுக்கு ஒரு நாளைக்கு ஒரு தேங்காய் எடுத்து அவரே கொடுப்பார். அரிசியும் அளந்தே கொடுப்பார். மளிகைச்சாமான்கள் எவ்வளவு உள்ளன என்பதை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருப்பார். எல்லா செலவுகளையும் அமர்ந்து விரிவாகக் குறித்துவைப்பார். அவற்றை அவரே ஒப்பிட்டு கணக்குபோடுவார். குடும்பத்தினர் அனைவருக்கும் ஒருநாள் ஒரே ஒரு டீதான். காலையில். ஆனால் பால் வாங்குவதே இல்லை. வெறும் கட்டன்சாயா. சாயங்காலம் அதுவும் கிடையாது

கீரையும் காய்கறிகளும் வாங்கிக்கொள்ளலாம். ஆனால் பெரும்பாலான நாட்களில் தோட்டத்திலுள்ளவற்றைக்கொண்டே சமாளிக்கவேண்டும். மீன் வாங்குவதில்லை. இறைச்சி வாங்குவதில்லை. பெரும்பாலும் கஞ்சிதான். காலையிலும் இரவிலும். தோட்டத்திலுள்ள மரவள்ளிக்கிழங்கோ காய்ச்சில்கிழங்கோ உடன் இருக்கும். மதியம் சோறு. ஆனால் தொட்டுக்கொள்ள என்று ஏதும் கிடையாது, ஒரு குழம்பு மட்டும்தான். தேங்காய் அரைத்த ‘ஒழிச்சுகூட்டான்’ மட்டும். தோசை இட்லி போன்றவை அந்த வீட்டில் சமைக்கப்பட்டதே இல்லை. இனிப்பு உண்ணும் வழக்கமே இல்லை. எதையுமே பொரிப்பதில்லை. அப்பளம் என்றால்கூட சுட்டுத்தான் சாப்பிடவேண்டும்.

அந்த வீட்டில் அனைவரும் தனித்தனியாக அவர்களின் அறையில்தான் சாப்பிடுவார்கள். எல்லாவற்றையும் பரிமாறி வைத்தால் அவர்கள்  எடுத்துக்கொண்டு செல்வார்கள். சுசீலாம்மா அங்கே மதியம் மட்டும்தான் சாப்பிடுவது. இரவில் சமைத்து வைத்துவிட்டு மாலை ஐந்துமணிக்கே கிளம்பிவிடுவாள். காலையில் பாத்திரங்களை எடுத்து கழுவி வைப்பாள். சிலநாட்கள் யாராவது ஒருவர் சாப்பிட்டிருக்க மாட்டார். அதிலிருந்து அவருக்கு உடம்பு சரியில்லை என்று தெரியவரும். ஆனால் அவர்களே வந்து சொல்வதில்லை. கேட்டாலும் சொல்லமாட்டார்கள். அவர்கள் எழமுடியாமல் இருந்தால்தான் சந்திரன் பிள்ளையிடம் சொல்லவேண்டும். அவர் சிகிழ்ச்சைக்கு ஏற்பாடு செய்வார்.

ஒரு மாதத்திற்கு ஒரு லிட்டர் தேங்காயெண்ணை, தாளிப்பதற்கு மட்டும். அவர்கள் தலைக்கு எண்ணை தேய்த்துக்கொள்வதே இல்லை. குளிப்பதற்கும் துணிதுவைப்பதற்கும் காதி பார்சோப் இரண்டு கட்டைகள் வாங்குவார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரே துணிதான். மொத்தமாக வெள்ளைக் காதி துணியை வாங்கி தைக்கக்கொடுப்பார் ராஜமார்த்தாண்டன் நாயர். எல்லாருமே அதைத்தான் அணிந்திருப்பார்கள். ஆணும்பெண்ணும்.

“ஜெயில் மாதிரி சார். ஜெயிலிலே அடைபட்ட கொலைக்குற்றவாளிகளைப் போலத்தான் அவர்களின் வாழ்க்கை” என்றாள் சுசீலா.  “எனக்கு சந்திரன்பிள்ளை நல்ல சம்பளம் தந்தார்… அதனால் அந்த கிறுக்காஸ்பத்திரியில் நான் இருந்தேன்”

அவளுக்குச் சொத்து கிடைத்ததைப் பற்றிச் சொன்னேன். “ஆமாம், அதற்கு என்ன? நான் அந்தக்குடும்பத்திற்கு முப்பது ஆண்டுகள் சேவை செய்திருக்கிறேன். ராஜகேசவன் நாயர் எனக்கு சொத்து எழுதி வைக்க விரும்புவதாக சந்திரன் பிள்ளை சொன்னார் நானே நேரில் ராஜகேசவன் நாயரிடம் கேட்டேன். ஆமாம், சந்திரன்பிள்ளை அப்படிச் சொல்கிறார். ஆகவே அதை செய்யலாம் என நினைக்கிறேன் என்று அவர் என்னிடம் சொன்னார்”

“நேரில் சொன்னாரா?” என்றேன்

“ஆமாம், நேரில் சொன்னார்” என்று அவள் சொன்னாள்

“சரி, ஏற்றுக்கொண்டீர்கள்”

“ஆமாம், இன்றைக்கு பொறாமைக்காரர்கள் என்னென்னவோ பேசுகிறார்கள். அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. என் சேவைக்குப் பரிசாக கிடைத்தது அந்த நிலம். என் பையன்கள் என்னிடம் கேட்டதுண்டு. நீ அங்கே போய் வேலைசெய்து என்ன கண்டாய் என்று. இன்றைக்கு அவர்களுக்கு ஒரு சொத்தை நான் கொடுக்க முடிகிறது. எனக்கு எந்த சங்கடமும் இல்லை… எந்த கோயிலிலும் சாமிமுன் என்னால் தைரியமாக நிற்கமுடியும்”

அவளை அனுப்பியபின் நான் அவர்களுக்கு சிகிழ்ச்சை அளித்த டாக்டர் டாக்டர் நாராயணபிள்ளையிடம் அவர் ஆஸ்பத்திரிக்கே சென்று பேசினேன். “அவர்கள் அத்தனை பேருக்கும் நரம்புநோய் இருந்தது. மிதமிஞ்சிய நரம்புத்தளர்ச்சி. வலிப்புநோய் அதன் விளைவாக வருகிறதா இல்லை வலிப்புநோயால் நரம்புத்தளர்ச்சியா என்று எவராலும் கண்டுபிடிக்கமுடியாது. ஆனால் அவர்கள் அனைவருமே நோயாளிகள். அவர்கள் தற்கொலை செய்துகொள், கொலைசெய்ய, தானாகவே எங்காவது விழுந்து சாக எல்லா வாய்ப்பும் இருந்தன”

“அவர்களுக்கான மிகச்சிறந்த சிகிழ்ச்சை என்பது அவர்களை தனித்தனியாக பிரித்து அவர்கள்மேல் அக்கறை கொண்டவர்களுடன் தங்கவைப்பது. தனித்தனியாக சிகிழ்ச்சை அளிப்பது. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு வீட்டில் அனைவருமே நோயாளிகள் என்பது நோயை மேலும் கூட்டுவது. மிக அபாயகரமான நிலை அது. அவர்களை அவர்களால் பார்த்துக்கொள்ள முடியாது. அவர்களை இன்னொருவரும் பார்த்துக்கொள்ள முடியாது” என்றார் டாக்டர் நாராயணபிள்ளை

கடைசியாக அவர்களின் வழக்கறிஞர் நேமம்  சதானந்தன் நாயரைக் கூப்பிட்டு விசாரித்தேன். “முழுக்கமுழுக்க சட்டபூர்வமான சொத்துப் பரிமாற்றம். சொத்துக்களை அளித்தவர் அதன்மேல் பரிபூரண உரிமை உடையவர். அதற்குரிய எல்லா சான்றுகளும் உள்ளன. அவர் மனம் விரும்பி அதை அளித்திருக்கிறார். அதற்கான காரணத்தையும் சொல்லியிருக்கிறார். அவருடைய விழிப்பான மனநிலைக்கு மூன்று அரசதிகாரிகள் சாட்சி அளித்திருக்கிறார்கள். முறையான சாட்சியங்களுடன் பத்திரப்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று செய்யப்பட்ட ஆவணப்பதிவுகள் இவை.எல்லாவகையிலும் செல்லுபடியாகக்கூடியவை” என்றார்

“ஆனால் ராஜகேசவன் நாயர் நோயாளியாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது” என்றேன்

“ஆமாம், அவர் நரம்புநோயாளி… ஆகவேதான் அவரை சந்திரன் பிள்ளை கவனித்துக் கொள்ளவேண்டியிருந்தது. நரம்புநோய் என்பது உடலை பலவீனமாக ஆக்குவது. உள்ளத்தை அது ஒன்றும் செய்வதில்லை. அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதை எவர் வேண்டுமென்றாலும் நீதிமன்றத்தில் அறைகூவலாம், நாங்கள் எதிர்கொள்கிறோம். அவர் நல்ல உளநிலையில் எழுதிய உயில் இது. பத்திரப்பதிவாளர் அதற்கு சாட்சி….”

அவர் சென்றபின் எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. உண்மையில் சுவரில் முட்டிக்கொண்ட நிலை. ஒரு விரிசல்கூட இல்லை. ஆனால் எனக்கு ராஜகேசவன் நாயரின் கண்ணீர் படர்ந்த கண்கள் தொந்தரவாக இருந்தன. அவரை நான் பொருட்படுத்தியிருக்கலாமோ, அவரை காப்பாற்ற முடிந்திருக்குமோ என்ற எண்ணம் அலைக்கழித்தது. ஆனால் செய்யக்கூடுவதாக எதுவுமே இல்லை. மனிதமுயற்சிகள் முழுமையாகவே மூடிவிட்டிருந்தன. நான் சொன்னேனே, நான் நினைவில் வைத்திருக்கும் எல்லா வழக்குகளும் இப்படிப்பட்டவைதான்.

ஔசேப்பச்சன் சொல்லி முடித்து ஒரு கோப்பை விஸ்கி அருந்தினான். மற்றவர்கள் கைகளைக் கட்டியபடி கேட்டிருந்தோம்

“சரி, இப்போது சொல்லுங்கள், இந்த கேஸில் ஏதாவது சட்டபூர்வமான குற்றம் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறதா?” என்று ஔசேப்பச்சன் கேட்டான்.

“அனேகமாக இல்லை” என்று நான் சொன்னேன் “தவறு என்று சொல்லவேண்டும் என்றால் ஒரு நோயாளிக்குடும்பத்தின் பரிதாபநிலையை பயன்படுத்தி சொத்துக்களை பிடுங்கிக்கொண்டதைச் சொல்லலாம்”

“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மாஸ்டர்?”

“நான் அதைத்தான் யோசிக்கிறேன். எங்கோ ஒன்று தட்டுப்படுகிறது. ஆனால் தர்க்கபூர்வமாக ஒன்றுமே இல்லை”

“நீ என்ன நினைக்கிறாய் அச்சாயா?” என்று ஸ்ரீதரன் கேட்டான்

“அது ஒரு கூட்டக்கொலை…” என்று ஔசேப்பச்சன் சொன்னான். “அந்தக்குடும்பம் மொத்தமாகவே கொலைசெய்யப்பட்டது”

நான் அதிர்ந்துபோய் பார்த்துக்கொண்டிருந்தேன்.

“ஆனால் எவரும் தண்டிக்கப்படவில்லை, இன்றுவரை”

“என்ன சொல்கிறாய்?”

“ஆம், அது உண்மை. சட்டபூர்வமாக ஒன்றும் செய்யமுடியாது”

“யக்ஷி என்கிறாயா?” என்றான் ஔசேப்பச்சன் “அப்படியென்றால் அதில் குற்றவாளி மனிதனால் தண்டிக்கப்பட முடியாதவர்”

“நான் குற்றம் என்றேன்… ”

“சரி, என்ன நடந்தது என்று சொல்”

ஔசேப்பச்சன் சொன்னான். எனக்கு முதல் திறப்பு கிடைத்தது வழக்கம்போல தற்செயலால். அல்லது தெய்வச்செயலால்.  ‘தெய்வம் எந்த பேழையையும் முழுமையாக மூடிவிடுவதில்லை’ என்று  ஒரு கோவா கொங்கணி பழமொழி உண்டு. அதை அஃபோன்ஸோ ரொசாரியோ ’எந்தக் கண்ணுமே பார்க்காமல் ஒரு குற்றம் நிகழமுடியாது’ என்று மாற்றிச் சொல்வார்

நான் ஏறத்தாழ விசாரணைகளை முடித்துவிட்டு, எல்லாவற்றையும் கட்டி அப்பால் வைத்து மனதை உலரவிட்டேன். இது புலனாய்வில் மிக முக்கியம். ஒரே திசையில் போய் ஒரே இடத்தை முட்டி சலித்திருப்போம். அப்படியே விட்டுவிடவேண்டும். மறந்துவிடவேண்டும். அப்படியே மனம் பின்னால் வந்துவிடும். கொஞ்சநாள் கழித்து முற்றிலும் புதிய கேஸை எடுத்து பார்ப்பதுபோல அதை ஆராய்ந்தால் புதிதாக வழிகள் திறக்கும்

“இதை நான் எழுதும்போது கடைப்பிடிப்பதுண்டு. ஒரு கதை வழிமுட்டி நின்றுவிட்டால் ஆறப்போட்டு திரும்ப எடுப்பேன்” என்று நான் சொன்னேன்

“அதேதான்” என்றான் ஔசேப்பச்சன். நான் மீண்டும் ஃபைலை எடுத்தபோது ஓர் எண்ணம் வந்தது. நீண்ட வரலாறுள்ள கொடிவழி இது. ஆகவே மூடநம்பிக்கைகள் செறிந்த குடும்பமாகவே இது இருந்திருக்கும். இவர்களின் சோதிடர்கள் யார்? இவர்கள் ஏதாவது மந்திரவாதம் செய்துகொண்டார்களா? அதைப்பற்றி சந்திரன் பிள்ளை ஒன்றுமே சொல்லவில்லையே

நான் அதை தனியாக விசாரித்தேன். கான்ஸ்டபிள்களை அனுப்பி ராஜமார்த்தாண்டன் நாயரின் வீட்டைச்சுற்றியிருந்த சிறிய கடைகளிலும் வீடுகளிலும் விசாரிக்கும்படிச் சொன்னேன். ஒரே நாளில் தகவல் வந்தது. எராடி அச்சுதக் கணியார் அவர்களின் குடும்பத்திற்கு சோதிடம் பார்ப்பவர். பரம்பரையாக அவர்கள்தான் சோதிடர்கள். அவருடைய அப்பா எராடி பாச்சுக் கணியாரும் அங்கே சோதிடம் பார்த்தவர்தான். ராஜமார்த்தாண்டன் நாயர் இருந்தவரை அச்சுதக்கணியார் அடிக்கடி வந்திருக்கிறார். அதன்பின் வராமலாகிவிட்டார்.

அவரை நானே சென்றுபார்த்தேன். எண்பது வயதான கிழவர். அவர் மகன் எராடி நாராயணன் சோதிடம் சொல்லிக்கொண்டிருந்தான். அவன் மிகப்புகழ்பெற்றவன் அச்சுதக் கணியார் வெளியே செல்வதில்லை. நான் என்னை முறையாகவே அறிமுகம் செய்துகொண்டேன். அவரிடம் அந்தக்குடும்பத்திலுள்ளவர்களின் அசாதாரணமான சாவைப் பற்றிக் கேட்டேன்

“அதில் சட்டவிரோதமான ஒன்றும் இல்லை. ஆனால் சாஸ்திரவிரோதமான செயல் உண்டு. மனிதாபிமானமில்லாத செயல் உண்டு. முழுக்கமுழுக்க அதற்குச் சந்திரன்பிள்ளையும் அவன் அப்பா சிவன்பிள்ளையும்தான் பொறுப்பு” என்றார் எராடி அச்சுதக் கணியார்

“என்ன சொல்கிறீர்கள்?” என்றேன்

“அந்தக்குடும்பம் சாபம் உள்ள குடும்பம். அதை எங்கள் பரம்பரை குறிப்புகளும் சோதிடநூல்களும் தெளிவாகவே காட்டின. நான் அதை மிகச்சரியாக ஊகித்து அவர்களிடம் சொன்னேன். அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை” என்றார் எராடி அச்சுதக் கணியார்

“சொல்லுங்கள், என்ன சாபம்?” என்றேன்

“நஸ்ரானியே, சாபம் இல்லாமல் சரித்திரம் இல்லை. எல்லா சாம்ராஜ்யங்களும் கண்ணீரின்மீதுதான் கட்டி எழுப்பப்பட்டுள்ளன. இந்த துறையிங்கல் குடும்பம் எப்படி இந்த அதிகாரத்தை அடைந்தது தெரியுமா?” என்றார் அச்சுதக்கணியார்

“சொல்லுங்கள்” என்றேன்

திருவிதாங்கூர் ராஜ்யம் உருவாவதற்கு முன்பு இது சேரநாடாக இருந்தது. தெற்குச்சேரநாடு. இதை ஆண்டுவந்தவன் பாஸ்கர ரவிவர்மன். அவனுடைய தலைநகர் இரணியசிங்க நல்லூர். இன்று அது இரணியல் எனப்படுகிறது. தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன் பாஸ்கர ரவிவர்மனை கிபி 988 வாக்கில் தோற்கடித்து சேரநாட்டைக் கைப்பற்றினான். அதன்பிறகு முந்நூறாண்டுக்காலம் சோழர் ஆட்சி இங்கே நடந்தது. அந்த சோழர் ஆட்சிக்காலத்தில்தான் இந்த நிலம் வேணாடு, நாஞ்சில்நாடு என பல நாடுகளாக பிரிக்கப்பட்டது.

அதன் வரிவசூல் உரிமை சில குடும்பங்களிடம் இருந்தது. அவர்கள்தான் எட்டுவீட்டுப் பிள்ளைமார் எனப்பட்டனர். ராமனாமடத்தில் பிள்ளை, மார்தாண்டமடத்தில் பிள்ளை, குளத்தூர் பிள்ளை, கழக்கூட்டத்துப்பிள்ளை ,செம்பழஞ்சிப்பிள்ளை, பள்ளிச்சல் பிள்ளை, குடமண் பிள்ளை, வெங்ஙானூர் பிள்ளை ஆகிய எட்டுபேர். அவர்கள் இங்குள்ள கோயில்நிலங்களை நிர்வாகம் செய்த நம்பூதிரிகளுடன் சேர்ந்துகொண்டு ஓர் அதிகார சக்தியாக இருந்தார்கள்.

பதிமூன்றாம் நூற்றாண்டில் சோழர்களின் ஆட்சி இல்லாமலாகியது. அரைநூற்றாண்டுக் காலம் பாண்டிய ஆட்சி நீடித்தது. அதன்பின் சுல்தான் படையெடுப்பு. தென்னாடு முழுக்க அரசியல் குழப்பங்கள். பிறகு மதுரையில் நாயக்கர் ஆட்சிக்காலம். அப்போதுதான்  தலக்குளம் ஸ்வரூபம் என்று அழைக்கப்பட்ட சிறிய அரசகுடும்பம் திருவிதாங்கூரின் ஆதிக்கசக்தியாக உருவெடுத்தது என்றார் கணியார்.

“அவர்களுக்கு  ஏதாவது ரத்த சம்பந்தம் இருந்ததா? ” என்று ஸ்ரீதரன் கேட்டான்

“இல்லை விந்து சம்பந்தம்” என்று ஔசேப்பச்சன் சொன்னான்   ”கொடுங்கல்லூரின் இறுதி அரசரும், சேரன் செங்குட்டுவன் வழிவந்த மன்னர்களான பெருமாள்களில் கடைசியானவருமான குலசேகரப்பெருமாள் தெற்கே வந்து இந்த குடும்பத்தில் ஒரு சிறுமியை திருமணம் செய்துகொண்டர். அந்தத் தொடர்பால் அரச உரிமை பெற்று வேணாட்டை ஆட்சி செய்ய ஆரம்பித்தது அந்தக்குடும்பம்.  அவர்கள்தான் இன்றும் நீடிக்கும் திருவிதாங்கூர் அரசர்கள்”

“சரி, கணியார் சொன்னதைச் சொல்” என்றார் குமாரன் மாஸ்டர்

கணியார் என்னிடம் சொன்னது இது. திருவிதாங்கூர் அரசகுடும்பத்தின் ஆட்சிக்கு முதல் எதிரியாக விளங்கியவர்கள் எட்டுவீட்டுப் பிள்ளைமார். அவர்கள் வேணாட்டு அரசர் ஆதித்யவர்மாவை பாயசத்தில் நஞ்சிட்டு கொன்றனர்.  வேணாட்டு அரசி உமையம்மை ராணியின் ஆறு மகன்களை களிப்பான்குளத்தில் மூழ்கடித்து கொன்றார்கள். வேணாட்டு இளவரசரான மார்த்தாண்டவர்மா மகாராஜாவை கொல்லமுயன்றனர். அவருடைய எதிரிகளான பத்மநாபன் தம்பி, ராமன் தம்பி ஆகியவர்களை ஆதரித்தனர்.

மார்த்தாண்ட வர்மா மதுரை நாயக்கர்களின் படைத்தலைவரான தளவாய் சுப்பையன் உதவியுடன் ஆட்சியமைத்தார். பத்மநாபன் தம்பி ராமன் தம்பி இருவரையும் சூழ்ச்சி செய்து கொன்றார். தன் எதிரிகளை முழுமையாகவே அழிக்கவேண்டும் என்று விரும்பிய மார்த்தாண்ட வர்மா தன் அமைச்சரான தளவாய் ராமைய்யன் என்ற பிராமணனுடன் சேர்ந்துகொண்டு ஒரு மாபெரும் களையெடுப்பை நடத்தினார். எட்டுவீட்டுப் பிள்ளைமார் முழுமையாகவே அழிக்கப்பட்டார்கள். அவர்களின் ஆதரவாளர்களும் ஒருவர் மிச்சமில்லாமல் கொல்லப்பட்டார்கள்.

எட்டுவீட்டுப்பிள்ளைமார்களில் செம்பழஞ்சிப் பிள்ளை மட்டும் மகாராஜாவிடம் அடைக்கலம் புகுந்ததனால் மன்னிக்கப்பட்டார். ஆனால் அவருடைய உயிர் மட்டுமே அளிக்கபப்ட்டது. கோயில்நிர்வாகிகளாக இருந்த பிராமணர்களான மூத்தேடத்து பண்டாரம், ஏழும்பால பண்டாரம், எடத்தற போற்றி ஆகியோர் நாடுகடத்தப்பட்டனர்

எட்டுவீட்டுப்பிள்ளைமார் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் குடும்பவீடுகள் இருந்த இடங்களில் குளங்கள் தோண்டி அவற்றை மக்கள் பயன்படுத்த அளித்தார். அதன்வழியாக அந்தப் பாவம் நீங்கும் என்று அவருக்கு சோதிடர்கள் சொன்னார்கள். இங்கே இன்னமும் குடும்பத்தை  முற்றாக அழிப்பதை ’குடும்பம் குளம்தோண்டுதல்’ என்றுதான் சொல்வார்கள்.

ஆனால் பெண்களைக் கொல்ல அன்று சாஸ்திர அனுமதி இல்லை. ஏனென்றால் வேணாடு பெண்வழி நிலம், பகவதிகளின் நாடு. ஆகவே அந்தப் பெண்களின் சாதி அடையாளத்தை அழிக்க நினைத்தார் மார்த்தாண்டவர்மா. எட்டுவிட்டுப்பிள்ளைமார், அவர்களின் ஆதரவாளர்கள் அனைவருடைய பெண்களையும் பிடித்து கொண்டுசென்று குளச்சல் துறைமுகத்தில் அங்கிருந்த மீனவர்களுக்கு கொடுத்தார். அந்தப்பெண்கள் பத்மநாபபுரத்தில் இருந்து குளச்சல் வரை இழுத்துச் செல்லப்பட்டனர். அங்கே ஏலம்போடப்பட்டு விற்கப்பட்டனர்.

பலபெண்களை போர்ச்சுகீசிய அடிமைவணிகர்கள் வாங்கிக்கொண்டார்கள். அவர்கள் அப்படியே மறைந்து போனார்கள்.அவர்களின் ரத்த தொடர்பைக்கூட எவரும் கண்டுபிடிக்க முடியவில்லை. . 1730ல் நடந்த இந்நிகழ்ச்சியை  ‘துறைகேற்றல்’ என்று பேச்சுமொழியில் குறிப்பிடுகின்றனர்.இந்திய வரலாற்றிலேயே இதைப்போன்ற ஒரு நிகழ்ச்சி முன்பும் பின்பும் இல்லை

இந்நிகழ்வால் மக்களுக்கு அரசர் மேல் கசப்பு உருவாகியது. நாட்டின்மேல் பகவதிசாபம் விழும் என்ற அச்சம் பெருகியது. அதற்கேற்ப அரசகுடும்பத்தில் தொடர்ச்சியாக அவமரணங்கள் நிகழ்ந்தன. நாட்டில் நோய்கள் பெருகின. சோதிடர்கள் அரசரை கடுமையாக எச்சரித்துக்கொண்டிருந்தனர் ஆகவே  1750 ல் மார்த்தாண்ட வர்மா மகாராஜா தன் நாட்டை அபப்டியே அனந்தபத்மநாப சாமிக்கு காணிக்கையாக அளித்தார். நாடு தெய்வத்தின் உடைமை ஆகியது. அதன் காவலராக மகாராஜா பொறுப்பேற்றார். இச்சடங்கு திருப்படித்தானம் என்று சொல்லப்படுகிறது

மார்த்தாண்ட வர்மா மகாராஜாவின் படைகள் எட்டுவீட்டுப் பிள்ளைமார் குடும்பங்களை வேட்டையாடிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தது. எட்டுவீட்டுப் பிள்ளைமார் குடும்பத்தைச் சேர்ந்த மார்த்தாண்ட மடத்தில் கொச்சுகாளிப்பிள்ளை என்ற பெண் அன்று பூர்ண கர்ப்பிணியாக இருந்தாள். அவளை அவளுடைய வேலைக்காரி நீலியும் அவள் கணவன் சடையனும் ஒரு படகில் ஏற்றி திருவனந்தபுரத்திலிருந்து கடல்வழியாக கன்யாகுமரி கடந்து தமிழ்நாட்டுப் பகுதிக்குக் கொண்டுசெல்ல முயற்சி செய்தார்கள். வேணாட்டு எல்லையைக் கடந்தால் அவள் தப்பமுடியும்.

கரையோரக் கடல் வழியாக சென்ற  அவர்கள் பூவாறை தாண்டுவதற்குள் அவளுக்கு பிரசவ வலி எழுந்தது. அவர்கள் எப்படியாவது சமாளிக்க முயன்றனர். ஆனால்  வலி கூடிக்கூடி வந்தது, குழந்தையும் பிறக்கவில்லை. அவர்கள் ஒன்றும் செய்ய முடியாமல் படகை பூவாறு காயலுக்குள் கொண்டுவந்தார்கள். காயலில் அலை குறைவாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் மருத்துவச்சி இல்லாமல் ஒன்றும் செய்யமுடியாது என்ற நிலை வந்தது.

அன்றைக்கு அங்கே மீன்பிடித் துறைகளி வரிவசூல் செய்யும் உரிமைபடைத்தவராக இருந்தவர் துறையிங்கல் கரைநாயர் வலியகடுத்தா. பெரிய அதிகாரமோ பட்டமோ இல்லாதவர். அவருடைய வீட்டை அடைந்த சடையன் அவரை பணிந்து  கொச்சுகாளிப்பிள்ளை பிரசவ வலியால் துடிப்பதாகவும் உதவிசெய்யும்படியும் கேட்டான். அவர் உடனே அவளை கொண்டுவந்து தன் வீட்டுக்குப் பின்பக்கம் இருந்த தென்னந்தோப்பில் கட்டப்பட்டிருந்த குடிசையில் தங்கவைத்தார். துறையிங்கல் குடும்பத்து மருத்துவச்சி அவளை வந்து பார்த்தாள். அவள் உதவியுடன் கொச்சுகாளிப்பிள்ளை ஒரு ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார்.

வலியகடுத்தா நாயருக்கு கொச்சுகாளிப்பிள்ளை கைகூப்பி கண்ணீருடன் நன்றி சொன்னாள். அவருக்கு ஒரு மோதிரத்தையும் பரிசாகக் கொடுத்தாள். அன்றே குழந்தையுடன் கிளம்பி படகில் கடல்வழியாக சென்று கன்யாகுமரியை கடந்துவிட அவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் வலியகடுத்தா அந்த மோதிரத்துடன் ஓர் ஓலையையும் சேர்த்து  நெய்யாற்றங்கரையில் இருந்த மார்த்தாண்ட வர்மாவின் படைத்தலைவன் கண்ணன் மார்த்தாண்டனுக்கு அனுப்பி அச்செய்தியைத் தெரிவித்தார்.

அன்று மாலையே வேணாட்டின் படை வந்து கொச்சுகாளிப் பிள்ளையின் குடிசையைச் சூழ்ந்துகொண்டது. அவள் கையிலிருந்த பிறந்து ஒருநாளே ஆன குழந்தை பிடுங்கி வெட்டி வீசப்பட்டது. அவளை விலங்கிட்டு இழுத்துச்சென்றார்கள். ஆனால் அவள் துறையேற்றத்திற்கு குளச்சலுக்குச் செல்லவில்லை. செல்லும்வழியிலேயே குருதிப்பெருக்கால் உயிர்விட்டாள்.

அன்று நல்ல மழை. கொச்சுகாளிப்பிள்ளையை அவர்கள் இழுத்து செல்லும்போது அவள் ஓர் ஓடையில் கால் தடுக்கி விழுந்தாள். அந்த ஓடையே ரத்தமாக மாறி ஓடியது. அந்த ஓடைக்கே இன்று சோரத்தோடு என்றுதான் பெயர். பழைய மலையாளத்தில் குருதி ஓடை என்று அர்த்தம்.

அந்த விசுவாசத்திற்குப் பரிசாக துறையிங்கல் குடும்பத்திற்கு மார்த்தாண்டவர்மா மகாராஜா  மாடம்பிப் பட்டமும் அரசவையில் அமரும் பதவியும் அளித்தார். படை வைத்துக்கொள்ளும் உரிமை கிடைத்தது. வரிவசூலில் நாலில் ஒன்றை அவர்கள் எடுத்துக்கொள்ளலாம். விளைவாகச் செல்வம் குவிந்தது. துறையிங்கல் மாடம்பிகள் மிகப்பெரிய செல்வாக்கை அடைந்தனர்

ஆனால் பிடிபட்டுச் இழுத்துச் செல்லப்படும்போது கொச்சுகாளிப்பிள்ளை நின்று திரும்பிப்பார்த்து துறையிங்கல் வீட்டை நோக்கி தன் வயிற்றில் இருந்து பெருகிய ஒருதுளி குருதியை எடுத்து சுண்டி வீசி சாபம் போட்டுவிட்டுச் சென்றாள். அந்தச் சாபம் அக்குடும்பத்தில் எப்போதும் இருந்தது. இன்று வரை பெருகி அக்குடும்பத்தை அழித்தது அந்தச் சாபம்தான்.

“இன்றுவரை அந்த சாபம் எப்படி காத்திருந்தது? அதுவும் இருநூற்றைம்பது ஆண்டுகள்?” என்று நான் அச்சுதக் கணியாரிடம் கேட்டேன் என்றான் ஔசேப்பச்சன்.

ஒவ்வொன்றுக்கும் அதற்கான காலம் வரவேண்டும் என்றார் எராடி அச்சுதக் கணியார். வலிய கடுத்தா நாயர்தான் உண்மையில் முதற்பலி. அவர் ஒருநாள் வேலையெல்லாம் முடிந்து தன் மாளிகையை ஒட்டிய குளத்திற்குக் குளிக்கச் சென்றார். நெடுநேரமாகியும் திரும்பவரவில்லை. அவரை தேடிச்சென்றவர்கள் அவர் குளத்தின் படித்துறை அம்பலத்தின் நிலைப்படியில் மல்லாந்து கிடப்பதைப் பார்த்தனர். அவர் உடல் நரம்புகள் இழுபட்டு விரைத்திருந்தது. பற்கள் கிட்டித்திருந்தமையால் அவர் சிரிப்பதுபோலிருந்தது. விழிகள் இரு சோழிகள் போல நிலைகுத்தியிருந்தன. ஒரு தீயதெய்வத்தின் வெறித்தமுகம் கொண்ட சிலைபோல இருந்தார் அவர்.

அது நெஞ்சுக்குத்தாக இருக்கலாம் என்று முதலில் சொன்னார்கள். ஆனால் அவர்களின் இல்லத்தில் அன்றிருந்த சோதிடரான மூத்தேடன் பாச்சு கைமள் அந்த உடலை நன்றாகப் பார்த்துவிட்டு ஒன்றைச் சுட்டிக்காட்டினார். அவருடைய பற்களில் மரச்சிம்புகள் இருந்தன. அவர் மரத்தை கடித்து இறுக்கி அப்படியே விழுந்திருக்கிறார். தரையில் கிடந்தவரின் வாயில் எப்படி மரச்சிம்புகள் வந்தன? அந்த நிலையும் படியும் கல்லால் ஆனவை.

குளத்தம்பலத்திற்குச் சென்று கூர்ந்து பார்த்தபோது அது எப்படி நடந்தது என்று கண்டுபிடித்தார்கள். குளத்தின் படித்துறையின் மேல் அமைந்த அம்பலத்தின் சரிந்த கூரை விளிம்பில் உள்ள மர உத்தரத்தில் வலிய கடுத்தாவின் பற்கள் படிந்த தடம் இருந்தது. அது எட்டடி உயரம். அவர் நிலத்திலிருந்து எம்பிப்பாய்ந்து அந்த மரத்தை கடித்து இறுக்கியபடி தொங்கிக்கிடந்து துடித்துடித்து அப்படியே விழுந்து இறந்திருக்கிறார். சந்தேகமே இல்லாமல் அது யக்ஷி அடித்து நிகழ்ந்த மரணம்.

பாச்சு கைமள் பிரஸ்னம் வைத்தபோது அதி உக்கிரமான யக்ஷி ஒருத்தி அந்த வீட்டில் குடியிருப்பதை கண்டுகொண்டார். அது கொச்சுகாளிப் பிள்ளைதான். அவள் மேஷ நட்சத்திரத்தில் பிறந்தவள். செத்தபின் ஆட்டுக்கொம்புகள் கொண்ட பேய்வடிவமாக ஆனாள். அவளுக்கு மேஷினி என்று பெயரிட்டார் பாச்சுக் கைமள்.

மேஷினி ரக்த யக்‌ஷி. எவர்மீதாவது தீராத ரத்தப்பழி கொண்டவர்கள் அடையும் வடிவம் அது. அவர்களின் உடலெங்கும் ரத்தம் வழிந்து சொட்டிக்கொண்டே இருக்கும். அதற்காக அவர்கள் ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டே இருப்பார்கள். மனிதர்களைக் கொன்று ரத்தம் குடிப்பார்கள். உயிருடன் இருப்பவர்கள்மேல் தூங்கும்போது வந்து படிந்து உதடுகளில் உதடு பொருத்தி ரத்தத்தை உறிஞ்சி கொள்வார்கள். அவர்கள் வெளிறி உடல்மெலிந்து சடலம்போல ஆகி நடமாடுவார்கள். ரத்தயக்ஷிகள் கருக்குழந்தைகளின் ரத்தத்தைக்கூட உறிஞ்சி உண்பார்கள் அக்குழந்தைகள் மாங்காய்கொட்டை போல வெளிறி சூம்பி உயிரில்லாமல் பிறக்கும். அவற்றை எளிதில் கண்டுகொள்ள முடியும். அக்குழந்தைகள் வெளியே வரும்போதே அஞ்சி கண் திறந்து மலைத்து செத்த நிலையில் இருக்கும்

மேஷினியை ஓட்டுவதற்காக வந்த மூன்று பூசாரிகள் அவளை கண்டு அலறி ஓடினார்கள். அவள் எட்டு கொம்புகள் கொண்ட ஆட்டுத்தலையுடன் தோன்றினாள். ரத்தம் சொட்டும் நாக்கு நீண்டு நாகம் போல படமெடுத்தது. ஒருவன் செல்லும்வழியிலேயே நெஞ்சடைத்து இறந்தான். ஒருவன் மனம் உடைந்து பைத்தியமானான். கடைசியில் காட்டாத்துறையிலிருந்து நெடுங்கறுத்தான் மலையன் என்னும் பூசாரி அழைத்துவரப்பட்டார்.

நெடுங்கறுத்தான் மலையன் பன்னிரண்டு நாட்கள் பூசைசெய்தார். முதல்நாள் கோழி பலி. பின்னர் ஆடு, முட்டனாடு என்று போய் இறுதிநாள் எருமைபலி.அன்று அவன் முன் ஆட்டுத்தலையுடன் மேஷினி தோன்றினாள். அவள் கையில் குழந்தையை வைத்திருந்தாள். குழந்தை அவளுடன் தொப்புள்கொடியால் இணைக்கப்பட்டிருந்தது. அவளும் குழந்தையும் சொட்டச்சொட்ட ரத்தத்தால் நனைந்திருந்தனர். மேஷினியின் கையில் திரிசூலம் இருந்தது. அது அவளுக்கு சிவனருள் இருக்கிறது என்பதற்கான சான்று. அவளுடைய தீராப்பழியை மயான ருத்ரன் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அவளை அங்கிருந்து விரட்ட எவராலும் முடியாது என்று நெடுங்கறுத்தான் மலையன் சொன்னார். அது அவள் காலகாலனிடம் பெற்றுவந்த வரம். ஆனால் அவளை அடங்கியிருக்க செய்ய முடியும். அவளை அந்த வீட்டிற்குள்ளேயே ஓர் அறையில் அவன் பிரதிஷ்டை செய்தார். ஓவியப்பிரதிஷ்டை. அவர் சொன்ன வடிவில் ஓவியர் நாணுக்குட்டன் ஆசாரி அவள் வடிவை சுவரில் வரைந்தார். எட்டு கொம்புகள் கொண்ட ஆட்டுத்தலையுடன் இடையில் கருக்குழந்தையுடன் குருதியில் நனைந்து நின்றிருக்கும் தோற்றம். சடைமுடிக்கற்றைகள். இடக் கையில் சூலம், வலக்கை குழந்தையை பிடித்திருந்தது.

அந்த ஓவியத்திற்கு ஆண்டுக்கு ஒருமுறை குருதிபலியும், அமாவாசை தோறும் அன்னப்படையலுடன் பூசையும் அளிக்கப்படவேண்டும் என்று நெடுங்கறுத்தான் மலையன் சொன்னார். நாள்தோறும் அவள் முன் எண்ணை விளக்கு ஏற்றப்படவேண்டும் என்றும் செவ்வரளியோ தெச்சியோ மாலையாக சூட்டப்படவேண்டும் என்றும்  வகுத்தார். அவ்வாறு மேஷினி என்னும் ரத்தயக்ஷி துறையிங்கல் குடும்பத்தின் தென்மேற்கு மூலையில் ஓரு சிறு அறையில் கோயில்கொண்டாள். அவள் ஏழு தலைமுறைக்காலம் அங்கே அடங்கியிருந்தாள்.

நூறாண்டுகளுக்கு முன் அவளுக்கு பூசை நின்றது. துறையிங்கல் கரைநாயர் குடும்பம் வேலுத்தம்பி தளவாயை ஆதரித்தமையால் வெள்ளைக்காரர்களால் அழிக்கப்பட்டது. குடும்பத்தலைவர் ராஜமுகுந்தன் நாயரை ரெசிடெண்ட் துரை கர்னல் மன்றோ சங்கிலி போட்டு கட்டி இழுத்து சென்று விசாரணை செய்து அவமானப்படுத்தி நாடுகடத்தினார் அந்த வீடு எரியூட்டப்பட்டது.

அதன்பின் வெள்ளைக்காரர்களின் அனுதாபத்தை சம்பாதித்து மீண்டுவந்து புதியவீட்டைக் கட்டிய  . மருமகனாகிய ராஜபிரபாகரன் நாயர் அங்கே ரத்த யக்ஷியை நிறுவவில்லை. விளைவாக ஒரு தலைமுறைக்குள் அங்கே எட்டு சாவுகள். ராஜபிரபாகரன் நாயர் தன் படுக்கையில் விரைத்து விழித்து இளித்து செத்துக்கிடந்தார். அவர் வாயிலும் மச்சின் உத்தரத்தின் தூள் இருந்தது. அவருடைய ஆண்குறி வழியாக விந்துவும் குருதியும் வழிந்து கட்டிலுக்கு கீழே தேங்கியிருந்தது.

ஆகவே மீண்டும் மந்திரவாதிகள் வரவழைக்கப்பட்டார்கள். நெடுங்கறுத்தான் மலையனின் குடும்பத்தைச் சேர்ந்த ராமப்பன் மலையன் வந்து பன்னிரண்டு நாள் குருதிபூசை செய்து ரத்த யக்ஷியை நிலைக்கு நிறுத்தினார். அவளுடைய ஓவியம் முன்பிருந்தபடியே புதிய வீட்டின் தென்மேற்கு மூலையில் வரையப்பட்டது. அவளுக்கான படையலும் கொடையும் தீபமும் நடந்தன. குடும்பம் மீண்டும் நிம்மதி அடைந்தது.

இது நடந்து ஏழாவது தலைமுறையில், ராஜமார்த்தாண்டன் நாயரின் காலகட்டத்தில், மேஷினி என்னும்  ரத்த யக்ஷி மீண்டும் எழுந்தாள். அந்தக்குடும்பத்தையே அவள் கைப்பற்றி ஆட்சி செய்தாள். அவர்களின் குருதியை உறிஞ்சிக்கொண்டிருந்தாள்

எராடி அச்சுதக் கணியார் சொன்னார். நான் கவிடி நிரத்திப் பார்த்தபோது கண்டது இது. 1810ல் செய்யப்பட்ட பூசையின் பலன் 1985ல்  முடிந்துவிட்டிருந்தது. மேஷினி யக்ஷி ஆற்றல்பெற்று வீட்டை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டாள். வீட்டில் யக்ஷி அபகாரம் இருப்பதை நான் பலமுறை உறுதிசெய்துகொண்டேன். அந்த வீட்டுக்குள் சென்றால் யாருக்கானாலும் அந்த அபிப்பிராயம் வந்துவிடும்

“எப்படி?” என்று நான் கேட்டேன் என்றான் ஔசேப்பச்சன்

“சார் ,அவர்கள் அந்த வீட்டின் இருபத்தேழு ஜன்னல்களில் ஒன்றைக்கூட திறப்பதில்லை. அத்தனை கதவுகளும் பூட்டித்தான் இருக்கும். உள்ளே மூச்சுமுட்டும் அளவுக்கு தூசியும் ஒட்டடையும் இருட்டும் நிறைந்திருக்கும். மட்கிய துணிகள் மூலைகளில் பூசணம்பிடித்து குவிந்திருக்கும். அந்த வீட்டின் உறுப்பினர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவர்களின் ரத்தத்தை யக்ஷி உறிஞ்சி குடித்துக்கொண்டிருந்தாள். அத்தனைபேரும் வெளிறிச் சூம்பிப்போயிருப்பார்கள்” என்றார் அச்சுதக்கணியார்

நான் “அவர்கள் நோயாளிகள்” என்றேன்

“அந்த நோய் எப்படி வந்தது? அதைத்தான் சொல்கிறேன். ஆண்களில் யக்ஷி அபகாரம் இருப்பவர்களிடம் முதலில் நிகழும் ஒன்று உண்டு. அவர்கள் அத்தனைபேரும் ஆண்மை அற்றவர்களாக ஆகிவிடுவார்கள். அந்த வீட்டின் அத்தனை ஆண்களும் அப்படித்தான்”

நான் “ஓ” என்றேன்

“அந்த வீட்டிலிருந்து அவர்களை முதலில் இடமாற்றம் செய்யவேண்டும் என்றேன். அந்த யக்ஷியை அங்கெயே நிறுத்தி சாந்தி செய்யவேண்டும். பூசைகளை முறைப்படிச் செய்யவேண்டும். எல்லாவற்றையும் நான் முறைப்படி சந்திரன் பிள்ளையிடம் சொன்னேன். அவர் செய்யவில்லை. அவருக்கு அதில் உடன்பாடு இல்லை”.

”ஏன்?”

“அவர்கள் ஒட்டுமொத்தமாகச் செத்தால் அவர்களின்  சொத்து முழுக்க அவருக்குத்தானே? அவருடைய எண்ணம் அதுதான்”

“ஆனால் அவர்கள் அவருக்குச் சொத்தை கொடுக்கவேண்டுமென்ற அவசியம் இல்லையே?” என்று நான் கேட்டேன்

“ஆமாம், ஆனால் அவர்களால் கொடுக்காமலிருக்க முடியாது. அவர்களின் வாழ்க்கை முழுக்கமுழுக்க அவரை நம்பித்தான். அவர் ஒவ்வொருநாளும் அவர்களுக்கு கஞ்சாவும் அபினும் கொண்டுசென்று கொடுப்பார்”

“கஞ்சாவா?”

“ஆமாம், கஞ்சா. அது இல்லாமல் அவர்களால் தூங்கமுடியாது. சிலருக்கு அபின் சாப்பிடாவிட்டால் வயிற்றுப்போக்கு வந்துவிடும்… அதுதான் சொன்னேனே, அந்த வீட்டில் யக்ஷி இருக்கிறாள். அவள் இரவில் இறங்கி நடமாடுவாள். அவள் யாரையும் தூங்கவிடமாட்டாள். இவர்கள் கஞ்சா போதையில் மயங்கினாலொழிய தூங்கவே முடியாது”

“ஓகோ” என்றேன்

“ஒருநாள் கஞ்சாவை நிறுத்தினால்கூட அவர்கள் சந்திரன் பிள்ளையின் காலில் விழுந்து கதறிவிடுவார்கள்… சொத்தை கொடுக்காமலா இருப்பார்கள்?”

“நான் விசாரிக்கிறேன் ”என்றேன்

“அது சட்டப்படி குற்றம் அல்ல சார் அவர்கள் அவனை நம்பியே இருந்தார்கள். ஆனால் தர்மப்படி அது தவறு” என்றார் அச்சுதக் கணியார்

நான் எழுந்துகொண்டபோது மிகவும் தளர்ந்திருந்தேன். நடக்கவே முடியவில்லை. இதையெல்லாம் நான் நம்புகிறேனா? இல்லை. ஆனால் இவை என்னை ஆழமாக பாதிக்கின்றன. என்னை தூங்கவிடாமல் செய்கின்றன. இந்த வாழ்க்கை நாமறிந்த ஐம்பது நூறு ஆண்டுகள் வட்டத்தைச் சேர்ந்தது அல்ல, இங்குள்ள நாம் அறியக்கூடிய விதிகளால் ஆட்டுவிக்கப்படுவது அல்ல என்றால் நாம் எப்படி வாழமுடியும்? எதை நம்பி முடிவுகள் எடுக்கமுடியும்? சரித்திரம் பிரம்மாண்டமானது. எண்ணி எண்ணி தொடமுடியாதது. அதிலிருந்து பேய்களும் சாபஙகளும் எழுந்துவந்து என்னை கவ்வும் என்றால் எனக்கு என்னதான் பாதுகாப்பு?

“பேயும் சாபமும் இருக்கிறதோ இல்லையோ, சரித்திரம் இருக்கிறது. அதன் அத்தனை நோயும் பீடையும் நம்மை தொடரத்தான் செய்கின்றன” என்றார் குமாரன் மாஸ்டர் “ஒவ்வொரு காலகட்டத்தையும் பார். அதை ஆட்டுவிப்பது அதற்கு முந்தையகால சரித்திரம்தான். மார்த்தாண்ட வர்மாவின் காலகட்டத்தில் அத்தனை ரத்தம் ஏன் பெருகியது? அது சோழர்கால சரித்திரத்தின் பீடை!”

“நாம்  இன்று தேசப்பிரிவினைக் காலகட்டத்து சரித்திரத்தின் பீடையால் ஆட்டுவிக்கப்படுகிறோமா?”என்று நான் கேட்டேன்.

“யாருக்குத்தெரியும், நாம் வெறும் எறும்புகள்… நம் தலைக்குமேல் என்னென்ன நிகழ்கின்றன என்று தெரியாத சிறு உயிர்கள்” என்றான் ஔசேப்பச்சன்

“அதன்பின் என்ன செய்தீர்கள்?” என்று ஸ்ரீதரன் கேட்டான்

“என்ன செய்ய? பலநாட்கள் சோர்ந்து அமர்ந்திருந்தேன். திடீரென்று மீண்டும் ஒரு வெறி எழுந்தது. நேராக சந்திரன் பிள்ளையை போலீஸை விட்டு அழைத்துவரச் சொன்னேன். அவர்கள் அவரை இழுத்துவந்தனர் என் முன் அவர் அமர்ந்தபோது பயம் தெரிந்தது. சட்டென்று அவனை மாறிமாறி அறைந்தேன். அவர் உடைந்துபோய் அழுது மன்றாடினார்” என்று ஔசேப்பச்சன் சொன்னான்.

அவரை  அடித்து உதைத்து அவருடைய தன்னிலை சிதறச்செய்து என் காலில் விழுந்து கைகூப்பி மன்றாட வைத்தபின்  அவரிடம் கேட்டேன் “சொல், அவர்களைப்பற்றி சோதிடர் சொன்னதை ஏன் மறைத்தாய்?”

“சார், அதெல்லாம் கேஸுக்கு தேவையில்லை என்று நினைத்தேன். ஆனால் சோதிடர் சொன்னது உண்மை அல்ல. நான் எல்லா பரிகாரங்களுக்கும் ஏற்பாடு செய்தேன்… காட்டாக்கடையிலிருந்து நெடுங்கறுத்தான் மலையனின் வம்சத்தை சேர்ந்த கொச்சுமுட்டன் மலையனை நேரில்போய் அழைத்துவந்தேன். அவர் எல்லா பூசைகளையும் செய்தார். ஆனால் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. அங்கே யக்ஷி உண்டா என்று எனக்கு தெரியாது. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. இருந்தால் அந்த யக்ஷி கட்டுப்படவில்லை. அவர்கள் அங்கிருந்து விலக மறுத்துவிட்டார்கள். இதுதான் உண்மை…”

மீண்டும் அறைந்தபோது அவர் அழுதபடி “சார் உண்மையாகவே நான் எல்லாவற்றையும் செய்தேன்… அந்த பூசாரிதான் யக்ஷி அடங்கமறுக்கிறாள் என்று சொன்னான்” என்றார்

அவர் சொல்வது உண்மை என்றே தோன்றியது. ஆகவே அவரை போக விட்டேன். நான் அடித்ததைப்பற்றி வக்கீலிடம் போய் புகார் சொன்னால் விபச்சார வழக்கில் கைதுசெய்து உள்ளே அனுப்பிவிடுவேன் என்று சொல்லி மிரட்டி அனுப்பிவைத்தேன்.

மறுநாளே கிளம்பி காட்டாக்கடைக்குச் சென்றேன். காட்டாக்கடை நெடுங்கறுத்தான் மலையன் குடும்பம் புகழ்பெற்றது. அவர்கள் ஒரு சாத்தன் கோயிலையே நிறுவி பெரிய நிறுவனமாக ஆகிவிட்டிருந்தனர். நான் அதன் தலைமை பூசகர் கொச்சுமுட்டன் மலையனை நேரில் சந்தித்தேன். துறையிங்கல் குடும்பம் பற்றி கேட்டேன். விசாரணையில் தெரியவந்ததை விரிவாகச் சொல்லி  அங்கே பூசகர் கண்டது என்ன என்று விசாரித்தேன்

“சோதிடர் சொன்னதெல்லாம் உண்மை, அங்கே ரத்தயக்ஷி இருக்கிறாள். நான் அவளை நேரில் பார்த்தேன்.நாங்கள் அவளை கிடாய்த்தி என்று சொல்வோம். ஆட்டுக்கொம்புள்ள யக்ஷி” என்றார் கொச்சுமுட்டன் “அந்த வீட்டில் தென்மேற்கு அறையை நீங்கள் போய் பார்க்கலாம். மரத்தாலான அறை. அதில் சுவரில் சுதையில் வரையப்பட்ட ரக்தயக்ஷியின் உருவம் இருக்கிறது. ஆட்டுத்தலையுடன் குழந்தையை கையில் வைத்தபடி நின்றிருக்கிறது. அதுதான் அந்தக்குடும்பத்தை அழித்தது. இருநூற்றைம்பது ஆண்டுக்கால வஞ்சம் அது”

“நீங்கள் பூசை செய்து அவளை அடக்கமுடியவில்லையா?” என்றேன்

“நான் மூன்றுமுறை பூசை செய்தேன். ஒவ்வொருமுறையும் அமாவாசையில் முடியும் பதினெட்டு நாள் பூசை. கொடை, படையல், பலி. எல்லாமே முறைப்படிச் செய்தேன். அந்த யக்ஷியை பிடித்து அறையில் அடைத்தபிறகுதான் திரும்பினேன்… ஆனால் மூன்றுமுறையும் அவள் வெளியே வந்துவிட்டாள்”.

“வெளியே என்றால்?”

“நான் பூசைசெய்து அவளை ஆவாகித்து அந்த அறையில் புதைத்த செம்புத்தகடு வெளியே கிடக்கும்… அந்தவீட்டு முற்றத்தில்… காலையில் யாராவது அதைப் பார்ப்பார்கள்”

“அந்த வீட்டில் யாராவது அதை எடுத்திருக்கலாம் அல்லவா?”

“இல்லை, முதல்முறையே தகடை அறைக்குள் ஆழமாகப் புதைத்தபின் அறையை பூட்டி சாவியை நானே கொண்டுவந்தேன். பூட்டிய வாசல் முன் விளக்கேற்றச் சொல்லிவிட்டு வந்தேன். பூட்டு அப்படியேதான் இருந்தது. ஆனால் உள்ளே தரையில் மண் கிளறப்பட்டு தகடு வெளியே வந்து கிடந்தது…” என்றார் மலையன் “இரண்டாம் முறை ஒரு பெரிய பூட்டை நானே கொண்டு சென்று பூட்டினேன். மூன்றாம் முறை அதன்மேல் ஒரு தலைமயிரை சுற்றிவைத்தேன். அதன்மேல் எவராவது கையை வைத்தாலே தெரிந்துவிடும்… பூட்டு எவராலும் தொடப்படவில்லை”

“ஓ”

“மூன்றுமுறைக்குமேல் மந்திரவாதம் செய்யக்கூடாது. என் குடும்பத்திற்கு ஆபத்து. ஒவ்வொன்றுக்கும் ஒரு காலஹரண கட்டம் உண்டு. யக்ஷியை கட்டுப்படுத்துவதற்கான காலம் முடிந்துவிட்டது என்று முடிவுசெய்தேன்… அதன்பின் அந்தப்பக்கம் போகவில்லை. சந்திரன் நாயரிடமும் சொல்லிவிட்டேன்”

“அதன்பிறகு வேறெந்த மந்திரவாதியும் அங்கே செல்லவில்லையா?”

“இல்லை. நங்களே விலகியபின் கேரளத்திலோ தமிழ்நாட்டிலோ எவரும் அங்கே செல்ல துணியமாட்டார்கள்”

“அப்படியென்றால் அதற்கு பரிகாரமே இல்லையா?”

“இல்லை. நஸ்ரானியே, பாவத்துக்கு பரிகாரம் உண்டு என்பதுபோல மாயை வேறில்லை. செய்தவற்றுக்கு விலைகொடுத்தே ஆகவேண்டும். தள்ளிப்போடலாம். ஆனால் முடிவில்லாமல் தள்ளிப்போடமுடியாது. நிரந்தரமாக தப்பிவிடவும் முடியாது” என்றார் மலையன்.

“நாம் நம் மூதாதையர் செய்ததற்கு பொறுப்பேற்கவேண்டுமா என்ன?” என்று நான் கேட்டேன். ‘அதற்கும் எனக்கு என்ன சம்பந்தம்?”

“ஆமாம். நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள்? காட்டிலா? இல்லையே. மூதாதையர் செப்பனிட்ட நிலத்தில்தானே விவசாயம் செய்து தின்கிறீர்கள்? மூதாதையர் உருவாக்கிய ஊர்களில் தானே வாழ்கிறீர்கள்? நீங்கள் . வைத்திருக்கும் செல்வம் எல்லாமே மூதாதையர் வழியாக வந்ததுதானே? பாவமும் புண்ணியமும் மட்டும் எங்கே போய்விடும்?” என்றார் கொச்சுமுட்டன் மலையன்

நான் ஒன்றும் சொல்லாமல் காணிக்கை வைத்து  வணங்கி விட்டு எழுந்து வந்துவிட்டேன். பலநாட்கள் மீண்டும் அமைதியிழந்து இருந்தேன். வழக்கு வேறெங்கோ சென்றுவிட்டது. யாருமே கொலை செய்யப்படவில்லை. கொல்லப்பட்டிருந்தால் கொன்றவர் இன்று வாழ்பவர் அல்ல, இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டவர். அவரை நாம் தண்டிக்கமுடியாது, தண்டனையைப் பெற்றுக்கொண்டபிறகுதான் அவர் குற்றத்தையே தொடங்கியிருக்கிறார்

குமாரன் மாஸ்டர் “நான் சொல்வதையே மலையனும் சொல்லியிருக்கிறார், வரலாற்றில் இருந்து எவரும் தப்பமுடியாது. நாம் ஒவ்வொருவரும் வரலாற்றுக்கு கப்பம் கட்டவேண்டியவர்கள். கூடவே நம் சந்ததிகளுக்கு வரலாற்றில் கடனை நிறுத்திவிட்டுச் செல்பவர்கள்” என்றார்

ஔசேப்பச்சன் சொன்னான். மேலும் ஆறுமாதம் நான் டெபுடேஷனில் அங்கே இருந்தேன். இன்னொரு முறை நெய்யாற்றின்கரைக்குச் சென்றபோது பூவாறு சென்று அங்கே துறையிங்கல் குடும்பத்தின் பாரம்பரிய வீட்டைப் பார்க்கலாம் என்று தோன்றியது.

“அதுவரை அந்த வீட்டை நீ பார்க்கவில்லையா?” என்று ஸ்ரீதரன் கேட்டான்

பலமுறை பார்த்திருந்தேன். புகைப்படங்களையும் பார்த்தேன். ஆனால் அந்த வீட்டை முழுமையாகப் பார்த்தேன் என்று சொல்லமுடியாது. அது இருநூறு ஆண்டு பழைய வீடு. 1810 ல் கட்டப்பட்டது. ஆனால் பலபகுதிகள் பிற்பாடு கட்டிச் சேர்க்கப்பட்டவை. அதன் மூலக்கட்டிடம் முழுக்கமுழுக்க முற்றிய பலாமாத்தடியால் ஆனது. இப்பகுதிகளில் அதை ’தட்டும்நிரையும்’ என்கிறார்கள். கூரை, சுவர்கள் தரை எல்லாமே மரம். அதை உள்ளே வைத்து அடுத்த பெரிய வீடு 1890ல் கட்டப்பட்டிருக்கிறது . அதற்கு 1932 ல் இரண்டு விரிவாக்கங்கள் கட்டப்பட்டன. 1963 ல்  அதன் முகப்பு புதிதாக செங்கல்லாலும் சுதையாலும் கட்டப்பட்டது.

துறையிங்கல் குடும்பத்தவர் வாழ்ந்தது முழுக்க புதிதாக கட்டப்பட்ட பகுதிகளில்தான். பழைய கட்டிடப் பகுதிகள் நிலவறைகளாகவும் பூசையறைகளாகவும் நீடித்தன. பல பகுதிகள் அறுபது எழுபது ஆண்டுகளாக கைவிடப்பட்டு நிரந்தரமாகவே மூடப்பட்டுவிட்டன. சில அறைகளை மூடி அப்படியே பூட்டியிருந்தனர். பூட்டுகள் துருப்பிடித்து தொங்கின. சில அறைகளை மரசட்டங்கள் வைத்து அறைந்து மூடிவிட்டிருந்தனர். அந்த வீடே ஒரு வரலாறுபோல. பல அடுக்குகள் கொண்டது. அறியப்படாத ஆழங்கள் கொண்டது.

இம்முறை அந்த வீட்டை முழுமையாகவே பார்த்துவிடுவது என முடிவுசெய்தேன். முதல் விஷயம் அந்த யக்ஷி ஓவியத்தைப் பார்க்கவேண்டும். அனேகமாக தென்திருவிதாங்கூரில் மிகப்பழைய ஓவியங்களில் ஒன்றாக இருக்கலாம். உள்ளூர் டிரஸ்டி, எஸ்.ஐ ஆகியோருடன் சென்று அந்த வீட்டை திறந்து பார்த்தேன். ஆசாரிகளைக்கொண்டு வீட்டின் அத்தனை அறைகளையும் உடைத்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தேன்

என் வாழ்க்கையில் அப்படியொரு கொடுங்கனவை கண்டதில்லை. உண்மையில் அங்கே பயங்கரமானவை என்றோ கொடூரமானவை என்றோ ஒன்றுமே இல்லை. வெறும் பழைய உடைசல்கள்தான். ஆனால் என் மனதை கலைத்து பதறச்செய்துவிட்டன. எல்லாமே  முன்பு மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள்தான். ஆனால் அவையெல்லாமே பேய்களாக மாறிவிட்டிருந்தன என்று தோன்றியது.மனிதர்கள் பேய்களாக ஆகக்கூடும் என்றால் பொருட்கள் ஏன் பேய்களாக ஆகக்கூடாது?

மேஜைகளின் நாற்காலிகளின் பீடங்களின் பேய்கள். விதவிதமான உடைசல்கள். சாரட் வண்டிகள். 1913 மாடல் ஜெர்மன் மேக் சைக்கிள்கள்.  பலவகையான கியாஸ் லைட்டுகள், கதகளி கிரீடங்கள், கதகளி உடைகள், யானை நெற்றிப்பட்டங்கள், யானைக்கான நகைகள், குதிரைச்சேணங்கள், கடிவாளங்கள், நூற்றுக்கணக்கான பச்சைக்களிம்படைந்த பழைய பித்தளை செம்பு பாத்திரங்கள்…. அந்த வீட்டுக்குள் வந்து சேர்ந்த எந்தப்பொருளுமே வெளியே போனதில்லை போல. எல்லாமே பேய்கள், பொருட்களாலான பேய்கள். காலத்தால் கைவிடப்பட்டவை உருமாறாவிட்டால் பேய்களோ தெய்வங்களோ ஆகிவிடுகின்றனபோல. வழிபடப்பட்டால் அவை தெய்வங்கள். மறக்கப்பட்டால் பேய்கள்…

அந்த தெற்குஅறைக் கோயிலை பார்த்தேன். 1810ல் கட்டப்பட்ட மரத்தாலான மூலக்கட்டிடத்தின் ஒரு பகுதி அது. அதில் ஒரு கூடமும் நான்கு சிறிய அறைகளும் ஒரு வராந்தாவும் மட்டும்தான் இருந்தன. கூடம் விரிவாக்கப்பட்டுவிட்டது. சமையலறையாக இருந்திருக்ககூடிய சாய்ப்பறை பெரிய கட்டிடமாக மாறியிருந்தது. ஆகவே ஒரு பொது அறையும்  சிற்றறைகளும் மட்டுமே எஞ்சின. அதன் தென்மேற்கு மூலையில் இருந்த அறைதான்  மேஷினி யக்ஷியின் கோயில்

அதன் வெளிப்பக்கத்தில் பெரிய பித்தளைப் பூட்டு துருப்பிடித்து தொங்கியது. ஆசாரி அதை உடைக்க தயங்கினார்.நான் சுத்தியலை வாங்கி அதை உடைத்தேன். உள்ளே இருண்ட சிறிய அறை. இரண்டு ஆள் உயரமானது. மேற்கூரையும் சுவர்களும் மரம். சன்னலகள் ஏதும் இல்லை. மூன்றுபக்கமும் சுவர்தான். உள்ளே செல்லும் வாசல் சிறியது குனிந்து உள்ளே நுழையவேண்டும். முதலில் ஒட்டடைக்குச்சியை உள்ளே விட்டு சிலந்திவலைகளை அகற்றினேன். கொஞ்சம் தூசியையும் தட்டியபின் லைட்டை உள்ளே அடித்துப் பார்த்தேன்.

மரச்சுவர்மேல் சுதைபூசி அந்த ஓவியத்தை வரைந்திருந்தனர். மனித அளவான ஓவியம். பெண்ணின் உடலுடன் கையில் குழந்தையுடன் நின்றிருந்தது. அவள் சிவப்பு ஆடை அணிந்து செந்நிறமான உடல்கொண்டிருந்தாள். கரியமுகம். ஆனால் தலையில் ஆட்டுக்குரிய எட்டு கொம்புகள். இடையிலிருந்த குழந்தை இன்னும் பிறக்காமல் கருவில் இருப்பதுபோலிருந்தது. மூடிய கண்களுடன் கையை வாயில்விட்டு சுவைத்தது. அதன் வெண்ணிறமான தொப்புள்கொடி சுருண்டு அவளுடைய இடைக்குக்கீழே நுழைந்திருந்தது. அவள் காலடியில் ரத்தம் பெருகுவதுபோல. என்றோ பெருகிய ரத்தம். உலராமல் ,வண்ணம் மாறாமல், கனவில் நினைவில் கலையில் நிகழ்ந்துகொண்டிருந்தது

அவள் கண்கள் வெறித்து என்னை பார்த்தன. திறந்த வாயில் குருதிபோல நாக்கு. கோரைப்பற்கள். சிவந்த பெரிய முலைகளின்மேல் குடல்சுருள்களால் ஆன மாலை. முதற்கணம் அவள் உருக்கொண்டு எழுந்து வருவதுபோல பிரமை எழுந்தது. நிலைத்த பார்வையுடன் பார்த்தபோதுதான்  ஓவியமாக  மாறி சுவரில் பதிந்தாள். ஆயினும் விழிகள் வெறித்திருந்தன. இவ்வுலகையே அழித்தாலும் வெறியடங்காதவை. என்னுடன் வந்த அனைவரும் நின்றுவிட்டனர். நான் விளக்குடன் உள்ளே சென்றேன்

நான் அந்த அறையை கூர்ந்து பார்த்தேன். ஏன் பார்த்தேன் என்று இன்னும் கூட தெளிவில்லை. இப்போது சொல்லலாம், போலீஸ்காரன் பழக்கம் என்று. போலீஸ்காரர்களின் உள்ளே அவர்களை அறியாமலேயே ஒரு சந்தேகம் விழுந்துகிடக்கும். ஏனென்றால் அவர்கள் எல்லாவற்றையும் கிரிமினலின் பார்வையில் பார்ப்பார்கள். குற்றங்களை மானசீகமாக ஒருமுறை செய்து பார்த்துவிட்டிருப்பார்கள்.

அந்த அறையின் சுவர்களிலிருந்த மரப்பலகைகளை தட்டிப்பார்த்தேன். உறுதியான தடித்த பலகைகள். அனைத்துமே ஒரே ஓசையை காட்டின. ஒரு மரப்பலகை சற்றே வேறுபட ஒலித்தது. அதை காலால் உதைத்தபோது அசைந்தது.

வெளியே வந்து இன்னொரு வாசல் வழியாக நுழைந்து அந்த பூசையறைக்கு பக்கத்லிருந்த சிறிய வைப்பறைக்குள் சென்றேன். மிகக்குனிந்தே செல்லவேண்டிய சிறிய அறை. அதற்குள் ஏராளமான பழைய சீனத்து பீங்கான் ஜாடிகள் இருந்தன. அவற்றின்மேல் தூசும் பூசணமும் படிந்திருந்தன. குனிந்து தூசியின் வழியாக அந்த அறையின் மரச்சுவரை அடைந்தேன். அதன்மேல் டார்ச் அடித்து தேடினேன்

நான் எண்ணியது சரிதான். அந்த அறையிலிருந்து யக்ஷி இருந்த பூஜையறைக்குள் செல்லமுடியும். அது வாசல் அல்ல. ஆனால் அந்தப் பலகையை பெயர்த்து எடுத்தபின் மீண்டும் பொருத்தியிருந்தனர். நான் அதை சிலமுறை அடித்தபின் மெல்ல அகற்றினேன். ஒருவர் தவழ்ந்தபடி யக்ஷி இருந்த பூசையறைக்குள் செல்லுமளவுக்கு திறப்பு உருவானது

நான் ஔசேப்பச்சனிடம் “அதை யார் உருவாக்கினார்கள்?” என்றேன்

“அந்த கட்டிடத்தை கட்டிய ஆசாரி அதை உருவாக்கவில்லை.து அங்கே குடியிருந்த எவராலோ சட்டுவம் கடப்பாரை போல பல பொருட்களைக்கொண்டு வெட்டியும் நெம்பியும் உருவாக்கப்பட்டது” என்றான் ஔசேப்பச்சன்

“யார்?”

“அந்த வழி தொன்மையானதும் அல்ல. அந்தப் பலகை பெயர்க்கப்பட்ட வெட்டுத்தடங்கள் மரச்சுவரில் இருந்தன. அவை வண்ணம் மாறவில்லை”

“அப்படியென்றால் யார்?” என்றேன். அனைவருமே ஆர்வம்கொண்டு இருக்கையின் விளிம்புக்கு வந்துவிட்டோம்

“அந்த வீட்டில் இருந்த ஒருவர்… அவர்தான்  கொச்சுமுட்டன் மலையன் புதைத்துவைத்த தகடுகளை எடுத்து வெளியே போட்டிருக்கவேண்டும்” என்றான் ஔசேப்பச்சன்.  “யக்ஷி அங்கே நீடிக்கவேண்டும் என விரும்பியவர், யக்ஷியை அங்கே நிலைநிறுத்தியவர்”

“சந்திரன்பிள்ளையா?”

“இல்லை, அவர் அங்கே நுழைய வாய்ப்பில்லை”

“யார் என்று சொல்லுடா நாசம்பிடிச்ச கிறிஸ்தியானி..” என்றார் குமாரன் மாஸ்டர்

சொல்கிறேன். நான் எவரை விசாரிக்காமல் விட்டுவிட்டேன் என்று எண்ணி எண்ணிப் பார்த்தேன். யார்? இத்தகைகய ஒரு வீட்டில் வந்துசெல்லக்கூடிய, நெருக்கமான இன்னொருவர் யார்? இரண்டுநாட்கள் கழித்து ஒரு எண்ணம் கிடைத்தது. எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்களுக்கு நன்றி…. அவருடைய நாலுகெட்டு வீடு பற்றிய நாவல்களில் வீட்டுக்குள்ளேயே வாழும் நாயர் பெண்களுக்கு இருக்கும் ஒரு வெளியுலகத் தொடர்பு சலவைகாரிகள்.

“ஆம், இங்கே அப்படி ஒரு கதாபாத்திரம் உண்டா?” என்று குமாரன் மாஸ்டர் கேட்டார்

ஆமாம், அவள் பெயர் நாணி. வெளுத்தேடத்தி நாணியம்மைக்கு எழுபத்தேழு வயது. கடைசிவரை மாதம் ஒருமுறை வந்து சென்றுகொண்டிருந்தாள். அவர்கள் துணிகளை சலவைக்கு போடுவதில்லை. பெண்கள் விலக்காகும்போது அணியும் துணிகளை மட்டும் வெளுக்கப்போடுவார்கள். அதற்கு பெரிதாகப் பணமும் கொடுத்திருக்கவில்லை. ஆனால் நூறாண்டுகளுக்குமுன் துறையிங்கல் குடும்பத்தால் கொடுக்கப்பட்ட இரண்டு ஏக்கர் நிலத்தில்தான் அவர்கள் வீடு கட்டி குடியிருந்தார்கள். ஆகவே அந்த நன்றிக்கடனுக்காக வந்துசென்றுகொண்டிருந்தாள்

அவளை வரவழைத்து விசாரித்தேன். கிழவி மானசீகமாக இந்த உலகை விட்டு போய்விட்டது. ஆகவே கேள்விகேட்டு பதில் வாங்க முடியாது. மிரட்டல் கெஞ்சல் எதுவுமே அவள் வரைச் சென்று சேராது. திரும்பத்திரும்ப பேச்சை துறையிங்கல் குடும்பத்தை நோக்கிக் கொண்டுவந்து பேசவைப்பதுதான் ஒரே வழி. மூன்றுமுறை வரவழைத்து, நாலரை மணிநேரம் பேசவைத்ததில் பத்து நிமிடம் பயனுள்ள தகவல்கள் கிடைத்தன.

“அந்த வழியை உருவாக்கியவள் ராஜமார்த்தாண்டன் நாயரின் தங்கை சுமங்கலை” என்று ஔசேப்பச்சன் சொன்னான். நாங்கள் திகைப்பதை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்

“திகைப்பாகத்தான் இருக்கிறது, ஆனால் சாத்தியம் அதுதான்” என்று குமாரன் மாஸ்டர் சொன்னார்

சுமங்கலைதான் அந்த வீட்டின் முதல் வலிப்பு நோயாளி. அவளுக்கு பத்தொன்பது வயதிலேயே வலிப்பு வந்துவிட்டது. பிறகு தொடர்ந்து வலிப்பு வந்தது. மாதம் நாலைந்துமுறை வரும். அவருடைய எல்லா நடத்தைகளும் நரம்புநோயாளிக்குரியவை. உண்மையில் அந்தக் குடும்பத்திற்கு முழுக்க நரம்புநோய் சுமங்கலையிடமிருந்தே தொற்றியது

சுமங்கலை மிகமிக ஆவேசமான பெண்.ஓர் இடத்தில் ஒடுங்குபவள் அல்ல. வீடு முழுக்க அலைபவள். அத்தனைபேரையும் தாக்குபவள், கூச்சலிடுபவள். நெடுங்காலம் அந்த வீட்டில் இரவுபகலாக அவள் கூச்சல் கேட்டுக்கொண்டிருந்தது. அவள்தான் மெய்யான யக்ஷி. அவள் அந்த மேஷினி என்னும் ரத்த யக்ஷியை தன் மேல் ஏற்றிக்கொண்டாள். ரக்த யக்ஷியாகவே அந்தக் குடும்பத்தில் திகழ்ந்தாள். மொத்தக்குடும்பத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தாள். அனைவரையும் நரம்புநோயாளிகள் ஆக்கினாள்.

மாஸ்டர் இங்கே ஏற்கனவே சொன்னதுதான். அந்தக் குடும்பத்திற்கு உரிய  பொதுவான கதையை சுமங்கலையே உருவாக்கினாள். அவர்கள் அனைவருமே ரக்த யக்ஷியின் அடிமைகள் என நம்பச்செய்தாள். உணர்வுரீதியான, அறிவார்ந்த ஓர்  ஆதிக்கம் அது. அதிலிருந்து அவர்கள் எவருமே தப்பவில்லை என்றான் ஔசேப்பச்சன்.

“தப்புவது அத்தனை எளிதல்ல” என்று குமாரன் மாஸ்டர் சொன்னார். “ஒன்று இதற்கு இத்தனைபெரிய வரலாற்றுப் பின்னணி இருக்கிறது. மிக நம்பகமான பின்னணி. அது தொன்மமாக கனிந்திருக்கிறது. வீட்டுக்குள்ளேயெ உருவம் கொண்டு நின்றிருக்கிறது. அது அவர்கள் அத்தனைபேருடைய ஆழ்மனதிலும் ஏற்கனவே இருப்பது. அவர்களின் கனவுகளாக வாழ்வது. அத்தனை உக்கிரமான ஒன்றில் இருந்து தப்பவே முடியாது”

“இன்னொன்று சுமங்கலையின் குணாதிசயம். அவள் அதை ஒரு சூழ்ச்சியாக திட்டமிட்டு செய்திருந்தால் இவர்களின் ஆழ்மனசுக்கும் அது சூழ்ச்சி என தெரிந்திருக்கும். அவளே அதில் ஈடுபட்டு அதுவாகவே ஆகி நின்றிருக்கையில் அதை கடந்துசெல்லவே முடியாது” என்று குமாரன் மாஸ்டர் தொடர்ந்தார்

“மனநோயாளிகள் மற்றும் நரம்புநோயாளிகளின் மனம் மிகமிக ஆற்றல்கொண்டது. ஏனென்றால் அதற்கு பரவலும் சிதறலும் இல்லை. மிகவும் குவிதல் கொண்டது அது.மாபெரும் யோகிகளுக்குரிய குவிதல் .ஒன்றிலேயே ஒற்றைப் புள்ளியிலேயே அது பல மாதங்கள், ஏன் பற்பல ஆண்டுகள் நிலைகொள்ளும். அலைபாயும் தன்மைகொண்ட சாதாரண மனங்கள் அந்த ஆற்றலை எதிர்கொள்ளவே முடியாது. அவை மனநோயாளியின் மனங்களுக்கு முன் அடிபணிந்துவிடுவதே வழக்கம்”

“ஆகவேதான் உண்மையாகவே நம்பி தன்னை தெய்வம் என்று சொல்லும் மனநோயாளிகளை எளிய மனிதர்கள் தெய்வமாகவே வழிபடுகிறார்கள். தானே உலகின் மையம் என நம்பும் தன்னாணவ மனநோயாளிகளை தலைவர்களாக ஏற்றுக்கொள்கிறார்கள். உலகம் முழுக்க உக்கிரமான மனநோயாளிகள் பேரரசர்களாக, சர்வாதிகாரிகளாக , மதத்தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். மனநோயின் ஆற்றல் நம்பமுடியாத அளவு பெரியது.சாதாரண மனங்கள் அதன் சூறாவளியில் வெறும் சருகுகளாக சுழன்று பறக்கும்” குமாரன் மாஸ்டர் சொன்னார்

“அந்த ரத்த யக்ஷி என்ற வடிவத்தை அவள் பயன்படுத்திக்கொண்டாள் இல்லையா? ஆகவேதான் அந்த ரக்தயக்ஷியை கட்டுவதற்கான முயற்சிகளை அவள் முறியடித்தாள்” என்றேன்

”அதை அவள் அறிந்து செய்திருக்கவேண்டியதில்லை. அவள் ஆழ்மனமே அதைச் செய்திருக்கலாம். அவள் அறியாமல் எல்லாம் நிகழ்ந்திருக்கலாம்” என்றார் குமாரன் மாஸ்டர். “அவளில் எழுந்தது வரலாறு…அதில் தேங்கியிருந்த ரத்தப்பழி”

“ஆம், சுமங்கலை அத்தனைபேரையும் ஆட்கொண்டாள் .ஒவ்வொருவராக அவர்கள் உயிர்விட்டனர். சிலர் தற்கொலை செய்துகொண்டனர். சிலர் நரம்புதளர்ந்து இறந்தனர்.ஆனால் அத்தனைபேரையும் கொன்றவள் அவள்தான். நேரடியாக எவரையும் அவள் கொல்லவில்லை, ஆனால் அவள்தான் கொலைகாரி” என்றான் ஔசேப்பச்சன்

“சரிதான்” என்று குமாரன் மாஸ்டர் சொன்னார் “இது ஒரு விளக்கம். மெய்யாகவே ரக்தயக்ஷி எழுந்து அவளை ஆட்கொண்டு தன் பழியை முடித்துக்கொண்டாள் என்பது இன்னொரு விளக்கம். இரண்டுக்குமே சமமான தர்க்கத்தன்மைதான். நம்மால் எதையும் அறுதியாகச் சொல்லிவிடமுடியாது”

”ஆமாம் அதைத்தான் சொல்லவந்தேன். நாணியம்மை ஒன்று சொன்னாள். ஒருமுறை அவள் வெறிகொண்டு கூச்சலிட்டபடி நகம் சுருண்டு வளர்ந்த கைகளை தூக்கி வலிப்பு வந்து அதிர்ந்து நின்றிருந்த சுமங்கலையின் நிழலுருவை பின்னாலிருந்த சுவரில் பார்த்தாள். அதில் அவளுக்கு எட்டு ஆட்டுக் கொம்புகள் இருந்தன. அவளருகே இருந்த ஒரு பானையின் நிழல் கைக்குழந்தைபோல தெரிந்தது” என்றான் ஔசேப்பச்சன்

“சரிதான், இந்தக்கிழவிக்கும் மனநோய் தொற்றியிருக்கலாம்” என்றான் எலி.

“நம்மால் சொல்லமுடியாது, எதையுமே அறுதியாகச் சொல்லிவிடமுடியாது” என்றார் குமாரன் மாஸ்டர்

“அப்படியென்றால் எவரையும் தண்டிக்கமுடியாது , குற்றவிசாரணை முடிந்து ஃபைல் மூடப்பட்டது இல்லையா?” என்று நான் கேட்டேன்.

“ஆம், வேறுவழி?” என்றான் ஔசேப்பச்சன்

ஸ்ரீதரன் பெருமூச்சுடன்   “இது நீ விடும் பீலாவாகக் கூட இருக்கலாம். அச்சாயன்களை நாயர்கள் அஞ்சுபைசாவுக்குமேல் நம்பக்கூடாது என்று பழைய குடமாளூர் செப்பேட்டில் சொல்லப்பட்டிருக்கிறது” என்றான்

“நீ போடா புல்லே.. உன்னை யார் நாயர் என்று சொன்னது?”

ஸ்ரீதரன் “ஜானம்மை சொன்னாள்… அவளுக்குத்தான் இதெல்லாம் சரியாகத் தெரிகிறது” என்றான். “ஆனால் இந்தக்கதையில் நீதி இல்லை. ஒரு முக்கியமான குற்றவாளி தண்டிக்கப்படாமல் விடப்படுகிறான். சும்மா விடப்படவில்லை, பலகோடி ரூபாய் வெகுமதியுடன் செல்கிறான்….இது சரியில்லை. இந்த சினிமா ப்ளாப்” என்றான்

“சந்திரன்பிள்ளையைச் சொல்கிறாயா? அவன் உண்மையிலேயே தவறு எதுவும் செய்யவில்லை” என்றான் ஔசேப்பச்சன் “மிஞ்சிப்போனால் கஞ்சா வாங்கிக் கொடுத்ததைச் சொல்லலாம். கஞ்சா இல்லாவிட்டால் அவர்கள் முன்னரே செத்திருப்பார்கள்”

“ஆனால் அவன் இந்தச் சூழ்நிலையை ஊக்குவித்தான். அதன் விளைவை அறுவடைசெய்துகொண்டான்” என்றான் ஸ்ரீதரன்

“இல்லை, அவன் ஒரு சாமானியன் செய்யக்கூடிய எல்லாவற்றையும் செய்தான்” என்றான் ஔசேப்பச்சன்

“சரி, அப்படியென்றால் இப்படி கேட்கிறேன். அவனிடம் வந்துசேர்ந்த சொத்து ரத்தக்கறை படிந்ததுதானே?”

‘ஆமாம்” என்று ஔசேப்பச்சன் சொன்னான்

“அந்த ரத்தத்திற்கு என்ன பொருள்… அதைசொல்” என்றான் ஸ்ரீதரன்

“கதைக்கு இன்னொரு டிவிஸ்ட் கொடுக்கிறேன். சுமங்கலை எப்படி நரம்புநோயாளியானாள்? அவளுக்கு பதினெட்டு வயதாக இருக்கையில்  அவள் கருவுற்றாள். செய்தி அறிந்த ராஜமார்த்தாண்டன் நாயர் அவள் வயிற்றிலேயே உதைத்தார். கரு கலைந்தது. வெளுத்தேடத்தி நாணிதான் அப்போது சுமங்கலையை மருத்துவம் செய்து பார்த்துக்கொண்டவள். அந்தச் செய்தி அப்படியே மறைக்கப்பட்டுவிட்டது”

“ஓ” என்றார் குமாரன் மாஸ்டர்

“அதன்பிறகுதான் அவளுக்கு முதல் வலிப்பு வந்தது” என்று ஔசேப்பச்சன் சொன்னான். “அதற்கு யார் காரணம் என்றும் வெளுத்தேடத்தி நாணி சொன்னாள். சந்திரன் பிள்ளையின் அப்பா சிவன் பிள்ளை”

“உண்மையாகவா?”

“அது மிகப்பெரிய வீடு. அந்த யக்ஷி கோயில் பகுதிக்கு குடும்பத்தில் எவரும் செல்வதில்லை. சின்னப்பெண்ணான சுமங்கலை அங்கே தீபம் ஏற்றச் சென்றிருக்கிறாள். சிவன்பிள்ளை அவளை அங்கே சென்று மடக்கிப்பிடித்து பலாத்காரம் செய்தார். அதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்று சொல்லி பல மாதங்கள் அவளை பலாத்காரம் செய்தார்”

“இது ராஜமார்த்தாண்டன் நாயருக்கு தெரியுமா?”

“தெரியும்… சுமங்கலையே சொல்லியிருக்கிறாள். ஆனால் துறையிங்கல் குடும்பத்தின் அத்தனை சொத்துவிவகாரங்களும் சிவன்பிள்ளை கையில் இருந்தன. அவர் இல்லாமல் ராஜமார்த்தாண்டன் நாயரால் ஒன்றுமே செய்திருக்கமுடியாது”

நான் பெருமூச்சுவிட்டேன். ஸ்ரீதரன் என்னை பார்த்துவிட்டு  ஔசேப்பச்சனிடம் “இது நீ கொடுக்கும் டிவிஸ்ட் தானே?” என்றான்

“இல்லை, முழுக்க முழுக்க உண்மை” என்றான் ஔசேப்பச்சன்

“சரிதான்…1730 ல் நடந்ததற்கு 1987 ல் இப்படி பதில் வந்திருக்கிறது” என்றார் குமாரன் மாஸ்டர்

“இப்போது நடந்ததற்கு இனி எப்போது பதில் வரும்?”என்று ஸ்ரீதரன் கேட்டான்

“மகனே ஸ்ரீதரா, எல்லாவற்றுக்கும் பதில் உண்டு. சிவன்பிள்ளையின் குடும்பம் அந்த ரத்தபழியை அதுவே தேடிச்சென்று வாங்கி அப்படியே தலையில் தூக்கி வைத்துக்கொள்கிறது… அதை தலைமுறை தலைமுறையாக சுமந்துசெல்லும்… ஏதோ பெரிய பொக்கிஷம்போல” என்றார் குமாரன் மாஸ்டர்

“மாஸ்டர் நான் ஒன்று சொல்கிறேனே, சரித்திரமே ஆனாலும் இந்த அளவுக்கு அது மனிதர்களிடம் குரூரமாக இருக்கக்கூடாது” என்றான் ஔசேப்பச்சன் “மனிதன் யார்? பாவப்பட்ட மிருகம். பயம் ,ஆசை, காமம், பகை ஆகியவற்றால் ஆட்டுவிக்கப்படுபவன். சரித்திரம் இப்படி ஓநாய் போல ரத்தவாடைதேடி மூக்கை நீட்டி  தலைமுறை தலைமுறையாக  பின்னால் வருமென்றால் என்ன செய்வான்? எதுவானாலும் ஒரு நியாயம் வேண்டாமா?”

“பேரர்!” என்று குமாரன் மாஸ்டர் அழைத்தார். அவருக்கே ஒரு லார்ஜ் தேவைப்படுகிறது என்று நினைத்துக்கொண்டேன்.

 

=============================================================

முந்தைய கட்டுரைபாப்பாவின் சொந்த யானை,சூழ்திரு -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–38