வானில் அலைகின்றன குரல்கள், தங்கத்தின்மணம் -கடிதங்கள்

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

 

வானில் அலைகின்றன குரல்கள் விசித்திரமான கதை. இன்றைய கதைகள் இனி எப்படியெல்லாம் எழுதப்படலாம் என்பதற்கான புதிய சாத்தியங்களை காட்டும் கதை. தமிழில் சிறுகதைகள் வாசிப்பவன் என்ற வகையில் எனக்கு கதைகள் மேல் பெரிய அவநம்பிக்கை வந்திருந்தது. அந்தரங்கமான குறிப்புகள் மாதிரியான கதைகள், அல்லது ஏதாவது ஒரு ரியாலிட்டியைச் சொல்லும் கதைகள். அல்லது சும்மா மொழியை சுற்றிச்சுற்றி வைக்கும் கதைகள். மொழியை சுற்றிச்சுற்றி வைக்கக்கூடாது என்றில்லை. வைக்கலாம். ஆனால் அதற்கு மொழியில் திறமை இருக்கவேண்டும். கனவும் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் ஒருமாதிரி தெத்துவாய்ப்பேச்சுமாதிரியே இருக்கின்றன. மன்னிக்கவும் என்னுடைய எரிச்சலைச் சொன்னேன்

 

ஆகவே தமிழிலே இனி சுவரசியமான புதிய களமென்றால் அறிவியல்புனைகதைகளாகவே இருக்கமுடியும் என்று நான் எழுதியிருந்தேன். இந்தக்கதைகள் அந்த எண்ணத்தை மாற்றுகின்றன. தொழில்நுட்பம் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டிருக்கிறது. அதை ஏன் கதையாக ஆக்கமுடியாது? ஆனால் தொழில்நுட்பச்சிக்கலை அப்படியே எழுதினால் அது கதை இல்லை. தொழிலிடங்களிலே உள்ள பிரச்சினைகளை எழுதினாலும் இலக்கியம் சுகப்படாது. அது இதைப்போல கவித்துவமான குறியீடாக ஆகவேண்டும்.

 

இந்தக்கதையுடன் ஒப்பிடவேண்டிய கவிதை கல்பற்றா நாராயணனின் டச் ஸ்க்ரீன் கவிதைதான். அது தொழில்நுட்பத்தை இமேஜ் ஆக மாற்றிக்கொண்ட ஒரு படைப்பு. இந்தக்கதையில் தொலைபேசித் தொழில்நுட்பம் வானுக்குள் ஊடுருவும் மனித மனசின் வடிவமாகவே சொல்லப்பட்டுள்ளது

 

 

ஸ்ரீனிவாஸ்

 

வணக்கம் ஜெ

 

வானில் அலைகின்றன குரல்கள் கதையைப் படித்தேன். ஒரு கணம் இல்லாதுபோன என் அம்மாவின் குரலைக் கண்டடைய முயற்சி செய்தேன். எங்கோ ஒரிடத்தில் கோபத்தில் ஏசியது மட்டுமே தெளிவாகக் கேட்கிறது. என்னுள் மட்டுமே ஒலிக்கிறது.உலகில் இல்லாதுபோனவர்களின் குரல்கள் செயல்கள் எதோ ஒருவகையில் நம் நினைவடுக்குகளுக்குள் இருக்கிறது. அதை மீட்டும் கணம் அல்லது அதைத் தொட்டெழுப்பும் அபூர்வ தருணம் நிறைந்த கதை.

 

அரவின் குமார்

தங்கத்தின் மணம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

தங்கத்தின் மணம் பலவகையிலும் ஒரு இண்டியன் மேஜிக்கல் ரியலிஸ கதை. அதன் படிமங்கள் கோத்துகோத்து சென்று ஒரு முழுமையை உருவாக்கிய விதம் அற்புதமானது. அனந்தன் ஒரு நாகமணியை எடுக்கிறன். அது சாணியில் பொதியப்படுகிறது. அதில் புழு வருகிறது. அந்தப்புழுவை தின்னும் கோழி பொன் முட்டை இடுகிறது. நஞ்சு மலம் பொன் மூன்றும் ஒரு சங்கிலி போல கோத்து அமைக்கப்பட்டிருக்கின்றன

 

தங்கத்தின் மணம் என்று சொல்லப்படுவது என்ன? அனந்தனில் கண்விழித்து எழுந்த நாகமணியின் மணம் அது. அந்த கதைகள் முன்னும் பின்னும் செல்கின்றன. எத்தனை நீவி நீவி எடுத்தாலும் கொஞ்சம் மிஞ்சியிருக்கிறது கதையில்.

 

சரவணன்

 

ஜெ. வணக்கம்

 

இது மிகவும் அற்புதமான கதை. நாகம் பற்றிய புதிய அரிய செய்திகள் பல உள்ளன. சில சிறு வயதில் கேள்விப்பட்டு பயந்தவை. கதை தொடக்கத்திலிருந்தே ஓர் எதிர்பார்ப்புடன் ஒரு மர்மத்தை நோக்கிச் செல்கிறது. ஒன்று அது சேரும் இடத்தைத் தன் இயல்புக்கு ஏற்றபடி மாற்றி விடும் என்பது எழுதப்படாத விதி. அனந்தன் தந்தையும் “வெஷமா மண்டைக்கு ஏறுதடி” என்கிறார்.

 

அனந்தன் என்னும் பெயரே நாகத்துடன் தொடர்புடையதுதானே? அரிய மணியும் கீழான மலமும் ஒரே தட்டில் வைக்கப்படுவது “ஓடும் செம்பொன்னும்  ஒக்கவே நோக்குவார்” என்பதை நினைவூட்டுகிறது. தன் மனத் தில் நாகமணி பற்றிய ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் இருக்கும் அனந்தன் மனச்சிதைவுக்கு ஆளாகிறான். இறுதியில் மணி எங்கு போய்ச்சேர வேண்டுமோ அங்கே போய்ச்சேர்கிறது. அனந்தன் தெளிவாகிறான். தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும் என வேண்டிய மைதாஸ் கதை நினைவுக்கு வருகிறது

 

வளவ துரையன்

முந்தைய கட்டுரைஇடம், அங்கி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅருண்மொழி நங்கை அவர்களுக்கு வாழ்த்துக்கள்