ஆனையில்லா, துளி -கடிதங்கள்

“ஆனையில்லா!” [சிறுகதை]

அன்புள்ள ஆசானுக்கு,

 

நலம் தானே? உங்கள் சிறுகதை அனைத்தையும் படித்து வருகிறோம். சென்ற முறை நம் நியூஹாம்ப்ஷயர்  கார் பயணத்தின் போது உங்கள் அப்பா, அம்மா, தங்கம்மா, அண்ணா, இளமைக்காலம் பற்றி நிறைய சம்பவங்களை சிரிப்புடன் பகிர்ந்து கொண்டீர்கள். வயிறு குலுங்க சிரித்தோம். இப்போது அந்த மண்ணும் மனிதரும் ஒவ்வொரு சிறுகதையாக உருவெடுக்க நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணிக்கிறோம்.

 

 

சென்ற வார இரவில், பழனி  ஆனையில்லா கதையை எங்கள் அனைவருக்கும் உறக்க வாசிக்க, அஞ்சனா, ஸ்ரீராம் இருவரும் வயிறு குலுங்க சிரித்து ரசித்தார்கள்.  ஸ்ரீராம், “இது உண்மைக் கதையா, ஆனை உண்மையாகவே மாட்டிக்கிச்சா…!!” என்று கண்விரியக் கேட்டான்.  ஆனைக்கு க்ரீஸ் போடும் இடம், ஆனையை குடை போல மடிக்க சொன்ன இடத்தில் விழுந்து விழுந்து சிரித்தான். கடைசில் ஆனை கொப்பரை தேங்காயைப் பார்த்து ஓடியது போல நடித்து காட்டினான். பொதுவாக அவனுக்கு பிடித்த கதை, கதாபாத்திரங்களை  காமிக்ஸ் ஸ்கிரிப்டாக வரைவது அவன் வழக்கம். அவன் வரைவதை பார்த்த அஞ்சனா ‘நானும்…’ என்று அவளும் அவள் மனதில் உள்ளதை வரைந்தாள். அவர்கள் இருவரும் வரைந்த படங்களை இணைத்துள்ளேன். அவர்களும் கோபாலகிருஷ்ணனுடன் விரியும் கற்பனையுடன் மாட்டிக்கொண்டார்கள். இந்த நாட்களை இனிமையாக்குவதற்கு நன்றி!

 

அன்புடன்,

மகேஸ்வரி

துளி [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

 

ஆனையில்லா கதையிலிருந்துதான் இந்த கதைக்கொண்டாட்டம் ஆரம்பித்தது என நினைக்கிறேன். அதில் ஒரு அபாரமான மெட்டஃபர் உள்ளது.மிகப்பெரிய ஒன்று சிக்கிக்கொண்டிருக்கிறது. அதனிடம் போய் நீ ரொம்ப சின்னது என்று சொல்லி நம்பவைத்து அதை வெளியே கொண்டுவந்துவிடுகிறார்கள். நீங்கள் இந்தக்கதைகள் வழியாகச் செய்வதும் அதைத்தான் இல்லையா? இன்றைய இக்கட்டை கற்பனையில் ஆனையை பேனாக்குவதுபோல கடந்துசெல்கிறீர்கள். எல்லா கதையிலுமே இந்த கொண்டாட்ட அம்சம் எப்படியோ வந்திருக்கிறது

 

ராஜ்குமார்

 

அன்புள்ள ஆசிரியருக்கு

 

தங்கள் அண்மைக்கால சிறுகதைப் பொழிவு வேகமாக உள்ளது. புனைவு உருவாகும் அதே மனநிலையைப் பெறும்போதுதான் வாசிப்பு முழுமையாகும் போல உள்ளது மொழி, துளி, வானில் அலைகின்றன குரல்கள்  – மூன்று கதைகளும் ஒரு கோணத்தில் இணைகின்றன ; “துளி” அழகிய வெளிப்பாடுகள் நிறைந்தது. குறும்பு செய்யும் சிறுவனும் யானை , நாய் போன்ற விலங்குகளும் கதையில் வந்து விட்டால் உங்களைப் பிடிக்கவே முடியாது. யானையை ஒரு குழந்தையாக்கி சட்டைப்பையில் போட்டுக்கொள்ளும் விழைவை வழங்குகின்றது இக்கதை.

 

கருப்பனின் துளி ஈரத்தால் யானைகள் நட்பு கொள்கின்றன. பெரியவர்களும் ஒரே ஒரு துளி இதயத்தின் ஈரத்தால் வேறுபாடுகளை மறந்து திருவிழாவில் மகிழ்கிறார்கள்.

 

வானில் அலைகின்றன குரல்கள் , ஆழமாக சிந்தனையைத் தூண்டக் கூடியது. எல்லாச் சொற்களும் சென்று செரும் ஒற்றை ஒலி பிரணவம்.   ஓராயிரம் ஒலிகள் கலந்த அலைக்கூட்டில் லிசியின் அழைப்பை தோட்டான் கேட்டிருக்க வேண்டும். அந்தக் கணம் உயிர் பிரிந்திருக்கவேண்டும் என நினைக்கிறேன்.  வெண்மையில் நிறங்களும் ‘ம்’ ஒலியில் சத்தங்களும் அடங்குவது போல அவர் காலம் அடங்கும் ஒரு ஒலிப்புள்ளியைத் தொட்டிருக்க வேண்டும். .

 

“துளி”யில் கருப்பன் செய்யும் ஈரமே  ‘மொழி’ யில் குழந்தைகளின் தொடர்பு முறையான சில (பெரியோருக்கு) பொருளற்ற குறுஞ் சொற்களாகின்றன. அவற்றில் பொருள் ஏறிக்கொள்வது பிண்டத்திலிருந்து சிசு உருவாகும் கணம் போன்றது.  முதல் முதலில் பொருள் கொண்ட சொல்லினால் புரியவைத்தவன் அடைந்த மனநிலையை எண்ணிக் கொள்கிறேன். . வானில் அலைகின்றன ‘ கதையில் அறிவியல் புனைவு அழகாகக் கையாளப் பட்டுள்ளது. வியப்பூட்டும் ஒரு அறிவியல் செய்தியை கட்டுரையாகச் சொல்லாமல் அதை தத்துவத்துடன் இணைக்கும் முயற்சியில் ஒரு தரிசனம் கிடைக்கிறது. வாசகனின் கற்பனைக்கும் இடமளிக்கும்போது ‘பங்குபெறுதல்’ அடையப் படுகிறது. அறிவியலை மிகக் குறைவாகச் சொல்லி கற்பனைக்கு இடம் தருவது நல்ல உத்தி.

 

ஒவ்வொரு துறையிலும் பணியாற்றும் இலக்கிய ஆர்வலர்கள் தங்கள் துறைசார் வினோதங்களை எழுதப் புகவேண்டும் என நினைக்கிறேன். மூன்று கதைகளும் எண்ணத்தைக் கடத்தும் சிக்கலைப் பேசுகின்றன. துளியில் கருப்பன் பேசுவது தூல மொழி, நாசிப்புலன் மூலம் சென்றடைகிறது. ‘மொழி’ யில்  நிகழ்வது பிறர்க்குப் புரியாத மானுடக் குழந்தைகளின் சங்கேதம்- சூட்சுமமானது. ‘வானில் அலைகின்றன குரல்கள்’ மூலம் பெறப்படுவது  ஆதிமூலமாகிய ஒலியிலிருந்து ஓர் இழையைப் பிரித்தெடுக்கும் முயற்சி – காரணமயமானது.

 

நன்றி ஆசிரியரே

 

ஆர்  ராகவேந்திரன் கோவை

 

அன்புள்ள ஜெ

 

ஒவ்வொரு நாளும் கொரொனா செய்திகள் இல்லாமல் வேறு ஒரு விஷயம் எதிர்பார்ப்பதற்கும் காத்திருப்பதற்கும் இருக்கிறது என்பதைப்போல அழகான விஷயம் வேறு இல்லை. ஒவ்வொரு கதையும் ஒரு ரகம். கரடிநாயர் கதைகளில் மட்டும் கதையின் களமும் கதாபாத்திரங்களும் ஒன்று. ஆனால் கதைகளின் மனநிலை சுத்தமாக வேறொன்று. வாழ்க்கை ரொம்பச் சின்னவிஷயங்களால் ஆன கொண்டாட்டம் மட்டும்தான் என்று சொல்லும் கதைகள் அவை

 

நன்றி

 

ந.சிவராஜ்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–26
அடுத்த கட்டுரைபொலிவதும் கலைவதும்,சுற்று -கடிதங்கள்