‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24

பகுதி நான்கு : அலைமீள்கை – 7

நான் அவைக்குள் நுழைந்தபோது மூத்தவரின் குரல் உரத்து ஒலித்துக்கொண்டிருந்தது. வழக்கமாக அவ்வாறு உரத்துப் பேசுபவர் அல்ல அவர். இளமை நாளிலேயே துவாரகையில் எப்போதுமே குரல் தணிந்தவராகவும் விழி தழைந்தவராகவுமே அவர் இருந்திருக்கிறார். அவரே யாதவ இளவரசர்களில் மூத்தவர். ஆனால் குடிநிகழ்வுகளன்றி பிறிதெங்கும் அவரை இளவரசராக அமரச்செய்ததில்லை. ஷத்ரிய அவைகளில் அவர் பெரும்பாலும் அழைக்கப்பட்டதில்லை. வீரரல்ல என்று இளமையிலேயே அவர் அடையாளம் காணப்பட்டுவிட்டார். நூல் நவில்தலும் அவருக்கு இயலவில்லை. எங்கோ எவரோ ‘நீ ஆநிரை மேய்ப்பதற்குரியவன், பிறிதொன்றல்ல’ என்று கூறிய சொல் அவர் உள்ளத்தில் ஆழத்தில் பதிந்தது. ஆழத்தில் ஆநிரை மேய்ப்பவராக தன்னை எண்ணிக்கொண்டிருந்தார். அவ்வாறல்ல என்று அவைகளில் நடித்தார்.

அவர் தன் தனித்த கனவுகளில் அந்நகரிலிருந்து கிளம்பிச்சென்று பசும்புல்வெளிகளில் ஆநிரைகளுடன் அமர்ந்திருப்பவராகவே தன்னை எண்ணிக்கொண்டார் என நான் அறிவேன். தங்கள் மைந்தர்களில் வேய்குழல் மீட்டும் திறன்கொண்டவர் அவர் மட்டுமே. தங்கள் வேய்குழலுக்கு நிகரானது அவரது இசைத்திறன் என்று குடிமூத்தவர்கள் கூறுவதுண்டு. தன் வேய்குழலுடன் எங்கோ குயில்கள் பாடும் பசுவெளியில் அமர்ந்திருப்பவர் என அகத்தே திகழ்ந்தார். அவர் குழலிசைக்கையில் முகத்திலிருக்கும் கனவை கூர்ந்து பார்த்திருக்கிறேன். அதோடு நானே அவரென்றாகி அவ்வண்ணம் இசைத்து அந்த உளநிலையை உணர்ந்திருக்கிறேன். அன்னை அவர் இளமையில் குழலிசைத்தபோது அதை விரும்பியிருந்தார்.

தங்கள் இளமைக்காலத் தோழர் ஸ்ரீதமர் அவருக்கு குழல் கற்பித்தார். ஆனால் அவருடைய துணைவியர் அவர் குழலிசைப்பதை தடுத்தனர். அவருடைய மைந்தர்கள் அதை வெறுத்தனர். அவருடைய நான்கு துணைவியருமே யாதவக்குடியை சேர்ந்தவர்கள்தான். இருவர் அந்தகர், போஜர் குலத்தை சேர்ந்தவர்கள். இருவர் விருஷ்ணிகுலத்தை சேர்ந்தவர்கள். அவர்களும் இளமையில் குழல்கேட்டு வளர்ந்தவர்களே. ஆனால் அவர்கள் குழலோசையை வெறுத்தனர். தங்கள் மைந்தர்கள் அதை கேட்காமலேயே வளர்த்தனர். குழல் என்பது யாதவர்களின் இழிவின் அடையாளம் என்னும் உளநிலை அவர்களிடமிருந்தது. எந்த அவையிலும் அவர்கள் குழலிசை ஒலிக்க விடுவதில்லை.

மூத்தவர் குழலிசைப்பதையே விட்டுவிட்டார். மிக அரிதாக நாங்கள் மட்டுமே அமர்ந்திருக்கையில் சில மெட்டுகளை வாசிப்பார். அதை அரசியிடம் ஒருமுறை நான் சொன்னபோது அரசி சீற்றத்துடன் எழுந்துவிட்டார். முகம் சிவந்துவிட்டது. கண்களில் நீர் கோத்தது. மறுநாள் என்னிடம் மூத்தவர் “ஏன் நீ அதை அவளிடம் சொன்னாய்?” என்று கேட்டார். “அவள் அன்னமும் நீரும் மறுத்து படுத்திருக்கிறாள். அழுதுகொண்டே இருக்கிறாள். அவளை அமைதியடையச் செய்யவே முடியவில்லை. நீங்கள் என்னை இழிவுசெய்யும்பொருட்டே குழலிசைக்கிறீர்கள் என்கிறாள்” என்றார். நான் பல மாதங்கள் அரசியிடம் பேசவே முடியவில்லை.

உண்மையிலேயே குழல் அவ்வாறு குலஇழிவின் அடையாளமாக ஆகிறது என்பதை நான் பின்னரே அவைகளில் உணர்ந்தேன். பிரத்யும்னனின் அவையில் ஒருமுறை ஷத்ரியப் படைத்தலைவர் ஒருவர் எல்லையை ஊடுருவிய கூர்ஜரர்களைப் பற்றி சொல்கையில் “அவர்கள் குழலோசைக்கெல்லாம் கட்டுப்படுபவர்கள் அல்ல, வாள் தேவை அவர்களை எதிர்கொள்ள” என்றார். பிரத்யும்னன் சிரித்தார். அச்சிரிப்பை அதற்கு முன் எங்கெல்லாம் கண்டிருக்கிறேன் என்று எண்ணி திகைத்தேன். இளமையில் பிரத்யும்னன் எங்களுடன் விளையாடும்போது உடைவாள்போல இடையில் குழலை அணிந்துகொண்டிருப்பார். குழலைக் கொண்டு வாட்போரிடுவார். அவையெல்லாம் எளிய நகையாட்டுகள் அல்ல குலஇளிவரல்கள் என அப்போதுதான் உணர்ந்தேன்.

இருமுனைகள் நடுவே ஆடிக்கொண்டிருந்தார் மூத்தவர். ஒவ்வொரு அவையிலும் மேலும் மேலும் சீண்டப்பட்டு தன்னை உறுதியானவராக காட்டிக்கொண்டார். ஷத்ரிய அவைகளில் தனக்கு இடம் வேண்டுமென்று வீம்பு கொண்டார். அவ்வாறு ஷத்ரிய அவைகளில் இடம்பெற்ற போதெல்லாம் அவைமுறைமைகளிலும் அவைச்சொற்களிலும் பிழைகள் இயற்றி இளிவரலுக்கு ஆளானார். ஒவ்வொரு முறையும் அவைகளில் இருந்து நாணி முகம் சிவந்து, தன்னை எண்ணியே சீற்றம் கொண்டு, பற்களைக் கடித்து, கைகளைச்சுருட்டி, விழிநீர் மல்க, நடுங்கும் உடலுடனே திரும்பிச் சென்றார். இனியில்லை என உளம்சோர்ந்து அமைந்து தன்னைத்தானே தூண்டிக்கொண்டு மீண்டும் எழுந்தார்.

“நோக்கு, ஒருநாள் இத்துவாரகையை பொசுக்கி அழித்துவிடுவேன்” என்று ஒருமுறை சொன்னார். “இந்நகரை வெல்லவேண்டும். இதன் மேல் மணிமுடி சூடி அமரவேண்டும். அதன் பின் தீய வேள்வி ஒன்றினூடாக இதன்மீது விண்ணின் இடிமின்னல்கள் அனைத்தும் இறங்கச்செய்யவேண்டும். இதன் மாட மாளிகைகள் அனைத்தும் சரியவேண்டும். இது ஒரு இடிபாடுக்குவை என்றாகி கடலில் மறையவேண்டும். அதன்பின் இங்கிருந்து சென்று எனக்குரிய புல்வெளியை கண்டடைவேன். அங்கு அமர்ந்து என் குழலை வெளியே எடுப்பேன்” என்றார்.

அப்போது நாங்கள் ஒன்பது உடன்பிறந்தாரும் இருந்தோம். அச்சொற்களால் திகைத்து அவரை நோக்கினோம். “இந்தப் பெருநகர் எனக்குரியதல்ல. ஆனால் இங்கிருந்து ஒருபோதும் தோற்று பின்மாறப்போவதில்லை. யாதவ குலத்துப் பிறந்த எந்தையின் நகரல்ல இது. அவர் தன்னுள் இருந்த ஆணவத்தை பெருக்கிப் பெருக்கி அமைத்தது. அவ்வாணவத்தை வென்று அவர் கடந்தார். நானும் கடந்தால் மட்டுமே எந்தை இனிதிருக்கும் அந்தப் புல்வெளிக்கு செல்லமுடியும்” என்றார்.

அவை விழவென்றால் எந்த அவையிலும் மிக விரைவிலேயே அவர் சலிப்புறுவார். மிக விரைவிலேயே எச்சொல்லையும் செவிமடுக்காமலாவார். பிறரைப் பேசவிட்டு முற்றொதுங்கி முகவாயைத் தடவியபடி கண்கள் விலகிச்சரிந்திருக்க அமர்ந்திருப்பார். அவர் குரல் ஒலிக்க வேண்டுமெனில் சீற்றம் எழவேண்டும். அன்றி அவர் உவகை கொண்டெழ வேண்டும். அவர் இயல்பாக ஓய்வு கொள்வது மிக மிக அரிது. எப்போதும் பதற்றத்தில் இருந்தார். உவகை என அவரில் எழுவது ஒரு கொந்தளிப்பு மட்டுமே. அணுக்கமான உடன்பிறந்தாருடன் ஏதேனும் தனி அறையில் அமர்ந்திருக்கையிலோ எங்கேனும் ஆநிரை மேய்க்கச் செல்கையிலோ மட்டுமே அவர் மகிழ்ச்சியாக இருந்தார்.

ஆநிரைப் பட்டிகளில் அவற்றுடன் அமர்ந்திருக்கையில் சொல்லடங்கிய ஆழ்ந்த மகிழ்வை அடைந்தார். கன்றுகளின் அருகே அமர்ந்து அவற்றைத் தொட்டும் தடவியும் மகிழ்ந்திருக்கும் மூத்தவரை தொலைவிலிருந்து பார்க்கையில் அவர் அவ்வாநிரைகளுடன் கிளம்பி எங்கேனும் சென்றுவிட்டால் தன் வாழ்வை முற்றே அடைந்து நிறைவுறுவார் என்று தோன்றியிருக்கிறது. அவருடைய கால்கள் மாட்டிக்கொண்டிருக்கும் பொறி இந்தப் பெருநகர். ஆனாலும் நகர் அவரை கவ்விப்பிடித்திருக்கவில்லை. அவர்தான் அதை பிடித்திருக்கிறார். இதோ விடுகிறேன் என்று மூன்று முறை சொல்லி காலை எடுத்துக்கொண்டு அவரால் செல்ல இயலும். ஆனால் மானுடர் எவரேனும் அவ்வண்ணம் தங்களை பொறிகளிலிருந்து விடுவித்துக் கொண்டிருக்கிறார்களா? மானுடர் சிக்கி அழியும் அனைத்துப் பொறிகளும் அவர்களே சென்று சிக்கிக்கொண்டவைதான் அல்லவா?

மூத்தவர் சிரித்துக் களித்துக் கொண்டிருந்த அந்த அவையில் விழிமுன் தெரியாது பதிந்து அமர்ந்தேன். அவர் “இளையோனே, அந்தணராகிய கணிகரை அறிமுகம் செய்துகொள். நீ இங்கிருக்கையிலேயே அவர் இங்கு வந்துவிட்டார். அப்போது இவரை எவரும் தெரிந்துகொள்ளவில்லை. பின்னர் நாள்தோறும் அவைக்கு வந்திருக்கிறார். அவருடைய வெளித்தோற்றம் அவர் மேல் நம் விழிநிலைக்காமல் செய்தது. சில நாட்களுக்கு முன் அவையில் ஒரு இடர் பற்றி பேசியபோது முற்றிலும் புதிய ஒரு பார்வையை முன்வைத்தார். முற்றிலும் புதிய பார்வை எனில் அது எந்தையிடமிருந்து மட்டுமே எழமுடியும் என்று நான் எண்ணியிருந்தேன். பிறிதொருவர் நாவில் அவ்வாறு ஒரு பார்வை எழுந்ததை முதன்முறையாக பார்க்கிறேன்” என்றார்.

நான் ஆர்வம்கொண்டேன். “லக்ஷ்மணை அன்னையின் மைந்தர் நம்முடன் அவைமுரண் கொள்ள வாய்ப்புள்ளதென்று நாம் அறிவோம். அவர் நம்மிடம் நாடுவது அவைமுதன்மையை. அம்முதன்மையை நாம் அவர்களுக்கு அளித்தால் எதிர்காலத்தில் அவர்களுக்கு மேல் நாம் கோன்மை கொள்ள இயலாது. நாம் வெல்லும் மணிமுடியில் அவர்களுக்கு பங்கு கொடுப்பதுபோல் ஆகிவிடும். எனில் அவர்களை எங்கு நிறுத்துவது என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது. அவர்கள் இங்கு நமக்கு இரண்டாம் குடியாக அமைய விரும்பமாட்டார்கள். இது இன்று உடனே நாம் தீர்த்தாகவேண்டிய இடர்.”

“இங்கே அதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தபோது மத்ரநாட்டின் இளவரசனாக லக்ஷ்மணை அன்னையின் மைந்தனை முடிசூட்டலாம் என்றார் கணிகர். ஒருகணத்தில் அவர் உரைப்பதென்ன என்று எங்கள் அனைவருக்கும் புரிந்தது. அவ்வாறென்றால் அவர்கள் தனிநாடு கொள்ள முடியும். எதிர்காலத்தில் விழைந்தால் துவாரகைக்கும் எதிராகக்கூட எழும் வாய்ப்புள்ள பேரரசொன்றை அமைக்க இயலும். அந்தச் சொல்லுறுதியை அவர்களுக்கு அளிப்போம் என்றுதான் அவர் சொல்கிறார் என்று புரிந்தது. நன்று என்று அவ்வண்ணமே செய்தோம். அம்முடிவை அவர்களுக்கு அறிவித்ததும் அனைத்து இறுக்கங்களும் அவிழ அவர்கள் அடைந்த இயல்பு நிலையை கண்டு நான் திகைத்தேன். கணிகர் நம் அவையில் முதன்மையான ஒருவராக ஆனது அவ்வாறுதான். நீ அவரை சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி” என்றார். நான் கணிகரை நோக்கி தலைவணங்கினேன். அவர் புன்னகைத்தார்.

மூத்தவர் என்னிடம் உரத்த குரலில் “நாம் இயற்றவேண்டியதென்ன என்பதை கணிகர் முன்வரைவு அளித்துக் காட்டிவிட்டார். இனி குலக்குழுத் தலைவர்களையும் படைத்தலைவர்களையும் கூட்டி செயல்திட்டம் வகுத்துவிட வேண்டியதுதான். இத்தனை நாட்கள் எதன்பொருட்டு அஞ்சிக்கொண்டிருந்தோமோ அதை கடந்துவிட்டோம். உடனடியாக நடவடிக்கைகளை தொடங்கவிருக்கிறோம். போரெனில் போர். சூழ்ச்சி எனில் சூழ்ச்சி” என்றார். நான் என் உள்ளத்துள் புன்னகைத்தேன். என்ன திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று எனக்கு புரியவில்லை. ஆனால் கணிகர் உடனடியாக எதையும் தொடங்கமாட்டார் என அறிந்திருந்தேன். தொடங்கிவிடும் என்னும் உச்சநிலை சில நாட்கள் நீடிக்கும்.

நான் அவர்கள் ஒவ்வொருவர் முகத்தையாக பார்த்தேன். “நீ கணிகருடன் இதைப்பற்றி பேசவேண்டும்… அதைத்தான் நான் சொல்லவிழைகிறேன்” என்றார் மூத்தவர். நான் அச்சொற்களை ஒரு அச்சத்தொடுகையுடன் எடுத்துக்கொண்டேன். சென்ற சில நாட்களாகவே அவையில் நான் நோக்கப்படுகிறேன். மூத்தவர் இருவரும் என்னைப் பார்த்தே பேசுகிறார்கள். இயல்பாக அது நிகழ்ந்தாலும் அது அவர்கள் என்னைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. எதனால் எனக்கு அந்த அவையில் முதன்மை உருவானது என்பதே அப்போது என் அகவினாவாக இருந்தது. அவையில் எவரும் என்னை இருப்புணர்வதே இல்லை. அவ்வாறு உணர்கிறார்களா என்று அறிய நான் இன்மையை உருவாக்கிப் பார்த்திருக்கிறேன். அப்போதும் நான் உணரப்பட்டதில்லை.

ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கிறது என்று எனக்குத் தெரிந்தது. அது கணிகரிடமிருந்து கிளம்பியிருக்கிறது. அக்கூடத்தில் பின் நிரையில் நான் அமர்ந்திருந்தேன். தலை திருப்பினாலன்றி மூத்தவர் என்னை பார்க்கமுடியாது. ஒருவனுக்கு ஒரு அவையில் இடம் அமைவதுகூட இயல்பாக அன்று. எடையின் அடிப்படையில் பொருள் மிதப்பதுபோல அங்குள்ள இயங்கும் நெறிகளின் விசையால் அது அவனுக்கு அளிக்கப்படுகிறது. என்னருகே இருந்தவர்கள் என்னைப்போன்ற இளைய மைந்தர்கள். அவர்கள் அங்கிருந்து கிளம்பி கடலாடவோ, வேட்டைக்குச் செல்லவோ, குடிக்களியாட்டுக்கு கிளம்பவோ உளம் கொண்டிருந்தனர் என்று தெரிந்தது. அவ்வண்ணம் நான் பின்நிரையில் அமர்ந்திருக்கையில் மூத்தவர் தலைதிருப்பி என்னை பார்த்தமை அவர்கள் அனைவரையும் நிலைகுலையச் செய்தது, வெளிச்சம் பட்ட எலிகளைப்போல அவர்கள் கூசிச் சுருங்கி விழிமின்னினர்.

கணிகரை அங்கிருந்து நான் பார்க்க இயலவில்லை. எங்கிருந்து பார்த்தாலும் எழுந்து நின்று கூர்ந்து நோக்கினாலொழிய கண்ணுக்குப்படாத ஓர் இடத்தை தெரிவு செய்வதில் அவர் திறன் கொண்டவராக இருந்தார். அதையும் நான் எண்ணிக்கொண்டேன். தன் இடத்தை மிகமிக கீழாக அமைத்துக்கொள்பவர் அந்த அவையையே கையிலிட்டு விளையாடுபவர். தன்னை தானே வகுத்துக்கொள்பவனே பிறரை ஆள்கிறான், பிறரால் வகுக்கப்படுபவன் எப்போதுமே நாற்களத்தின் காய் மட்டுமே. நான் கணிகரை அவ்வப்போது நோக்கிக்கொண்டிருந்தேன். அவர் தன்னை ஒரு பொருள் என, துணிச்சுருள்போல ஆக்கிக்கொண்டிருந்தார்.

மூத்தவர் அவையை நோக்கி “நேற்று பேசிக்கொண்டிருக்கையில் இங்கே கணிகர் ஒன்றை சொன்னார். நாம் காளிந்தி அன்னையின் மைந்தரை நம்முடன் சேர்த்துக்கொள்ள முழுமையாக முயலவில்லை என்று” என்றார். அவையில் ஒரு கலைவோசை எழுந்தது. மூத்தவர் கை அசைத்து அவர்களை அமையச்செய்து “ஆம், நீங்கள் எண்ணுவது புரிகிறது, அவர்கள் நிஷாதர்கள். ஆகவே இயல்பாகவே சாம்பனுடன் நின்றிருக்க வேண்டியவர்கள். ஆனால் எண்ணுக, நாம் முயற்சி செய்தோமா?” என்றார். குடித்தலைவரான குமுதர் “அவர்களை நம்மால் அழைக்கவே முடியாது, ஒரே குருதி என்பது பெரும் வல்லமை” என்றார். “ஆம், அவர்கள் ஏன் நிஷாதர்களை விட்டுவிட்டு நம்முடன் வரவேண்டும்?” என்றார் சப்தகர் என்னும் குடித்தலைவர்.

கணிகர் மிக மெல்ல கனைக்க அனைவரும் அவரை பார்த்தனர். “அவர்கள் ஒரே குடி என்பதனாலேயே பூசல் இருக்கலாம் அல்லவா?” என்றார் கணிகர். அரசரை நோக்கி “சாம்பன் என்ன இருந்தாலும் மலைக்குடியினர். காளிந்தியின் மைந்தர்கள் நீர்மேல் வாழ்பவர்கள். அடிப்படையில் அந்த வேறுபாடு இருந்துகொண்டே இருக்கும். இந்நாளுக்குள் ஏதேனும் சிறு பூசல்கள் அவர்களிடையே எழுந்திருக்க வாய்ப்பிருக்கும்” என்றார். “ஆம், அவ்வாறு செய்திகளும் உள்ளன” என்றார் மூத்தவர். நான் “ஆனால் குருதி என்பது பெரிய இணைப்பு, குடிப்பெரியவர்களால் அவை இணைக்கப்பட்டுவிடும். நம்மால் காளிந்தி அன்னையின் மைந்தர்களை இங்கே கொண்டுவர முடியாது” என்றேன்.

“அதற்கு நாம் வாய்ப்பு அளித்தோமா?” என்றார் கணிகர். “ஒரு வாய்ப்பு அளித்துப்பார்ப்போம். சில தருணங்களில் மிகப் பெரிய வெடிப்புகள் எளிய விரிசல்களாகவே தென்படும். செல்ல ஒரு வழி இல்லை என்பதனாலேயே அவர்கள் அங்கே இருக்கவும் வாய்ப்புண்டு. மாற்றுவழி உண்டு என்னும்போதே உளக்கசப்புகள் பிரிவுகளாக மாறுகின்றன.” நான் “ஆம், அதை செய்யலாம்” என்றேன். “நீங்கள் சொல்வது உண்மை. அவர்கள் மொத்தமாக இங்கே வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆனால் அவர்களில் ஒருவர் பிரிந்து இங்கே வந்தால்கூட அது நமக்கு நன்மையே” என்றார் கணிகர். நான் “ஆம்” என்றேன்.

“நாம் அவர்களிடம் பேசுகிறோம் என்பதே சாம்பனின் உள்ளத்தை நிலைகுலையச் செய்யும். அவர்களை உளவறியத் தொடங்குவார். ஒருவரை நாம் எதன்பொருட்டு உளவறிந்தாலும் உளவறியும்போதே நாம் ஐயம்கொள்ளத் தொடங்குகிறோம். நாம் ஐயம் கொண்டிருந்தால் நம் கேள்விகள் ஐயத்தையே முன்வைக்கும். ஒற்றர்கள் அந்த ஐயத்தை வளர்க்கும் செய்திகளையே நம்மிடம் அளிப்பார்கள். வேண்டுமென்றே சிலர் அளிப்பார்கள், நற்பெயர் பெறும்பொருட்டு. அதை நாம் சற்று உணர்ந்துவிடமுடியும். நம்முடைய ஐயத்தை நாம் நம்மையறியாமலேயே ஒற்றனுக்கு அளித்து அவன் ஐயம்கொண்டு அந்த ஐயத்தைப் பெருக்கி நமக்கு அளிப்பான்.”

“எண்ணவே வேண்டியதில்லை, நாம் காளிந்தியின் மைந்தர்களிடம் பேசினாலே அவர்களுக்குள் நம்பிக்கையின்மையை உருவாக்கிவிடுவோம்” என்று கணிகர் தொடர்ந்தார். “நம்பிக்கையின்மை என்பது ஐயத்திற்கு ஆளாகிறவர்களின் ஆணவத்தை சீண்டுகிறது. அவர்கள் பூசலிடுவார்கள். பூசல் ஐயத்தை வலுப்படுத்தும். ஐயம்போல் வளர்வது பிறிதொன்றில்லை. ஆகவே அரசியலாடுபவனின் முதல் பெரும் கருவி ஐயமே என்று அறிக!” என்று கணிகர் தொடர்ந்தார். எனக்கு ஆழ்ந்த அச்சமொன்று உருவானது. என்னால் அவர் முகத்திலிருந்து விழிகளை எடுக்க முடியவில்லை. அவர் சொற்களைக் கேட்காதவர்கள் அம்முகத்தை மட்டும் கண்டால் அவர் அமுதென இனிக்கும் மெய்யறிவையே புகட்டிக்கொண்டிருப்பதாக எண்ணக்கூடும்.

“ஐயம் பிளவுபடுத்துகிறது. ஐயப்படுபவர்களே பலவாக பிளவுபடுகிறார்கள். பொதுவாக பூசல் நிகழும் சூழலில் அனைவருமே பூசலுக்குரிய உளநிலையில் இருக்கிறார்கள். பூசலுக்கான உளநிலை என்பது ஒருவகை நோய். அது அருகிருப்போரையே மிகுதியாகத் தாக்கும். நாம் நம் எதிரியிடம் பூசலிட்டால் நம் உடனிருப்பவர்களையே வசைபாடுவோம். ஆகவே அவர்களிடம் பூசலை வளர்ப்போம். உளந்திரிந்து விலகுபவர்களை இங்கே இழுப்போம். எண்பதின்மரில் எத்தனைபேர் நம்மிடம் இருக்கிறார்கள் என்பது மக்கள் முன் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் கணக்கு என்பதை மறக்கவேண்டியதில்லை” என்றார் கணிகர்.

“நாம் செய்யவேண்டியது என்ன?” என்று ஒரு குடித்தலைவர் கேட்டார். அவர் முற்றிலும் சொல்லிழந்துவிட்டார் என்று தெரிந்தது. ”நம் தூதர் காளிந்தியன்னையின் மைந்தரை அணுகட்டும்” என்று சுஃபானு சொன்னார். “தூதர் எனச் செல்லவேண்டியவர் நம் குடிமைந்தர்களில் ஒருவராகவே இருக்கவேண்டும். ஆனால் அவைமுதன்மை கொண்டவராக இருக்கக்கூடாது. முயற்சி தோற்றால் அது அவருக்கு இழிவு. மேலும் நாம் காளிந்தியின் மைந்தர்களை மிகைப்படுத்திக் கொள்கிறோம் என்றும் தோன்றலாகும். ஆகவே இளையவர்களில் ஒருவர் செல்லட்டும்.” நான் நெஞ்சு படபடக்க அமர்ந்திருந்தேன். எனக்கு புரிந்துவிட்டது.

ஆனால் யாதவ மைந்தர்கள் அதை புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் அந்த வாய்ப்பை விரும்பினர், கூடவே அந்தச் செயலை அஞ்சினர். எனவே இரு நிலைகளில் ஊசலாடினர். சுஃபானு “நம் இளையோரில் சொற்திறன் கொண்டவன் இளையவனாகிய பிரதிபானு… அவன் செல்லட்டும்” என்றார். அவையிலிருந்த பிற மைந்தர் நீள்மூச்செறிந்து உடல் எளிதாவதை கண்டேன். அவர்கள் ஆறுதல்தான் கொள்கிறார்கள் என்ற எண்ணம் என்னை அச்சத்தை நோக்கி தள்ளியது. “மூத்தவரின் ஆணை என் கடமை” என எழுந்து தலைவணங்கினேன். “ஆனால் என்ன பேசுவது, எப்படித் தொடங்குவது என்பது எனக்கு இன்னமும் புரியாததாகவே உள்ளது.”

சுஃபானு “அதை கணிகர் உனக்கு கற்பிப்பார்” என்றார். “அவரிடம் சொல்தேர்க…” என்றார் ஃபானு. கணிகர் “காளிந்தியின் மைந்தர்களில் இளையவரான சோமகன் உங்களுக்கு சற்று அணுக்கமானவர் என அறிந்துள்ளேன், அரசே” என்றார். “ஆம், அவன் கடலாட விழைபவன்… அவர்கள் அனைவருமே நீர்விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள்” என்றேன். “எனில் அதுவே உள்ளே நுழையும் வழி எனக் கொள்க. அதனூடாக அன்னையை நேரில் சென்று சந்தித்துப் பாருங்கள்” என்றார் கணிகர். “அவர் இருக்கும் நிலையை ஊர் அறியும். அவர் உளநிலை குலைந்திருக்கிறார். தந்தை இன்னும் தன்னைவிட்டு நீங்கவில்லை என்றே எண்ணிக்கொண்டிருக்கிறார்” என்றேன்.

“அது நன்று. அவரை சந்தியுங்கள், எப்படியாவது அவர் நாவிலிருந்து அரசர் ஃபானுவுக்கு ஒரு வாழ்த்தை பெற முயல்க! அந்த வாழ்த்தில் இளைய யாதவரின் முதல் மைந்தர் ஃபானு என்னும் ஒரு வரி இருக்குமென்றால் போதும், எஞ்சியதை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றார் கணிகர். “அது இயலுமென்றே தோன்றுகிறது. முன்பு நான் காளிந்தியன்னைக்கு அணுக்கமான மைந்தனாக இருந்தேன்” என்றேன். “அன்பினூடாகச் செல்க! ஒற்றறியவும் அரசாடவும் மிகச் சிறந்த வழி அதுவே” என்றார் கணிகர். “ஆணை” என நான் தலைவணங்கினேன்.

அவை முடிந்து நான் வெளியே வந்தேன். என்னை வழக்கமாகச் சூழ்ந்து வரும் இளையோர் அனைவரும் விலகிச்சென்றுவிட்டிருந்தனர். நான் தனியாக இடைநாழியில் நடந்தேன். என்னைவிட்டு ஏன் இளையோர் அகல்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. பின்னால் வந்த ஏவலன் என்னை அழைத்து “கணிகர் தங்களை பார்க்கவிழைகிறார், இளவரசே” என்றான். நான் ஒன்றும் சொல்லாமல் அவனுடன் சென்றேன். அவைக்கு அருகிலிருந்த சிற்றறையில் கணிகர் இருந்தார். தரையில் விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தில் அவர் உடல் கிடந்தது. ஏவலன் ஒருவன் அவர் அணிந்திருந்த பட்டாடையைக் கழற்றி அவருக்கு பருத்தியாடைகளை அணிவித்துக்கொண்டிருந்தான்.

அவர் ஒரு தவளைபோலிருந்தார். அவ்வுடலின் சிதைவு என்னை விழிவிலக்கச் செய்தது. “பெரும்பொறுப்பு இளவரசே, ஆனால் வென்றால் நீங்கள் தலைமை கொள்வீர்கள்” என்றார். “நானா?” என்றேன். சிரித்து “தலைமையா?” என்று சொன்னேன். கணிகர் “ஆம், பத்துபேரில் இன்றிருப்பவர்கள் இருவரே தலைவர்கள். ஃபானுவும் அவரை எதிர்க்கும் ஸ்வரஃபானுவும். மூன்றாவதாக நீங்கள் எழவேண்டும்…” என்றார். நான் “அவர்கள் அனைவரும் என்னை அஞ்சி விலகிச் செல்கிறார்கள்” என்றேன். “ஆம், அதுவே முதல் எதிர்வினையாக இருக்கும். அது நன்று. நீங்கள் அவர்களில் ஒருவரல்ல என்று அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள்” என்றார் கணிகர். “வென்றால் அவர்களைவிட நீங்கள் மேல் என்று எண்ணுவார்கள்.”

நான் தலையசைத்தேன். “வெல்வது எளிது” என்று அவர் சொன்னார். “காளிந்தியிடமிருந்து அவ்வண்ணம் ஒரு சொல்லை நீங்கள் பெற முடியாது. ஆனால் பெறும் எச்சொல்லையும் நாம் விழைந்ததுபோல் விளக்கிக்கொள்ளலாம். வெற்றி ஒன்றே நம் இலக்கு. உலகியலுக்கு அப்பால் நிற்பவர்கள் உலகியலில் சரியாகப் பொருள்படும்படி பேச முடியாது. ஆகவேதான் அவர்களை உலகியலார் எளிதாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.” நான் “ஆம்” என்றேன். “அவர் சொன்னதை என்னிடம் வந்து சொல்லுங்கள், நான் அதை விளக்குகிறேன்” என்றார் கணிகர். “அவரை நீங்கள் சந்திக்கும்போது உங்கள் மூத்தவர் ஃபானு துவாரகையின் மன்னராக முடிசூடவிருக்கிறார் என்று சொல்லுங்கள். வாழ்த்தி ஏதேனும் பொருளை வாங்குங்கள். பொருள் சொல்லைவிட பொருட்செறிவு மிக்கது. அதை ஒரு விதை என நட்டு நாம் மரமாக்கி காடாகவே ஆக்கிக்கொள்ளமுடியும்.”

“ஆம்” என்று நான் சொன்னேன். “அவர்கள் வாழ்த்துவார்கள். இங்குள்ள அரசியல்பூசல் அவர்களுக்கு புரிந்திருக்காது. தன் கொழுநரின் மைந்தன் என்றே அவர்கள் ஃபானுவை கருதுவார்கள். வாழ்த்தை ஒரு பொருள் என பெற்றால் நாம் வென்றோம்” என்றார் கணிகர். நான் “ஆம்” என்றேன். ஏவலர் அவரை புரட்டிப்புரட்டி ஆடை அணிவிப்பதை நோக்கி நின்றேன். அப்போது என்னுள் தோன்றிய எண்ணம் அக்கணமே அந்தப் புழுவை நசுக்கி அழித்துவிடவேண்டும் என்பதே. என்றாவது என் கையில் செங்கோல் வருமென்றால் அதையே முதல் ஆணையாக பிறப்பிப்பேன்.

ஏவலன் கணிகரை திருப்பியபோது அவர் என்னை நோக்கி புன்னகைத்தார். அந்தப் பேரழகுப் புன்னகை. தந்தையே, நான் கால்தளர்ந்துவிட்டேன். என் எண்ணங்களை அறிந்தா அவர் புன்னகைக்கிறார்? அல்லது அது அறியாமையின் புன்னகையா? அல்ல, அவர் அறியாத ஒன்றில்லை. அவர் அவ்வண்ணம் பழகிவிட்டிருக்கிறார். வெயிலில் மலர்கள் அழகுகொள்வதுபோல அவர் வெறுப்பு பொழியப்படும்போதே உள்ளம் மலர்கிறார். நான் தலைவணங்கி வெளியேறினேன்.

முந்தைய கட்டுரைஇடம் [சிறுகதை]
அடுத்த கட்டுரைமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்