வான் அலை

நாற்புறமும் திறத்தல்

இன்று காலையும்  ஆறுமணிக்கே எழுந்து மொட்டைமாடிக்கு நடைசென்றேன். சூரியன் தென்னைமரஙக்ளுக்கு அப்பால் எழுவதை பார்த்துக்கொண்டு நின்றேன். ஒவ்வொருநாளும் ஒரு கொடை என்று சொல்லலாம். ஆனால் அதை அணுக்கமாக உணர இப்படி நோயின், இறப்பின், நிலையில்லாமையின் நிழலில் நின்றாகவேண்டியிருக்கிறது. கதிரொளி ஒவ்வொரு நாளும் ஓர் ஓவியம். முடிவேயற்ற ஓவியநிரை

மானுடர் நாம் பறவைகளை விலங்குகளை இத்தனை தூரம் துன்புறுத்தியிருக்கிறோமா என்ன? இந்த திடீர் விடுதலையை அவை கொண்டாடுகின்றன. பல நண்பர்கள் வீட்டுக்கு அருகே யானைகளை, காட்டுவிலங்குகளை கண்டதாகச் சொல்கிறார்கள். சென்ற பத்துநாட்களாகவே என் வீட்டைச்சுற்றி பறவைகள், விலங்குகள் பெருகியிருக்கின்றன. வீட்டுக்குப்பின்னால் காலையில் சாலையில் நான்கு கீரிகள் ஓடுவதைப் பார்த்தேன். ஒரு மரநாயை தென்னைமரத்தின்மேல் கண்டேன், இங்கு வந்த இருபதாண்டுகளில் முதல்முறையாக அதைப் பார்க்கிறேன்.

முற்றத்து மஞ்சள்பூ மரம் முழுக்க தேன்சிட்டுகள். அடைக்கலங்குருவிகள் வீட்டுக்குள் பறக்கின்றன. புல்புல் வகை குருவிகள் பக்கத்து தோட்டத்து கறிவேப்பிலையை கொய்துகொண்டுவந்து என் படுக்கையறைக்குள் சிதறிப்போட்டிருக்கின்றன. குருவிகளுக்கு பயமே இல்லை. “என்னது நீங்க இன்னும் எக்ஸ்டிண்ட் ஆகலையா? ஆயாச்சுன்னு சொன்னாங்களே” என்றவகையான ஒரு திமிர் தெரிகிறது அவற்றின் சிறகடிப்பில்

காலையில் கொசுவலைக்குள் தூங்கிக்கொண்டிருந்தேன். ஒரே கிரீச் கிரீச் சத்தம். நான் அதை அரைக்கனவில் குரங்குகளின் ஓசை என்றே நினைத்தேன்.“சரி குரங்குகள் , என்ன இப்ப?” என்றுதான் தூங்கிக்கொண்டிருந்தேன். விழித்தெழுந்தால் கொசுவலைப்பரப்புக்கு மேல் ஏகப்பட்ட இலைகள் சருகுகள் .குருவிகளின் பூசல். என் வீட்டை அப்படியே தூக்கி வேறெங்காவது கொண்டு வைத்துவிட்டார்களா என்ன?

இந்தக்கோடையில் இயற்கை என கூட இருப்பவை மரங்கள். செம்பருத்தியும் பொற்கொன்றையும் கொய்யாவும் வேம்பும் வாடிவிடக்கூடாது என்று நாளும் தண்ணீர் இறைக்கிறேன். செம்பருத்தி சற்றே வாடி இலையுதிர்த்திருந்தது. சட்டென்று மீண்டும் தளிர் சூடிவிட்டது. மலர்கொள்ள இன்னும் நாளிருக்கிற்துபோல. பொற்கொன்றை பூத்துச் சொரிகிறது.

காலையில் ஒரு நடை, மாலையில் இன்னொன்று. நண்பர்களுடன் பேசுதல். இன்று மாலை சட்டென்று மேகம் பூண்டு வானம் இருண்டது. வெக்கை ஏறி ஏறி வந்து சட்டென்று குளிர்ந்தது. பேரோசையுடன் கோடைமழை. இடியோ மின்னலோ இல்லாத கோடைமழை ஓர் அலை வந்து அறைந்து சென்றதுபோல. வானிலிருக்கும் கண்காணாக் கடலில் இருந்து.

இங்கு அமர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறேன். நான் சென்ற நிலங்கள், செல்லவிழையும் நிலங்கள். வாழ்ந்த வாழ்க்கைகள்,  கனவுகண்ட வாழ்க்கைகள். ஒரு நிகர்வாழ்வென ஓடிக்கொண்டே இருக்கிறது எழுத்து. அங்கே விரிந்தெழமுடிகிறது. திளைக்க முடிகிறது.

நான் எழுத வந்த காலகட்டத்தில் நான் போற்றும் ஓர் அமெரிக்க எழுத்தாளர் ‘நிகழ்ந்ததை எழுத இதழியலே போதும், இலக்கியம் முழுக்கமுழுக்க கற்பனையாலானது’ என்று எழுதிய வரியை வாசித்து திகைத்துச் செயலற்றது நினைவிருக்கிறது. அன்றாட உண்மை என்பது தொடக்கம்தான், இலக்கியம் செல்வது அதிலிருந்து எழுந்து வேறொரு உண்மையை நோக்கி என இங்கிருந்துகொண்டு மிக அணுக்கமாக உணர்கிறேன். இலக்கியம் அனைத்தையும் கற்பனைக்குள்ளேயே நிகழ்த்திவிடவேண்டிய ஒரு கலை

மழைபெய்து ஓய்ந்துவிட்டிருக்கிறது. வெளிறிக்கொண்டிருக்கும் வானின்கீழ் குளிர்ந்துவிட்ட மொட்டைமாடியில் ஒரு நடை செல்லவேண்டும். வான்கீழ் நிற்பதைப்போல இத்தருணத்தில் செய்யக்கூடுவதொன்றில்லை

சுற்றுகள் [சிறுகதை]

பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

வேரில் திகழ்வது [சிறுகதை]

ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

தங்கத்தின் மணம் [சிறுகதை]

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

ஏதேன் [சிறுகதை]

மொழி [சிறுகதை]

ஆடகம் [சிறுகதை]

கோட்டை [சிறுகதை]

துளி [சிறுகதை]

விலங்கு [சிறுகதை]

வேட்டு [சிறுகதை]

அங்கி [சிறுகதை]

தவளையும் இளவரசனும் [சிறுகதை]

பூனை [சிறுகதை]

வருக்கை [சிறுகதை]

“ஆனையில்லா!” [சிறுகதை]

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

சக்தி ரூபேண! [சிறுகதை]

எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

===========================================

தனிமையின் புனைவுக் களியாட்டு

புனைவுக் களியாட்டு- சிறுகதைகள் பற்றி…

முந்தைய கட்டுரைவேரில் திகழ்வது, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇடம் [சிறுகதை]