பொலிவதும் கலைவதும்,சுற்று -கடிதங்கள்

பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

 

பொலிவதும் கலைவதும் பலருடைய மனதையும் நெகிழச்செய்த கதையாக இருப்பதைக் கண்டேன். என் நண்பர்களிலேயே பலருக்கு அந்தக்கதை ஒரு பெரிய அனுபவமாக இருந்தது. இத்தனைக்கும் பலருக்கும் கதை வாசிக்கும் அனுபவமே இல்லை

 

ஏன் அந்தக்கதை அப்படி பாதிக்கிறது என்று சிந்தனை செய்தேன். காதல் கண்டிப்பாக ஒரு விஷயம்தான். ஆனால் அது மட்டும் அல்ல. முக்கியமான விஷயம் திரும்பிச் செல்வதுதான். அந்தக்கதையின் முக்கியமான குறிப்பு அவன் மாமா வீட்டுக்கு அடிக்கடி வந்துகொண்டிருந்தவன் என்பது. அப்போதுதான் அவன் அவளுடன் நெருக்கமாக ஆகியிருக்கிறான். அந்த நினைவுகள்தான் அந்த காலகட்டம்

 

ஆனால் அவன் திரும்ப வர விரும்பவில்லை. அடிக்கடி வருவதும் இல்லை. கட்டாயத்தால்தான் வருகிறான். அப்படி வரும்போது ஒன்று தெரியும், திரும்பச் செல்லவே முடியாது. காலத்தில் திரும்பிச்செல்ல எவராலும் முடியாது. காலம் அப்படியே உறைந்து நின்றுவிடும் என நினைப்போம். அப்படி அல்ல. நம் நினைவில் உள்ள காலம் காலமே அல்ல, நினைவுதான். நினைவில் உள்ள ஓவியம் ஓவியம் அல்ல. அதன் வண்ணங்கள் கலைந்துவிட்டன

 

இந்த . inevitability ஒரு முக்கியமான வாழ்க்கை அம்சம். அதை ஒரு கட்டத்தில் எல்லாருமே உணர்கிறோம். சின்ன விஷயம்தான். ஆனால் அதை அழுத்தமாக அனுபவமாக உணர்வது என்பது ஒரு பெரிய துக்கம். அந்தத்துக்கம்தான் இந்தக்கதையில் இருக்கிறது

 

செந்தில்குமார்

 

அன்பின் ஜெமோவிற்கு வணக்கம்,

 

பொலிவதும் கலைவதும் ஒரு கிளாசிக் வகை கதை.ஒரு கலைந்த காதலுக்கு களமெழுத்துப்பாட்டின் கலைந்த ஓவியத்தைப் படிமமாக்கி..அட அற்புதம். நினைக்க நினைக்க நெஞ்சம் நெகிழ்கிறது. ஒரு சிறந்த பாலே நடனக் கலைஞர் போல கடைசி வரை கதையென்று அழுந்தக் காலூனாமல் அந்தரத்திலேயே ஆட விட்டாலும்  ஜதி போட்டு மனதைஅதிர வைக்கிற கதையாக்கும்  வித்தையை என்னவென்று சொல்வது.

 

சுந்தரேசனின் நினைவலைகளோடு எனது இளமைக்கால   நினைவலைக்ளும் ஒத்துப்போனதால் கதையோடு ஒன்றி கரைந்து போனேன்.  நினைவூட்டலுக்கு நன்றிகள்.

 

அன்புடன், இரா.விஜயன்

புதுச்சேரி

சுற்றுகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

சுற்றுகள் ஒரு அழகான கதை. அந்தக்கதையின் அழகை மனசுக்குள் அந்த இயந்திரங்களைக் கொஞ்சம் உருவகித்துக்கொண்டால்தான் புரிகிறது. ஒவ்வொரு ஆணும்பெண்ணும் ஒரு சர்க்யூட். ஒரு ஆண் ஒரு பெண்ணை கண்டடையும்போது சர்க்யூட் முடிவடைகிறது. கதையிலுள்ள அழகான வரிகள் நிறைய உள்ளன. கரெண்ட் விரல்நுனிவரை வந்து நிற்கிறது. தொடாதவரை அது ஸ்டேட்டிக் தான். தொட்டால்தான் அது கரெண்ட். தொடாதவரை அது இல்லை என்றே இருக்கும். இப்படியே அந்தக்கதையை வளர்த்துக்கொண்டே போகமுடிந்தது.

 

ஆச்சரியமான கதை இது . இந்தக்கதைகளின் முக்கியத்துவம் இன்றைக்கு எத்தனைபேருக்குப் புரிகிறது என்று தெரியவில்லை. இங்கே கதை எழுத திரும்பத்திரும்ப  குடும்பம், இளைஞர்களின் வாழ்க்கை என்ற இரண்டே களம்தான். இல்லாவிட்டால் அடித்தளவாழ்க்கை என்றபேரில் காமம் வன்முறை எழுதுவது. இப்படி நம் அன்றாடவாழ்க்கையில் உள்ள எவ்வளவோ விஷயங்களைக் கதையாக ஆக்கமுடியும். இப்படி எழுதப்படாத உலகங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றையெல்லாம் கதைகளாக எழுதுவதற்கான ஒரு தொடக்கமாக இந்தக்கதை இருக்கவேண்டும்

 

சிவக்குமார் எஸ்

 

அன்புள்ள ஜெ,

 

சுற்று கதை ஒரு உண்மையான அனுபவத்தை எனக்கு நினைவூட்டியது. என் வாழ்க்கைச் சம்பவம்தான். நான் அப்போது ஒரு தொழிற்சாலையில் வேலைபார்த்துக்கொண்டிருந்தேன். என் மிசினில் ஒரு பெண்ணும் வேலைபார்த்தாள். இருவரும் சேர்ந்தே வேலைபார்க்கவேண்டும். ஒன்றாக இணைந்து வேலைபார்த்தாகவேண்டும். அது ஒரு இணைப்பை இருவர் மனசிலும் உண்டுபண்ணியது. நாங்கள் லவ் பண்ண ஆரம்பித்தோம்.

 

அவளைப்போல என் மனசுக்கு நெருக்கமான எவரும் என்றைக்கும் இருந்ததே கிடையாது. நான் அவளுடன் அந்த மிசினால் இணைந்திருந்தேன் என்று சொல்லலாம். அந்த உறவு கைகூடவில்லை. அவள் ஆந்திரப்பெண். நானும் எங்கேயோ வந்தாச்சு. ஆனால் இன்றைக்கு நினைக்கையில் அந்த மிசின் உருவாக்கிய அந்த இணைப்பு வேறு யாருட்னும் நிகழவே இல்லை என்று தோன்றியது. இந்தக்கதையை மிக விரும்பி வாசித்தேன். இப்படியெல்லாம் கதைகள் எழுதலாம் என்பது ஆச்சரியம்தான்

 

மாணிக்கராஜ்

முந்தைய கட்டுரைஆனையில்லா, துளி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்